மகராண்ட்:
பூஜை செய்வதற்காக
சட்டையைக் கழற்றிவிட்டு
உள்ளே செல்ல வேண்டுமா
யார், நானா?
நன்றி. ஆனால் வேண்டாம்
நீங்கள் தாராளமாக உள்ளே செல்லுங்கள்
உங்களுக்கு அப்படியொரு விருப்பமிருந்தால்.
போகுமுன்
வத்துப்பெட்டியை என்னிடம்
தந்துவிட்டு போக முடியுமா ?
நான் வெளியே முற்றத்திலிருக்கிறேன்.
அங்கு யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள்
நான் புகை பிடிப்பதை.
மனோஹர் :
கதவு திறந்திருந்தது.
இன்னொரு கோவிலா?
மனோஹர் நினைத்தான்.
உள்ளே எட்டிப் பார்த்தான்
எந்த சாமி எங்கிருக்குமோ என்பதை
கற்பனை செய்தபடியே.
சட்டென தலையை திருப்பிக்கொண்டான்
கன்றொன்று அகல்விழிகளுடன்
அவனைத் திரும்பிப் பார்த்த போது.
இது கோவிலே இல்லை
வெறும் மாட்டுக்கொட்டில்
என்று கூறிக்கொண்டான்.