“நீங்கள் ஏன் இவ்வளவு நிதானமாகப் போகிறீர்கள்?” என்று பெலிசியானோ ருவலஸ் முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களைக் கேட்டான். “இப்படிப் போய்க் கொண்டிருந்தால் கடைசியில் நமக்கு தூக்கம் வந்து விடும். நீங்கள் அங்கே சீக்கிரம் போய்ச் சேர வேண்டாமா?”
“நாளைக் காலையில் பொழுது விடியும்போது நாம் அங்கே போய்ச் சேர்ந்திருப்போம்,” என்று பதில் சொன்னார்கள்.
அவன் அவர்கள் கடைசியாய்ப் பேசிக் கேட்டது அதுதான். அவர்களது கடைசி வார்த்தைகள். ஆனால் அவற்றை அப்புறம் அவன் நினைத்துப் பார்ப்பான், மறு நாள்.
இரவின் மங்கலான ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில், தரையை உற்றுப் பார்த்தபடி அவர்கள் மூன்று பேரும் அங்கே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
“இருட்டாக இருப்பதுதான் நல்லது. இப்படி இருந்தால் அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.” இதையும் சொன்னார்கள், சிறிது நேரம் முன்னால், அல்லது அதற்கு முந்தைய நாள் இரவு. அவனுக்கு நினைவில் இல்லை. தூக்கக் கலக்கம், சரியாய் யோசிக்க முடியவில்லை.
இப்போது, மேலே ஏறிச் செல்கையில், அது மீண்டும் இறங்கி வருவது தெரிந்தது. அது அவனை நெருங்கி வருவதை அவன் உணர்ந்தான். அவன் உடலின் மிகவும் களைத்த உறுப்பைத் தேடி அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது போலிருந்தது. துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்த அவனது முதுகில், அவன் மேல் அது இறங்கும் வரை. தரை சமதளமாக இருக்கும்போது அவன் வேகமாய் நடந்தான். சரிவு ஆரம்பிக்கும்போது, அவன் நிதானித்தான்; அவனது தலை மெல்ல துவளத் துவங்கியது. அவன் நடை தயங்கத் தயங்க அவன் எடுத்து வைக்கும் அடிகள் சிறிதாகின. மற்றவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள். தூக்கத்தில் அவன் தலை துவண்டு விழுகையில், அவர்கள் வெகு தூரம் முன்னே சென்றிருந்தார்கள்..
அவன் பின்தங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் சாலை நீண்டு சென்றது, ஏறத்தாழ அவன் கண்னளவுக்கு உயர்ந்து சென்றது. அப்புறம் துப்பாக்கிகளின் சுமை. அப்புறம் அவன் மீது, அவனது முதுகு வளைந்திருக்கும் இடத்தில் ஊறிக் கொண்டிருக்கும் தூக்கம்.
காலடி ஓசைகள் அடங்குவதை அவன் கவனித்தான்; எப்போதிருந்து, யாருக்குத் தெரியும் அவன் எத்தனை இரவுகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறான் அந்த வெற்றுக் காலடிகளின் ஒலிகளை: “லா மக்தலேனாவிலிருந்து இங்கு, முதல் நாள் இரவு; பின்னர் இங்கிருந்து அங்கே, இரண்டாம் நாள்; அதன்பின் இது மூன்றாம் நாள்.” அதிக நாட்கள் ஆகாது என்று அவன் நினைத்துக் கொண்டான், பகல் பொழுதில் மட்டும் நாங்கள் தூங்கியிருந்தால். ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமில்லை: “தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்மைப் பிடித்து விடுவார்கள்,” என்று சொன்னார்கள். அப்புறம் அது மிகவும் மோசமாய்ப் போய் விடும்”
“யாருக்கு மோசமாக இருக்கும்?”
இப்போது தூக்கம் அவனைப் பேசச் செய்தது. “நான் அவர்களைக் காத்திருக்கச் சொன்னேன். இன்று நாம் ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கட்டும். நாளை நாம் ஒற்றை வரிசையில் செல்வோம், நமக்கு இன்னும் அதிக ஆர்வம் இருக்கும், அதிக பலம் இருக்கும். நாம் ஓட வேண்டியதாகக்கூட இருக்கலாம். என்ன வேண்டுமானால் நடக்கலாம்”
அவன் கண்களை மூடிக் கொண்டு நின்றான். “இது மிக அதிகம்,” என்றான். “அவசரப்பட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? ஒரு நாள். இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோம், இந்த ஒரு நாளில் என்ன ஆகப் போகிறது”. அவன் உடனே கத்தினான், “எங்கே இருக்கிறீர்கள்?”
அதன்பின் கிட்டத்தட்ட ரகசியமாய்: “அப்படியானால் போய்க் கொண்டிருங்கள். போய்க் கொண்டிருங்கள்!”
அவன் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டான். அங்கு நிலம் சில்லிட்டிருந்தது, அவனது வியர்வை குளிர்ந்த நீராய் மாறியது. அவர்கள் அவனிடம் சொல்லியிருந்த சியர்ரா இதுவாகத்தான் இருக்க வேண்டும். கீழே கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது இங்கே இந்தக் குளிர் உன் ஆடைகளுக்குள் புகுந்து கொள்கிறது: “என் சட்டையை உயர்த்தி தம் சில்லிட்ட விரல்களால் என் தோலைத் தடவுவது போல்”
பாசி படிந்திருந்த தரையில் அவன் சரிந்தான். இரவை அளவிடுவது போல் தன் கைகளை விரித்து, மரங்களாலான சுவற்றை எதிர்கொண்டான். டர்பண்டைன் மணம் கமழ்ந்திருக்கும் காற்றைச் சுவாசித்தான். அதன் பின் அவன் உறக்கத்தினுள் மெல்ல மெல்ல அமிழ்ந்தான், அங்கே அந்தக் கள்ளிகளுக்கிடையே, தன் உடல் கெட்டிப்பதை உணர்ந்தபடி.
அதிகாலைக் குளிர் அவனை எழுப்பியது. பனித்துளிகளின் ஈரம்.
அவன் தன் கண்களைத் திறந்தான். இருண்ட கிளைகளுக்கு மேலே, உயரத்தில், தெளிந்த வானில் கண்ணாடியென ஒளி ஊடுருவும் நட்சத்திரங்களைப் பார்த்தான்.
“இருட்டிக் கொண்டிருக்கிறது,” என்று நினைத்துக் கொண்டான். அதன்பின் அவன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.
உரத்த குரல்களையும் சாலையின் உலர்ந்த மண்ணில் ஒலித்த குளம்பொலிகளையும் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். தொடுவானின் விளிம்பில் மஞ்சள் ஒளித் தீற்றல்.
சுமைதாங்கிக் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்தார்கள். “குட் மார்னிங்,” என்று அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை.
தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவன் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே பொழுதாகி விட்டது. காவல் வீரர்களைத் தவிர்க்க அவன் இரவில் சியர்ராவைக் கடந்திருக்க வேண்டும். இந்தக் கணவாய் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று. அப்படித்தான் அவர்கள் அவனிடம் சொல்லியிருந்தார்கள்.
கொத்தாய்க் கட்டப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்து தன் தோளில் தொங்கவிட்டுக் கொண்டான். சாலையின் விளிம்பைத் தாண்டி, சூரியன் உயர்ந்து கொண்டிருந்த, சிகரத்தை நோக்கி நடந்தான். அவன் மேலேறினான், கீழிறங்கினான், மேடுகள் நிறைந்திருந்த மலைகளைக் கடந்து நடந்தான்.
“அவனை நாங்கள் அங்கே உயரத்தில் பார்த்தோம். அவன் இப்படி இப்படி இருக்கிறான், நிறைய ஆயுதங்கள் வைத்திருக்கிறான்,” என்று கழுதை மேய்ப்பவர்கள் சொல்வது அவன் காதில் ஒலிப்பது போலிருந்தது.
அவன் துப்பாக்கிகளை கீழே எறிந்தான். அதன்பின் கார்ட்ரிட்ஜ் பெல்ட்களையும் அகற்றினான். அச்சமயத்தில் அவன் எடை குறைந்தது போலுணர்ந்தான். கழுதை மேய்ப்பவர்களுக்கு முன் அடிவாரம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பது போல் ஓடத் துவங்கினான்.
“மேலே போக வேண்டும், உயரத்தில் இருந்த சமதளப் பிரதேசத்தைச் சுற்றி வந்து கீழே இறங்கிப் போக வேண்டும்”. அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ, அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவர்களுடன், அதே சமயத்தில் அல்ல.
அவன் பள்ளத்தாக்கில் சரிந்தோடிய பிளவின் விளிம்பை அடைந்தான். தொலைவில் பழுப்பாய் அகன்று விரிந்திருந்த சமவெளியைப் பார்க்க முடிந்தது.
“அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் மீது எந்த அச்சமும் கவிந்திருக்காது”, என்று நினைத்துக் கொண்டான்.
அவன் மலைச்சரிவினுள் இறங்கினான், உருண்டு புரண்டு எழுந்து ஓடி மீண்டும் உருண்டுச் சென்றான்.
“தெய்வச் சித்தம்,” என்று சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் உருண்டு இறங்கினான்.
இன்னமும் அவன் காதில் கழுதை மேய்ப்பவர்கள் அவனிடம் “குட் மார்னிங்!” என்று சொன்னது ஒலித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அவனது கண்கள் அவனை ஏமாற்றுவது போலிருந்தது. காவல் காத்துக் கொண்டிருப்பவர்களில் முதலில் இருப்பவனிடம் போய், “அவனை இன்ன இன்ன இடத்தில் பார்த்தோம். அவன் சீக்கிரம் இங்கு வந்து விடுவான்,” என்று அவர்கள் சொல்வார்கள்.
திடீரென்று அவன் அசையாமல் நின்றான்.
கிறித்துவே!” என்றான். “விவா கிறிஸ்டோ ரே!” என்று அலறியிருப்பான், ஆனால் தன்னை அடக்கிக் கொண்டான். உறையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து உள்ளே பதுக்கிக் கொண்டான், தன் சட்டைக்குள், அது தன் உடலுக்கு நெருக்கமாய் இருப்பதை உணர்வதற்காக. அது அவனுக்கு துணிச்சல் அளித்தது. மெல்ல அடியெடுத்து வைத்து, அவன் அக்வா ஜார்காவின் பண்ணை நிலங்களை நெருங்கினான். அங்கு பெரிதாய் கனன்று கொண்டிருந்த நெருப்புகளைச் சுற்றி குளிர் காய்ந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பரபரப்பை கவனித்தான்.
விலங்குகளைப் பூட்டி வைத்திருந்த கிடையின் வேலிகள் வரை அவன் சென்றான், அவர்களை இப்போது அவனால் இன்னும் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது. அவர்கள் முகங்களை அடையாளம் காண முடிந்தது. அது அவர்கள்தான், அவனது மாமா டானிஸ்சும் மாமா லிப்ராடோவும். ராணுவ வீரர்கள் நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில், அவர்கள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள்- கிடையின் மத்தியில் ஒரு சீமைக்கருவேலி மரத்தில் தொங்க விடப்பட்டு. கணப்புக்கு ஏற்றப்பட்ட நெருப்பிலிருந்து எழும் புகை குறித்த உணர்வை இழந்து விட்டது போலிருந்தார்கள், கண்ணாடி போல் வெறித்திருந்த அவர்கள் விழிகளில் புகை மூட்டமிட்டது, முகங்களில் சாம்பல் பூசியது.
அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. வேலியோரமாய் அவன் மெல்ல ஊர்ந்து சென்றான், ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தான். அவன் உடலின் இறுக்கத்தை மெல்லத் தளர்த்திக் கொண்டான், தன் வயிற்றில் ஒரு புழு நெளிவதை உணர்ந்தாலும்.
அவனுக்கு மேல், உயரத்தில் யாரோ பேசக் கேட்டான்:
“இவர்களைக் கீழே இறக்காமல் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“இன்னொருவன் வருவதற்காகக் காத்திருக்கிறோம். மூன்று பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள், எனவே மூன்று பேர் இருந்தாக வேண்டும். தப்பித்தவன் ஒரு சிறுவன்தான் என்று சொல்கிறார்கள்; சிறுவனோ இல்லையோ, என் லெப்டினென்ட் பர்ராவைவும் அவரோடிருந்தவர்களையும் மறைந்திருந்து தாக்கி அழித்தவன் அவன்தான். இந்த வழியில்தான் அவன் வந்தாக வேண்டும், அவனைவிட வயதானவர்கள், அனுபவம் அதிகம் இருந்தவர்கள் மற்ற இருவரும் இந்த வழியில்தான் வந்திருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அவன் வராவிட்டால் இந்த வழியாக வரும் முதல் ஆளைக் கொன்றுவிட வேண்டியதுதான் என்று என் மேஜர் சொல்கிறார். அவரது ஆணையை அப்படி நிறைவேற்றிவிட வேண்டியதுதான்”.
“ஆனால் நாம் ஏன் அவனைத் தேடிக் கொண்டு போகக்கூடாது? அதைச் செய்தால் நம் சலிப்பாவது தீரும்”
“அதற்கெல்லாம் அவசியமில்லை. அவன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். கடோர்சில் இருக்கும் கிறிஸ்டரோக்களுடன் சேர அவர்கள் எல்லாரும் கொமாஞ்சாவில் உள்ள சியர்ராவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போகவிடுவதும் நல்லதாகத்தான் இருக்கும். அவர்களுடைய கூட்டாளிகள் லாஸ் ஆல்டோஸ் உடன் போரிடப் போகிறார்கள்”
“அதுதான் சரியாக இருக்கும். இறுதியில் நம்மையும் அந்தத் திசையில் செல்லச் சொல்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்”
பெலிசியானோ ருவலஸ் தன் வயிற்றில் புரண்டு கொண்டிருந்த கொந்தளிப்பு அடங்கச் சிறிது நேரம் காத்திருந்தான். அதன்பின் ஒரு வாய் காற்றை முழுங்கினான், தண்ணீருக்குள் ஆழச் செல்லப் போகிறவன் போல. அதன்பின், தரையோடு தரையில் ஊர்வது போன்ற அளவு பதுங்கி, கைகளால் தன் உடலை உந்தித் தள்ளி நடக்க ஆரம்பித்தான்.
ஓடைப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்ததும் அவன் அதனுள் இறங்கி நிமிர்ந்து நின்று ஓட ஆரம்பித்தான், அதன் புதர்களிடையே ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு. ஓடைப் பள்ளம் சமவெளியில் தன்னைக் கரைத்துக் கொள்வதை உணரும் வரை அவன் திரும்பிப் பார்க்கவில்லை, நிற்கவுமில்லை.
அதன் பின் நின்றான். அவனுக்கு மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.
(This is an unauthorised translation of the short story, “The Night they Left him Alone”, originally written in Spanish by Juan Rolfo, and translated into English by George D. Schade. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).