நந்தாகுமாரன்

ரெண்டாம் காலம்

நந்தா குமாரன்

 

வானவிழ் மழைவழி
தரையுமிழ் மரவடி
மஷ்ரூம்கள் மலர்ந்த
விழிஎழும் பாதையில்
மழைஉளி செதுக்கிய
மேகவிக்ரஹ பிரதிஷ்டை
காண வந்தவன் கண்கோப்பைகளில்
ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும்
ப்ராகலி மேன்சூரியன் பொரியல் தின்னும்
அவன் மாமனிதன் எழுதும் காவியத்தில்
இயந்திரக் குப்பை அள்ளும்
மனித ஸ்பரிசம் மறந்த கைகள்
மடக்கி நீட்டிக் காட்டும்
ஆகாயம் மூச்சு விடும் அதில்
“விண்னெழும் புள்ளு”

விரும்பி வாசிப்பவை

நந்தா குமாரன்

nundhaa

“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”

முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள். (more…)

மழை கேட்டல்

நந்தா குமாரன்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

கணையாழி
April 1998