டாம் ஸ்டொப்பார்ட்

மெடுசாவின் மிதவை, ஒரு நீதிக்கதை – டாம் ஸ்டொப்பார்ட்

– பீட்டர் பொங்கல் –

அவர்களது துரதிருஷ்டம் அது. கடல் ஓதத்தின்போது கப்பல் மணற்திட்டில் மோதியது, கப்பலை விடுவிக்கும் முயற்சிகள் கடல் மேலும் மேலும் கொந்தளிக்கையில் தோற்றுப்போயின. போர்க்கப்பலை மீட்கவே முடியாது என்றானதும் மிதவை ஒன்றைக் கட்டுவது என்று முடிவானது. மிதவையொன்று செய்யப்பட்டது, அதுவும், சிறப்பாகவே செய்யப்பட்டது. நூற்றைம்பது பேர் அந்த மிதவையில் செல்வதென்றானது. மிதவையில் இருந்தவர்களிடம் ஒயின் இருந்தது, சிறிது பிராந்தி இருந்தது, சிறிதளவு தண்ணீர், நமுத்துப்போன பிஸ்கட்கள் கொஞ்சம். அவர்களுக்கு திசைகாட்டியோ வரைபடமோ அளிக்கப்படவில்லை. துடுப்பும் இல்லை, சுக்கானும் இல்லை- மிதவையைச் செலுத்த வழியேதும் இல்லை.

முதல் நாளிரவு  வீசிய புயல், மிதவையை பலத்த வேகத்துடன் அங்குமிங்கும் அலைக்கழித்தது. பொழுது புலர்ந்தபோது எங்கும் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன, அனைவரும் தங்களைச் சாவுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டனர். மறுநாள், கடல் அமைதியாக இருந்தது. பலர் மனதில் நம்பிக்கை மீண்டும் மலர்ந்தது. மிதவையில் இருந்த பலருக்கும் மனப்பிரமைகள் இந்தப் பகலில்தான் முதலில் தோன்றின. சிலர் கரை தெரிவதாகக் கற்பனை செய்தனர், சிலர் தங்களைக் காப்பாற்ற வரும் கப்பல்கள் தெரிவதாய் நினைத்துக் கொண்டனர்.

முதல் நாள் இரவைவிட இரண்டாம் இரவு கொடூரமாய் இருந்தது. தாம் மோசம் போய் விட்டோம் என்று உறுதியாய் நம்பிய சிலர் தங்கள் கடைசி கணங்களுக்கான ஆறுதலாய் தன்னிலை மறந்திருக்க விரும்பி, ஒயின் நிரம்பிய மிடாவொன்றை உடைத்தனர். தன்னிலை மறத்தலில் வெற்றியும் பெற்ற அவர்கள் ஒயின் நிறைந்திருந்த மிடாவுள் கடல்நீர் புகுந்து அதை நீர்க்கச் செய்யும்வரை தம்மை மறந்திருந்தனர். இதனால் இரட்டிப்பு ஆத்திரமடைந்த அவர்கள், மனம் பேதலித்தவர்களாகி அத்தனை பேரையும் ஒழித்துவிடுவது என்று உறுதி பூண்டு, மிதவையைப் பிணைத்த கயிறுகளைத் தங்கள் கத்திகளால் தாக்கினர். இந்தக் கலகக்காரர்கள் எதிர்ப்பைச் சந்திக்கவும், மிதவையில் இருந்தவர்கள்  இரவின் இருளில் அலைகளுக்கிடையே இரு தரப்புகளாய் திரண்டு அமைதி நிலைநாட்டப்படும்வரை மோதிக் கொண்டனர். ஆனால் அன்று நள்ளிரவில் போர்வீரர்கள் மீண்டும் எழுந்து, தம் உயர் அதிகாரிகளைக் கத்திகளாலும் வாட்களாலும் தாக்க முற்பட்டனர். பலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர், மரக்கட்டைகளால் தாக்கப்பட்டனர், கத்தியால் குத்தப்பட்டனர். ஒயின் மிடாக்கள் இரண்டு கடலுக்குள் வீசப்பட்டன, இருந்த தண்ணீரும் இழக்கப்பட்டது. முரடர்கள் அடக்கப்பட்டபோது, மிதவை பிணங்களால் கனத்தது.

மூன்றாம் நாள் அமைதியாகவும் அருமையாகவும் இருந்தது. அனைவரும் உறங்கினார்கள், ஆனால் பசியும் தாகமும் ஏற்கனவே துன்புறுத்திய கொடூரங்கள் போதாதென்று இப்போது குரூரமான கனவுகள் அவர்களை வதைத்தன. முதலில் இருந்தவர்களில் பாதியே இப்போது அந்த மிதவையில் இருந்தார்கள்.

நான்காம் நாள் காலை, தங்கள் சகாக்களில் பன்னிருவர் இரவில் உயிர் துறந்திருப்பதைக் கண்டனர். அவர்களது உடல்கள் கடலுக்கு அளிக்கப்பட்டன. ஒன்றைத் தவிர. அது பசிக்கு இருக்கட்டும் என்று எடுத்து வைத்துக் கொள்ளப்பட்டது. இன்றுதான் அனைவரும் மனித மாமிசம் உண்ணப் பழகினர். அடுத்த நாள் இரவு புதிய உணவு கிடைத்தது: மீண்டும் ஒரு பயங்கர சண்டை நடந்தது, விதியால் சபிக்கப்பட்ட மிதவை குருதியால் கழுவப்பட்டது. இப்போது முப்பது பேருக்கு மேல் மிதவையில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் காயப்பட்டிருந்தனர். அதனுள் உப்பு நீர் தொடர்ந்து புகுந்தது. உருக்கமான ஓலங்கள் எழுந்தன.

ஏழாம் நாள், இரு போர் வீரர்கள் கடைசி ஒயின் மிடாவின் பின் தம்மை மறைத்துக் கொண்டனர். அதில் துளையிட்டு, குடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடலுக்குள் வீசியெறியப்பட்டனர். இப்போது அதிபயங்கரமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டபோது, இருபத்து ஏழு பேர் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பதினைந்து பேர் சில நாட்கள் வாழக்கூடும். பிறர், கடுமையான காயங்களால் குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தனர். அவர்களில் பலர் பிதற்றிக் கொண்டிருந்தனர், பிழைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருந்தது. பெருஞ்சோகம் கவிந்திருக்க ஒரு விவாதம் நிகழ்ந்தபின், ஆரோக்கியமாய் இருந்த பதினைந்து பேரும் நோய்வாய்ப்பட்டிருந்த சகாக்கள், பிழைக்கும் வாய்ப்புள்ளவர்களின் பொதுநலனை முன்னிட்டு, கடலுக்குள் வீசியெறியப்பட வேண்டும் என்று ஒருமனதாய் முடிவெடுத்தனர்.

இந்தக் குரூர தியாகத்துக்குப்பின், இறுதியில் பிழைத்திருந்த இந்த பதினைந்து பேரும் தங்கள் ஆயுதங்களைக் கடலில் வீசினர்- கயிறு அல்லது மரம் வெட்ட வேண்டிய தேவை எழுவதை முன்னிட்டு ஒரு குறுவாள் மட்டும் வைத்துக் கொண்டனர். சுட்டெரிக்கும் சூரியனின் கீழ், அவர்கள் உயிரை அடக்கமாட்டாத தாகம் உண்ணத் துவங்கியது. அவர்கள் தம் சிறுநீர் கொண்டு உதடுகளை நனைத்துக் கொள்ளத் துவங்கினர். இப்போது மிதவையைச் சுற்றி சுறாமீன்கள் வலம் வந்தன. சில போர் வீரர்கள், சித்தம் பேதலித்த நிலையில், மாபெரும் அந்த மீன்கள் பார்வையில் குளியல் எடுத்துக் கொண்டனர்.

பதின்மூன்றாம் நாள், மேகங்களற்ற வானில் சூரியன் உதித்தது. பாவப்பட்ட பதினைந்து பேரும் எல்லாம் வல்ல இறைவனைத் துதித்து, மிச்சமிருந்த ஒயினைப் பகிர்ந்து கொள்ளும்போது, காலாட்படைத் தலைவன் ஒருவன், தொடுவானத்தைப் பார்க்க நேரிட்டு, தொலைவில் ஒரு கப்பலைக் கண்டான். இறைவனுக்கு நன்றி சொல்லி ஒரு சிறு படையல் அளிக்கப்பட்டது. மிடாக்களின் வளையங்களை நிமிர்த்தி, அதன் முனைகளில் கைக்குட்டைகளைக் கட்டி வைத்தனர். அவர்கள் அடுத்த அரை மணி நேரம்  நம்பிக்கைக்கும் அச்சத்துக்கும் இடையில் ஊசலாடினர். அதன்பின் கப்பல் கடலைவிட்டு மறைந்தது. மிகக் குரூரமான சிந்தனைகளில் அடுத்த இரண்டு மணி நேரங்கள் கழிந்தன. அதன்பின், துப்பாக்கி வீரர் குழுத்தலைவன் ஒருவன் மேலே பார்த்தபோது, ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆர்கஸ் கப்பலைக் கண்டான். அது தன் பாய்மரங்களை விரித்து வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பிழைத்திருந்த பதினைந்து பேரும் அதில் ஏற்றிக் கொள்ளப்பட்டனர். கப்பல் தலைவனும் அதிகாரிகளும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தனர். பின்னாளில் தங்களது கொடூரமான அனுபவத்தை நினைவு கூர்ந்த இருவர் தாங்கள் காப்பற்றப்பட்ட விதம் உண்மையாகவே அதிசயமானது என்ற முடிவுக்கு வந்தனர், இந்த நிகழ்வில் இறைவனின் விரல் சுட்டுவது வெளிப்படை என்றனர்.

நடந்தது என்னவென்றால், இந்தக் கதை அளிக்கும் படிப்பினைகள் எல்லாம் நல்லபடி முடியும் என்று நினைப்பவர்களுக்கா, எல்லாம் மோசம் போகும் என்று அஞ்சுபவர்களுக்கா, இருவருக்கும் என்ன சேதி சொல்கிறது என்று நான் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ‘மெடுசாவின் மிதவை‘ என்று நம்மால் அழைக்கப்படும் Géricaultன் மகத்தான ஓவியம் பற்றி ஜூலியன் பார்ன்ஸ் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை நான் வாசிக்க நேர்ந்தது (கடலில் கவிழ்ந்த கப்பல் என்று அதன் ஓவியரால் அழைக்கப்பட்ட ஓவியம் அது). அந்த மிதவையில் என்ன நடந்தது என்பதை நான் இங்கு மிகவும் சுருக்கிக் கூறியிருக்கிறேன் என்றாலும்கூட, மிதவையில் இருந்தவர்கள் எதிர்கொண்ட கொடூரங்களை நீங்கள் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். என்னோடு நீங்களும் இதில் உள்ள ஒரு நீதிக்கதையின் வசீகரத்தைக் கண்டிருக்கக்கூடும்: ஆம், நாமெல்லாரும் அந்த மிதவையில்தான் இருக்கிறோம்.

ஆனால், இதில் விடை காணப்படாத கேள்வி ஒன்றுக்கு நாம் பதில் கண்டாக வேண்டும். இதுதான் அது: எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கைக்கான நீதிக்கதையா, அல்லது, எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான நீதிக்கதையா? எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான கதை என்றால் இது அவ்வளவு மோசமானது அல்ல: சரியாவதற்கு முன் நிலைமை  மோசமாகும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது, ஆனால் எப்படியும் நிலைமை சரியாகும். ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும் என்று நாம் நினைக்க விரும்பினால்? இந்த முடிவு அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. இருப்பதிலேயே நல்லது என்பது, தொடுவானத்தில் தெரிந்த ஆர்கஸ் அருகில் வந்து காப்பாற்றும் என்றால், அதைவிடச் சிறிய நன்மை என்பது அது வராமல் போவது என்றுதான் அர்த்தமாகும்.

ஆனால் நம்பிக்கைக்கான கதையா அல்லது அச்சத்துக்கான கதையா என்று நாம் இது குறித்து கேட்க முடியும் என்பதிலேயே ஒரு உண்மை பொதிந்திருக்கிறது. தம் மிதவையில் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவிகள் போல் நாம் நம் கதையாடல்களில் சிறைப்படவில்லை என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. அந்த விபத்தின் காரணிகள் இறுதியானவை மட்டுமல்ல, நெருக்கமானவையும்கூட. முதலில் அவர்கள் கப்பலைச் செலுத்துவதில் பிழை செய்திருந்தார்கள், அடுத்தபடியாக கப்பல் மணற்திட்டில் மோதிக் கொண்டது. கப்பலில் இருந்தவர்களின் உடனடி பின்விளைவுகளுக்கான நடத்தையிலும் ஒழுங்கு கெட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதற்கான அண்மைக் காரணங்கள். இதுதான் இந்த நீதிக்கதையின் மையம். இதுதான் நமக்கு அர்த்தப்படவேண்டும்.

அந்த மிதவையில் இருந்தவர்களில் பத்துக்கு ஒருவர் பிழைத்துக் கொண்டார்கள். மெடுசா 1816ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயணத்தைத் துவங்கியது. இது எல்லாம் வெகு விரைவில் நடந்து முடிந்து விட்டன. அந்த மிதவையில் இயங்கியது எது என்று பார்த்தால், பேர் பெற்ற, அழிக்க முடியாத, உறுதியான நம் தற்காப்பு உணர்வுதான். ஒற்றுமையாய் செயல்பட்டிருந்தால், அந்த நூற்று ஐம்பது பேரில் பத்துக்கு ஒன்பது பேர் சுலபமாகவே பிழைத்திருக்கக் கூடும். ஆனால் பத்துக்கு ஒருவர்தான் பிழைக்க முடிந்தது. எதிர்காலம் நமக்கு அளிக்கக்கூடிய நன்மைகளில் மிகச் சிறந்தது எது என்றும் நமக்குச் செய்யக்கூடிய தீமைகளில் மிக மோசமானது எது என்பதையும் பார்க்க உதவும் இரட்டைப் பார்வை கொண்ட இந்தக் கதையில் நான் இதைத்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மெடுசாவின் மிதவை கதையை ஒரு நீதிக்கதையாக, நம்மை எச்சரிக்கும் கதையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். கதை நமக்குச் சொல்வது இது என்று நினைக்கிறேன் – நாம் ஒத்துழைக்காவிட்டால் நாசமாய்ப் போவோம். நாம் மோசம் போனோம். இந்த மிதவையில் நாம் வாழும் வாழ்வில் நாம் தயையை போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அப்படிச் செய்தால் மட்டுமே, நாம் உயிர்பிழைக்க முடியும்.

நன்றி – The Raft of the Medusa: A Cautionary Tale from Tom Stoppard. Lithub 

ஒளிப்பட உதவி – The Raft of the Medusa, Wikipedia