தன்ராஜ் மணி

தாயினும் சாலப்பரிந்து – பாவண்ணனின் ஒட்டகம் கேட்ட இசை கட்டுரை தொகுதி – வாசகனின் பரிந்துரை

தன்ராஜ் மணி

ottagam_kaetta_isai

நிமிடத்திற்கு நூறு அனுபவ பதிவுகள் முகநூலிலும், வலைப்பூக்களிலும் வெளி வரும் இந்நாட்களில் ,அனுபவ பதிவு வ்கை எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமே ஒரு மனச்சோர்வை எனக்களிக்கிறது.

ஆனால் இது பாவண்ணனின் அனுபவ கட்டுரைகள். சொற்களின் நெசவு கைவரப் பெற்றவர் தன் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் பொழுதே இவ்வகை எழுத்துக்களை எவ்வளவு படைப்பூக்கத்துடன் எழுத முடியும் என்பதை உணர முடிகிறது. தன் அனுபவங்களை பதிவுகளாய் வலையேற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இத்தொகுப்பை  அவை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

பெரு நகர வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள், தன் வேலை நிமித்தம் அவர் செல்லும் இடங்களில் அவரை பாதித்த விஷயங்கள் இவையே பல கட்டுரைகளுக்கான கருப்பொருள்.

நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகும் சமூக அவலங்கள்  புறக்கணிக்கும் யதார்த்தங்கள் ,  கண் முன்னால் கரைந்து மறையும் வாழ்க்கை முறை இவையே இக்கட்டுரைகளின் பேசு பொருள்.  

ஒரு சிறுகதையாய் தான் எழுதமுடியாமல் போன அனுபவங்களை கட்டுரையாக்கி இருப்பதாக முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார். இவர் தேர்ந்த கதைசொல்லியாகவும் இருப்பதால் அனைத்து கட்டுரைகளும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஒரு வகையில் அனுபவ கட்டுரை எழுத்தாளர் தன் அனுபவங்களுடன் சேர்த்து தன்னையும் வாசகர் முன் வைக்கிறார். சிலருக்கு சுபாவமாகவே மனிதரின் நற்பண்புகள் மட்டுமே கண்ணில் படும்,  சக ஜீவராசிகள் படும் அல்லல்களும். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

ஒரு புலம் பெயர் பிஹாரிக்கு உதவி புரிதல், சமூகத்தின் ஆகக்கடைசி இடுக்கில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தல், குழந்தையை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் தாயின் துயரை தானும் அடைதல் என பாவண்ணன் எனும் மனிதரின் நல்லியல்புகள் இக்கட்டுரைகளின் பேசுபொருளையும் தாண்டி வெளிப்படுகின்றன.

சமூக பொறுப்புணர்வோடு , பிறருக்கென எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்  நேரம் செலவழிப்பவர்களையும் காண்பது மிக மிக அரிதாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலும் பாவண்ணன் போன்றோர் மனிதமும் , அன்பும் , நெகிழ்வுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே பெரும் ஆசுவாசமளிக்கிறது.

நக்கலும் , நையாண்டியும் , வலிந்து வரவழைக்கப்பட்ட நகைச்சுவையும் இல்லாத அனுபவ கட்டுரைகளை நான் படித்து பல காலங்கள் ஆயிற்று. இவை எதுவுமே இக்கட்டுரைகளில் இல்லை என்பது எனக்கு பேருவகை அளித்தது.

இக்கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நெருங்கிய நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிய நிறைவு. விடை பெறும்போது பிரிய மனதே இல்லாமல், குலுக்கிய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் , அவர்களின் பிரியம் உங்களை நெகிழச் செய்தால், இந்த கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும்.