ஜிஃப்ரி ஹாசன்
ஞாபகங்களால் நிரம்பியுள்ளது
எனது வீடு.
வெறுமையான சுவர்களில்
ஒட்டி இருக்கின்றன நினைவுகள்.
என்னை மெளனம் போர்த்தும்
ஒவ்வொரு பொழுதிலும்
இதயத்தை நிரப்புகின்றன ஞாபகங்கள்.
வாழ்வு பற்றிய ஞாபகங்களுக்கு அஞ்சி
ஒரு குழந்தையைப் போல்
வீட்டின் மூலைகளில்
பதுங்கிக் கொள்கிறேன்.
யன்னலின் வழியே யாரோ அழைக்கும்
குரலுக்கு செவிசாய்த்தலின்றி
என்னைக் கள்ளத்தனமாய்
மூடுகிறது மௌனம்.
ஞாபகங்களின் கரங்கள் கதவில்
பயங்கர இரைச்சலுடன்
தட்டத் தொடங்குகையில்
மௌனத்தின் ஆமை ஓட்டுக்குள் பதுங்குகிறது மனம்.
இந்தப் பொழுதும்
ஞாபகமாய் நெஞ்சில் அறையுமுன்
அதன் கனவுகள் இதயத்தில் இடறு முன்
என் கதாபாத்திரத்தை நான்
மாற்றிக் கொண்டு வருகிறேன்.
ஏனெனில், ஞாபகங்களால் நிரம்பியுள்ளது
என் வீடு.
Like this:
Like Loading...