பதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு-
பதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா?
றியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.
பதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா?
றியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.
உண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்பிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.
அத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது. (more…)