பிரசன்னா

முட்டை – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

Andy Weir அளித்த பேட்டி ஒன்றின் மூலமாகத்தான்  The Egg என்ற கதை பற்றி அறிந்துகொண்டேன். பிறகு சென்ற வாரம் அதைத் தேடிப்படித்தபோது ஒரு பெரிய ஐடியாவை (அல்லது தத்துவத்தை) மிகவும் கச்சிதமாக முன்வைப்பதாக தோன்றியது. ‘இயற்கையின் முன் நாமெல்லாம் சிறு துளி’, ‘ஏன் ஒருவருக்கொருவர் இத்தனை வெறுப்பு?’, ‘பிரபஞ்சத்தின் அர்த்தம்’, ‘காலச்சக்கரத்தில் நடப்பதே திரும்பத் திரும்ப நடப்பது’ போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமான விஷயங்கள். எனது இக்கதையிலும் வேறு வகையில் அவற்றை மறைமுகமாக பேசியிருந்தேன் – வால் விழுங்கி நாகம்

மறுபிறவி போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், காலம் முன்பின்னே பிறப்பெடுப்பது என்பது ‘மறுபிறவி’ தலைப்பில் எழுப்பப்படும் சில சந்தேகங்களுக்கு லாஜிக்கலாக பதில் அளித்துவிடுகிறது.

இதெல்லாம் எனக்கு கதை பிடித்ததற்கான சில காரணங்கள். ஆனால் மொழிபெயர்த்தது ஏன் என்று இப்போது யோசித்தால், இது சிறிய கதையாக, மொழிபெயர்க்க அதிக நேரம் பிடிக்காமல் இருந்ததும்கூட முக்கிய காரணமாக இருக்கலாம் 🙂

பிரசன்னா

தமிழாக்கத்தை இங்கு வாசிக்கலாம்- முட்டை 

முட்டை – ஆன்டி வியர்

முட்டை – ஆன்டி வியர் (Andy Weir)

மொழிபெயர்ப்பு – பிரசன்னா

andy-weir-author-photo-cropped

 

நீ இறக்கும்போது வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தாய்.

கார் விபத்து. விவரிப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை, ஆனால் உயிர் போய்விட்டது. மனைவியும் இரு மகன்களும் உனக்கு. அது வலியில்லாத இறப்பு. மருத்துவர்கள் உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றனர், ஆனால் முடியவில்லை. உனது உடம்பு முற்றிலும் உருக்குலைந்து விட்டது. உண்மையில் சொல்கிறேன், நீ இறந்ததே நல்லது.

அப்போதுதான் என்னை சந்தித்தாய்.

“என்ன.. என்ன நடந்தது? நான் எங்க இருக்கேன்?” என கேட்டாய்.

“நீ இறந்துவிட்டாய்” ஒரு தகவலைத் தெரிவிப்பது போல் சொன்னேன். மூடி மறைப்பதில் அர்த்தமில்லை.

“ட்ரக் ஒண்ணு, கட்டுப்பாடில்லாமல் வந்தது..”

“ஆமாம்” என்றேன்.

“நான்.. நான் செத்துட்டேனா?”

“ஆமாம்.. அதற்காக வருந்தவேண்டாம். எல்லாருக்கும் நடப்பதுதான்” என்றேன்.

நீ சுற்றிலும் பார்த்தாய். வெறுமை.. நீயும் நானும் மட்டும். “இது என்ன இடம்? இதுதான் மறுமையா?” என்று கேட்டாய்.

“கிட்டத்தட்ட”, என்றேன்.

“நீங்க கடவுளா?” என்றாய்.

“ஆம், நான் கடவுள்” என்று பதில் சொன்னேன்.

“என் குழந்தைங்க.. என் மனைவி” என்றாய்.

“அவர்களுக்கென்ன?”

“அவங்க நல்லபடியா இருப்பாங்களா?”

“இது.. இதைத்தான் நான் விரும்புகிறேன். இப்போதுதான் இறந்திருக்கிறாய், ஆனால் உன் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறாய் பார்.. அருமை..”

நீ என்னை ஆர்வமாக பார்த்தாய். உனக்கு நான் கடவுளாக தெரியவில்லை. உன்னைப்பொறுத்தவரை நான் சும்மா ஒரு மனிதன். ஒரு வேளை மனுஷி. தெளிவற்ற அதிகார பிம்பம். கடவுள் என்பதை விட பள்ளி ஆசிரியை என்பது பொருத்தமாக இருக்கக்கூடும்.

“கவலைப்படாதே அவர்கள் நன்றாகவே இருப்பார்கள். உன் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் நீ தான் ஆதர்சம். அவர்கள் உன்னை வெறுக்க ஆரம்பிக்கும் முன்னமே இறந்துவிட்டாய். உன் மனைவி வெளியே அழுதாலும் உள்ளுக்குள் விடுதலையுணர்வு பெறுவாள். நீ உயிரோடு இருந்திருந்தாலும் உங்கள் திருமண வாழ்க்கைக்கு பெரிய எதிர்காலம் இல்லை, இது இப்போது உனக்கு ஆறுதலாக இருக்கலாம்.. உன் மனைவி அப்பாடா என்று இருப்பது குறித்து குற்றவுணர்ச்சியில் ரொம்பவே வருந்துவாள்”

“ஓ..” என்றுவிட்டு “சரி அடுத்து என்ன? சொர்க்கமா, நரகமா இல்ல வேறெதுவுமா?” என்றாய்.

“அதெல்லாம் இல்லை. நீ மறுபிறவி எடுப்பாய்”

“ஆ.. அப்போ இந்துக்கள் சொன்னதுதான் சரி”

“எல்லா மதங்களும் அதனதன் வழியில் சரிதான். என்னோடு வா”

அந்த சூன்யவெளியினூடே என்னை பின்தொடர்ந்து, “எங்கே போறோம்?” என்று கேட்டாய்.

“எங்கேயுமில்லை. நடந்துகொண்டே பேசினால் ஒரு சுகம்” என்றேன்.

“இதுக்கென்ன அர்த்தம்? மறுபிறவி எடுத்தா நான் ஒரு காலிக்குடம் இல்லையா? ஒரு குழந்தை. இந்த பிறவியில் என்னுடைய எல்லா அனுபவங்களும் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லையா” என்று கேட்டாய்..

“அப்படியில்லை! உன்னுடைய முற்பிறவிகளின் அத்தனை அறிவும் அனுபவங்களும் உன்னுள்ளேதான் உள்ளன. அதெல்லாம் இப்போது உனக்கு நினைவில் இல்லை, அவ்வளவுதான்”

நான் நடப்பதை நிறுத்திவிட்டு உன்னைத் தோளோடு சேர்த்தனைத்தேன். ” உச்ச கற்பனையை விடவும் உன் ஆன்மா அபாரமானது, அழகானது, பிரம்மாண்டமானது. நீ எதுவோ, அதில் ஒரு துளியைத்தான் ஒரு மனித மனத்தால் கிரகிக்கமுடியும். ஒரு கோப்பை தண்ணீரில் உன் விரலை விட்டு சுடுகிறதா என பார்ப்பது போன்றது அது. உன்னில் ஒரு சிறு பகுதியை மட்டும் பாத்திரத்தினுள் விடுகிறாய், ஆனால் வெளியே எடுக்கும்போது அதன் அத்தனை அனுபவங்களையும் நீ பெற்றுக் கொள்கிறாய்”

“கடந்த நாற்பெத்தெட்டு ஆண்டுகளாக நீ ஒரு மனிதனுக்குள் இருந்தாய், அதனால் விரிவடைய முடியாமல், உனது உணர்நிலையின் பிரம்மாண்ட வீச்சை இன்னும் முழுதாக உணரவில்லை. இங்கே அதிக நேரம் இருந்தால் அது எல்லாமும் உனக்கு நினைவுக்கு வரும், ஆனால் ஒவ்வொரு பிறப்புக்கு இடையிலும் அப்படி செய்வது வீண்வேலை”

“இது எனக்கு எத்தனையாவது மறுபிறப்பு?”

“ஏராளமான உயிர்களாக இருந்துவிட்டாய். ஏராளமோ ஏராளம். இந்த தடவை நீ ஒரு சீன கிராமத்துப் பெண்ணாக 540 ஆம் வருடத்தில் பிறந்து வாழப்போகிறாய்”

“என்னது? நீங்க என்ன கடந்த காலத்துக்கா அனுப்புறீங்க?” நீ திணறினாய்.

“அது வந்து… நேரம், காலம் இதெல்லாம் உன்னுடைய பிரபஞ்சத்தில்தான் உண்டு. நான் எங்கிருந்து வந்துள்ளேனோ அங்கெல்லாம் வேறு மாதிரி”

“நீங்க எங்கேயிருந்து வரீங்க?” என்றாய்.

“சொல்கிறேன்.. நான் வேறெங்கோ இருந்து வருகிறேன். என்னைப்போலவே மற்றவர்களும் அங்கு உண்டு. அங்கே எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் பெருக்கெடுக்கத்தான் செய்யும். ஆனால் அதை சொன்னாலும் உன்னால புரிந்துகொள்ள முடியாது”

“ஓ” என்று சற்றே ஏமாற்றமடைந்தாய். “ஆனா, நான் வேற வேற இடங்களில் காலம் முன்பின்னே மறுபிறவி எடுக்கும்போது, ஏதோ ஒரு புள்ளியில் என்னை நானே சந்திச்சிருப்பேனே?”

“நிச்சயமாக. அப்படித்தான் எப்போதும் நடக்கிறது. ஆனால் சந்திக்கும் இரண்டு பேருக்கும் அவரவர் வாழ்க்கை மட்டுமே தெரிந்திருக்கும் என்பதால் ஒருவரை மற்றொருவர் உணரக்கூட மாட்டீர்கள்”

“அப்போ இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்?”

“வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றா கேட்கிறாய்? அலுப்பூட்டும் அளவிற்கு திரும்பத்திரும்ப கேட்கப்பட்ட கேள்வி” என்றேன்.

நீ விடாமல், “ஆனா அர்த்தமுள்ள கேள்வி” என்றாய்.

உன் கண்களை நேராக பார்த்தேன். “வாழ்க்கையின் அர்த்தம், இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததன் காரணம், நீ முதிர வேண்டும் என்பதே”.

“அதாவது மனித இனத்தை சொல்றீங்களா? நாங்க எல்லாரும் முதிர்ச்சி அடையனுமா?”

“இல்லை, நீ மட்டும். உனக்காக மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கினேன். ஒவ்வொரு பிறவிக்கும் கூடுதலாக வளர்ந்து, முதிர்ச்சி பெற்று பெரும் அறிவாற்றல் ஆகிறாய்”

“நான் மட்டுமா? மத்தவங்கல்லாம்?”

“மற்றவர்கள் யாரும் இல்லை. இப்பிரபஞ்சத்திலேயே நீயும் நானும் மட்டும்தான்”

என்னை வெறித்து பார்த்தாய். “ஆனா பூமியில அவ்வளவு மக்கள்…”

“அனைத்தும் நீயே.. உன்னுடைய பல்வேறு பிறவிகள்தான் அத்தனையும்”

“அத்தனை பேரும் நான்தானா!?”

“இப்போது புரிந்துகொண்டாய்” உன் முதுகில் தட்டிக்கொடுத்தேன்.

“இதுவரை வாழ்ந்த அத்தனை மனிதர்களும் நான்தானா?”

“ஆமாம், இனி வரப்போகும் அத்தனை மனிதர்களும்தான்”

“நான் தான் ஆபிரகாம் லிங்கனா?”

“நீ ஜான் வில்கிஸ் பூத்தும் கூட” நான் சொன்னேன்.

“நான் ஹிட்லரா?” திகைத்து கேட்டாய்.

“அவனால் கொல்லப்பட்ட லட்சோபலட்சம் மக்களும் நீயே”

“நான்தான் இயேசுவா?”

“அவரைப் பின்தொடர்ந்த அத்தனை பேரும் கூடத்தான்”

நீ அமைதியானாய்.

“எப்போதெல்லாம் நீ அடுத்தவரைப் பழி கொண்டாயோ, அதை உனக்கேதான் ஏற்படுத்திக்கொண்டாய். உனது ஒவ்வொரு கனிவும் கருணையும் உனக்கேதான் காட்டிக்கொண்டாய். எந்த ஒரு மனிதனும் அடைந்த அல்லது அடையப்போகும் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவிக்கப்போவது நீயே”

நீ வெகு நேரம் யோசித்தாய்.

“ஏன்? எதற்காக இதையெல்லாம் செய்யனும்?”

“ஏனென்றால் ஒரு நாள் நீ என்னைப்போல் ஆவாய். ஏனென்றால் நீ அதுதான். என்னைப்போன்றவன். நீ என் குழந்தை”

“ஆகா.. என்ன கடவுள்னா சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டாய்.

“இல்லை. இன்னும் இல்லை. நீ ஒரு கரு. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறாய். அத்தனை காலத்திலும் இருந்த அத்தனை மனிதர்களாகவும் நீ வாழ்ந்து முடித்ததும், பிறப்பதற்கு தயாராகி விடுவாய்”

“அப்ப இந்த பிரபஞ்சமே, வெறும் ஒரு….” என்று சொல்லி நிறுத்தினாய்.

“ஒரு முட்டை” என்று பதிலளித்தேன். “உன்னுடைய அடுத்த பிறவிக்கு நேரம் வந்துவிட்டது”

சொல்லிவிட்டு உன் வழியில் உன்னை அனுப்பி வைத்தேன்.