பாப்லோ நெருடா

எப்போதும் – பாப்லோ நெருடா

எனக்கு முன் நடந்தவற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை

உன் தோள்களில்
ஒருவனைத் தூக்கி வா,
உன் தலைமுடியில் நூறு பேரைக் கொண்டு வா,
உன் முலைகளுக்கும் பாதங்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்களைக் கொண்டு வா
மூழ்கியவர்களைக் கொண்டு சென்று
கொந்தளிக்கும் கடலில் சேரக் கலக்கும்
நதியைப் போல வா,
காலமெல்லாம் நுரைத்திருக்க, காலத்தோடிருக்க!.

அத்தனை பேரையும் கொண்டு வா
நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு;
நாம் எப்போதும் தனியாக இருப்போம்,
நாம் எப்போதும் நானும் நீயுமாக இருப்போம்
புவியில் தனியாய்
நம் வாழ்வைத் துவக்கலாம் வா!

(பாப்லோ நெருடாவின் Always என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.)