பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

snails

திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும்
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்
சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை

சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி

– பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி –

nagulan

 

சித்தார்த்தனின் சொப்பனத்தில்
எப்போதும் போல இன்றும்
மாறாமல் வந்துவிட்டது
அந்தக்காட்சி,
என்றும் ஈரம் தாங்கிய
பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.
மழைக்கு பிந்தைய
அதிகாலைப் பொழுதொன்றில்
வீட்டின் அருகிருந்த
புல்வெளிக்காட்டில்
சிறு சிறு
வெண்குடைக்காளான்களை
ஓடி ஓடித்தேடி
மண்ணைத் தோண்டி
அடித்தண்டு வேர்முறியாமல்
பறித்ததில் சிதறிய
அவளுடைய கொலுசின்
சிணுங்கல்கள் மீட்டும்
வெள்ளி மணிகளின்
சமிக்ஞையை போல.

 

இறுதிச்சுற்று நிலவரப்படி

அது
இப்படி
இவ்வளவு
மோசமாக
நடந்திருக்கக்கூடாது;
இல்லை
இதை
ஏற்றுக்கொள்ளவே
முடியாது;
பாவம்
இந்தமுறையேனும்
அவன்
காப்பாற்றபட்டிருக்க வேண்டும்.
தனி ஊசலாடும்
நினைவுகளை
ஒன்று திரட்டி
கண்களில்
இரத்தப்படலத்துடன்
நெடிவீச்சத்தை
தாண்டி
குறுக்குவெட்டுப்பட்டும்
நிதானித்து
ஏழு ரெண்டு
மைல் கடந்து
Yes I’ve Made It
என
ஆங்கிலம்
கலக்காமல்
அதிசயம் தான்
ஆனாலும்
இதோ
அடைந்துவிட்டேன்
என் இலக்கை
என்று
தமிழில்
சொல்ல
நினைத்திருந்தான்
நந்தகுமாரன்.
என்ன
செய்வது
இந்த
முறையும்
ஆறு
பேப்பர்
அவுட்!

அர்த்தமற்றவை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

யாரென
தெரியாத
முகங்கள்
கடத்திச்
செல்லும்
புன்னகையில்
இதுவரை
தொலைந்து
போய்
இருக்கிறீர்களா?

ஏதுமற்றும்
பேச
விழையும்
விழிகளை
கவனித்து
பேச
மறுக்கும்
மனதினை
சுமந்து
இருக்கிறீர்களா?

தொடர்பற்ற
சங்கதிகள்
எல்லாவற்றுக்கும்
ஏதோவொரு
தொடர்பிருப்பதாய்
எண்ணி
யாருமற்ற
வெளியில்
சிரித்துக்
கொள்கிறீர்களா?

பிடிக்குமா?
பிடிக்காதா?
என்ற
கேள்விகளுக்கு
உட்படாமல்
முடிய
மட்டும்
கூடாதென
வேண்டி
இருக்கிறீர்களா?

நாள்தோறும்
செல்லும்
வழியில்
கடந்து
போகும்
யாரேனும்
உங்களுக்கான
நினைவுகளை
தூவிச்
செல்வதை
உணர்ந்திருக்கிறீர்களா?

எல்லோருமாய்
அமர்ந்து
பேசிக்
கொண்டிருக்கையில்
சட்டென
என்ன
பேசினோம்
இதுவரை
என
மறந்துபோன
ஞாபகங்கள்
இன்னும்
இருக்கிறதா?

இப்படியான
ஆதியற்ற
தருணங்களின்
தகவமைப்புகள்
எப்போதும்
கட்டமைக்கபடுவதில்லை
இப்பொழுது
நான்
எழுதுவதைப்
போல…

 

ஒளிப்பட உதவி – saatchiart.com