தண்ணீர்

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)