பேயோன்

பெரும்பாலும் குறுங்கவிதைகள், பேயோன்- ஒரு பார்வை

பீட்டர் பொங்கல்

கவிதை எழுதுவதை ‘thought crime’ ஆக குற்றவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லி, கவி பாடுவதை ஒரு குற்றச் செயலாகப் பேசுகிறது “பெரும்பாலும் குறுங்கவிதைகள்” தொகுப்பின் முன்னுரை. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஏறத்தாழ எல்லாரும் கவிதை எழுதுவதாக இதில் குறிப்பிடப்பட்டிருப்பதால், பேயோன் ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குற்றவாளிமயமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், “கவிதை ஓர் ஆயுதமாகக் கருதப்படாதிருக்க, சட்டபூர்வமான நடவடிக்கையாக மிஞ்சியிருக்க அதன் நிவாரண குணமே காரணம்,” என்றும் அவர் கூறிவிடுவதால் அதை ஆக்கப்பூர்வமான ஒரு சமூக பணியாகவே அவர் நம்புவதாகத் தெரிகிறது. “இதனால்தான் எல்லோரும் கவிதை எழுத வேண்டும்,” என்று அழைப்பும் விடுக்கிறார் அவர். இது தவிர, தானும் கவிதை எழுதுவதாகவும், இனியும் எழுதப் போவதாகவும் ஒப்புக் கொண்டிருப்பதால் கவிஞர்கள் விஷயத்தில் பிளாட்டோனிய கண்டனத்தைவிட, மனசாட்சி இன்னும் முளைவிடாத சிறுபிள்ளைச் சேட்டைகளை அதன் விபரீத பின்விளைவுகளைப் பொருட்படுத்தாது அங்கீகரிக்கும் சலுகை மனப்பான்மைதான் அவரிடம் வெளிப்படுகிறது. (இதே முன்னுரையில், லோகியா ஸார் பற்றி அவர் அளித்திருக்கும் பெருவிரல் சித்திரம் சுவாரசியமானது).

இனி கவிதைகள்.

குவியல்‘ அன்னியப்படுதலைப் பேசும் கவிதை. மனிதன் சமூக அங்கமாக இருக்கும்போதே அதில் தனியனாகவும் இருந்துகொண்டிருக்கும்போது அவனது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள ஏதோ ஒரு விபத்தின் காரணமாக அவன் அன்னியப்படுத்தப்பட்டு தன்னைத் தனியனாக உணர்வதை நினைவுபடுத்தும் கவிதை. இந்தக் கவிதை நம் எல்லோரிடமும் பேசுகிறது. இதனோடு ஒப்பு நோக்கப்பட வேண்டிய  கவிதை, “தனியன்“. துக்கத்தில் கண்கள் கலங்குகின்றன, கோபத்தில் நாசி விடைக்கிறது, பீதியில் வயிறு கலங்குகிறது (சிலருக்கு விரைகள் சுருங்குகின்றன என்கிறார்கள்)- இதயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்படி என் உணர்வுகளில் பங்கேற்கும் பல அங்கங்கள் என்னுள் இருந்தாலும் நானொரு தனியன்தானே, என்ற கேள்விக்கும், இவை எல்லாம் என்னை ஏன் ஒரு கூட்டுத்தொகையாய் உருவகப்படுத்தாமல் தனியனாய் கட்டமைக்கின்றன, என்ற கேள்விக்கும் இக்கவிதை இடம் தருகிறது. இவை இரண்டும் சிந்தனைக் கவிதைகள்.

சுகம்‘ என்ற கவிதை தம்பதியரிடையே நிகழும் சம்பாஷணைகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் வழக்கை நினைவுபடுத்தினாலும், அது அப்படியில்லை. வன்முறையின் வெறுமையை என்று சொல்ல முடியாவிட்டாலும், வலிமையான எதிர்வினைகளின் பிரயோசனமின்மையைப் பேசுகிறது. முள்ளம்பன்றிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு, நம் முட்கள் நம்மையும் குத்துகின்றன என்பதுதான்.

பொதுவாக பேயோன் எழுத்து வெறும் வார்த்தை விளையாட்டு என்பதாக ஒரு விமரிசனம் உண்டு. இதை ஏற்றுக் கொண்டாலும், இதில் பொருள் விளங்கும் நாட்டமும் இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறேன். சொற்கள் ஏதோவொரு பொருளில் குறிகள் என்று சொன்னால், அதன் குழப்பங்கள் சொற்களின் இயல்பு, பொருளின் இயல்பு என்று போய் நம் அனுபவத்தின் இயல்பையே கட்டம் கட்டுகின்றன என்பதை எப்படி என்று ஆய்வதில் பேயோனுக்கு அசாதாரண ஆர்வம் உண்டு. ‘பேசும் பலகை‘ அப்படிப்பட்ட கவிதை. இந்தக் கவிதையைப் படிக்கும் எவரும் “பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற பலகையை, பேயோன் போல் முத்தம் கொடுக்க முன்வராவிட்டாலும், கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட முடியாது. நம் நகர்ப்புற வாழ்வில் எத்தனை அவசரம் இருந்தாலும் ஒரு கணம் நிதானித்து நாம் இனி பூக்களைப் பார்த்துதான் ஆக வேண்டும். இது பூக்களுக்காகப் பேசும் கவிதை.

பேயோனின் வார்த்தை விளையாட்டில் பொருள் விளங்கும் நாட்டமும், அதாவது குறி- குறிக்கப்படுவது- குறியியக்கம் குறித்த ஆர்வமும், இருக்கிறது என்று முன்னொரு பத்தியில் எழுதியிருந்தேன். “நீர்” என்ற கவிதையில் அதைப் பார்க்கலாம். நீர் என்ன, பிரதிபலிப்பு என்ன, என்று நம்மைக் கேட்டுக் கொள்ளச் செய்யும் இந்தக் கவிதை, மொழியால் கட்டமைக்கப்படும் வாழ்வனுபவத்தை இலக்கண மோபியஸ் ஸ்ட்ரிப்புக்குள் போட்டுப் பார்க்கிறது. சொற்களின் பொருளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதானால், பேயோனின் எழுத்தில் பெரும்பான்மையானவை அவரது ஆன்டாலஜிக்கல் மற்றும் எபிஸ்டமாலஜிக்கல் அக்கறைகளை வெளிப்படுத்துகின்றன என்று சொல்லலாம். தத்துவ நாட்டம் கொண்டவர்களுக்கான கவிதை இது.

உதிர்தல்‘ என்ற கவிதையும் அதைத் தொடரும் சில கவிதைகளும் ஜென் போல் ஒலிக்கின்றன- அதாவது, புரிந்து கொள்ள முயற்சி எதுவும் செய்ய வேண்டாம், கற்பனை செய்யக்கூட முயற்சிக்க வேண்டாம், படித்த கையோடு அப்படியே உட்கார்ந்திருந்தால் போதும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளும் கவிதை. ஆன்மீக வறட்சியை உணரும் கணங்களில் தாராளமாய் இந்தக் கவிதையில் கால் நனைக்கலாம். இதன் அவல அழகியலையே. “வேர்” என்ற கவிதையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு கவிதைகளும் அழகுக் கண் கொண்டு மரணத்துக்கு பழிப்பு காட்டுகின்றன என்று சொல்லலாம்.

பொதுவாகவே துயரை மட்டுமல்ல, அசௌகரிய உணர்வுகளையும் சிரிப்பால் கடப்பது பேயோனுக்குக் கை வந்த கலை. “விரைதல்” என்ற கவிதை நம் கண் முன் எழுப்பும் சித்திரம் உரக்கச் சிரிக்க வைப்பது. ஆனால் இதை மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் அவர் எழுதியிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் நம் மனதில் மூலையில் எழுகிறது. “தரையில் பாவாத கால்கள்” என்று கைகளைச் சொல்வது அசாத்திய கற்பனை. கால்களால் நடந்த முதல் குரங்கு இப்படிதான் விரைந்திருக்க வேண்டும். இந்தக் கவிதையைப் பார்க்கும்போது விரைதல் மட்டுமல்ல, பறத்தலும் நம் உணர்வாகிறது. இது போன்ற கவிதைகள்தான் பேயோனின் ஜீனியசுக்கு கட்டியம் கூறுகின்றன.

மழை பெய்து குட்டை குட்டையாய் தண்ணீர் தேங்கியிருக்கும் சாலையில் இரவுப் பொழுதின் குளிரில் ஒரே ஒரு தெரு நாய் ஓடுகிறது – “நிலையாப் பிராண்டல்களை மழைக்குட்டைகளில் பதித்து” (மழைக்குட்டை). நிலையாப் பிறாண்டல்கள், எலும்பும் தோலுமாய் ஒரே ஒரு தெரு நாய், அனாமத்து ஒளிகள், புழுதியாய்ப் படரும் குளிர்க்காற்று, அரைகுறை நிலவு- நகரப்புரச் சூழலில் இப்படியொரு இருண்மை நிறைந்த காத்திக் காட்சியை, ஊதினால் பறந்து விடுவது போன்ற எடையற்ற சொற்களில் எழுத பேயோனைத் தவிர யாரால் முடியும்? இந்த ஊரில் வெட்டிப் போட்டாலும் கேட்க ஆளிருக்காது என்பது உறுதி.

இன்றைக்குக் காலையில்‘ என்ற கவிதை கணப்பொழுது கவிஞர்களின் உதவியில்லாமலேயே நிரந்தரமாகி விடுவதைப் பேசுகிறது. வழக்கமாக, “இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட நன்றாக இருந்த மனிதர்…” என்று யாராவது பேச வந்தால், “அச்சச்சோ ஐயோ பாவம், எப்ப எடுக்கறாங்க?” என்று கேட்கத் தயாராகி விடுகிறோம். ஆனால் பேயோன் அத்தகைய வம்புப் பேச்சுகளுக்குத் தீனி போடத் தயாராக இல்லை. இந்தக் கவிதையில் அவர் ஒரு ஜென் பாய்ச்சலில் நம் மனதை உறையச் செய்கிறார். அப்போது நன்றாக இருந்தவர் இப்போதும் நன்றாகத்தானே இருக்க வேண்டும்? அப்போதும் இப்போதாவதில் உள்ளது சூக்குமம். இதுவும் ஆன்மீக அன்பர்களுக்கான கவிதை.

Busonகு” என்ற கவிதையும் தலைப்பு மற்றும் புதிர்த்தன்மை காரணமாக இவ்வகைப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஆனால், இதே ஜென் பாவனையில் “போதும்” என்ற கவிதையைப் பேசலாம். தன்னை ஒரு ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் மகத்தானவற்றை நோக்கி பொடிநடையாய்ப் போய்க் கொண்டிருக்கையில் (“தினமும் கொஞ்சம் செஞ்சா 24*7*365 கணக்கு போட்டுப் பாருங்க, எவ்வளவோ சாதிக்கலாம் ஸார்!”) துறவு மனப்பான்மையை நினைவூட்டுகிறது இந்தக் கவிதை. அருவி, “ராட்சத நீர்த்துளி மூட்டம்” காட்டுகிறது என்ற கவித்துவம் பேயோன் கவிதைகளில் காணக் கிடைக்காத ஒன்று. அதனாலேயே இந்தக் கவிதை அவர் எழுதியவற்றில் அபூர்வமானதும்கூட.

பேயோன் அழகனுபவம் பேசும் கவிதைகளும் எழுதுகிறார் (“கூடத்துக் குருவிகளே“). பேயோன் பகடி செய்பவர் என்ற பிம்பத்தோடு இந்தக் கவிதையை வாசிப்பவர்களைத் தவிர பிறர், இது மனம் மேற்கொள்ளும் பாவனைகளை ரசிக்கிறது என்பதைக் கண்டு கொள்வார்கள். பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானியக் கவிஞர்களுக்காகப் பேசும் கவிதை. நாம் அந்த ஃபிரேமுக்குள் போய்தான் இதை ரசிக்க முடியும். இந்த வகையில்தான் “ஒப்பீடு” என்ற கவிதையும் சேர்கிறது. “கோடை நிலவை எதனுடன் ஒப்பிட?” என்ற கேள்வி தெளிவாகவே ஜப்பானிய ஹைக்கூகளை எதிரொலிக்கிறது. என்றாலும், “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்ற எதிர்க்கேள்வி நிலவொளியின் உன்மத்தங்களை மிகத் தெளிவாகவே நினைவூட்டுகிறது. “விளையாட்டு” என்ற அழகிய கவிதையோ ஒரு கன்றுக்குட்டி குதூகலமாய் இங்குமங்கும் ஓடுவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டும்போதே “சாலையின் பரபரப்பு லட்சியமில்லை” என்று துணுக்குறச் செய்கிறது. துணுக்குறச் செய்தல் மீயதார்த்த உத்திகளில் ஒன்று எனில், அதன் மிகைகளைத் தவிர்ப்பதில் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார் பேயோன். “நிலப்பரப்பு” என்ற கவிதையெல்லாம் சான்சே இல்லை (“ஆட்டோ எவ்வளவு கேட்பான்?“). பேயோன் மட்டும் பிரஞ்சுக்காரராக இருந்திருந்தால் நாலு புத்தக அளவு விமரிசனக் கட்டுரைகள் கிடைத்திருக்கும்.

காதல் கவிதைகளின் பிரகடனப்படுத்தப்படாத எதிரி பேயோன் என்பதால் காதல் கவிதைகளில் அவர் பிரமாதமாக அதிர வைக்கிறார். ‘மலர்ப்பாதை‘ இதற்கு நல்ல உதாரணம். நியாயமாகப் பார்த்தால் காதலியைப் பார்த்துப் பாடப்பட்டிருக்க வேண்டிய கவிதை, கடைசி வரியில் பிணத்தைப் பார்த்துப் பாடியதாக மாறி விடுகிறது. இப்போதும்கூட ஒன்றும் கெட்டு விடவில்லை, காதலர்கள் கடைசி வரியை மட்டும் எடிட் செய்து தங்கள் நல்நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யலாம். “கடத்தல்” என்ற கவிதையும் காதலர்களுக்காக எழுதப்பட்டது, பாடை வரும் வரிகளை நீக்கிப் பயன்படுத்துவது நல்லது (“இந்தப் பாடையைப் போல்/ என்னைச் சுமந்து செல்லேன்“). காதலையும் மரணத்தையும் பேயோன் ஒருசேர தொடர்புறுத்துவது ஃபிராய்டியர்களின் கவனத்துக்குரியது, எனவே அவர்களுக்கும் பேயோன் கவிதைகளைப் பரிந்துரைக்கிறேன்.

பேயோனின் அழகனுபவ கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பெரும்பாலும் நினைவுபடுத்துகின்றன. எனவே, இது ஜென் கவிதை மாதிரி, இது அழகனுபவ கவிதை மாதிரி என்று வகைப்படுத்துவது ஒரு வசதிக்குத்தான். அழகு என்றாலே நிலவுதானே, அதனால்தான், “விடாமல் பெய்த இரவு மழையால் நிலவைப் பார்த்து நாளாயிற்று,” என்று வருந்துகிறார் பேயோன் (“கணக்கு“). அப்புறம், “இருந்தாலும் நஷ்டமில்லை,” என்று உடனே விஷயத்தை முடிவுக்கும் கொண்டு வந்து விடுகிறார். சாதாரண விஷயம் மாதிரிதான் இருக்கிறது. டூரிஸ்டு கைடுகளில் டிக் அடித்துக் கொண்டே பார்க்க வேண்டிய இடம் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்லும் கூட்டங்களைப் பற்றி கதைகளில் படித்திருப்போம், நிலவை ரசிப்பது அப்படியெல்லாம் கணக்கு பண்ணக்கூடிய சம்பிரதாய அனுபவமல்லவே. இந்தக் கவிதை, நிலவைப் பார்க்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்று மட்டும் சொல்லவில்லை, என்ன எழவுக்கு இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்கிறாய், என்றும் கேட்கிறது.

ஜென் மனநிலைகளைப் பேசுவதால் பேயோனை ஒரு ஜென் கவிஞர் என்று நம்பிவிட முடியாது. பேயோனும் நம்மைப் போல்தான் என்பதை “எத்தனை” என்ற கவிதையில் காணலாம். எவ்வளவு சீக்கிரம் லோகக்ஷேமம் குறித்த கவலைகள் லோகாயத படுகுழியில் வீழ்ந்துபடுகின்றன என்பதைச் சித்தரிக்கும் கவிதை இது. பொதுவாக, பேயோன் அறச்சாயங்கள் பூசிக் கொள்வதில்லை, அப்படியே விளையாட்டாய் பூசிக் கொண்டாலும் அவை உடனடியாகக் கரைந்து விடுகின்றன என்பது ஆறுதல். ஹவுசிங் லோன் போட்டு வீடு வாங்கியவர்கள் இந்தக் கவிதையைப் படிக்கலாம்.

ஒரு ரோஜா ஒரு ரோஜா ஒரு ரோஜா” (A rose is a rose is a rose) என்று ஜெர்ட்ரூட் ஸ்டீன் கூறியது உலகப் பிரசித்தம். ரோஜா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணை ரோஜா என்று அழைக்கும்போது ரோஜாவை ரோஜா என்று அழைக்கிறோம். அதனால் ரோஜா ஒரு ரோஜா. ரோஜா ஒரு ரோஜா என்று சொல்லும்போது ரோஜாவைப் பேசுகிறோம், எனவே ரோஜா ஒரு ரோஜா என்பதும் ரோஜாதான், என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைப் படைக்கும்போது அது படைப்பாகிறது. அதற்கடுத்த நிலையில், ஒரு படைப்பைப் படைப்பு என்று சுட்டும்போது, அந்தச் சுட்டுதலே ஒரு படைப்பாகிறது. மேற்கண்ட வாக்கியத்தை ஸ்டீன் எழுதியதே “Composition as Explanation” கட்டுரையில்தான் என்பதால் இதை எல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலையாக தயவு செய்து நினைக்க வேண்டாம். ஸ்டீனுக்கான எதிர்வினையை பேயோன் எவ்வளவு அழகாக நிகழ்த்துகிறார் பாருங்கள்-

ரோஜாக்கள்

ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ

என்று எழுதுகிறார் அவர். வார்த்தை விளையாட்டு மாதிரிதான் தெரிகிறது, ஆனால் சொற்கள் பொருள் கொள்ளும் திறனைச் சோதித்துப் பார்க்கிறார். ஸ்டீன் எழுதுவதோடெல்லாம் ஒப்பிடுவதா என்றால் பேயோனை அந்த ரேஞ்சில்தான் பேச வேண்டும். அதற்கு முன்னால் அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும், தமிழர்களும் பேயோனையும் ஸ்டீன்களையும் இன்னும் கவனமாக வாசிக்க வேண்டும்.

ஆனால் பேயோனிடமும் குறைகள் இருப்பதை இதே மூச்சில் சொல்லி விடுகிறேன்- “அதுதானோ?” என்ற கவிதை எபிஸ்டமிக் நாட்டம் கொண்டவர்களை சந்தோஷப்படுத்தலாம். மற்றபடி இது பேயோனின் மறக்கப்படக்கூடிய கவிதைகளில் ஒன்று என்று நினைக்கிறேன் (காலம் வளர்கிறது, உருவம் சிதைகிறது என்ற வாசிப்புக்கு “வளர்சிதை மாற்றம்” என்ற பயன்பாடு இடம் கொடுக்கிறது. ஆனால் கவிதைக்கு புத்திசாலித்தனம் போதுமா, அதைவிட முக்கியமாக, தேவைதானா?). பேயோனின் எபிஸ்டமிக் நாட்டத்துக்கு இது என்றால், ‘போக்குவரத்து‘ அவரது ஆன்டாலஜிக் தேடலின் பிரதிநிதியாகிறது. “சுற்றி என்னென்னவோ நடக்கிறது மூச்சு மட்டும் அது பாட்டுக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறது” என்பதுதான் கவிதை. இந்த விஷயத்தில் என்னதான் நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக இருந்தாலும், “எதிர்காலம் கேள்விக்குறி” என்ற கவிதையும் ஆன்டாலஜிக்தான் (“என் வீடெங்கே?/ நேற்றும் இன்றும் பார்த்த நாங்கள்/ நாளைக்கும் இருப்போமா?“)

பேயோனிடம் நமக்குப் பிடிக்காத முகம் ஒன்று இருக்கிறது – அவ்வப்போது வெளிப்படும் இந்த முகம் மனிதர்களைக் காணச் சகியாமல் முகம் திருப்பிக் கொள்கிறது. ஆங்கிலத்தில் மிசாந்திரோப்புகள் என்று இவர்களைச் சொல்வார்கள். பேயோனும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்க முடியும் என்பதை, “இவ்வுலகு” என்ற கவிதை நினைவூட்டுகிறது, பேயோன் விஷயத்தில் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.. இதே மிசாந்திரோப்பிக் கவிதை வரிசையில்தான் அடுத்து வரும் “அதிகாலைகள்” என்ற கவிதையையும் தொகுக்க வேண்டும்- “அதிகாலைகள் அழகாய் இருக்கக் காரணம் மனிதர்கள் அதிகம் கண்ணில் படாமை” என்ற நேரடி அறிவிப்பு இது. நண்பர் ஒருவர் எதைக் காட்டினாலும், “இது எப்படி கவிதையாகிறது?”, என்று கேட்பது நினைவுக்கு வருகிறது. இதே செய்தி, “விஷயம்” என்ற கவிதையில் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு தேர்ந்த அங்கதத்தை நாம் பார்க்கிறோம் (“பாவம், சாருக்கு விஷயமே தெரியாது“) புத்தாண்டு வாழ்த்துகளுக்கு எதிரான “வாழ்த்து” என்ற கவிதை அப்பட்டமான, வெட்கமேயில்லாத மிசாந்திரோப்பி.

பேயோனின் மிசாந்திரோப்பிக் இம்பல்சுகளுக்கான அரங்காக அவரது சமூக நலக் கவிதைகள் இருக்கின்றன. தெருவின் ஒரு கோடியில் இருக்கும் பேயோனுக்கு மறு கோடியில் நிற்பவன் மீது என்ன புகார் இருந்து விட முடியும்? இருந்தாலும், “தெருக்கோடிக்காரனின் பீடிப்புகை இக்கோடியில் சூழ்கிறது என்னை” என்று குற்றம் சாட்டுகிறார் அவர் (“போல“). சக மனிதன் புகைத்து மறு சுழற்சிக்கு விடும் சிகரெட் பீடிப்புகை இரண்டாம் நிலை புற்று நோய்க்கு வித்திடும் அபாயம் உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், “ஒளியாண்டுகளுக்கு முன்பு மரித்த/ நட்சத்திரங்களின் வெளிச்சம் போல” என்று பாரனாய்ட் லெவலில் இது குறித்து கவலைப்படுகிறார் அவர். “முழம் பத்து ரூபாய் கிடைப்பதோ இத்தனூண்டு” என்று தன் காதலி அல்லது மனைவியின் கூந்தலில் மல்லிகை மலர்களைச் சூட்ட முடியவில்லையே என்று அதன் (கூந்தலின்) அளவு குறித்து கவலைப்படுகிறார் (“முழம்“). இதில் மிக நுட்பமாக தன் காதலி/ மனைவியை விமரிசித்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவரை மிசொஜினிஸ்டிக் என்றும்கூட அடையாளப்படுத்தலாம் (கல்லெறிபவர்களுக்கு வசதியாக). ஆனாலும் பேயோன் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. “மழை இரவு” அதன் அழகிய வர்ணனைகள் மற்றும் இறுதி துணுக்குறல் (“குடிபோதையின் பெருங்குரலில்/ பாலும் பழமும் பாடுகிறான்/ ஒரு லூசுக்கூ“) என்று எங்கும் மிசாந்திரோப்பி விரவியிருந்தாலும் நம்மில் ஒரு வன்மையான எதிரொலியை எழுப்பி தன்னை ஓர் உயர்ந்த கவிதையாக நிறுவிக் கொள்கிறது.

இனி உதிரிக் கவிதைகள்.

இவை தவிர உதிரியாக இரு கவிதைகளில் ஆளில்லாக் கிழவன் வருகிறான். ஒன்றில் “இரவின் வாராவதி மேல்” காத்திருக்கிறான் (‘நினைவாக’), இன்னொன்றில், “வரப்பிடை ஒற்றையடிப் பாதையில்” நடந்து சென்று கொண்டிருக்கிறான் (“கடைசி ஒளி“). இரண்டு கவிதைகளும் எனக்குப் புரியவில்லை, சமகால இலக்கிய கவிதையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இது குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது.. “விபத்துகள்” என்ற தொகுப்பிலேயே நீண்ட கவிதையும் எழுதி பார்த்த கவிதை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சிலருக்கு அதில் ஒரு தனி வசீகரம் இருக்கலாம். கவிதையாகக் குறை சொல்ல முடியாது, ஆனால் பேயோன் கவிதையாக முத்திரை குத்த முடியுமா என்பது தெரியவில்லை. “தேநீர் எறும்பு” மற்றுமொரு உதிரிக் கவிதை. இது எறும்பு விழுந்த தேநீரில் கைபடாமல் எறும்பு நீக்கி அருந்தும் சாகசத்தை விவரிக்கிறது (“கண்ணாடிச் சுவரில்/ சமைந்து நிற்கிறது எறும்பு“- சப்பாடாகியிருக்க வேண்டும் போல). “கனல் தாரகை மதியத்திலே” எழுதிப் பார்த்த கவிதையாய் இருந்திருக்க வேண்டும் (“ஜன்னலடியான் என் மீதுன் பார்வை படுமோடி?”) அது போலவே “ஈக்களைப் பற்றி ஒரு/இரு கவிதை(கள்)” மற்றுமொரு சோதனை முயற்சி, இன்னும் தொடர்ந்திருக்கலாம், என்ன ஒன்று, தலைப்பைக் கொஞ்சம் மாற்ற வேண்டியிருந்திருக்கும்.

பேயோன் கவிதைகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு ஒரே மூச்சில் வாசிப்பதில் தோன்றும் உணர்வை ஒற்றை வரியில் தொகுத்துச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்- பேயோனின் எழுத்தில் பொறி தெறிக்க உரசிக் கொள்ளும் மொழி, நம் நகைப்புக்குரிய நிழலிருப்பை, சொற்களும் கருத்துவாக்கங்களும் போர்த்து மறைக்கும் அதன் இருண்ட வார்ப்புருக்களிலிருந்து கெல்லி கணப்பொழுது சுடரொளியில் வெளிச்சமிட்டு,  மௌனியின் புகழ்பெற்ற “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற கேள்வியை, “எவற்றின் நடமாடும் பகடிகள் நாம்?” என்று மாற்றிவிடுகிறது.

பெரும்பாலும் குறுங்கவிதைகள்- பேயோன்
மின்னூல், freetamilebooks.com 
விலையில்லாப் பதிப்பு

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)