அன்றைக்கு ஒரு பயங்கரமான செய்தி மடாலயத்தை வந்தடைந்தது. லாமா குறிப்பிட்ட அதே கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் ஒரு காட்டெருமை தாக்கியிருக்கிறது. ஊருக்குப் பொதுவாக இருந்த கதிரடிக்கும் களத்திற்கு அருகில் நடந்த ஊர்ப் பெரியவர்களின் கூட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பேரை, முன்தினம் மாலை அங்கு வந்த காட்டெருமை கொன்றிருக்கிறது. தலைமை லாமாவைச் சந்தித்து அந்த விலங்கை அழிக்கவும் அந்த முரட்டு மிருகத்தைப் பீடித்திருந்த துராத்மா நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யவும், தலைமை லாமாவை கேட்டுக் கொள்வதற்காக கிராமத்தவர்கள் ஒரு குழுவை அனுப்பியிருந்தார்கள். இருபத்து நான்கு மணிநேரத்தில் அந்த மிருகத்தை கொல்லக்கூடிய வழிவகையைச் செய்வதாக லாமா சொன்னார். “எல்லயற்ற கருணையின் அன்புக்கு பாத்திரமானவர்களே, அமைதியோடு வீட்டிற்குச் செல்லுங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். அந்தி சாய்ந்த பின் வீட்டிற்கு வெளியே வராதீர்கள். வீட்டிலேயே இருந்து, அமைதியையும் துணிவையும் தியானம் செய்யுங்கள்”. அங்கே இருந்த கோண்ட் அவர்களிடம், “இந்த மிருகம் எவ்வளவு நாட்களாக உங்கள் கிராமத்தில் தொல்லை கொண்டிருக்கிறான்?” என்று கேட்டார். அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருமே அந்த மிருகம் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். அது அவர்களுடைய வசந்தகாலப் பயிரில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சாப்பிட்டுவிட்டிருந்தது. மீண்டும், அந்த காட்டெருமையை அழிக்கவும் தம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை வேண்டிவிட்டு, அவர்கள் கிராமத்தை நோக்கி கீழே இறங்கினார்கள்.
அந்தக் குழு சென்ற பின்னர், அருகில் நின்று கொண்டிருந்த கோண்டை நோக்கி, “வெற்றியால் தேர்வு செய்யப்பட்டவனே, இப்போது நீ குணமடைந்துவிட்டதால், அங்கே போய் அந்தக் கொலைகாரனை அழித்துவிடு” என்றார்.
“ஆனால்… குருவே”
“இனியும் பயப்பட வேண்டியதில்லை, கோண்ட். உன்னுடைய தியானங்கள் உன்னைக் குணப்படுத்திவிட்டன. இவற்றிலிருந்து என்ன பெற்றாய் என்பதை, இந்த வாய்ப்பை வைத்துக் கொண்டு காட்டிற்குப் போய் சோதித்துப்பார். தனிமையில் மனிதர்கள் பெற்ற சக்தியையும் சமநிலையையும் ஜனத் திரளில் சோதித்துப் பார்ப்பது கட்டாயம். இப்போதிலிருந்து இரண்டு சூரிய அஸ்தமனத்திற்குள் நீ வெற்றியோடு திரும்ப வேண்டும். உன்னுடைய வெற்றியின் மீது எனக்கு இருக்கும் மாறாத நம்பிக்கைக்காக இந்தப் பையனையும் அவனுடைய புறாவையும் உன்னோடு அழைத்துப் போ. உன்னுடைய சக்தியின் மீதோ இந்தக் காரியத்தில் உன்னுடைய வெற்றியின் மீதோ எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் ஒரு பதினாறு வயதுப் பையனை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல சொல்லியிருக்கமாட்டேன். அந்தக் கொலைகாரனை நீதிக்கு முன்னால் நிறுத்து” என்றார் தலைமை லாமா.
அன்று மதியம் நாங்கள் காட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒரு இரவை காட்டில் கழிக்கப்போவாதை நினைத்து நான் உற்சாகமடைந்தேன். முழுமையானவர்களான கோண்டுடனும் வண்ணக்கழுத்துடனும் காட்டுக்கு, மீண்டும் ஒரு காட்டெருமையைத் தேடிச் செல்வது எத்தனை இன்பம். இது மாதிரியான ஒரு வாய்ப்பை வரவேற்காத சிறுவனும் இந்த உலகத்தில் இருப்பானா?
ஆக, நிரம்பி வழியும் உற்சாகத்துடன், கயிற்று ஏணி, ஒரு சுருக்குக் கயிறு, கத்திகளை எடுத்துக் கொண்டு, வண்ணக்கழுத்தை என் தோளில் ஏற்றிக் கொண்டு நாங்கள் கிளம்பினோம். ஆங்கிலேய அரசாங்கம், சாதாரண இந்திய மக்கள் நவீன ஆயுதங்கள் தரிக்க பயன்படுத்த தடை போட்டிருப்பதால், நாங்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளவில்லை.
மதியம் மூன்று மணி சுமாருக்கு மடாலயத்திற்கு வட மேற்கே இருக்கும் அந்த கிராமத்தை அடைந்தோம். அந்த எருமையின் கால்தடத்தைக் கண்டுபிடித்தோம். அடர்ந்த காட்டுக்குள்ளும், அகன்ற பாதைகளிலும் அதைத் தொடர்ந்தோம். அங்குமிங்கும், ஓடையை கடக்கவும், கீழே விழுந்திருந்த ராட்சத மரங்களைத் தாண்டவும் வேண்டியிருந்தது. காட்டெருமையின் கால் குளம்புகளின் தடங்கள் அசாதாரணத் தெளிவுடனும் ஆழமாகவும் தரையில் பதிந்திருந்தன.
கோண்ட் சொன்னார், “இங்கே எவ்வளவு கடுமையாக இந்த மிருகம் உழன்றிருக்கிறது என்று பார். அது மரண பயத்தோடு இருந்திருக்க வேண்டும். மிருகங்கள் அச்சமில்லாத நிலையில் மிகக் குறைவான தடங்களையே விட்டுச் செல்லும். ஆனால், மிரண்டு விட்டால், சாவு பயம் ஒட்டுமொத்தமாக தங்கள் உடலை அழுத்துவதைப் போல நடந்து கொள்ளும். இவனுடைய கால் குளம்புகள், அவன் போன இடங்களில் எல்லாம் ஆழமாகவும் தெளிவாகவும் இறங்கியிருக்கின்றன. ரொம்பவே மிரண்டு போய் இருக்கிறான்.”
கடைசியில் நாங்கள் கடக்க முடியாத ஒரு ஆற்றை அடைந்தோம். கோண்டைப் பொறுத்தவரை அதனுடைய ஓட்டம், அதில் இறங்கினால் எங்கள் கால்களை உடைத்துவிடும் அளவிற்கு கூர்மையானவை. அந்த எருமையும் கூட அதைக் கடக்க முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அதனால், நாங்கள் அந்த மிருகத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு நதிக்கரையில் அதன் கால் தடங்களைத் மேலும் தேடினோம். இருபது நிமிடங்களில் அந்தக் காலடித்தடங்கள் ஓடையின் கரையில் காணாமல் போய், கரியைப் போல இருண்ட அடர்ந்த காட்டிற்குள் சென்றது, இப்போது மணி மாலை ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த வயதுடைய காட்டெருமைக்கும் கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வர அரை மணிநேர ஓட்டமே போதும்.
“உனக்கு இந்த தண்ணீரின் பாடல் கேட்கிறதா?” என்றார் கோண்ட். பல நிமிடங்கள் கவனித்துக் கேட்ட பின்பு, தண்ணீர் கோரைப் புற்களையும் அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மற்ற புற்களையும் முத்தமிட்டபடி எழுப்பும் கல கல ஒலியையும் முனகல் ஒலியையும் கேட்டேன். அந்த நதி ஓடி இறங்கும் ஏரியிலிருந்து இருபது அடி தொலைவில் இருந்தோம். “அந்தக் கொலைகார எருமை இந்த இடத்திற்கும் அந்தக் காயலுக்கும் நடுவில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கலாம்”, என்றார் கோண்ட். ”அங்கிருக்கும் இரட்டை மரங்கள் ஒன்றில் தங்குவோம். இருட்டிக் கொண்டு வருகிறது. சீக்கிரமே அந்த மிருகம் கண்டிப்பாக இங்கே வரும். அது வரும் போது, நாம் காட்டின் தரையில் இருக்கக் கூடாது. அந்த மரங்களுக்கு இடையே நான்கு அடி கூட இடைவெளி இல்லை.”