வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும் நிரம்பியிருக்கும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே போல் தன் முலை சுரக்கும்.
வயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.
எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.
காலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயணிக்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
எல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.
கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.
மகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
குணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.
காவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது? இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன் நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர் வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.
இவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.
மெல்ல இருட்டுத் திரை விலகத் தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.
நெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்தது. காட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தன. பறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர் தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.
போர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் ”அமரர்” ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.