– பாஸ்டன் பாலா –
காட்டுப் பறவைகளுக்கு குளிர் காலத்தில் உணவு எளிதில் அகப்படுவதில்லை. நான் இருக்கும் வனாந்திரத்தில் குருவிகளும் மரங்கொத்திகளும் போதாதென்று சிவப்பு, நீலம் என எல்லா நிறங்களிலும் பட்சிகளைப் பார்க்க முடிகிறது. புள்ளினங்களைக் கவர்வதற்காகவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தீனி வைத்திருக்கிறேன். சிட்டுகளும் சிறகடித்து வரும். கொஞ்சம் கொத்தும். முதலில் சோதனைக்காக, நண்பர்களை அழைத்துச் சாப்பிடச் சொல்லும். அதன் பிறகு பக்கத்து வீட்டு அமுதசுரபிக்கு ஓடிவிடும். அங்கேயும் முகர்ந்தும் ஊர்ந்தும் உரசியும் சோதித்தபின் இன்னொரு கிளையைத் தேடிக் காணாமலேயே போய்விடும்.
இதையெல்லாம் காண்பதற்கு முன்பே, இப்படி புரட்டிப் பார்த்து சோதிக்கும் நிலை எனக்கும் வாய்க்கப் பெற்றிருந்தேன். காய்கறிச் சந்தையில் அரை கிலோ காரட் மட்டும் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருப்பார்கள். முதலில் கண்ணில் பட்டவரிடம் ஐந்து கிலோவிற்கான விலை கேட்டு, கேரட்டைத் தொட்டுப் பதம் பார்த்து, பேரம் பேசி, அதன்பின் அந்தக் கடையிலிருந்து விலகி, நாலு கடை தள்ளி, மீண்டும் காரட் ‘கிலோ என்ன விலை’ என்று கேட்டு, ஆதியிலிருந்து அலசலைத் தொடங்குவதில்தான் இந்த சுகானுபவத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷனும் தூர்தர்ஷன் இரண்டாம் அலைவரிசையான மெட்ரோவும் மட்டுமே இருக்கப் பெற்றிருந்தாலும், அவை இரண்டையும் மாற்றி மாற்றி வேடிக்கை பார்ப்பதில் இந்த விளையாட்டு வளர்ச்சியடைந்தது. இப்பொழுது புத்தகக் கடையில் நூல்களை மேய்வதில் வந்து நிற்கிறது. (more…)