புத்தக கண்காட்சி 2015

2015 புத்தக வெளியீடுகள்: பிரக்ஞை பதிப்பகம்

பிரக்ஞை பதிப்பகம்

இவ்வருட புத்தக கண்காட்சிக்கு ‘பிரக்ஞை’ வெளியீடாக வரவிருக்கும் புத்தகங்களைப் பற்றி தமிழ்ப்பெண் விலாசினியுடன் பதாகை நிகழ்த்திய மினஅஞ்சல் உரையாடல்.

நல்ல புத்தகங்களை தங்கள் பதிப்பகம் வழியே கொண்டு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயலாற்றும் பிரக்ஞை பதிப்பகத்தாரின் முயற்சிகள் வெற்றி பெற உளங்கனிந்த வாழ்த்துகளை பதாகை தெரிவித்துக் கொள்கிறது.

பதாகை: உங்கள் பதிப்பகம் எத்தகைய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது? அதன் நோக்கங்கள் என்ன?

பிரக்ஞை: நல்ல புத்தகங்கள் ‘பிரக்ஞை’ வழி வர வேண்டும். இதுதான் முதலும் முற்றுமான குறிக்கோள். ஆனால், இப்பதிப்பகம் தொடங்கலாம் என்று திட்டமிட்டபொழுது நண்பர் திரு பி.என்.எஸ் பாண்டியனுக்கும் எனக்கும் தோன்றிய முதல் விஷயம், இதுவரை வந்த பல நல்ல புத்தகங்கள், இன்றைய தேதியில் படிப்பதற்குக் கிடைக்காத புத்தகங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது. அதனால் முதல் முயற்சியாக, கொஞ்சம் கடினமான பரிசோதனைதான் என்றாலும், நல்ல பழைய புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். முதலில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வர முயன்றோம். நான்காவது புத்தகத்தைக் கொண்டு வருவதில் சில பிரச்சனைகள் இருந்ததால், இந்த முறை சென்னை புத்தகச் சந்தைக்கு மூன்று புத்தகங்கள் கொண்டுவருகிறோம். அடுத்தடுத்து, இந்த வருடத்திற்குள் இன்னும் சில புத்தகங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். (more…)

மாதொருபாகனைத் தொடர்ந்து – பெருமாள்முருகன்

– உரையாடல்: எழுத்தாளர் பெருமாள்முருகன்

Alavayan arrhanari

மிழிலக்கியம் பயின்ற அரசுக்கல்லூரி விரிவுரையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெருமாள் முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவருபவர். மக்கள் கலாச்சார கழகம் வழியே மார்க்சிய ஈடுபாட்டு கொண்டவர், இலக்கிய பங்களிப்பாக ஏறுவெயில், திருச்செங்கோடு, கூளமாதாரி, மாதொருபாகன், பீக்கதைகள், நீர் மிதக்கும் கண்கள், நிழல்முற்றத்து நினைவுகள் என்று பெருமளவு கொங்குநாட்டு வட்டாரத்து வரலாற்றை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள், எட்டு கட்டுரை நூல்கள் மற்றூம் மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். சூழலை மீறி செயல்படும் உத்வேகத்துடன், திசைதெரியாத பெருங்குகைக்குள் வாசிப்பு என்னும் விளக்கோடு தொடர்ந்து பயணப்படுவதாக சொல்லும் பெருமாள் முருகனின் பயணத்தின் அடுத்த அடையாளமாக இரு புதிய நாவல்களை – ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி – 2015 புத்தக வெளியீட்டு விழாவிற்கு காலச்சுவடு கொண்டு வருகிறது. அதையொட்டி அவரோடு பதாகை நடத்திய மின்அஞ்சல் உரையாடல்.

பதாகை: நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?

பெருமாள்முருகன்: ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு  என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன். (more…)

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)