பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?
றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.
மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான். (more…)