குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம் ஒட்டி வைக்கலாம் என்று தேடுதல், தீப்பெட்டி இருந்தால் எதற்கெல்லாம் தீ வைக்கலாம் என்று யோசித்தல் – நாம் வளர்ந்து, நமக்கு பொறுப்பு வந்து விட்டால் மட்டும் இது பெரிய அளவில் மாறுவதில்லை. எப்போதும் நாம் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டே இவ்வுலகைப் புரிந்து கொள்கிறோம், அவ்வாறு புரிந்து கொள்ளும்போதே உலகின் இயல்பை நம் மனதில் திருத்தி வடிவமைக்கவும் செய்கிறோம். இதில், பொறுப்புடன் கூடவே வெற்றியும் அதனால் ஏற்படும் தன்னம்பிக்கையும் வாய்த்து விட்டால், நாழியே நம் கருவி என்றாலும் அதைக் கொண்டு உலகளந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை வந்து விடுகிறது. ஆற்றலும் வெற்றியும் நாம் சரியாக இருப்பதற்கான அத்தாட்சிகள் என்பதால் அதை வேறு பலரும் ஏற்கப் போய் நம் நாழி ஒரு அலகும் ஆகிறது. ஆனால், யானையைப் போல் உலகும் தடவிப் பார்க்கும் கரங்களுக்கும் புறத்தகவல்களைத் தொகுத்து அதற்கொரு உருவம் அளிக்க உதவும் கருவிகளாகிய கருத்துச் சட்டகங்களுக்கும் அப்பால் தன் போக்கில் போகிறது.
ஆங்கிலத்தில் லிடரேச்சர் என்பதை நாம் இலக்கியம் என்கிறோம். ஹை-லிட், லோ-லிட் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த காலம்கூட இப்போது போய் விட்டது. எழுதப்படும் எல்லாவற்றையும் லிடரேச்சர் என்று சொல்ல ஆரம்பித்து, திரைப்படங்கள் உட்பட நம் விசாரணைக்குரிய பிரதி நிலையை அடையக்கூடியவை எல்லாம் லிடரேச்சர் என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதற்காக எல்லாம் ஒரே அளவில் சம மதிப்பு கொண்ட இலக்கியம் ஆவதில்லை – புனைவுத்தன்மை, வடிவத்துக்கு ஏற்ற மொழி கொண்டிருத்தல், பயன்பாட்டு நோக்கமின்மை, கற்பனையைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் ஒரு படைப்பை இலக்கியம் என்று பாராட்டத்தக்க இடத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன.
மொழி பல திசைகளில் விரியக்கூடியது, பல்பொருள் அளிக்கக்கூடியது. குறிப்பிட்ட ஒரு தொடர் வரிசையில் முன்னும் பின்னும் வரக்கூடிய வாக்கியங்களைக் கொண்டே எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருள் இன்னது என்று வரையறை செய்யப்படக்கூடியது. அப்படியும் அதன் பொருள் பல கற்பனைகளுக்கு இடம் தரலாம். மொழியின் இத்தன்மையை அழகியலாய்க் கொள்வதாலேயே இலக்கியம் என்பது சுட்டுதல் என்று பொருள் கொண்டு, ஒரு படைப்பு எதைச் சுட்டுகிறது, தான் சுட்டும் பொருளைத் தன்னுள் எவ்வளவு கொண்டிருக்கிறது, எவ்வகையில் இச்சுட்டல் நிகழ்கிறது என்று பலவாறு பேசுகிறோம். ஒரு படைப்பு தான் நேரடியாய்ச் சொல்வதற்கு முற்றிலும் முரணான பொருள் தரலாம், அல்லது நேரடியான பொருள் ஒன்று மறைபொருள் ஒன்று என்று இருவேறு வகைகளில் பொருள்படலாம், படைப்பில் உள்ளதன் ஒரு பகுதியை மறைத்து அது சுட்டுவதாய் நாம் கொள்ளும் பொருளை, சொன்னது பாதி சொல்லாதது பாதி என்று அதிலுள்ள இடைவெளியில் நிரப்பும் சாத்தியம் கொண்டிருக்கலாம்.
இது எதுவும் நாம் அறியாதது அல்ல. ஒரு படைப்பு கற்பனைக்கு இடம் கொடுக்காதபோது, அதன் வாசிப்பனுபவத்தில் அகத்தூண்டுதல் நிகழாதபோது, தட்டையான மொழி, தட்டையான வடிவம் என்று அது நிராகரிக்கப்படுகிறது. புனைவென்றால், திரைக்குப்பின் உள்ள நிழலாட்டத்தின் சாயல் அதில் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிழல், சொல்லப்படும் விஷயத்துக்குப் பின்னுள்ள சொல்லப்படாத விஷயத்தின் சுட்டல், புனைவுக்கு, ஏன் மொழிக்கே, ஒரு கூடுதல் பரிமாணம் அளிக்கிறது. இது தொடர்பாகவே இலக்கியம் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன.
இந்த அழகியலோடு அறம் சேரும்போது ஒரு சிறிய நுண்மையாக்கம் நிகழ்ந்து தீவிர நிலைப்பாடுகள் தோன்றுகின்றன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது, எது மதிப்பு கொண்டது, எது மதிப்பற்றது என்ற விவாதங்களில் கதைசொல்லலின் விளையாட்டுத்தனம் அடிபட்டுப் போகிறது. எத்தனை பேசினாலும் கதை சொல்லல் ஒரு மொழி விளையாட்டும்தான் என்பதை மறுக்கவே முடியாது, ஆனால் விளையாட்டுத்தனமான கதைகளில் இலக்கியத்தின் ஒளி பெரும்பாலும் பாய்வதே இல்லை. விளையாட்டுத்தனம் குறையும்போது இலக்கியத்தின் ஒரு முக்கிய இயல்பான பயன்பாட்டு நோக்கமின்மைக்கு இடமில்லாமல் போகிறது – இலக்கியம் ஒரு இயக்கம் என்ற இடத்தை அடையும்போது அதன் இலட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, விளையாட்டுத்தனம் அர்த்தமற்றுப் போகிறது. குழந்தைகள் விஷயத்தில் பார்ப்பது போல், விளையாட்டுத்தனம்தான் கற்பனையைத் தூண்டுகிறது, நம் கருவிகளின் புதுப் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது.
oOo
‘பொண்டிங் இன்னமும் வந்து சேரவில்லை‘, என்று துவங்கும் ஜேகேவின் கதையில் பிரிந்து வாழும் அருணும் மயூரியும் உரிமை கொண்டாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவன் பொண்டிங். பெரும்பாலும் அருனின் பார்வையில் சொல்லப்படுகிறது- மயூரி நிறைய பொய் சொல்பவள் என்பதையும் அவள் சூடானியன் ஒருவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்பதையும் அது குறித்த அருணின் கவலைகளையும் நாம் துவக்கத்திலேயே அறிகிறோம்- “பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது.” அவன் கவலையெல்லாம் பொண்டிங் மீதே என்று சொல்லிக் கொண்டாலும் மயூரி மீது அருண் கொண்டுள்ள உரிமையை மணமுறிவுக்குப் பின்னும் அவன் மனம் விலக்கிக்கொள்ள மறுக்கிறது.
பொண்டிங் என்ற பெயரைத் தேர்வு செய்வது மயூரிதான். கதைக்களம் ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ரெஸ்டன் என்பதால் பொண்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் மயூரி ஆஸ்திரேலிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்றும் ‘ராம், சிவாஸ், கண்பத்’ என்ற சாமி பெயர்கள், அல்லது, ‘சச்சின், சனத்’ என்ற ஆசிய கிரிக்கெட்டர்களின் பெயர்களை அருண் விரும்புவதில் அவனது அடையாளச் சிக்கல் தொடர்கிறது என்றும் கொள்ளலாம். ஆனால் குடியேறியவர்களின் இந்தச் சிக்கல்கள் கதையில் இன்னும் விரித்தெடுக்கப்படவில்லை. போகிற போக்கில் இது இடம் பெறுகிறது, எப்படி மயூரி சூடானியனுடனும் அருண் அலெக்சாந்திராவுடனும் மணமுறிவுக்குப்பின் வாழ்கிறார்களோ அது போல் இதுவும் கதைக்கு பின்னணி சேர்க்கிறது.
பொண்டிங் குறித்த சண்டை எண்ணற்ற பல சண்டைகளில் ஒன்று, இறுதிச் சண்டை, ‘அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை‘. இது ஏன் இறுதிச் சண்டையாக ஆகிறது, ஏன் அவ்வளவு பலமான அடிதடி என்பது கதையின் கடைசி வரியில்தான் புலப்படுகிறது. இதற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால் அருணுக்கும் மயூரிக்கும் நடுவில் என்ன நடந்திருக்கும், அவர்களின் சண்டை எது குறித்து இருந்திருக்கும் என்பதை வாசகனே ஊகிக்க வேண்டியதாகிறது. பொண்டிங்கைவிட கதைக்கு இதுதான் முக்கியம், இதில் இல்லாத கவனம் பொண்டிங் மீது விழுவதில் உண்மையை எதிர்கொள்ள மறுக்கும் அருணின் பலவீனம் இருக்கிறது.
இன்னும் சொல்வதானால், அருண் சில உண்மைகளை நம்மிடமிருந்தும் மறைக்கிறான்- “மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது,” என்று பல தகவல்களுக்கு இடையே அருண் விவாகரத்து பெற அவசரப்படுகிறான் என்ற தகவலும் இருக்கிறது, ஆனால் அது ஏன் எதனால் என்ற கேள்வி கதையில் இல்லை. அருண் அதைச் சொல்வதில்லை, அருண் பார்வையில் கதைசொல்லும் ஜேகேவும் சொல்வதில்லை. ஆனால் சிறிது ஊகித்தால் நாம் கண்டு கொள்ளலாம். அதற்கும் கதையின் இறுதிக்கு வர வேண்டியிருக்கிறது.
ஆங்கில துப்பறியும் கதைகளில் red herring என்று ஒன்று சொல்வார்கள், வாசகனின் கவனத்தைத் திசை திருப்ப வேறு திசையில் சந்தேகம் கொள்ள வைக்கும் உத்தி. அதற்கு இணையான ஒன்றாக, அருண் மீது சந்தேகம் எழாத வகையில் இங்கு பொண்டிங் யார் என்ற கேள்வி கதை முழுக்க, தலைப்பு துவங்கி இறுதி வரை நீடிக்கிறது – “இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும்,” என்ற ஒரு புதிர்த்தனமான இடத்தைத் தவிர கதை முழுவதும் பொண்டிங்கை அருண் ‘பிள்ளை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்- “சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக் கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான்,” என்றெல்லாம் வேறு எழுதுகிறார். பொண்டிங் மீது யாருக்கு கூடுதல் உரிமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
கதையின் இறுதியில் அலெக்சாந்தரா வெளிப்படும்போதுதான் பொண்டிங் யார் என்ற நம் சந்தேகமும் உறுதிப்படுகிறது. ஆனால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று மிகத் தேர்ந்த வகையில் கதை சொல்லும் ஜேகே, பாண்டிங் குறித்த மர்மத்தை அவிழ்க்கும் அதே வரியில் இதனுள் உள்ள இன்னொரு கதையின் மர்மத்துக்கும் விடையளிக்கிறார். ஆனால், இப்படியொரு மர்மம் இருப்பதே கதையை இரண்டாம் முறை படிக்கும்போதுதான் தெரிகிறது.
இந்தக் கதை நமக்கு அளிப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவு நிலை திருப்தியைதான். ஒரு குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்த திருப்தி போன்றது இது. அருண், மயூரி, பொண்டிங் என்று எவரது உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. புறத்தகவல்கள் என்ற அளவிலேயே கதை சொல்லப்படுகிறது, முரண்கள் குறித்த அகவுணர்வுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. அருணின் உணர்வுகள் விவரிக்கப்படுவதும் ஒரு விளையாட்டுப் போக்கில்தான் என்பதை யோசித்துப் பார்த்தால் நாம் அறிய முடியும். விளையாட்டாகக் கதை சொல்வது என்று பார்த்தால் ஜேகே மிகச் சுவாரசியமாக, படித்து முடித்த பின்னரும் அசை போடக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார், அதில் சந்தேகமில்லை.