மித்யா

அமேஸான் காடுகளிலிருந்து: 9- விடுதலை

மித்யா 

“தன் புதல்வியைக் காப்பாற்றியதற்கு பரிசாக எனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ராஜா தயாராக இருந்தார். ஆனால், எனக்கு பணத்தில் நாட்டம் இல்லை. வெளி கிரகத்து மனிதர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. ராஜாவிடம் சிறிது பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் நாடு முழுவதும் அலைந்தேன். காடுகள் இருக்கும் பகுதிகளுக்கெல்லாம் சென்றேன். அங்குள்ளவர்களை தீர விசாரித்தேன். எந்த ஒரு காட்டுப் பகுதியிலும் ஏதும் மர்மமான சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திரிந்து திரிந்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அப்பொழுதுதான் அலிஸ்சை சந்தித்தேன். என்னை மொழிபெயர்க்க கூப்பிட்டிருந்தார்கள். என்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆங்கில புலமையும் கண்டு இவள் வியந்தாள். அவளை என் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாள். எனக்கும் ஊர் ஊராகத் திரிந்து ஓய்ந்துவிட்டிருந்தது. ஒரிடத்தில் இருந்தால் நல்லது என்று தோன்றியது. நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு நாள் சிலர் உலகில் வேறொரு இடத்தில் உள்ள காட்டைப் பற்றியும் அங்கு சென்ற உலகிலேயே சிறந்த சாகசக்காரர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவர் கோர மரணம் அடைந்ததையும், ஒருவன் மட்டும் அந்தக் காட்டுக்குள் சர்வசாதாரணமாக சென்று வருவதாகவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். ஆலிசை கூப்பிட்டு இதைப் பற்றி தீர விசாரிக்கச் சொன்னேன். எல்லா விவரங்களையும் அறிந்தபின் ஆலிசிடம், நாம் இங்குச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். அவளுக்கு இந்தப் பின்கதை தெரியாது. ராஜாவிடம் சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்தேன். மற்ற வேலைகளை ஆலிஸ் கவனித்தாள். அப்படியாக நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று கதையை முடித்தான் இந்தியன். (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 8: பச்சை மாமலை போல் மேனி

மித்யா 

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ” நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். வெளியில் நின்றுகொண்டு இருப்பவர்கள் மூச்சைச் சட்டென்று உள்ளிழுக்கும் ஓசை கேட்டது. ஓரிருவர் பின்வாங்குவது போல் தெரிந்தது.

ஏன் சிரிக்கிறாய்?”

நீ கள்ளம் கபடம் இல்லாதவர் வேண்டும் என்று கேட்கிறாய். அது போல் இந்தப் பூவுலகில் நான் யாரையும் பார்த்ததில்லை. உனக்கு எப்படி கிடைப்பார்கள்?. ஹிமய மலையில்தான் நீ போய் பார்க்க வேண்டும். அங்குதான் ஆசை துறந்த முனிவர்கள் கிடைப்பார்கள். இங்கு அது சாத்தியமில்லை”

எங்களுக்கு முனிவர்கள் வேண்டாம். சாதாரண மனிதர்கள்தான் வேண்டும்”

ஆனால் சாதாரண மனிதர்களுக்கு ஆசை அதிகம்”

ஆசை இருப்பவர்கள்தான் எங்களுக்கு வேண்டும். ஆசை, மகிழ்ச்சி, வீரியம், கோபம், உந்துதல் இவை எல்லாம் எங்களுக்கு ஏற்றவையே. ஆசை இல்லாமல் எதுவும் முன்னகராது. ஏதோ படைக்க வேண்டும் என்ற ஆசை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையை ஒட்டி வரும் உழைப்பு. அந்த உழைப்பினால் வரும் முன்னேற்றம். இவை எல்லாம் முனிவர்களால் வராது. நாம் முன்னேற வேண்டும் என்றால் சாதனை படைக்கும் உள்ளம் தேவை. அதற்குள் ஓர் ஆசை துளிர்விட வேண்டும். அதனால் நாங்கள் ஆசையை வெறுப்பதில்லை. ஆசையில், சாதிக்க வேண்டும் என்ற வெறியினால் உருவாகும் குரோதம், பகை போன்றவற்றை வெறுக்கிறோம். ஆசை இருந்தும் கள்ளம் கபடம் இல்லாதவர்களைத் தேடுகிறோம்” (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?” (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள். (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 5: இந்தியன்

 மித்யா

“ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றாள் அந்த தேவதை.

அவள் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். திருமணத்திற்கு கிறிஸ்துவர்கள் அணியும் கவுன் போல் இருந்தது. இவ்வளவு பெரிய கவுனை இந்தப் பிரதேசத்தில் அவள் அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கு எப்பொழுதும் புழுக்கமாக இருக்கும். இவளுக்கு இந்த கவுனை அணிந்தால் வெந்து போகாதா? அவள் ஒரு வெள்ளை தொப்பி அணிந்திருந்தாள். அதன் ஓரம் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்தது. லேசில் உள்ள சின்ன சின்ன ஓட்டை வழியாக சூரிய கிரணங்கள் அவள் முகம் மேல் திட்டு திட்டாக படிந்திருந்தன. தொப்பி அவள் முகத்தை ஓரளவுக்கு மறைக்க, லேஸ் வழியாக விழுந்த வெளிச்சம் அவள் முகத்தின் பிரகாசத்தை அதிகரித்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் அவள் மேல் கிறிஸ்டோ காதல் கொண்டான்.

“மிஸ்டர் கிறிஸ்டோ” (more…)