ராண்டோ

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)

நான்கு கன்னட கவிகள் – ராண்டோ

ஒரு சோதனை முயற்சியாக, மூல மொழியைக் கருதாமல்,  திரு ஏ கே ராமானுஜன் அவர்களின் Speaking of Shiva என்ற தொகுப்பில் உள்ள  ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன – கலவை விளைவுகளுடன்!

 

கால்களாய்
ஓடும் ஆறு.
வாய்களாய்
தகனிக்கும் நெருப்பு.
கைகளாய்
வருடும் தென்றல்.

அடியார்க்கு

குறியீடுளாய் விரிகிறது
முழைஞ்சுறை பெருமானின்
அவயவம்.
(அல்லம பிரபு)
 .
 .

(more…)

கால்பந்தை கால்மணி நேரம் – இரு கவிதைகள்

கவிதைப்படுதல்

– ஸ்ரீதர் நாராயணன்

அகண்ட எழுபது இஞ்ச் டிவி திரையில்
கால்பந்தை கால்மணி நேரம் பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான் அந்தக் கவிதை
உள்ளே நுழைந்தது

அணில்பிள்ளை சாடி விளையாடுவது போல
புஜத்திற்கு புஜம் பந்தை
சறுக்கவிட்டு வேடிக்கை காட்டியது

சிசர்ஸ் கிக் அடிக்கும் வேலுநாயகம் அண்ணன்
பின்னாடியே ராமசந்திரனும், சத்தியமூர்த்தியும்
செத்துப் போன முத்துகுமாருக்கு சப்ஸ்டிடியூட்டாக
சாயபு டீக்கடைப் பையன் பிஜி
நெல்லைப் பெண்ணை ஆள்வைத்து
தூக்கிய கிளமெண்ட்
குலமங்கலத்திலிருந்து கருக்கலில் கிளம்பி
ஓடியே தமுக்கத்திற்கு வரும் பாலமுருகன்
என்று பட்டியல் போட்டது

முட்டைக் கண்ணன் பேரு பாரதியோ சாரதியோ
காலைச் சுற்றிச்சுற்றி வரும் குழந்தையை
தாக்காட்டுவது போல
தளுக்காக பந்தை உருட்டிப் போவான்.

பாழாய்ப் போன கவிதை ஆளை சொன்னால்
பெயரை மறக்கிறது. பெயரைச் எடுத்துக் கொடுத்தால்
ஊரை மறந்து தொலைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்
தலைமை தாங்கிய ஃபைனல்ஸில்தான்
செக்கானூரனி அமீது கவட்டைக்குள்
காலைக் கொடுத்து புரட்டிவிட
காலொடிந்து போய்
அத்தோடு கவிதையும் காணாமல் போனது

அகன்ற திரையில்
காலி மைதானம் மட்டும் எஞ்சியிருந்தது

oOo

கொண்டதும் கொடுத்ததும்

எஸ். சுரேஷ்

கால்பந்தை​க்​ கால் மணி நேரம் பார்த்துக்கொண்டு
மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கு
அந்த சிறுவன் வருகை பார்த்து உஷாரானது

சிறுவன் கால்பந்தை நெருங்கும்பொழுது
மரத்தைவிட்டு நிலத்துக்குத் தாவி
கால்பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு
மரத்தில் ஏறி உச்சிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டது

கீழிருந்து வந்த அழுகைக் குரல் கேட்டு
“இந்த நாள் நன்றாக விடிந்தது,”
என்று சொல்லிக் கொண்டு உரக்கச் சிரித்தது குரங்கு.

அறையின் நடுவிலிருக்கும் யானை (ராண்டோ)

Elephant in the room

என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களைச் சிமிட்டி
வாலைச் சுழட்டிக் குதிக்கிறது, கொம்புகளை உயர்த்தி
கொடி பிடித்து நடக்கிறது, துதிக்கையை நீட்டி
மலர் சூட்டிக் கொள்கிறது, செவிகளை விசிறி
தரை அதிர நடக்கிறது, கெலித்த நகைப்பில்
வயர்கள் ஸ்பார்க் அடிக்கிறது – சானல்கள் அலற,
ஊரெல்லாம் கொதிக்க, அனைவரும் அறிய,
அறையின் நடுவிலிருக்கும் யானை
மறைந்திருக்கிறது, ஒவ்வொருத்தர் வீட்டிலும்

– அபிநந்தன் (more…)

பிரார்த்தனை – 1

ஸ்ரீதர் நாராயணன்

‘மாதவ்’ எனக் குரலைக் கேட்டதும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். அசோக்தான் அது. போட்டோவில் பார்த்ததற்கு இப்போது மீசை சற்று பெரியதாக இருந்தது என நினைத்துக் கொண்டேன்.

‘இந்தப் பக்கம் மண்டபத்துலதான் ஃபங்ஷன். இன்னிக்கு ரோகிணி நட்சத்திரம். கோவில்ல விசேஷம். முகூர்த்த நாள் வேற. அதான் கூட்டம் அம்முது. பெயர் வைக்கிற ஃபங்ஷனுக்கே நாலஞ்சு குரூப்பு வந்திருக்காங்க. ஆண்ட்டி, இப்படி பாத்து வாங்க’ என்றவாறு அம்மாவின் கையைப் பிடித்து வழிநடத்திக் கூட்டிக் கொண்டு போனார்.

அசோக் சொன்னது போல கூட்டம் தளும்பிக் கொண்டுதான் இருந்தது. ஏகப்பட்ட பெண்கள். தலையை சாய்த்துக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த பெண், உதடுகளை விரித்து பெரிய பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த அம்மாள், பட்டுபுடவையில் பரபரவென ஓடிக் கொண்டிருந்த பாட்டி, என எல்லோரும் உணர்ச்சி பிரவாகமாக தளும்பி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை அன்னைகள். தாய்மையின் வடிவில் பெண்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.

நான் அந்தக் கூட்டத்தில் தனுஜாவைத் தேடினேன். தனுஜா.. தனு.. தனு…

எனக்கு முன்னால் அம்மா தனுவை கண்டுபிடித்து விட்டாள். அடர்நீலப் பட்டுப்புடவையும், தங்க அட்டிகையுமாக தனு சோபையுடன் இருந்தாள். நிறம் சற்று மெருகேறி, தலைமுடி கூட கழுத்துவரை வளர்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டவளாக, கையில் அழுதுபுரண்டு நெளிந்து கொண்டிருந்த குழந்தையை பக்கத்தில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு எழ முயன்றாள்.
கருப்பு மை பொட்டு வைத்த, சின்ன சொப்பு போன்ற வாயோடு இருந்த குழந்தையைப் பார்த்ததும் எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா, குழந்தையின் கன்னத்தை தொட்டு முத்திவிட்டு, தனுவின் கையைப் பிடித்து தடவினாள்.

“நீதாண்டி பொண்ணே. உன்னோட வைராக்யம்தாண்டி, அப்படியே கிருஷ்ண விக்கிரகம் போலவே பொறந்திருக்குப் பாரு. நாந்தான் சொன்னேனே. நம்பிக்கை வைக்கனும்னு பொண்ணே’ என்றாள். சொல்லி முடிக்கும்போது குரல் தழுதழுத்திருந்தது.

‘எல்லாம் அவன் கருணை’ என்று அம்மாவிடம், பக்கவாட்டில் இருந்த நவநீதகிருஷ்ணன் சந்நிதியைக் காட்டிய அசோக் என்னை இழுத்துக் கட்டிக் கொண்டார்.

‘போட்டோவ விட நேர்ல யங்கா இருக்கீங்க அசோக்.’என்றேன் சிரித்துக் கொண்டே.
நான் முடிக்குமுன்னர் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்.

‘எங்க கனவெல்லாம் நனவாக்கினது நீங்கதானே. எல்லாம் அம்மாவோட ஆசீர்வாதம்’ என்றார்

கடந்த நான்கு வருடங்களாக புகைப்படங்களில்தான் பெரும்பாலும் தனுவைப் பார்த்திருந்தேன். அதுவும் முதலில் அசோக் அனுப்பிய கடிதத்தோடு அவர் இணைத்திருந்த படத்தில்தான் அவளைப் பார்த்தேன். மறக்க முடியாத படம் அது.

‘அன்புள்ள மாதவ் மங்கர்,’ என்று தொடங்கிய கடிதத்தில் அசோக் இப்படி எழுதியிருந்தார்.

“என் பெயர் அசோக். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சூப்பரிடெண்டெண்டாக பணிபுரிகிறேன். அறிமுகமில்லாது உங்களுக்கு மடலிடுவதற்கு மன்னிக்கவும். என் மனைவி தனுஜாவிற்கு உங்கள் அறிமுகம் நன்றாகவே உண்டு. இத்துடன் இணைத்திருக்கும் க்ரீட்டிங்க்ஸ் கார்டை அவள் பலமுறை என்னிடம் காட்டியிருக்கிறாள். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கு நீங்கள் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தட்டை. தனு இதுநாள்வரை தன்னுடைய எல்லா நண்பர்களிடமிருந்து வந்த கடிதங்கள், வாழ்த்துகள் எல்லாவற்றையும் கவனமாக சேகரித்து வைத்திருக்கிறாள்…”

நீளமாக பத்து பக்கங்களுக்கும் மேலிருந்தது கடிதம். மூன்றாம் வகுப்பு பள்ளி நண்பர்களிலிருந்து, ஃபாத்திமா கல்லூரியில் பிகாம் படித்தது வரை அத்தனை நண்பர்களைப் பற்றியும் வெகு விரிவாக எழுதியிருந்தார். வேணுகோபால், சூர்யகலா, மூக்குத்தி ப்ரியா, வைரவன், ராக்கி, ஜோயல் என்ற தனுவின் நீண்ட பட்டியலில் ஒவ்வொருவர் பற்றியும் சொல்வதற்கென அவ்வளவு விஷயங்களை வரிசைப்படுத்தியிருந்தார். அத்தனையும் தனுவின் நினைவிலிருந்து அசோக் பெற்றது.

இறுதிப்பகுதியில்,

“ஆனால், சமீபகாலமாக அவள் நினைவில் பல தடுமாற்றங்கள் குழப்பங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அவள் ஆத்மார்த்தமாக நினைக்கும் நினைவுகள், அனுபவங்கள் எல்லாம் அவளை விட்டு விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று எனக்கு பதைப்பாக இருக்கிறது. எதுவுமற்ற சூன்யத்தில் அவள் ஆழ்ந்துபோய்விடும் ஆபத்து தெரிகிறது. இக்கொடுமையிலிருந்து அவளை மீட்டெடுக்கத்தான் நான் அவளுடைய எல்லா நண்பர்களையும் தேடிப் பிடித்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நவநீத கிருஷ்ணன் கோவிலில் உங்கள் குடும்ப கட்டளை நடக்கவிருப்பதாக அறிவிப்பு போட்டிருந்தார்கள். தனுதான் ‘மங்கர் குடும்பம்’ என்று பெயர் பார்த்து உங்கள் புனே விலாசத்தை கோரிப் பெற்றாள்”.

முடிவில் அவளுக்காக நண்பர்கள் எல்லாம் பிரார்த்திக்கும்படி விண்ணப்பித்து, கூடவே பச்சை ஸ்கெட்ச் பேனாவால் ‘ஹேப்பி பொங்கல்’ என்று எழுதி கீழே ‘மாதவ்’ என கையெழுத்திட்டிருந்த இருபது ஆண்டுகால மக்கிய நெடியுடனான க்ரீட்டிங்க கார்டு இருந்தது. அந்த வாழ்த்தட்டையை பார்த்தபோது எங்களால் நம்பவே முடியவில்லை. அதனுடன் கூடவே அசோக் சில புகைப்படங்களும் அனுப்பியிருந்தார்.

இரட்டைப் பின்னலோடு ‘பம்’மென முகத்தோடு பினோஃபார்ம் அணிந்திருந்த சிறுமி. பாட்மிண்டன் மட்டையை பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் விளையாட்டுப் பெண். பூதைத்த பின்னலுடன் பட்டு தாவணியில். ஸ்டூடியோ வெளிச்சத்தில் கோட் அணிந்திருந்த முன்வழுக்கைகாரரோடு, பட்டுப்புடவையில். வைகை டாம் செயற்கை நீரூற்றுகள் முன்னே புன்னகைத்தபடி. கொடைக்கானல் பனிப்புகையிடையே ஸ்வட்டர் அணிந்த இளம்பெண் என வரிசையாக இருந்த புகைப்படங்களில் கடைசியாக மொட்டைத்தலையோடு ‘பளீர்’ என சிரித்துக் கொண்டு தனு.

அந்த கடைசிப் படம் எங்களை பதறிப் போக வைத்து விட்டது. உடனே அசோக்கை தொடர்பு கொண்ட போதுதான் தெரிந்தது, தனுஜா மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறாள் என்று.

ஒரு லும்பெக்டோமி முடித்து மூன்று சுற்றுகள் கீமோதெரபி போய் வந்திருக்கிறாள். லும்பெக்டோமி என்பது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மார்கபகத்தில் ஒருபகுதியை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றிவிடுவது. அதுவும் தனுஜாவிற்கு வந்திருப்பது ட்ரிபிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய் என்றார்கள். கொடூரத்தில்தான் எத்தனை வகை. மூன்றுபங்கு முற்றிய கொடுமை.

‘ஹேய், ‘ என்ற தனுவின் உற்சாகமான குரலில்தான் எங்கள் முதல் உரையாடலே தொடங்கியது.

‘எனக்கு நினைவு தெரிஞ்சு உன் கிரீட்டிங்க்ஸ்தாண்டா ஃபர்ஸ்ட் என் பெயருக்கு வந்ததுன்னு நினைக்கிறேன். தேர்டு ஸ்டேண்டர்ட் பொங்கல் டைம்னு நினைக்கிறேன். அப்புறம் நிறைய கார்டு, கிஃப்ட் வந்தாலும் உன்னோடதுதான் ஸ்பெஷல். காலேஜ் படிக்கும்போதுதான் எல்லாத்தையும் கலெக்‌ஷனா சேர்க்க ஆரம்பிச்சேன். அப்பதான் உன்னப் பத்தி எல்லாம் நினைவுக்கு வந்தது. இன்னும் ஊறுகாய்ல வெறும் சோத்தை பிசைஞ்சு உறைக்க உறைக்க சாப்பிடறயாடா” என்று அவள் ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

வரலாற்று புத்தகத்தை புரட்டுவது போல் பக்கம் பக்கமாக அவள் நினைவுகள் பொங்கி எங்களை நிறைத்துக் கொண்டே இருந்தது. பள்ளிக்கூடத்து வாசலில் ஐஸ் விற்கும் பென்னி, ஹெலன் டீச்சரின் பன் கொண்ட, முசுட்டு லைப்ரரியனின் பன் கொண்டை.

‘எவ்வளவு விஷயமும் நினைவுல வச்சிருக்கா பார். இதெல்லாம் ஒரு கொடுப்பினைதாண்டா’ என்று தனு பேசுவதை எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மா. வெகுகாலம் கழித்து அம்மாவின் முகத்தில் அவ்வளவு பெரிய புன்னகை. தினமும் ஒரு பழங்கதை என தனு எங்கள் வாழ்வில் ஒரு பகுதியானாள்.

தனுவின் உலகம் அப்பொழுது பழைய நினைவுகளால் மட்டும் நிறைந்திருந்தது. வெளி வாசலில் போவதை முற்றிலும் துறந்து வீடு, ஆஸ்பத்திரி, போன், கீமோ என்று அவளுடைய சூழல் சுருங்கிவிட்டிருந்தது.

‘ஆமாம்டா, அதே வீடு, அதே கிச்சன், அதே ஊரு, அதே அசோக், இருந்தாலும் இப்ப எனக்கு நிறய விஷயம் புதுசு புதுசா தெரியுது. நேத்து பூரா எல்லா ஃபோட்டோ ஆல்பத்தையும் முழுசா பாத்தேன். எத்தன பேர் கண்டுபிடிச்சேன் தெரியுமா இவங்கள எல்லாம் பாத்து பேசறதுக்கு தனி ஆயுசு வேணும்டா. நேத்து புவனின்னு பழைய காலேஜ் மேட். அவளோட பையன் போட்டோ அனுப்பியிருந்தா. எவ்ளோ க்யூட் தெரியுமா அது. இரு உனக்கு ஃபார்வேர்ட் பண்றேன்’

அடுத்த முறை போனில் பேசும்போது மீண்டும் அதே புவனி, அதே குழந்தையின் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பாள். தொடர் கீமோவால் ஏற்படும் நினைவுக் குழப்பங்கள். நாக்குழறல்கள். மயக்க உளறல்கள் என. ஆனால் எத்தனைமுறை ஆனாலும் அதைக் கேட்க நாங்கள் தயாராக இருந்தோம்.

“சுத்தமாக நினைப்பேயில்லாமல் வெந்நீர் ஷவரில் நின்னுக்கிட்டே இருந்தாப்பா” என்று அசோக் ஒருமுறை சொன்னார்.

‘நல்லவேளை. பத்து நிமிசத்துல கண்டுபிடிச்சு கூட்டி வந்திட்டேன். நெருப்பு காயமெதுவும் ஆகல. ஒரு கைக்கொழந்த கணக்காத்தான் பாத்துக்க வேண்டியிருக்கு மாதவ். நைட்டெல்லாம் தூங்கவே மாட்டேங்கிறா. ஆப்பரேஷன் ஆன மாரை மாரை தொட்டுப் பாத்துகிட்டு… எவ்ளோ வேதனை பாருங்க’ அவர் குரல் கம்மிவிட்டது.

அம்மா அவருக்கு ஆறுதலாக,

‘பாருங்க. இந்த டிப்ரெஷன்லேந்து வெளில வர்றது எளிசில்ல. தொடர்ந்து நாமதான் அவகிட்ட பேசிக்கிட்டே இருக்கனும். அன்பு செலுத்திட்டே இருக்கனும். அதுதான், இருண்ட குகைக்குள்ள கிடைக்கிற வெளிச்சக் கீற்று மாதிரி. அதுதான் அவளை அங்கிருந்து வெளில வர்றதுக்கான நம்பிக்கைய கொடுக்கும். மனசை விட்டுடவேப் படாது’ என்றாள்.

தொடர் கீமோ பாதிப்பால், கருமுட்டைகளை அகற்றிவிடுவது பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது தனுவும் அசோக்கும் முற்றிலும் உடைந்து போனார்கள்.

‘இது என்னடா பாவம் செஞ்சது? நாந்தான் ஏழு ஜென்ம பாவத்துக்கும் இப்படி கீமோ சோமோன்னு வெந்து போறேன். இதையும் சேத்து என்னோட சுழல்ல அழுத்தி சாகடிச்சிருவேன் போலிருக்கே. ஏதாச்சும் சினிமா படத்துல வர்ற மாதிரி ஒரே நைட்ல ‘ட்க்’னு ப்ரெக்னென்ட்டா ஆயி குழந்தை பெத்து இது கைலக் கொடுத்திட்டு அப்புறமா செத்து போயிடறேண்டா. புள்ளைங்கன்னா அவ்ளோ இஷ்டம்ப்பா இதுக்கு’ என்றாள்.

‘நடக்கும்டி பெண்ணே. நம்பிக்கை வைச்சா எல்லாம் நடக்கும். நாஞ்சொல்றேன் கேளு’ என்றாள் அம்மா. அவளுடைய வழமையான பல்லவிதான் என்றாலும் அந்நேரத்தில் அது தனுவிற்கு அவ்வளவு நம்பிக்கைக் கொடுத்தது.

‘எப்பப் பாத்தாலும் இரத்தமா எடுத்து டெஸ்ட் பண்ணிட்டே இருக்காங்க ஆன்ட்டி. நாளக்கி குழந்த பிறந்தா பால் கொடுக்க ரத்தமே இருக்காது பாத்துக்கோங்க’ என்றாள்.

அவள் நான்கு வயதில் பார்த்த அணில்பிள்ளையிலிருந்து, பக்கத்து மளிகைக் கடையில் பார்த்த ரோஜாப் பொதி போன்ற குழந்தைவரை விதவிதமாக பேசி தீர்த்தாள். ‘எங்க அத்தாச்சி கை இம்மாம் பெருசா இருக்கும். அப்படியே ஒத்தக்கையில கைக்குழந்தையை தூக்கிருவாங்க. வூட்ல இருக்கற அத்தன குழந்தையையும் அந்த ஒரே கைலதான் தூக்கியிருக்கு. அதும் மனசு அப்படிடா. எனக்குந்தான் ரெண்டு கை வெட்டிக்குன்னு படைச்சிருக்கான் பாரு’
அம்மாவின் அன்றாட பிரார்த்தனைகள், கோவில் விஜயங்கள் எல்லாம் தனுவின் பொருட்டு இரட்டிப்பானது. நான்கு நெடிய, நம்பிக்கையற்ற வறண்ட ஆண்டுகள் கழித்து, அந்த பொன்னாளில் தனுவின் போன் வந்தது.

‘அசோக் ஃபோன் எடுக்கவே மாட்டேங்குது. யார்கிட்டயாவது உடனே சொல்லிடனும்னு பரபரன்னு இருந்தது. அதான் உன்னைக் கூப்பிட்டேன். யூரின் டெஸ்ட்ல பாசிடிவ்டா. இப்பத்தான் பாத்தேன்’ என்று உலகையே வென்ற மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

எனக்கு கண்கள் நிறைந்து தளும்பியது. கூடவே இதென்ன சர்க்கஸ் மேடையா. புற்றுநோய் மீண்டும் வரக்கூடும், கருவைத் தாக்கக்கூடும் என்ற அபாயங்களை எல்லாம் தாண்டி இப்படி ரிஸ்க் எடுக்கிறாளே என்று கோபமாகவும் இருந்தது. அசோக்கிடம் தனியே கொட்டித் தீர்த்தேன்.

‘ஏன் அசோக் அவசரப்பட்டீங்க? அஞ்சு வருசமாச்சும் ஆக வேணாமா? எவ்ளோ காம்ப்ளிகேஷன்ஸ்னு உங்களுக்கு தெரியாத’

‘இத்தன வருசமும் இந்த குழந்தை நினப்புலதான் அவ உலகமே சுத்திட்டிருந்தது மாதவ். நான் என்ன செய்யட்டும்’என்றார்.

குழந்தை பிறந்த இரண்டு மணிநேரத்தில் ஃபோன் செய்துவிட்டாள். ‘நல்லா வாள் வாள்ன்னு கத்த விட்டாங்க பாவம். இப்பதான் அசந்து தூங்குது. எனக்கு நானே பிரசவமாகி வெளில வந்தமாதிரி இருக்குடா. அதும் எம்புட்டு வேதனைப் பட்டுச்சோ… ரொம்ப க்யூட்டா இவனுக்கு டிம்பிள் எல்லாம் விழுது பாரேன். எங்கம்மா இருந்தா எங்க ஃபேமிலில யார்யாருக்கு கன்னத்துல குழி விழும்னு பெரிய லிஸ்ட்டே போட்டிருப்பாங்க. நீயும் ஆண்ட்டியும் உடனே புறப்பட்டு வர்றீங்க’ என்றாள்.

‘மாங்கா மாமா வந்திட்டான் பாரு’ என்று குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தால், வாயில் பேசிஃபையரை சப்பியபடி புஷ்பக்கொத்து என குழந்தையைக் காட்டி சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா. இன்னமும் தனுஜாவின் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்தாள்.

தாய்மையின் முழுமையோடு தனு அந்தக் குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க அவ்வளவு நிறைவாக இருந்தது.

“இத்தன வலியும் வேதனையும் தாண்டி குழந்தைக்கு தவமிருந்த பாரு. அதுதாண்டி பொண்ணே வைராக்யம். பிரார்த்தனைன்னா ரெண்டு மூணு நிமிஷ வேண்டுதலும் தோத்திரமும் மட்டுமா என்ன. நாம வேண்டறது கிடைக்கிற வரை நிலைச்சு நிக்கிறதுதான்.” என்றாள் அம்மா.

மளமளவென பூஜை சடங்குகள் நடக்க ஆரம்பித்தன. மகிழ்ச்சியின் மினுமினுப்போடு இருந்த தனுஜாவைப் பார்த்தபடி, அம்மாவும் நானும் ஓரமாக அமர்ந்திருந்தோம். அம்மா கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்கியபடி.

‘இனி மாதவ் பத்தின கதைகளை விட இந்த குட்டிப் பயலப் பத்திதான் தனு அதிகம் பேசிட்டிருப்பா. அதத்தான் நாம கேக்கனும்’ என்றாள். வழமையாக இது போன்ற சந்தர்ப்பங்களில், அவள் குரலில் வெளிப்படும் நினைவுகளை துறக்க முடியாத தவிப்பை விட, இப்பொழுது சந்தோஷம்தான் அதிகம் நிறைந்திருந்தது.

‘இருபது வருஷம் கழிச்சு அவன் கையெழுத்து கிடைச்சது. இப்படியொரு மறுபிறப்புக்குத்தான் போல’ என்றேன்.

மலர்ந்த புன்னகையோடு அம்மா என்னை திரும்பிப் பார்த்தாள். தாய்மைக்குத்தான் எத்தனை முகங்கள். பிரார்த்தனைகள் தொடர்ந்து பலன்களை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன.

பிரார்த்தனை – 2