ரா. ராமசுப்பிரமணியன்

பித்து

ரா. ராமசுப்பிரமணியன்

I

அவன் சொன்ன வாசகத்தில் இருந்து ” ஆரோஹணம்…. சிங்கம்…. அலங்காரம்…. திரிசூலம்…. ” என்பது தான் என் மனதில் நின்றது. இதை வைத்து தான் அந்த பிம்பத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்தேன். தூரிகையை முக்கியும் அமிழ்த்தியும் பார்த்து விட்டேன். வந்து அமரவில்லை. வீட்டு முற்றத்தில் முன்தினம் பெய்த கடும் மழை தேங்கி இருந்தது. உடன் வந்திருந்த கண்ணன் இருந்த சுதேசமித்திரனை எடுத்து திண்ணைக்கு போய்விட்டார். எதிரில் இருந்த காரை சுவரில் இருந்த பிறையின் கீழ் தான் அவன் அமர்ந்திருந்தான். கோட்டும் பஞ்சகச்சமும் உடுத்தி, ஒரு காலை குத்திட்டு, அதில் கையை ஊன்றி தலையில் முண்டாசுடன் வீர பாண்டிய மீசையும் தாடியுமாய் கண் மூடி இருந்தான். பக்கத்தில் இருந்த தாம்பாளத்தில் இருந்து அவன் தாம்பூலத்தை தரித்து இருந்ததை பார்க்கும் போது கண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்தது.

“ஆர்யா…. இவன் முன்ன மாதிரி கிடையாது. இப்போதெல்லாம் சிவமூலிகை பழக்கம் எல்லாம் ஆரம்பிச்சாசு”.

அந்த பிம்பத்தையே வரைந்து காட்டிவிடலாமா என்று கூட யோசனை வந்தது.

திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் வண்டியில் ஏறி பாண்டிச்சேரிக்கு கிளம்பினேன். அங்கு இருந்த ஆங்கிலேய ஆரக்ஷணர்கள் இருவர் எதிரில் வந்து அமர்ந்தனர். என்னையே துருவி துருவி நோட்டமிட்டனர்.

“சாமி, எங்க போறீங்க”

” நான் பாண்டிச்சேரிக்கு போறேன்”

” அங்க யார பார்க்க போறீங்க? ”

“கலவை சங்கர செட்டியாரை”

” ஓஹோ …. என்ன விஷயம் ”

” ஒரு வணிகம் சம்மந்தமா பார்க்க தான் ”

என்னையே மேலும் கீழும் நோட்டமிட்ட இன்னொருத்தன்,

” நீங்க சுதேசி இல்லையே”

” நான் சுதேசியோ விதேசியோ அல்ல. சாதாரண மனிதன். கொஞ்சம் உத்தரவு கொடுக்கரேளா ?”

“சாமி…. பத்திரம்…. அங்க தேசவிரோத கும்பல் ஒன்னு இருக்குது. சரியான கூட்டு களவாணிகள் . எல்லாரையும் கத்தியை காட்டி மெரட்டி காசு பறிக்கும் கும்பல் அது. சில துரைமார்களை எல்லாம் கொன்னுர்க்காங்க. முக்கியமா பாரதிங்க்றவன் பொல்லாதவன். எதாவது விஷயம் தெரிந்தா வரும்போது சொல்லுங்க. நல்ல சன்மானம் கிடைக்கும்”

சரியென்று தலை ஆட்டினேன் .

வீட்டுதிண்ணையில் எனக்காக காத்திருந்தவன் வண்டியை விட்டு இறங்கியவுடனேயே ட்ரங்கு பெட்டியை வாங்கிக் கொண்டு கையை பிடித்து நேராய் பூஜை பெட்டகத்தை தான் காட்டினான்.

ஒரு தத்தாத்ரேயர், சுப்ரமணியர்,துர்க்கை விக்ரகங்கள் இருந்தன .

“நான் கண்டுகொண்டு விட்டேன் ஆர்யா…. நமக்கு ஒரு புதிய தெய்வம் தேவை. அவளின் ரூபம் கூட இதோ பராசக்தியின் ரூபம் தான். அவளை பற்றி தான் இனி நான் பாடப் போகிறேன். பழம்பெரும் பாரத பூமி புத்துயிர் பெற அவளே நமக்கு தேவை. ”

சம்ப்ருதாயத்துக்கு மட்டும் ஒரு கும்பிடு போட்டேன். இப்போதெல்லாம் என்னுள் இறைமறுப்பு பொதிந்து விதைந்து விளைந்து கொண்டு இருக்கிறது. சக்தி உபாசனை செய்ய தொடங்கி விட்டதாக சொல்லி இருந்தான் . இவ்வளவு தீவிரம் என்று எதிர் பார்க்கவில்லை.

எதிரில் வந்து அமர்ந்த கண்ணன் ,

” நீங்க தான் ஆர்யாவா ?”

“ஆமாம் ”

” பாரதி உங்களையே தான் அடிக்கடி சொல்லுவான். அத்யந்த நண்பன் என்று . உங்கள் முழு பெயர் ?”

“சின்ஹகுளத்திபட்டி யதிராஜ சுரேந்தரநாத் ஆர்யா ”

” ஒ… தெலுங்காளா நீங்க….”

“ஆமாம்….. பூர்வீகம் எல்லாம் தெலுங்கு தான். ஆனால் நான் சென்னையில் தான் வளர்ந்தேன்”

“ஒ அப்படியா… அடுத்தாப்ல இருக்கற தெரு முக்குல வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. நெறைய கச்சேரி எல்லாம் ஜோரா நடக்கும். தெலுங்கு கச்சேரி கூட கேட்டிருக்கேன். அன்னமாச்சாரியார், பத்ராசல ராமதாசர் கிருதி எல்லாம் கூட தெரியும். நான் பாடி நீங்க கேட்டதிலேயே ”

“இல்லை”

“பாடவா”

“பாடுங்கோ….”

கொஞ்சம் சுருதி பிடித்தார்…..

” பிரம்மமொக்கட்டே பர பிரம்மமொக்கட்டே பர ” என்று இழுத்துப் பாடினார். சுருதி சுத்தம் இல்லை என்றாலும் தெலுங்கு சாஹித்தியம் அக்ஷர சுத்தமாக இருந்தது”

II

காலையில் இவன் கிளம்பும் பௌசிலியே தெரியும் பத்திரிகை காரியாலயத்துக்கு அவ்வளவு சீக்கிரம் போகபோவதில்லை என்று. ஈஸ்வர தர்மராஜர் தெருவில் இருந்து நேராய் வேதபுரீஸ்வரர் கோயில் வாசலுக்கு வந்து ராஜ கோபுரத்தையே மேலும் கீழும் பார்த்து விட்டு “நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய ” என்று துதி பாடி ஒரு நாழிகை கைகூப்பி கண்மூடி இருந்தான். இவனுடன் சேர்ந்தது தான் சேர்ந்தேன் . நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும் . என்னை சீண்டி பார்ப்பதில் அவனுக்கு கொள்ளை பிரியம்.

” பாரதி நாம வங்காளத்தார் ஆஷ்ராமதுக்குன்னா போறோம்ன்னு நினைச்சேன்”

” இவன் என் நண்பன் சுரேந்திரநாத் ஆர்யா தங்கி இருக்கும் வீடு ஓய். நீர் நேற்று கூட பார்த்திருப்பீரே. ”

என் பெயர் கண்ணன். குவளை கண்ணன் என்று தான் என்னை அழைப்பார்கள். இவன் எழுதிய கவிதைகளை படித்து விட்டு பாண்டிச்சேரியில் இந்தியா பத்திரிக்கையில் உபகாரம் செய்ய ஆள் வேண்டும் என்று இங்கு வந்து இப்போது இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டேன்.

இந்தியா பத்திரிக்கைக்கு மேற்காய் செல்லவேண்டும். கிழக்காய் இவன் கூட்டிக்கொண்டு போகும்போதே தெரியும். வங்கத்தில் ஒரு பிரிட்டிஷ் துரையை கொன்னுட்டு இங்கே தஞ்சம் புகுந்துருக்காருன்னு கேள்விபட்டேன் . எப்படியும் வா.வே.சு அய்யர் வந்து விடுவார். கச்சேரியும் ஆரம்பித்துவிடும் . அரவிந்தர் வேதம், வேதாந்தம், யோக சூத்திரம் என்று பேசிக்கொண்டு ஒரு ஸ்லோகத்துக்கு ஒரு மணி நேர வியாக்யானம் சொல்லுவார். நடுவில் சாக்த போதனை வேறு நடக்கும். அங்கே போகுவதற்கே எனக்கு பிடிக்காது. அவர்கள் பேசுவது புரியாது. சம்பாஷனை எல்லாம் இந்துஸ்தானத்தில் தான். எனக்கு தேவநாகிரி லிபியை மட்டும் எழுத்துக் கூட்டி அக்ஷரங்களை வாசிக்க தெரியும். நான் கண்டது எல்லாம் நாலாயிரம் தான். அய்யர் உலக இலக்கியம்ன்னு ஆங்கிலத்தில் உரையும் சொல்லுவார். எப்போதாவது கம்பராமாயணம் பற்றி பேசினால் தான் உண்டு.

III

பூஜை பெட்டகம் திறந்தே இருந்தது. ஓரமாய் இருந்த காமாக்ஷி விளக்கில் ஒரு ஜோதி தெரிந்தது. குழந்தை பறித்து தொடுத்து வைத்திருந்த பவழமல்லி மாலையை தரித்த தத்தாத்ரேயர் விக்ரஹம் பொலிந்து நின்று இருந்தார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பேரூழியம் செய்யும் மூவர் ஓருருவம் கொண்டு திகழும் அழகிய தத்துவ பிம்பம். ஆனால் புராணம் சொல்லும் கதை மட்டும் எனக்கு உவப்பானதில்லை. அருகில் வேலேந்திய செந்திலாண்டவரும் சிறிய துர்க்கை விக்ரஹமும் ஒரு வாளும் தென்பட்டது . அந்த வாளை பார்க்கும் போதெல்லாம் அய்யர் குயில்தோப்பில் நடத்தி இருந்த களரிபயத்து பயிற்சியில் கேடயமும் வாளும் தாங்கி போர் தொழில் பழகிய எழுச்சி என்னுள் பரவும் .

முன்தினம் பெய்த அடைமழையில், கேட்ட இடி சத்தமும், தரையில் ஒளிரிய மின்னலையும், வீட்டின் கதவுகள் ஓங்கி அடிப்பதையும், வீட்டின் படியில் ஏறிய மழை நீரையும் பார்த்தபடி நான் எங்கேயோ தொலைத்த உற்சாகம் மீண்டது.

காற்றடிக்குது ….. கடலும் குமுறுது ….. தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொலைத்தடிக்குது….. நான் கண்விழித்தேன்……..

அந்த உற்சாகம் காலையில் சூர்ய வந்தனம் செய்த போது ஓங்கி பெருத்தது. ஆனால் கண்ணனின் பதறிய முகம் கண்டு மீண்டும் தொலைத்தேன்.

“பாரதி…… குழந்தைக்கு ஜுரமோ ஜுரம். நம்ம கஷாயம்லாம் ஒத்து வரலை. இங்க எதோ லோபித்தால்ன்னு சொல்றா. பிரெஞ்சு வைதியசாலையாம். இங்க்லீஷ் மருத்துவருக்கு சொல்லி இருக்கு”

நார்கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாளுக்கு நெற்றி அனலாய் தொதித்ததை என் புறங்கை விரல்கள் உணர்ந்தன.

செல்லமாள் அடுக்களைக்கு போயும் வந்த படி முந்தானையால் முகத்தை துடைத்த படி முனகிக் கொண்டு இருந்தாள். கிணத்தடியில் குளிக்க செல்லும் போது தான் என் லௌகீக கர்மா பற்றிய சிந்தனை வந்தது. குயில் தோப்பில் கூடியிருந்த சகாக்களுடன் பத்திரிக்கைக்கு வந்த ஊதிய பணத்தை மாங்காய் வாங்கி பந்தாடியது, அவள் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அரிசி பருப்புக்களை ஓர் கவித்துவ வீரியத்தில் முற்றத்தில் வீசியது , எதை பற்றியும் கவலை இல்லாமால் சித்தானந்தா கோவிலில் த்யானித்து பிரம்மத்தில் லயித்தது எல்லாம் பிழை என்று பட்டது. ஆனால் அவளுடைய குறை இது எல்லாம் கிடையாது. கனகலிங்கத்துக்கு உபவீதம் அணிவித்தது தான்.

” நமஸ்தே அஸ்து மகா மாயே ஸ்ரீபீடே ஸ்வரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ”

எப்பொழுதும் காலையில் நான் எழுதிய துதி பாடல்களோ , வேத மந்திரங்களோ, உபநிஷத்களின் சாந்தி மந்திரங்களோ என் நாவில் துலங்கும். இன்று ஏனோ இப்படியாக ஒரு ஸ்தோத்திரம். திடீர் என்று இடி சத்தம் கேட்டது. வீட்டின் கல் தளத்தில் மெல்லிய ஒரு அதிர்வு . மேலே இருந்த மண் ஓடுகள் திடீர் என்று பிரிந்து. வானத்தில் இருந்து பொன்மழை வந்து கொட்ட ஆரம்பித்தது. இப்போதைக்கு மட்டும் கலவை சங்கர செட்டியாரிடம் வாங்கிய கைமாற்று பணத்தை கொடுத்து விடலாம் என்று கொஞ்சம் எடுத்து கோட்டில் வைத்துக் கொண்டேன்.

IV

” சுப்பையா…… ஓய் …. சுப்பையா….”

கண்முடி தாம்பூலம் தரித்து தடித்திருந்த நாக்கில் அரி நெல்லியை வைத்து கடித்துக் கொண்டு வந்தான்.

நான் வரைந்த படத்தை மறுபடியும் மறுபடியும் உற்று பார்த்து என்னை ஆர தழுவினான்.

ஓரமாய் கட்டிலில் நான் விரித்து இருந்த வெள்ளை அட்டையை மீண்டும் பார்த்தேன். அவன் வீட்டிற்கு வந்திருந்த போது அதை தான் அவனிடம் காட்டினேன். அந்த படத்தில் ஒரு பெண்ணும் எண்ணற்ற குழந்தைகளும் இருந்தனர் . குழந்தைகள் எல்லாம் ஒரு வெள்ளை துண்டை இடிப்பிலும், ருத்ராக்ஷ கொட்டையை கழுத்திலும் , தலையை சவரம் செய்து கையில் ஒரு தட்டத்துடன் சோணித்து இருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் ஒரு பெண் கசங்கிய கருஞ்சேலையில், தலையில் இருந்த கிரீடம் சரிந்து காதில் லோலாக்குகளில் இருந்த கற்கள் விழுந்து கழுத்தில் உள்ள ஆரத்தில் இருந்த பதக்கமெல்லாம் போய் வெற்று கயிறுடன் இருந்தாள் . அந்த ஓவியத்துக்கு பாரத தாய் என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்போது தான் அவன் அந்த வாசகம் சொன்னான்.

” அவள் சிங்கத்தின் மேல் ஆரோஹரித்து இருப்பாள். கையில் திரிசூலம் ஏந்திருப்பாள். இப்போது அன்னியர்க்கு அடிமை பட்டிருந்ததால் கங்கையும் இமயமும் எங்கே போயிற்று…. அவளை அலங்கார பூஷிதையாக பராசக்தியாக என்முன் வரைந்து காட்டு ……” என்று எதிரில் முக்காலியில் போய் அமர்ந்தபடி பாதத்தால் தரையில் தாளம் போட்டுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தான். விடுக்கென்று சவரில் போய் சாய்ந்து கண் அசந்தான்.

மறுபடியும் மறுபடியும் என் காதில் அந்த வாசகம் பிரவாகித்தது. முண்டாசும் , கோட்டும் , பஞ்சகச்சமும் அங்கிருந்து அகன்றிருந்தது.