- ஒரு புகைப்பட உருவம் எழுத்துரு இயக்கம் நான் காதல் கொண்டவளின் இரு அடையாளங்கள் காலை முதல் கணவன் வீடு திரும்பும் மாலை வரை உடனிருந்தாள் ஒவ்வோர் அமர்விலும் எழுத்துரு நடனமாடி என்னை மயக்கினாள். குளியலறையில் கைநழுவிய சோப்புத்துண்டு வயிற்று மடிப்புகளின் எண்ணிக்கை கணவனுடனான முந்தைய நாள் பிணக்கம் வாழ்வின் அனைத்தையும் திறந்த ஏடாக்கினாள் திடுதிப்பென்று ஒரு நாள் அவமதிப்பினால் நம் காதல் முறிந்தது என்று சொல்லிக் கொள்வோம் என அறிவித்துவிட்டு வெற்றுத்திரையாகி மறைந்தாள் காதலின் காரணங்கள் போன்று பிரிவின் காரணமும் புனைவாய்த்தானே இருத்தல் வேண்டும்? பெரிதாக்கப்பட்ட அவளின் குறை-தெளிவு பிம்பம் புள்ளிகளாய்ச் சிரிக்கிறது
வெ கணேஷ்
ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்
– வெ. கணேஷ்–
“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில், பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.
ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கியபடி வேகமாக நகரும் காமிரா; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை; விறகுவெட்டியின் மூச்சிரைக்கும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்துவிட முடிகிறது. (more…)
மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை
– வெ. கணேஷ்–
முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.
ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும் (more…)
காற்றில் ஆடிய புல்
– வெ. கணேஷ்–
ஹேது –
காற்று வீசவில்லை
புற்கள் ஆடவில்லை
பிறவிச் சித்திரங்கள் பொறித்த
காலத்திரையின் இடைவெளியினூடே
காற்று உள் நுழைய
மண்ணை முட்டி முளைத்த புல்
இன்னும் சிறிது வளர வேண்டும்
சார்பு –
காற்று வீசி அசைந்த புல்
புல்லை மேய்ந்த இளம் ஆடு
ஆட்டின் மேல் பாய்ந்த புலி
புலியின் மீது பட்ட அம்பு
அம்பு தொடுத்தோன் விற்ற புலித்தோல்
புலித்தோலில் செய்த விசிறி
விசிறியிலிருந்து கிளம்பிய காற்று
புல் மீண்டும் அசையாதிருக்குமா?
சூன்யம் –
காற்று விசினால்
புற்கள் ஆடும்
காற்றும் இல்லை
புல்லும் இல்லை
எது வீசும்? எது ஆடும்?
போதிசத்துவம் –
புற்களின் மேல்
காற்று வீசு
நீயே காற்று
காற்றுக்குள்
புற்களை நடனமிடச் செய்
நீயே புல்