ஜிஃப்ரி ஹாசன்

பிறந்த நாள்

– ஜிஃப்ரி ஹாஸன்-

காலத்தின் மர்மக்கரங்கள் வாழ்வின்
முடிவை நோக்கி
என்னை நகர்த்திச் செல்கின்றன
மனதுக்கினிய வாழ்த்துரைகளாலும்
பரிசில்களாலும்
கண்ணுக்குத் தெரியாத
மாபெரும் இழப்பொன்றை
மறந்திருக்க முனைகிறேன்
அல்லது மறைக்க விரும்புகிறேன்
வாழ்தலின் மீது
போலியான நம்பிக்கைகளை
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
மனிதர்களின் புன்னகை
மனமெங்கும் தூவி விட்டுச் செல்கிறது
வாழ்த்து அட்டைகளின்
அலங்காரமும்
குழந்தைகளின் முத்தமும்
எனது பிறப்பின் அர்த்தத்தை
நான் தேடுவதிலிருந்தும்
என்னைத் தடுத்து விடுகின்றன
ஒவ்வொரு பிறத்த தினத்திலும்
புதிதாகப் பிறப்பது போன்று
உணர்கிறேன்
மேலும்
பிறத்தல் இறத்தலின் தொடக்கம்
என்றும் உணர்கிறேன்

365 வது நாள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

மூடிக்கிடந்த சாளரங்களைத்
தட்டித் திறக்கிறது ஒரு புதிய கை

எனக்கு சூரியன் தேவை இல்லை
ஒரு நட்சத்திரம் போதும்
என்ற நம்பிக்கையுடன்
சாளரங்களைத் திறக்கிறேன்

முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுக்கும்
ஒரே இரவில் விடைகொடுத்து அனுப்புகிறேன்
அந்த யுகம் எனக்கு கையளித்த கனவுகளும்
என்னிடமிருந்து கையகப்படுத்திய கனவுகளும்
உருவைப் பிரியும்
நிழல் போல் என்னைக் கைவிட்டு நகர்கின்றன

மீண்டும் எனக்கு முன்னால்
முன்னூற்றி அறுபத்தைந்து நாட்கள்
முன்னூற்றி அறுபத்தைந்து நட்சத்திரங்களாக
ஒளிர்கின்றன
வாழ்வை ஒளியூட்டும் புதிய நம்பிக்கைகள்
திறந்த சாளரங்கள் வழியே
என்னை ஒளியூட்டுகின்றன
நான் இப்போது
ஒரு பெரிய நட்சத்திரமாகி
இருளின் தெருக்களில் இறங்குகிறேன்

 

மழைக் கால சோகம் போல…

ஜிஃப்ரி ஹாசன்

சங்கீத வார்த்தைகளால்
வானம் மழைக்கால கீதத்தை
இசைக்கிறது
கொதிப்பேறிக் கிடந்த
வரண்ட நிலத்தின் வெடிப்புக்களை
கண்ணாடிப் பூக்களாய்
மாற்றுகிறது மழை
இரசிக்கப்படாமலே
கைவிடப்பட்டுக் கிடந்த
இயற்கையை மழை அழகுபடுத்துகிறது
குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி
மழையின் தெருக்களில்
சிறகசைத்துப் பறப்பதை
முரட்டுக்கரங்கள் தொடர்ச்சியாகத்
தடுக்க முனைந்து தோற்கின்றன
மின்சாரக் காற்றில் உலர்ந்த உடல்களை
இயற்கையாய் வருடுகின்றன
மழையின் கரங்கள்.
மழைக் கால இரவுகள்
அன்பின் இரகசியத்தை ஈரச் சொற்களால்
பகிர்ந்துகொள்கின்றன
எனினும்
இனம்புரியாதவோர்
மழை நேரத்துச் சோகம்
மீண்டும் அதே ஈரச் சொற்களால்
துயரக் கவிதைகளை
இதயத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறது

அவளது வாழ்வு

ஜிஃப்ரி ஹாசன்

துர்க்கனவுகள் சங்கமிக்கும்
இடமாகிற்று வாழ்வு
கடவுள் வரைந்த
அவளது வாழ்வின் புதிர்களை
காலம் அவிழ்க்கத் தொடங்கியது
கடவுளால் அவளுக்கென வரையப்பட்ட வாழ்வு
இன்னும் அநாமதேயமாய் அலைந்து கொண்டிருக்கிறது
குளிரில் ஒடுங்கிய பறவையின்
மௌனச்சிறகுகளால் விசிறப்படும்
நீர்த்திவலைகளாய் அவள் கனவுகள்
ஒவ்வொன்றாய் உதிர்கின்றன
கானகத்துள் உறைந்திருக்கும்
இருட்டின் மௌனத்தை ஒத்த ஒரு மௌனம்
அவள் வாழ்வைப் போர்த்துகிறது
தனித்துப்போனவளின் துயரம் எதைப் போன்றது?
தனித்தலையும் ஒரு பறவையின் துயர் போன்றதா?
கைவிடப்பட்டவளின் மெளனம் எதைப் போன்றது?
கூரிய மலைகளின் மௌனத்தை விட கெட்டியானதா?
அவளது மௌனம் பூத்த கனவு எதை விடப் பெரியது?
மனிதர்களால் உதிர்க்கப்பட்ட
சுடு சொற்கள் அவள் இதயத்தை ஊடுறுவிய போது
தன் உடலெங்கும் பீறிட்ட கொடிய வலியை விடவும் பெரியதா?
அவளது ஏக்கம் எதை விடப் பெரியது?

யாசகத்தின் வாசகம்

ஜிஃப்ரி ஹாசன்

கையேந்தலில் வைக்கப்பட்ட

நம்பிக்கையோடு

யாசகர் கூட்டத்தின் பயணம்

ஒவ்வொரு அதிகாலையிலும்

தொடர்ந்தபடியேதான் இருக்கிறது

 

இந்த வாழ்வு யாருடனும்

பகிரப்படாமல் ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

எதுவரை நகரப் போகிறது?

 

கைகள் நீளும் தூரம் வரை

கண்கள் ஒளிகொள்ளும் தொலைவு வரைதான்

அவர்களின் நம்பிக்கையும்

வரையறை செய்யப்பட்டுள்ளது.

பாதைகள் விரியும் திசை எங்கும்

பயணம் தொடர்ந்தபடிதான்

இருக்கிறது!

பரிதவிப்பின்  குரலை

எதிர்பார்ப்புகள் நிறைந்த

கண்களின் ஒளியை

காற்று எல்லாத் திசைகளுக்கும்

எடுத்துச் செல்கிறது

வீட்டின் சுவரோரங்களில்

நின்றபடி

ஏக்கத்துடன் கதவுகளைத் திறக்க முனையும்

குரல்களில் கசிந்து கொண்டிருக்கும்

பதட்டத்தை செவியுறும் வாசல்கள்

திறந்து கொள்கின்றன

செவியுறாத கதவுகள்

மூடியபடியே இருக்கின்றன

நடுக்கத்துடன் நீளும் கரங்களில்

கனவுகளற்றுப் போன

பாதைகள் விரியும் திசைகளில்

அலைவுறும் அந்த வாழ்வின்

எல்லாத் துயரங்களும்

எழுதப்பட்டிருக்கிறது

ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

கசிந்துருகும் குரல்களை காற்று

எந்த வெட்கமுமின்றி

இன்னும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு

காவித் திரியப் போகிறது?