ஜோர்பா எனும் கிரேக்கன்

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் ஒன்று

(நரோபா தமிழாக்கம் செய்துகொண்டிருக்கும் Nikos Kazantzakis எழுதிய Zorba the Greek நாவலின் முதல் அத்தியாயம்)

நான் அவனை பைரியசில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். க்ரெட்டுக்கு கப்பலேறிச் செல்ல வேண்டியிருந்தது எனக்கு, துறைமுகம் வந்திருந்தேன். பொழுது விடியவிருந்தது, மழை வேறு வலுவாக பொழிந்து கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகள் மூடியிருந்த அந்த சிறிய கஃபே வரையில்கூட வலுவான சூறைக்காற்று அலைகளின் மீதிருந்து நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. நன்றாக நொதிந்த சேஜ் பானத்தின் வாசனை கஃபே முழுவதும் நிரம்பியிருந்தது. வெளிப்புறத்து குளிரால் உறைந்திருந்த கண்ணாடி சாளரங்கள் மனிதர்களின் உஷ்ணமான மூச்சுக்காற்றால் அதன் உட்புறங்களில் வியர்த்திருந்தன. இரவை அங்கேயே கழித்த ஐந்தாறு அரக்கு நிற ஆட்டுத்தோல் மேற்சட்டை அணிந்த கப்பல்காரர்கள் காபியையோ சேஜ் பானத்தையோ அருந்திக்கொண்டு தெளிவற்ற சாளரங்களின் வழியே கடலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கொந்தளிக்கும் கடல்நீரின் வலுவுக்கு அஞ்சி மீன்கள் கடலாழத்திற்குள் அடைக்கலம் புகுந்து கடல்பரப்பில் அமைதி திரும்புவதற்காக காத்திருந்தன. கஃபேயில் கூடியிருந்த மீனவர்கள் புயல் ஓய்வதற்காக காத்திருந்தனர் ஏனெனில் அதன் பின்னர்தான் தூண்டில் புழுவைத்தேடி மீன்கள் மிக நிச்சயமாக கடற்பரப்பை நோக்கி வரும். மத்திகளும், சுறாக்களும், திருக்கைகளும் தங்கள் தலைமறைவு வாழ்வை முடித்துக்கொண்டு மேலெழும். பொழுது மெல்ல புலர்ந்துக்கொண்டிருந்தது. (more…)