கே.ஜே.அசோக்குமார்
பூவண்ணன் என்ற சிறுவர் எழுத்தாளர் ஒருவர் இருந்தார். இப்போதும் எழுதுகிறார். என் சிறுவயதில் சிறுவர் புத்தகங்களில் அவர் கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வயது தாண்டியதும் அவரது கதைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். குற்ற நாவல்கள் படித்து சுஜாதாவை தாண்டி சுந்தரராமசாமி, ஜெயமோகன் என்று படிக்க ஆரம்பித்தபோதும் நான் பாவண்ணனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அல்லது அப்படி ஒரு பெயர் என் மனதில் பூவண்ணனாக ஒலித்து ஒதுங்கி போய்விட்டதாக நினைக்கிறேன். அல்லது இருவரும் ஒரே மாதிரியான குழந்தை எழுத்தாளர்கள் என்று நினைத்திருக்கலாம். ஒரு சமயம் இணையத்தில் ஏதோ ஒரு உந்துதலில் வேஷம் என்னும் சிறுகதையை படித்தபோது இவர் வேறு ஒருவர் என்று நினைக்க வைத்தது.
வேஷம் மிக எளிய ஒரு புத்தக வெளியீட்டை பற்றிய கதை. கதை ஆரம்பத்தில் ஒரு டிட்டிபி அலுவலகத்தில் நடக்கும். அந்த அலுவலகத்தை நடத்துபவருக்கும் அதில் வேலைச் செய்பவருக்கும் இடையே நடக்கும் சின்ன உரையாடல்களும், அதிகார தோரனைகளும் வேகமாக முடிக்க வேண்டும் என்கிற அவசரமும் கொண்ட சூழ்நிலைகளை விளக்குபவை. ஆனால் எதிர்பார்த்ததுபோல் பக்கங்களை அடித்து முடியாது. மின்சாரமும் போய்விடுகிறது. ஆனால் அதன் ஆசிரியர் ஒரு அரசியல்வாதி தாமதமாக்க விருப்பவில்லை. அத்தோடு காலை நூல்வெளியீட்டு விழா வேறு. வேறு வழியில்லாமல் வெறும் காகிதங்களை வைத்து பையிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வெளியிடுவார்கள். அதில் உச்சம் என்ன வென்றால் எல்லோரும் அதை படித்ததுபோல் அதன் உள்ளடக்கம் பற்றி மேடையில் பேசுவதும் ஆவேசத்துடன் அதைப்பற்றி வெளியில் சொல்வதுதான். அதை தட்டச்சு செய்த கதைச்சொல்லியும் அவர் முதலாளியும் அதைக் குறித்து பேசும்போது இதற்கு ஒருவகையில் நாமும்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.
நான் அப்போது படித்த கதைகளிலிருந்து இந்த கதை முற்றிலும் புதிய களம் இருந்தது. அதன் பேசும்பொருள் ஒரு புரட்சிகர சிந்தனையை கொண்டிருப்பது போலிருந்தாலும் மிக யதார்த்த தளத்தைதான் பேசுகிறது. ஆம் இதுதான் பாவண்ணன். மிக எளிய மனிதர்களின் நிலையில் நின்று சமூகத்தில் நடக்கும் அவசங்களையும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் மெல்லிய புன்னகையுடன் பதிவு செய்கிறது அவருடைய கதைகள்.
முள் என்றோரு சிறுகதை. அதில் கதையின் நாயகன் அவரின் அலுவலக நண்பரை அடிக்கடி காண அவர் வீட்டிற்கு செல்பவர். அவர்களின் குழந்தைகள் அவரின் மேல் இருக்கும் அன்பால் அவரை சித்தப்பா என்றுதான் அழைப்பார்கள். ஒருமுறை ஆப்ரிக்காவிலிருந்து அந்த குழந்தைகளின் நிஜமான சித்தப்பா குடும்பத்துடன் வந்திருக்கும்போது அங்கு சென்றிருப்பார். ஆப்ரிக்க சித்தப்பாவின் குழந்தைகள் அவருடன் விளையாடுவதை விரும்பாத சித்தி அவர் குழந்தைகளை அடித்து ஏன் கண்டவர்களிடம் சாக்லெட் வாங்குகிறாய் என்று தூக்கி எறிய அது அவர் காலடியில் வந்து விழும். மெளனமாக எழுந்து வெளியே வருவார் அப்போது அவரின் நண்பர் எதுவே சொல்லாதது அவருக்கு மேலும் துன்பத்தை அளித்துவிடும். தமிழ் சிறுகதைகளில் முக்கியமான சிறுகதை என்று எல்லோராலும் சொல்லப்பட்டிருக்கிறது இக்கதை. ஒருவர் என்னதான் சித்தப்பா என்று சொல்லப்பட்டாலும் நிஜ சித்தப்பாவின் முன் அவர் வெறும் நபர் அல்லது நண்பர்தான், அதை எல்லா சமூக அமைப்புகளும் உணர்த்துவதை ஒருவர் அறியும் இடம் இந்த முள் கதை.
பொதுவாக பாவண்ணனின் கதைகளின் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்று தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். கெட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்று பெரியதாக எதையும் அவர் எழுதுவதில்லை. விதிவசத்தால் சிலர் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதுபோல்தான் சொல்லப்பட்டிருக்கும். இதுவே அவர் எழுத்துகளின் சிறப்பு என்றும் சொல்லலாம்.
வாழ்க்கை ஒரு விசாரணை, சிதறல்கள், பாய்மரக்கப்பல் என்ற மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களும் வெவ்வேறு கதைகளமாக கொண்டிருப்பவைகள். அதேவேளையில் எல்லோரும் கதாமாந்தர்களும் நல்லவர்கள். முதல் நாவல் வடதமிழகத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. அவர்களின் ஆசைகள், கனவுகள், அது நிறைவேறாமல் போகும் தருணங்கள் என்று அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பேசும் கொச்சை பேச்சுகளை பதிவு செய்தபடி சொல்லப்பட்டிருகிறது.
சிதறல்கள் நாவல் ஒரு ஆலை முடப்படும்போது அதில் வேலை செய்த மக்களின் அவலங்களை தினப்படி வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆலை மூடப்பட்டதும் அதன் ஆலை முதலாளிகள் மிக இயல்பாக தங்கள் வாழ்வை பார்க்க போய்விடுகிறார்கள். ஆனால் அதன் தொழிலாளிகள், அவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கவேண்டிய தருணங்கள் அப்படியே நின்று விடுகின்றன. அவர்கள் நினைத்திருக்கும் தங்கள் பிள்ளைகளின் திருமணங்கள், சுபகாரியங்கள், என்று எல்லாமே நின்றுவிடுவதால் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினப்படி செலவுகளை எதிர்க்கொள்ளவென்று உணவுகளை குறைத்து, தினக்கூலிக்கு சென்று, தன் வீட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி, வட்டிக்கு பணம் பெற்று என்று பலவகையிலும் அல்லல்படுகிறார்கள். ஆனால் மனிதர்கள் எந்த புகார்கள் இல்லாமல் தங்களை மட்டுமே குறை கூறி வாழ்கிறார்கள்.
மூன்றாவதான பாய்மரக்கப்பல் நாவல் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை அப்பா–மகன்–பேரன் என்கிற மூன்று மனிதர்களை மையமாக பேசுகிறது. அப்பாவின் ஒரு சொல்லையும் எதிர்காமல் அவர் சொன்னவற்றையே செய்து வாழ்கிறான் மகன். ஆனால் அரசியல் சகவாசத்தால் பேரன் தன் அப்பா, தாத்தாவின் பேச்சை கேட்காமல் அவர்களின் சொற்களுக்கு எதிராகவே வாழ்கிறான். அவர்களுக்குள் நடக்கும் பனிப்போரில் மகன் ஒரு கட்டத்தில் இறந்துவிட தாத்தா பேரன் என சண்டைகள் நடக்கின்றன. நேரான வழிகளில் எதிலும் செல்லாமல் குறுக்குவழியில் மட்டுமே செல்லும் பேரனை நினைத்து வேதனைபடுகிறார் தாத்தா. ஆம் கிராமங்களில் இன்றும் அரசியலின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் சில்லறைதனங்களை எந்த புகாரும் இல்லாமல் எளிய முன்வைப்பு மூலம் பாய்மரக் கப்பலாக வாழ்க்கை செல்வதை கூறுகிறார்.
சமீபத்தில் பாவண்ணன் தொகுப்பாக வந்திருக்கும் பாக்கு தோட்டம் சிறுகதை தொகுப்பு மிக சிறப்பான தொகுப்பாக இருக்கிறது. அதில் இருக்கும் கதைகளில் வாழ்வில் ஒரு நாள், கல்தொட்டி, பாக்கு தோட்டம் போன்றவைகள் முக்கியமான கதைகள். ஏழு லட்சம் வரிகள், கடலோர வீடு சேர்ந்த மொத்தம் 17 தொகுதி சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். வினைவிதைத்தவன் வினையறுப்பான், ஊறும் சேரியும், கவர்மெண்ட் பிராமணன், பசித்தவர்கள், பருவம், ஓம் நமோ, தேர் என்று பல முக்கிய மொழியாக்கங்களை கன்னடத்திலிருந்து செய்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்காக பணிபுரிபவர் பாவண்ணன். அவருடைய முழுமையான சிறுகதை மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு வரவேண்டும். அப்போதுதான் அவரது இதுவரையான பெரும் பங்களிப்பை நாம் சரியாக புரிந்துக் கொள்ள உதவும்.