பதாகை – கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?
றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல. (more…)