லாஸ்யம் சத்யம் ராகவம்

தத்துவம்- தத் + த்வம்

பானுமதி. ந

நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.

ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)

கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா? ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா? முடிந்தால்தானே அது யாத்திரை? ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது  உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா?

நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை

“ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா? இல்லை, பக்தி வந்துவிடுமா? பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி எது? பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்?”(க்ஷேத்ரம்)

ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய்? காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ? ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.

பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது? தேடுகிறதுதானே முக்கியம்?

மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”

சொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி

யாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி  கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.

லா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே?

oOo

 

சரக் கொன்றை, கொன்றைச் சரம்

பானுமதி. ந

பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும் கொன்றை.

ஆனால், திடீரென சொல்லுக்கும், செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்ரத்தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என் மேல் மூடி…” எப்பொழுது மலர்ந்தது இது? மலர்கையிலே பார்த்தவர் உண்டா?

கல்லருகில் சிற்றலைகள் தத்தம்தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன. சிரிக்கும் சரம்.” (தரங்கிணி)

என் எண்ணங்களை நானே நூற்று என்மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது, அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.”

எனக்கும் உனக்கும் நமது நமது என எதை எனக்கு எனக்கென கொண்டோமே? ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என்? கண்டதும் வேண்டாம் கொண்டதும் வேண்டாம் உன்னையும் என்னையும் நம்மிலிருந்த நான் நான் எனது என விண்டதும் வேண்டாம்” (மாற்று- இதழ்கள்)

வளைவாகத் தொடுத்து காட்சி தரும் கொன்றைச் சரத்தில் வெளி வட்டம், உள் வட்டம் காட்டி மயக்கி நடுவில் காணும் ஒற்றைச் சூனியமாக எழுத்தில் தொடுக்க எப்படி முடிந்திருக்கிறது இவருக்கு!

அலைகள் “ என்னென்ன சொல்லும்?

வருடங்களின் பின்ணணியில் புதைந்து போன நினைவின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.

மடித்த விசிறி திடிரென விரிந்தாற் போல், பஞ்ச வர்ணக் கிளி சிறகு விரித்துப் பறந்தாற் போல், கோடை மழையில் வானவில் வளைந்தாற் போல், காலடியில் மழைத் தேக்கத்தில் ஜால வர்ணங்கள் தோய்ந்தாற் போல், சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற் போல், மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வை போல், நான் ஒண்டியில்லை. எத்தனை எத்தனையோ பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள், பெயர்களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வுகளாய்ப் பிரிந்துவிட்டாய்.

எந்தத் தனிமையின் முள் நிரடி, ஒன்று பலவாய், பலதும் பலவாய், உயிர் எனும் சரட்டில் கோர்க்கப்பட்ட சாயை தோற்றும் கொன்றைச் சரமோ?

சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகி விடும்போது அதில் சாவுக்கும், உயிருக்கும் பிரமாத இடமில்லை.” (கொட்டு மேளம்). இலை மறைவில் பூத்த கொன்றை. ஆனாலும் நினைவை அழிக்கும் வாசம் வீசும்; அல்லது அழிக்கச் சொல்லி வீசும்.

நியாயம் பொதுச் சொத்து, தனிச் சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு அவசியமில்லை. அனியாயமாகவே இருக்கக்கூடும்.” (இதழ்கள்-1). என்ன ஒரு வசீகரம் இந்தப் பதிவில். சட்சட் என்று கோர்க்கப்படும் மாலை. ஆனால் நமக்குத் தெரியும்-தனித்தனி பூக்களால் ஆனது என்று- நியாயம் சமயத்தின் பூ. நீதி? ”உலகம் ஒரு உண்மை. ஆயினும் அதன் தனித்தனி ஞாயம் வெவ்வேறு.”

அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாகப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.”(பாற்கடல்) அக்கினி ஒன்று கரங்கள் பல, தீட்டும் உருவங்கள் பலதாக, அழித்தழித்து ..பூ, பூக்கள், சரம் வாடல், மலர்தல்.

அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என்னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைதானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.”

ஜலம் கோபக்கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்து காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று.

மனம் ஒன்றில் அது எதுவாயினும் சரி- ஒன்றில் ஒன்று பட்டு அவ்வொன்றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவையினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது?” ’ப்ரளயம்’ கொணரும் கொன்றை இது. சுழிப்பில் சரமெனத் தோன்றி தனி எனக் கண்டு அதையும் விட்டுவிடும் நினைவறுந்த சரப்பூக்கள்.

அடுக்கு மலர்ச்சரமாக இதைப் பாருங்கள்: ”அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அப்பாணம் நாத பிந்துக்களை உதிர்த்துக் கொண்டு வான் மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.”

மலர்களைப் பார்க்கிறோம், சரங்களைப் பார்க்கிறோம், நாசியால் வாசத்தையும் உணர்கிறோம். கண்களுக்கு வாசமாக, இந்தக் குற்றால அருவியைப் பாருங்கள்.

“அந்தத் தண்சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் விரிந்து தளையவிழ்ந்து, சரிந்து பொங்குமாங்கடலுள் விழுந்து… பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய்ப் பாய்கிறதா? எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட த்ராணியற்று, நீர்த்து உதிர்கையில் புவனமே ஜல் ஜல் என உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுக்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்,பதங்கள், பத-சரி-க-சா-ம-த ஸ்வரங்கள், ஓசைகள் ஒலிகள், மோனங்கள், திக் திக் திகில்கள், திமி திமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ரயிருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக் கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன், கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது” (தேவி)

ஒன்றையொன்று நெருங்கி ஒற்றைச் சரமாக காட்சியளித்து ஏமாற்றும் சரக் கொன்றை.

 

சொல் எழில், எழிற்ச்சொல்                      

ந. பானுமதி

மொழி என்பது என்ன? மொழியும் எண்ணங்களா? எண்ணங்களே மொழியானதா? குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா? அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது? பழமொழி, உவமான உவமேயங்கள், அவை பேச்சிற்கு மட்டும் இல்லாமல், எழுத்திற்கும் துணை நிற்கின்றன. லாசராவின் எழுத்தில் அவர் கையாளும் உவமைகள், அவராலேயே அனுமானிக்கப்பட்டவை, ஆழ்ந்த பொருள் கொண்டவை.

ராஜாளி தன் சிறகுகளை விரித்துக் கொண்டு பாறையினின்று எழுவது போல, காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக் கொண்டு எழுகையில்…”(மஹாபலி). இந்த உவமை சூழலின் கனத்தைக்  எப்படிக் கூட்டுகிறது பாருங்கள். ”அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்திற்குத் தயாராக இருந்தன.”

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்” என்றான் பாரதி. ‘காயத்ரி’யில் லாசரா சொல்கிறார், ”நீல மெத்தையில் வைர நகை புரண்டாற் போல”. இத்தனை சுவையுடன் சொல்ல இவரால் தான் முடியும். இதே கதையில் மீண்டும் ஒரு காட்சி “உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை”. தேங்காய் உடைக்கும்போதெல்லாம் நினைவில் மின்னும் இந்த வரி.

அந்தரத்தில் நின்றாடும் ஒரு ஸ்வரம்- நம் மன இழையைப் பின்னி லயிக்க விடும். இவருக்கோ, ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்ரி). ஒரு ஸ்வரம்- பல இறக்கைகள்!

அதென்ன, கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடற மாதிரி அப்படியிருக்கு?” “சுடர் சீறிக் குதித்தது.நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்து போனேன்.” “அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன”. (காயத்ரி)

நீரில் நாம் வழிவழியாய் மலர்களை, தீபத்தை, உணவை, அஸ்தியை சமர்ப்பிக்கிறோம். ”காத்திருந்த கை போல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணீர்த் திரையூடே கண்டேன்.” இதில் “காத்திருந்த கை” என்ற சொற்றொடர் இல்லையெனில் அந்த உணர்வு நமக்குக் கிடைக்குமா? ”ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்பு சிரித்தது.” (அஞ்சலி )

இதழ்கள்-1’ மணம் மற்றும் மனம் கமழும் சொற்களைப் பாருங்கள்

தங்க விமானத்தின் உறை கழன்று விழுந்தாற் போல், குழந்தை தூளி மடிகளிலிருந்து வெளிப்பட்டான்.”

புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியரிந்த மாதிரி செவேலென்றது.

பூவின் மேலே பனித்துளி நிற்பது போல் அவள் விழிகளில் நிறைந்தன.

பல வர்ணங்களில் சர்க்கரை குழல்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு சுழித்தன.”

கணுக்களி‘ல்-

நாசூக்கான பேச்சு என்பதைச் சொல்ல வருகையில், ”மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சில்

பிறரிடம் வேலை வாங்கிக் கொண்டே தான் செய்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களை கிண்டல் செய்கையில், “யானை சுமந்து வர, பின்னால் நரி முக்கிக் கொண்டே வந்ததாம்

கொதிப்பதில் கமழும் மணம், ”கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி”. படிக்கையிலேயே பால் காயும் வாசம் வருகிறது. (கொட்டு மேளம்)

இது முன்னோட்டம்- வரும் நிகழ்வின் அறிகுறி என்பதை “ஆண்டாளு”வில் இப்படிச்  சொல்கிறார்- “வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நட்சத்திரக் கூட்டம் போல”. “ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புது சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன.

மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று கழுத்துக் குறுகலை கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தை கணிக்க முடியுமா?” (மாற்று)

புத்ர’-

கிழக்கு நீர்த்த சாம்பல் மாதிரியிருக்கிறது. என் நீர்ப்பா? விடியலின் நீர்ப்பா?” “ திக்கற்ற சோகத்தின் கோபம் மூண்டது

காண்பது சுடரின் நீலமா? விஷத்தின் பச்சையா? விஷம் பச்சையா, நீலமா?

தாழ்வாரத்திற்கு விடியாமல் கூடத்திற்கு விடியாது

வார்த்தை நாக்கினின்று புறப்பட்ட அப்போதே வாயிலிருந்து ஒரு பக்ஷி இறக்கையடித்துக் கொண்டு பறந்து சென்றாற் போல்

சந்தனம் கரைத்து அலம்பிய கை போல

நாம் அறியாத அல்லது எதிர்பாராத இழப்புக்களைப் பற்றி சொல்கையில், “குழந்தைக் கை பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி” (பாற்கடல்)

அடுப்பிலாடும் நெருப்பு இவரது பார்வையில் தனி எழில் கொள்கிறது. ”அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, வித விதமான உருவங்களையும், முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.” (பாற்கடல்)

பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர் மறுப்புகள் ஒன்று இழைந்து ஒரு உண்மை. மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்துகொண்டே இருக்கும் பல கோடி, கோடானுகோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.” பாற்கடலின் உயிர் கடையல் இது.

இரண்டு வண்ணாத்திப் பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்துஅவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.” ஒரு இயற்கை காட்சி எப்படி வண்ணம் கொண்டு மிளிர்கிறது! (வேண்டப்படாதவர்கள்)

சிரிப்பில், அட, மனிதர்களின் சிரிப்பில் வகைகள் உண்டு. இத்தனை எழில் சொற்களால் அதை சொல்ல இவரன்றி யார்?

“என் சிரிப்பு பற்றி ஓரொரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை!

“ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதிர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதனின்று உதிர்கின்றன.

“இன்னொரு சமயம் நட்டுவாக்காலிகளும், குளவிகளுமாய்க் குதிக்கின்றன.

“ஒரு சமயம் பொன்வண்டின் றக்கையடிப்பு

“ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி.

“ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணிகிணி.

“கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.

“அடித்த பஞ்சாகிப் பிறகு, அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடாரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள், கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.” (த்வனி)

என் சிரிப்பு சரம் போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியிழையில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று” (கஸ்தூரி)

இது ஒரு மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி” (இதழ்கள்)

தன்னுள் முடங்கும் மனிதர்களை இவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்- “வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம்” (கிரஹணம்)

காட்சிப்படுத்தும் நேரத்தில் இவர் உவமைகள் எழில் அதிகம் கொள்கின்றன. “இழுத்துப் பிடித்த மூச்சுப் போல் தண்டவாளம் ஒற்றைத்தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது.” (குண்டலி)

சுண்டைக்காய் கடிபடும் தோசை நான் அறிந்தது இல்லை; “தோசையில் கடிபடும் சுண்டைக்காய் போல் ‘தறுக் தறுக்’கெனும் பேச்சு.” (ஆண்டாளு)

எத்தனை முறை ரயிலைப் பார்த்திருப்போம். இவர் பார்வையே தனி. “இரவு படைத்த ஒற்றை விழி போல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.” (கங்கா)

பெண் எனும் அழகைச் சொல்கையில், “கங்கா சூரியனின்று கழன்று பூமிக்கு ஓடி வந்துவிட்ட பொற்கதிர்” (கங்கா)

பளபளப்பான தரைகளிலும், கட்டிடங்களே முளைத்திருக்கும் பூமியிலும் சாட்டை பம்பரம் சிறுவர்களுக்குத் தெரியாது. அப்படியெனில் இதை எப்படி புரிந்து கொள்வார்களோ? “பம்பரம் வண்டாய்க் கூவிண்டு கற்பூரமாய்த் தூங்கறது” (இதழ்கள்)

நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள்.எண்ணங்கள் உதிர்கின்றன” (ஷேத்ரம்)

 

 

யாகச் சொல் சொல் யாகம்

பானுமதி. ந

லாஸ்யம் சத்யம் ராகவம் – 1   

யாகச் சொல் சொல் யாகம்

 

சொல் என்பது என்ன?

சொல்வதா? சொல்லப்படுவதா? சுட்டும் பொருளா? பொருளான சொல்லா? “த்வனி”யான சொல் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளுமா? சொல்லிற்கும் அதன் பொருளிற்கும் இடைவெளி இருக்கிறதா? இருந்தால், அது அவரவர்க்கு மாறுபடுமா?

சொல்லை எப்படி ஒரு மந்திர விசையாக்குவது என்று அவர் தன் வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அதன் அர்த்தத்தை, தொனியை அவர் தொடர்ந்து உயிர்த்தெழச் செய்தார். நகல் எடுக்க முடியாத, ஒரு போதும் காலத்தால் பின்தங்காத, எதன் முன்னும் சாரமிழக்காத…” திரு லா.ச.ராவின் எழுத்துக்களைப் பற்றி திரு. மனுஷ்ய புத்திரன் ஒரு முகவுரையில் இப்படிச் சொல்கிறார்.

லாசராவின் யாகச் சொல் என எனக்குப் படுவது “தருணம்”.

“வேளை” காலத்தைவிடச் சிறப்பு வாய்ந்தது. ‘ஏகா‘வின் நாயகியின் ஒரு உரையாடல் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ” வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சு போடறேள்? வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்?

நான் பாஷையில் தோய்ந்து போனேன்; வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்து போனேன்.” (ஏகா)

சமயங்களுக்கேற்ப சொல் கொள்ளும் உருவை அவர் சொல்லும் நேர்த்தி-

அம்மாவின் வார்த்தைகள், சூத்திரங்கள். ஒன்றில்,சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவு போன்று, சம்பந்தா சம்பந்தமற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள்

சொல்லைச் சொன்னதுமே அதுவாயிடறேன்.”

இந்த ஒரு வாக்கியம் போதும், அவரது சொல்லாட்சியைப் புரிந்து கொள்ள. “’நெருப்பு’ என்று சொன்னால் வாய் வேக வேண்டும்” என்ற அவரது சொற்கூற்று மிகவும் பிரபலம்.

எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப்படும் இடைவேளையின் தடங்கள்கூட இலாது, தடங்களின் சிதைவிலாது, தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே, தனக்கும், தன்னையழைத்தற்குமிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்..

தருணம் எனும் யாகச் சொல், சிந்து கவி பாடும் விதம். எண்ணுபவர், அதை சொல்லாக மாற்றி வெளியே சிந்துகையில், எண்ணமே தருணமாக, தருணமே எண்ணமாக, இடைவெளியற்று, பொருளும் சொல்லுமாகப் பிணைந்து காட்டும் எண்ணத் தருணம், தருணத்தின் சொற்பொருள்.

சப்தங்கள், மகரந்தப் பொடிகள்; காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன”.

ஓசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.” ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்திரி). ஓசைகள் இசையாக, வாசமாக, மெத்தென அறியும் நேரம்.. எழுத்தின் தருணம் போலும்.

கரும்பின் இதயம்; இதயத்தின் கரும்பு.. வார்த்தையோடு வார்த்தை சேர்த்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள். உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பது போல். ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர் பாடே உப்புக் கரும்பு தானோ?“ (இதழ்கள்)

அப்பவே, அதுவாகவே, ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபி வேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில், சப்தத்தின் சத்தியத்தில், நா நறுக்கிய வடிவில், சர்வத்தின் நிரூபணத்தினின்றுவாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய், அதன் கதியே என் ப்ரக்ஞையாய், நான் பிதுங்கினேன்

என் தனிமையின் உருவற்றமையாலேயே நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின்  சத்யம். நான் சொல், சொல்லின் பொருள், பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் ஒருங்கே இயங்கும் திரிசூலம்

“அஞ்சலின் அஞ்சலியில் என் அருவிலும் அருவின் உரு ஒடுங்கிப் போனேன். என் உருவின் ஒடுக்கம்; ஒடுங்கலின் உரு.

“?

“கொக்கி குறுகி வளைந்து ப்ரக்ஞை அதில் கருவேறி நெளிந்தது. கேள்வியே பதில், பதிலே கேள்வி. பதிலினின்றும் கேள்வி, கேள்வியால் பதில். பதிலும் கேள்வியும் இதுவா? இல்லை அதுவா? இல்லை பின் எது? ஏது?”

“கேள்வி கேள்வியையே பெருக்கும். கேள்வியால் பயனென்?பதில் ஒன்றே.. கேள்வியையும், பதிலையும் விழுங்கிய ஒரே பதில்.. அதுவும் கேள்வியும் பதிலுடன் மூழ்கிப் போன மோன இருளில் உருவெடுக்கும் ஒளியை…”

“இருளின் மகவு ஒளி. எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து தம்மை மறந்த தருணம், கருவில் தங்கியதிலிருந்து நான் அமர்ந்த தவத்தில் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறுபெயர் காலம். தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு, பிறப்பு; இரண்டிற்கும் இடையே இரவும் இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை காலம் என்பதே இவ்வளவுதானே”

“எங்குமே தருணம் தங்க முடியாது, தங்க இடம் தேடி, தருணம் தவிக்கும் வியப்பேதான் அதன் தவமோ? தருணத்தின் தவமே நேற்று இன்று நாளை என்று என்றும் ஓயாத கடனைத் தீர்ப்பதுதானோ?

இன்று நேற்று நாளை

தருணத்தின் விஸ்தரிப்பு” (புத்ர)

சொல் என்பதே அவருக்கு ஒரு விசை. “சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சிக்காதவாள் கூட செவிடுதான்

என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து. என் மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி. கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவுதானே!

தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன. புரிந்து விட்டால், பிறகு சொல்லவேதான் என்ன இருக்கிறது?சொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகிவிடுகிறது.”

வித்தும் வேரும்” இந்த சொல்லாட்சியில் திளைக்கின்றன.

எத்தனைதான் சொன்னாலும் அவர் சொல் மயக்கை, அதன் உயிரை, அது காட்டும் வண்ணக் கோலங்களை, தருணமாகும் சொல்லை, பொருளாகும் தருணத்தை எப்படி விட முடியும்?

சொல்லே பொருளாக எழுத்து. யாகத்தின் அவிர்பாகம்.

வேத நெருப்பிலே ஒடுங்கும் தருணம். கை நீட்டி உண்ணும் அந்த அக்னியின் பிரசாதம் வார்ப்பவனுக்கும், வாசிப்பவனுக்கும் அவரவர் வழி கிடைக்கிறது. தருணம் இவரது யாகச் சொல். கல்லாக உறையும், நீராகத் தழுவும், தென்றலென இசைக்கும், தீயென சுடும், வான் என விரியும். அதுவே, வான் உறைந்த சப்தமென கேட்கும். நீர் கொண்ட தீயெனச் சூழும் , மண் கொண்ட உயிர் என முகிழ்க்கும் மனோரஞ்சிதத்துடன் காற்றெனச் சேரும். என் தருணப் பாடலை நான் இவர் எழுத்தில் கண்டேன். அவர் மொழியில் “உள்ளது கண்டு, கண்டது விண்டு”.