மொழியாக்கம்

வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளல் – சூசன்னா லிப்ஸ்கோம்ப்

– பீட்டர் பொங்கல் –

800px-statue_of_oliver_cromwell_outside_the_palace_of_westminster

சரித்திரப் புனைவு படைக்கும் எழுத்தாளர்கள் கையாளும் தரவுகள் துல்லியமானவை, அவர்களது வரலாற்றுப் பார்வை துல்லியமான சித்திரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சித்திரத்தை அவர்கள் அளிப்பார்கள் என்றால், அவர்களது நாவல்கள் நம் இதயத்தின் வேட்கையை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கைக்கு நாம் இடம் கொடுக்கலாம்: கடந்த காலத்தின் ஆவிகளுடன் ஓர் உரையாடல், வரலாற்று மாந்தரை நேருக்கு நேர் எதிர்கொள்ளல்- இப்படிப்பட்ட ஒரு வாசிப்பனுபவம் வரலாற்று நூல்களில் கிடைப்பதில்லை என்ற குறை நமக்கு இருக்கக்கூடும். சரித்திரப் புனைவுகளில் எடுத்தாளப்படும் மேற்கோள்கள் சொல்லுக்குச் சொல் மூல வரலாற்று நூல்களில் உள்ளவாறே இருப்பதன் செறிவை நாம் காண இயலுமென்றால் – நிச்சயம் மாண்டலின் நாவல்களில் இது உண்டு- (நினைவுகளைப் பதிவு செய்யும் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய பிழை நினைவும் மனச்சாய்வும் கொண்டவர்களால் இந்த மூல நூல்கள் உருவாக்கப்பட்டவை என்ற எண்ணத்தை நாம் தள்ளி வைக்க முடியுமென்றால்), நாம் நம்மைத் தளர்த்திக் கொண்டு, வெந்நீர் குளியல் மேற்கொள்வது போல், நாவலின் சரித்திர உலகினுள் நம்பிப் புகலாம்.

அப்போது புனைவு, வரலாறு விட்டுச் சென்ற இடைவெளிகளை- கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்தவர்கள் விட்டுச் சென்ற இடைவெளிகளை- இட்டு நிரப்பும்-, ஏனெனில் இந்த இடைவெளிகள் மிகச் சாதாரணமானவையாய் இருக்கும். அந்தக் காலம் உண்மையில் எப்படி இருந்தது, அந்நாட்களில் வாழ்ந்ததன் உணர்வு உண்மையில் எப்படிப்பட்டது என்பதைப் புனைவால் சொல்ல முடியும்.  “வேவு பார்ப்பது அத்தனை இனிய கேளிக்கை” என்பதே ‘காலப்பயணத்தின் வசீகரம்’ என்று மார்கரட் அட்வுட் எதைச் சுட்டினாரோ, அந்த அனுபவத்தில் நாம் திளைக்கலாம்.

இது நிகழும்போது, கற்பனையில் திளைக்கும் நம் புலன்களை உணவின் சுவையால், ஆடைகளின் தொடுகையால், நறுமணம் என்று சொல்வதற்கில்லாத தெருக்களின் நாற்றத்தால், புனைவுகள் நிறைக்கக்கூடும். டவ்டன் போருக்குத் தயாராகும் போர் வீரர்கள் மற்றும் குதிரைகளின் பரபரப்பான அசைவை நம்மால் கேட்க முடியும், எலிசபெத்திய நிழலுலகில் யாருக்கும் தெரியாமல் நாம் மறைந்து திரிய முடியும், புரட்சிக்கால பிரான்சில் நாம் ஒட்டுக் கேட்க முடியும்- அனைத்தும் நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும், ஏனெனில்,  “தன் காலத்தின் உணர்வுடன் சமநிலை பேணுதல்,” “வரலாற்றின் நிறுவப்பட்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளுதல்”. என்ற இரண்டும், சிறந்த சரித்திரப் புனைவுக்குரிய இரு அளவைகள் என்று ஹெலன் கெர் முன்வைத்திருக்கிறார். இங்கு அவருக்கு இணக்கமாய் நாவலாசிரியர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

ஆனால் இதில் ஒரு ரகசிய, ஒருதலைபட்சமான ஆபத்து இருக்கிறது. வரலாற்று துல்லியம் கொண்டது என்ற இலச்சினை பதிக்கப்பட்டு ஒரு நாவல் வெளிவருகிறது என்று வைத்துக் கொள்வோம்- ஆதாரநூல்கள் தரவுகளாக சுட்டப்பட்டுகின்றன, மிகச் சாதாரணமான  விவரணைகளும் சரியாக இருக்கின்றன: உள்ளாடைகள் சரியான வகையில் அணிந்து கொள்ளப்படுகின்றன, சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன… இது போல் எழுதுவது நாவல் முழு உண்மையைச் சொல்வதான ஒரு தோற்றத்தை அளிக்கும். “நம்ப வைக்கும் பொய் ஒரு தீச்செயல்” என்று சொல்கிறார் பரபரப்பாக விற்பனையாகும் நாவல்களை எழுதும் பிலிப்பா க்ரே. புனைவெழுத்தாளர்கள் நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறார் அட்வுட்: “தாம் எழுதுவதை பொது வாசகர்கள் முழுமையாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மை போலிருக்கும் பொய்களை உருவாக்குகிறார்கள்“.

மிகச் சிறந்த வரலாற்றுப் புதினங்கள் இரு ஆபத்தான விஷயங்களை நாம் நம்பச் செய்யலாம். முதலாவதாக, மானுட இயல்பு மாறுவதே இல்லை என்று நாம் தீர்மானிக்கக்கூடும். இது மிக இயல்பான உண்மையாகத் தெரிகிறது, ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் நம் காலத்தில் வாழ்பவர்களின் எண்ணங்களிலிருந்து மிக மிக மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது. அவர்களது அறத் திசைகாட்டியின் வடதுருவம் வேறு திசை நோக்கி நிற்கிறது. டூடர் இங்கிலாந்தில் எருதுகளை ஆடுகளத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் கொலை செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. பதின்பருவப் பெண்ணான காத்தரீன் ஹவார்டை அவளது சம்மதமில்லாமல் பிரான்சில் டெர்ஹாம் புணர்ந்தபோது அவன் பாலகர்களைத் துன்புறுத்தியதாகவோ கற்பழித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. ஹவார்ட் ஒரு விலைமகள், கவர்ந்திழுப்பவள், ஆண்களை மயக்குபவள் என்று கருதப்பட்டாள். அதே போல், பதினாறாம் நூற்றாண்டு பற்றி எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும் சமய உணர்வுகளுக்கு அன்றிருந்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ராபர்ட்சன் டேவிஸ் சரியாகவே சொல்கிறார், “நாம் அனைவரும் நம் காலத்துக்கே உரியவர்கள். அதிலிருந்து தப்ப நாம் எதுவும் செய்ய முடியாது. கடந்த காலத்தைக் களமாய்க் கொண்ட நாவலானாலும் நாம் எழுதுவது எதுவானாலும் அது சமகாலத்துக்குரியதாகவே இருக்கும்,” என்று.

புனைவுகள் நம்மை நம்பச் செய்யும் இரண்டாவது ஆபத்தான விஷயம் கதாப்பாத்திரங்களின் அகவுலகம் சார்ந்தது: நாம் கதைசொல்லியின் காலணிகளில் நுழையும்போது அறிய வரும் அகவுலகம் யதார்த்தத்தில் நாம் எவ்வகையிலும் உண்மையென்று அறிந்து கொள்ள முடியாத ஒன்று. நிச்சயம், வரலாற்று காலத்தில் வாழ்ந்த கிராம்வெல்லைவிட மாண்டல் நாவல்களின் கிராம்வெல் விரும்பத்தக்கவராகவே இருப்பார். கதைக்களம், சூழ்நிலம், ஆடை அணிகலன்கள் துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன என்ற மயக்கத்தில் நாம் அவரது ‘குணாதிசயம்’ குறித்த ‘நம்ப வைக்கும் பொய்யை’ ஏற்றுக்கொள்கிறோமா? இதற்கான மாண்டலின் பதில் நியாயமானதாகவே இருக்கும்: அவர் இன்னும் முழுமையாக எழுதி முடிக்காததால், மாண்டலின் கிராம்வெல் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. அது தவிர, உண்மையான ‘கிராம்வெல்’ யார் என்பதும் நமக்குத் தெரியாது. ஏனெனில், வரலாற்றாசிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களும் தம் காலத்தில்தான் எழுதுகிறார்கள், தமக்குரிய மனச்சாய்வுகளுடன், குறைபட்ட மனிதர்களின் குறைபட்ட தரவுகளைக் கொண்டு.

அப்படியானால் அத்தனை வரலாற்றுப் புதினங்களும் ஒரு எச்சரிக்கை வாசகம் தாங்கி வர வேண்டுமா? “இது கடந்த காலம் அல்ல. அது போலிருக்கிறது, அவ்வளவுதான்“. ஆனால் வரலாற்று நூல்களுக்கும் இது பொருந்துமோ?

நன்றி – History Today
ஒளிப்பட உதவி – wikipedia

சான்றோர்

– செந்தில் நாதன் –

leighton_frederic_-_acme_and_septimius_-_c-_1868

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

The Scholars - W B Yeats

* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 3

 

தமிழில்: சரவணன் அபி

karl

அத்தியாயம்– 3

பார் மேடை மீது சாய்ந்து அமர்ந்திருந்த சோக்லோஸ் மதியம் கருத்தரங்கில் தோன்றியது போல் இப்போது பார்ப்பதற்கு அவ்வளவு இளமையாக தென்படவில்லை. ஸூட் கோட் ஒரு முக்காலியில் எறியப்பட்டிருந்தது; ஊதா நிற டை தளர்த்தப்பட்டு விமான நிலையத்தில் கிளம்ப வழியில்லாமல் இரவில் மாட்டிக்கொண்ட ஒரு பயணியின் களைத்த  பாவனையுடன் சரிந்திருந்த சோக்லோஸ், அறையை கடந்து தன்னிடம் வரும் ஹெண்டர்சனை பார்த்ததும், அருகிலிருந்த மேடையை பிடித்தவண்ணம் தடுமாறி எழுந்து நின்றார். ஹெண்டர்சனின் கையை ஓரளவு பெண்மையாக பிடித்துக் குலுக்கினார்.

“பார்த்ததில் மகிழ்ச்சி, மிக்லோஸ், அழகான டை”.

“ஹலோ ஜான், உன்னை பார்ப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது,” சோக்லோஸ் தளர்வாக புன்னகைத்தார். அவர் குரலில் தொனித்த நேர்மை ஹெண்டர்சனை தாக்கியது.

“உன்னுடைய கான்டராக்க்ஷன்  அனாலிசிஸ் கட்டுரையை J.A.M-ல் படித்தேன். அற்புதமான ஆய்வு”.

“அதெல்லாம் ஒன்றுமில்லை, நன்கு தெரிந்த உண்மைகளுக்கிடையே ஒரு சின்ன அவதானம், அவ்வளவுதான். பதிப்பிக்குமளவுக்கு அதில் ஒன்றுமில்லை.”

அதுதான் உண்மையும் கூட. இருவருக்கும் அது தெரிந்தே இருந்தாலும்  சோக்லோஸ் அதை விரும்பாததைப் போல் தோள்களை குலுக்கினார். பாருக்குள் ஒரு பார்வை பார்த்து விட்டு கைகளை ஒரு சமாதான குறியீடு போல் அகல விரித்தவாறு  சொன்னார்,”இந்த மதியத்தைப் பற்றி எனக்கு கோபமொன்றும் இல்லை. சிறிது நேரம்…கொஞ்சம்…சஞ்சலமாக இருந்தது. ஆனால், அவ்வளவு தான்.”

இருமல் சிரப் போன்றவொன்றை சோக்லோஸ் அருந்திக் கொண்டிருந்தார். ஹெண்டர்சன் அவருக்கும் அதே பானத்தையும், ஒரு  வைல்ட் டர்கியும் ஆர்டர் செய்தார். வந்ததும், ஒரு மிடறு அருந்தி விட்டு, “அப்புறம்? மரியா,” என்றார்.

“மரியா.” சோக்லோஸ் தனது கோப்பையை சாய்த்து அதன் உட்புறத்தை சிவப்பாக்கும் கருஞ்சிவப்பு திரவத்தை தனக்குள் ஆழ்ந்தவராக பார்த்துக் கொண்டிருந்தார். “கடைசியாக நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டோம்.  இந்த அக்டோபரில். நீ கேள்விப்பட்டாயா என்று தெரியவில்லை.”

“ம். ஹெர்ஷ் சொன்னான். வாழ்த்துக்கள். எல்லா இனிமையும் பெற வாழ்த்துக்கள்.” வாழ்த்தின் எதிர்ப்பதம் போல் உயிரற்ற குரலில் ஹெண்டர்சன் சொன்னார். “எப்படி இருக்கிறாள்?”

சோக்லோஸ் இன்னும் கோப்பைக்குள் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். “சில மாதங்களுக்கு முன் வரை போலிஷ் உணவுப்பயிற்சி எல்லாம் நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நகருக்குள் காண்டோமினியம் ஒன்றில் வீட்டுக்கு முன்பணம் கூட கொடுத்துவிட்டோம். அப்புறம்தான் ஏதோ ஆகிவிட்டது. அவளே கூறிக்கொள்வது போல  அவள் ‘மதத்தைக் கண்டடைந்து’ விட்டாள்.”

“அடக்கடவுளே, எனக்கெல்லாம் என் கார் சாவியை கண்டுபிடிப்பது கூட கடினமாக இருக்கிறது.”

“சிரிப்புதான்,” என்றார் சோக்லோஸ் சிரிக்காமல். “உன் நகைச்சுவை உணர்ச்சியை ஏறக்குறைய நான் மறந்தே போனேன்.” இன்னொரு ட்ரிங்க் கொண்டுவரும்படி பணித்து விட்டு, அது வரும் வரை தனது கோப்பையை சோக்லோஸ் பார் மேடை மீது பொறுமையின்றி தட்டிக் கொண்டிருந்தார். “இப்போது இன்னும் அதிகமாக போய் விட்டது. சர்ச் பாதர் கூட ஒத்துக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள். போன மாதம் க்ரகாவிலிருக்கும் அவளது அம்மாவை அழைத்து தான் சிறுவயதில் பாட்டியின் பர்ஸிலிருந்து அறுநூறு ஸ்லோடிஸ் எடுத்ததைக் கூறியிருக்கிறாள். பாவம் அவள் அம்மா! எழுபது வயதில் தன் ஒரே மகள் திருடி என்று தானே ஒத்துக் கொள்வதை கேட்பதை நினைத்துப் பார்.”

“மதமாற்றம்,” ஹெண்டர்சன் முனகினார். “ஜீசஸ், யார் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும்?” அருந்திக் கொண்டிருந்த மதுவினால் ஹெண்டர்சனின் வார்த்தைகள் கட்டிழந்து  கொண்டிருந்தன. கேட்டுக்கொண்டிருந்த கதையின் விசித்திரம் அவரை மேலும்  இளக்கிக் கொண்டிருந்தது. ‘நல்ல வேளை, பயணத்தை தள்ளி போட்டுவிட்டு நான் வந்தது’ என்று நினைத்துக் கொண்டார். “அவளுக்கு பிடித்திருந்தால் நல்லது  தான் என்றாலும் எத்தனை பேரை அவள் கஷ்டப்படுத்துகிறாள்?அவள் அம்மா, நீ. இன்னும் வேறு யாரை?”

சோக்லோஸ் தலையசைத்தார். “உன்னால் உதவ முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.”

“நான் ஏன் உதவ வேண்டும்?”

“மரியாவுக்காக. எனக்காக. பிரச்னைகள் மோசமாகிக் கொண்டே போகிறது.”

ஹெண்டர்சன் மதுவை விரலால் கலக்கி விட்டு விரலை நக்கிக் கொண்டார். “அப்படியா? மோசமென்றால்?”

சோக்லோஸ் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தது போல் தலையசைத்தார். “இப்போதெல்லாம் நமக்கு பிடித்த பேய்ப்படங்களுக்கு வருவதில்லை. வாரக்கடைசிகளில் பைபிள் ஸ்டடிக்கு போய் விடுகிறாள். நான் வராததற்கு திட்டு வேறு. கிறித்துவ பக்தி பாடல்கள் மட்டும் தான் கேட்பது.”

“அவ்வளவுதானே? படங்களும், குப்பையான பக்தி பாடல்களும், இல்லையா?”

“இல்லை, திருமண முடிவை மறு பரிசீலனை செய்வதாக போன வாரம் சொல்கிறாள்.”

உதட்டுக்கு கொண்டுபோன கோப்பையை ஹெண்டர்சன் ஒரு கணம் தாமதித்தார். பின் சுதாரித்து நீண்ட மிடறு ஒன்றை விழுங்கினார். ஹெண்டர்சனுக்கு இதுவொன்றும் பெரிய ஆச்சரியமாக இல்லை. முக்கிய விஷயங்களில்  திடீரென்று குழம்புவது மரியாவின் இயல்பு என்று அவருக்குத் தெரியும்.

சோக்லோஸின் உதடுகள் இறுகியிருந்தன. பார் மேடைக்கு பின்னால் அலமாரியில் இருந்த அலங்காரமான, மிளகு பொடிசெய்யும் இயந்திரத்தை ஏதோ மதச்சின்னத்தை பார்ப்பவர் போல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இயேசு மரணத்திலிருந்து எழுந்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புவது உனக்கு தெரியுமா ஜான்?” சோக்லோஸ் உணர்ச்சிவசப்பட்டவராக புன்னகைத்துக் கொண்டார். “இறந்து கிடந்தவர், உயிர்த்து எழுந்து, நடந்து சென்றார் என்று நம்புவது? பேரதிசயம்.”

ஹெண்டர்சனுக்கு மரியா தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்திப்பதையோ, தங்கக்குவளையில் ஒயினை இயேசுவின் இரத்தமாக பருகுவதையோ  எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை. சிற்றின்பத்தைத் தவிர அவளை மற்றொன்றின் உருவாக பார்க்க அவருக்குக் கூடவில்லை.

எப்போது அவளை நினைத்து கொண்டாலும், முதலில் நினைவுக்கு வருவது மரியாவின் சமையல் – இறுக்கமாக சுருட்டிய கவும்ப்கி, உப்பிய கியல்பசா, பல்கேரிய வைன்… – அல்லது, அவளுடனான புணர்ச்சி…

மதம் ஓர் ஈர்ப்பாக ஹெண்டர்சனுக்கு என்றும் இருந்ததில்லை. ‘நான்-லீனியர் கண்ட்ரோல் தேற்றம்’ எப்படி பல பேருக்கு ஓர் உருவற்ற மாயத்தோற்றமாக தோன்றுமோ அப்படித்தான் அவரைப்பொறுத்தவரை மதம் . உறக்கம் வாராத சில பின்னிரவுகளில், போர்வை முடிச்சாகக் கிடக்க, நெற்றியில் வியர்வை பொங்க, தன் சினத்தையும், பதற்றத்தையும், சந்தேகங்களையும் ஒப்புவித்து கரைத்துவிடக் கூடிய ஓர் அலகிலாத, உருவில்லாத நற்பண்பு திடீரென்று தன்முன் தோன்றிவிடாதா என்ற ஏக்கம் இருந்ததுண்டு. சிலசமயம் அரைக்கனவின் நிலையில், அருகிலுள்ள மெக்டொனால்ட் கடையில் நின்றிருக்கும் இறைவடிவத்தின் பழங்காலப் போலியொன்று நல்லதே நடக்குமென்று அவரை வாழ்த்துவது போல் ஒரு  தரிசனம்.

ஆனாலும் மறுநாள் விழித்தெழும் போது  அவமானமும், சந்தேகமும் உடலெங்கும் எரியும். நம்புவதற்கு அங்கு என்ன இருக்கிறது? மிகக் கொடுமையான வசதிக்குறைவையும் சகித்துக் கொள்ளும் மனிதர்களின் திறன்; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும்   கறைபடிந்து கூடிக்கொண்டே வரும் குற்றவுணர்ச்சியும், துக்கமும்; குறைந்த சக்தியிலிருந்து உயர் சக்திக்குத் தாவும் எலக்ட்ரான்களின் பெருக்கு. அவற்றைத் தவிர வேறென்ன?

“இன்னும் இருக்கிறது.” சோக்லோஸ் தொடர்ந்தார். “அவளுடைய Ph.D. பட்டம்?”

உணவுக்கூடத்தின் இசை தேய்ந்து நின்றது போலவும், உள்ளிருந்தவர்கள் பஞ்சுப்பொதியினூடாக பேசுவது போல் சத்தம் அமுங்கிப் போனது போலவும் தோன்றியது. சோக்லோஸ் தனது காலி கோப்பையின் உட்புறத்தை பார்த்தவாறே பேசுவதை ஹெண்டர்சன் கவனித்தார். “Ph.D. படிப்பை நிறுத்திவிடப் போவதாகவும், அதுபற்றிய உண்மையை J.A.M-ல் வெளியிடப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”

ஹெண்டர்சன் சோக்லோஸின் மணிக்கட்டை இறுகப்பற்றினார். “கடவுளே. அவளை தடுத்து நிறுத்து மிக்லோஸ்.”

சோக்லோஸ் தன் கையை விடுவித்துக் கொண்டே, “அவள் மிகத் தீவிரமாக இருக்கிறாள்.  இந்த நிலை அவளை மிக மோசமாக உணரச் செய்கிறது என்கிறாள்,” என்றார்.

ஹெண்டர்சன் தனது நாற்காலியில் சரிந்தார். இயந்திரத்தனமாக இன்னொரு கோப்பை மதுவை ஆர்டர் செய்தார். உடலில் மது தந்த  மயக்கத்தை விட  அதிகப்படியான ஒரு மரத்துப்போன உணர்வு பரவுவது தெரிந்தது. பல்மருத்துவரிடம் லோக்கல் அனஸ்தீசியா போட்டு கொண்டு தன் கண்முன் உலகம் பரபரப்பாக இயங்குவதை எவ்வித உணர்ச்சியுமில்லாமல் பார்ப்பவரின் மனநிலை.

“உனக்குத் தெரியாது ஜான். உன் ஆராய்ச்சிகளிலேயே அதுதான் உச்சம். சில்கோவ்ஸ்கியின் தேற்றம். அவள் அதை எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். அவள் அதைப்பற்றி கவலை படவில்லை, அவளுக்கு அது ஒரு விஷயமேயில்லை. ஆனாலும்…” சோக்லோஸ் தயங்கினார். “எப்படி ஒரு படைப்பு! அற்புதமான நிரூபணம்!”

“ஏதோவொரு உத்வேகம்,” தோள்களை குலுக்கினார் ஹெண்டர்சன்.

“இன்னொருவரின் பெயரில் அது பதிப்பிக்கப்படுவது உனக்கு வேதனையாக இருந்திருக்கும்…”

“இல்லவே இல்லை,” என்றார் ஹெண்டர்சன், தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சியுடன். “மரியாவுக்காக அதை மகிழ்ச்சியாகத்தான் செய்தேன். அவள் மகிழ்ச்சிக்காக அதை செய்தேன்.”

“மகிழ்ச்சி.” சோக்லோஸ் விரக்தியாக புன்னகைத்தார். “அடையக் கடினமான நிலை.”

பொயின்கேர் மேனரிலிருந்து  ஹெண்டர்சன் வெளியேறிய ஐந்து மாதங்கள் கழித்து அது தொடங்கியது. சன்னலின் திரைகளை இழுத்து மூடி மதியம் வரை தூங்க ஹெண்டர்சன் யத்தனித்துக்கொண்டிருந்த ஒரு மே மாத குளிர்காலையில் மரியாவின் அழைப்பு வந்தது.  “எப்படி இருக்கிறாய்?” அவள் குரல் வெம்மையானதொரு நடுக்கத்தை அவர் தொடைகளினூடாக செலுத்தியது. கடைசியில் கசப்பான புன்னைகையுடன், “பிரமாதம்! நீ எப்படி இருக்கிறாய்?” என்றார்.

(தொடரும்)

 

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

nonfiction_a-o-_scott_cover_2

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?

ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.

கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?

ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?

கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்

ப- மன்னித்துக் கொள்.

கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.

ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.

கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…

ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?

கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.

ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.

கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம்  நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?

பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து  ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).

இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச  என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.

 கேள்வி- நீ பயப்படவில்லையா?

பதில் – அதற்கு மாறாய், எனக்கு  நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.

ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.

கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”

பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட  தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.

மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.

கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.

பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”.  இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.

 “அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).

இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.

ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”)  என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.

ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.

கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.

பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.

கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல  ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.

நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த  வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  தேவைப்படுகிறது.

கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?

பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?

பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும்  என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?

பதில் – நல்ல கேள்வி!

நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/

image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/

KHADDAR by Ashokamitran

Translated by Sivasakthi Saravanan

Father bought four bathing soaps , a long soap bar for laundry , a tin of Milk Maid, and half a seer chocolate at the shop, paid a five-rupee note, and collected the balance of two rupees, nine annas and three paise. The shopkeeper handed a cloth bag to help them carry the purchase. Quite surprisingly, it had Tamil words on it: ‘Nanjankoodu Toothpowder’. He carried it home along with the snakegourd that Father bought at a vegetable shop.

The first thing he did on reaching home was to search for Nanjankoodu in the Taj Mahal Atlas. It was his hunch that Nanjankoodu must be the name of a place. He looked up all the continents in the Taj Mahal Atlas but couldn’t find Nanjankoodu.

He could ask Father; but that astrologer-guest was chattering with him all the time. Mother suspected that since Nanjankoodu sounded similar to thenkoodu, which in Tamil meant a beehive, it must be some nest. He felt a sudden desire to brush his teeth with Nanjankoodu toothpowder. But no one in his family used toothpowder. They pounded some stuff bought from a shop of herbal remedies and used its powder. It left a hot tingle in the mouth for an hour after brushing.

Eventually, the astrologer left after a week, and when Father looked amiable, he immediately asked him about the bag. He was right about Nanjankoodu: when they searched the map together, they did spot it!

But he lost interest in Nanjankoodu after what Father had to say further about the bag: it was made of khaddar cloth.

To Father, khaddar was like the fabled blossom from Devaloga— always talked about, but never seen. People believed you would be arrested immediately if you wore khaddar. About two miles down the road to Silkalguda from where his home was, you could see the Mashirabad prison complex. He had   taken that road all by himself quite a few times. The prison had imposing walls thick with broken glass pieces on top of it. He could see those on the other side of the wall only through his mind’s eye. He knew from the occasional picture in the magazines and the heroes of films that prisoners were dressed in checquered clothes; But whether pictures or heroes, they didn’t look similar in their prison uniform, so he concluded that even those who drew those pictures and made those movies couldn’t have seen the inside of Mashirabad Jail. You had to wear khaddar to get there.

He wished to go to jail. At least he must have a khaddar shirt to get into the jail. But where could he get one?

They bought a full length piece of Ramgopal Mill cloth and made shirts, jackets, and skirts for them all. Ramgopal Mill cloths had very few patterns.   They were heavy; always had stripes or checks in grey—or stripes or checks in brick red; once, he thought they had purchased what must surely have been meant for the prisoners: it had a design of large, black squares. Going to school, he felt like he was a prisoner, except that there was no police in pursuit of him.

The only Tamil magazines available in the town were Kalki and Ananda Vikatan. It was just after the Second World War. Like everything else, khaddar too was scarce. One could get clothing material in khaddar only if they bartered it with the yarns they had spun.

He earnestly wanted to try his hand at the spinning wheel, whether or not he could actually exchange it for khaddar cloth.

But the images in the magazine, the movie heroines, they were recurrent; they turned the wheel oh so beautifully, sitting on the floor with folded legs. But where would he get a spinning wheel? He stood his cycle on its stand, sat down by it, and turned the pedal fast as if turning the spinning wheel. A mountain of yarn poured out; the whole world would be inundated with khaddar; all must wear khaddar, prisoners and policemen included.

But no, the only khaddar he could get to see was that bag with ‘Nanjankoodu Toothpowder’ printed on it.

He started to carry it to school instead of the more convenient canvas bag. The khaddar bag was broader, but it wasn’t deep enough. His books piled up at one end, the bag itself hung out of shape. They even fell out if he was not careful enough. A slight drizzle would drench them thoroughly. But the biggest worry of all came in the form of Wahab.

In those days teachers were not afraid to detain the students Wahab, who turned out to be a friend as well as an enemy, joined him in class seven and sat next to him. It was his second year in that class for Wahab. He slept during class without fear. He didn’t worry about not being able to give an answer in the class. At first Wahab didn’t pay much attention to him. But he had a bad day when he answered a question that Wahab couldn’t, and his voice must have betrayed some pride. Wahab hated him from that day. Later, it occurred to him that he needn’t have been so conceited after all.

It was the start of a long drawn out war between Wahab and him. If he placed his pencil on the desk, Wahab would push it down and break the tip; Wahab would paste a sticker on his back, with the word ‘Fool’ written on it; and would push his bag of books from the desk. Wahab not only pushed down the khaddar bag but kicked it too . He might have kept quiet and ignored the bully, had it been him that got the kick; but Wahab had kicked his bag; the khaddar bag—made from the threads spun by Mahatma Gandhi.

He did something thoughtless: when everybody was rushing out after class, he pushed Wahab down from behind. Wahab was a big boy but he hadn’t expected it and fell down. Looking at him with fiery eyes, Wahab said, “kya pe sala”.

‘But why did you kick my bag?’, he asked in return in Urdu. His question confirmed Wahab’s suspicions. He had been pushed down intentionally.

Wahab sprang on him. He held tight to Wahab’s arms. They tried to trip each other. In the melee, the big toe of Wahab’s right leg got caught in his pyjama. Before Wahab could free his foot, he pushed him down. The back of Wahab’s head hit the ground when he fell down. It was known as ‘sidh’ in kushti parlance. He loosened his hold and stood up as he felt satisfied that he had performed sidh on Wahab. But this wasn’t a bout in the kushti ring. Kushti rules were out of place there. As a result of this inappropriate act, Wahab retaliated with heavy blows on his head and shoulders before running off.

There was great commotion at home. They took him to the hospital which was a mile away and salved the wounds. They were told to apply boric powder and hot pack for the bumps. He kept quiet about who had hit him or why. But how could he conceal news about the fight that started because of a little bag, that too out in the open?

Mother prodded Father who set out for Wahab. Wahab was terrified. Still, Wahab could have told Father that he was not solely responsible for the whole episode. Father approached the class teacher. Wahab stood on the bench for a whole day. But he didn’t hold any grudge against him for that.

Soon after, the bag turned dirty, and when washed hard started tearing, and finally had to be consigned as a rag used for cleaning the cycle. It took in all its grime with much affection and became disfigured. He did not see it as a sacrifice, though he felt sad; he was disappointed at khaddar’s impermanence. Later on in life he did get his chance to wear khaddar. But Nanjankoodu Toothpowder proved elusive.

oOo

Taken from:

Ashokamitran Sirukathaikal published by Kavitha Pathippagam

Disclaimer: this is an unauthorised translation intended for educational and non-commercial purpose. Owners of copyright may contact editor@padhaakai.com by mail or @padhaakai on twitter to take down the post, though we hope you spare us