மேகனா சுரேஷ்

வலி

 மேகனா சுரேஷ்

“ம்மா… முடியலையே அம்மா…’’  தன் இரு தொடைகளையும் கரங்களால் இழுத்துப் பிடித்திருந்த தேவி வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

“தோ… சும்மா கத்திகிட்டே இருக்காம முக்குமா… தலை முன்னாடி தெரியுது. கத்திக்கிட்டே இருந்தா மட்டும் உனக்கு பதிலா உன் புருசனா உன் குழந்தைய முக்கி பெக்க முடியும்?’’

இடுப்பை இரண்டு துண்டாய்ப் போடும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்த தேவி, கீழ் உதட்டை பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு, “ஐயோ முடியலையே…’’ என அதற்கும் அலறினாள்.

“நீ எல்லாம் சரிப்பட மாட்ட. இரு இரு இப்பவே பெரிய நர்ஸ் அம்மாகிட்ட சொல்லி 108 க்கு போன் போட சொல்றேன். உங்களுக்கு எல்லாம் பெரிய ஆஸ்பத்திரிதான் லாயக்கு. நாங்க எல்லாம் பொறுமையா சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க… அங்க போயி பட்டாதான் உனக்கு புத்தி வரும்.’’

தன் கையுறையை அந்த வெள்ளைச் சீலைப் பெண்மணி அகற்றப் போக, “அக்கா… நீங்க சொல்றது எல்லாம் கேக்குறேன்க்கா… தயவு செஞ்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடாதீங்க அக்கா…’’

அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தேவிக்கு, போன பிரசவத்தின்போது பெரிய ஆஸ்பத்திரியில் அனுபவித்த வேதனைகள் கண் முன் வந்து போனது.

அந்த நினைவுகள் தந்த வேகத்தில், மூச்சை இழுத்துப் பிடித்து, தன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒரே தள்ளாக வெளியே தள்ளினாள். ஒரு நிமிடம்தான். ஒரே நிமிடம்தான்.

பத்து மாத பாரத்தை வெளியே இழுத்து எடுத்திருந்தாள் அந்த வெள்ளைச் சீலைக்காரி. அத்துணை நேரம் இடுப்பைப் பிளந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

இடுப்பின் கீழே விரிக்கப்பட்டிருந்த துணி முழுவதும் நனைந்து போய் உடலுக்குள் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்க, தேவகானமாய் குழந்தையின் அழுகுரல்.

தடுப்புக்குப் பின்பக்கத்தில் இருந்து அம்மாவின் மெல்லிய குரல், “என்ன புள்ள அக்கா..’’ எனக் கேட்பது, பிரசவ கட்டிலில் படுத்திருந்த தேவிக்கு தெளிவாக கேட்டது.

“இந்தாமா மொதோ போயி பெத்து பிளச்சவளுக்கு காபி தண்ணி வாங்கி ஆத்திக் கொண்டாமா… இன்னும் சத்தை எடுக்கணும். அதுக்குள்ள வந்துடுவீங்க என்ன புள்ள யாரு புள்ளன்னு கேட்டுகிட்டு…’’

அடுத்த பத்து நிமிடத்தில் வெதுவெதுப்பாய் தொண்டைக் குழியில் காபி இறங்க, ஒட்ட வைத்த நெற்றிப் பொட்டை உரித்து எடுப்பதைப் போல, அந்த வெள்ளைச் சீலைக்காரி தேவியின் உடலில் இருந்து சத்தையை பிரித்து எடுத்து இருந்தாள்.

வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த செவிலி அவள் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, “ என்ன குழந்தை சிந்தாமணி…. குழந்தை பிறந்த நேரம், வெயிட் எல்லாம் சொல்லு… நான் ரெகார்ட் எழுதணும். அப்படியே அந்தப் பொண்ணோட புருஷனை ஒரு ஐ.டி ப்ரூப் எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வர சொல்லு… நாளைக்கு பர்த் சர்டிபிகேட் கொடுக்கும்போது இது என் இனிசியல் இல்ல, இது எங்க வீட்டு நம்பர் இல்லைன்னு ஆயிரத்தெட்டு கரக்சன் சொல்லுவாங்க.’’

பேசி முடித்த செவிலி மீண்டும் அங்கிருந்து விலகிச் செல்ல, தேவி தன் அருகில் இருந்த வெள்ளைச் சீலைக்காரியிடம், “அக்கா… என்ன பிள்ளக்கா?’’ என ஆவலாய்க் கேட்டாள்.

குழந்தையின் உடலைச் சுற்றி வெள்ளை துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்த அவள், “மொதோ குழந்தை என்ன..?’’ என தேவியிடமே கேள்வியை திருப்பினாள்.

“பொட்டப் பிள்ளைக்கா…’’ தேவி சற்றே அயர்ச்சியாய் பதில் அளித்தாள். குழந்தையைத் துடைத்து முடித்தவள், பதில் ஒன்றும் பேசாமல் குழந்தையை தேவியின் அருகே வைத்து விட்டு, “பாலைக் கொடு… அப்போதான் தீட்டு போறது குறையும்..’’ என்றுவிட்டு அந்த அறையில் இருந்து விலகி நடந்தாள். சற்றே ஒருக்களித்துப் படுத்த தேவி, குழந்தையை மூடி இருந்த துணியை சற்றே விளக்கி பார்த்தாள்.

அவளையும் அறியாமல் அவள் விழிகள் நீரால் நிரம்பின.

பொது அறைக்கு மாற்றிய பிறகும், சொந்த பந்தம் என்று யாரும் பெரிதாய் பார்க்க வரவில்லை. “முதல்ல குழந்தைக்கு துணி வாங்கிப் போடுங்க..’’ என செவிலிப் பெண் பத்து முறை கத்தி விட்டு போன பின் முதல் குழந்தை நித்தியாவின் பழைய சிறிய உடை ஒன்றை, அம்மா அணிவித்திருந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ளியது. “பொட்டப்பிள்ள தானா…. எதை தின்னா என்ன? வீட்ல இருந்து பழைய சோறு நீரை வடிச்சி எடுத்தாந்து இருக்கேன். குடி. உம் புருஷன் பொண்ணுன்னு சொன்னதுதான், மூஞ்ச திருப்பிட்டு போயிட்டான். ஆட்டோ ஓட்ற துரைக்கு அம்பானின்னு நினைப்பு. இங்க வேற பிரசவம் பாத்தவங்களுக்கு காசு தரணுமாம். நான் வூட்டு வேலை செய்யிற தாவுல போயி அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன். அப்படியே பழைய துணி கிடச்சாக்கூட நல்லா இருக்கும். நித்திய ஒரு கண்ணு பாத்துக்கோ.’’

அம்மா கிளம்பிச் சென்றுவிட்டாள். குழந்தை பாலுக்காய் சிணுங்கியது. அதற்கு பாலைத் தூக்கி தர எழும்போதே, நித்தியா மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

“ஏய் நித்யா…. இங்க வா….’’

“வரலை போ’’

“தங்கச்சி பாப்பா பாரு வாடி…’’

“எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். தம்பி பாப்பா தான் வேணும்..’’

“ஏய் நித்யா உள்ள வா..’’

‘மாட்டேன் போ. தம்பி பொறந்தாதான் எனக்கு எல்லாம் வாங்கி தருவானாம். தங்கச்சி எனக்கு உள்ளதையும் பிடுங்கிக்குமாம்…. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். அதை நீ யாருக்காச்சும் வித்துடு போ’’

“நித்யா..’’ தேவி ஒரே நிமிடத்தில் உடைத்து அழுதாள். உயிரே இற்று வெளியே விழுந்து விடும் போல ஏங்கி ஏங்கி அழுதாள்.

“இந்தாமா இப்படி அழுதினா ரத்தப்போக்கு அதிகமாயிடும்… வாயை மூடுமா..’’ அதட்டிய வெள்ளைச் சீலைக்காரியின் வார்த்தைகள் தேவியின் செவிகளை தீண்டவே இல்லை.

சதைகளைக் கிழித்துப் போடும் வலியை விட, உணர்வுகளை கிழித்துப் போடும் வார்த்தைகள் தரும் வலிக்கு திடம் அதிகம் போல, தேவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.

அம்மாவின் அழுகை நித்தியாவை தாக்க, அருகில் ஓடி வந்து தானும் அழத் தொடங்கினாள்.