நகுல்வசன்

Yves Bonnefoy (1923–2016) – ஒரு கவிதை

(உரைநடை தமிழாக்கம் பீட்டர் பொங்கல்; கவிதை தமிழாக்கம் – நகுல்வசன்)

ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) இம்மாதத்தின் துவக்கத்தில் மறைந்தார். கடந்த அறுபது ஆண்டுகளின் மிக முக்கியமான, மிகுந்த தாக்கம் செலுத்திய பிரஞ்சு கவிஞர் என்று பலராலும் கருதப்பட்டவர் இவர். உலகோடு நாம் எவ்விதத்திலும் “பொய்க்கலப்பற்ற நெருக்கம்” (“authentic intimacy”) கொள்ளாத வகையில் மொழி நம்மை விலக்குகிறது என்று அவர் நம்பிய காரணத்தால், “நாம் அதைத் தொலைத்துவிட்டோம் என்பதை நினைவுறுத்தவும்“, “பிறரை, அல்லது மரங்களை, அல்லது எதையும் நாம் எதிர்கொள்வது சாத்தியப்படும் கணங்களின்” மதிப்பை நமக்கு நாமே மெய்ப்பித்துக் கொள்ளவும், நமக்கு கவிதை தேவைப்படுகிறது என்றார் அவர். எந்தவொரு அறிவு சார்ந்த குறுக்கீடாலும் களங்கப்படாத “le vrai lieu”- மெய்யுலகம்- ஒன்றை மீளுருவாக்கம் செய்வதற்கான அவரது முயற்சிகளும் மெய்ம்மையை நோக்கிய கோரிக்கையும் பன்ஃபுவாவின் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத இருப்பாய் சூழ்கின்றன. மெய்ம்மையின் இயல்புநிலையில் நிலவிய பூரணத்துவ எச்சங்கள் இன்னும் மண்ணில் எஞ்சியிருக்கின்றன, அவற்றைச் சேகரித்து மீண்டும் கட்டியெழுப்புவதே கவிஞனின் பணி. இருப்பை அடைய வேண்டுமெனில் அதன் இயல்புநிலையில் துலங்கும் குறியீட்டு ஆற்றலை விரயம் செய்யும் கருத்துநிலை சட்டகத்திலிருந்து மொழியை விடுவித்தாக வேண்டும். “சொல்லென்பது இனிமேலும் உள்ளதன் விவரணையுள் நுழைவதல்ல“.

கவிதை மட்டுமே, வடிவத்தில் கவனம் செலுத்தும்போது “சொற்களின் கருத்துநிலை பொருளை மௌனிப்பதால்” கிட்டத்தட்ட தெய்வீகமாயுள்ள தரிசன கணத்தை மீண்டும் உருவாக்கக்கூடியது. கவிதை மட்டுமே, “உலகின் நேரடி நோக்கு” அளிக்கக்கூடியது. La Seconde Simplicité (1961), என்ற தொகுப்பில் உள்ள “The Lights of Brindisi”, என்ற கவிதையில், கவிஞர் காண்கிறார் – மூடப்பட்ட தோட்டச் சுவற்றால் சேய்மைப்படுத்தப்பட்ட இலைகளுக்கு அப்பால், நிஜமற்ற புன்னகை கொண்ட “வெள்ளி’ நிலவுக்கு அப்பால்- தோன்றி மறையும் வேறொன்றின் முத்திரையை, கண்ணுற்ற கணமே அது காணாமற் போகிறது.

ப்ரின்டீசியின் விளக்குகள்

இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன,  அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே,
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது;
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.

(ஆங்கில மொழிபெயர்ப்பு – அந்தோணி ருடால்ஃப், 1966)

நன்றி – Andrew McCulloch, Times Literary Supplement

4′33″ ப்ளூஸ்

 
சுட்டுகளற்ற கவிதை
சுட்டுதலாகி
முற்றிடினும்
இடைவெளிகளின் வெண்ணொலி.
ஒளிப்பட உதவி – animalnewyork.com

இருமொழிக் கவிதைகள் 1- ஒரு இடையன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்) –

goat-herd

ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று.

௦௦௦

One goatherd
Ten twelve goats
One goatherd
Ten twelve goats
But
Countless pails
Countless rainfalls
Countless turbans
Countless winds
Countless herding crooks
Countless days
One goatherd
Ten twelve goats
Beside a railway gate
Wondering when the hell it would open.

000

ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவம் கொண்ட கவிதை இது.  துவக்கத்தையும் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் முடிவையும் இடையில் உள்ள பகுதி இணைத்து சிறுகதைக்கு ஒருமையும் வடிவமும் தருகிறது. இணைப்பாக மட்டும் இயங்காமல் இடைப்பகுதிகள் துவக்கமும் முடிவும் கூடும் புள்ளியாகி சிறுகதைக்கு செறிவும் ஆழமும் சேர்கிறது, நல்ல ஒரு சிறுகதையில் சொற்திரள் கூடி இறுக்கமான ஒரு பொருள் தருவதுபோல் இந்தக் கவிதையும், தனக்கேயுரிய மொழியில், எதிரொலிப்புகளின் மூலம் இதைச் சாதிக்கிறது.

இங்கு “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்பது மும்முறையும், “எண்ணிலிறந்த” என்ற சொல் ஆறு முறையும் வருகின்றன. “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்று மீண்டும் மீண்டும் ஒலிப்பது இந்தக் கணம் தொடர்ந்து நிகழ்வதைச் சுட்டுகிறது.. அதை, “ரயில்வே கேட் அருகில்/ எப்படா திறக்குமென்று” என்ற சொற்கள் நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு இடையில்தான் எண்ணிலிறந்த விஷயங்கள் வருகின்றன- ஒலியளவில் அவை ஒற்றைக் காட்சிகளால் நிறைவு செய்யப்படுகின்றன- எண்ணிலிறந்த – தூக்குவாளிகள், மழைகள், தலைப்பாகைகள், காற்றுகள், தொரட்டிகள், பகல்கள். எண்ணிலறந்த எனிலும் மீண்டும் மீண்டும் அச்சொல் ஒலிப்பதில் அத்தனை தூக்குவாளிகளும் மழைகளும் தலைப்பாகைகளும் காற்றுகளும் தொரட்டிகளும் பகல்களும் ஒன்றேயாகி ரயில்வே கேட்டின் இக்கணத்தின் நிரந்தரமாய் நிற்கின்றன. இங்கு, சிறு கற்பனைத் தாவலில் நாம் ஒரு சிறுகதை போல் துவக்கமும் முடிவும் நெருங்கி இணைந்து விடுவதைப் பார்க்கிறோம்.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரு எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தூக்கு வாளிகள், தலைப் பாகைகள்- இரு சொற்கள் என்றாலும், ஒரு பொருளைச் சுட்டுகின்றன. இந்தக் கவிதையில் உள்ள எண்ணிலிறந்தவை அனைத்தும் வெவ்வேறு வஸ்துக்கள், விவரணைகளுக்கு அவசியமில்லாத புறப்பொருட்கள். இங்கு ஆங்கிலத்தில் தலைப்பாகைகள் என்பதை turbans என்றும் தொரட்டி என்பதை herding crooks என்றும் மொழிபெயர்க்க வேண்டியதாகிறது. ஆனால் தமிழ் வாசகர்கள் countless turbans என்ற இடத்தில் சீக்கியர்களையும் countless crooks என்ற இடத்தில் அரசியல்வாதிகளையும் காணும் சாத்தியத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. countless turbans என்ற இடத்தில் தலைப்பாகைகளை நினைத்துப் பார்த்தாலும் countless crooks என்பதை தொரட்டியாய் புரிந்து கொள்ள இடமில்லை என்று தோன்றுகிறது- எனவேதான் herding crooks என்ற விளக்கம் தேவைப்படுகிறது. countless days என்பதற்கும் countless summer days என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. countless days என்பதில் எல்லா நாட்களும் தொகுக்கப்பட்டு விடுகின்றன, ஆனால் countless summer days பிற பருவங்களை நினைத்துப் பார்க்கவும் இடம் கொடுக்கிறது.

மொழிபெயர்ப்பில் சாத்தியப்படாத விஷயம் அது என்றால் pails, rains, winds, days என்று எண்ணிலிறந்தவற்றை ஏறத்தாழ ஒற்றை அசைகளில் மொழிபெயர்க்க முடிந்தது ஒரு நல்ல விஷயம். கவிதையில் சொல்லப்படுவது போலவே இங்கு எண்ணிலிறந்தவை ஒருமையைச் சேர்கின்றனவல்லவா? அது பொருத்தம். உருமாற்றம் மொழியின் இயல்பு. மொழியாக்கம், நகலெடுக்கும் பணியல்ல என்பதால் சில திரிபுகளைத் தவிர்க்க முடியாது. அவை இழப்பா செறிவா என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும்.

இருமொழிக் கவிதைகள் 3- துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

washing-cloth

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

௦௦௦

Washing clothes
Sparrows chirping
More Washing
Sparrowless Silence
More laundry
Silence chirping

000

சங்கக் கவிதைகளை மொழிபெயர்ப்பது குறித்து ஏ.கே. ராமானுஜன் நிறைய எழுதியிருக்கிறார். இந்த நான்கு மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு மட்டுமே ஏ கே ராமானுஜன் பாணியைக் கையாண்டுள்ளது. ஏகேஆர் மொழியாக்கங்கள் குறித்து பல விமரிசனங்கள் இருக்கின்றன, அவற்றின் நியாயத்தையும் மறுக்க முடியாது. ஆனால் கவித்துவம் என்று பார்த்தால் இந்தக் கவிதையில் எது கவித்துவமோ அதை எந்த பொழிப்புரை பதவுரைக்கும் அவசியமில்லாமல் ஆங்கில மொழிபெயர்ப்பு சாதித்து விடுகிறது என்பது ராமானுஜன் பாணி, தமிழ்க் கவிதை மொழியாக்கங்களுக்கு ஏற்றதுதானோ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. அவ்வளவு ஏன், இந்தக் கவிதையின் தமிழ் வடிவில் உள்ள நீர்மை, கதைத்தல் ஆங்கிலத்தில் இல்லை. ஒரு தேர்ந்த ஹைக்கூ போல் நம்மைச் சப்தங்களின் மத்தியில் இருத்துகிறது. இது மொழியாக்கம் என்பது ஒரு செறிவாக்கமாகவும் இருக்கலாம் என்பதை நிருபிக்கும் கவிதை.

இருமொழிக் கவிதைகள் 2- கடைசியாக எப்பொழுது

தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) –

last-time

கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும்போழுதும்
தூக்கும்போழுதும்
செல்லமகளைப்போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வானவெளியென நீ நுழைகையில்
அது
குதித்துக் கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங்கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை.

௦௦௦

When was
the last time
You drank water
When you touched it
and lifted it
Did it come to you
like your darling daughter
When you entered as if
You were the wide sky gliding
into water
Did you hear
It
Jump with joyful glee
Sitting handcuffed
in a bus
between policemen
That young convict
His eyes
are Caressing
The pot that’s closed
The water that’s left open.

௦௦௦

இந்தக் கவிதையின் பிரச்சினையான பகுதி, துவக்கத்தில் வரும் கேள்விகள். அவை யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன?
கவிஞர் கைதியை நோக்கிக் கேட்கிறாரா, அல்லது கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறாரா, அல்லது, அவை நமக்காக எழுப்பப்படும் கேள்விகளா? இந்த மூன்று விடைகளும் சாத்தியம் என்பதன் ambiguity மூன்று வெவ்வேறு உணர்வுகளை ஏககணத்தில் சாத்தியப்படுத்துகிறது. கைதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் என்றால் தாபம் குறித்த புரிந்துணர்வைப் பார்க்கிறோம், கைதியைக் குறித்து தனக்குள் கேட்டுக் கொள்கிறார் என்றால், அங்கு ஒரு சுயவிசாரணையும், நமக்காக எழுப்பப்படும் கேள்விகளானால் அறிவுறுத்தலும் உண்டு. இதன்பின் வரும் உரைநடைத்தன்மை கொண்ட புறவிவரணையின் அழுத்தத்தில் இந்தக் கேள்விகள் ஒன்றுகூடிய உணர்வுகளாகின்றன- இறுதியில் “மூடிய பானையை/ மூடாத தண்ணீரை.” இந்த இரு வரிகளும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாய் அமைகின்றன.

பொதுக் கேள்விகள் என்றாலும் கவிதையின் தண்ணீர் பானை, அல்லது அது போன்ற ஒரு கொள்கலனுக்குரியது பானைத் தண்ணீரைக் குடிக்கிறோம், பானைத் தண்ணீரைதான் செல்ல மகளைப் போல் தொட்டுத் தூக்க முடியும். ஏன், பானைத் தண்ணீரில்தான், “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்/ அது குதித்துக் கும்மாளமிட்டதை நீ கேட்டாயா” என்ற கேள்விக்கு பொருள் கிட்டுகிறது- பானையில் உள்ள தண்ணீரில் பிரதிபலித்து ஆடும் ஒளியாகிறோம் நாம்.. இந்த, உயர்ந்த கவித்துவம் கொண்ட, புதிர்த்தன்மை மிக்க கேள்வியில்தான் இறுதி வரிகளின் ஆச்சரிய தாக்கத்தை உணர்கிறோம்- மூடிய பானையும் மூடாத தண்ணீரும் தத்துவம் சார்ந்து பொருட்படுகின்றன. மூடிய பானை கலன் எனில், மூடாத தண்ணீர் கொள்பொருள்- கொள்பொருளைக் கொள்கலனின் வடிவம் சிறைப்படுத்துவதில்லை. பானைத் தண்ணீரில் தோன்றும் சூரியன்களை சாங்கிய தத்துவம் பேசுவது இங்கு நினைவுக்கு வரலாம்.

“பஸ்ஸில்/ போலீஸ்காரர் நடுவே. கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்/ இளங்கைதி” புனைவுக்குரியவன், ஆனால் அவன் ஒரு குமாஸ்தாவாகவோ கணினி நிபுணனாகவோ வேறு யாராகவும் இல்லாமல் சிறைப்பட்ட கைதியாக இங்கு மூடிய பானையையும் மூடாத தண்ணீரையும் கண்களால் வருடிக் கொண்டிருப்பதில்தான் கவிதைக்குரியவன் ஆகிறான்- அவனது வேட்கை தண்ணீருக்கல்ல, விடுதலைக்கு என்று உணரும்போது மேற்கண்ட சாங்கிய தத்துவத்தின் சாயல் நம்மை வேறொரு, இதனினும் உயர்ந்த, விடுதலை வேட்கைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் இது தத்துவக் கவிதை அல்ல. “அதைத் தொடும்போழுதும்/ தூக்கும்போழுதும்/ செல்லமகளைப்போல்/ கூட வந்ததா/”- என்ற கேள்வி தவிர்க்க முடியாதபடி சிறைக்கைதியை ஒரு தகப்பனாக, அவனது தாபத்தை வெறும் விடுதலை வேட்கையாக அல்லாமல், தீண்டல், தழுவுதல், நுகர்தல் என்ற மானுட உறவுகளை நோக்கும் வேட்கையாக நிறுவுகிறது. செல்ல மகளைத் தொட்டுத் தூக்கும் ஏக்கத்தை இன்னும் தீவிரமான உணர்வாக நாம் அறிகிறோம். ஆனால், சாங்கிய விடுதலையின் எதிரொலிப்புக்கு கவிதை இடம் கொடுத்திருக்கிறது என்பதுதான் நோக்கத்தக்கது.

மொழியாக்கம் குறித்து ஒரு விஷயம்- “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது முதலில் “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டது.கிறித்தவ தொல்மறையில், மண்ணின் நீரையும் ஆகாயத்தின் நீரையும் பிரிக்கும் கூரைதான் firmament, Firmament தண்ணீரில் இறங்கும்போது ஆகாய நீரும் மண்ணின் நீரும் சேர்கின்றன. எல்லையற்ற விடுதலை என்று இதைக் கொள்ளலாம். கவிமொழியில் firmament என்பது ஆகாயத்தின் குறியீடாகவும் கையாளப்படுகிறது. மேலும் நாம் தண்ணீரில் இறங்கும்போது பருப்பொருளாகவே இறங்குகிறோம், ஒரு firmamentக்கு உரிய திடத்தன்மை நமக்கு இருக்கிறது, என்பதால் இந்த மொழிபெயர்ப்பில் குறை சொல்ல முடியாது. ஆனால், இங்கு சாங்கிய தளையறுதலை காணும் சாத்தியங்கள் குறைவு, மாறாக தமிழறியாத ஒருவர் கிறித்தவம் சார்ந்த தளையறுதலைக் காண இயலும். இது சரியான தேர்வா இல்லையா, கவிதையின் சுட்டலுக்கும் கவிஞரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்கின்றதா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் ஒன்று சொல்லலாம். இந்த இரு சாத்தியங்களையும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

மொழியாக்கம் என்பது மொழிபால் உள்ள காதலால் செய்யப்படுவது. ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் எடையையும் இடத்தையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. மொழியாக்கத்தைவிட நெருக்கமான வாசிப்பு வேறொன்றில்லை. “தண்ணீரில்/ வானவெளியென நீ நுழைகையில்” என்பது “When you entered as if/ You were the firmament gliding/ Into Water” என்று மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் “When you entered as if/ You were the wide sky gliding/ into water” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதை உணர்த்தும். உண்மையில், எந்தத் திரிபும் இல்லாதபோதும்கூட வெவ்வேறு சுட்டல்களால் இருவேறு மொழிதல்களை ஏககாலத்தில் நிகழ்த்தும் தன்மை மொழியாக்கங்களுக்கு எப்போதும் உண்டு, இரு மொழிகளையும் அறிந்தவனால் அதைத் தவிர்க்கவும் முடியாது. மொழியாக்கத்தின் இன்பமும் வாதையும் இதுதான்.