வெ. அமலன் ஸ்டான்லி

கொண்டாட்டமும் கேளிக்கையும்

இந்த வாரம் இடுகையிடப்பட்டுள்ள “கைகால்களை நீட்டி” என்று துவங்கும் அமலன் ஸ்டான்லி கவிதையின் துவக்கம் தெளிவில்லாதது. குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே பெய்யும் மழையில் கைகளையும் கால்களையும் நீட்டி ஈரமாக்கிக் கொள்கின்றன என்பது மழைக் கவிதை என்று தெரிந்தபின்தான் புரிகிறது. மேலும் கள்ளத்தனம் என்ற சொல் குற்றம் என்பதை நினைவுபடுத்தாமல் போனாலும், மறைக்கப்படும் செயலைச் சுட்டுகிறது.

அடுத்து வராண்டாவில் கேட்கும் கூக்குரல்கள் டீச்சரின் பிரம்பு வீச்சில் அடங்குகின்றன- டீச்சரின் பிரம்புவீச்சு எங்கே நடக்கிறது? வராண்டாவில் இருக்கும் மாணவர்களை அடிக்கிறாரா? ஆம் என்றால் கூக்குரல்கள் வலியின் அலறல்கள். அல்லது வகுப்பறைக்குள் அவர் பிரம்பைக் கொண்டு மேஜையில் அடித்து, அதனால் வராண்டாவில் நிற்கும் மாணவர்களின் சத்தம் நிற்கிறதா? அப்படி என்றால் கூக்குரல்கள் அதுவரை சந்தோஷமாக ஒலித்த சத்தங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்கும்போது இது மிகவும் மகிழ்ச்சியான கவிதையாகவே இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையாக வரி வரியாகப் பிரித்து படிக்கும்போதுதான் இது போன்ற முரண்பொருள் புலப்படுகிறது.

To decipher what Tolstoy wanted to say, the translator has to devise an interpretation of Tolstoy’s narrative voice in “Anna Karenina” என்கிறது ஒரு NYT கட்டுரை . ஒன்று, நாம் முதல் பத்தியில் உள்ள கள்ளத்தனம் என்பதைத் தொடர்ந்து கூக்குரல்கள் என்று வருவதால் இது மழையின் அழகை ரசிக்கும் கவிதை மட்டுமல்ல, வகுப்பறைக்குள் அடைந்து கிடக்கும், ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்களையும் பற்றிய கவிதை என்று புரிந்து கொண்டால், மழை பெய்வதைப் பார்க்கவும் அதில் நனையவும் வகுப்பறையை விட்டு வெளியே வரும் மாணவர்களை வராண்டாவில் பிரம்பால் அடித்து ஆசிரியர் உள்ளே போகச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது கூக்குரல்கள் அவலக் குரல்கள் என்று அர்த்தப்படும். அப்படியில்லாமல், கள்ளத்தனம் என்பது பிஞ்சுகளைச் செல்லம் கொஞ்சுவது என்று புரிந்து கொண்டால், வராண்டாவில் மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆசிரியர் மேஜையை பிரம்பால் அடிக்கிறார் அல்லது காற்றில் பிரம்பைச் சுழற்றிக் கொண்டு வருகிறார், அதுவரைக்கும் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டிற்கும் மாணவர்கள் இப்போது அடங்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட இரண்டு அர்த்தங்கள் எப்படி இருந்தாலும், முதல் பத்தியில் பிஞ்சுகள் அறைக்குள் இருக்கிறார்கள், கைகால்களை நனைத்துக் கொள்கிறார்கள் இப்போது இன்னும் கொஞ்சம் வெளியே, வராண்டாவுக்கு வந்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அதற்கு அடுத்தபடியாக விடலைகள்.

கவிதையில் பாழ் கழிவறை என்று வருகிறது, அவசியம்தானா? எதுகை மோனையாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது பாழடைந்த இடங்கள் குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் பள்ளியின் பாழ் கழிவறையில் சீட்டாடிக்கொண்டு பதுங்கியிருக்கும் விடலை மாணவர்கள் சிலர் என்று இருக்கலாம். இவர்கள், மழை பெய்வதைப் பார்த்ததும் வெளியே வருகிறார்கள் – கொடிமரத் திடலில் நன்றாக நனைந்து ஆடுகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் மறைத்து வைத்திருக்கும் சீட்டுக் கட்டுகள் அவர்களுடைய ரகசியப் பைகளில் இருந்து பிதுங்கி விழுகின்றன.

இதெல்லாம் எப்படியானாலும் முதலில் மாணவர்கள் அறையில் இருந்தார்கள், கள்ளத்தனமாய் ரசித்தார்கள். அடுத்து வராந்தாவுக்கு வந்தார்கள், அடி வாங்கி அழுதார்கள் அல்லது மிரட்டலுக்கு பயந்தார்கள். இப்போது துணிச்சலாக வெளியே வந்து மழையில் ஆடுவது மட்டுமல்ல, அவர்களின் திருட்டு புத்தியும் வெளிப்பட்டு விடுகிறது – பதிவர் மொழியில் சொன்னால், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அடுத்து- “மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்/ மழலையரின் கலவர ஆர்வம்.”

-இதோ இங்கே சில பூனைக்குட்டிகள். கள்ளம் கபடமில்லாத மழலைகள்தான், ஆனால் இந்தச் சீட்டுக்கட்டு விடலைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம்? அச்சம் அணை போடுமளவே கலவர உணர்வு, அச்சம் நீங்கினால் ஆர்வம் இவர்களை கொடிக்கம்பத்துக்குக் கொண்டு சென்று விடும்.

எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

-இறுதியில் ஒரு காட்சி. யாராலோ தவறவிடப்பட்ட சரித்திரப் புத்தகம் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது- இது எப்போது தவறவிடப்பட்டது? ஏன், எப்போது கைக்கொள்ளப்பட்டது என்றும்கூட கேட்கலாம். இங்கு கல்வியைச் சரித்திர நூல் பிரதிநிதிப்படுத்துகிறது- சரித்திரம் என்பது இறந்த காலம் (வாழும் வரலாறு என்றும் உண்டு, ஆனால் இந்தக் கவிதையின் கான்டக்ஸ்ட் அந்த மாதிரி அர்த்தப்படுவதில்லை), மழை நிகழ்காலம், எதிர்பாராதது, அனைத்தையும் நனைப்பது, கல்வி தொகுக்கப்பட்டது, நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் நெறிப்பிரதி. அறைக்கு வெளியே பெய்யும் மழை அது அளிக்கும் களிப்பால் அமைப்புக்கு வெளியே வரச் சொல்லும் அழைப்பு. மேலும், சரித்திர நூல் மண்பட்டு நனைவதில் ஒரு கவித்துவம் இருக்கிறது- மண்ணோடு பிறந்தது மண்மூடி மறைந்ததம்மா.. என்று பாடினால் அதில் ஒரு நியாயம்கூட இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கவிதையில் ஓர் உணர்வு முரண்பாடு உள்ளது. இது மாணவர்களுக்கும் மழைக்கும் ஆதரவான கவிதையாக வெளிப்பார்வையில் தெரிகிறது என்றாலும் இதன் உள்ளடக்கம் ஒரு அடக்குமுறையைக் கண்டிக்காமல் சித்தரிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், அடக்குமுறை அது இது என்று எந்த கோஷமும் இல்லாமல் மழைநாளின் களிப்பைக் கொண்டாடவே செய்கிறது.

oOo

கொண்டாட்டம் களியாட்டமாய் மாறாமல் எப்போது கேளிக்கையாய் நின்று விடுகிறது? பார்வையாளர்கள் பங்கேற்க முடியாத தொலைவில் கடைசி வரை நின்று விலகும்போது கொண்டாட்டத்துக்கு உரிய உருமாற்றம் நிகழ்வதில்லை, யார் யார் எங்கிருந்தார்களோ அங்கேயே இருந்து பிரிகிறார்கள், அப்போதிருந்த நிகழ் கணத்தின் சாட்சிகளாய் ஒரு சில தடயங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன- இந்தக் கவிதையில் சரித்திரப் புத்தகம், மற்றொரு கவிதையில்  குழிபறித்துக் கிடக்கும் தெரு. சிவசக்தி சரவணன் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இரு கவிதைகளிலும் கடக்கப்படாத தொலைவைப் பார்க்க முடிகிறது.

“நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டான்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன,” என்று எழுதுகிறார் சரவணன். எந்த திட்டமிடலும் இல்லாத தன்விருப்பத் தேர்வுகளிலும் ஒருமை இனங்காணப்படக்கூடும் என்பதற்கான உதாரணங்கள் இந்தக் கவிதைகள். உள்ளடக்கம் ஒரு சந்தோஷ நிகழ்வு, ஆனால் விவரிக்கப்படும் பின்னணியில் ஒரு ஏமாற்றம் நிழலாடுகிறது, களிப்பைச் சித்தரிக்கும்போதே உள்ளடங்கி நிற்கும் தடுமாற்றங்களையும் இந்தக் கவிதைகள் நிகழ்த்துகின்றன.

‘”…but paging back through the novel, I realized that I never had to worry about coming upon some disturbing sensibility, original metaphor, syntactical oddity, evidence of an intricate pattern, mysterious allusion, or alien setting. No, The Nest is formed from familiar twigs to hold in fledgling readers who cheep for their next helping of plot from the pre-digesting mother/author,” என்று ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. ஒரு இலக்கியப் படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை எவை என்பதில் சிலவற்றை இது வசதியாக பட்டியலிட்டுத் தருகிறது- ஒரு உறுத்தலைத் தோற்றுவிக்கும் நுண்ணுணர்வு (disturbing sensibility), புதிய படிமங்கள் (original metaphor), தனித்துவம் கொண்ட மொழி (syntactical odditity). நுட்பமான கட்டமைப்பு (intricate pattern), புதிர்த்தன்மை கொண்ட சுட்டல்கள் (Mysterious allusion), அந்நிய களம் (alien setting). வெ. அமலன் ஸ்டான்லியின் இவ்விரு கவிதைகளும் ஒரு டிஸ்டர்பிங் சென்சிபிலிட்டியை உணர இடம் கொடுக்கின்றன என்று நினைக்கிறேன்.

அண்மைய பதாகை இதழ்களில் நகுல் வசன் ந. ஜெயபாஸ்கரன் கவிதைகளையும் இப்போது சரவணன் வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகளையும் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது நம் வாசிப்பைச் சிறிதளவேனும் விரிவுபடுத்துகிறது.

  • ஜெயபாஸ்கரன் கவிதைகள்-

இந்தக் கணம்
ஐந்தேகால் ரூபாய்க்கு

  • வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகள்-

மக்கள் கூடுமிடம் 
கைகால்களை நீட்டி

கைகால்களை நீட்டி… – வெ. அமலன் ஸ்டான்லி கவிதை மொழியாக்கம்

கைகால்களை நீட்டி
ஈரமாக்கிக் கொள்ளும்
பிஞ்சுகளின் கள்ளத்தனம்.

டீச்சரின் பிரம்பு வீச்சில்
வராண்டாவில் அடங்கும்
கூக்குரல்கள்
பாழ் கழிவரைவிட்டு வெளியேறி
கொடிமரத் திடலில்
நீர் ஊறிக் கூத்தாடும் விடலைகளின்
ரகசியப்பை பிதுங்கி விழும் சீட்டுக்கட்டுகள்.
மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்
மழலையரின் கலவர ஆர்வம்.
எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

- வெ. அமலன் ஸ்டான்லி

*****************************************************

Furtively the little ones
stretch and wet
their hands and feet
A whiplash of the teacher’s cane
shuts out the clamour in the veranda

Emerging from the run-down washroom
adolescent merry-makers
dance about, soaking in rain
at the square with the flag mast-
decks of cards popping out of secret pouches

With thin smiles and rapt eyes,
the toddlers have a look
of awestruck wonder

In the sudden drizzle
a history textbook someone had lost
gets damp and muddy
under a tree
unnoticed by all

*****************************************************