சேரன்

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

ஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன், தீபச்செல்வன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் ஒரே அரசியலை, வாழ்க்கையை, நிலக்காட்சியை, அனுபவங்களைப் பேசுபவை. அவர்களுக்கிடையிலான வித்தியாசம் என்பது கவிதையின் அகம் சார்ந்து நிகழாது புறம் சார்ந்து மட்டுமே நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக கவிதையின் மொழி மற்றும் ஓசை சார்ந்ததாக  மட்டுமே அந்த வித்தியாசங்களை கண்டடைய முடியுமாக உள்ளது. அவர்களின் கவிதைகளில் வேறு தளங்களில் முகிழ்க்கும் வித்தியாசங்கள் மிக நுண்ணிய அளவில்தான் (அதுவும் ஒருசில கவிஞர்களால்) நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன் போன்றோரின் கவிதை மொழி கிளர்த்தும் உணர்வுகளும், அது வெளிப்படுத்தும் ஒருவகை உக்கிரத் தன்மையும் இந்த மூவரையும் ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய புள்ளிகளாகும். ஆயினும் அவர்கள் ஏனையவர்களோடு ஒப்பிடும்போது அதிகம் எழுதவில்லை. இப்பொதுக் கவிதைப் போக்கின் (common trend) முன்னோடி கவிஞர்களுள் ஒருவராக சேரனைக் குறிப்பிட முடியும். இந்தக் கவிதை இயக்கத்துக்கான பாதையை வடிவமைத்ததில் அவருக்கு ஒரு தனியான பங்கு இருக்கிறது.

இவர்களின் புற வாழ்வும், அகவாழ்வும் ஒன்றிப்போயிருக்கின்றன. ஒரே கனவின் வெவ்வேறு கிளைகளாக விரிந்து நிற்பவர்கள் இவர்கள். கவிதையில் வெளிப்படும் உணர்வு சார்ந்தும் இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பவர்கள்தான். அவர்களின் வாழ்வும், அது கொடுத்த அனுபவங்களும் ஒரே நிலத்திலிருந்து, ஒரே அரசியலிலிருந்து, ஒரே கனவிலிருந்து உருக்கொண்டவை என்பதால்தான் இந்தப் பொதுமைப்பாடு. ஆம், இவர்களில் யாரும் அரசியல் எனும் பரப்பைத் தாண்டி விரிவுபட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் இணைந்திருந்த ஒரே புள்ளி அரசியல் களமே ஆகும். காதல், காமம் போன்ற விசயங்களை இவர்கள் தொட்டிருந்தாலும் அதற்குள்ளும் ஓர் அரசியல் தளம் உள்ளோடி இருக்கும்.

ஆக, இவர்களின் வேர் ஒன்றுதான். மரத்தின் இலைகளுக்கிடையிலான வித்தியாசங்களைப் போன்றுதான் நாம் இவர்களுக்கிடையிலான வித்தியாசங்களைத் தரிசிக்க முடியும். இதனால் தான் ஈழத்துக் கவிதைகள் என்று சொல்வதை விடவும் ஈழத்துக் கவிதை இயக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழப்போராட்டம் தொடங்கிய பின் அங்கு உருவான கவிஞர்களின் கனவு ஒன்றாகத்தானிருந்தது. அந்தக் கனவுகளைக் கண்ட கண்கள் மட்டுமே வேறாக இருந்தன. புலக்காட்சிகள் ஒன்றாகத்தானிருந்தன. உணர்வுகள், வெளிப்பாடுகள் ஒன்றாக இருந்தன என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

அது தவிர வேறொரு காரணமும் இருக்கிறது. 1980களில் ஈழத்தில் அறிமுகமான பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்களது கவிதைகளுக்கான உள்ளீட்டை, மொழியை அவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொண்டார்கள். பலஸ்தீனக் கவிதைகளை மட்டுமே தம் முக்கிய உசாத்துணையாக அவர்கள் வரித்துக் கொண்டார்கள். அதன் தாக்கத்திலிருந்து அவர்கள் எழுதிய கடைசி கவிதை வரைக்கும் அவர்களால் விடுபட முடியவே இல்லை. அது அவர்களின் மாறாத வாழ்வையும், மனநிலையையுமே முதலில் வெளிக்காட்டுகிறது. ஈழத்தில் பலஸ்தீனக் கவிதைகளுக்கு ஏற்பட்ட மதிப்பளவுக்கு வேறெங்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அத்தகையதொரு அரசியல் சூழல் இல்லாததனால் போதிய கவனத்தை அங்கு அது பெறவில்லை. அங்கு எந்தவித தாக்கத்தையும் அக்கவிதைகள் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஈழத்தில் நிலமை தலைகீழாக இருந்தது. பலஸ்தீனக் கவிதைகளை வாசிக்காமல் யாரும் கவிதை எழுத முடியாது என்பது இங்கு ஒரு எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது.

இதனால் ஈழத்துக் கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகளை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளாக தோற்றங்காட்டின. ஆனாலும் பலஸ்தீனக் கவிதைகளில் அரசியல், விடுதலை வேட்கை, காதல், பிரிவு, இயற்கை, குழந்தைமை, கனவுகள் என பலவிடயங்கள் உட்பொதிந்திருந்தன. துரதிருஸ்டம் ஈழக்கவிஞர்கள் அதற்குள்ளிருந்த வெறும் அரசியலால் மட்டுமே ஊட்டம் பெற்றனர். அதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தாண்டி அவர்களின் பேனை நகர மறுத்துவிட்டது.

பலஸ்தீனக் கவிதைகளில் என்ன உணர்வுகள், என்ன துயரங்கள் பேசப்பட்டனவோ அவையும் இங்கு அனுபவிக்கப்பட்டன. அதனை அதே தளத்தில் அதே மொழியில் ஈழத்துக் கவிஞர்களும் எழுதத் தொடங்கினர். இந்தக் காலப்பகுதியிலும் ஈழத்தில் இயற்கை இருந்தது, காதல் இருந்தது, தீண்டாமை இருந்தது, பாலுறவு சார்ந்த பிரச்சினைகள், பிணிகள், உள்மன முரண்பாடுகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் என ஒரு கவிஞனுக்கான உந்துதலைத் தரக்கூடிய அனைத்து விடயங்களும் இருந்தன. ஆனால் அவை எதுவும் போதியளவில் கவிஞர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பலஸ்தீனக் கவிதைகள் பொது அவலத்தை தனிமனித அகத்தினூடாகப் பேசியளவுக்கு ஈழத்துக்கவிதைகள் பேசவில்லை. பலஸ்தீனக் கவிதைகளின் அரசியல் தளத்தை மட்டுமே தங்கள் கவிதைகளின் முக்கிய உசாத்துணையாக கொண்டதன் விளைவு அது.

ஈழக்கவிஞர்கள் போரின் பொதுவான துயரங்களைத் தனிமனித அக நெருக்கீடுகளுக்கூடாக மிக மிகக் குறைவாகவும், சமூகத்தின் கூட்டுத் துயரமாகவும், பிரக்ஞையாகவுமே அதிகம் வெளிப்படுத்தினர். தமிழீழ போராட்டம் குறித்து இக்கவிஞர்களில் பலரிடம் எந்தவித மாற்றுப் பார்வைகளோ, சுயவிசாரணைகளோ இருக்கவில்லை. புலிகளின் செயற்பாடுகள் மீது விமர்சனங்களை முன்வைப்பது தற்கொலைக்குச் சமமானதாக இருந்தபோதும் ஒரு சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அத்தகைய மாற்றுக் குரல்களைப் பதிவு செய்திருந்தனர். அந்த மாற்றுக் குரல்கூட முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் வன்முறைகளை விமர்சிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. வேறு களங்களை நோக்கி அவை நகரவில்லை. அதுவும் ஒன்றிரண்டு கவிதைகளுடன் நின்றுவிட்டன.

வ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மாற்றுக்குரல்களும் எழுந்து வந்தன. மற்றப்படி ஏனையவர்கள் புலிகளை புனிதர்களாக மட்டுமே கருதி வழிபட்டு வந்தனர். எஸ்போஸிடம் அத்தகைய வழிபாட்டுக் குணம் இருந்ததாகத் தெரியவில்லை. கருணாகரனிடம் மாற்றுக் கருத்துகள், புரிதல் என்பன இருந்தாலும் அவர் தன் கவிதைகளில் அவற்றைப் பதிவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். புலிகள் குறித்த அச்சத்தினால் அப்படி நிகழ்ந்திருந்தால் புலிகளுக்குப் பின்னும் அவரிடமிருந்து எந்தவித மாற்றுப் பார்வைகளும் வெளிவரவில்லை. வெளிப்படையாக இதனை சொல்லும்போது இந்தக் கவிஞர்கள் என்மீது கோபப்படக்கூடும். ஆனால் ஓர் ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பின் அவர்கள் என் கருத்தைப் பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தமிழீழத்தின் மீதான வேட்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக ஈழக்கவிதைகள் அமைந்து விட்டதனால் அவற்றின் முகமே அரசியல் முகமாக மாறிப் போனது. அரசியல் அவர்களின் கவிதைகளில் ஆழமாக ஊடுறுவி அவற்றின் இலக்கியத் தரத்தை குன்றச் செய்தது. ஒரு நல்ல இலக்கியப் பாரம்பரியமும் கவித்துவ மரபும் உள்ள ஈழத்துக் கவிதைவெளி வெறுமனே அரசியல்மயமாகி சீரழிந்தது. இந்த சீரழிவைப் பல கவிஞர்கள் கூட்டாக, சாவகாசமாகச் செய்து கொண்டிருந்தனர். அது அப்போது அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாகப்பட்டது.

அத்தருணத்தில் அவர்களது கவிதைகள் குறித்து சீரியசான இலக்கிய மதிப்பீடுகள் என்று எதுவுமே வரவில்லை. வெறும் பாராட்டுகளும், புகழுரைகளும் மட்டுமே வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவை கொடுத்த உற்சாகத்தில் கவிதைகள் என்று சொல்லிக்கொண்டு வெறும் செய்திக் குறிப்புகளை மேலிருந்து கீழாக பல ஈழக்கவிஞர்கள் புதிது புதிதாகத் தோன்றி எழுதிக் குவித்துச் சென்றனர். இதனால் ஈழத்துக் கவிதைகள், “செய்யப்பட்ட” கவிதைகளாகவும், “செயற்கைத்தன்மையான” கவிதைகளாகவும் உருமாற்றம் பெற்று வந்தன. ஒரே கவிதையையே திரும்பத் திரும்ப வாசிப்பது போன்ற அருட்டுணர்வுக்கு வாசகன் ஆளானான். கவிதை இலக்கியக் கருவியாகவன்றி படிப்படியாக ஓர் அரசியல் கருவியாக அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.

2

இந்தப் பொதுப்போக்கின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு குறிப்பிடத்தக்களவு இலக்கியத் தரத்துடன் எழுதிய அரசியல் கவிஞர்களாக நான் மேலே பெயர் குறிப்பிட்டுள்ள கவிஞர்களை ஈழ இலக்கியம் உலகுக்களித்தது. சேரனின் கவிதைகளில் சமூக கூட்டுப் பிரக்ஞையைத் தாண்டி தனிமனித அகவுணர்வுகள் ஓரளவு பேசப்பட்டன. எனினும் அதற்குள்ளும் ஒருவித இழப்பும், சமூகக் கூட்டுப் பிரக்ஞையும்தான் உள்ளோடி இருந்தது.

ஆயினும் அவரது ’நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பிலுள்ள கவிதைகள் அதே அரசியலையும், விடுதலைக்கான கூட்டுப் பிரக்ஞையையும் அழகியல் மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளை அதிகம் கொண்டுள்ளன. பிற கவிஞர்களிடமிருந்து அவர் விலகிச்செல்லும் புள்ளிகளும் இந்தத் தொகுப்பு கவிதைகளில் பதிவாகி இருந்தன. அவரது கவிதைகள் அடைந்து வந்த மாற்றங்களை வாசகன் புரிந்துகொள்வதற்கான வரைபடமாக விரிந்து நிற்கும் தொகுப்பு அது.

கவிஞன் என்பவன் யார்? அவன் அரசியல் பிரச்சினையால் மட்டுமே தீண்டப்படுபவனா? அல்லது மக்கள் வாழும் சூழலில் அரசியல்தான் முதன்மைப் பிரச்சினையா? ஈழத்தில் ஒரு தொகை கவிஞர்கள் ஏன் அரசியலை மட்டுமே தம் கவிப்புனைவின் மையஉள்ளீடாக கொண்டார்கள்? இந்தக் கேள்விகள் ஈழத்துக் கவிதைகளை வாசித்த பின் ஒருவருக்கு சாதாரணமாக எழக்கூடியவைதான். அரசியலுக்கு அப்பால் மற்ற அனைத்தின் மீதும் ஈழக்கவிஞர்களால் நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்பு, அலட்சியம் இப்போது அவர்களுக்குள் ஓர் இலக்கியக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அந்த தளத்தில் அவர்களின் கூட்டுப் பங்களிப்பை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் குறைத்து மதிப்பிடுவதோ, இருட்டடிப்புச் செய்வதோ நமது நோக்கமல்ல. அவர்கள் காணத் தவறிய, பேசத் தவறிய பக்கங்களைப் பற்றிப் பேசுவது மட்டுமே இங்கு எனது நோக்கம். மற்றப்படி அவர்கள் பேச வேண்டியதை சிறப்பாகவே பேசி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் தங்களது காலத்து மக்களின் பொதுவான அரசியல் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்கள். அது மிக மிக அவசியமானதுங்கூட. அது மட்டுமே கவிதை என்பதில்தான் நான் முரண்பட்டு விலகி நிற்கிறேன். காலத்தின் அரசியல் நெருக்கீடுகளிலிருந்தும், சூழ்நிலைமைகளிலிருந்துமே கவிஞர்கள்  உருவாகி வரும்போது அவர்கள் காலமும், சூழலும் உருவாக்கிய கவிஞர்களாக மட்டுமே தங்களை நிறுவிக் கொள்கின்றனர். வாழ்க்கை உருவாக்கிய கவிஞர்களாக அவர்கள் தங்களை தங்களது படைப்புகளூடாக முன்வைப்பதில்லை.

சேரன் தன் கவிதை சார்ந்து இரு பரிமாணங்களாகத் தெரிபவர். அவரை காலமும், வாழ்க்கையுமாக சேர்ந்து உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்னும் ஒருசில கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். காலம் மட்டும் உருவாக்கிய கவிஞர்களால் கவிதையின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் நுழைய முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் எல்லாவிதமான சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியாததாகப் போய்விட்டது.

சேரனின் கவியுலகு போராட்ட எழுச்சி மனநிலையை முன்னிறுத்துகிறது. ஆனால் அவரது மொழி தமிழின் கவிதை மரபையும், மொழி அழகியலையும் தனக்குள் வைத்திருக்கிறது. அவரது கவிதைகள் எழுச்சிக் குரலாகவும், காதலைப் பாடுவதாகவும் ஒலிக்கின்றன. அந்த வகையில் அவர் அகத்தையும், புறத்தையும் பாடும் கவிஞராக இருக்கிறார். வாழ்வற்ற வாழ்வைப் பற்றிப் பாடும்போதும், வாழ்வு மீதான எந்தவிதப் பிடிப்புமற்ற மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பாடும்போதும் அவர் கவிதையின் ஓசை நயத்தில் (பிற்பட்ட காலத்தில் குறிப்பாக ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பு கால கவிதைகளில்) அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்.  ஆனால் அதிலும் காதலுக்குள்ளும், வாழ்வின் எல்லாவிதமான துயரங்களுக்குள்ளும் மிக மெளனமாக புரட்சியை உட்புகுத்திவிட முனையும் போக்கு அவரிடம் வெளிப்படுகிறது. சமூக அரசியல் எழுச்சியைச் சுற்றியே அவர் கவிதை மனம் அலைகிறது.

3

சேரனின் அநேகமான கவிதைகள் உயிர் வாழ்வது நிச்சயமற்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காலப்பகுதியிலும், தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தினதும் குரலாக இருப்பவை. இதனால் மக்களின் அரசியல் சார்ந்த பதட்டங்களையும், போராட்டத்துக்கான எழுச்சியையும் கோருபவையாக இருப்பது தவிர்க்க முடியாதது. அவரைப் பொறுத்தவரை உயிர் வாழ்வதே இங்கு ஒரு துடிப்பு.

ஒவ்வோரடியும் தடங்கள் பதிக்கும்

ஒரு வாழ்க்கை நிகழ்வாம்

என்று அவர் சொல்லும்போது இங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. நிச்சயமற்ற வாழ்வின் மீதான கருணையைக் கோரும் அதே கவிதையிலேயே போராட்டத்தின் மீதான நம்பிக்கைத் தொனியும் ஒலிக்கிறது.

காலமெனும் வெப்பக் கதிர்

வீசிச் சூடடிக்க எல்லாத் தடமும் உதிரும்

தனித்தபடி எஞ்சுகிற ஒன்றோ

மீண்டும் தடங்கள் பதிக்கும்

வாழ்வற்ற வாழ்வு மீதான கவனத்தை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதுமாக இரு நிலைகளில் அவரது பயணம் நிகழ்கிறது.

காதலும் காத்திருப்பும்கூட அந்த வாழ்க்கையில் இருந்ததை சேரன் பதிவு செய்கிறார். சேரன் நெருக்கடியான அரசியல் பொது வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கையின் தனியான, சில பிரத்தியேக உணர்வுகள் தனக்குள் முகிழ்த்திருந்ததை வெளிப்படுத்துகிறார். ஈழத்தின் குறிப்பாக வடபுலக் கவிஞர்கள் ஒருசிலரிடம்தான் இந்தப் பண்பைக் காணமுடியும்.

பிரிதல்’  என்ற கவிதை. இக்கவிதையை ஒரு பெண் எழுதியதாக, ஆண் குறித்த ஒரு பெண்ணின் கனவுகளைப் பேசுவதாக, அக்கவிதையின் குரல் பெண்ணுக்குரியதாக நாம் கற்பனை செய்து கொள்ளும்போதே அதன் ஆழ்ந்த உணர்வுத் தளத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. அந்தக் கவிதைக்குள் முகிழ்க்கும் ஒருவித அகத்தனிமையான உணர்வை அதன் பெண் குரலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

சேரன் அப்போதைய வடபுல இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் போர் எப்படி உருச்சிதைத்தது என்பதை அநேகமான கவிதைகளில் சொல்லிவிடுவது கிட்டத்தட்ட அவர் கவிதைகளின் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது. ‘இரு காலைகளும் ஒரு பின்னிரவும் ‘என்ற கவிதை ஒரு இளைய தலைமுறையின் கருகிப்போன வாழ்வையும் கனவுகளையும் பதிவுசெய்கிறது.

எங்கே அவன்? என்று கேட்பார்கள்

கேட்கையில் பிழைபட்ட தமிழ்

நெஞ்சில் நெருட எழுந்து வரும்

இராணுவத்தினர் விசாரிக்கும் விதத்தில் தன் தாய்மொழி தமிழே பிழையாக வெளிப்படும் சம்பவம் ஒரு அற்புதமான கவிதை நிகழ்வாக தோன்றும் அதேநேரம் ஓர் ஆழ்ந்த துக்க உணர்வையும் ஏற்படுத்துகிறது.

4

போராட்ட காலத்தில் அது நிகழ்ந்த மண்ணிலிருந்து எழுதிய பல கவிஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருந்த அல்லது பின்னர் பார்க்கலாம் என தவணை முறையில் ஒத்திப் போடப்படடிருந்த பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் மீதும் சேரன் ஓர் அழுத்தமான பார்வையை முன்வைக்கிறார். ‘மழைக்காலமும் கூலிப்பெண்களும்’, சமாந்தரம் கொள்ளாத உலகங்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும்.

மழைக்காலமும் கூலிப்பெண்களும் கவிதையில்-

வெயிலுக்கு மேனி தந்து

வெங்காயம் கிண்ட வரும்

என் அழகுக் கிராமத்துப் பெண்களது கால்

இனிமேல் வெள்ளத்துள் ஆழும்

விரல்களுக்குச் சேறெடுக்கும்

எப்போதும் போல் இவர்கள்

நாற்று நடுகையிலே

எல்லை வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும்

மீண்டும் இவர்கள் திரும்பி வருகையிலோ

நெற்கதிர்கள் குலை தள்ளும்

நீள் வரம்பு மறைந்து விடும்

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்”.

என எழுதுகிறார்.

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்

இந்த வரிகளில்தான் இந்த கவிதையின் முழுமையும் பொதிந்திருக்கிறது. பெண் ஒடுக்குமுறை பற்றி வெறித்தனமாக முழக்கமிடும் தொனி இக்கவிதைக்குள் இல்லை. தேவைக்கதிகமான வார்த்தை விளையாட்டுகளும் இல்லை. இது கடத்த முனையும் செய்தி ஒர் அதிர்வாக கவிதையின் இறுதி வரிகளில் வந்து நிற்கிறது.

ஒரு கிராமத்துக்கு மின்சாரம் வருகிறது ‘ இலங்கைக் கிராமமொன்றின் ஒரு காலகட்டச் சித்திரத்தை வரைபடமாக காட்டும் கவிதை. புதிதாக மின்சாரம் வரும்போது அந்தக் கிராமத்தில் நிகழும் சிறு சிறு மாற்றங்களை இக்கவிதை முன்வைக்கிறது. கவிதையின் மொழியில் கிராமியம் பொங்கி வழிகிறது.

மழைநாள் காதலைப் பேசும் கவிதை. காதலின் இழப்புணர்வை, மனிதர்களின் பிரிவை ஈரமான சொற்களில் சொல்கிறது இக்கவிதை.

அருகில் நீ.

குடிலுக்குள் நசநசத்த ஈரம்

திரண்டிருந்த விசும்பு மழைக் கறுப்பில்

மின்னல் கோடாய் எழுந்து அலைந்து அழிகிறது

காதலின் பிரிவுணர்வைப் பேசும் இக்கவிதையில் மழையின் இசையும், தனிமையின் தவிப்பும், காதலின் கனத்து வழியும் துயரும் சொற்களில் பிண்ணப்பட்டிருப்பதைக் காணலாம். ஆயினும் இதுபோன்ற கவிதைகளில் கனத்து எழும் துயரம் மனதைக் கவ்வும் விதமாக எழவில்லை. கைக்குள் வந்த கவிதை நெஞ்சுக்குள் வராமல் திரும்புகிறது.

சாதிக்கெதிரான புரட்சிகர மனநிலையை உடையவர் சேரன். அந்த மனநிலை அவரை கவிதையில் கலகம் செய்யத்தூண்டுகிறது.

ஆலயக் கதவுகள்

எவருக்காவது மூடுமேயானால்

கோபுரக் கலசங்கள்

சிதறி நொறுங்குக

இந்தக் கலகக் குரலில் யாழ்ப்பாணத்தை,

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே

என விளிக்கிறார்.

உனது உலகம் மிகவும் சிறியது

என்கிறார்.

இது சமூக மாற்றத்துக்கான ஒரு கவிஞனின் அழைப்பு. சமூகத்தை மூர்க்கமாக தாக்கும் இந்த விபரணங்கள் கவிஞனின் ஏக்கங்கள்.

5

கவிதையை ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் நின்று கொண்டு ஏற்பது அல்லது மறுப்பது ஒரு வேடிக்கையான செயல்பாடாகும். நவீனத்துவ, பின்-நவீனத்துவ கோட்பாடுகளின் எல்லைக்குள் வலிந்து ஒரு கவிதையை அடக்க முடியாது. கவிதைக்குள் எல்லா கோட்பாடுகளும் அடங்கலாம். ஆனால் கோட்பாட்டுக்குள் கவிதை அடங்காது. சேரனின் கவிதைகளுக்கும் ஒரு கோட்பாட்டுத் தளம் இல்லை என்பது புரிகிறது. தமிழின் மரபான கவிதைப் பாங்கும், நவீனத்தன்மையும் கலந்த ஓசைநயத்துடன் கூடிய கவிதைகள் பல அவரால் எழுதப்பட்டுள்ளன. வித்துவச் செருக்கற்ற, கூடுதல் புதிர்த் தன்மையற்ற, தமிழின் எல்லா வாசகனுக்குமானது சேரனின் கவிதைகள். எனினும் சில கவிதைகளில் இதனை மீறவும் செய்திருக்கிறார். சாதாரண வாசகன் அறிவால் கண்டடைய முடியாத புதிர்த்தன்மையான சில வரிகள் அவரது கவிதைகளில் இருக்கின்றன. அவற்றை வாசகன் இதயத்தால் உணர்ந்து கடந்து செல்கிறான். இத்தகைய கவிதைகள் கவிதையை மிகவும் எளிமைப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்தும் போக்குக்கும், சேரனுக்குமிடையில் ஒரு இடைவெளியை பேணிக்கொண்டு வருகின்றன.

அவரது கவிதைகளின் மையம் போராட்ட கால மக்களின் வாழ்க்கைத் துயரும், போராட்ட எழுச்சி மனநிலையும்தான். ஆனாலும் வேறு சில மையமற்ற பக்கங்களும் அவரின் கவிதைகளுக்குள் உள்ளன. ஒரு காலகட்டத்தின் மையமான பிரச்சினைகளை அக்காலக் கவிதைகள் பிரதிபலிப்பது இலக்கியத்தின் பண்புதான். அந்த சூழல் மாறியதும் அந்தக் கவிதையின் முக்கியத்துவமும் குறைந்துசெல்வதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகளை மட்டும்தான் எழுதுவது என்றிருந்தால் சமகாலச் சூழல் பிரதிபலிப்புகளை கவிதையால் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே தான் வாழும் காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் பிரதிபலிக்க வேண்டியது கவிஞனின் முக்கிய பணியாக மாறுகிறது. சேரன் இந்தப் பணியைச் செய்யும் கருவியாகவே கவிதைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.