துறைவன்

க்றிஸ் அந்தோணி: நேர்காணல்

க்றிஸ் அந்தோணி அமெரிக்காவில் வசிப்பவர். அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவருடைய முதல் நாவல் ‘துறைவன்’ வெளியாகி இருக்கிறது. நெய்தல் நிலா வாழ்வை பேசும் முக்கியமான நாவல் என ஜெயமோகன் அடையாளபடுத்துகிறார். அவருடன் இணையவழி நேர்காணலை பதாகை நிகழ்த்தியுள்ளது.

Chris Anthony

உங்களுடைய வாசிப்பை பற்றியும் இலக்கிய ஆதர்சங்களை பற்றியும் பகிரவும்

நான் பிறந்து வளர்ந்தது வள்ளவிளை என்னும் கேரள எல்லையிலிருக்கும் கடற்கரை கிராமம். எங்கள் ஊரில் 1948-ம் வருடத்திலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் பெரிய நூலகம் ஒன்று உண்டு. [இப்போது  அது இடம் மாற்றப்பட்டு நூலகத்திலிருந்த நூல்கள் கவனிப்பாரின்றி செதிலரித்துக்கிடக்கின்றது.] நான் சிறுவானாக இருந்தபோதே புத்தகங்கள் எடுத்துப்படித்திருக்கின்றேன். மலயாளம் தமிழ் ஆங்கில புத்தகங்களும் உண்டு. ரஷ்ய தமிழாக்க நூல்களும், கேரள வரலாற்று நூல்களும் இதிலடக்கம். “லெஸ் மிசரபில்ஸ்” என்பதை “லே மிசரபிளே” என்று வாசிக்கவேண்டுமென்பதை என்னுடைய ஆசிரியர் சொல்லிக்கொடுத்த ஞாபகம் இப்போதும் பசுமையாக இருக்கின்றது. ராஜாஜியின் கைவிளக்கு, இர்வின் ஸ்டோன் எழுதிய “அழிவற்ற காதல்” என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பு, ரோமியோ ஜூலியட் நாவல் வடிவம், “இணைவுப்பாலம்” என்னும் ரஷ்ய யுத்தம் குறித்த மொழிபெயர்ப்பு, காந்தியின் சத்திய சோதனை, சாண்டில்யனின் கடல்புறா, கலைஞரின் ரோமாபுரி பாண்டியன், கண்ணதாசனின் அரங்கமும் அந்தரங்கமும், லியோ டால்ஸ்டாயின் கட்டுரைகள், மாக்சிம் கார்கியின் அன்னை, தரையிலிறங்கும் விமானங்கள்,  தகழியின் செம்மீன் என்பவை எப்போதும் என் ஞாபகத்தில் இருப்பவை.கல்லூரி நாட்களில் வைரமுத்துவின் கவிதைகள். வைரமுத்து என்றால் “இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை. வேர்கள் வெளியில் தெரிவதே இல்லை” என்னும் அவரது கவிதைவரிதான் ஞாபகத்துக்கு வரும்.  இதில் எது இலக்கியம் இலக்கியமில்லை என்பதெல்லாம் தெரியாது.

நான் ஒரு துவக்கநிலை இலக்கிய வாசகன் என்பதால் இலக்கிய ஆதர்சம் என்னும் பதம் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் அனைத்து ஆக்கங்களையும் படித்துக்கொண்டிருக்கின்றேன். என்னை எழுத ஊக்கமூட்டி நான் தொடர்ந்து எழுத காரணமாக இருந்தவர். அதுபோல் நிகாஸ் கசந்த்சாகீஸ் மற்றும் ஓசே சரமாகோவின் அனைத்து ஆக்கங்களையும் ஒன்றும் விடாமல் படிக்கின்றேன். நெய்தல் தமிழ் படைப்பாளிகளில் அண்ணன் ஜோ டி’குரூஸ். இவர்கள்தான் என்னுடைய தற்போதைய இலக்கிய ஆதர்சங்கள். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா பாதியிலிருக்கின்றது.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் தொடர்பு ஏற்ப்பட்ட பிறகே உண்மையான தமிழ் மற்றும் உலக இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஜெயமோகன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், எஸ்ரா, சாரு, நிகாஸ் கசந்த்சாகீஸ், ஓசே சரமாகோ  என்று யாரும் விதிவிலக்கல்ல. தமிழின் அனைத்து எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படிக்கவேண்டுமென்று ஆசை. நெய்தல் சார்ந்த அனைத்து படைப்புகளையும் படிக்க ஆசை. தோப்பில் மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை” ஜோவின் “ஆழிசூழ் உலகு” படித்த பிறகுதான் நானும் எழுத வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. இவர்களை ஜெயமோகனின் தொடர்பு கிடைப்பதற்கு முன்பே படித்திருக்கின்றேன். தற்போது விரும்பிப்படிப்பது குறும்பனை பெர்லினின் சிறுகதைகளை.

உங்களை பற்றி

நான் படித்தது கணிதத்தில் முதுகலை. பள்ளிப்படிப்பை புனித அலோசியஸ் உயர்நிலைப்பள்ளி, மார்த்தாண்டன்துறையிலும், இளங்கலையை புனித யூதாக்கல்லூரி, தூத்தூரிலும், முதுகலையை புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையிலும் பயின்றேன். என்னுடைய முதுகலை கணினி ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மென்பொருள் துறையில் நுழைந்தேன். கடந்த இருபது வருடங்களாக மென்பொருள்துறையில் பணிபுரிகின்றேன். கடந்த பத்து வருடங்களாக எனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகின்றேன். எனக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள்.

நான் எப்போதும் என்னை மீனவனாகவே உணர்கின்றேன். இப்போது எழுதுவதால் சிந்திப்பதும் மீனவர்களின் வாழ்க்கையை மட்டுமே. எனவே நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் மனம் முழுக்க கடலும் மீனும் மீனவனும்தான் இருக்கின்றார்கள். வெளிநாட்டில் இருப்பது எழுதுவதற்கு இன்னும் கூடுதல் வசதி. மீனவர்களின் வாழ்கையை மிகவும் துல்லியமாக காணமுடிகின்றது.

எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

எழுதுவதற்கான ஆவல் எப்போதுமுண்டு. நேரமும் மன எழுச்சியும் ஒருமித்து ஒருபோதும் அமைந்ததில்லை. 2009-ம் வருடம் பனிக்காலத்தில் நான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணாத்தில் புதிய வேலைக்காக சென்றிருந்தேன். அப்போது விகடனில் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரச்சனைக்குரிய சர்ச்சை வந்தது. நான் எம்ஜியார் ரசிகன். எனவே ஜெயமோகனின் இணையதளத்தை தேடிச்சென்றது வியப்பில்லை. அப்போது அழிமுகம் என்னும் கட்டுரை அவரது தளத்தில் வந்தது. அதுதான் நான் முதலாவதாகப்படித்த அவரது கட்டுரை. அந்த கட்டுரைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்கைக்கும் சில ஒப்புமைகள் இருந்தன. அதை வைத்து நான் அவருக்கு முதலாவது கடிதமெழுதினேன். அதைத்தொடர்ந்து ஜெயமோகன் என்னை எழுத ஊக்கப்படுத்தினார். அப்போது என்னுடைய குடும்பம் இந்தியாவில் இருந்தது. எனவே எழுதவும் படிக்கவும் நேரம் அதிகமாக கிடைத்தது. அதன் பிறகு சொல்புதிது குழுமத்தில் இணைத்து விவாதத்தில் கலந்துகொண்டு, சண்டையிட்டு, சிறுகதைகள் எழுதி, இப்போது துறைவனில் வந்து நிற்கின்றேன்.

DSC_0555

இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி இருப்பீர்கள். நாவலை உங்களுடைய புனைவு களமாக  தேர்வு செய்தது ஏன்?

நீங்கள் சொல்வது சரிதான். இரண்டு மூன்று சிறுகதைகள்தான் முதலில் எழுதினேன். ஆனால் அவை அனைத்திற்கும் ஒரு தொடர்பிருப்பதை கண்டுகொண்டேன். அனைத்தும் ஒரே காலகட்டத்தில் ஒரே வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. அனைத்திலும் ஏராளம் கடல்குறித்தான பல தகவல்கள் சிதறிக்கிடந்தன. இந்த கதைகள் பிணைந்து நாவலாக உருக்கொண்டன.. எனக்கு கடற்கரையில் கிடைத்த அனுபவங்கள் ஏராளம் இருக்கின்றது. அதைச்சொல்ல சிறுகதையை விட நாவல்தான் வசதியாக இருக்கும். ஒரு முழுமையான வாழ்க்கையை சொல்லவே விரும்புகின்றேன்.

துறைவன் நாவலின் காலத்தை பற்றி?

எழுபதின் பின்பகுதியிலிருந்து தற்போது வரை. இடையில் 1880-ற்கும், பத்தாம் நூற்றாண்டிற்கும், பதினாறாம் நூற்றாண்டிற்கும் கதை பின்னோக்கிச்செல்லும்.

நாவல் எழுதுவது எத்தகைய சவாலை, அனுபவத்தை  அளித்தது?

நான் ஒரு தேர்ந்த எழுத்தாளனில்லை. ஒரு நாவலை எப்படி எங்கே முடிப்பதென்று முதலில் தெரியவில்லை. அதுபோல் நாவலுக்கு ஒரு முழுமையான வாழ்க்கையையும் ஒரு வடிவத்தையும் கொடுக்கவேண்டும். எழுத எழுத சிறிது கைகூடியது. நான் எழுதும்போது “கதையை சொல்லாதே, மாறாக அதைக்காட்டு” என்னும் ஜெயமோகன் சொல்லும் வாக்கியம் எப்போதும் ஞாபகத்திலிருக்கும். எனக்கு நாவல் எழுதுவது கடந்த காலத்தை முழுமையாக திரும்பிப்பார்ப்பதுதான்.

இந்த கதையை ஏன் எழுத வேண்டும் என எண்ணினீர்கள்? ஏதேனும் அகத்தூண்டுதல் உண்டா?

இந்தக்கதைக்கென்று தனிப்பட்ட அகத்தூண்டல் என எதுவுமில்லை. மீனவர்களின் எழுதவேண்டும், அவ்வளவுதான். தோப்பில் மீரான், ஜோ டி’குரூஸ் ஆகியோரை படித்தபிறகுதான் நானும் மீனவர்களின் வாழ்க்கையை எழுதவேண்டுமென்ற ஆர்வம் வந்தது. இல்லையென்றாலும் எழுதியிருப்பேன். ஆனால் துறைவன் என்னும் நெய்தல் படைப்பு கண்டிப்பாக கிடைத்திருக்காது. நெய்தல் வாழ்வை எழுத வேண்டும்  என்பதற்கு கண்டிப்பாக வேறு சில காரணங்களும் உண்டு.

1997-ல் நான் சென்னையில் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது காதலுக்கு மரியாதை திரைப்படம் வந்த சமயம். திரைப்படம் பார்த்துவிட்டு அலுவலகத்திலிருந்த ஒருவர் கேட்டார் “மணிவண்ணன் போல நீங்க எல்லாரும் எப்பவும் குப்பத்தில குடிச்சிட்டுத்தான் இருப்பீங்களா?”

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கடற்கரை நாவல் எனக்கு துணைப்பாடம். இன்னொரு சமுதாய பிரச்சனைக்காக எங்கள் கிராமத்திலிருந்து நான்கு அடியாட்களை கொண்டுசெல்வார்கள். சினிமாக்களில் காட்டப்படும் மீனவ பெண்களின் முகங்கள் எண்ணை வடிய, பவுடர் போடுவதற்குக்கூட  தகுதியில்லாதவர்களாக காட்டப்படுவதை பலமுறை கண்டிருக்கின்றேன்.

எனக்கு வரலாற்றின் மீது சிறிது மோகமுண்டு. வரலாற்றில் மீனவர்களை மிகவும் தரக்குறைவாக எழுதியிருப்பதையும், வரலாறுகள் திரிக்கப்பட்டிருப்பதையும் படித்திருக்கின்றேன். காந்தளூர் சாலை குறித்த ஒரு நாவல் படித்தேன். அதில் சோழர்கள் ஒரு தோணியில் பாண்டிய நாட்டிலிருந்து விஜிஞ்சம் வருகின்றார்கள். அவர்கள் கரையில் வந்து பக்கத்து ஊர்களில் தென்னைதோப்புகளில் ஒளிந்துகொள்கின்றார்கள். காலையில் விழிஞ்சம் கோட்டையை சுலபமாக தகர்த்தெறிகின்றார்கள். மீனவர்கள் என்னும் சில ஜந்துக்கள் இருப்பதைக்கூட நாவலாசிரியர் மறந்துவிடுகின்றார்.

மேலே சொல்லப்பட்டவைகளின் பிரச்சனை என்னவென்றால் மீனவர்களின் வாழ்வியலும் வரலாறும் தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னும் அன்னியமாகவே இருக்கின்றது. மீனவர்களின் வாழ்வியலை ஜோ டி’குரூஸ் போல் ஒரு மீனவன் எழுதுவதுதான் சிறப்பாக இருக்கும். தமிழ் இலக்கியத்திற்கு என்னுடைய பங்களிப்பு துறைவன். இதில் இந்தியாவின் பெரிய இனங்ககளில் ஒன்றான முக்குவர்கள் என்னும் கேரளக்கடற்கரை மீனவர்களின் வரலாறையும் வாழ்வியலையும் நேர்மையுடன் ஆராய்ச்சி நோக்கில் பதிவுசெய்திருக்கின்றேன். இதில் ஆய் அரசு, வாஸ்கோட காமாவின் காலகட்டம், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான மீனவர்களின் போராட்டம், அவர்களின் அரசியல், வாழ்வியல், மீன்பிடிக்கும் ஏராளமான யுத்திகள், கடலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பலவற்றை துறைவனில் சொல்லியிருக்கின்றேன்.

தமிழக பிரசுர சாத்தியங்கள் எப்படி இருக்கிறது?

சொல்லும்படியாக இல்லை. எழுதுவது ஒரு சவால் என்றால் அதைவிட நூறுமடங்கு சவால் அதை புத்தகமாக பதிப்பிப்பது. அதுவும் முதல் புத்தகமென்றால் சொல்லவேண்டாம். அது ஒரு நிஜ பிரசவம்தான். இப்போது வெளியிட்டதும் ஒரு பதிப்பாளர்தானே என்று கேட்கலாம். உண்மைதான், அவர் ஒரு தேவதூதன்.

அடுத்தகட்ட திட்டம் என்ன?

இப்போது இன்னும் பெயரிடப்படாத ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான்கு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு எழுதுவது சிறிது சிரமமாக இருக்கின்றது. இருப்பினும், அடுத்த முறை நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இன்னொரு நெய்தல் படைப்புடன் வருவேன்.