ரமேஷ்-பிரேம்

நூல் விமரிசனம்: சொல் என்றொரு சொல்- ரமேஷ்-பிரேம்

வெ. சுரேஷ்

ரமேஷ்-பிரேம் இரட்டையர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம், நீண்ட காலமாகவே படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த, தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்த ஒன்று. எழுத்தாளராக அறிமுகமாகி இப்போது நண்பராகிவிட்ட கார்த்திகை பாண்டியனின் தூண்டுதலால் இதை இப்போதுதான் படிக்க முடிந்தது. பல இடங்களில் பிரமிப்பூட்டும் மொழியும் நடையும் அமையப் பெற்ற ஒரு நாவல்- ‘நாவல்’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை-, பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு நிலப்பகுதிகள் ( முதன்மையாக தமிழ்நிலம்தான்), ஒரே பெயர் கொண்ட பலவகையான கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்த தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிடுவதாக இல்லாமல், வகைமாதிரிகளைக் குறிப்பிடும் தன்மை கொண்டதாய் உள்ள இந்த நாவலில் ரமேஷ்-பிரேம் தமிழக வரலாறு குறித்த ஒரு மீள்பார்வையையும் மறுகூறலையும் முன்வைக்கிறார்கள். கூடவே இலங்கைப் பிரச்னையும் வரலாற்றுக் காலம் தொட்டு சமகாலம் வரையிலான (2004ல் எழுதப்பட்டிருக்கிறது) தமிழகத்தின் அனைத்து அரசியல், சமூக கலாச்சார நெருக்கடிகளையும் படைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்

நாவலில் வெகு உக்கிரமான, முகத்தில் அறையும், சம்பவங்கள் இருக்குமளவுக்கே,. அற்புதமான, நெஞ்சை உருக்கும், நெகிழ வைக்கும், பெரும் மனவெழுச்சியை உருவாக்கும், சித்திரங்களும் இருக்கின்றன. இதற்கு,இரண்டு இடங்களை உதாரணமாகச் சொல்லலாம். புத்தரின் இறுதி மணித்துளிகளைப் பற்றிய விவரிப்பு, புத்தருக்கும் அவர் தன்னை விட்டு விலகிப் போகச்சொல்லும் சிஷ்யருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒன்று. பின், ஆனந்தருக்கும் புத்தருக்கும் இடையேயான உரையாடல்கள் கொண்ட பகுதி. இவை தமிழ் புனைவிலக்கியத்தின் எந்த ஒரு சிறந்த படைப்பின் வரிசையிலும் இடம் பெறத் தக்கது. இருந்தாலும், இந்த நாவலைப் படிக்கும்போது,பின்தொடரும் நிழலின் குரலில்,இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி இடம் பெற்றுள்ள சிறுகதையை மனம் தன்னால் நினைவு கூர்ந்தது. இரண்டாவதாக,கொற்றவை உபாசனையில் ஈடுபடும்,தேவியின் அழகில், தேவியையே காதலிக்கும் அந்த இளம்பூசாரியின் கதை.

இவை போன்ற சில பகுதிகள் இருந்தும் நாவல் ஒரு முழு நிறைவைக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், மேலே குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, இதில் நேரடியான அனுபவங்களை முன்வைக்கும், அல்லது பிறரது அனுபவங்களை புனைவின் வழியே ஆசிரியர் தம் அனுபவங்களாக மாற்றி நமக்கும் கடத்தும் இடங்கள் அரிதாகவே இருப்பது. முன்னரே நிலைப்பாடுகள் எடுக்கப்பட்ட பிரச்னைகளைக் குறித்து, அந்த நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களைக் கொண்டே கதை சொல்லப்படுவது அலுப்பூட்டுகிறது. ஒரு பாத்திரம் தன் சொந்த வாழ்க்கை அனுபவம் மூலமாக வரலாற்றின் முன் நிற்கும் தருணங்கள் அன்றி (எ.கா: பதினெட்டாவது அட்சக் கோடு ), வரலாற்றின் தருணங்களுக்கான படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடுக்குக்கேற்ப முன்னரே தயார் செய்யப்பட்ட எதிர்வினைகளின் வகைமாதிரிகளாக பாத்திரங்களை படைத்திருப்பதும், இந்தச் சம்பவங்களில் கதாசிரியர்கள் எந்தப் தரப்பின் பக்கம் நிற்கிறார்கள் என்பது நன்றாகவே புலப்படுவதும், அவை ஒரு போலியான முற்போக்கு, இடதுசாரி அரசியல் சரிநிலைகளை அனுசரித்தே எழுதப்பட்டுள்ளதும்தான் இந்த அலுப்புக்கான முக்கிய காரணங்கள்.

இதற்கு ஒரு சரியான உதாரணமாக, சைவ வைணவ சமயங்களுக்கும், சமண பௌத்த சமயங்களுக்குமான பூசல்கள் பற்றிய இடங்களையம், பின்னர் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புத்த பிக்குகள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்கள் விவரிக்கப்படும் விதத்தையும் சொல்லலாம். சமணர்கள், சைவர்கள், வைணவர்கள் பற்றிய பூசல்களை எழுதுமிடத்து, சைவர்களால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பதை எந்தத் தயக்கமுமின்றி தீர்மானமாக புனைவுக்குள் கொண்டுவரும் கதாசிரியர்கள், நாளந்தா பல்கலைக் கழக புத்த பிக்குகளின் படுகொலைகள் வர்ணிக்கப்படும் இடத்தில், அந்தப் படுகொலைகளை புரிந்தவர்கள் யார் என்ற எந்த அடையாளங்களையும் குறிப்பிடாமல் வாட்களையும் பிற கொலைக்கருவிகளையும் மட்டுமே குறிப்பிடும்போது இந்தப் புனைவில் எவ்வகையிலும் நம்பிக்கை கூடுவதில்லை. இத்தனைக்கும், இரண்டாவது சம்பவத்தை நிகழ்த்தியது, குத்புதீன் அய்பக்கின் தளபதி முஹம்மது பக்தியார் கில்ஜி என்பது வரலாற்று ஆவணங்கள் வழியாக தெளிவான ஒன்று. ஆனால், சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வோ, இன்னமும்கூட சற்று உறுதிப்படுத்தப்படாத ஒன்று. இவற்றில், நாளந்தா சம்பவத்தை நிகழ்த்தியர்வர்களைப் பற்றிய அடையாளமற்ற விவரிப்பு, படைப்பாளிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகிறது. இதில் விவரிக்கப்படும், வரலாற்று சம்பவங்களெல்லாம், வரலாற்றில் ஒரு மேலோட்டமான அறிமுகமுள்ள, அன்றாடம் செயதித்தாள் படிக்கும் ஒரு சுமாரான வாசகனுக்கே அறிமுகமானவை.

ஒரு நல்ல படைப்புக்கு மொழி வளமும் புதுமையான கதை கூறுமுறையும் இருந்தால் மட்டும் போதாது என்பதையும் இது உறுதிபடுத்துகிறது. வரலாறு மற்றும் சமூகச் சூழலைக் களமாய்க் கொண்ட புனைவுகளில் கதாபாத்திரங்களின் படைப்பில் நம்பகத்தன்மையும் சம்பவங்களின் நிகழ்வில் யதார்த்தமும் முக்கியமான அம்சங்கள் என்றும் சொல்ல வேண்டும். இதில் அவை முழுமையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. கட்டுரைகளில் சொல்லிவிடக் கூடிய விஷயங்களை புனைவாக மாற்றுவதில் உள்ள தோல்வி இதில் தெரிவது வருந்தச் செய்கிறது.