தி. ஜா

இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (தர்பார் கானடா)

பானுமதி. ந

2. தர்பாரி கானட (தர்பார் கானடா) – ஒளியும் ஒலியும்  

கானடா நம் நினைவில் தன்னிரக்கத்தையும், சுகமான சோகத்தையும் ஏற்படுத்தும். தர்பாரில் ஒரு கம்பீரம் கலந்த நிலை. இவ்விரு ராகங்களைப் போல்,  பூர்வா மற்றும் அம்மணி இருவரும் இரு மாபெரும் எழுத்தாளர்கள் படைத்த ராகங்கள்..

பெயரில் ஒரு பாவம் பொதுவாக இருக்கிறது. பெயரைக் கேட்கும்போதே ஒரு கோட்டுச் சித்திரம் மனது வரைந்துவிடுகிறது. அதிகம் கேள்விப்படாத பெயரோ அல்லது பொதுப்பெயரோ நம்மைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது.

பூர்வா ஒரு அபூர்வ பெயர். அம்மணியோ பொதுப் பெயர். இப்பாத்திரப் பெயர்களே நம்முள் அலை எழுப்புகின்றன. இந்தக் கதாநாயகிகள் உயிர்ப்புடன் உலா வர உறுதுணை செய்கின்றன..

இரைச்சலும், மௌனமுமான சூழ்நிலையில்தான் அறிமுகமாகிறாள் பூர்வா!

ஒளியும் ஒலியுமாக அம்மணி.

அம்மணிக்கு அவள் ஊரைப் பற்றி பிறர் பேச விருப்பமில்லை. தன்னுள் நினைத்துக்கொள்ளவே ஆசை.

பூர்வா ஊரை நினைப்பதேயில்லை.

அம்மணி ஆதிப் பெருங்காற்று, ஊழிப் பெருவெள்ளம், தடை உடைக்கும் பிரவாகம்! காட்டாற்றின் வேகம். பிரபஞ்ச தாண்டவம். வெளியே இரைச்சல். உள்ளே நிறைவு. அழகின் செருக்கு. மனிதர்களைத் தொட்டு உணரும் மனப்பழக்கம். ஊரில் பெரிய மனிதரின் சிறு கால் அழுக்கைக்கூடத் தாளாத சிறுமி- அவர் மனக்குப்பையை அறிகையில் பந்தத்தையும், சொந்தத்தையும் துறக்கிறாள். பாடலும், ஆடலுமாக வாழப் பிடித்திருக்கிறது.

இறைவன் இணைக்கும் பந்தங்கள் வேடிக்கையாக இருக்கிறது அவளுக்கு!

கோபாலி இசைக்க மறந்த ராகம் அவள். அவளே இசையென பொங்குகிறாள். நிறைக்கிறாள், நிறைகிறாள். தன் போதி மரத்தை கண்டுகொள்கிறாள்.

பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.

வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!. முடிவில், கதறலில், வலி அவளை வெல்கிறது. இரு குழந்தைகள் வயிற்றிலேயே இறக்க அவளும் இறக்கிறாள்.

ஒலி நிறைந்த, வண்ணமயமான உலகில் இருந்து அம்மணி ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு வருகிறாள். அவளுக்கு என்றுமே மனதில் இரைச்சலில்லை. வெளியே மௌனமில்லை.

பூர்வாவிற்கு வெளியே இரைச்சலில்லை, உள்ளேயோ அமைதியின் ஒலம்.

பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.

ச ரி  ம ப த நி ச    ச  நி ச த ப ம க ரி. தர்பார். அம்மணி

ஆரோகணத்தில் அவள் காட்டாறு என்றாலும் அவரோகணத்தில் நீர்வீழ்ச்சி

ச ரி ப க ம த நி ச      ச  நிப ம  க ம ரி ச. – கானடா. பூர்வா

இவள் பனி உறைந்த பாறை  கடலுள்ளே சிதறும் எரிமலை

அம்மணியும் பூர்வாவும் ஒரு புள்ளியில் தொடங்கி  இரு கிளையெனப் பிரிந்து இணையும் இராகங்கள்.

தர்பாரி கானடா:

ச ரி க  ச ம ப த நி ச        ச த நி ப ம ப க  ரி ச

வாழ்வைத் தன் போக்கில் அணுகி, வாழ்ந்து பிறர் கவனங்களைக் கவர்ந்து, அனைத்தையும் தழுவும் காற்றாய், ஒலியாய் வாழ்ந்த அம்மணி அமைதியை உள்வாங்குகிறாள்.

தன்னுள்ளே மூழ்கி, உள்ளே இரைச்சலாய், வெளியே மௌனமாய், கேட்காத கேள்விக்கு விடை தேடி, வலியை ஒலியாய் வெளிப்படுத்தி பூர்வா விடை பெறுகிறாள்.