றியாஸ் குரானா

றியாஸ் குரானா கவிதைகள்

ஒரு பக்க இரவு

இரவு கொண்ட கதவுகளை
மூடிவிட எதுவும் வரவில்லை.
நினைவுகளின் வழியாக
தப்பிச் சென்றவளை
ஒரு முறை சந்திகலாமா
என முயற்சிக்கிறேன்.
அவளோ, நினைவுக்கு முன்
உருவாகியிருந்த மதிற்சுவரை
ஏறி கடந்திருக்கலாம்.
நினைவுக்குள் தங்குவதற்கு
சற்றும் இடந்தரவில்லை.
வெளியேறிச் சென்றபோது,
யாரும் உள்ளே புக முடியாதபடி
 நினைவை மாற்றி வைத்துவிட்டாள்.
வேறுயாரும் வசிக்க உகந்த சூழல் அங்கில்லை.
 இவ்வளவு சொன்னபின்னும்
பிடிவாதமாக இருந்தால்,
உன் அதிருப்திகளுக்கு நான் பொறுப்பல்ல.

இரு பக்க தனிமை

அவளைப் பின்தொடர்ந்து செல்கிறது நெடுஞ்சாலை
பதற்றத்துடன் திருமபிப் பார்க்கிறாள்
யாருமில்லை
எதுவும் பின்தொடரவுமில்லை
சாலையின் இருமருங்கும் மாறியிருக்கிறது
மெல்ல நடக்கத் தொடங்குகிறாள்
வேகம் அதிகரிக்கிறது
ஓட்டம் பிடிக்கிறாள்
வீட்டை அடைந்ததும்
மூச்சிரைக்க திரும்பி சாலையைப் பார்க்கிறாள்
செத்த பாம்பைப்போல அசையாமல் கிடக்கிறது
தனது காலடிச் சத்தம்தான்
தன்னைக் கலவரப்படுத்தி துரத்தியதாக
நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்
இப்படி பல சம்பவங்களை உருவாக்கியே
நான் தனிமையைக் கடக்க முயற்சிக்கிறேன்.

சில நினைவின் காலடி

நெடு நாட்களுக்குப் பின்
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
இரண்டாக பிளந்துவிட்டது
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
நீ வநடதிருக்காவிட்டால்
பகலை இரண்டாக துண்டாட
அறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்

றியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம்

பதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு- 

பதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா?

றியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.

பதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா?

றியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்பிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.

அத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது. (more…)

கவிதையும் கேள்வியும்

கடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

கவிதைகள்-

அதிகாலை ஒரு வெள்ளைக்கதவு

நினைவு தேன்கூடு

கறுப்புப் பெட்டி

தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

கட்டுரைகள்- 

கவிதையும் வாசக மனநிலையும்

கவிதையின் உண்மைகள்

கற்பனையும் மொழியும்

தமிழ் கவிதை வடிவம்

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன? 

கவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம்  உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன?

றியாஸ் குரானா

பதாகை – நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி – என்று ஏராளமான நீதி நூல்கள் தமிழ் கவிதை மரபில் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யுட்கள் என்று வகைமைப்படுத்துகிறோமே தவிர, கவிதைகளாகக் கருதுவதில்லை. இது நம் மரபிலிருந்து நம்மைத் துண்டிப்பதாகாதா? எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா? பாடல்களையும் செய்யுட்களையும் கவிதையல்ல என்று விலக்கி வைப்பதற்கான தேவை என்ன?

றியாஸ் குரானா – உங்கள் கேள்வியை நான் விளங்கிக்கொண்ட வகையில் இதற்கு பதில் முயற்சிக்கிறேன். செய்யுள் மற்றும் பாடல் போன்றவைகள் எல்லாம் கவிதையின் வேறு வகையினங்கள்தான். அதாவது, கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். கவிதை மரபென்பது, இப்படி பல வகையினங்களை உள்ளடக்கிய ஒன்று. அவைதான் உண்மையில் தமிழ் கவிதையின் தொடர்ச்சி. இன்று புதுக்கவிதை எனச் சொல்லுவதோ அல்லது நவீன கவிதை எனச் சொல்லுவதோ தவிரவும், என்னைப் போன்றவர்கள் இன்னும் சற்று மேலேபோய் நவீனம் கடந்த கவிதை எனச் சொல்லுபவைகளோ தமிழ் கவிதை மரபைச் சேர்ந்தவை அல்ல. ஆயினும், இந்த கவிதைக் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய புதிய வகையினங்கள் இன்று தமிழ் மனதினதும், தமிழ் கவிதை பாரம்பரியத்தினதும், தமிழ் நிலவியலினதுமான உள்ளீடுகளை தனக்குள் அடிப்படையில் வைத்துக்கொண்டு, கவிதைக்கான கற்பனைச் செயலை உலகளாவியதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது தனித்துவமும், பன்மைத்துவமும் கவிதை வெளியில் இணைந்து செயற்படுவதாகும். (more…)

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

றியாஸ் குரானா

மழை மெல்லத் தொடங்குகிறது
துாறி பின் கற்களைப்போன்ற
தண்ணீர்த்துளிகளை வீசத்தொடங்குகிறது
வழமைபோல
மழை நீடித்தால் எப்படி
அதைக் கடந்து செல்வது
மழையின் அருமையையும்
கூதலின் நீண்ட ஆதரவையும்
மரங்களில் இறங்கும் அழகையும்
முணுமுணுக்கும் அதன் குடும்பப் பாடலையும்
நினைவிலேற்றி
மழையை கடந்துவிட முடியாது
அது சலிப்பை தந்துவிடும்
ஓய்ந்துவிடத் தயாராகிறது
அதை நான் விரும்பவில்லை
காத்திருக்கும் ஒருவருக்கும்
காத்திருக்கச் செய்தவருக்கும்
இடையே ஓயாமல் பெய்விக்கிறேன்
காத்திருப்பவரின் பக்கத்தில்
துாறச் செய்தும்,
மற்றப்புறத்தில் பெரும் மழையாகவும்
நீடிக்கச் செய்கிறேன்.
இருவருக்கிடையிலும்
மழை புதிய அர்த்தத்தை
துளிகளாக கொட்டுகிறது
காலங்கள் நீளுகின்றன
மழை என்ன செய்கிறதென
கண்காணிப்பதற்கு
ஜன்னலைத் திறந்து பார்க்கிறேன்
நெடுநாட்களாக மழை வராததால்
எங்கோ இருந்து எழுந்து
மழை தேடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு பூந்தோட்டம்.
திறந்து பார்த்த ஜன்னல்
நிரந்தரமானதல்ல
எப்போதாவது மாத்திரம் தோன்றுவது
இதை நீங்கள் எப்படியும் வாசிக்க முடியாது
ஜன்னல் இருந்தால்
திறந்து பார்க்கலாம் அவ்வளவுதான்.