பாப்லோ நெரூதா

தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா

தமிழில்: செந்தில்நாதன்

செந்தில்நாதன் தமிழாக்க கவிதை புகைப்படம்

சாலையெங்கும்
தக்காளிகள்,
கோடை,
மதியம்,
வெயில்
தக்காளியின்
இரண்டு
கோளங்களாய்ப்
பிளந்து
சாலையில்
சாறாய்
வழிந்தோடுகிறது.
டிசம்பரில்
காட்டுத்தீயாய்ப் பரவும்
தக்காளி
அடுப்பங்கரைகள் மீது
படையெடுத்து,
மதிய உணவில் ஊடுருவி,
மர அலமாரிகளில்
கண்ணாடிக்கோப்பைகள்,
வெண்ணெய்க் கிண்ணிகள்,
நீலநிற உப்புச் சாடிகள் நடுவே,
அமைதியாய்
அமர்கிறது.
அதற்கென்று
தனித்துவமான ஒளியும்,
அணைத்துச் செல்லும் அதிகாரமும் உண்டு.
துரதிர்ஷ்டவசமாக நாம் அதைக்
கொல்ல வேண்டும்:
அதன் உயிர்ச் சதைக்குள்
கத்தியைச்
செருக வேண்டும்,
செந்நிற
இதயம் அது,
நித்தம் புதிதாய்ப் பிறக்கும்
சூரியன்,
செறிவாக,
துவண்டு போகாது,
சிலே நாட்டின்
சாலடுகளில்,
படிகம் போன்ற வெங்காயத்தை
மகிழ்ச்சியாய் மணமுடிக்கும்.
அதைக் கொண்டாட
ஆலிவ் பழத்தின்
ஆதாரமான
எண்ணெய்,
அரைக் கோளங்களின்
மீது
தன்னையே ஊற்றிக்கொள்கிறது,
குறுமிளகுகள்
நறுமணத்தைச்
சேர்க்கின்றன,
உப்பு தன் ஈர்ப்பை;
இது ஒரு நளினமான
திருமணம்,
பார்ஸ்லி
சிறு பதாகைகளை
உயர்த்துகிறது,
உருளைக்கிழங்குகள்
துடிப்போடு கொதிக்கின்றன,
அந்த வறுவல்
வாசம்
கதவைத்
தட்டி,
நேரமாயிற்று!
வா! என்றழைக்கிறது.
மேசைக்குப்
போனால்
உச்சிக் கோடையில்
தக்காளி,
உலக நாயகன்,
மீண்டும்மீண்டும்
தோன்றி
வளமூட்டும் நட்சத்திரம்,
தன் வளைவுகளை,
தன் நாளங்களை,
புகழ்பெற்ற தன் முழுமையை,
வனப்பை,
நமக்குக் காட்டி,
விதையில்லாமல்
தொலியில்லாமல்
செதிலோ, தண்டோ இல்லாமல்
தன் செந்தீ வண்ண
யெளவனம் முழுவதையும்
கொடையாய்த்
தாரை வார்க்கிறது.

Ode to Tomatoes – Pablo Neruda

A.S.Kline ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டது
புகைப்படம் Anoosrini – Instagram

வெங்காயமே! வாழ்க நீ எம்மான்! – பாப்லோ நெருடா

வெ நடராஜன்

வெங்காயமே
ஒளிரும் குடுவையே,
உன் அழகு
ஒவ்வொரு இதழாக உருவானது,
பளிங்குச் செதில்கள் உன்னை விரித்தன
இருண்ட பூமியின் பாதுகாப்பில்
பனியைக் கொண்டு வளர்ந்தது உன் தொப்பை.
பூமிக்கு அடியில்
அந்த அதிசயம்
நிகழ்ந்தது
உன்னுடைய விகாரமான
பச்சைத் தண்டு வெளித்தெரிந்த போதும்,
உன்னுடைய இலைகள் வாள்போலப்
தோட்டத்தில்
பிறந்த போதும்,
பூமி அவளுடைய சக்தியைக் குவித்து
ஒளி ஊடுருவும் உன் நிர்வாணத்தை வெளிக்காட்டினாள்
மேலும், அந்தத்தொலைதூரக் கடல்
அஃபோர்டைட்டின் முலைகளை உயர்த்தி
மக்நோலியாவுக்கு ஈடு செய்தது போல,
வெங்காயமே
இந்த பூமியும்
உன்னை வளர்த்தது,
ஒரு கோள் போன்று தெளிவாகவும்
நட்சத்திரக் கூட்டம் போல்
ஒளிர்வதற்கு
விதிக்கப்பட்டவனாகவும்,
தண்ணீரின் ரோஜாவாகவும்
ஏழைகளின்
மேஜைக்கு
மேலிருக்கவும்.

உச்சத்தில் திளைக்கும்
இலுப்புச் சட்டியில்
பெருந்தன்மையுடன்
உன் புத்துணர்ச்சியை
விடுவிக்கிறாய்
வெட்டிப் போட்ட படிகம்
எண்ணெயின் தகிக்கும் சூட்டில்
சுருள் பொன் இறகு போல உருமாறுகிறது

 

மேலும், சாலட் விரும்பப்படுவதற்கு
உன்னுடைய செல்வாக்கு எத்தனை
வளமாக இருந்தது என்பதைச் சொல்வேன்,
ஒரு தக்காளியின் அரைக்கோளத்தில்
வெட்டிய ஒளியை நாங்கள் கொண்டாட
ஆலங்கட்டியைப் போன்ற வடிவத்தைத் தந்து
வானமும் உனக்கு சகாயம் செய்வதாகத் தெரிகிறது.
அதுவும் சாதாரணர்களின்
கைகள் எட்டும் தூரத்தில்
எண்ணெய் தெளிக்கப்பட்டு,
உப்பு
கொஞ்சமாக தூவப்பட்டு,
கடினமான உழைப்போடு வரும் உழைப்பாளியின் அந்நாளைய
பசியைக் கொல்கிறாய்.

ஏழையின் நாயகனே,
மென்மையான காகிதத்தில்
சுற்றப்பட்டு வந்த
ஞானமாதாவே, நீ பூமியிலிருந்து எழுகிறாய்
முடிவில்லாமல், பூரணமாய், தூய்மையாய்
ஒரு நட்சத்திர விதையைப் போலே.
அடுக்குளைக் கத்தி
உனை வெட்டும் போது, பொங்குகிறது
சோகமேயில்லாத
ஒரே கண்ணீர்.

எங்களைப் புண்படுத்தாமல் அழவைக்கிறாய் நீ.
இருக்கும் எல்லாவற்றையும் நான் போற்றியிருக்கிறேன்
ஆனால் என்னைப்பொறுத்தவரை, வெங்காயமே நீ
பளபளக்கும் இறகுகளைக் கொண்ட
ஒரு பறவையைக் காட்டிலும் அழகு,
மேலுலக உருண்டையே, பிளாட்டினக்  குடுவையே
அசையாமல் ஆடும்
வெண் அனிமொனே

இந்த பூமியின் மணமே உந்தன்
படிக நேர்த்தியில் தான் இருக்கிறது.