நம்பி கிருஷ்ணன்

அசோகமித்திரனுடன் ஒரு சந்திப்பு – நம்பி கிருஷ்ணன்

நண்பன் பேப்பர் வெயிட்டின் தயவால்தான் அசோகமித்திரனை முதல்முறையாக தி நகரில் அவரது வீட்டிலேயே சந்திக்கக் கிடைத்தது. நெருங்கிய சொந்தமென்பதால் என்னை அசோகமித்திரனுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவன் உரிமையுடன் உள்ளே சென்றுவிட்டான். நானும் அவரும் முற்றத்திலேயே உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரைப் பழைய வேட்டி பனியனுடன் பார்ப்பது வருத்தமாக இருந்தாலும் ஒருவிதத்தில் அவர் எப்போதுமே எழுதிவந்த லௌகீக யதார்த்தத்துடன் அது பொருந்தியதாகவும் எனக்குப்பட்டது. நடையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் ஃபிரெட்ரிக் ஃபோர்ஸைத் முதல் பக்கத்திலேயே வாசகனின் முழு கவனத்தையும் பெற்றுவிடும் நேர்த்தியை பற்றி பேச ஆரம்பித்தார். எனக்கோ, இவர் “சீரியசான” இலக்கியவாதிகளைப் பற்றி பேசாமல் இப்படியே காலத்தை வீணடித்து விடுவாரோ என்று உள்ளூர ஒரே கவலை. பின்னர் சுவாரஸியம், பிளாட் என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மூன்று மஸ்கட்டியர்களை (Three Musketeers) புகழ்ந்தார்.

வாட்சில் நிமிடங்கள் கழிவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மாய யதார்த்தம் மற்றும் இருத்தலியல், நவீனத்துவமே மேலை நாட்டு இலக்கியத்தில் சிறந்தவை என்று நம்பி வந்த காலம். அட்வெஞ்சர், மற்றும் திகில் நாவல்களைச் சீண்டுவதுகூட இலக்கியத்திற்கு இழைக்கும் துரோகம் என்றிருக்கும் “சீரியஸான” வாசகன் என்ற மமதை வேறு!

ஒருவழியாக பேச்சை எப்படியோ நான் விரும்பிய திசைக்குத் திருப்பி விட்டேன். ஐசக் பஷெவிஸ் ஸிங்கரைப் பற்றி பேசினார். அவரது குறுகிய பக்க அளவுள்ள படைப்புகள் சிறந்தவை என்று நான் உளறியதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தார். பின்னர், “அவரோட நெடுங்கதைகளும், நாவல்களும்கூட நல்லாவே இருக்கும், படிச்சுப் பாருங்க. மனுஷன் ஊர் பேர் தெரியாத பேப்பர், பத்திரிகைல பேர், புகழ், பணம் இதெல்லாம் பத்தி கொஞ்சங்கூடக் கவலப்படாம தன் வேலய ஆர்ப்பாட்டமே இல்லாம செய்தார். எனக்கெல்லாம் அவர் ஒரு பெரிய ஆதர்சம்…” என்றார்.

“ப்ரிமோ லெவின்னு ஒரு எழுத்தாளரக் கேள்விப்பட்டிருக்கீங்களா? படிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை , ஆனா அவரோட புத்தகம்தான் கிடைக்கவே மாட்டேங்கறது”

லெவியின் ‘இப்போதில்லை என்றால், எப்போது’ (If not now, when) என்ற புத்தகம் வீட்டில் இருந்ததால், அதை அடுத்த முறை வரும்போது கொண்டு வருகிறேன் என்று கூறி மீண்டும் அவரைச்
சந்திக்கும் வாய்ப்பை சாம்ர்த்தியமாக ஏற்படுத்திக் கொண்டேன்.

பேப்பர் வெயிட் வெளியே வந்து, கிளம்பலாமா என்றான். அசோகமித்திரன் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். சின்னப்ப பாரதியின் தாகம்.

“படிச்சிருக்கீங்களா?”

இல்லை, என்று தலையாட்டினேன்.

ரொம்ப நல்ல படைப்புன்னு நிறைய பேர் சொல்றா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”.

நாங்கள் விடை பெற்றுக்கொண்டோம். வெய்யில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. சம்பந்தமே இல்லாமல் தி.ஜானகிராமனைப் பற்றிய அவரது கட்டுரையின் கடைசி வரி நினைவிற்கு வந்தது.

சிரத்தையுடன் தாகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்துவிட்டு, லெவியின் புத்தகத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றேன்.

“அதுக்குள்ள படிச்சிட்டீங்களா, எப்படி இருந்தது ?”

“முதல் அறுபதெழுபது பக்கங்கள் ரொம்ப ஜோரா இருந்தது, அப்புறம் ஒரு மார்க்சிஸ்ட் காட்டெகிஸம் (Marxist Catechism) போல இருந்த்த்தால, அவ்வளவா பிடிக்கல”

லேசாகச் சிரித்துவிட்டு , உண்மைதான், ஆனா இத ஒரு முக்கியமான படைப்புன்னுதான் இலக்கிய வட்டாரங்களில் பேச்சு. மீண்டும் படிச்சுப் பார்த்தா அபிப்ராயம் மாறலாம். பார்க்கலாம்”, என்று இரண்டு புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

ஓரு மாதம் கழித்து லெவியின் புத்தகத்தை திரும்பப் பெறுவதற்காக சென்றேன்.

“அற்புதமான புஸ்தகம். இப்படிப்பட்ட ஒரு பெரும்படைப்பு படிக்கக் கிடைச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும், ரொம்ப தாங்க்ஸ்”.

அதன் பிறகு, வேலை மற்றும் சோம்பலால் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை.

சில வருடம் கழித்து என் திருமண அழைப்பில், “உங்களுக்கு, ப்ரிமோ லெவியைப் படிக்க உதவிய, நம்பி” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன்.

அவர் என் திருமணத்திற்கு வராதது குறித்து எனக்கு பல நாட்கள் வருத்தமாகவே இருந்தது. தபாலில் அழைப்பு தொலைந்திருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நேரில்  சென்று அழைத்திருக்க வேண்டும்.

வெள்ளி வீதியில்…

நம்பி கிருஷ்ணன்

    
    பூக்கள்
     மது
   தனி    மை
    நிலவு
    நிழல்
என்னொடும் மூவரானோம்!
சுயமின்றி பிரதிபலிக்கிறது நிழல் .
நிலவிற்கோ ஒழுக்கமெய்தும் பாவனைகள்.
தனியாகத்தான் குடிக்கிறேன்.

பாடினால் நிலவு நாசூக்காக நழுவுகிறது.
ஆடினாலோ நிழல் துள்ளி விலகுகிறது.
என்ன செய்வது , நட்பின் பாசாங்குகள்
குடிக்கையில் சிதைந்தழிகின்றன.

இப்போதைக்கு இவர்கள் போதும்
காலத்தின் சுமையை சற்றே மறக்க.
அதோ தெருமுனையில் வசந்தம் காத்திருக்கிறது.

ஆனாலும் வாருங்கள், கைகுலுக்குவோம்,
வெள்ளி வீதியின் வெறுமையையும் மீறி
மீண்டும் சந்திப்போம்,
நண்பர்களாக.

( After Li Bai’s Drinking Alone)

ஒளிப்பட உதவி – Poems Found in Translation

வருகையைப் பற்றி ஒன்பது கவிதைகள்

நம்பி கிருஷ்ணன்

வானைச் சிலந்திகள் மொய்க்கின்றன.
நீயோ அவை ஒளியின் வலையில்
தொங்கவிடப்பட்டிருக்கும் பனைகள் என்கிறாய்.

மறைத்து வைக்கப்பட்ட சுருள்களையும் பொறிகளையும்
பற்றிச் சிந்தித்தபடி
விமானத்தை விட்டுப் பைய இறங்குகிறேன்
தரையிறக்கத்தின் போதே உயர்தலை எதிர்பார்த்து.

மாலைகள் சிரச்சேதம் செய்கின்றன.
அனைவரும் வெள்ளை அணிந்திருக்கிறோம்.
யாருடைய ஆவிகள் நாம்?

நீ. நீ. நீ.
கைகுலுக்குகிறோம். நீயும் கூட.

சில்லிட்ட கைகள். சில்லிட்ட பாதங்கள்.
கழுத்தை நனைப்பதற்கு ஏதாக இங்கு
வெயில் இன்னமும் கீழிறங்கியிருக்குமென
நான் நினைத்தேன்.

சந்திப்பு. ஏற்கனவே நிறுவப்பட்ட கம்பிகளின் மீது
மணிகளின் மொழியில் பேசுகிறோம்.
மணிகள் நழுவிச் செல்கின்றன, திறந்து கொள்கின்றன,
ஒன்றையொன்று பட்சிக்கின்றன.

சிலர் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.
தொடுவானத்தைப் போல் ஆழத்துடன் உயிரற்று
நிற்பது அவனா ?

நீரைப் போல் சலனமுற்று
முக்குளித்தேன் பிரியமான எனது மரத்தை நோக்கி.
இப்போது அது அங்கில்லையென்றாலும்
அதன் வேர்களை விட்டு வைத்திருந்தார்கள்.

வறண்ட மண்கட்டிகள்
அழ முயற்சிக்கையில் தங்கள் சிறிய முகங்களை
இறுக்கிக் கொள்கின்றன. அங்கே,
என் பிறப்பிடத்தில், இனியேனும்
என் ஜனநத்தை நானே காணக்கூடும்.

Nine Poems on Arrival, Adil Jussawala – தமிழாக்கம், நம்பி கிருஷ்ணன்

ஒளிப்பட உதவி- Draw as a Maniac

அவளது புகலிடம்

நம்பி கிருஷ்ணன்

 

அன்னை
கைத்தடியுடன்
கூடத்தில் நடந்து செல்கிறாள்
நொய்ந்து
மெல்லிழைத் தாள்
கைத்தடியின் மீது
சுருண்டிருப்பதைப் போல்,
கூடத்தில்
அடிமேலடி வைத்து
ஒரு மயிர்ச்சுருளைப் போல்
காற்றால்
தள்ளப்படுகிறாள்
பாதுகாப்பான தன் வீட்டிற்குள்
மகனில்லா தன் சமையலறைக்குள்.

(Adil Jussawala, Her Safe House)

ஒளிப்பட உதவி- Ruth Rutherford

அருண் கொலாட்கரின் பட்டர்ஃப்ளை தமிழாக்கம்

நம்பி கிருஷ்ணன்

கதையேதுமில்லை அதற்குப் பின்னே.
நொடியைப் போல் அது பிளவுபட்டிருக்கிறது.
தன்னைச் சுற்றியே அது சுழன்று திரும்புகிறது.

வருங்காலம் அதற்கில்லை.
எந்த கடந்த காலத்தின் மீதும் குத்தி வைக்கப்படவுமில்லை.
நிகழ்காலத்தின் சிலேடையது.

மஞ்சள் நிறத்த குட்டிப் பட்டாம்பூச்சி அது.
கேடுகெட்ட இக்குன்றுகளுக்கெல்லாம்
தஞ்சமளிக்கிறது தன் இறகிற்கடியே.

ஒரு துளி மஞ்சள்தான்,
மூடுவதற்குள் விரிக்கிறது
விரிப்பதற்குள் மூ..

எங்கே அது?