ஜான் லான்செஸ்டர்

ரியாலிட்டி அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ – ஜான் லான்செஸ்டர்

‘தி வால்’ என்ற நாவலை எழுதிய லான்செஸ்டர் அடக்கமான கற்பனை கொண்ட அமானுட, அல்லது, துல்லியமற்ற டிஸ்டோப்பிய சிறுகதைத் தொகுப்புடன் வந்திருக்கிறார். இந்தக் கதைகள் பதட்டமற்ற துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, எனினும் நம்மை அச்சுறுத்தத் தவறுகின்றன.

இவற்றில் மிகச் சுவாரசியமான கதை, ‘காஃபின் லிக்கர்’. அதன் கதைசொல்லி எளிதில் கோபப்படும் பொருளாதாரத்துறை பேராசிரியர், லான்செஸ்டரின் அரக்கத்தனமான ‘டெட் டு ப்ளஷர்’ கதையின் மேட்டிமை உணர்வுள்ள, மனிதர்களை வெறுக்கும் கதைசொல்லியை நினைவுபடுத்துகிறார். “பொருளாதாரத் துறையினருக்கு வ்ளாட் தி இம்பேலர் கற்றுத் தரக் கூடியது என்ன?” என்பது போன்ற உரைகள் கொண்ட ரோமானியா தேச கூடுகை ஒன்றில் பங்கேற்க வந்திருக்கிறார் அந்த பேராசிரியர். அங்கு அவரது அதீத யதார்த்தத்தன்மை கொண்ட வாழ்வினுள் இலக்கியம் மற்றும் தொன்மங்களின் இருண்ட மாயம் மெல்லப் பரவுகிறது. ‘சிக்னல்’ வெற்றி பெற்ற மற்றொரு கதை. ஓயாது உழலும் பேய்க்கதை இங்கு தொழில்நுட்பச் சார்பின் உவமைக் கதையாக புத்திசாலித்தனமான வகையில் மாற்றி எழுதப்படுகிறது. ‘சாரிட்டி’ என்ற கதை குழப்பமானது- காலனிய குற்றங்கள், அழகு குறித்த சமூக மதிப்பீடுகள், மற்றும் மானுட ஆணவம் ஆகியவற்றில் உதித்தது என்று எண்ணச் செய்யும் தீவினைத்தன்மை கொண்ட சபிக்கப்பட்ட செல்ஃபி ஸ்டிக் பற்றியது அது. தலைப்புக் கதை, நரகம் போன்ற ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய கதை. இதில் போட்டி துவங்குவதே இல்லை. நுட்பங்களற்ற வகைமையொன்றில் அனுமதிக்கப்படும் நடத்தை பற்றிய நுட்பமான அவதானிப்புகள் கொண்ட கதை இது. ஆனால், ‘வி ஹேப்பி ஃப்யூ,,’ ‘தி கிட், ‘ போன்ற கதைகளைப் போலன்றி அரைவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணர்வு அளிக்கிறது. ‘கோல்ட் கால்,’ மற்றொரு பேய்க் கதை, இது பயங்கரத்துக்கும் அச்சுப்பிச்சுத்தனத்துக்கும் இடையே உள்ள மிக மெல்லிய கோட்டைச் சித்தரிக்கிறது.

இந்தக் கதைகளில் ஒரு சிறிது வசீகரமும் உருக்கமும் நிறைக்கத் தவறவில்லை லான்செஸ்டர். நகைமுரண் தன்மை கொண்ட பார்வை, சுற்றிலும் நடப்பதன் மீது கவனம், உலோகாயத நோக்கு கொண்ட அவர் இந்த விஷயத்தில் சோடை போகக் கூடியவரல்ல. ஆனால் மெய்யான பயங்கரத்தின் அனுபவங்கள் என்று சொல்ல முடியாத வகையில் இவை எழுதிப் பார்த்த கதைகளின் உணர்வு அளிக்கின்றன.

நன்றி: பப்ளிஷர்ஸ் வீக்லி

ஜான் லான்செஸ்டர்: “டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது”

அலெக்ஸ் பிரஸ்டன்: இந்தக் கதைகளை ஏன் நீங்கள் இப்போது பதிப்பிக்க முடிவு செய்தீர்கள்? இவற்றில் பல வேறு இடங்களில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

லான்செஸ்டர்: “ஏன்?” என்பதற்கு உண்மையான பதில் இதுதான். இவற்றில் முதல் கதையை புத்தாண்டு அன்று எழுதி நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன். அப்போது ஒருவர், இதை நீ ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். நான் நியூ யார்க்கருக்கு அனுப்பினேன். அவர்கள் ஏப்ரல் 2017 ல் அதைப் பதிப்பித்தார்கள். அதுதான் நான் எழுதிய முதல் கதை. நீ ஐம்பது வயதுகளின் மத்தியில் இருக்கும்போது உன்னை கிறுகிறுக்கச் செய்து மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் இது அப்படித்தான் இருந்தது. இன்னொரு கதை எழுது என்று என்னை நோக்கி இந்த உலகம் சொல்வது போலிருந்தது.

லாம்பத் கார்டன் அருகில் இருக்கிறது இல்லையா, கார்டன் மியூசியம் என்ற அற்புதமான அருங்காட்சியகம், அதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு இரண்டாம் கதையை எழுதுவதற்கான தூண்டுதல் கிடைத்தது. அங்குள்ள நிலவறையில் பொருட்களை காட்சிப்படுத்தும்போது சவப்பட்டிகளை நகர்த்துவதுதான் சங்கடமான விஷயம் என்று அதன் கியூரேட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். நகர்த்தும்போது அவை அடிக்கடி உடைந்து விடுகின்றன, பிணங்கள் திரவமாய் வடிந்து பிணப்பெட்டிச் சாராயம் என்று சொல்லப்படும் வஸ்து உருவாகிறது. அப்போது, டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது.

பிரஸ்டன்: சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதிலிருந்து வேறுபட்ட விஷயமா?

லான்செஸ்டர்: நாவலாசியர்கள் பலருக்கும் பதின்பருவத்தில் கவிதை எழுதிய காலகட்டம் இருந்தது என்பது வினோதமான ஒரு குற்றவுணர்வுடன் கூடிய ரகசியம். நிச்சயம் எனக்கு இருந்தது. என் இருபதுகளின் துவக்க ஆண்டுகள் வரை கவிதை எழுதினேன். திகைக்கச் செய்யுமளவு மோசமான கவிதை, எல்லாமே காணாமல் போய் விட்டன. கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். கவிதை எழுதுவதில் ஒரு விந்தையான செயலின்மை இருக்கிறது: நாம் அது வரக் காத்திருக்க வேண்டும். சிறுகதைகள் தாமாய் வந்து சேர்ந்தன.

பிரஸ்டன்: விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்களை இந்தக் கதைகள் தொழில்நுட்பத்தில் அடையாளம் காண்கின்றன. நம் இணைய வாழ்வில் குறிப்பாக எதுவும் அது போல் புரிந்து கொள்ள முடியாத அச்சுறுத்தல் தன்மை கொண்டிருக்கிறதா?

லான்செஸ்டர்: இதில் பாதி வேலை முடிந்தபோதுதான் நிலைக்குலையச் செய்யும் தன்மை, இந்தப் பொருட்களின் அமானுடம் (போனை எடுத்துக் காட்டுகிறார்) பொதுக் கருவாய் இருப்பதை உணர்ந்தேன். பழைய காலத்தின் மிகச் சிறந்த பேய்க்கதைகளில்கூட நாம் நினைப்பதை விட அதிகம் புதுமை இருப்பதை நானும்கூட போகிற போக்கில் சொல்லியிருக்கிறேன். பேய்க்கதைகளில் சிறந்தது என்றால் டிக்கன்ஸின் ‘தி சிக்னல்-மேன்’ கதையைச் சொல்லலாம். அதை ஒரு விசித்திரமான கதையாய் நாம் படிக்கிறோம், ஆனால் அது எழுதப்பட்ட காலத்தில் சிக்னல்காரர்கள் புதியவர்கள். இன்னொரு கதை, “ஓ, விசில்,” மற்றொன்று, எம் ஆர் ஜேம்ஸ் எழுதிய “ஐ வில் கம் டு யூ, மை லாட்’. மத்திய காலகட்டத்துக்குரிய அடையாளங்கள் இருந்தாலும் அதில் வருபவன் கோல்ஃப் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் காம்பரிட்ஜ் கல்லூரி ஆசிரியன். இது எல்லாம் மிக நவீன விஷயங்கள். புதிய விஷயங்களில் ஏதோ ஒரு வகை நிலை குலையச் செய்யும் தன்மை இருக்கிறது. அமெரிக்க சோஷியோபயாலஜிஸ்ட் எட்வர்ட் வில்சன் ஒரு சுவாரசியமான விஷயம் சொல்கிறார். நமக்கு பாலியோலித்திக் காலகட்ட மூளை இருப்பதாகச் சொல்கிறார் அவர், ஆனால் நம் நிறுவன அமைப்புகள் மத்திய காலகட்டத்துக்கு உரியவை, தொழில்நுட்பம் இறைத்தன்மை கொண்டது. இவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில்தான் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்கள் இருக்கின்றன.

மேலும் வாசிக்க – தி கார்டியன்