அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.
காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.
சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார். (more…)