திருமூர்த்தி ரங்கநாதன்

கையளவுக் கடல்நீர்

– திருமூர்த்தி ரங்கநாதன் –

nanjil_nadan_spl_issue

 

“உப்பு கரிக்கவில்லை, இனித்தது.”

திரு. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘உப்பு’ என்ற நூல் வெளியானபோது, அவர் தன் குருவாகக் கருதும் திரு. ரா.பத்மநாபன், நாஞ்சில் நாடனுக்கு எழுதிய ஒற்றை வரி விமர்ச்சனப் பதில்தான் மேலே உள்ளது!

தமிழ் எழுத்தாளர்களை, “எழுதும் கதை, கவிதை, அல்லது கட்டுரைகளை வைத்து, அல்லது மேம்போக்கான அல்லது தீவிரமான வாசகர்களுக்காய் எழுதுபவர் என்று, அல்லது முழு நேர எழுத்தாளர் அல்லது வேறு வேலையில் இருக்கும், பகுதி நேர எழுத்தாளர்,” என்றோ பலவாறு வகைப் படுத்தலாம். கவனிக்க – இதில் முழு நேர எழுத்தாளர் என்கிற வகையினர், (திரு. ஜெயமோகன், திரு. எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரை ) விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய, அருகிவரும் நிலையில் இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல; சங்க காலம் தொட்டு தற்காலம் வரையில், தமிழில் எழுதி, அதன் மூலம் மட்டுமே பெரும்பான்மையான படைப்பாளிகள் வளமாக வாழ்கிற நிலையில், அவர்களை விட்டு வைக்காததற்கு, தமிழ்ச் சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்!

ஒருவருக்கு சராசரிக்கும் மேலான ‘தமிழ்ப் புலமையும்’, ‘கதை சொல்லும் திறமையும்’ இருந்துவிட்டால் மேற்சொன்ன வகைகளில் ஏதோ ஒரு வகை எழுத்தாளராகி விடலாம். இவ்விரண்டும் வாய்க்கப் பெற்றவர், இத்திறமைகளின் உதவியோடு எழுத்தாளராகக் காலம் தள்ளிவிடலாம். சக்கரங்களின் உதவியால் எளிதாக சாலைகளில் விரைந்தோடும் கார்களைப் போல! பெரும்பாலான எழுத்தாளர்கள் தம் வாழ் நாள் முழுதும், இப்படிப்பட்ட எழுத்துக் ‘கார்’களாகவே இருக்கிறார்கள். ஆனால் மற்ற சிலரோ ஆரம்பத்தில், ‘இச்சக்கரங்கள்’ உதவியோடு ஓட ஆரம்பித்தவர்கள், சற்றுத் தொலைவு சென்றதும் வானில் மேலெழும்பும் விமானம் போல, தான் ஓட உதவிய சக்கரங்களையும் உயர்த்திச் செல்கிறார்கள். இவர்களால்தான் காலத்தையும் வென்று நிற்கும் இலக்கியங்களைப் படைக்க முடிகிறது. திரு. நாஞ்சில் நாடன் அப்படிப் பட்ட ‘ஆகாய வாகனன்களில்’ ஒருவர்! அவர் மிகச்சிறந்த கதைசொல்லி மட்டுமல்ல, சமூக அவலங்களை அலசும் அறச் சீற்றம் கொண்ட கட்டுரைகளையும், அழகு ததும்பும் இயல்பான பல கவிதைகளையும், படைத்த பன்முக வித்தகர்!

“அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.” என்று சொல்லும் திரு. நாஞ்சில் நாடன் இதுவரை பெற்றுள்ள அங்கீகாரங்களுக்கு, 2013-ல் கனடாவிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய “வாழ்நாள் இலக்கியச் சாதனை” இயல் விருது, 2010-ல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது (சூடிய பூ சூடற்க), 2009-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றன “மூன்று சோறு பதம்.” முழுச் சோற்றுப் பானையைப் பார்க்க விரும்புவோர் கடைசிப் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சொடுக்கவும்!

இனி, அவரின் படைப்புகளைச் சற்று கவனிக்கலாம். செவ்விலக்கியம் என்றாலே காது கேட்‘காத தூரம்’ ஓடுபவர் தமிழில் மட்டுமல்ல, ஆங்கில மொழிபேசுபவர்களிலும் உண்டு. ஆனால் அவர்கள் ஓடுவதைக் குறைத்து, ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்களின் படைப்புகளுக்குள் அவர்களைக் கொண்டு வர, ஆங்கிலத்தில் பிறரால் ஆக்கப்பட்ட எளிய அறிமுக நூல்கள் (உ-ம்: Brush Up Your Shakespeare!) உள்ளன. தமிழில் அதுபோல, “கம்பனின் தமிழ் இனிமைதான், ஆனால் அது கெட்டிக் கரும்பாக இருக்கிறதே” என கடிக்கத் தயங்குவோர்க்கு, கரும்பிலிருந்துச் சாறு பிழிந்து, ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற ஒரு அருமையான, எளிமையான நூல் மூலம், எளிமையாக குடிக்கத் தந்திருக்கிறார். காரைக்குடியில் தோன்றிய தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் முதன்மை மாணவரான, தமிழ்ப் பித்தர் ரா. பத்மநாபனின், கைபிடித்து நாஞ்சில் நாடன் கம்பனை மூன்றரை ஆண்டுகளாக அனுபவித்துப் பயின்றவர். இந்தப் பயிற்சிக் காலத்தில்தான் தான் தன்னையறியாமலேயே ஒரு எழுத்தாளனாகப் பரிணமித்ததாகச் சொல்கிறார். இவரின் முதல் நாவலான, ‘தலைகீழ் விகிதங்கள்’ இக்கால கட்டத்திலேயே எழுதப்பட்டது. (இந்நாவலே, பின்னாளில் இயக்குனர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படமாக வெளியானது.) “கம்பன் ஒரு சொற்கிடங்கு, தடையறா அம்புகள் மூலம் இராமன் எதிரிகளின் நெஞ்சை ஊடுருவினது போல், படிப்பவர் சிந்தைகளை கம்பன் சொற்களால் உழுகிறான்,” என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார். கம்பனின் சொற்களின் தரிசனம் வழியாகவே கம்ப ராமாயணத்தின் தெரிவு செய்த காட்சிகளை, தமிழ்ச் சொற்களின் மாட்சிகளை, அவன் பிரயோகித்த விதத்தில் வாசகரின் முன்னால் வைக்கிறார். இந்த நூலை, நாஞ்சில் நாடனின் சொற்பொழிவாகக் கேட்ட காரைக்குடிக் கம்பன் கழகத்தார் கொடுத்து வைத்தவர்கள். நல்ல திரையிசைப் பக்திப்பாடல்களை ஒருவர், பாடகரின் குரல் வளம் மற்றும் இசைக்காக ரசிக்கலாம். கூடவே அவர் ஆன்மீகவாதி என்றால் பாடல்களில் கசியும் பக்தியையும் ரசிக்கலாம். ரசிப்பவரைப் பொருத்து ‘கம்பனின் அம்பறாத் தூணி’யும் அப்படியே. நாஞ்சில் நாடனை எழுத்துக்கு இழுத்துக் கொண்டு வந்த, கம்பச் சொற்சக்கரவர்த்திக்கு ஒரு நன்றி வணக்கம் போட்டுவிட்டு அவரின் கதைகளுக்குத் தாவலாம்.

நாஞ்சில் நாடனின் கதைகள் ‘உலகியல் தன்மை’ கொண்டவை என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொன்னதை தமிழில் தற்போது முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான திரு. ஜெயமோகன் “காலம் இதழ் 42, ஜூலை 2013- இதழில், பசி வீற்றிருக்கும் நடு முற்றம்” என்னும் கட்டுரையில் வழி மொழிகிறார். தன் கதைகளில் ‘மனிதனின் அகத்தில் உள்ள எதிர்மறைக் கூறுகள் அல்லது அடிப்படை இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்’ ஆ. மாதவன் மற்றும் ‘மனிதனின் அற்பத்தனங்களை’ தன் கதைகள் மூலம் முன் வைக்கும் நீல பத்பநாபன் என இருவரின் கலவையாக உண்டானவர் நாஞ்சில் நாடன், ஆனால் “தன் கதை மாந்தர்களை கருணையுடன் அனுகி, அவர்களின் குறைகளிலுடன் அவர்களின் மேன்மைகளையும் பேசிச் செல்லும் விதத்தில்,” நாஞ்சில் நாடன் இந்த இருவரையும் விட ஒரு படி உயர்ந்தவர் என்பது ஜெ.மோ.வின் கணிப்பு. ‘நள்ளென்று ஒலிக்கும் யாமம்’ என்கிற சிறுகதை மூலமாக இந்தக் கணிப்பு சரியென்பதைக் காணலாம். தோப்பில் தேங்காய்கள் திருடிக் கொண்டிருக்கும் திருடர்களைக் காட்டிக் கொடுக்கப் போன ஒருவனை வழக்கமாக, திருடர்கள் துன்புறுத்தியிருப்பார்கள். ஆனால் இக்கதையிலோ, “ஊர்மக்களே இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிக்க வருவதில்லை, உனக்கு ஏம்ப்பா இந்தத் தேவையில்லாத காட்டிக் கொடுக்கிற வேலை,” என்று உபதேசித்ததோடு நில்லாமல், அவனுக்கு இரு இளநீர்கள் தந்து உபசரித்து, வீட்டுக்குக் கொண்டு செல்ல தேங்காய்கள் தருவதாகவும், தேவைப்பட்டால், சைக்கிளில் வீடு கொண்டு போய்ச் சேர்ப்பதாகவும் சொல்கிறார்கள். பசியோடு இருப்பவன் அதைத் தனிப்பதற்காகத் திருடினால், அவனை சக மனிதர்கள் வெறுப்பதில்லை என்பது ஒரு மேலை நாட்டுப் பழ மொழி (Men do not despise a thief if he steal to satisfy his soul when he is hungry. Proverb VI, 30, c. 350 B.C). ஆனால் ‘காட்டிக் கொடுக்க முயன்ற ஒருவனிடம் திருடர்கள் அன்பு காட்டுவது,’ என்பது வாசகனுக்கு நாஞ்சில் நாடன் காட்டும் புது உலகம். இதை நீங்கள் ஒருபோதும் மறக்கவியலாது. இப்படி எளிய மனிதர்களிடமும் மனிதாபிமானத்தை நாஞ்சில் நாடன் தேடக் காரணம், அவர் இள வயதில் பட்ட பசிக் கொடுமைகளும், அது சார்ந்த பிறரிடம் பட்ட அவமானங்களுமே என்பது மனதைக் கனக்க வைக்கும் செய்தி. ஒரு வேளைப் பசியின் உக்கிரம் உண்டவுடன் தணிந்து விடும். ஆனால் பசியாற்ற நேரும்போது எதிர்கொண்ட அவமதிப்பு வாழ்நாள் முழுதும் தீரா வடுவாக, படைப்பிலக்கிய ஊக்கியாகத் தொடரும். எனவே நாஞ்சில் நாடனின் நிறையக் கதைகள் பசியைப் பற்றியவை என்பதில் வியப்பில்லை. உதாரணமாக ‘விரதம்’ என்கிற கதையில் “சொந்த மகள்கள் வீட்டிற்குப் பசியாறச் சென்ற தகப்பன், பசியோடே வீடு திரும்பும் வீம்பிற்குக் காரணம்” இந்த வடுவாகவே இருக்கக் கூடும். இவரின் சிறுகதைகள் நிறைய நூல்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக, ந. முருகேசப் பாண்டியன் தொகுத்து உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியிட்ட “நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்” என்கிற நூல் புதிய வாசகர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமையும்.

ஆனந்த விகடனின் வாசகர்கள் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை ஏற்கனவே ‘தீதும் நன்றும்” என்கிற தலைப்பில் 2008-2009-களில் படித்திருப்பார்கள். ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘காவலன் காவான் எனில்’, மற்றும் ‘திகம்பரம்’ போன்றவை இவரின் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த நூல்கள். நாஞ்சில் நாடனுக்குள் இருக்கும் சமூகப் போராளியின் கலகக் குரலை இந்தக் கட்டுரைகளில் வழக்கம் போல் அழகு கொஞ்சும் குமரித் தமிழில் வாசிக்கலாம். ஒரு எழுத்தாளனின் கடமைகளில் ஒன்று சமூக அவலங்களைப் பதிவு செய்வது. அதில் முகம் பார்த்துத் தன்னைச் சரி செய்வது ஒரு சமூகத்தின் கடமை. பெண்கள், குறிப்பாக மாணவிகள் கழிவறை இன்றி நகரங்களில், பள்ளிகளில் படும் அவலம், மற்றும் உடல் உபாதைகளை ‘தீதும் நன்றும்’ கட்டுரைகளில் இவர் விகடனில் எழுதியதைப் பார்த்து ஒரு மாவட்ட ஆட்சியர் தன் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர்ப் பள்ளிகளின் கழிப்பறைக் குறைகளை சரி செய்ய உத்தரவிட்டார். இந்தத் தொடரில் பேசப் பட்ட மற்றக் கருத்துக்களை பொதுவாழ்வில் தூய தலைவர் திரு. நல்லக்கண்ணு தான் பங்கு பெற்ற மேடைகளில் பேசியிருக்கிறார். ‘கடற்கரைகளைப் பேணாமை,’ ‘உணவுப் பண்டங்களை வீணடித்தல்’ போன்ற மேலும் பல பிரச்சனைகளை ஒரு சமூகத்திற்கே தகப்பன் போன்ற பொறுப்பிலிருந்து அலசியிருக்கிறார்.

கவிதைகளையும் நாஞ்சில் நாடன் விட்டு வைத்தாரில்லை. மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி போன்றன இவர் எழுதிய கவிதைகளைத் தாங்கி வந்த நூல்கள். ஒரு கவிதையை இங்கே வாசகர்களுக்காய்:

இறையும் மறையும்

சரஞ்சரமாய் பூத்து
இலை உதிரக் காத்து
மஞ்சட் பாறையாய்த் தெளிந்து
சரக்கொன்றை கண்பட்ட
தருணம்
கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று.

கங்கை ஆற்றைப் புனைந்தானும்
அம்புலியின் கீற்றை அணிந்தானும்
மேனி நெடுக கீற்றை வரைந்தானும்
வல்லரவின் ஆரம் சுமந்தானும்
கற்றைவார்ச் சடைமேல்
பனி மெளலி கவித்தானும்
கயிலையில் மட்டுமே இருக்கக்
கட்டுரை இல்லை.

நெருஞ்சியும் தும்பையும்
அரளியும் நொச்சியும்
கள்ளியும் முள்ளியும்
எருக்கும் குருக்கும்
குவளையும் காந்தளும்
செம்மலும் குறிஞ்சியும்
கொழுஞ்சியும் அழிசும்
ஊமத்தையும் ஆவாரையும்
எனப் பல்வகைச்
சிறு மலரிலும் இருப்பான்
இறை எனில் இயற்கை
மறை எனில் அதன் வழிபாடு.

நாஞ்சில் நாடனை நேரில் சந்திக்க நேரிடுபவர்களுக்கு, அவர் “முதல் சந்திப்பிலேயே நெடு நாள் பழகினபோல் வாஞ்சையை வெளிப்படுத்தும்” எளிமையான அன்புக்குச் சொந்தக்காரர் என்று விளங்கும். ஆங்கிலத்தில் Golda Meir- ன் பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு – “Don’t be so humble; you are not that great.” இதன் உட்கருத்து, “மிகவும் பெரிய மனிதர்கள் பழகுவதற்கு மிகவும் எளியவர்களாக பண்பட்டு இருப்பார்கள்” என்பதாகும். இந்த “அன்பன்றி வேறு பேச்சற்ற பண்பிற்கு” சென்னையில் பன்முக ஆளுமையும் எழுத்தாளரும் இப்போது அமரரும் ஆகிவிட்ட திரு. சுஜாதா, கனடாவில் எழுத்தாளர் திரு. அப்பாத்துரை முத்துலிங்கம், கவிஞர் திரு. சேரன் ருத்ரமூர்த்தி, கோவையில் திரு. ஞானி, மற்றும் இக்கட்டுரையின் நாயகனான திரு. நாஞ்சில் நாடன் போன்றவர்கள் உதாரண மனிதர்களாக விளங்குகிறார்கள்.

“எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு,” என்பவை நாஞ்சில் நாடனின் வார்த்தைகள். அவரின் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிந்தவர்கள் அப்படிச் செய்வது அவரின் நெடுங்கால இலக்கியத் தவத்திற்கு அவர்கள் செய்யும் குறைந்த பட்ச மரியாதை. புத்தகங்கள் வாங்க இயலாதோர், நாஞ்சில் நாடனின் இணைய தளத்திற்கு சென்று அவரை வாசிக்கலாம். நாற்பது ஆண்டுகளாக ஒரு இலக்கியப் பெருங்கடலைப் படைத்தவரிடமிருந்து வாசகர்கள் மீது இக்கட்டுரை தெளித்துள்ளது ஒரு கையளவு நீரே! மீதியை அனுபவிக்க அவர்கள்தான் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.