வெ. சுரேஷ்

லேடி- ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

என் சிறு வயதில் எங்கள் வீட்டில் சௌடம்மா என்று  ஒரு பாட்டி வேலை செய்து வந்தார். எங்கள்  அம்மாவிடம் நாங்கள் பேச முடியாதபடியெல்லாம் பேச அவருக்கு உரிமை உண்டு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்த்தால், சொந்த அம்மாவும் மகளுமே பேசிக்கொண்டு இருப்பது போலத் தோன்றும். சொல்லப்போனால், ஊரிலிருந்து அவ்வப்போது வரும் எங்கள் பாட்டியிடம் பேசுவதை விட இந்தப்  பாட்டியிடம் அம்மா இன்னும் மனம் திறந்து பேசுவதாகவே நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். இது ஒரு புறம் ஆனால் அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தால் அம்மாவிடம் அவ்வளவு நெகிழ்ச்சியைக் காண முடியாது. ஆமாமா வேணுங்கறது எல்லாத்தையும் இங்கதான் கேட்டு வாங்கிப்பா, விசுவாசத்தை மட்டும் இன்னொருத்தர் கிட்ட காட்டுவா, என்ற ரீதியில் முனகி கொள்வார். எங்களுக்குப் புரியாது. எப்போதும் அம்மாவுக்கு சௌடம்மா மீது அந்த சந்தேகம் இருந்தது. சௌடம்மாவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. அம்மாவிடம் நேரடியாக எந்த பதிலும் சொல்ல மாட்டார். காபி நல்லா இருந்ததா, என்று கேட்ட்டால், அதுக்கென்ன குறைச்சல் என்கிற ரீதியில்தான் பதில் சொல்வார். கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை, அவ்வளவு லட்சியம் செய்யாமலேயே வாங்கிக்  கொள்வார். இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத முள் ஒன்று இருப்பதும் புரியும். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு காட்டினார்களா? அல்லது அன்பு இருப்பது போல நடித்து ஒருவரை ஒருவர் வெறுத்தார்களா? எஜமானியம்மா- பணிப்பெண் அல்லது எஜமான்- பணியாள்  உறவில் இது ஒரு பொதுவான விஷயம் என்பதை நண்பர்களுடன் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் இதன் முழுப் பரிமாணமும்  தாத்பரியமும், பின்னர் ஆதவனின் “லேடி” சிறுகதையைப் படிக்கும்போது  உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாப்பா என்கிற நடுத்தர வயதுத் தமிழ்ப்பெண் தில்லியில், பல வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்து வருபவர். அவரது ஒருநாள் வாழ்க்கையே இந்தக் கதை. இதில், அவர் ஒரு தமிழ் வீட்டில் வேலை செயது வருகிறார். இயல்பாகவே மற்ற  ஹிந்தி மொழிக்காரர்கள் வீட்டுப் பெண்மணிகளை விட இந்தத் தமிழ் பெண்ணிடம் நெருக்கமும் உரையாடலும் அதிகம்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் குடும்பங்களில் வீட்டு வேலையாட்களுக்கு இருக்கக் கூடிய எல்லைகள் அங்கும் உண்டு. வீட்டில் சில இடங்களுக்கு போகக் கூடாது, சில பாத்திரங்களைத் தொடக் கூடாது என்றெல்லாம். இந்த மாதிரி குறைகளெல்லாமே பாப்பா பொறுத்துக் கொள்கிறார். வளர்ந்து வரும், படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்காக. வரும் வாரத்தில், அவளது மகனுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதற்கு, பரிசாக ஒரு சட்டை வாங்கித் தருவதாக வாக்களித்த அந்த வீட்டுப் பெண்ணிடம், அது வேண்டாம், மகன் சாப்பிட ஒரு நல்ல தட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டிருக்கிறார் பாப்பா. அவர்கள் அந்தப் பரிசு வாங்கித் தரும் நாள்தான் கதை நடக்கும் நாள்.

அன்று பரிசும் வருகிறது. மிகுந்த ஆவலுடன் அந்தத் தட்டினைப் பார்க்கும் பாப்பா கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார். அவர் எதிர்பார்த்திருந்த தட்டு அல்ல அது. வந்தது, பீங்கான் தட்டு..முகம் சுருங்க பாப்பா சொல்கிறார், “அய்ய இந்தத் தட்டு இல்லம்மா, இது வேணாம்.” “பின்ன எந்தத் தட்டுடி வேணும்?” என்று கேட்கிறார் வீட்டம்மா. “அத மாதிரி,” என்கிறார் பாப்பா. கைகள் அந்த வீட்டு அய்யமார்கள் சாப்பிடும் எவர்சில்வர் தட்டினைச் சுட்டிக்காட்ட, உடனே கோபமாக அந்த வீட்டம்மாள், “ஓஹோ, உனக்கு எவர்சில்வர் தட்டுதான் வேணுமாக்கும் இது வேணாமா?” என்று கேட்க, கண்டிப்பாக மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாப்பா. மறுக்கப்பட்ட அன்பினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் அந்த வீட்டம்மா.

பொதுவாக மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையயும், மனக்குழப்பங்களையுமே அதிகம் எழுதியுள்ளவர் என்று அறியப்படும் ஆதவன், அதற்கு கீழே உள்ள வர்க்கத்தாரின் மனநிலையில் நின்று எழுதிய அரிதான சிறுகதை இது. எஜமானி- பணிப்பெண் உறவின் love – hate தன்மையை அற்புதமான உரையாடல்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பாப்பாவுக்கு அந்த வீட்டம்மாவால் காபி, சிற்றுண்டிகள், கொடுக்கப்படும் விதம், அந்த வீட்டில் பாப்பா திறந்து விடக்கூடாத கதவுகள், உள் நுழைந்து சுத்தம் செய்யக்கூடாத அறைகள் ஆகியவற்றின் மூலம் நுட்பமாக அந்த உறவின் சாதிய இடைவெளிகளையும், அது செயல்படும் விதத்தையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அந்த வீட்டம்மா மீது பாப்பா கொண்டிருக்கும் ஒட்டுதலையும் விலகலையும், அவர்கள் வீட்டு வாழ்க்கை முறையின் மீதான ஆசையையும் விலக்கத்தையும், பாப்பாவின் மனவோட்டத்தின் மூலம் சித்தரிப்பது அருமை. திறக்கக்கூடாத அறையின் கதவிடுக்கு வழியாக தெரியும் ஒரு வெளுப்பு முதுகையும், எதிர்பாராமல் தன் மேல் மோதிவிடும் அந்த வீட்டுப் பிள்ளையின் உடல் தன் கணவனை நினைவூட்டுவதன் மூலமும் பாப்பாவின் மனதின் ஆழங்களை சித்தரித்திருக்கிறார்.

‘லேடி’, ஏழைகளின் தன்மானத்தையும், நடுத்தர வர்க்கத்தினரின் ஏழைகள் மீதான கரிசனத்தில் செயல்படும் ஒரு patronizing மற்றும் அதிலும் தென்படும் மேட்டிமை மனோபாவத்தையும்  ஒருசேரக் காட்டும் அபூர்வமான கதை. தலைப்பு  சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம். கதையின் இன்னொரு இழையாக, பாப்பாவின் மகன் மாரியின் சிநேகிதர்கள் குறித்த பாப்பாவின் கவலை, இறுதியில் மாரியின் பாண்ட் பாக்கெட்டில் அவர் கண்டுபிடிக்கும் சிகரெட் பாக்கெட் ஆகியவை, கதைக்கு இன்னொரு பரிமாணத்தை சேர்க்கின்றன.

ஆதவனின் ‘கார்த்திக்’

வெ. சுரேஷ்

வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக அல்லாமல் ஒரு தொடர் நிகழ்வாக பலரது  வாழ்வில் அமைவதுண்டு. ஆனால், சிலர் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள் இவைக்கு காரணமாக நிகழ்வதுமுண்டு. இவை இரண்டுமே இருபதாம் நூற்றாண்டு நவீன உலகுக்குரிய இளைஞர்களின் பிரச்சினைகளில் முக்கியமானவையாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் லட்சியவாத அலை அடங்கி, சுடும் யதார்த்தம் 70களில் பரவியது. சுதந்திர அரசு மரபார்ந்த கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தொழில்மயமான ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முற்பட்டது. ஆனால் தொழில்மயப்பட்ட சமூகத்துக்கு தேவைப்படும் ப்ளூ காலர் பணிகளில் பொருந்தக்கூடிய தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காலனிய ஆட்சியின் தொடர்ச்சியான ஒயிட் காலர் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் குமாஸ்தா கல்விமுறையே தொடர்ந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கணக்கு எழுதுவதையும் குறிப்புகள் எடுப்பதையும் தவிர பிற எந்த தொழிலுக்கும் தகுதியில்லாதவர்களாக இவர்கள் இருந்ததால் வேலையில்லாத்  திண்டாட்டம் கடுமையானது. அரசே முதன்மையான வேலை வாய்ப்பு தரக்கூடிய அமைப்பாக இருந்த காலகட்டத்தில், அதுவும் நவீன கல்வி உருவாக்கிய அந்நியத்தன்மை வாய்ந்த, (அரசு) வேலைகளின் யந்திரத்தனத்திலும் சலிப்பு, அந்த வேலைகளும் கிடைக்காத இளைஞர்களின் கோபம் ஆகியவை தீவிரமாக வெளிப்படத் தொடங்கின. மேலும், இளைஞர்கள் தங்களது தனித்தன்மை  (Individuality) என்பதை நிறுவவும் முனைந்த காலகட்டமாக அது அமைந்தது.

ஆதவனின் புனைவுலகம், எப்போதும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டது.  மனிதர்களின் தனித்தன்மையை, அவர்கள் அதனை இழக்க நேரும் பின்னணியை, சோகத்தை, விரிவாகச் சொல்லக்கூடியது. மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் வாழும் நவீன இளைஞன் கார்த்திக், ஒரே சமயத்தில் மரபில் இருந்து விலகி அறிவார்ந்த நோக்கினால், மரபு தன் மீது சுமத்தும் மூடப்பழக்கங்களை களையவும், அதே சமயத்தில், காதல் வயப்பட்டாலும் தன்  தனித்தன்மையை அதில் இழக்காமல் இருக்கவும் விழைபவன். ஒரே சமயத்தில், பெற்றோரின் மரபு அளிக்கும் சுமைகளிலிருந்தும் காதல் மனைவியின் நவீன நோக்கு அளிக்கும் தளையிலிருந்தும் விலகி வாழும் விழைவுடன் தன் தனித்துவத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கவும் முனைபவன். தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலாகாமல் இருப்பதில் கவனமாக இருப்பவன். இந்த நிலைப்பாடுகளிலிருந்து மெல்ல நழுவி அவனும் மற்றவர்களை போல, யாரையெல்லாம் தவிர்க்க நினைக்கிறானோ அவர்களை போலவே,  ஆவதை விவரிப்பதுதான் ‘கார்த்திக்‘.

என் போன்ற 70கள் 80களில் வளர்ந்த, மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு சாதி மத அடையாளமற்ற வாழ்க்கையை, அல்லது மிக மேலோட்டமாகவே சாதி மத அடையாளத்தைப் பேணும் வாழ்வை வாழ்பவர்களுக்கு, கார்த்திக் சிறுகதை அடிக்கடி நினைவுக்கு வரும். “கார்த்திக்” சிறுகதையை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அண்மையில்கூட குடும்பத்தினரின் பிரார்த்தனையை நிறைவேற்ற ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு சாதாரண சடங்குகூட செய்யத் தெரியாமல் தவிக்கையில்  கார்த்திக்கை நினைத்துக் கொண்டேன்.

இந்தக் கதையில், கார்த்திக் தன் மந்தைக்குத் திரும்பும் நிகழ்வு, பத்மாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகே மெல்லத் தொடங்கிவிட்டாலும், அது தீர்மானகரமான திரும்புதலாக ஆவது அவனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான். அவர் இருந்தவரை கார்த்திக்கின் மகனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். பூஜை செய்வது, ரேடியோவில் கச்சேரி கேட்கும்போது தாளம் போடுவது என்று அவரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறான் கார்த்திக்கின் பிள்ளை ரவி. திடீரென்று ஒரு நாள், கார்த்திக்கின் தந்தை இறந்து விடுகிறார். மிகப்பெரிய இழப்பு ரவிக்கு மட்டுமல்ல, கார்த்திக்குக்கும்தான். தன் வித்தியாசங்கள், தனித்தன்மைகள் என்று அவன் எண்ணியிருந்ததெல்லாம் அவர் கரும்பலகையாயிருந்து எடுத்துக் காட்டிய வெள்ளை எழுத்துக்கள்தான் என்று உணர்கிறான். அந்தக் கரும்பலகை இல்லையென்றானபின் அவனது தனித்தன்மைகள் என்னும் வெள்ளை எழுத்துக்கள், பின்னணி ஏதும் இல்லாமல் சோபை இழந்து விடுகின்றன.

ஆனால் உடனடியாக அவன் சமாளித்தாக வேண்டியது தன் மகனின் தனிமையை. தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் அவனுடன் ஆடிய விளையாட்டுக்கள், பூஜை, கச்சேரி, புராணக் கதை சொல்லுதல் போன்றவைகளுக்கு அவனுக்கு ஆள் இல்லை. கார்த்திக் வேறு வழியில்லாமல் தன் தந்தையின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாகிறது. பூஜை செய்கிறான், புராணக்கதைகளைத் தேடிப் படித்து மகனுக்குச் சொல்கிறான், கச்சேரி கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தான் யாராக இல்லாமல் இருக்க விழைந்தானோ அவராகவே மாறுகிறான்.

சிலகாலம் கழித்து, சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் ரவியின் நண்பர்களான சிறுவர்கள், கார்த்திக்கை கார்த்திக் மாமா என்று அழைக்கின்றனர். ஒருநாள், ரவிக்காக பூஜை அறையில் உட்கார்ந்து ரவியை அழைக்கும்போது தெரிகிறது, ரவி அவனையொத்த பையன்களுடன் வெளியே  விளையாடப் போயிருப்பது. மனைவி பத்மா அவனை அழைத்து வரட்டுமா என்கிறாள். வெளியே வந்து எட்டிப்பார்க்கும் கார்த்திக், ரவியில் கார்த்திக்கைப் பார்க்கிறான்.  திரும்பி வந்து பத்மாவிடம், அவனைக் கூப்பிட வேண்டாம், அவன் விளையாடட்டும், நாம் செய்வோம் பூஜையை என்கிறான் கார்த்திக்- இல்லை, கார்த்திக் மாமா. பக்கத்தில் பாந்தமான பத்மா மாமி. இப்போது ரவிதான் கார்த்திக்.  கார்த்திக்கின் மந்தை திரும்புதல் முழுமையடைகிறது.

ஒரு பார்வையில், பெற்றோரின் மரபான வாழ்க்கையுடன் முரண்பட்டு பின் அத்தகைய ஒரு வாழ்க்கைக்கே திரும்புவதே கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், கார்த்திக்கின் தனித்தன்மை சார்ந்த தன்னுணர்வு அவனது யுகம் சார்ந்த நவீனப் பெண்ணான அவன் மனைவியுடனும்கூட முழுவதுமாக ஒத்துப்போக முடியாத சூழலை உருவாக்குகிறது. அவளுடைய முற்போக்கு அவனை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மனைவி, இவனது பெற்றோருடன் மரபார்ந்த விஷயங்களில் கொள்ளும் நெருக்கம் கார்த்திக்கை அந்நியப்படுத்துகிறது. அதே சமயம் அவள் கார்த்திக்குடன் நெருங்கிக் கொள்ள உதவும நவீன உலகு சார்ந்த கருத்துக்களும் அவனது தனித்தன்மையை குலைத்து பத்திரமற்ற மனநிலையை உருவாக்குவதையும் ஆதவன் வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி இரண்டு தளங்களில் பிரயாணிக்கிறது கதை.

நவீன வாழ்க்கை உருவாக்கும் அடையாளச் சிக்கல் மிகுந்த, முன்னே போவதா, பின்னே போவதா, இருந்த நிலையில் இருப்பதா என்ற குழப்பமான ஆண்-மனநிலைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஆதவனின் “கார்த்திக்‘ – கார்த்திக் மாமா என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஆதவனின் ‘அந்தி’

வெ. சுரேஷ்

சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு.  அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,  மறதி, கை  நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான,  குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று  வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு  ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.

நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.

அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்  (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து  கொள்ள தொடங்கியது, என்  இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை  படித்தபின்தான் .

அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு  மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச்  செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ்  சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட  சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக்  கொண்டவர்.  கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.

ஆனால் இங்கு அவர்  காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே  பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு  விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.

மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும்  கண்டதும்  ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத்  தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி  விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம்  என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி  இருப்பதைக் காண முடியும்.

முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில்  படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின்  நிழல்  இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும்  பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-

“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”

         இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது  முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன  என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.

மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.

‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து

வெ.சுரேஷ்

“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”

மேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ?

இந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை  என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன்  முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன்  நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிறார். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க்  கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு  நினைத்துக் கொள்கிறான்.

அவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன்   வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.

அவருக்குத் தன் வித்தையைப்  பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய  கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.

அடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக்  குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது.  அவரைத் தவிர்க்கத்  தொடங்குகிறான்.

அப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரசிகர் தனக்கு, தன்  பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன்  கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின்  நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன்  கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ? அல்லது, அவற்றை ரசிப்பது போலக்  காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது  அவனுக்கு.

இசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ  என  நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட,  மனநிலைகளின்  முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத்  தெளிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லவேயில்லை. சற்றே  கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never  explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன்  வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.

கூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப்  பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர்  பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது,   நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே  பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில்

nanjil_interview_3

நாற்பதாண்டுகாலமாக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் எழுத்துலகப் பயணம் தனித்துவமானது.  தன்னுடைய முதல் படைப்பிற்கே ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்றவர், தொடர்ந்து முப்பதுக்கும் குறையாத நூல்களை வெளியிட்டிருக்கிறார்.  இதில் ஆறு நாவல்களும், நூற்றிமுப்பத்திரண்டு  சிறுகதைகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும், பல கட்டுரைகளும் அடக்கம்.  ‘செய்தது போதாது.  எனக்கு இன்னமும் செய்வதற்கு நிறைய இருக்கிறது,’ என்று தணியாத படைப்பூக்கத்துடன் சொல்கிறார்.  ‘எனக்கு முன்னால் தகுதியுடையவர்கள் நிறைய பேர் விருது பெற காத்திருக்கின்றனர். ஓய்வூதியப் பயன்கள் போலக் காலங்கடந்து வழங்கப்படுகிறது’ என்று விமர்சித்தாலும், சாகித்ய அகாதெமி அவருக்கு வழங்கிய விருதை மதித்து ஏற்றுக் கொண்டார்.  தமிழ் இலக்கிய தோட்டம் போன்ற அமைப்புகளும் சமீபத்தில் அவருக்கு விருது அளித்தன.

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் வழியாக நமக்கு பழந்தமிழ் இலக்கியங்களின் சுவை கிடைக்கிறது.  நாஞ்சில் நாட்டு வழக்கு மொழியின் வீச்சு புரிகிறது.  கம்பன் எடுத்தாண்ட சொற்களின் பரிமாணம் புரிகிறது.  நாஞ்சில் சமையல் முறைகள், மீனவர் வரலாறு, வெள்ளாளர் வாழ்க்கை முறை, விவசாயத்தின் வகைப்பாடுகள், மகாராட்டிர குக்கிராமங்களின் நிலவமைப்பு என்று தகவல் களஞ்சியமாக இருக்கிற கதைகளின் நடுவே ‘அமி காணார்’ எனும் பசிமொழியையோ, வண்டியை விட்டுக் கொண்டு போகும் ராசாவின் ‘விறீர்’ நடையையோ சேர்த்து அறுசுவை விருந்தாக மாற்றிவிடுகிறார்.  ‘கொளம்பு வச்சு பத்து தட்டத்துக்கு ஊத்தாண்டாமா தாயி?’ என்று கரிசனத்தோடு பேசும் நாஞ்சில் நாடனை நேர்முகம் காண முடிவு செய்து அவரை அணுகினோம். எழுத்து மூலம் கேள்விகளுக்குப் பதிலிறுப்பதைக் காட்டிலும், நேரில் சந்தித்து உரையாடுவதையே அவர் விரும்பினார்.

***

கோவை நண்பர்கள் வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில், த.கண்ணன் என்று ஒரு சிறு குழுவே நாஞ்சில் நாடனைச் சந்திக்க, கோயமுத்தூரின் தென்மேற்குக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவைப்புதூரில் அவரது புதிய இல்லத்துக்குச் சென்றோம். கல்லூரி மாணவர்கள் சிலரும் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தோடு எங்களுடன் இணைந்துகொண்டனர்.


நேர்காணல் என்கிற சிறுகதையில் கும்பமுனி தன்னை நேர்காண வந்த தொலைக்காட்சி நிருபர்களுக்குக் கொடுத்த வல்வரவேற்பை நல்ல வேளையாக நாஞ்சில் நாடன் எங்களுக்கு வழங்கவில்லை – எப்போதும்போல், இன்முகத்துடன் எதிர்கொண்டார். நாங்களும் அந்தக் கதையில் வந்தவர்களைப் போல நாஞ்சில்முனியின் படைப்புகளைப் படித்திராதவர்களும் அல்லர். அவரது பல ஆக்கங்களைப் படித்துச்சுவைத்து, அவர்மீதிருக்கும் பெருமரியாதையை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாகத்தான் இந்த நேர்காணல் அமைந்தது.

சில நாட்கள் வெளியூர்ப் பயணத்திற்குப்பின் களைப்புடனும் இளவெண்தாடியுடனும் நாஞ்சில் நாடன் ஓரிரு மணிநேரம் முன்புதான் வீடு திரும்பியிருந்தார். இருப்பினும் மூன்று மணிநேரம் சலிப்பின்றி உரையாடினார். நேர்காணல் என்பதைவிட இதை ஓர் உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும். நாஞ்சிலைப் பேச வைப்பதற்கு நீண்ட கேள்விகள் தேவையில்லை. அவரது நினைவோட்டத்தைக் கிளரிவிடும் ஓரிண்டு சொற்கள் போதும், அவரது கணைகள் அம்புப்புட்டிலிலிருந்து சரசரவென்று கிளம்பிவர.  சொற்காமுறுகிறவர் என்று தன்னைத்தானே விளித்துக்கொண்டாலும், அதிக சொற்களை விரயம் செய்கிறார் என்ற பொருந்தா விமர்சனம் அவர்மீது ஒரு சிலரால் வைக்கப்படுகின்ற போதிலும், கூர்ந்து கவனிப்போமேயானால், அவரது கட்டற்ற நடையிலும் மிகச்செறிவான, கவனமாகச் செதுக்கிய மொழியைக் கையாள்பவர் நாஞ்சில். பல கிளைகளாகப் பிரிந்துசெல்லும் அவரது விரிவான உலகத்தை விவரிக்க, செறிவான மொழியன்றிச் சாத்தியப்படாது. அவரது பேச்சில், அந்தச் செறிவூட்டும் கவனம் இல்லாமல், பட்டைதீட்டப்படாத பொலிவுடன் வெளிப்படுகின்றன சொற்கள். முடிந்தவரை அந்த பச்சையான காரத்தையும், இனிமையையும் பதிவுசெய்து நாஞ்சில் நாடனின் பேச்சுவழக்கை அப்படியே தந்திருக்கிறோம். எழுத்துவடிவேற்றப்பட்ட நாஞ்சில் வழக்கில், கொஞ்சம் கோவை வாடை அடித்தால், அதற்குக் காரணம் நாஞ்சில் உணவை உண்ட செவிகள் கோவைச்செவிகள் என்பதால் இருக்கலாம். அல்லது நாஞ்சில் மொழியை தளும்பத்தளும்பத் தந்த பேனாவுக்குச் சொந்தக்காரர் பல ஆண்டுகளாய்க் கோவையில் இருப்பதாலும் இருக்கலாம். கோவை என்று யாம் ஈண்டு சொல்வது கோயமுத்தூரையே குறிக்கும். (இந்த விளக்கத்திற்கான தேவை நேர்காணலுக்குள் செல்லும்போது புரியும்.) ஆங்காங்கு, சிறுவாணி நீரில் கலந்த அத்திக்கடவு நீராய் ஆங்கிலச் சொற்களும் இயல்பாகக் கலந்து வரவே செய்தன.

தனது படைப்புமுறை, விமர்சனங்கள், புதிய படைப்பாளிகள், இசை, வெள்ளாளர் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து அளவளாவும் ஆர்வம் தனது படைப்புகளைப் பற்றி உரையாடுவதில் அவருக்கு அதிகம் இல்லை என்பதை உணரமுடிந்தது. ‘தன்னையே முகஸ்துதி செய்துகொண்டு, புதிதாய் அறிமுகம் செய்துகொண்டு, மீண்டும் நிரூபித்துக்கொண்டு, எந்த மலைஅடுக்குகள் கடக்க இன்னும்? மலை கல்தான், மண்வெட்டி இரும்புதான், தீ சூடுதான், கசப்பும் சுவைதான்,’ என்று தனது சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையிலேயே எழுதியவராயிற்றே அவர். ஆனால், வேறு பல தளங்களில் படர்ந்தது உரையாடல்.

***

நாஞ்சில் நாடனின் பயணத்தைப் பற்றிக் கேட்கத்தொடங்கி, அவரது நாசூக்கான சைவ-அசைவப்பழக்கத்திற்குச் சென்றதால், நாங்கள் திட்டமிடாமலே வெள்ளாளர் வாழ்க்கைக்குள் நுழைந்தோம்.

நாஞ்சில் நாடன்: இதெல்லாம் இலக்கிய வட்டத்துல சொல்றதில்லை. எல்லாம் கலந்துகட்டி அடிச்சுருவாங்க. என் மூதாதையர்கள் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார். 1800களினுடைய கடைசிப்பகுதியில, பெரும்பஞ்சம் வந்தபோது, எங்கயாம் போய் பிழைச்சிக்கிடுங்கடான்னு துரத்திவிட்டிருக்கார் எங்க தாத்தாவுக்கு அப்பா. நாஞ்சில் நாட்ல மழைபெய்யுது, மாடு மேய்ச்சுப் பிழைச்சுக்க…அதை நான் எழுதிட்டேன்…நடந்துவந்து ஒரு வீட்ல மாடுமேய்கறதுக்குத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கார். சாப்பாடுதான பிரதானம். அவருடைய சொந்த அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அத்தை பொண்ணுனா, அவங்க நேச்சுரலி சைவ வேளாளர் தானே? அந்த அம்மா, வைசூரில இறந்து போறாங்க..ரெண்டு பையனுங்களப் பெத்துப் போட்டுட்டு. ஆகவே, ரெண்டாவது கல்யாணம் பண்றாரு. ரெண்டாவது, எங்க அப்பாவுக்கு அம்மை. நாங்க ஆத்தானு சொல்லுவம். வள்ளியம்மைக்குப் பறக்க சொந்த ஊர். பறக்கை..மதுசூதனப் பெருமாள் கோயில் இருக்கும். சுசீந்திரத்திலிருந்து நடக்கும் தூரம். அவங்க நாஞ்சில் நாட்டு மருமக்க வெள்ளாளர். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மீன் சாப்டுவாங்க. கோழி, மட்டன் எல்லாம் ஏதாவது விருந்து நடந்தாத்தான். நான் இத வெள்ளாளல வாழ்க்கைல எழுதியிருக்கேன். மட்டன்ங்கிறது வருஷத்துக்கு ஒருநாள் அல்லது ரெண்டு நாள்தான்.  கோயில்ல குடை வையணும். அல்லது தீபாவளியா இருக்கணும். கோழிங்கறது, விவசாயிகள் வீடுங்கறதால, கோழிக் கூடு இருக்கும். கோழி வளர்ப்பாங்க. அப்ப இந்தக் கோழிக்கு ஒரு நோய் வரும். கொஞ்சம் தலைய இப்படித் தொங்கப்போடும். தொங்கப்போட்ட உடனே அறுத்துருவாங்க. தானா சாகறதுக்கு முன்னாடி. அந்த சீசன்ல, எட்டுநாள் பத்துநாள் தினமுமே கோழிக்கறி போட்ருவாங்க. அது நோய் கோழிதான். 100-150 டிகிரில கொதிக்கிற போது, ஃபேரன்ஹீட்ல, நோய்க்கிருமியெல்லாம் போயிடும். ஆனா மீன் எங்களுக்குப் பிரதான உணவு. 12 மைல்ல கடல். காலைல ஒம்பது மணிக்குப் புத்தம்புதுசா மீன் வரும். எங்க அப்பாவுக்கு அம்மை…பறக்கக்காரியக் கட்டினதுப்புறம், இவங்க, நேச்சுரலி,  மீன் ஈட்டர்சா மாறிட்டாங்க.

சுரேஷ்: பெங்காலி பிராமின்ஸ் மீன் சாப்டுவாங்க.

நாஞ்சில் நாடன்: அதனால, நான் இப்ப சைவ வேளாளன்னு க்ளெய்ம் பண்ணிக்க முடியாது. Strictly speaking. பண்ணனுமானாப் பண்ணலாம். ஏனா, தந்தைவழிச் சமூகம்தானே நாம. இத இப்ப வெளில சொல்றதுல disadvantage தான் அதிகமே தவிர advantage கிடையாது. ஆனா நா எதையும் மறைச்சுப் பேசுறவனில்லை. என்னத்தக் கேட்டாலும் ஓப்பனா பேசிடுவேன். நம்மப் பத்தி மார்க்கெட்ல பெரிய கெட்ட பேர் இருக்கு. இவன் வெள்ளாள சாதி வெறியன். இந்துத்வா.

கண்ணன்: வெள்ளாளர் வரலாறு புத்தகம் எழுதினனால அப்படியா?

நாஞ்சில் நாடன்: அது ஒரு anthropological study. பத்கவத்சல பாரதி அந்த புத்தகம் வந்தப்ப ஒரு ரெவ்யூ எழுதினார். காலச்சுவடுல பப்லிஷ் பண்ணினாங்க. இந்த மாதிரி ஆய்வு தமிழ்ல வந்ததே இல்லை. ஒரு சமூகத்தைப் பற்றிய நடுநிலமையுடன், அந்த சமூகத்தில பிறந்த ஒருவன்தான் அதை எழுத முடியும். இத 2000ல எழுதியிருப்பேன்…2003ல அந்த புக் பப்லிஷ் ஆயாச்சு.  முதல்ல, ஒரு கட்டுரைதான் வாசிச்சேன். பாம்பன்விளை செமினார்க்காக. சுந்தர ராமசாமி சொன்னார்…நீங்க விரிவுபண்ணி எழுதலாம்ல. உங்களத்தவிர யாரு எழுத முடியும். பொட்டன்ஷியல் இருக்கில்ல. கண்ணனும் சொன்னான். காலச்சுவடு கண்ணன். ஒரு 120 பக்கத்துக்கு எழுதினேன். கொஞ்சம் உழைப்பும் நேரமும் கிடைக்குமானா ஒரு 250 பக்கத்துக்கு என்னால எடுத்துட்டுப்போக முடியும். அந்த புஸ்தக்கதைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு கன்சர்னோட அந்த புத்தகத்தை முடிக்கறேன். பிஎஸ்ஸி படிச்சுட்டு, பிஏ படிச்சுட்டு, அம்மன்கோயில்லியோ சாத்தாங்கோயில்லியோ உட்கார்ந்து நாயும் புலியும் விளையாடிட்டு, சீட்டாடிட்டு – சோத்துக்குப் பஞ்சம் கிடையாது..ஒரு அரை ஏக்கர், முக்கா ஏக்கர் இருக்கும்…ரெண்டு போகம் விளையும். நெல்லுக்கும் தேங்காய்க்கும் காய்கறிக்கும் ப்ராப்ளம் இல்ல – இப்படி பாழாப் போய்கிட்டிருக்காங்களே. திருநெல்வேலி சைட்ல சைவப்பிள்ளைமார்க்கெல்லாம் என்னன்னா, அங்க ஆர்எம்கேவி இருந்தது. ஆர்எம்கேவி 3000 பேருக்கு வேலை குடுக்குறான். அதனால திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் அந்த ஆர்எம்கேவிய மூடினாலொழிய முன்னேற மாட்டான். அந்த urge அவனுக்கு அப்பத்தான் வரும். எனக்கு அந்த urge எப்படி வந்ததுனா, MSc படிச்சு முடிச்சதுக்கப்புறம்…25000 ரூபா குடுத்து வேலைக்கு சேர முடியல, பார்க்கிறவனெல்லாம்…எங்க ஊர்ல நூத்தியிருவது வீடுதான்…ட்யூஷன் எடுறான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் அதுக்கப்புறந்தான் பையத்தூக்கிட்டு பாம்பேக்குக் கிளம்பிப்போனேன்.

சுரேஷ்: அந்த நேரத்துல நீங்க சர்வீஸ் கமிஷன் மாதிரி முயற்சி பண்ணவே இல்லையா?

நாஞ்சில் நாடன்: எஸ்எஸ்எல்சி க்ரேட்ல, பிஎஸ்சி க்ரேட்ல, எம்எஸ்சி க்ரேட்ல மூணு தடவ எழுதுனேன்.

சுரேஷ்: எது எழுதினீங்க?

நாஞ்சில் நாடன்: TNPSC. அப்ப திமுக பவர்க்கு வந்தாச்சு. பெரு விலைவைச்சு எடுத்துட்டு இருக்காங்க. எங்க பக்கத்து ஊருல ஒரு அரசியல் பிரமுகர். பேராசிரியர். எனக்கு வகுப்பெடுத்திருக்கார். தூரத்து உறவு. நான் எம்எஸ்சி பாஸ் பண்ணி முடிச்சிட்டு அவர்கிட்டப் போய் நின்னேன். உங்க அப்பாகிட்டப்போய் ஒரு இருபத்தஞ்சாயிரம் ரூபா வாங்கிட்டுவாங்கிறார். அப்ப 68ல.

சுரேஷ்: மத்திய அரசுத் தேர்வாணையம் பற்றியெல்லாம் தெரியாது?

நாஞ்சில் நாடன்: அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதின ஒரே தேர்வாணையம் – இன்கம்டேக்ஸ் இன்ஸ்பெக்டர் எக்ஸாம். கொஞ்சம் அதிகமா ஆசைப் பட்டுட்டேனோ…க்ளரிக்கல் எழுதியிருந்தா ஒருவேளை கிடைச்சிருக்கலாம்.

சுரேஷ்: ஏன்னா, தமிழ்நாட்ல பொதுவா ஒரு போக்கு. தமிழ் மீடியத்துல இருந்து வர்ற மாணவர்கள் யாரும் இதை எழுதறதே இல்லை.

நாஞ்சில் நாடன்: முக்கியமான காரணம், பத்து வருஷம் முன்னாடி வரைக்கும், ப்ளல் டூ முடிச்சுட்டு, இஞ்சினியரிங் என்ட்ரன்ஸ் எழுதணும்னே கிராமத்துல பல பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரியாது. ப்ளஸ் டூ முடிச்சாச்சு, இண்டர்வூயல வேலைக்கு வந்துரலாம்னு நினைப்பானே தவிர, இன்னொரு ஸ்டேஜ் இருக்கு..ப்ரிப்பரேஷன் இருக்கில்லை…இப்ப நாங்க ரிமோட்டஸ்ட் வில்லேஜ்…ட்ரெய்ன் கூடக் கிடையாது எங்க நாட்டுல. எங்களுக்கு இதெல்லாம் சொல்லித் தருவாருங்கிடையாது. எங்க ஊர்ல நான் ஃபர்ஸ்ட் கிராட்ஜுவேட்டு. எனக்கு யாரு சொல்லித்தருவாங்க? உங்களுக்கு இருக்கிற அட்வாண்டேஜ் ஒண்ணு உண்டு. அப்பா ஹோட்டல சர்வரா இருந்தாலும், கோயில்ல மணியடிச்சாலும் அவருக்குண்டான எஜுகேஷனல் பேக்கிரவுண்ட் உண்டு. ஒரு தூண்டுதல் இருக்கும். என்னைத் தூண்டுனவங்ககூட…எங்க பக்கத்து ஊர் இறச்சகுளம்…அதுல ஒரு கிராமமிருக்கு…கிராமங்கிறது அக்கிரகாரம்…அக்கிராகிரத்துனடைய இலக்கணம்…ஒரு ஓரத்துல சிவன் கோயில் இருக்கணும்…ஒரு ஓரத்துல பெருமாள் கோயில் இருக்கணும்…அப்பத்தான் அக்கிரகாரம்னு சொல்லலாம். இல்லைனா, அதை கிராமம்னு சொல்வாங்க. ரெண்டே தெருவுள்ள ஒரு ப்ராமின் செட்டில்மெண்ட். அங்க ஊர்ல எஸ்எஸ்எல்சில படிக்கிறபோதும் பிஎஸ்சி படிக்கிறபோதும், நான்தான் படிக்கிற பையன். என்னை ஓரளவுக்கு கைய்ட் (guide) பண்ணவங்களும் அவங்கதான். எங்க அப்பா என்னை என்ன கைய்ட் பண்ணிருக்க முடியும். வேற வழியில்லாம நான் பையத்தூக்கிட்டு பாம்பே போயிட்டேன். ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம்..அப்படின்னுட்டு. அதெல்லாம் எழுதியிருக்கேன் நான்.

அன்பழகன்: சார், TNPSC எழுதிப்போயிருந்தா, ஒரு எழுத்தாளர் கிடைச்சிருக்க மாட்டார்.

நாஞ்சில் நாடன்: போராட்டம் இல்லாத மனித வாழ்க்கை வீணாப் போயிரும்னு நினைக்கிறேன். என்னுடைய வளர்ச்சினு நாம் கருதுவோமானால், நான் இந்த இடத்துக்கு சேர்ந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்னோட இந்த போராட்டம்தான். நான் சோத்துக்குப் போராடியிருக்கேன், தங்குமிடத்துக்குப் போராடியிருக்கேன், பயணுத்துல போராடியிருக்கேன், வேலைக்குப் போராடியிருக்கேன், செலவ மெய்ன்டெய்ன் பண்றதுல போராடியிருக்கேன். 210 ரூபாய் சம்பளம் வாங்குறபோது, முதல்ல 25ரூபாய் MO கணபதியாப்பிள்ளைக்கு அனுப்பிச்சிட்டுத்தான் மிச்சத்த நான் செலவு பண்ணுவேன். மாசக் கடைசில ரெண்டு ரூபாய் எல்லாம் கைமாத்து வாங்கியிருக்கேன். எங்கிட்ட எட்டணா கைமாத்து வாங்கிறவனும் ஒருத்தன் இருப்பான்…கூர்க்கா ஒருத்தன். சார், ஆட் அணா தேதீஜியே முஜே…அப்படினு நிப்பான்.

சுரேஷ்: ‘நான் இப்படித்தான், எழுத்தாளர் ஆகணும்’ அப்படினு நினைச்சீங்களா?

நாஞ்சில் நாடன்: Of late, எனக்கு அந்த நம்பிக்கை வலுவா இருக்கு. எனக்கு ஏதோ ஒரு guiding force இருக்கு. இப்ப வாழ்கைல…கடந்த ஒரு பத்து வருஷம், இருபது வருஷம்…எனக்கு சோத்துக்குப் பஞ்சம் இல்ல. துணிமணிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனா எப்பவுமே பண நெருக்கடி இருந்திருக்கு. இந்த வீடு கட்டிக் குடிவந்ததுக்கப்புறம் – என் பையன் பெரும்பணம் செலவு பண்ணிக் கட்டியிருக்கான் – பின்னாடி வரக்கூடிய செலவுகள் இருக்கே..குடிநீர் இணைப்பு எடுக்கணும்…அதுக்கு மோட்டர் வாங்கணும்…ப்ளம்பர் 8000 கேட்கிறானோ,10000 கேட்கிறானோ..நான் ஐநூறு ரூபாய் நோட்டுப் பார்த்தே பல நாள் ஆச்சு. அதுக்காக பஸ்ல போகும்போது, கண்டக்டர்கிட்டப் பார்த்ததில்லையான்னு கேட்கக்கூடாது. இது ரெண்டு விதமா மனித மனதை இயக்குது. உங்களைத் தோற்றுப் போகச்செய்யும். தோல்வி மனப்பான்மையைப் பெருக்கும். உங்கள வலுவிழக்கச் செய்யும். நான், by nature, diehard species. வடிவேலு சொல்வாரில்லையா…எத்தனைவாட்டி அடிச்சாலும் அழமாட்டேங்கிறான்னு மறுபடி அடிச்சாங்க. ரொம்ப நல்லவன்டா இவன். அந்த ஜோக் மாதிரித்தான் இது,

சுரேஷ்: இது இந்திய விவசாயியோட ஆதார குணமா?

nanjil_interview_2நாஞ்சில் நாடன்: மண், இயற்கையோடு இருக்கோமில்லையா…எங்க அப்பா தோல்வியடைஞ்சாக்கூடத் தோல்வியை ஒத்துக்கமாட்டார். ‘இந்த பூ விளையலைன்னா என்னடா, அடுத்த பூ விளையும்.‘ பஞ்சத்தினாலயோ, எதன் காரணமாகவோ, இந்த பூ விளையல, ஆனா அடுத்த பூ விளையும். விளையாம எங்க போயிடும்? மழை பெய்யல. அப்படிப் பெய்யாமலேயா இருந்துரும்?

ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் வைச்சுட்டு சிறு விவசாயிகளுக்கு – பெரிய விவசாயிகளப்பற்றி நான் பேசலை – நெல்லு, வாழை, தென்னை இத மாத்திரம் யோசிக்கிறவன்…விவசாயங்கிறது, it includes கோழி, it includes பால்மாடு, it includes ரெண்டு தென்னை மரம், ஒரு முருங்கை மரம், ஒரு கருவேப்பிலை மரம், வயக்கரைல தண்டங்கீரை போட்டு – ஒரு கைப்பிடித் தண்டங்கீரை ஓரணாவுக்கு நான் போய் வித்துருக்கேன். இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள். விவசாயங்கிறது, இதெல்லாம் சேர்ந்ததுதான். கோழி வளர்த்தறோம்னா, கோழிக் கூண்டுல, கீழ, உமி பரப்புவோம். அதனோட வசதிக்காக. ஒரு ஆறு மாசத்துப்புறம், அந்த உமியை மாத்துவோம். மாற்றுகிறபோது, அந்தக் கோழியினுடைய எச்சம் எல்லாம் சேர்ந்து, அது ஒரு நல்ல உரமா இருக்கும். அத நாங்க என்ன பண்ணுவோம்னா, வரப்போரம் போடுகிற, கொத்தவரைங்காய், கத்திரிக்காய், பீர்க்கங்காய்…இதுக்கு மொதல்ல மண்ணை வெட்டிட்டு – இந்தக் கோழிக்காரத்த நான் சுமப்பேன், கடவம் வைச்சு – எங்க அப்பா வாங்கி அத வெட்டிப்போடுவார். கோழிக்காரம் வருமானம்னு நீங்க ருப்பீ அணா பேசிஸ்ல கேல்குலேட் பண்ணீங்கன்னா, அது வருமானம்தானே? அது ஒரு உரமா உங்களுக்குப் பயன்படுதில்லையா? மாடு வளர்க்கிறபோது…அதைத்தான் நம்மாழ்வார் கேட்கிறார். ’ட்ராக்டர் வந்து சாணி போடாதுடா, மூத்திரம் பெய்யாதுடா, வைக்கோலும் திங்காது…டீசலாக்குடிக்கும்.’ எங்க வயலுக்குத் தேவையான உரத்தை நாங்க சேமச்சிக்கிடுவம். அந்த மாடு வைக்கோலக் கொஞ்சம் பிடிச்சி, கீழ செதறிப்போட்டுத்தான் சாப்பிடும். அதுக்கு மேலயே படுத்துக்கிடும். அதுக்கு மேலயே மூத்திரம் பெய்யும். காலைல எந்திருச்சவுடனே, அந்த மாட்டை மாத்திக்கட்டிட்டு, அந்த சாணி மூத்திரமும் வைக்கோலுமா, ஒழுக ஒழுக நாங்க சும்பபோம். ஆறுமாசம் கழிஞ்சு பார்த்தீங்கன்னா, கீழே வெட்டினீங்கன்னா, அது ப்ளம் கேக் மாதிரி இருக்கும். அடில போட்ட சாணி உரமும், இலைதழைகளும் இதுவும் சேர்ந்து..அதுக்குள்ள பலாக்கொட்டை சைஸ்க்கு புழு இருக்கும்.

கண்ணன்: சாணிப் புழு.

நாஞ்சில் நாடன்: சாணிப்புழு.  இதை சுற்றிலும் பறவைக் கூட்டமா வந்து உட்கார்ந்திருக்கும். இந்தப் புழுவை சாப்பிடறதுக்காக. இந்த உரம் எங்களுக்கு அடிப்படை உரம். என்னுடைய ஞாபகத்துல, அம்பது வருஷத்துக்கு முன்னாடிதான் முதல்முதல் நாங்க fertiliser use பண்ணினோம். வயல் வரப்போரத்துல வேம்பு நிற்கும், மஞ்சணக்கு நிற்கும், வாகை நிற்கும், புங்கு நிற்கும்…ஒரு வருஷத்துக்கு ஒருமுறை சேத்துல உழுகிறபோது, நடவுக்கு முதல்நாள் வயல மொழிக்கி, லெவல் பண்ண அப்புறம், அந்தத் தழையை முழுசா வெட்டி மிதிச்சிடுவோம். அதுக்கு மேல நடுவோம். நடவு முடிஞ்சு அடுத்தமுறை உழுகிறோமில்லையா, அப்பநாங்க சேறில்லாம உழுவோம். அதுக்கு நாங்க பொடிப்பருவம்னு சொல்வோம். சேறில்லாம உழறபோது, எங்க அப்பா ஏர் ஓட்றார்னா, அவருக்குப் பின்னாடியே நான் நடப்பேன். ஏன்னா, தோலு, இலையெல்லாம் சீரணம் ஆகி, கம்பு மாத்திரம் கிடக்கும். அந்தக் கம்பப் பொறுக்கி மூணு மாசத்துக்கு எரிபொருளாப் பயன்படுத்துவோம். ஆத்துல பெருவெள்ளம் வந்தா, நானெல்லாம்…எனக்கு நல்லா நீச்சல் தெரியும்…இவ்வளவு ஆழத்துல நின்னு, ஆத்துல, இலைதழைகள், தேங்காய் தென்னை மடலு, மரம் தடியெல்லாங்கூட அடிச்சுட்டு வரும்…காட்டாறு இல்லையா…அதப்புடிச்சு கரையேத்தி வைச்சுட்டம்னா, ஒரு மூணு மாசத்துக்கு விறகு.

சுரேஷ்: உங்க ஊர்ல பழையாறு, இல்லையா?

நாஞ்சில் நாடன்: ஆமா, பழையாறு. இப்ப, கொட்டாங்குச்சினு சொல்றாங்கில்லையா, சிரட்டை…அத என்ன செய்யறதுன்னு தெரியுமா எனக்கு…தேங்காய் மூடியை என்ன செய்யறதுன்னு தெரியல…தென்னை மடல என்ன செய்யறுதுன்னு தெரியல…முன்னாடி வீட்ல நம்முடைய நெல்லை நாமே பொகக்கணும்…அதுக்கு இதெல்லாம் பயன்படுத்துவோம். எங்க வீட்ல நாங்க என்ன பண்றோம்னா – நாங்க நாஞ்சில் நாட்டுக்காரங்க, எங்களுக்குத் தேங்காய்ச் செலவு அதிகம்…எப்படியும் மாசத்துக்கு எங்களுக்கு ஒரு இருபத்தஞ்சு முப்பது தேங்காய் ஆயிடும்…அப்ப அறுபது தொட்டி…இந்த அறுபது தொட்டியையும் சேர்த்து வைச்சி, குட்டைல போடறதில்லை..கட்டிட வேலைக்கெல்லாம் பெண்கள் போறாங்கில்லையா…இது எரிபொருள் அவங்களுக்கு. இந்திய விவசாயத்திலேயே இந்த எரிபொருள நாம மறந்துட்டோம். கேஸ் உங்களுக்குத் தேவை. விவசாயிக்கு எதுக்கு கேஸ்? இத நான் பேசறபோது, இவன் பிற்போக்குவாதிங்கறாங்க. ‘உனக்கு மாத்திரந்தான் கேஸ் அனுபவிக்கக்கூடிய அதிகாரம் இருக்கா? அவன் கேஸ்ல சுவிட்ச் ஆன் பண்ணி தோசை சுடக்கூடாதா?’ நகரத்துல வேலைக்குப் போற டீச்சருடைய, பி.டபில்யூ.டி. க்ளார்க்கினுடைய வொர்க்கிங் ஹவர்ஸ் வேற, கிராமத்து பொண்ணினுடைய வேலைவிகுதி வேற. அவளுக்கு ஒரு பத்து நிமிசம் சமையலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதன்மூலம்…ஒரு நெரிசலுமில்லை..எந்த மஸ்டரிலும்போய் கையெழுத்துப்போட வேண்டாம்…இத நாம தப்பா தப்பா சொல்லிக்கொடுத்துட்டம். நாகரிகமயமாதல், விஞ்ஞானத்தப் பயன்படுத்திக்கொள்ளுதல், பயன்பாடு கருதித்தான். இங்க, மாம்பழம் எப்படி நறுக்கி சாப்டறதுன்னே தெரியாது…நகரத்தில் பிறந்த பிள்ளைங்களுக்கு…தோலோடு சேர்த்து நறுக்கி, இப்படி உருவி தூரப் போட்றுவாங்க..இத மாதிரி வருகிறபோது நமக்கு fuel consumption அதிகமாகுது. நான் ஏதோ ஒரு கட்டுரைல எழுதியிருக்கேன்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயமுத்தூர்ல மாத்திரம், நாலாயிரம் தேங்காய் ஒடைச்சு வீணாப் போகுது. நான் ஒரு முறை ரோட்ல, தேங்காய் மூடி, இப்படிப் பிளந்து ரெண்டாக்கெடக்குது – பொறுக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க சத்தம் போடறாங்க. சும்மாதானே கிடக்கு. அடுத்த லாரி அதன் மேல ஏறப் போகுது. தேங்காய் அன்னிக்கு எட்டு ரூவா.

நல்ல நெல்லு 65கிலோ அரிசி அடிக்கும்…எழுவது கிலோ அரிசிகூட அடிக்கும். இது நல்ல அரிசி. இதுல கிடைக்கிற மற்ற விஷயங்கள், குருணை, ரெண்டா உடைஞ்ச அரிசி, நாலா ஒடைஞ்ச அரிசி, தவிடு, உமி, இதெல்லாம் பைப்ராடக்ட். வீட்ல கோழி வைச்சுருந்தா, குருணை கோழிக்கு உணவு. தவிடு மாட்டுக்குத் தொட்டில கலக்கறது. இதெல்லாம் சுத்தமா மறந்துட்டோம். இப்ப விவசாயி என்ன செய்யறான்னா, மொத்த நெல்லையும் அறுபத்தைஞ்சு கிலோ பேக்ல போட்டுத் தைச்சுட்டு, விலையைக் குடுத்துட்டு, கல்குருணை நீக்கப்பட்ட நயம் பொன்னி வெலைக்கு வாங்கிச் சாப்பிடறான். ஒரு நல்ல நெல்லு, நூறு கிலோ நெல்லு, ஆயிரத்திஐநூறு ரூபாய்ன்னா, அறுவத்தஞ்சு கிலோ அரிசிக்கு உங்க அடக்க வெலை எவ்வளவு? நீங்க திரும்பி வாங்கிட்டு வர்றபோது, நாற்பத்தைஞ்சு ரூபா கிலோவுக்கு வாங்கிட்டு வர்றீங்க. இடையில இருக்கக்கூடிய லாபங்களை, நம்ம பொருளாதாரம் கணக்கில எடுத்துக்கவே இல்ல. இது நம்மகிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை.

இதோ வந்திடறேன். தினமணி சப்ஸ்கிரிப்ஷனுக்கு வர்றாங்க.

சுரேஷ்: அவர் யார்ட்ட சப்ஸ்கிரிப்ஷன் வாங்கறார்னு தெரியுமா?

நாஞ்சில் நாடன்: இதுக்கு முன்னாடி ஒருத்தரு நாஞ்சில் நாடுங்கிறது எங்கிருக்குன்னு கேட்டார். மார்க்கெட்டிங்ல இருக்கவர். தினமணில என்னை பத்தி செய்திகள் prominentஆ போடறாங்க. எப்பவுமே. வைத்தியநாதனை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். இன்னிக்கு பேப்பர் பார்த்தியான்னு கேட்டார்னா, நான் வாங்கிறதில்லன்னு சொல்ல முடியாதில்ல.

சுரேஷ்: நாலு பேப்பர் வாங்கிறீங்க. படிக்க நேரமிருக்கா?

நாஞ்சில் நாடன்: காலைல எல்லாப் பேப்பரும் படிச்சிருவேன். எனக்கு சனி ஞாயிறெல்லாம் கிடையாதில்லையா. நான் இன்னிக்கு விரும்பினா வெளிய போவேன். விரும்பலைனா வீட்ல இருப்பேன். யாரும் கேட்க மாட்டாங்க. பெரிய வேலைங்கிறது டெலிபோன் அட்டென்ட் பண்றதுதான்.

கண்ணன்: writing patternனு ஏதாவது வைச்சிருக்கீங்களா? குறிப்பிட்ட நேரத்துல படிக்கிறது, எழுதுறதுன்னு. நிறைய எழுத்தாளர்கள் அது மாதிரி சொல்றாங்களே.

நாஞ்சில் நாடன்: இல்ல. அது ஒரு பந்தாவுக்கு. அப்படியெல்லாம் இல்ல. சா.கந்தசாமிகிட்ட கேட்டீங்கன்னா, என்னுடைய நாவலின் கடைசி வரியை நான் முதலிலேயே தீர்மானித்துவிடுவேன் என்பாரு. அப்படியெல்லாம் ஒரு எழுத்தாளர்னாலையும் தீர்மானிக்க முடியாது. எழுத ஆரம்பிக்கிற ஒரு நாவல்ங்கிறது எங்க கொண்டுபோய் நிறுத்தும்கிறதே உங்களுக்குத் தெரியாது. நிறையப்பேர் நாவல் எழுதுகிற போது ஒரு ஸ்கெட்ச் போட்டுப்பாங்க. கேரக்டர், சீன் இதுமாதிரி ஒரு அவுட்லைன் போட்டுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு அந்த பேட்டர்ன் கிடையாது. நான் என்ன issue எழுதப்போறேங்கிறத மனசுல யோசிப்பேன். சதுரங்கக் குதிரைகள் எடுத்தோட்டோம்னா, ஒருத்தனுக்கு நாற்பத்தைஞ்சு வயசாகுது…இன்னும் கல்யாணம் ஆகலை. எனக்கு இவ்வளவுதான் மேட்டரு. இது மனசுல ஊறிட்டே கிடக்கும். இதுக்கு ஒரு ரோல்மாடல் கேரக்டர் எல்லாம் கிடையாது. இதுல என்னுடைய அனுபவங்கள் எல்லாம் நான் சொல்ல முயற்சி பண்ணுவேன். அப்புறம் சில விஷயங்கள நான் ப்ரொஜக்ட் பண்ணிப் பார்ப்பேன். எனக்கே நாற்பத்தஞ்சு வயசில கல்யாணம் ஆகலைனா, என் உறவினர் வீட்ல, என் கொழுந்தியா வீட்ல எனக்கு என்ன வரவேற்பு கிடைக்கும். கல்யாண வீட்ல போயி, கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளைக்கு சந்தணம் பூசக்கூடக் கூப்பிட மாட்டாங்க.  இப்படியெல்லாம் யோசிச்சுட்டுப் போறபோது, ரெண்டு மாசத்துல நமக்கு ஒரு தெளிவு வந்துடும். அப்ப எழுதத் தொடங்கிற ஒரு புள்ளி இருக்கு. அடுத்த சேப்டர்ல என்ன எழுதப்போறோம்னு நமக்குத் தெரியாது. அந்த மாதிரி நான் ப்ளான் பண்ணிக்கிறதில்லை. அடுத்த வரில என் தோள ஒருத்தர் வந்து தொடப்போறார்ங்கறதே எனக்குத் தெரியாது. டெக்னிக்கலா சில ஏரியாஸ் வொர்க் பண்ணுவேன். நீங்க சதுரங்கக் குதிரை படிச்சிருப்பீங்களா தெரியல.

சுரேஷ்: படிச்சிருக்கேன்.

நாஞ்சில் நாடன்: அதுல ஒரு கனவு சீன் ஒன்னு வைப்பேன். இதெல்லாம் டெக்னிக்கல் வொர்க். இத நான் எத்தனை வெர்ஷன் வேணா எழுதிப்பார்ப்பேன். கொஞ்சம் மிஸ்டிக்கா இருக்கணும். கொஞ்சம் நூதனமா இருக்கணும். இத ரீவொர்க் பண்ணிப் பார்ப்பேன். டைலாக் எல்லாமே ஒரு எழுத்தாளர்க்கு மனப்பாடமா வைச்சுட்டு எழுத முடியாது. One dialogue leads to the second dialogue. That leads to the third one. சண்டைப் போடப் போறாங்கன்னுதான் நான் தீர்மானிக்கிற விஷயம். இந்த ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கப் போகுது. அது என்ன காரணத்துனாலே சண்டை வரும்? அந்த சண்டை எங்க இழுத்துட்டுப் போகும்…ஒரு கேரக்டரை இங்க காலி பண்ணிறோம்னா காலி பண்ணிடலாம். பின்னாடி உங்க நாவலுக்குத் தேவையா இருப்பான்னா காலி பண்ண மாட்டோம். இதெல்லாம் ஓரளவுக்கு. மூணாவது, writing practice தான். நாற்பது வருஷமா எழுதறேன். ஒரு சென்டென்ஸ்(sentence) எங்க ஆரம்பிச்சாலும் எனக்கு அத முடிக்க முடியும். Subject, predicate இதெல்லாம் போட்டு ஒரு சென்டென்ஸ் ப்ளான் பண்றதில்ல.  ‘பார்த்துக்கொண்டிருந்தபோது’னு ஒரு சென்டென்ஸ் ஆரம்பிப்போம். ‘புளிய மரம் காற்றில் சலசலத்து’னு ஆரம்பிப்போம். ‘கடைவாயில் எச்சில் ஒழுகியது’ னு ஆரம்பிப்போம். எப்படித் தொடங்கினாலும் I am able to finish that sentence. இதுல எனக்கு என்னுடைய வாசிப்பு உதவி பண்ணுது. தமிழைக் கையாள்வதில் அச்சமே கிடையாது. மற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் மாதிரி ஒரு திட்டவட்டமான மொழியைக் கையாளணும்னு ஒரு நெருக்கடி ஒரு க்ரியேட்டிவ் ரைட்டர்க்குக் கிடையாது. அவங்களுக்கு, ‘இப்படி சுட்டிச் செல்கிறார்’, ‘என்று எழுதிச் செல்கிறார்னு’ ஒவ்வொரு சென்டென்சும் கம்ப்ளீட்டா இருக்கணும். In creative writing, each sentence need not be a complete sentence. ரெண்டு புள்ளிவைச்சுட்டு நீங்க அடுத்தப் பாராவுக்குப் போயிடலாம். இந்த சுதந்திரம் க்ரியேட்டிவ் ரைட்டிங்ல உண்டு. சிறுகதை எழுதறோம்னா – நான் கையினாலேதான் எழுதுவேன். கம்ப்யூட்டர்ல அடிக்கறதில்லை – அறுபது முதல் எழுபது சதமானம் first draftல வந்துரும். அப்புறம், தூக்கி வீசிட்டு ஒரு ஏழு நாள் கழிச்சி மறுபடியும் படிச்சுப் பார்ப்பேன். கைல சிவப்புப் பேனா வைச்சுத்தான் படிச்சுப் பார்ப்பேன். கரெக்சன்ஸ் போடுவேன். சென்டென்ஸ் மாத்துவேன். அதக்கொண்டு போய் இங்க வைப்பேன். ஒரு ரெண்டு பாராகிராஃப் எக்ஸ்ட்ரா எழுதுவேன். இதப்பண்ணி வைச்சுட்டு, அடுத்த ட்ராப்ட் காப்பி பண்ண உட்கார்றேன் இல்லையா, அப்ப இன்னும் கொஞ்சம் சேன்ஜ் ஆகும். எப்பவுமே ஒரு பாராவுல ஒரு சொல்லைப் பயன்படுத்தினா, இன்னொருதடவை அந்த சொல்லைப் பயன்படுத்துறதத் தவிர்ப்பேன். மாற்றுச்சொல் போடமுடியுமான்னு யோசிப்பேன். ஒரே பொருளுக்கு. சொன்னான், சொன்னான், சொன்னான்னு எழுதினா சலிச்சுப் போயிருதில்லையா. இந்த சொன்னான்ங்கிற பெர்ஃபெக்சனோட முடியணுங்கிற அவசியமில்ல.

nanjil_interview_5முதல் பாராவுல, நான் பஸ் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன்னு எழுதனம்னா, வாசகனுக்குத் தெரியும்…நான்தான் போறேன்னுட்டு. வரிக்கு வரி நான் நான் நான்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்னு சொல்றபோதே that implies நான். அப்ப அங்க இருக்கிற ‘நான்’ஐ கட் பண்ணிடுவேன். இத பயிற்சியின் மூலம் பிறக்கிற ஒரு விஷயம். நிறையப் படிச்சிகிட்டே இருக்கிறோம். விரும்பிப் படிக்கிறோம். ஆசைப்பட்டு படிக்கறோம். ஒரு சமய சந்தர்ப்பம் இல்லாம ஒரு, ஒரு coinage வந்து விழும். சமீபத்துல குங்குமத்துக்கு ஒரு தொடர் எழுதிட்டிருக்கிறேன். அந்த சேப்டரை முடிக்கப் போற சமயத்துல, இது மாதிரியான ஒரு தொடர் – ‘சகாயம் நடந்தது’ன்னு வைச்சுக்கங்க. அந்த சகாயம்கிற சொல் எனக்கு…நான் இப்படி அடுத்த சென்டென்ஸ் எழுதுவேன்…‘சகாயம் என்ற சொல் எனக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. அவருடைய குடும்பத்தினரை இறையருள் காக்கட்டும். காக்க காக்க கனகவேல் காக்க’ அப்படினு போட்டுக் கோடு போட்றுவேன். இதுல எனக்கு pre-planning கிடையாது. சகாயத்தை நான் சொல்ல வேண்டிய நெருக்கடியும் எனக்கு கிடையாது. நான் தீர்மானிக்கவும் கிடையாது. சகாயம்கிற சொல் என் thought processல ஏற்படுத்திட்டுப் போறதை மிஸ் பண்ண மாட்டேன். அது கட்டுரையா இருக்கிற காரணத்துனால ஒரு சுதந்திரம் இருக்கில்லையா. இத முந்தாநாள்தான் அனுப்பினேன். சகாயம்கிற சொல்…

கண்ணன்: கட்டுரைக்கும் சகாயத்துக்கு எந்த தொடர்பும் இல்லையா?

நாஞ்சில் நாடன்: ஒரு தொடர்பும் இல்லை. சில சமயம், சம்பந்தமில்லாம சில பாடல்வரிகள் ஞாபகத்துக்கு வரும். அனுமன் இலங்கையைப் பார்க்கிற போது, அணிநகர் கிடக்கை…அணிநகருடைய காவல் கோட்டம் இருக்கிறதில்லையா, காவல் அரண்…பார்த்த உடனே அவனுக்கு ஒன்னு தோணுது…கம்பன் என்ன சொல்றான்னா, கறங்குகால் புகா…கறங்குகின்ற – சுழல்கின்ற, கால்னா காற்று…கறங்குகால் புகா கதிரவன் ஒளிபுகா மறலி மறம் புகாது…மறலினா எமன்..இதுக்குத்தான் நமக்கு பொருள் வேணும்.  திறம்பு காலத்து யாவையும் சிதையினுஞ் சிதையா அறம் புகாது…திறம்பு காலம்னா பிரளய காலம். பிரளய காலத்துல எல்லாமே அழிஞ்சு போயிடும். அப்ப அழியாம நிற்கிறது அறம் ஒன்னுதான். அந்த அறமே புகாது. வானவர் புகாதுன்னு சொல்றது வம்பில்ல? இனிவானவர் புகார் என்கை வம்பே. அப்படின்னு பாட்டு முடியும். இதுல எனக்குத் தோன்ற இடத்துல…ஒரு காற்றச் சொல்றேன்னு வைச்சுக்கங்க…கறம்புகால் புகா கதிரவன் ஒளிபுகான்னு அடிச்சுட்டுப் போயிடுவேன். இது கம்பனை காப்பி பண்றது ஆகாது. கம்பன் எனக்காகத்தான விட்டுட்டுப் போயிருக்கான். அத நான் திரும்ப எடுத்தாள்றேன். கையாள்கிறேன். சிறுகதைக்குள்ள வருதா, கட்டுரைக்குள்ள வருதான்னெல்லாம் பெரிசா கவலைப்பட மாட்டேன்.

இங்கயே நக்கல் பண்ணனும்னு ஒரு ஐடியா வந்துருச்சுன்னா, வேற வகையா எழுதுவேன். கோவையைப் பற்றி எழுதும்போது, கோவைனா கோயமுத்தூருடைய சுருக்கம் இல்லைனுதான் தொடங்குவேன். கோவை என்பது கோவை இலக்கியம். நானூறு பாட்டு, அகத்துறை இலக்கியம், இதெல்லாம் சொல்லணும். இதுல எடக்குப் பண்ணனும்னு தோணுச்சுனா நம்ம மொழி வேற மாதிரி இருக்கும். சில சமயம் வம்புக்கு….இப்ப லா.ச.ரா எழுதுற எல்லா வார்த்தையும் எனக்குப் புரியவா செய்யுது…புத்ர வாசிக்கிறபோது எனக்கு 19 வயது…முதல் வாசிப்புல ஒன்னும் புரியல…ஆனா ரெண்டாவது வாசிப்புக்கான ஒரு தூண்டுதலை அந்த நாவல் எனக்குள்ள வைச்சிருந்தது…ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு ரெண்டாவது தடவை படிக்கிறேன்…இன்னொரு பத்து வருஷம் கழிச்சு மூணாவது தடவை படிக்கிறேன். அப்பத்தான் எனக்குப் புரியுது…புத்ரவுடைய central characterஏ தாய் வயிற்று சாபம்..இந்த விஷயம் புரியறதுக்கு எனக்கு மூணு வாசிப்பு….இத லா.ச.ரா. வெளிப்படையாப் பேசமாட்டார். எதுக்குப் பேசணும்…என்னுடைய தரத்துக்குப் படிக்க வர்றவன் என்கிட்ட வரட்டும்…இல்லைனா அங்கயே நின்னுக்கோ…உனக்கு எது செறிக்குமோ அத சாப்பிடு. எனக்கு ப்ரோட்டா டைஜஸ்ட் ஆகறதில்ல. So I don’t take it.

கண்ணன்: இந்த அணுகுமுறைல, குங்குமம், விகடன் மாதிரி பெரிய இதழ்கள்ல எழுதும்போது, அப்படி எழுதறதுக்கான சுதந்திரம் உங்களுக்கு கிடைக்கிறதா?

நாஞ்சில் நாடன்: நான் compromise பண்ணிக்கிறதில்லை. நான் எழுதுறேன்கிறது நான் எழுதறுதுதான். விகடன்க்கு எழுதினாலும் சரி, குங்குமத்துக்கு எழுதினாலும் சரி. ஆனா, என்ன பண்ணுவேன்னா, குங்குமத்துக்கு ஒரு தொடர் எழுதிகிட்டிருக்கிற போது, ரெண்டு chapter incidents base பண்ணி கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள சொல்றேன்னா, ஒரு சாப்டர் சீரியசா இருக்கும். அவன் என்னைத் தொடர்ந்து வருகிற போது, சீரியசா இருந்தாக்கூடப் படிச்சிடுவான். அப்புறம் மறுபடியும் நான் ஒரு இன்சிடென்டுக்குப் போயிடுவேன். ஒரு வாரத்துக்கு முன்னால ஹோப் காலேஜ் சிக்னல்ல நின்னுட்டிருக்கேன்…பர்தா அணிந்த ஒரு பெண் க்ராஸ் பண்றா…டூ வீலர்ல, தகப்பனார் வண்டியோட்டறாரு – ஒரு பொம்பளப் புள்ள பின்னால உட்கார்ந்திருக்கா. அவ இவளை பாத்திமான்னு கூப்பிடறா…இவ திரும்பிப் பார்த்திட்டு…அவளுக்கும் இவள அடையாளம் தெரியும்…இவளுக்கும் தெரிஞ்சிருக்கு…சிக்னல் முடியற வரைக்கும்     ரெண்டு பேரும் பேசறாங்க…இந்த பேச்சு நடந்திட்டிருக்கிற போது பாத்திமாவுடைய முக்காடு கழுத்துக்கு வந்திருது. இந்துப் பொண்ணு வண்டில உட்கார்ந்திருக்கா…அவளைப் பார்த்துட்டே இருக்கா…இந்துப்பெண் வண்டியில உட்கார்ந்துட்டே முக்காட எடுத்து அவளுக்குப் போடறா…நான் இவ்வளவுதான் சொல்லுவேன். இதுல நின்னு தத்துவம் பேச மாட்டேன்.  ஏன்னா அவங்க தோழிகள், ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சிருக்காங்க. இவளுக்கு அது முக்கியம்னு தெரியது. அவங்க மரபுல தலைல முக்காடு இல்லாம இருக்கிற இஸ்லாமியப் பெண், தான் கிட்டத்தட்ட ஆடையில்லாம இருக்கிற உணர்வப் பெறுகிறாள்ங்கிற அந்த உணர்வுக்கு அவள் மதிப்பு கொடுக்கிறா. இந்த மாதிரியான ஒரு இன்சிடென்டை ஏற்கனவே நான் குங்குமத்துல எழுதியாச்சு. வைசியாள் வீதி பஸ் ஸ்டாப்ல நின்னுட்டிருந்தேன். ஒரு இந்துப் பெண்…அடையாளங்களப் பார்த்தாத் தெரியுது. இளவயதுப் பெண்தான். ப்ரா ப்ளவுஸ்ல இருந்து நகர்ந்திருக்கு. இதப் பார்க்கிற வயசெல்லாம் நான் தாண்டியாச்சு. அந்த இடத்துல அதையும் பேசிடுவேன். ‘உம்ம வயதுல நீர் பொம்பளப்புள்ளைங்களுக்கு ப்ரா பார்த்துட்டு இருக்கீங்களன்னு கேட்பீங்க – அத தேடிப்பார்த்த காலமுண்டு. இப்ப காட்சிப்படுகிற காலம் எனக்கு.’ உடனே, ஒரு அஞ்சு நிமிஷத்துல, ஒரு இஸ்லாமியப் பெண்குழந்தை, காலேஜ்ல படிக்கிற குழந்தையா இருக்கும். பேக் போட்டுட்டு வந்து நிற்குது.  இப்படித் திரும்பிப் பார்க்குது. இவளுடைய இடதுகைப்பட்டை வெளிய இருக்கு. உடனே அவ விரல விட்டு ப்ளவுச இழுத்து மூடுது. இத நான் பதிவு பண்ணியாச்சு. இத மாதிரி விஷயம் சொல்றபோது, இது எந்த வாசகனையும் சுவாரசியமா வாசிக்க வைக்கும். குங்குமம் வாசகனோ, தினகரன் வாசகனோ, அவன் சுவாரசியத்தோடு படிப்பான். ரெண்டு இது மாதிரிக் கொடுத்தேன்னா, மூணாவதுல நச்சுனு அடிச்சுடுவேன். அவன் இதை வாசிச்சு வந்ததுல இவர் ஏதோ சொல்லப்போறார்னு அவனே அதை முழுங்கியாகணும். சீரணம் ஆகுதோ ஆகாட்டியோ…மெல்ல சீரணம் ஆகும். நம்ம அதைப்பற்றிக் கவலைப் பட்டுட்டு இருக்க முடியாது. போன இதழில், வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறோம்ங்கிறத எடுத்துட்டேன். நான் எப்படித் தொடங்கிறேன்னா, ‘நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்கனு மாணிக்கவாசகர் சிவபெருமானவிட மூத்தவர்னுட்டா வாழ்த்தறான். வாழ்த்துங்கிறது வியங்கோள் வினைமுற்று. ஒரு ஏவல் சொல் அது. வாழ்த்துவதற்கு வயசு வேண்டாம்பா. இப்படின்னு ஆரம்பிச்சுட்டு, மணற்கொள்ளைல ஊழல், இதுல ஊழல்னு ஊழல்க்குனு ஒரு பட்டியலே போடலாம். ஒரு அகராதி தொகுக்கலாம் போலிருக்கு.’ இதைக் குங்குமம் போடுவாங்கனு கூட நான் எதிர்பார்க்கல. அது ஒரு சீரயசான கட்டுரை. என்னுடைய ஏழாவது கட்டுரை.

சுரேஷ்: ஃபீட்பேக் வருதாங்க சார் இதுக்கெல்லாம்.

நாஞ்சில் நாடன்: நல்ல ஃபீட்பேக் வருது. கூப்பிட்டுச் சொல்றாங்களே. வேடிக்கையாச் சொன்னாங்க, ‘சார், எங்க TRP rating எகிறிட்டு இருக்கு’ன்னு. சும்மா நக்கல் பண்றாங்கன்னு எடுத்துகிட்டேன்.

சுரேஷ்: பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துல நடந்ததப் பற்றி எழுதியிருந்தீங்க. அதையும் படிச்சேன்.

நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு என்னைத் துரத்துறாங்க. ‘இந்தியனா யோசிக்கிறதுல அர்த்தம் இல்லைடா’…இதை என்னுடைய அனுபவங்கள்ல இருந்து பெறுகிறேன். பெனராஸ் இந்து யுனிவர்ஸிட்டில, சாகித்ய அகாதெமியும் இந்திய அரசாங்கத்துடைய கல்ச்சுரல் சென்டரும் நடத்திய அந்த மூணு நாள் கருத்தரங்குல, நான் வீட்டுக்கு வர்றபோது, ‘எப்படி இவனுங்களோடு சேர்ந்து வாழறது. இந்த ஒரு மேலாண்மையோடு அவங்க இருக்கிறபோது.’

சுரேஷ்: அதைப் படிக்கிறப்ப எனக்கு ஒன்னு தோணுதுங்க சார். நீங்க இந்த இடத்துல இப்படி நினைக்கிறீங்க. ஆனா பம்பாய்ல உங்க வாழ்க்கை உங்களை அந்நியப் படுத்தலையே.

நாஞ்சில் நாடன்: ஒரு வகையில அந்நியப்படுத்துச்சு. வடபுலத்தைச் சார்ந்தவங்களுக்கு ஒரு upper handதான் என்னுடைய நாற்பது வயசு அனுபவத்துல நான் உணர்கிறேன். அதற்கு நாமும்தான் காரணம். இங்க சாதாரணமா ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் வாங்க வரிசைல நிற்கறபோது, ஒரு இந்திக்காரன் நின்னான்னா, நம்ம ஆளே ஒதுங்கி இடம் கொடுக்கிறான். இவனுக்கு ஒரு inferiority complex.  இவனுடைய ஸ்கின் காரணமாவோ, அவன் சேட்டான்…எவன்னாலும் சேட்டான் தானே…இருநூறு ரூபா சம்பளத்துக்கு வேலை செய்தாலும் சேட்டான்தான்.

சுரேஷ்: ஆனா நம்ம ஊருக்கு பிகார்ல இருந்து வேலை செய்ய வர்றவங்களப் பார்த்தா நமக்கு அப்படி இல்லையே.

நாஞ்சில் நாடன்: அவங்க ரொம்ப பாவம். பரிதாபதுக்குரியவங்க. பிகார்ல அவங்க living conditionsக்கு கோயமுத்தூரப் பார்த்தா அவங்களுக்கு சிங்கப்பூர். இங்க இருக்கிற வசதிகள், சமாச்சாரம். வாங்கிச் சாப்பிடுகிற ரேஷன் அரிசி, தக்காளி, பருப்பெல்லாம் பார்த்தீங்கன்னா…அங்க அவனுக்கு அஞ்சு ரூபாய்க்கு முடிவெட்டலாம்.

கண்ணன்: நானும் ஜம்ஷெட்பூர்ல அஞ்சு ரூபாய்க்கு வெட்டியிருக்கேன். பாம்பேல பத்துவருஷம் முன்னால வரைக்கும் பத்து பதினைஞ்சு ரூபாய்க்கு வெட்டியிருக்கேன்.

நாஞ்சில் நாடன்: இன்னமும் தமிழநாட்ல பத்து ரூபா டீ. கேரளத்துல பாலக்காடு தாண்டிட்டீங்கன்னா ஆறு ரூபா. கச்சாப் பொருள் விலை. அவனுக்கு எங்கிருந்து எல்லாம் கிடைக்குது. பாலே அவனுக்கு நம்ம நாட்ல இருந்துதான் போகுது. அஸ்கா உலகம் முழுக்க ஒரே விலை. டீத்தூள் ஒரே விலைதான்.

சுரேஷ்: ஒரு ப்ரைவேட் கம்பனிலதான் ரொம்ப நாள் வேலை பார்த்திருக்கீங்க. லைசன்ஸ் பிரச்சனைகளையெல்லாம் சந்திச்சிருக்கீங்க. Post liberalization, நீங்க என்ன நினைக்கறீங்க, இந்தியாவுக்கு அதனால பயன் கிடைச்சிருக்கா.

நாஞ்சில் நாடன்: நான் அந்த அளவு economist இல்லீங்க. பொதுவா இதைப் பற்றிய ஒரு கவனிப்பு உண்டே தவிர, கருத்துச் சொல்ற அளவுக்கு I am not equipped. இது ஒன்னும் நல்லது செய்யலனு தோணுது. என்னவிதமான நன்மையைக் கொண்டுவந்து சேர்த்துனு விமர்சனம் பண்ணிப் பார்த்தா, it has helped a particular section of people. பெரிய அளவில பணம் சம்பாதிக்க அவங்களுக்கு உதவி பண்ணிச்சு. சாதாரண மனுஷனுக்கு அது என்ன வகைல பெனிஃபிட் ஆச்சுனு கேட்டா நெகட்டிவ்வாத்தான் எனக்குத் தோணுது.

சுரேஷ்: ஆனா, கண்ணுல பார்க்கிறபோது, நீங்க 60கள், 70கள்ல வர்றீங்க, நாங்கெல்லாம் 80கள், 90கள்ல் வர்றோம், அப்ப அரசாங்க வேலையைத் தவிர கிட்டத்தட்ட வேலையே இல்ல. இப்ப உங்க மகன் நான் பார்க்கிற என்னுடைய உறவினர்கள் எல்லாம் வேலை கிடைச்சு, முந்தி இருந்தத விட பெட்டரா ஆன மாதிரி ஒரு உணர்வு வருதே.

நாஞ்சில் நாடன்: உண்மைதாங்க. ஒருவகைல அந்த வளர்ச்சி இருக்கு. நான் எப்படிப் பார்க்கறேன்னா, மாசம் பத்தாயிரம் ஒருத்தன் சம்பாதிக்கிறான்னு வச்சுப்போம். விஜயா பதிப்பகத்தில வேலை பார்க்கிற ஒருத்தன். இவன் தன்னுடைய பையன எஞ்சினியரிங் சேர்த்தனும்னா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பண்ணனும். இதுவும் அதனுடைய பயன்தானே. அரசு ஊழியர்கள் ஒருவகையில ஆசிர்வதிக்கப்பட்ட கம்யூனிட்டிங்கிறது எனது அபிப்ராயம். லஞ்சம் வாங்காம, சுத்தமா இருக்கக்கூடிய ஆட்களே ஆசிர்வதிப்பட்டவர்கள்தாம். சாதாரணமா, இன்னிக்கு தமிழ்நாட்டினுடைய கன்டிஷன் என்ன. ஒரு பஸ் டிக்கட் வாங்கக்கூட லஞ்சம் கொடுக்கவேண்டி வந்திருமோங்கிற நிலைமைக்கு நாம போயிட்டிருக்கோம்.

கண்ணன்: அது ஏற்கனவே நடக்குதுங்க. டிக்கெட் வாங்கினா பத்து ரூபா, இல்லைனா அஞ்சு ரூபாங்கிறதெல்லாம் ஏற்கனவே சில இடங்கள்ல பார்த்திருக்கேன்.

நாஞ்சில் நாடன்: இது ரொம்ப சமீப காலத்துல நமக்கு வந்து சேர்ந்திருக்கிற ஒன்று. கல்வியினுடைய காஸ்ட் ரொம்ப பெரிது. நான் 1964ல pre-university சேர்றபோது வருஷத்தினுடைய ஃபீஸ் 128 ருபாய். எங்க அப்பா 128 ரூபாய் கூட இல்லாத விவசாயி. அவரு வட்டிக்குக் கடன் வாங்கி என்னை சேர்த்தார். இப்ப நிலைமை அதைவிட மோசமா இருக்கு. 1லட்சம் ரூபாய் வருஷத்துக்கு ஃபீஸ்னா…

குமரகுருல படிக்கிற, GCT, CIT, PSGல படிக்கிற அந்த மாணவர்கள மாத்திரம் நீங்க கணக்குல எடுத்துட்டுப் பேசக்கூடாது. நான் சமீபத்துல Government Arts collegeக்கு போயிருந்தேன். 5500 மாணவர்கள் படிக்கிறாங்க. 70% மாணவர்கள் part-time job பண்றாங்க. ராத்திரி ஹாஸ்ப்பிட்டல்ஸ் க்ளீன் பண்றாங்க. மால்ஸ்ல வேலை பண்றாங்க. மருந்துக் கடைல வேலை பண்றாங்க. பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் வரை அவன் சம்பாதிச்சாத்தான், அவனுக்கு பிஏ இங்கிலிஷோ பிஎஸ்சி ஃபிசிக்ஸோ படிக்க முடியும். அதுல அவன் சேமிச்சு வீட்டுக்கு அனுப்பறான். இதுவும் உலகமயமாக்கல்தான். எனக்கு அந்தப் பையங்களப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்திச்சு, ‘உன்னைத் தோற்கடிக்க முடியாதுடா’னு சொன்னேன். பொங்கல் விழாவுக்கு அங்க பேசினேன். எதிர்காலம் இவங்க கைலதான் இருக்கு. இவங்கதான் பேப்பர் படிக்கிறாங்க. இவங்கதான் மேகசின்ஸ் படிக்கறாங்க. இவங்கதான் புக் வாசிக்கறாங்க. இவங்கதான் சினிமாவையும் ஓட்றாங்க. ஒரு டைரக்டர் சொல்றாரு எங்கிட்ட, ‘சார் என்படம் அஞ்சு கோடி ரூபா பட்ஜெட். ஒரு வாரம் ஓடினாப் போதுங்க சார். அதைக் காலேஜ் பையங்க பார்த்துப்பாங்க’, அப்படிங்கிறார். உங்களைப்பத்தி என்ன மரியாதை வச்சிருக்காண்டா அவன். நீ ஓட்டிருவே, அஞ்சு கோடி ரூபா அவன் பாக்கெட்ல வந்து விழுந்திரும்ன்ற கணக்கு வைச்சிருக்கான். நீ ஜாக்கிரதையா இருக்கவேண்டாமா. சகல குப்பையையும் நீ எதுக்குப் பார்க்கிற. இன்னும் நான் ஒரு கல்லூரி மாணவன் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்றதைப் பார்க்கறேன். அதனால, குமரகுருவையும் கிருஷ்ணா காலேஜையும் வைச்சுட்டு மதிப்பீடு செய்யமுடியாது. பால் அவனுக்கு என்ன விலை, டூத்பேஸ்ட் என்ன விலை. தேங்காய் என்ன விலை. சாதாரணமா வாழ்க்கையைக் கொண்டு போறது – கீழ்த்தட்டு மக்களுக்கு…கிடைக்கிற பணத்தையெல்லாம் குடிச்சுத் தொலைச்சுறான்னு நினைக்கிறோம். அது ஒரு சின்ன மைனாரிட்டிதான். நம்மூர்ல ஒரு அட்வேன்டேஜ் பார்த்தீங்கன்னா, ஒரு நல்ல வேலைக்காரன் வறுமைல வாடவேண்டிய அவசியமில்ல. கொத்து வேலைக்குப் போறவனுக்கு 700ரூபாய் கிடைக்குது, கையாளுக்கு நானூறு ரூபாய் கிடைக்குது. இன்னிக்கு நம்ப நாட்ல ப்ளம்பர் கிடையாது. எதிர்காலத்துல தையல் கம்யூனிட்டி அழிஞ்சு போயிடும். முன்னாடியெல்லாம் ஒரு பையனுக்குப் படிப்பு வரலைனா, ஒரு டெய்லர்கிட்ட கொண்டுபோய் விடுவாங்க. டீ வாங்கிட்டு வரது, காஜா போடறதுன்னு ஆரம்பிச்சு பத்து வருஷத்துல அவன் ஒரு டெய்லர் ஆயிடுவான். நான் வழக்கமா ஒருத்தர்கிட்ட ராம்நகர்ல தைச்சுகிட்டு இருக்கேன்…அவர் சொல்றாரு – இந்த மாதிரிப் பையன்க என்கிட்ட வந்துசேர்ந்து இருபது வருஷமாச்சு. என் பையன் வளமா இருக்கான். வெளிநாட்ல இருக்கான். நான் ஒரு பழக்கத்துல இந்தத் தொழில் நடத்திட்டிருக்கேன். எதிர்காலத்துல நீங்க ப்ராண்டடுக்குத்தான் போய் வாங்கிப் போடணும். தைச்சுப் போடுகிற சமாச்சாரம் இந்தியாவுல, தமிழ்நாட்ல முடிஞ்சு போயிரும். இப்படி கைத்தொழில் சார்ந்த பல விஷயங்கள் அழிஞ்சு போறதுக்கும் உலகமயமாதல் காரணமா இருக்கு. அவனுக்கு விற்காமப் போனா இருநூத்தம்பது ரூபாய்க்கு ரெண்டு சட்டை தரான். அந்துத் துணி உங்களுடைய தீர்மானம் இல்ல. அந்த துணி எத்தனை வாஷ்க்கு வரும்கிறது தெரியாது. இப்ப கரெக்ட் ஃபிட்டிங்….எந்த ஃபிட்டிங் சீப்பாக் கிடைக்குதோ அதையே வாங்கிப் போட்டுகிட்டு ஃபேஷன்னு சுத்திகிட்டிருக்கான். மெடிக்கல் எக்ஸ்பென்சஸ். சாதாரண வைரல் ஃபீவர் உங்களுக்கு ஐநூறு ரூபாயில்லாம வைத்தியம் பார்க்கமுடியாது. இருபது ஆம்ஃபிசிலின் எழுதறாங்க. நாலு அஞ்சு நாளைக்கு. ஆம்ஃபிசிலினுடைய காஸ்ட் என்ன? டாக்டர் ஃபீஸ விடுங்க. மருந்து விலை என்ன? இதுவும் நம்ம உலகமயமாதல் தானே. என் பையன் எடுத்த எடுப்புல பதினெட்டாயிரம் சம்பாதிக்கப்போறான். நாங்க ரெண்டாயிரம் ரூபா, ஆயிரத்திருனூறு ரூபாயில ஆரம்பிச்சோம். ஆனா அவங்கிட்ட இப்படிக் குடுத்திட்டு இப்படி வாங்கிக்கிறான். அவன் இருக்கிறதுல பெஸ்ட்டுக்குப் போறான். ஒரு ஷூவா, 4500 ரூபா. ஒரு ஷர்ட்டா 2500 ரூபா. இதைத் தொடங்கி வைச்சுட்டோம்னு வையுங்க, அவன் என்னை ஒரு exemplary Indian citizen ஆக்குற முயற்சிலயே இருக்கான். Only this soap, only this paste, அதனுடைய காஸ்ட் என்ன, இந்த பெர்ப்யூம்…ஏன் சார் ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி பஸ்ல பிராயணம் பண்றபோது எங்க ரிமோட் வில்லேஜ்ல எவனுக்கும் வியர்வை நாற்றம் அடிக்கலை. அவன் எவனும் டியோடரன்ட் தெளிக்கல. பெர்ப்யூம் தெளிக்கல. குளிச்சான். ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிச்சான். இப்ப ஏன் வியர்வை நாறுது? இது உணவுப் பழக்கமா? உண்மையிலயே குளிக்க மாட்டானா? சோப் தேய்க்க மாட்டானா? காஸ்ட்லி சோப் இருக்கத்தானே செய்யுது? உலகமயமாக்கல்ல நாம நிறைய விலை குடுக்கறோம். கொக்க கோலா நமக்கு எதுக்காக? டீயே நமக்கு எதுக்காக? ஒரு முட்டை மூன்றுரூபா தான். முட்டை விலை கூடிப் போயிருச்சுனு சொல்றோம். ஆனா ஒரு நாளைக்கு டீக்காக செலவு பண்ற காசு எவ்வளவு. ஒரு லேபர் , ஒரு கட்டிட வேலை போகுதுனா, சரியா பதினோரு மணிக்கு ஒருத்தன் கைல சமோசா டீயோட வந்துருவான். அஞ்சு பேர் வேலை செஞ்சாலும் சரி, மூணு பேர் வேலை செஞ்சாலும் சரி. மறுபடியும் மூணு மணிக்கு வருவான். இதுசார்ந்து அவனுக்கு ஒரு பிழைப்பு நடக்குதுங்கிறது ஒன்னு. இரண்டாவது, இந்த ப்ரேக் அவனுக்குத் தேவை..இதையும் நாம பழக்கிட்டோமில்லையா. கோயமுத்தூர் மாதிரி பேக்கரி எந்த நகரத்துலயும் கிடையாது.

லிபரலைசேஷன் தந்த இன்னொரு விஷயம்…நீங்க படிக்கிற போது எத்தனை சட்டை பேண்ட் வச்சிருந்தீங்க? மூணு இருக்குமா? இன்னிக்கு எத்தனை வச்சிருக்கீங்க…ஒரு ஐம்பது இருக்காது? இதுக்கான தேவை என்ன? என் பிள்ளைககிட்ட சொல்வேன்..ஒவ்வொரு தீபாவளிக்கும் சட்டை பேண்ட் வாங்கித்தராதீங்க. இருக்க துணிகளையே இன்னும் பத்து வருஷம் போடலாம் – பத்து வருஷம் இருப்போம்கிறதுக்கு ஒரு க்யாரெண்டியும் கிடையாது. ஒரு வேலைக்குப் போற பெண்கிட்ட குறைஞ்சது முன்னூறு சாரீ இருக்கும். இதனுடைய காஸ்ட ஒர்க அவுட் பண்ணிப் பாருங்க. இவ்வளவு கன்ஸூமரிசத்துக்கு நம்மள ஆளாக்குனது யாரு? இத்தனை வகையான சட்னி எதுக்கு சார்? நாலு சட்னி, ஒரு சாம்பாரு, மிளகாப் பொடி வேற ஒரு கிண்ணத்துல வைக்கிறான். ஒவ்வொண்ணும் ஒவ்வொருதடவை தொட்டாலுமே இட்லி தீர்ந்துரும். பாதிக்குப் பாதி வீணாகும். இதுவே நீங்க கேரளத்துக்குள்ள போங்க. ஒரு சட்னி குடுப்பான், ஒரு சாம்பார் குடுப்பான். மூணாவது சட்னி நீங்க அவன்ட்ட கேட்கமுடியாது. கேரளத்துளுள்ள ஆர்ய பவனோ, வேறு எந்த நல்ல ஓட்டலுக்குப் போனாலும், இட்லின்னு சொன்னாலே தட்ல நாலு இட்லி கொண்டுவந்து வைப்பான். அப்புறம் காபியா சாயாவாம்பான். அவ்வளவுதான். ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு மசால் தோசையா, ஆனியம் ஊத்தப்பமா, அந்த சாய்ஸே அவன் குடுக்கறதில்லை.

சுரேஷ்: கம்பன் பற்றிப்பேசும் போது நீங்க அதுல தோய்ந்திருக்கீங்க. ஆனா உங்க புனைவுகள்ல  சிறுகதைலையோ நாவல்லயோ அதிலிருந்து எதுவும் எழுதில. கான்ஷியசா அவாய்ட் பண்றீங்களா.

நாஞ்சில் நாடன்: கான்ஷியசா அவாய்ட் பண்ணலை. எனக்கு அதுக்குண்டான ஒரு urge கிடைக்கணும். ஒரு இதிகாசத்துல ஒன்னு ரெண்டு பீஸ் எல்லா ரைட்டரும் எழுதியிருக்காங்க. எல்லா மொழிகள்லயும் நடந்திருக்கு. ஐராவதி கார்வே, பி.கே.பாலக்கிருஷணன், எம்.டி.வாசுதேவன் நாயர், நம்ம மொழில எழுதுனவங்க…சகலர்லையும் இதை நீங்க பார்க்க முடியும்…புதுமைப்பித்தன் எழுதியிருக்கார், எம்விவி எழுதியிருக்கார்…புராணக் கதாபாத்திரங்கள வைச்சுட்டு. எனக்கு அப்படித் தோனலை. நான் அதை மறுபடியும் விவரிச்சு ஒரு கதையாச் சொல்றதைவிட பாட்டாச் சொல்றதுலதான் ஈடுபாடு.

சுரேஷ்: அசோகமித்திரன் இதைச் செய்ய வேண்டாம்னே சொல்றார். வெண்முரசு விழாவில் கூட அப்படியான பொருள்ல பேசினார்.

நாஞ்சில் நாடன்: அசோகமித்திரன் சொல்றது தப்புனு நினைக்கிறேன். ஏன்னா, இந்தப் புராணம்…mythனு சொல்லத் துணியலை நான்…இது இந்தியாவுடைய எந்த மாநிலத்துக்காரனுக்கும் சொந்தமானதல்ல. ஒருத்தன் அதை எடுத்து முதல்ல செஞ்சான். வால்மீகியோ வியாசனோ. அவனுடைய பார்வைல, அவனுடைய காலகட்டத்துக்குத் தகுந்த மொழியைப் பயன்படுத்திகிட்டு, அவனுக்கிருந்த வசதிகளைப் பயன்படுத்திகிட்டு, அவன் செஞ்சான். செய்யறதுக்கான ஸ்கோப் இருக்கும்போது எத்தனை பேர் வேணாலும் செய்யலாம். இங்க ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்துட்டு நானூறு பக்கத்துக்கு எழுதறார் வாசுதேவன் நாயர். இதை அசோகமித்திரன் செய்யாம இருக்கலாம். ஒரு விமர்சகரா அப்படி செய்யறதை விரும்பாம இருக்கலாம். ஆனா அது ஒரு தப்பான, வேண்டாத வேலைனு நான் நினைக்க மாட்டேன். ஏன்னா எல்லா மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கு. ஆதி பாஷையில் இக்கதை செய்தவர் மூவரானவர்ங்கறான் கம்பன். வால்மீகிக்கு முன்னாடியே மூணு பேர் செஞ்சிருக்கான். ஏன் மூணு பேரு செய்யறான். மலையாத்துலே, துஞ்சத்து எழுத்தச்சன் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு பேர் பண்ணியிருக்கான். கண்ணச பணிக்கர் பிரதர்சுனு சொல்வாங்க, அவங்க பண்ணியிருக்காங்க. நீங்க அப்ப கோபாலகிருஷ்ண பாரதிய எப்படிப் பார்ப்பீங்க? அருணாச்சலக் கவிராயர எப்படிப் பார்ப்பீங்க? கம்பன விட்றுங்க. எல்லாருக்கும் அந்த உரிமை இருக்கு. அது என்னுடைய சுதந்திரம். அருணாச்சலக்  கவிராயருடைய ராமாயண நாடகக் கீர்த்தனைகள்ல அவர் ஒரு குறிப்பிட்ட பகுதி மாத்திரம் எடுத்திட்டுப் பார்க்கிறார். கோபாலக்கிருஷ்ண பாரதியார், அவருக்குத் தேவையான, நந்தனார் பண்றார் இல்லையா. கம்பன் எழுதி 1200 வருஷம் ஆயிப் போச்சு. ஒரு மாஸிவ் வொர்க். தமிழ்ல அதுக்கப்புறம் அதுமாதிரியான ஒரு வொர்க்குக்கு தேவை வந்ததா யாரும் நினைக்காம இருக்கலாம். ஆனா, கீமாயணம் எழுதப்பட்டிருக்கு. மூவாயிரம் பாட்டுலயோ இரண்டாயிரத்து ஐநூறு பாட்டுலயோ கீமாயணம் நம்ம மொழியில எழுதப்பட்டிருக்கு. இந்தில துளசிதாஸ் வரைக்கும் ராமாயணம் வந்திருக்கு. துளசிதாஸ் நம்ம குமரகுருபரருடைய contemporary.

சுரேஷ்: பதினேழாம் நூற்றாண்டு.

நாஞ்சில் நாடன்: குமரகுருபரர் தென்தமிழ்நாட்டில பிள்ளைத்தமிழ் பாடி, மீனாட்சியம்மை குறம் பாடி, வடநாட்டுக்குப் போய், வடமொழியைக் கற்பதற்காக சரசுவதியை வேண்டி சகலாவல்லி மாலை பத்துப்பாட்டு பாடி, வடமொழி கற்றுக்கொண்டு, வடமொழியில…நான் கேதார்காட்டுக்குப் போயிருந்தேன்..கேதார்காட் மடம் குமரகுருபரர் நிறுவின மடம். அங்க உட்கார்ந்து ராமாயணம் பிரவசனம் பண்றாரு. கம்ப ராமாயணம். அவரு பிரவசனம் பண்ற சபையில துளசிதாசர் உட்கார்ந்திருக்கான். ஆகவே, துளசியினுடைய ராமாயணத்திலே கம்பனுடைய செல்வாக்கு அதிகம்னு ஒரு ஆய்விருக்கு. கருத்திருமன், 13000 பாட்டிலயும் ஒரு 1000 பாட்டை மட்டும் எடுத்து  ஒரு ராமாயணம் பண்றாரு. பி.ஜி.கருத்திருமன். காங்கிரசிலிருந்தவர். ரசிகமணி 3500 பாட்டெடுத்து ராமாயணம் இதுதாங்கிறார். கம்பனுக்குப் பத்தாயிரத்துச் சில்லறை பாட்டுத் தேவையா இருந்திருக்கு. அதுலயும் 1500-2000 பாட்டு அவர் பாடலைனு நாம தள்ளி வைச்சிருக்கோம். ஆனா துரத்துல. ஒவ்வொரு வால்யூமிற்குப் பின்னாடியும் அது இருக்கு. இது எப்படி சாத்தியம்…இப்படிப் பல கேள்விகள் இருக்கு. அசோகமித்திரன் சொன்னது அவருடைய கருத்து. எனக்கு அதுக்கான ஒரு urge வரலை. அசோகமித்திரன் தமிழ் மொழில ஒரு முக்கியமான ரைட்டர். எம்.டி. வாசுதேவன் நாயர் ஒரு மோசமான ரைட்டர் கிடையாது. பி.கே. பாலக்கிருஷ்ணன் ஒரு மோசமான ரைட்டர் கிடையாது. ஏன் புதுமைப்பித்தனுக்கு அகலிகைய எடுத்துத் திரும்ப எழுத வேண்டிய தேவையாயிருந்து. பாரதி ஏன் பாஞ்சாலி சபதம் எழுதறான். 412 பாட்டிலே. ரெண்டே ரெண்டு விஷயந்தான் அவன் எடுத்துகிறான். ஒன்று பெண் விடுதலை. அந்த கான்டெக்ஸ்ட்டில் பெண் விடுதலை பேசுவதற்கான ஒரு முகாந்திரத்துக்கு இந்தப் புராணத்தை அவன் பயன்படுத்திக்கிறான். தன்னையாடித் தோற்றபின் என்னைத் தோற்றாராங்கிறது எவ்வளவு பெரிய கேள்வி. இதையே, ஒரு புத்தகத்துக்கு முன்னுரைக்காக படிச்சிட்டிருக்கேன்…செய்குத்தம்பி பாவலர்னு ஒருத்தர்…1907ல எட்டு கிரிமினல் கேசுனு ஒரு நூல் எழுதியிருக்கார். ஒரு கோர்ட் ப்ரொசிஜர் பாவனைல, திரௌபதி பிரதிவாதிகளாக துச்சாதனன், சகுனி, துரியோதனன், கர்ணன் வரைக்கும் பிரதிவாதியாத் தொகுக்கிற கோர்ட் ப்ரொசீடிங்கசா பண்றாரு. இத மாதிரி எட்டு கேஸ் எழுதறார். சூர்ப்பனகை, திரௌபதி, சீதை, இந்த மாதிரி. இது எல்லாமே literary appreciationகான ஒரு மார்க்கம் தான். இதை யோசனை பண்ணிட்டிருக்கிறபோது எனக்கு என்ன தோணுச்சுன்னா, நம்முடைய முச்சந்தி இலக்கியம், பட்டி மன்றம் இதுக்கெல்லாமே லீட் அங்கிருந்துதான் எடுக்கறாங்க. ஒருகாலத்துல கம்பனாகவும் இளங்கோவாகவும் வேஷங்கட்டி ஆடின காட்சியெல்லாம் தமிழ்நாட்டுல நடந்திருக்கு. இதன் மூலமாக, in good spirit and sense, இலக்கியத்தை மேலும் புரிந்து கொள்வதற்கு இது உங்களுக்கு உபகாரமாக இருக்கும்.

செந்தில்: சார், இதன் தொடர்ச்சியா ரெண்டு கேள்வி. நீங்க பல நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கீங்க. ஆனா விமர்சகரா நீங்க ஏன் அந்த அளவுக்கு எழுதறதில்லை? விமர்சனம் எப்படி இருக்கணும்னு நீங்க வரையறை வைப்பீங்க?

நாஞ்சில் நாடன்: விமர்சகன் வந்துங்க, he is a scholarly person. I am not a scholarly person. நான் ஒரு emotive ஆன ஆள். எனக்குக் கிடைக்கிற இன்சிடென்ட்ஸ் மூலமா நான் கற்றுக்க முயற்சி செய்வேன். விமர்சகன் அறிவார்த்த ரீதியா ஒரு கலையை அணுகறான். சுப்புடுவ நீங்க பாடச் சொல்ல முடியாது. ஆனா பாம்பே ஜெயஷ்ரீயை விமர்சனம் எழுதச்சொல்ல முடியாது. அது வேற brain. வேற வேலை அது. ஒரு விமர்சகனாக ஆகிற முயற்சில நான் இல்லை. I am not equipped. ஆனா முன்னுரை எழுதறதுங்கறது ஒரு appreciation, encouragement தான். அதுல இருக்கிற நல்ல விஷயங்களச் சொல்வோம். ஒரு புக்குக்குள்ள நல்ல விஷயங்களே இல்லாம இருக்கும். புதுசா ஒரு கவிதைத் தொகுப்போ, சிறுகதைத்தொகுப்போ வரும். எழுத வந்திருக்கான், நாலு வார்த்தை நல்லதாச் சொல்வோமே. வேற எங்கயோ சுத்திட்டு வந்து, இவர்கிட்ட இருந்து அடுத்த சிறுகதைத்தொகுப்பை எதிர்பார்க்கிறோம்னுகூட முடிச்சரலாம். ஏன் டிஸ்கரேஜ் பண்ணனும். எழுத வர்ற ஆளே குறைவு. எப்பவுமே அவந்தான் ஓடி அவனை நிரூபிச்சாக வேணும். நீங்க ஒரு நடிகரைக் கூப்பிட்டு ஒரு வெளியீட்டு விழா நடத்தினாவெல்லாம் உங்க எழுத்து நின்றாது. எழுத்த அவன் எழுதித்தான் நிறுத்தணும். இது ஒரு இந்துஸ்தானி பாடகன் ஒரு ராகத்தை நிர்மாணம் செய்றமாதிரி. He has to do it. அவன் உழைக்கணும். இதுக்கு நான் செய்யற வேலையெல்லாம் ஒரு தட்டுதட்டிக் கொடுத்து, ‘பரவால்லப்பா தம்பி, உனக்கு எழுத வருது. கொஞ்சம் ஓடிப்பாரு.’ அவன் ஒரு தொகுப்பிலயே முடிஞ்சு போவான். அல்லது தொடர்ந்து வருவான். இப்படி நூறு பேருக்கு எழுதறபோது, ஒரு ரெண்டு பேர் கிடைக்கமாட்டானா. இது ஒரு வாத்தியார் பிள்ளைகளுக்குச் செய்யற ஒரு அப்ரிஷியேசன் தான். ‘நல்லாப் படிடா, நல்லா உட்கார்ந்து எழுது. உனக்கு எழதவரும்.’ இந்த விதத்துலதான் நாம முன்னுரைகள் எழுதறோம். அதே சமயத்துல,அதுல இருக்கிற தவறுகள் எனக்குத் தெரியும். நான் அதத் தனியாச் சொல்லிருவேன். என்னுடைய மேதைமையையோ என்னுடைய திறனையோ காட்டுறதுக்கு நான் என்னுடைய முன்னுரைகளைப் பயன்படுத்த மாட்டேன். I will never irritate that boy. I will never discourage that fellow. ஆனா, அவனத் தனியாக் கூப்பிட்டு, ‘தம்பி இதெல்லாம் என்ன பண்ணி வைச்சிருக்க. நான் இதை ஒரு சென்டென்சா எழுதிக் காட்டினா இத ஒரு சென்டென்ஸ் இல்லைனு சொல்லமுடியுமா உன்னால. எதுனால இதக் கவிதைனு சொல்ற.’ நீ என்ன படிச்சிருக்க. நீ என்ன படிக்கணும். தனிப்பட்ட முறைல பேசறபோது அவன் ஓரளவு வாங்கிக்குவான். வெளியில போய், இவன் பெரிய புடுங்கினு, சொல்லிட்டுப் போனாக்கூடப் போவான். ஆனா இதை எழுத்துல சொல்லிட்டீங்கன்னா, நாம அவன நிரந்தரமா டிஸ்கரேஜ் பண்றோம். ரெண்டாவது அவனும் எனக்கு ஆயுசு முழுக்க ஒரு பகைவனா மாறிடறான். இது எனக்கு எதுக்கு? இதுல இருந்து தப்பிக்க முடியாது. மூத்த எழுத்தாளர்கள் எனக்குக் கொடுத்த அறிவுரை, ‘யாராவது உங்கிட்ட வந்தா, நீ படிச்சுப்பாரு. ஒரு கேர் அண்ட் கன்சர்னோட படிச்சுப்பாரு. முடிஞ்சா நாலு வார்த்தை நல்லதாச் சொல்லு.’

nanjil_interview_1அன்பழகன்: கண்மணி குணசேகரன் நெடுஞ்சாலைக்கு நீங்க முன்னுரை எழுதியிருக்கீங்க.

நாஞ்சில் நாடன்: ஆமா.

அன்பழகன்: அது நல்ல நாவல். ஆனா தனியாக்கூப்பிட்டு ஏதாவது சொன்னீங்களா.

நாஞ்சில் நாடன்: நான் வந்தாரங்குடி நாவலுக்கு முன்னுரை எழுதலை. ஆனா, படிச்சிட்டேன். என்னுடைய கருத்துக்காக கண்மணி காத்திருந்தான். நான் கண்மணியைக் கூப்பிட்டு முக்கா மணிநேரம் பேசினேன். ‘நீ பாமக உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். தொழிற்சங்க உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். உன்னுடைய படைப்புல அது interfere ஆகாமப் பார்த்துக்கோ.’ இந்தத் தப்பத்தான் நம்ம இடதுசாரிகள் அத்தனைபேரும் செஞ்சாங்க. மேலாண்மை பொன்னுசாமில இருந்து, தமிழ்ச்செல்வன்ல இருந்து எல்லாரும் இதைத்தான் பண்றாங்க. இன்னொன்னு, ஒரு பார்ட்டியுடைய ரோலை நீ பேசறபோது, அந்த பர்டிக்குலர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இஷ்யூல, மார்க்சிஸ்டுகளின் பெரிய ரோல் ஒன்னு அங்க இருக்கு. அதை நீ சுத்தமா மறைக்கிற.  இது ஒரு நேர்மையற்ற செயல். இதை நீ செய்யக்கூடாது.

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து இன்னொரு அஞ்சு நாவல் எழுதப்பட்டது. வரலாற்று நாவல்கள். நான் வேறொரு நண்பருக்காக கோஸ்ட் ரைட்டிங் எழுதிக்கொடுத்தேன். எம்பேர்ல வர்றல. ஏன்னா அவருக்கு, நிறைய ஆப்ளிகேஷன். படிக்க நேரமில்லை. எழுதவும் வராது. ‘நாஞ்சில் இதப்படிச்சிட்டு’…எழுதிக்கொடுத்தேன். இதை ஒரு நட்புக்காக செய்யறதுன்னு வையுங்க. அப்புறம் அவரைக் கூப்பிட்டு சொன்னேன். பொன்னியின் செல்வன் நடக்கிற காலம் ராஜராஜ சோழன் காலம். அதைத்தொடர்ந்து வருகிற இன்னொரு நாவல். இந்த மாவட்ட அதிகாரி என்கிற சொல் தமிழுக்கு வந்து அறுபது வருஷம்தான் ஆச்சு. 1200 வருஷத்துக்கு முன்னாடி இந்த சொல்லே கிடையாது. நீங்க அந்த காலகட்டத்தச் சொல்லுகிற போது, அந்தச் சொல்லை யோசிச்சுப் பயன்படுத்தணும். நீங்க சொல்லுங்க தயவுசெய்து அவர்கிட்ட. இது take it easyஆ போற விஷயம் இல்ல.

பாலாவுடைய பரதேசி படத்துல, கோழி மேய்ந்து கொண்டிருந்தான்னு நான்தான் எழுதறேன். அவன் ஆறு வைட் லகான் கோழியப் புடிச்சுக் கொண்டுவந்து விட்டுட்டான். செழியன் எனக்கு நல்ல நண்பர். பாலா பிசியாயிருந்தாலும் சரி, ‘செழியன் வைட் லகான் 1960ல தான வருது. இந்த கதை 1939லயில்ல. முடிஞ்சா நாட்டுக் கோழய விடுங்க. இல்லைனா கோழியே விடாதீங்க.’ இதை நாம தனிப்பட்ட முறைல சொல்லிடுவோம். ஒரு பிள்ளை, நல்லா எழுதக்கூடியவங்கதான். மூன்று சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கு. எனக்கு அவங்க சிறுகதை பிடிக்கவும் செய்யும். அந்தம்மா, வேம்ப மரம் பூக்கற மாசத்தப் புரட்டாசியோ ஆவணியோ சொல்றாங்க. நான் தனியா போன் பண்ணி, ‘புரட்டாசில ஒருபோதும் வேம்பு பூக்காது. நீ விரும்பினாக்கூட அது பூக்காது.’ இந்தத் தகவல், ஃபிக்சனுக்காகச் சொன்னாக்கூட அதுல தவறுவரக்கூடாது. இந்த மாதிரியான குறிப்புகளைச் சொல்கிறபோது, எப்படி வேப்ப மரத்தில் மாம்பழம் காய்க்காதோ, அதுமாதிரி அது பங்குனில தான் பூக்கும். ஆனி, ஆடில பழம் உதிறும். சித்திரைல, சித்திரை விஷூல, சில கம்யூனிட்டிக்காரங்க வேப்பம்பூவும் வெல்லமும் பிராசதமாகவே கொடுக்கறாங்க. இது அறியாம வரக்கூடிய பிழையாக்கூட நாம எடுத்துக்கலாம். ஆனா ஒரு எழுத்தாளர் இதையெல்லாம் பொருட்படுத்தணும். இந்த மாதிரி தகவல் சொல்றபோது, இதுல பிழை வரக்கூடாதுன்னு. வரலாற்றுச் சம்பந்தமாப் பேசறபோது, இது நாவல்தானே, சிறுகதைதானேனு நினைச்சுட்டு you can’t escape – வரலாற்று விஷயங்களப் பேசுகிற போது, தட்பவெட்ப நிலையைப் பேசுகிற போது, பூகோளம் பேசுகிற போது.

சாண்டில்யன் நம்ம மதிப்பீட்ல சாதாரணமான ஒரு எழுத்தாளரா இருந்தாலும் – நான், ஜெயமோகன், வசந்தகுமார், மதுரைலயிருந்து ஒரு நண்பர், நாலு பேரும், சிவாஜி கோட்டைகளப் பார்த்துட்டுத் திரும்பி வந்துகிட்டு இருக்கோம். நாங்க பாம்பேல இருந்து போகிற போது – வாதாபி கோட்டைகளையெல்லாம் பார்த்துட்டு, பந்தர்பூர் போயி, என் தம்பி நியூ பாம்பேல இருக்கான் – அவங்கிட்ட தங்கிட்டு திரும்பி வருகிற வழியில – ராய்காடு பார்த்துட்டு, ரத்னகிரி ஃபோர்ட் பார்த்துட்டு, கனோஜி ஆங்க்ரே  வரார் இல்ல, அந்த கொலாபா ஃபோர்ட் பார்க்கிறோம். அந்த ஃபோர்ட் பார்க்கிற போது – இவருடைய வர்ணனை நான் படிச்சு முப்பத்தைஞ்சு நாற்பது வருஷம் இருக்குங்க…அந்த மனுஷன் சொன்ன தகவல்கள்ல எந்தப் பிழையும் கிடையாது. குமுதத்துக்குத்தானே எழுதறோம். ஜலதீபமோ ஏதோ ஒன்னு, குமுதம் வாசகனுக்கு இது போதாதா…அப்படி அல்ல அது.

சுரேஷ்: டாவின்சி கோட்ல, புக்கோட அட்டையிலயே, ‘லோவர் ம்யூசியத்தப் பற்றிக் கொடுத்திருக்கிற அளவுகள் எல்லாம் உண்மையானவை சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்’னு போடறாங்க.

நாஞ்சில் நாடன்: அந்தக் கோட்டை – நாங்க லோ டைட்ல போறோம். நாங்க திரும்பி வர்றபோது ஹை டைட் வந்திருது. ஹை  டைட்னா இவ்வளவு உயரம். அப்ப நமக்கு சாண்டில்யன் ஞாபகத்துக்கு வர்றார். அந்த ஹை டைட், லோ டைட்ஐப் பயன்படுத்தி, அந்தக் கோட்டை வெற்றி கொள்ளப்படாத கோட்டை. இங்கிலீஷ்காரனால ஜெயிக்கமுடியாத கோட்டை. அதுக்குக் காரணம் அந்த டைட்ஸ். அதெல்லாம் கரெக்டா ஸ்டடி பண்ணிச் சொல்றாரு. நினைவுல படம்மாதிரி சாண்டில்யன் எழுதினது இருந்ததால…நான் விரும்பிப் படிச்சேன் ஒரு காலத்துல…நமக்கு ஒரு ரைட்டரா அவர்மீது மரியாதை இருக்கோ இல்லையோ, எந்தத் தகவலும் பொய்யான தகவல்னு சொல்லமுடியாது. இந்த கமிட்மென்ட் ஒரு ரைட்டருக்கு வேணும். அவஞ்சொல்றாங்கறுக்காக, அது ஃபிக்சன்கிறதுக்காக சூரியன் மேற்க உதிக்காது. கிழக்கதான் உதிக்கும். இந்த சமயத்துல இந்தக் காற்றுதான் அடிக்கும். கடல் பற்றி இப்ப ஜோ டி க்ரூஸ் எழுதறார்னா, கடல் காற்று பற்றி எழுதறார்னா, ரிசர்ச் பண்ணித்தான் எழுதறார். அந்தக் காற்றடிக்கிறபோதுதான் அந்த மீன் படும். மீன்பாடுன்னு சொல்வோம். எல்லா காலத்துலயும் சால கிடைக்காது. எல்லாக் காலத்துலயும் அயில கிடைக்காது. அதுக்கான காலகட்டங்கள் இருக்கு. அபூர்வமாக் கிடைக்கும். ஆனா பெருவாரியாக் கிடைக்காது. சாகரைன்னு சொல்வாங்க மலையாளத்துல. அது படுவதற்கான காலமிருக்கு, சீதோஷ்ன நிலைகளிருக்கு. காற்றினுடைய போக்கு இருக்கு. நீரோட்டங்களினுடைய போக்கு இருக்கு. சும்மா நெட்லயிருந்து விஷயங்களத் தரவிறக்கம் பண்ணிட்டு, ஒரு நாவல் எழுதப்போனா நாம அகப்பட்டுக்கிடுவம். ஒரு முக்கியமான நாவலாசிரியர்…நான் அடிக்கடி நவசாரி போறவன்…நவசாரில இருந்து இருவது கிலோமீட்டர் டண்டி (Dandi)..நாம தண்டின்னு படிக்கிறோம்…ஏக்சுவலா அது டண்டி. உப்பு சத்தியாகிரகம் நடந்த இடம்.  நம்ம தோழர் ஒருத்தர் எழுதறார். அகமதாபாத்ல இருந்து தண்டி 240 கிலோமீட்டர். இதச் சொன்னவுடனே, நான் முப்பது முறை நவசாரி போயிருக்கேன். இருவது முறை டண்டி போயிருக்கேன். என்னுடைய ஓனர்ஸ் கூட்டிட்டுப் போவாங்க. எனக்குத் தெரியுது இவன் ப்ரோச்சர் பார்த்துத்தான் எழுதியிருக்கான். குஜராத் சுற்றுலா ப்ரோச்சர் எங்கயோ கிடைச்சிருக்கும். It is 240 kms from Ahmedabad airportம்பான் அவன். நீங்க கோயமுத்தூர்ல இருக்கீங்க. மதுரை போகணும். சென்னைல இருந்து தூரம் சொல்ல மாட்டீங்க, இல்லையா. இங்கிருந்து மதுரை 230 km via Pollachi, 210 km via Dharapuram.  நீங்க அந்த இடத்துக்கே போகாம, ஒரு ப்ரோச்சரை வைச்சுட்டு, சில அணுமானங்கள் செய்து…atleast ஒரு மேப்பையாவது முன்னாடி வச்சிக்கிடணும். நான் ஒரு பத்து ரயில்வே அட்டவணைகள் வச்சிருக்கேன். ஏன்னா மறந்துபோகும். உண்மைலயே பயணம் பண்ணியிருந்தாலும், இந்த ஊருக்குப் போயிருக்கேன், அடுத்த ஸ்டேஷன் எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதுனா, உடனே, ஃபாலோ பண்ணிப் போயிடுவேன் பென்சில்ல.

சுரேஷ்: சார், சதுரங்கக் குதிரைலயும், எட்டுத்திக்கும் மதயானைலயும் அந்த ரூட் வருதில்லையா, பாம்பே போன நண்பர்களெல்லாம் சொன்னாங்க..ரொம்ப accurate. எந்த ஸ்டேசன்ல சிக்கி (chikki) கிடைக்கிறது அது எல்லாம் துல்லியமா இருக்கு.

நாஞ்சில் நாடன்: இப்ப நான் சொன்ன கம்பன் பாட்டு எனக்கு மனப்பாடமா இருந்தாக்கூட, இதை  நான் எழுதுகிறபோது, ஒருதரம் புத்தகத்தில் சரிபார்த்துத்தான் எழுதுவேன். அதுல பிழை வந்துரக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஔவையாரோட பாட்டுல, இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லாது அவன் வாய்ச்சொல்.

சுரேஷ்: பாட்டில் பிழை வந்தால், அம்பாளே நேர்ல வந்து அந்தப் பிழைய  மெய்யாக்கிடரா  இல்லையா?

நாஞ்சில் நாடன்: ஆமா

சுரேஷ்: காளிதாசனுக்கும் அது நடந்திருக்குதானே?

நாஞ்சில் நாடன்: சோழர் சபைலே, மன்னர்கள் எல்லாம் பெரிய சிவாஜி கணேசன் படத்தில வர்ற மன்னர்கள் மாதிரி இருந்திருக்க மாட்டாங்க. இத மாதிரி ஒரு வீட்லதான் இருந்திருப்பான். நானே ஒரு மன்னன்தான். இப்ப ஐயப்பனுடைய ஆபரணங்கள் போகுதில்லையா, பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு. இந்த பந்தளம் வீடு இதைவிட ஒரு அரைபங்கு பெரிசா இருக்கும். ரெண்டு மாடியா இருக்கும். பந்தளத்துல ராஜா. அவன் என்ன சோறு தின்னுறுப்பான். பெரும்பாலும் கம்பங்கூழ்தான் சார் குடிச்சிருப்பான். கம்பன், அவன் மகன் அம்பிகாபதி, சோழ மன்னன் எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறாங்க. அவ பரிமார்றா…அமராவதியா. பரிமார்றபோது, இட்ட அடிநோவ, எடுத்தஅடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கு அசையங்கிறான் அம்பிகாபதி. சோழ மன்னனுக்கு ஒரு கண்ணு, இந்த பையன் தப்பான பாதைல போயிட்டிருக்கான். அதை டெஸ்ட் பண்ணறதுக்காகத்தான் அந்த விருந்தே. கம்பன் வித்தக்காரன் இல்லையா, உடனே அவன் கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்னு அவன் முடிக்கிறான். உடனே சோழ மன்னன் கேட்கிறான், கொட்டிக் கிழங்குங்கிறது குளம் வத்தினபிறகு பிடுங்கக்கூடிய கிழங்கு. ஏழு தண்ணி மாத்தியமைச்சாத்தான் அந்தக் கிழங்கே சாப்பிடமுடியும். அது ரொம்ப அர்த்தமான கிழங்கு. கொட்டிக்கிழங்கு விற்கிற அளவுக்கு நாட்ல பஞ்சமா. என்ன கதையடிக்கிறேனு சொன்னவுடன, கூட இருந்த மந்திரிய அனுப்பிச்சு யாரு கொட்டிக் கிழங்கு வித்துட்டுப்போறா பாருன்னான். போனா, அங்க ஒரு பொம்பள கொட்டிக்கிழங்கு தலைல கூடை வைச்சு வித்துட்டுப்போறா. கம்பனுக்காக சரசுவதி ஸ்பெசல் அப்பியரன்ஸ் அப்படினு தனிப்பாடல்ல செய்தி இருக்கு.

சுரேஷ்: படத்திலயும் அந்த சீன் வைச்சிருப்பாங்க.

நாஞ்சில் நாடன்: ஆனா அந்த செய்யுளுடைய தமிழ் இருக்கு பாருங்க, கதை எளிமையா நமக்குப் புரிய வைக்கறதுக்காக எழுதினது…இட்ட அடி நோக – வைச்ச அடி நோகுது; எடுத்த அடி கொப்பளிக்க – அவ்வளவு வெயில் தகிக்குது. கால் பொத்துப்போற அளவு வெயிலு. வட்டில் சுமந்து மருங்கு அசைய – அவளுடைய மென்மையான பாதங்களச் சொல்றான். மருங்குன்னா இடுப்பு, வட்டில்னா சோறு போற வட்டில். இவன், கொட்டிக் கிழங்கோ கிழங்கு – எங்க வாத்தியார் சொல்வார் – கொட்டிக் கிழங்கோஓஓஓ கிழங்ங்கு. தெருவில கூவிட்டுப் போறவ சொல்வா இல்லையா…மல்லீப்பூஊஊ, வாழத்தண்டு வாழப்பூவேஏஏ…கிழங்ங்கோஓஓ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும். இது மொழியில உங்களுக்கு கன்ட்ரோல் இல்லைனா வராது. மொழின் மீதிருக்கக்கூடிய கன்ட்ரோல் போயட்டுக்குத்தான் வேணும்னு அவசியமில்லை. எல்லா ரைட்டருக்கும் வேணும். கவிதைங்கறது அதனுடைய உச்சம்தானேதவிர சிறுகதை எழுத்தாளனோ, ப்ரோஸ் ரைட்டரோ is no way lower than a poet. அவன் ரொம்ப crystalize பண்ணித்தாரான். செறிவாத் தாரான். காலங்கடந்து நிற்கிற ஒரு வடிவத்துல தாரான். அது அவனுக்குப் பெருமை. ஆனா இந்த வடிவத்தை எல்லாம் நாம தொலைச்சாச்சு. இப்ப எந்த வடிவத்துலயும் காலம் கடந்து நிற்கிற மாதிரி கவிதைகள் தமிழுக்கு யாரும் தந்தமாதிரி தெரியலை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாடின ஒரு பாட்டை நம்மால சொல்ல முடியுது. அறுபது வருஷத்துக்கு முன்னாடி பாடின பாட்டை என்னால சொல்ல முடியாது. அப்ப எப்படி இது காலங்கடந்து நிக்கும்? எனக்குப்பிறகு யாரு சொல்லுவாங்க இதை?

அடுத்த கேள்வி என்ன கேட்டீங்க?

செந்தில்: விமர்சனம் என்பதை எப்படி வரையறுப்பீங்க? அதுக்கு முன்னாடி, முதல் கேள்வி வேற மாதிரி பதில் சொன்னதுனால, இதையும் கேட்கிறேன்…உங்களைப்பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தன? நீங்க அதை எப்படி எதிர்கொண்டீங்க?

நாஞ்சில் நாடன்: விமர்சனம்ங்கிறது எந்த வகையிலயும் ஒரு க்ரியேட்டிவ் ரைட்டருக்கு உதவறதில்லை. நான் எழுதின படைப்புல விமர்சனம் பண்றாங்க. சதுரங்கக் குதிரையில் போதாமைகள் என்ன, எங்க மோசமாயிருக்குன்றது, in no way, it is going to help me. ஆனா factual inaccuracies, இதனுடைய நோக்கத்தில இருக்கக்கூடிய பிழைகள், தத்துவார்த்தமா நான் பண்ற பிழைகள், இதை சொன்னாங்கன்னா நான் கணக்குல எடுத்துப்பேன். நீ இந்தக் கொள்கையை இப்படிப் பேசறியே சர்தானாங்கன்னா, நான் அதைக் கணக்குல எடுத்துப்பேன். அதை யோசிப்பேன். ஒரு நாவலுக்கு அம்பை ஒரு கடிதம் எழுதினாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னா, குரான்லயோ என்னவோ பாலைவனம் பற்றி ஒரு சொல்கூடக் கிடையாது. அப்படிங்கிற மாதிரி ஏதோ சொன்னாங்க…சரியோ தப்போ, அந்தக் கடித்தத்தை எடுத்துப் பார்க்கணும். நீ ஏன் திரும்பித்திரும்பி உன் பிரதேசம், உன் மொழிலதான் பேசிட்டிருக்க. இது எனக்கு ரொம்ப harsh ஆன விமர்சனம். நான் ஒரு ரெண்டு நாள் upset ஆயிட்டேன்.

சிலருடைய விமர்சனத்தை நாம கணக்குல எடுத்துகணும். என்னுடைய முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள். சுந்தர ராமசாமி ஒரு விமர்சனம் எழுதினார். ‘இவர் போலியான முற்போக்கு பேசுறாரு.’ என்னுடைய முதல் நாவல். ‘வார்த்தைகள அனாவசியமா விரயம் பண்றாரு.’

சுரேஷ்: பெரிய வாயாடின்னார்.

நாஞ்சில் நாடன்: ‘நீல பத்மனாபனைப் போல.’ இவைதான் என்மீது வைச்ச விமர்சனம். நான் அவரைப் பார்த்தது கூடக் கிடையாது. அவருக்கு என்மீது பகைக்கான ஒரு காரணமுங் கிடையாது. பகையும் கிடையாது. ரெண்டுமூணு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கிட்ட ஒருமுறை கேட்டேன். அவர் சொன்னாரு, ‘அதிகம் எதிர்பார்ப்பதற்கு தமிழ்ல நிறையப் பேர் இல்ல, நாஞ்சில் நாடன். ஆகவே, உரிமை எடுத்துட்டு உனக்குச் சொல்றன்.’ அவருடைய சொற்கள் என்னை hurt பண்ணாக்கூட, அவர் வேணும்னு offensiveஆ பண்றார்னு நான் எடுத்துக்கல. அதுக்கப்புறம்தான் அவரைப்போய் சந்திக்கிறேன். அவரோட நட்பா இருக்கிறேன். அவருடைய ஸ்கூல்லயே பயின்றவன்கூட சொல்லலாம். ஆனா இது ஒரு தரப்பு. என்னை யாராவது முற்போக்குனு சொன்னா ஒத்துப்பாங்களா.

சுரேஷ்: Traditional ஆன முற்போக்குன்னு சொல்லலாம்.

நாஞ்சில் நாடன்: விமர்சகனுடைய மேதாவிலாசம் என்னங்கிறத அவனுடைய எழுத்து எனக்கு சொல்லிடும். நான் இதைப் பொருட்படுத்தணுமா பொருட்படுத்தவேண்டியதில்லையா? பொருட்படுத்தணும்னா சில இடங்கள்ல நான் பதில்சொல்வேன். என் பாணில பதில் சொல்வேன். எப்பவோ ரெண்டு வருஷங்கழிச்சு நான் எழுதக்கூடிய கட்டுரைலகூட பதில் சொல்வேன்.

பரதேசிப் படத்துக்கு நான் வசனம் எழுதறேன். தெளிவா கன்வர்ஷன்க்கு எதிரா அதில நான் பேசறேன். என்னுடைய வசனங்கள்ல இருக்கு. ஆனா நான் சொன்ன எந்தக் காரணமும் பொய் கிடையாது. இந்த நாட்டுல என்னென்ன நடந்ததுனு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அந்தப் படத்துல ஒரு பாட்டு இருக்கு. என்னுடைய வேலை கதை வசனம் எழுதறது. பாட்டு என் ஜாப் இல்ல, என் டிபார்ட்மெண்ட் இல்ல. அந்தப் பாட்டுக்கு என்னை விமர்சனம் பண்ணாங்க. வைரமுத்துவ க்ரிட்டிசைஸ் பண்ணல. அவர் வீட்டுக்கு முன்னால போய் ஆர்ப்பாட்டம் பண்ணினா அதனுடைய விளைவுகளை அவங்க சந்திக்கணும். நாஞ்சில் நாடன் ஒரு சாதாரண எழுத்தாளன்தானே. ரெண்டு தட்டுதட்டினாலும், ரோட்டுல போறபோது என்னை இடிச்சிட்டுப் போனாலும் கேட்கிறதுக்கு நாதியுண்டா. இதை விமர்சனம் செய்றவங்க சினிமா தெரிஞ்சவங்க. சினிமால வசனகர்த்தா பாட்டெழுத மாட்டான்னு தெரியாமலா இருப்பாங்க. அவங்க இத என்னை அடிக்கறதுக்கு ஒரு வாய்ப்பா பயன்படுத்திகிட்டாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, எனக்கு, ஜெயமோகன் – சொந்த ஊர்க்காரர், தம்பி மாதிரி. சின்ன வயசில அவர் எழுத வர்றதுக்கு முன்னாடியே எனக்கு அவரைத் தெரியும். எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு உண்டு. அவர் மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையில அவர்கிட்டயும், அருள்மொழிகிட்டயும் சொல்லுவேன். அதைப் பொதுவெளில என் குரல்வழிய அறுத்தாக்கூட ஒரு கட்டுரை என்கிட்ட நீங்க வாங்கமுடியாது. எனக்கு இதுமாதிரி பிரச்சனை வரும்போது நான் ஜெயமோகனுக்கு போன் பண்ணுவேன். ‘ஜெயமோகன் இதை என்ன பண்றது.’ ‘நாஞ்சில் நாடன் நீங்க இதில எறங்கி பதில் சொல்லப் போனீங்கன்னா ஒரு வருஷத்துக்கு உங்கள ஒரு ஜோலி பார்க்க விடமாட்டாங்க. நீங்க அந்த மாதிரியான ஆள் கிடையாது. இதுக்கெல்லாம் என்னைமாதிரி ஆள்தான் லாயக்கு. போய் வேலையப் பாருங்க.’ இப்படி ரெண்டு மூணு சந்தர்ப்பங்கள்ல எனக்கு நடந்திருக்கு. பரதேசியின்போது நடந்தது. இந்த ஆனந்த விகடன் கேள்விபதிலின் போது நடந்தது. கோயமுத்தூர்ல அவருக்குhf கண்ணதாசன் விருதுவழங்கும் விழா நடந்தபோது நான் பாராட்டிப் பேசறேன். நீங்க இருந்தீங்களா?

கண்ணன்: இருந்தோம்.

நாஞ்சில் நாடன்: கம்பன்ல இருந்து ஒரு காட்சி சொன்னேன். இந்திரஜித்துக்கு லட்சுமனன் மேட்ச் கிடையாது. கடவுள், ஆதிசேடன் அவதாரங்கிறதெல்லாம் வேற. ஆனா வீரத்துல லட்சுமனன் மேட்ச் கிடையாது. அப்படியே, if Indrajit was allowed to continue, லட்சுமனன் ஜோலி அன்னிக்கு முடிஞ்சிருக்கும். இத அனுமன் ஃபீல் பண்றான். பண்ண உடனே குறுக்கபோய் நின்னுட்டு கல்லு மட்டை மரம் எல்லாம் புடுங்கி வீசறான். ‘குரங்கே உனக்கும் எனக்கும் இப்ப சண்டையில்ல. அவனுக்கும் எனக்குந்தான் சண்டை. மாறு’ங்கிறான். இது அரைமணி நேரம் போகிறபோது, லட்சுமனன் போயிட்டு ரிலாக்ஸ் ஆயிட்டு வந்துர்றான். எனக்கு ஜெயமோகன் இந்த அனுமான் மாதிரி. அதை தயவுசெய்து குரங்குன்னு புரிஞ்சுக்காதீங்கன்னு சொன்னேன். எனக்கு ஒரு நெருக்கடின்னா – அவரு எனக்கு ஒரு விடுதலை தர்றாரு. இடத்தைவிட்டு, ஸ்தலத்தைவிட்டு நகர்ந்திரும்பாங்க எங்க ஊர்ல. ஸ்தலத்துல இருக்காத, நான் பார்த்துக்குறேன்.

விமர்சகன் பெரிய அறிவாளியா இருக்கணும். நுட்பமாக் கலைகளை உணரக் கூடிய ஒரு ஆற்றல் உடையவனா இருக்கணும். காய்தல் உவத்தல் இல்லாம இருக்கணும். வேண்டப்பட்டவன், வேண்டாவதன், முற்போக்கா பிற்போக்கா, பிராமினா பிள்ளைமாரா, நாடாரா, அப்படியெல்லாம் பார்க்காத வொர்க்கை வைச்சு மாத்திரமே மதிப்பீடு செய்கிற மனோபாவமுள்ள ஒருத்தன்தான் விமர்சகனா இருக்க முடியும். இல்லன்னா அவன் விமர்சனம் செய்யறது இலக்கியத்துக்கு எந்த வகையிலும் supportiveஆ இருக்காது. ஒருமாதிரி நெகட்டிவ்வாத்தான் அது ஒர்க் அவுட் ஆகுமே தவிர…இப்ப க.நா.சு….க.நா.சு.வைத் திட்டின பரபரப்பான பாப்புலர் ரைட்டர்ஸ்கூட ‘என்னைப் பத்தி க.நா.சு. ஒரு வரி எழுதமாட்டாரா’ன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. க.நா.சு.ட்ட பாரபட்சம் கிடையாது. க.நா.சு.வுடைய மதிப்பீடுகள் தப்பாப் போறதுக்கு வாய்ப்பு இருந்துச்சு. நான் க.நா.சு.ட்டியே கேட்டிருக்கேன், சில எழுத்தாளர்கள் பற்றிச் சொன்னபோது. ‘நான் சரின்னு நினைச்சுத்தான் சொல்றேன்’ அப்படிங்கிறார். ஃபன்ட் வாங்கிட்டு கருத்துச்சொல்ற விஷயமில்ல. அந்த ரேங்க்ல உள்ள விமர்சகர்கள் தமிழ்நாட்ல endangered species. முதல்ல இப்ப இருக்கிற பெரும்பாலான விமர்சகர்களுக்கு முற்போக்கு பிற்போக்கு பார்க்காம, தலித்தியம் பெண்ணியம் பார்க்காம, ரைட்டிங்க ரைட்டிங்கினுடைய மதிப்புகளுக்காக மாத்திரம் மதிப்பீடு செய்யக்கூடிய விமர்சனங்கள் கிட்டத்தட்ட தமிழ்ல இல்லேனே சொல்லிறலாம். முதல்ல இந்த கேட்டகரி பண்ணித்தான் விமர்சனத்துக்கே வர்றாங்க. ரெண்டாவது ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பை எடுத்துட்டுப்போய் அவன்ட்ட கொடுத்து, அவனுடைய விமர்சனம் எழுதி வாங்க வேண்டியிருக்கு. பல படைப்பாளிகள் ரூம் போடறாங்க, ஒரு மதிப்புரையோ விமர்சனக் கட்டுரையோ எழுதி வாங்கறதுக்கு. க.நா.சு. என்னுடைய முதல் நாவலுக்கு விமர்சனம் எழுதினபோது க.நா.சு.க்கும் எனக்கும் அறிமுகமே கிடையாது. நான் மூணு நாவல் எழுதினதுக்கு அப்புறம்தான் டில்லிலபோய் அவர சந்திச்சேன். அவருக்கு ஏன் அந்த urge வந்தது. ஒரு புஸ்தகத்தைப் படிச்சுட்டு இதப் பத்தி எழுதணும். ஏன் க.நா.சு.வுக்கு வந்தது, ஏன் வெங்கட் சாமிநாதனுக்கு வந்தது, ஏன் இந்தமாதிரி பல முக்கியமான விமர்சகர்களுக்கு வந்தது? ஏன்னா அவங்க லிட்ரேச்சர் ஃபார் லிட்ரேச்சர்ங்கற நோக்கத்துக்காகவே விமர்சனம் பண்ணாங்க. சுப்புடுவ எவ்வளவு காசு கொடுத்தும் விலைக்கு வாங்கியிருக்கலாமே நீங்க. சில சமயங்கள்ல ஹார்ஷாக்கூட சுழற்றுவாரு. படக்கூடாத எடத்துல பட்டுறும். ஆனாலும் சுப்புடுவுடைய இன்டக்ரிட்டியை நீங்க கேள்வி கேட்க முடியுமா. ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு விமர்சனம் வராது. அவன் ஆய்வுக் கட்டுரை எழுதத்தான் லாயக்கே ஒழிய…

அன்பழகன்: பரதேசி படத்துல வசனம் உறுத்தவே இல்லை. இயற்கையா பிரிச்சுப் பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு. வசனம்னா தனியாத் தெரியணுங்கிற மாதிரித் தேவையில்லையே. இதை யாராவது சொன்னாங்களா?

நாஞ்சில் நாடன்: பாசிட்டவா பார்த்தவங்க நிறையப்பேர் சொன்னாங்க. என்ன சொல்வாங்கன்னா, இந்த ரெண்டாவது வரக்கூடிய கூலிக்கூட்டத்துக்கு குடிசை அலாட் பண்றாங்க. அதர்வாவுக்கு இரண்டாவது ஹீரோயின் குடிசை அலாட் பண்றாங்க. அவ சாமானத்தைத் தூக்கி வெளிய போடறா. இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட சீன். நான் இதுக்கு மூணு பக்கம் எழுதுவேன். ஏற்கனவே ஒரு பேக்கு டைப். போன உடனே பானையைத் திறந்து பார்ப்பான். திங்கறதுக்கு ஏதாவது இருக்கான்றதுதான் அவன் முதல் நோக்கம். ரெண்டாவது அவன் வயசு – இருபத்திமூணு வயசு பிராயமுள்ள ஒரு ஆண். கொடில காயப்போட்டிருக்கக்கூடிய அவளுடைய ப்ளவுஸ எடுத்துப் பார்க்கிறான். அப்பத்தான் அவ சீனுக்குள்ள என்டர் ஆகறா. இதெல்லாம் வசனத்துல எழுதமாட்டேன். பாராகிராப்ல் போகும். வந்தவுடன அவ பார்க்கிற போது அவன் இத கைல வச்சுகிட்டு நிற்கறான். அது அவளுக்குப் புரியும். ஆண் பெண் உறவினுடைய, உள்ளாடைகள் ஏற்படுத்தக்கூடிய – அது க்ரியா ஊக்கி. அவ அடுத்த காட்சில அவனை அடிச்சு வெளிய தள்ளிட்டு குச்சில தீக்கொளுத்திக் கொண்டுபோய் வெளிய போடறா. இதப் பல viewers miss பண்ணியிருப்பாங்க. இத நான் டயலாக் வடிவத்துல எழுதல. டயலாக் நாலு வரிதான் வரும். எட்டு வார்த்தையோ பத்து வார்த்தையோ. இத அவர் நீட்டா காட்சிப் படுத்தறார். அவர் என்கிட்ட சொன்னது, ‘இதுதாங்க எனக்கு வேணும். உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதா அதையெல்லாம் எழுதுங்க. எனக்குத் தேவையானத நான் அதிலிருந்து எடுத்துக்கறேன்.’ சில சமயம் ஏழாவது சீன்ல நான் எழுதின டயலாக்கக் கொண்டுபோய் முப்பத்திநாலாவது சீன்ல சேர்ப்பாரு அவரு. அந்த சீக்குவன்ஸ் வந்ததுனா, இதைக்கொண்டுபோய் அங்க ஃபிக்ஸ் பண்ணிடுவாரு. அது நல்லாத்தான் இருக்கு. ஏன்னா அவர் தொழில்நுட்பம் தெரிஞ்சவர் இல்லையா. அவர் வெறொரு உலகத்தினுடைய மிக நல்ல ஆர்ட்டிஸ்ட். எனக்கு அந்த வடிவம் தெரியாது. ஒரு சிறுகதை மாதிரித்தான் இதை எழுதவரும்னேன். அதான் எங்களுக்கு வேணும்னார்.

சுரேஷ்: என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன் படைப்புகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லலாம். ஆனா தமிழ்நாட்டில் அது அவ்வளவா கவனிக்கப்படலையோ?

நாஞ்சில் நாடன்: மற்றவையும் கவனிக்கப் படல. நான் எப்ப கவனிக்கப்பட்ட எழுத்தாளன் ஆனேன்?  ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி. இதுக்கு முன்னாடி கொஞ்சம் ரிஃபைன்டான ரீடஸுக்கு நான் அறிமுகமாயிருப்பேனே தவிர, பெரிய அளவிலெல்லாம் கவனிக்கப்பட்டதில்லை.

சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா?

நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம்.

(ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து பயணத்திற்கான தொடக்கமாக, தனிமையைப் போக்கிக் கொள்ளும் வடிகாலாக எழுதத் தொடங்கியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  சதுரங்கக் குதிரை நாராயணன் போல. இந்த நாற்பதாண்டுகால பயணத்தில் அந்த ஆரம்பகால தனிமையை தவறிவிட்டுவிட்டோம் என்று எண்ணியதுண்டா?  அந்த உந்துதலின் பலத்தை இப்போதைய அங்கீகாரங்களும், புகழுரைகளும் மழுங்கடிக்காமல் பார்த்துக் கொள்வது சவாலானதா?

நாஞ்சில் நாடன்: அதாவது தனிமைங்கிறது இன்னுமே நான் உணரக்கூடிய ஒன்றுதான். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும். அதுக்காக அவங்கள நேசிக்கலங்கிறதெல்லாம் இல்லை. உறவுகள் நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. இருந்தாலும், சமயங்கள்ல அவங்களோட நாம இல்லாம இருக்கிற மாதிரித்தான் தோணுது. இது ஒருவிதமான மானசீகமான அவஸ்தையாக்கூட இருக்கலாம். ஒரு சைக்கிக் ப்ராப்ளமாக்கூட இருக்கலாம். ஆனா, ஒரு மேடைல உட்கார்ந்திருக்கேன்னா, சீப்ஃ கெஸ்டா, அந்த ரோல நான் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் நான் ரெஸ்ட்லெஸ்ஸாத்தான் இருப்பேன். தப்பான காரியம் பண்ணிட்டிருக்கமோ, நமக்கு இங்க என்ன வேலை? நான் மாணவர்களுக்கு 1000 பேருக்குப் பேசறேன். அவங்கள்ல பத்து பேருக்காவது ஏதாவது கிடைக்கும். நல்ல தயை உள்ள நிர்வாகம் ஐயாயிரம் ருபாய் பணம்கூடத் தந்து அனுப்பலாம். ஆனாலும், நான் ரொம்ப அலூஃபாத்தான்(aloof) உணர்வேன். இது என்னுடைய இடம் இல்லை. இதுதான் எல்லா இடத்திலயும் பெருங்கூட்டங்களைப் பார்க்கிறபோது எனக்கு இருக்கிற உணர்வு. சபரி மலைல என்னன்னா – நான் ஏழு முறை சபரி மலை போயிருக்கேன் – நான் இங்க என்ன செஞ்சிட்டிருக்கேன்னுதான் தோன்றும். சர்ச்க்குள்ள இருந்தாலும் நான் ஒரு இந்துவா ஃபீல் பண்றேன். ஒரு இஸ்லாமியப் பள்ளிக்குள்ள இருந்தாலும் ஒரு கிருஸ்தவனா ஃபீல் பண்றேன். ஒரு இந்து கோயில்ல இருந்தா நான் முஸல்மானா ஃபீல் பண்றேன். இந்த அந்நியப்படுதல்…இது ஒருவகையான தனிமையினுடைய வெளிப்பாடு. இந்தத் தனிமையை எப்படி வெற்றி கொள்றேன்னா, என்னுடைய எழுத்தின் மூலமாக, என்னுடைய வாசிப்பின் மூலமாக. எந்தப் பயன் கருதியும் நான் எதையும் தேடுகிற முயற்சில இல்ல. இது என்னுடைய pleasure. செத்துப்போனவனுக்கு நோன்பிருக்காங்கய்யானு ஒரு வரி. அதை நான் கோட் பண்ணினேன். அப்படித்தான் தோணுது நமக்கு. இது ஒரு எழுத்தானுடைய uniqueஆன அனுபவமா இருக்கலாம். இந்த உணர்ச்சி இருக்கறதனாலயே கூட அவன் எழுத்தாளனா ஆகலாம். எனக்கு எந்தவிதமான அங்கீகாரமும் தேவையில்லை. நான் அதைப்பத்தி கர்வப்பட்டதே இல்லை. எந்த இடத்திலயும் நான் கலைமாமணிங்கிற நான் பிரஸ்தாபிச்சதே கிடையாது. லெட்டர்ஹெட்லயோ இன்விட்டேஷன்லயோ கலைமாமணி நாஞ்சில் நாடன்னு எந்த இடத்திலயும் நீங்க பார்த்திருக்கமாட்டீங்க.

சில இடங்கள்ல சாகித்ய அகாதெமி விருதுபெற்றேன்னு போடுவாங்க. அது ஒரு பெரிய விஷயமா எனக்குத் தெரியல. ஒருவேளை இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்சிருந்தா பெரிய விஷயமாப் பட்டிருக்கலாம். இது ஒன்னும் பெரிய அடைய முடியாத இலக்கு அல்ல. ஞான பீடம் கிடைச்சாக்கூட நான் அப்படித்தான் ஃபீல் பண்ணப்போறேன். ஆனா ஒரு உண்மையான ரசிகன் சொல்லக் கேட்கிறபோது…உங்க கதை படிச்சேன், பிரமாதமா இருந்ததுனு சொன்னாக்கூட, நான் அந்த சென்டென்ஸக் கடந்துபோகத்தான் பிரியப் படறேன். சஸ்டெய்ன் (Sustain) பண்ணமாட்டேன்.

சுரேஷ்: இதை ரொம்ப கவனிச்சிருக்கிறேன்.

நாஞ்சில் நாடன்: எனக்கு நானே யோசிச்சுப் பார்ப்பேன். இது கர்வமடையற, சந்தோஷப்படுகிற ஏரியா தானே…அப்பநான் என்ன நினைக்கிறேன்னா இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. ஒரு முறை நானும் ஜெயமோகனும் சென்னை புத்தகக் கண்காட்சியில நடந்துகிட்டிருந்தபோது, ‘நாஞ்சில், இவ்வளவு புத்தகங்களுக்கு இடையிலே நாமும் சில புத்தகங்கள் எழுதியிருக்கோம்கிறத நினைக்கிறபோது கர்வமா இல்லையா,’ அப்படினு கேட்டார். ‘ஆமா ஜெயமோகன், ப்ரவ்டாத்தான் (proud) இருக்கு.’ அதுமாதிரி கர்வமாக உணர்கிற தருணங்கள் இருந்தாலும் கூட, நிரந்தரமா இதுல ஒரு பெரிய கர்வம் இருக்கிற மாதிரியெல்லாம் நான் நெனைச்சதேயில்ல. நான் எப்பவுமே பஸ் பயணத்தின் போது, ஓட்டல்ல சாப்பிடும்போது, சாதாரண மனுஷனாத்தான் இருக்கேன். இதை நான் சுமந்து திரியறதில்லை. என்னுடைய இந்தப் பெயர், புகழ், விருதுகள், எழுத்து – இதை நான் ஒருபோதும் சுமந்துட்டு திரிவதில்லை. ஆகவே, இது எனக்கு இலகுவா இருக்கு. என்னோட எழுத ஆரம்பிச்ச, எனக்கு முன்னாடி ஓட ஆரம்பிச்ச பலபேரு ஓட்டத்தை நிறுத்தியாச்சு. நான் ஓட்டத்தை நிறுத்தல.  எனக்கு ஓடாம இருக்கமுடியலை. சிலர் வேகமா ஓடுவாங்க. நான் நார்மல் ஸ்பீட்ல ஓடிட்டு இருப்பேன். இன்னிக்குக் காலைலகூட ஒருத்தர்கிட்டப் பேசினேன், ஒரு பத்து வருஷம் எனக்குக் கிடைக்குமானால், ஹெல்த்தி மைன்டோட, எனக்குச் சில விஷயங்கள் செய்யறதுக்கு ஒரு ஆசை இருக்கு. அப்படித்தான் நான் யோசிக்கிறேன். எதிர்காலத்துல என்ன என்னால செய்யமுடியும். பலர் சொல்றாங்க, நீங்க நாவல் எழுதிப் பதினைஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு அது ஒரு பெரிய விஷயமாப் படல. நாவல் எழுதலைனா என்ன? நாவல் மூலம் சொல்கிற விஷயத்தைத்தான் நான் கட்டுரை மூலம் சொல்றேன். எனது கட்டுரைகளும் சுவாரசியமா வாசிக்கப்படுது.

சுரேஷ்: இந்த இடத்தில, நாங்க கேட்க நினைச்ச ஒரு கேள்வி கேட்கிறோம். ஆரம்பக் கதைகள்ல சம்பவங்களச் சொல்லிட்டு, உணர்ச்சிகளை ஊகிக்கிறதும், அதன் விளைவுகளை ஊகிக்கிறதையும் வாசகர்கள்கிட்ட விட்டுருவீங்க…விரதம் எடுத்துக்கங்க, மொகித்தே, பிசிறு, பாலம், போன்ற கதைகள் எல்லாமே அப்படித்தான் இருந்துச்சு. சமீபமாக, கும்பமுனி தொடங்கினதுக்கு அப்புறம், நீங்க கொஞ்சம் உரத்த குரலெடுத்துச் சொல்லத் தொடங்கிட்டீங்களோ?

நாஞ்சில் நாடன்: எனக்கு சில விஷயங்களைப் பேசுகிறபோது, மொழியில ஒரு vehemence வந்துருது. அப்படிச் சொன்னாத்தான் இவனுக்கு உறைக்கும்னு நினைக்கிறேன். நாசூக்கா சொல்லிட்டுப் போக முடியாது. ரெண்டாவது, அந்த மாதிரியான கதைகள் திட்டவட்டமான கதைகள். சங்கீதம் ட்யூசன் வாத்தியார்கிட்ட கத்துகிட்டு, வாத்தியார் சொல்லிக்கொடுத்த அதே பாணியில கீர்த்தனைகள் பாடுகிற மாதிரியான பருவமது. அது தப்பில்ல. இப்ப நான் ஒரு மகாவித்வான். தோடியை மூணே முக்கால் மணிநேரம் பாடுவேன். அதற்குண்டான கற்பனை எனக்கிருக்கு. அந்த சுதந்திரத்தை நான் பயன்படுத்திக்கிறேன். முன்னமாதிரி பதிமூணு மினிட்ல தோடி பாடுங்கன்னா என்னால முடியாமக்கூட போகும். என்னுடைய மைண்ட்செட்டும் மாறிப்போச்சு, எனக்கு வயசாயிடுச்சு, நானும் மெச்சூர்(mature) ஆயிட்டிருக்கேன். இந்த இடத்தில கொஞ்சம் நின்னு சொல்லுவமேனு தோணும். சகாயத்தைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமோ கட்டாயமோ நெருக்கடியோ இல்லைனாக்கூட இதை இங்க சொல்லிருவோமே, அப்புறம் இதைச் சொல்வதற்கு இன்னொரு வாய்ப்பு எனக்கு வராமப் போயிடும். சாதாரணமா முருங்கைமரம் இருந்ததுனு சொல்லிரலாம். முருங்கைமரத்தைப் பேசுறபோது இன்னொரு இருபத்தஞ்சு மரத்தைக் கூடுதலாப் பேசுவோம். தெரிஞ்சிட்டுப் போகட்டும். ஒன்னும் இல்ல. பற பற. கொக்கு பற. குருவி பற. இது ஒரு சாதாரணமான கிராமிய சமாச்சாரம் இல்ல. இதுல கவனம் இல்லாதவன் மொதல்ல அவுட் ஆயிடுவான்….தவளை பற, குதிரை பற. இதன்மூலம் கொக்கு பறக்கும், குருவி பறக்கும், மயில் பறக்கும், நாரை பறக்கும், கிளி பறக்கும், காக்கா பறக்கும், மைனா பறக்கும், அப்படினு ஒரு பத்துப் பறவைகளோட பெயர்களைக் குழந்தைகள் கத்துக்குது. இதொரு பாமரத்தனமான விளையாட்டுனு நம்ம கல்வி மேதாவிகள் நினைச்சுட்டு இருக்காங்க. குழந்தைகளுக்கு இது concentration கற்றுக்கொடுக்குது. It also teaches them so many birds’ names. இதுமாதிரியான ஒரு வாய்ப்பு ஃபிக்சன் ரைட்டிங்ல வரும்போது, எனக்கு மட்டுமில்ல, உலக அளவில, சிறுகதைகள் இந்த மாற்றத்துக்குள்ள வந்தாச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி மார்க்வெஸ் எழுதினமாதிரி இப்ப எவனும் எழுதறதில்லை. அல்லது, எல்லாரும் சொல்றாங்கில்ல…போர்ஹே..அந்த ஸ்டைல் பழசாகிப் போச்சு. இப்ப வேறொரு மாதிரி கதை சொல்றாங்க. நான் என்ன சொல்றேனா…இந்தக் கதைல இந்தத் தகவலச் சொல்லாட்டாலும், அது கதைதான். அவன் பசியாக் கிடந்தான். சோறு போட்டான். சாப்பிட்டு கைகழுவிட்டுப் போனான்கிறது கதையில்லை. அதில அதுக்கு எவ்வளவு atmosphere சொல்றீங்க. எவ்வளவு எமோஷன்ஸ் சொல்றீங்க. இத நான் வேறவிதமாச் சொல்றேன். இது உங்களுக்குச் சுவாரசியம் இல்லாம இருக்கான்னா, I will take care of it. இது ஒரு துறுத்தலா இருக்குன்னாலும் நான் யோசிப்பேன். இதுல traditional readers உடைய குரலை நான் பொருட்படுத்த விரும்பல. என்னுடைய ரசிகன் இத ஒரு குறையாச் சொல்றானா?

எனக்கு முந்தாநாள் கண்மணி போன் பண்ணி, ‘இந்த ஆனந்த விகடன் கதைல ஏன்னே தேவையில்லாம திருக்குறள் எல்லாம் கோட் பண்றீங்க’ அப்படிங்கிறாரு. (அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது). நான் வேறு ஒரு டெக்னிக்குக்காகப் பயன்படுத்தறேன். ஏன்னா புலைமாடன் இருந்தானா இல்லையாங்கிறதே எனக்குத் தெரியாது. அதை இன்னிக்கு நடக்கிற கதையாச் சொல்றேன். அங்க ஒரு கம்பன் வரியைக் கோட் பண்றேன். என்ன சோத்துக்கா பஞ்சம்னு கேட்றலாம். நான் அதை, ‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ங்கிறேன். நீ எப்ப இதைப் படிச்சேனு இவன் கேட்கிறான். அதை வேறொரு விதமான காலத்துக்குக் கொண்டுபோக முயற்சி பண்றேன். இது வாசகனை interfere பண்ணுது, கட்டுரைத்தன்மை வந்துருது அப்படிங்கிறாங்க. நான் கதை எழுதினா, கட்டுரைத்தன்மை வருது, கட்டுரை எழுதினா கதைத்தன்மை வருது…கட்டுரைல வசனம் எழுதற ஒரே எழுத்தாளர் நான்தான்.

சுரேஷ்: முன்ன அசோகமித்திரன்கூடச் சொன்னார் சார். Spanக்கு இரண்டு கட்டுரைகள் எழுதி அனுப்பிச்சேன். அவங்க சிறுகதைனு பிரசுரிச்சாங்க.

நாஞ்சில் நாடன்: அடிப்படைல எழுத்துல எனக்கொரு சுகம் கிடைக்கணும் இல்லையா. அந்த சுகம் கிடைக்காம தொடரமுடியாது என்னால. எனக்கு அந்த pleasure கிடைக்கிறனாலதான், என்னோட சாமார்த்தியத்தையும் அறிவையும் புலப்படுத்தறதுக்காக நான் ஒரு லைனப் போடுவேன். சில சமயம் கோட் பண்ணுவேன். இங்க ஒரு பாட்டு சொன்னா நல்லா இருக்குமே. அது கட்டுரை எழுதறபோது தோணும். இந்த எடத்தில ஔவை ஏதோ சொல்லியிருக்கா…அந்த பாட்டு நினைவுல வரலங்கிறபோது, கொஞ்சம் முயற்சி எடுத்து செய்வேன். இது craft சம்பந்தமான ஒரு விஷயந்தான். ஃபர்ஸ்ட் ட்ராப்ட்ல புள்ளி வைச்சிட்டு, செகண்ட் ட்ராஃப்ட்ல தேடியெடுத்து fill up கூட பண்ணுவேன்.

சுரேஷ்: அது நிச்சயமா வெற்றிதான். கும்பமுனி கதைகள் சிறப்பாவே கவனிக்கப்படுது.

நாஞ்சில் நாடன்: நான் கடைசியா கும்பமுனி எழுதி ஆறு மாசம் இருக்கும். என்னுடைய நூத்து முப்பத்தியிரண்டு கதைகள்ல பத்தொன்பது கதைகள்லதான் கும்பமுனி எழுதியிருக்கேன். அதுல மாடன் கதைல கும்பமுனி சும்மா உட்கார்ந்துட்டு, ‘சரிதான்வோய் ரைட்டரே, கதைக்காயிடும்’னு சொல்லிட்டு அவர் போயிடுவார்.

சுரேஷ்: அதுக்குனு ஒரு iconic place வந்துடுச்சு. இது சம்பந்தமா இன்னொரு கேள்வி – நீங்க பொதுவா உலக இலக்கியங்கள்ல இருந்து யாரையும் மேற்கோள் காட்டறது இல்ல. உங்க பழைய பேட்டில நீங்க சொன்ன ஒன்று எனக்கு ரொம்பப் பிடிக்கும்…செத்துப்போன பக்கத்து வீட்டுக்காரன் பல்செட்டை நான் இரவல் வாங்க மாட்டேன்.

நாஞ்சில் நாடன்: நான் வெளிநாட்டு புத்தகங்கள் ரொம்ப, அளவுகடந்து படிச்சவனல்ல. ஆனா முக்கியமான புத்தகங்கள் படிச்சிருக்கேன். இப்பக்கூட ஒரு இருநூறு புத்தகம் கண்டிப்பா எங்கிட்ட இருக்கும். ஜாய்சுடைய டப்ளினர்ஸ் நான் வைச்சிருக்கேன். தேர்தெடுத்துப் படித்திருப்பேன். போர்ஹே முழுக்க நான் படிச்சிருக்க மாட்டேன். மார்க்வெஸூம் முழுக்கப் படிச்சிருக்க மாட்டேன். மார்கவெஸுடைய மொத்த கலெக்சனும் எங்கிட்ட இருக்கு. ஆனா கட்டுரைகள்ல கோட் பண்றது…எனக்குத் தேவையாப் படலை. அதே சமயத்துல எனக்கு இதைக் கைவிட முடியாது. வாய்ப்பு கிடைச்சா…இப்ப சாணி மெழுகின மண்தரை. சாப்பாடு போடுவதற்கு முன்னாடி அதுலதான் இலை போடுவாங்க. அந்த அம்மா மொதல்ல அதுல தண்ணி தெளிக்கிறா. கண்ணகி. தண்ணி தெளிச்சு கையினால துடைக்கிறா. என்ன சொல்றார்னா – பூமாதேவி மயக்கத்துல கிடக்கிறாளாம்.

மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,

தண்ணீர் தெளித்து, தன்கையால் தடவி,

குமரி வாழையின் குருத்தகம் விரித்து…ஈங்கு (கன்னி தலைவாழை இலை…)

அமுதம் உண்க அடிகள் ஈங்கென

எனக்கு வாய்ப்பு கிடைச்சா, இத நான் கோட் பண்ணாமப் போக மாட்டேன்.

சுரேஷ்: பார்க்கப் போனா, நமக்கு அந்த Last Supper தெரியும் இந்த Last Supper தெரியாது.

நாஞ்சில் நாடன்: இது Last Supper தான். எனக்கு idea, presentation மாதிரி விஷயங்கள்ல பெரிய பிரேமை உண்டு. போயட்ரி பார்த்தீங்கன்னா, அவன் போயட்ரீ பெரிய போயட்ரீயா இருக்கலாம். ஆனா எனக்கு இந்தாள் போதும். எனக்கு அவனைவிடவும் இவன் எப்படியும்…சமீபத்துல மௌனியுடைய ஒரு பேட்டி, ஜே.வி.நாதன் போட்டிருக்கார் – அவர் என்ன சொல்றார்னா, ஒரு கட்டுரைல இதை நான் எழுதியாச்சு – என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த மொழி போதுமானதாக இல்லை. என்னுடைய ரியேக்சன்…திருநாவுக்கரசர், நம்மாழ்வார்க்கொல்லாம் இந்த மொழி போதுமானதா இருக்கு…அப்ப நீ இந்த மொழியை சரியாப் படிக்கலைனு தானே அர்த்தம். அதுபோல, திருக்குறள் – அவர் சொல்றார் இன்னொரு இடத்தில…திருக்குறள் நீதிநூல், அது இலக்கியம் ஆகாது.

வேறொரு இடத்தில குறிப்பாகச் சொல்லியிருக்கேன். இந்த இரவு ஒரு பெண். அது சகல ஜீவராசிகளையும் சாப்பாடு கொடுத்து, உறக்காட்டி, நிம்மதியாப் பார்த்துகிட்டுத் தான் விழிச்சிருக்கு. அந்த இரவுக்குத் துணையா நான் இருக்கேன்.

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்ல தில்லை துணை.

இது நீதிநூல்னு சொல்லுவியா இலக்கியம்னு சொல்லுவியா. அப்ப நீ திருக்குறள் படிக்கல. அப்புறம், இதுக்குள்ள கம்யூனிட்டி சார்ந்த, ஒரு மொழிமீது விருப்போ, அதிவிருப்போ, அதிவெறுப்போ  இருக்க வாய்ப்புகள் – அந்த சைக்காலஜி நமக்குத் தெரியும். அந்தக் கருவியை நான் உபயோகம் பண்ணி அடிக்கமாட்டேன். பிரிதல் பொருட்டு தொல்காப்பியர் அஞ்சு இலக்கணம் சொல்றார். எதன் காரணமாக ஒருத்தன் பிரியறான். துபாய்க்குப் போறான். கல்விக்குப் போறான். போருக்குப் போறான். தூதுவனாப் போறான். அமைச்சனாப் போறான். ஐந்து காரணங்கள் இருக்கு. ஒருத்தன் சொல்றான், தன்னுடைய பொண்டாட்டிகிட்ட. பொருள்தேடிப் போறேன். அடுத்த கார்காலத்துக்குள்ள  வந்துருவேன். விரைந்து வந்திடுவேன். அவ சொல்றா – இங்க உள்ள வேலையப் பார்த்துட்டு, உள்ள சோத்தத் தின்னுட்டு, இங்கனயே கிடப்பேன்னா எங்கிட்ட சொல்லு. அங்க போயி நாற்பதினாயிரம் ரூபா உண்டாக்கிட்டுத் திரும்பி வர்றேங்கிற சமாச்சாரம், எவளோ ஒருத்தி நீ வரக்கூடிய காலத்தில உயிரோட இருப்பா இல்ல, அவகிட்ட சொல்லு.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

வல்வரவுல வல்னா விரைவுனு போட்டுக்கலாம். திருக்குறள் ஏழு சீர்ல – படிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் அதுக்குள்ள அவன் போற height.

கண்ணன்: நீங்க வல்வரவு பற்றி எழுதியிருந்ததை திருக்குறள் பற்றி நடந்த நீயா நானாவில நான் கோட் செய்தேன்.

நாஞ்சில் நாடன்: வல்வரவுங்கிறத நல்வரவுக்கு எதிர்ப்பதமா நான் பயன்படுத்தறேன். எல்லா உரையாசிரியனும் வல்வரவுன்னா கடிது வருதல், விரைந்து வருதல்னுதான் சொல்றான். நான் இப்படிப் பார்க்கிறேன். நீ ஆறு மாசங்கழிச்சு வரக்கூடியது வல்வரவுதான், நல்வரவு இல்ல. ஒரு பொண்ணு என்ன திராணியாப் பேசறா. ஆனா பொருள்வயிற் பிரிதல்ங்கிறது இன்னிக்கும் நடக்கத்தானே செய்யுது. துபாய்க்குப் போனா ரெண்டு வருஷத்துக்கு ஒருக்காத்தான் வீட்டுக்கு வருவான். பெரிய பொசிசன்ல இருக்கிறவன்தான் ஆறு மாசத்துக்கு ஒருதரம் வருவான். அமெரிக்கால இருக்கவன் மட்டும் என்ன வாழுதாம் – ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வர்றான்.

நானே ஒரு கதை எழுதியிருப்பேன் (பேச்சியம்மை). ஏழு வருஷம் ஆச்சு, மகன் ஊருக்கு வந்து. அவன் பார்த்த பொண்ணுகெல்லாம் கல்யாணம் ஆகிப் பேரம்பேத்தி எடுத்தாச்சு. பேங்க்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் ஆயிடும். ஒரு நாள் இந்தக் கிழவி போய் பாங்க்ல சொல்லுவா, பணம் இனிமே வந்ததுன்னா திருப்பி அனுப்பிச்சிடுங்க. பாங்க் மேனேஜர், ‘அதெப்படிம்மா அனுப்பமுடியும்.’ ‘அப்ப, நாளைக்கு உம்ம நடைல ஒரு பிணம் கிடக்கும்.’ எப்படி வேணாலும் டீல் பண்ணுக்கங்கன்னு சவால் விடறா. மேனேஜர் அரண்டு போயிடறார். வாசல்ல காலைல பாங்க்க திறக்க வர்றபோது பிணம் கிடந்தா, இந்தியாவுல ஒரு நிகழ்ச்சியே அப்படி நடந்ததுகிடையாது. ‘சரிம்மா, நான் எழுதிடறேன்.’ அவளுக்குண்டான ஒரு கோபம் இருக்கு. அவ கோயில்ல விளக்கு வெளக்கி வைக்கிறா. தண்ணி எடுத்துக்கொடுக்கறா. பூப்பறிச்சுத் தர்றா.  பூசை செய்யக்கூடிவர் கேட்கிறாரு, ‘நீ செத்துப்போனா யாரு கொள்ளி வைப்பா?’ ‘பெருமாள் வைப்பாருய்யா. ஏன் நீர் போட மாட்டீரா.’  அப்ப அவளுடைய கோபம் என்ன…ஏழு வருஷம் ஆச்சு, பெத்து வளர்த்து, பால் குடுத்து, படிக்க வைச்சு, நகையை அடகு வைச்சு…இவனுக்கு ஏழு வருஷம் பெத்த அம்மையை வந்து பார்க்கணும்னு தோணலையே.  இவன் பணம் எனக்கு எதுக்கு? இது மரபுசார்ந்த ஒரு தாய்க்கு வரக்கூடிய கோபம். இந்த மாதிரி ஒரு ஸ்டோரிய நான் எழுதற போது, அனாவசியமா பரிமேலழகர கோட் பண்ண மாட்டேன். ஏன்னா எனக்குத் தெரியும், இந்த இடத்துல நான் ஒருவதிமான emotional crisisகுள்ள கொண்டுபோகப் போறேன். வாசகனை டைவர்ட் பண்ணக் கூடாது. அவனுடைய wholehearted attendance, நூறு சதம் concentration எனக்கு வேணுங்கிறபோது, நான் ஒழுங்கு மரியாதையாக் கதை சொல்லிட்டுப் போயிடுவேன். சில சமயம் ஆடிப் பார்க்கலாம்னு தோணும். ஆடியன்சைப் பொறுத்த விஷயம்தானே. நாட்டைக் குறிஞ்சி ஒரு செலக்டட் ஆடியன்ஸ்க்கு, ராம்நகர்ல, கோதண்ட ராமன் கோயில்ல, மூணேகால் மணிநேரம் பாடறார் சேஷகோபாலன். அதை கண்டிப்பா ஒரு சபாவுலையோ, ஒரு கல்யாணத்திலையோ அவர் செய்யமுடியாது.

சுரேஷ்: அது ஒரு முக்கியமான விஷயத்துக்கு அழைத்துப் போகுது. உங்க இசை ரசனை. அதனோட ஊற்று எங்க சார் இருக்கு? கோயில் கச்சேரிகள்ல கேட்டதா?

நாஞ்சில் நாடன்: கோயில்தான் எங்களுக்கு ஆதாரம். ரெண்டாவது, எந்த சிறுதெய்வ வழிபாட்டிலேயும் தாளம் அடிச்சாகணும். அவன் அடிக்கிற முரசு, தம்பை, உடுக்கு, கிராமிய தப்பட்டை, மகுடம் – மகுடம்னு சொன்னா பலபேருக்குப் புரியாது. சுப்புடு எழுதறாரு, ஒரு முறை ம்யூசிக் அகாதெமில யாருடைய ஏற்பாட்டிலயோ தப்பட்டை, மகுடம் வாசிச்சுக் காட்டினபோது, ‘நம்முடைய பிரசித்திபெற்ற  சிகாமணி, சங்கீதப் புலிகளெல்லாம் இவனுடைய கால்ல விழுந்து சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணா இந்தத் தாளத்தில கொஞ்சம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும்’னு எழுதறார். சுப்புடு எழுதியிருக்கார் – நான் படிச்சிருக்கேன். தாளம் அங்கிருந்துதான் நமக்குக் கிடைக்குது. தாளத்தைத் தானே லயங்கறீங்க?

சுரேஷ்: ஆமாம். சுருதி மாதா, லயம் பிதா அப்படீம்போம்.

நாஞ்சில் நாடன்: எனக்கு முறையான சங்கீதம் தெரியாது.

சுரேஷ்: எப்படி ராகங்களை identify பண்றீங்க.

நாஞ்சில் நாடன்: ‘தாயே யசோதா’ ராகம் தானே இது. இப்படித்தான் நான் identify பண்றேன். மற்றபடி இதுல நாலு ஸ்வரம் இருக்கு, மோகனம் அஞ்சு ஸ்வரம் இருக்கும், இப்படி அந்த grammar வழியா நான் அந்த முடிவுக்கு வர்றதில்லை. எனக்குக் கேட்டுகிட்டு இருக்கப் பிடிக்கும்.

சுரேஷ்: சின்ன வயசிலேயே உங்களுக்கு கர்னாடக இசைப் பழக்கமுண்டா?

நாஞ்சில் நாடன்: எங்க அப்பா அஞ்சாங்கிளாஸ் பெயில்ங்க. ஆனா அவர் எல்லாக் கோயில்லயும் போயி இசைக் கச்சேரி கேட்பாரு. நான் ஒரு ஆறு ஏழு படிக்கிறபோதே, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு, கொள்ளு மட்டும் சோறு தின்றது. பசிக்காம இருக்கணுமில்ல? அவருகூடவே நடந்து, ஏழு மைல், சுசீந்திரம். அங்கதான் நான் ராஜரத்தினம் பிள்ளைல இருந்து, காருக்குறிச்சி அருணாச்சலம், ஏகேசி நடராஜன், சூலமங்கலம் சிஸ்டர்ஸ், கேபி சுந்தராம்பாள், எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி இதெல்லாம்…அப்ப எனக்கு இன்டரெஸ்ட் கடைசில அவங்க பாடக்கூடிய துக்கடாதான்.

சுரேஷ்: தமிழ்ப்பாடல்களத் துக்கடான்னு சொல்வாங்க.

நாஞ்சில் நாடன்: நான் ஒறங்கனாக்கூட அப்பா என்ன எழுப்பிவிட்றுவார். அந்தப் பாட்டுக்காக காத்திட்டிருப்பேன். சில சமயம், தில்லானா பிடிக்கும். இந்த ராக ஆலாபனை சுத்தமா பிடிக்காது. அப்ப. 27 வருஷத்துக்கு முன்னாடி நான் பாம்பேல இருந்து, ம்யூசிக் அகாதெமி வந்து, ஸ்டால்ல எம்.டி.ராமநாதன் டபுள் ஆல்பம் வாங்கி, ஒருக்கா கேட்டுப் பார்த்தேன்..ஒன்னுமே அர்த்தமாகல. எம்.எஸ்கிட்ட கொடுத்தேன், சார் இது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். இப்ப என்கிட்ட, எம்.டி.ராமநாதன் ஏழு சிடி வைச்சிருக்கேன். இது கேட்டுகேட்டுப் பழகிட்டதுதான். எனக்குக்  கீர்த்தனை முக்கியமில்லை. நான் அருணா சாய்ராம ஒரு இண்டர்வ்யூ பண்ணினேன். அது என்னோட தொகுப்புல வரப்போகுது. மொத்தம் ரெண்டு மணிநேரம் பாடறீங்கம்மா. ஒரு தமிழ் கீர்த்தனை எடுத்தவுடனே, மொத்த ஹாலும் எந்திருச்சு உட்காருதே, அப்ப மொழிக்கு அதில் ஏதோவொரு இடமிருக்கேன்னேன். ‘நீங்க சொல்றது ரொம்ப சரிதான். இசைக்கு மொழி இல்லைங்கறது உலகறிந்த ஒரு உண்மை. ஆனா இசை மூலமா ஒரு கீர்த்தனை, ஒரு பாடலை பாரதியாரோ, அருணகிரியோ, ஒரு தூரனோ கொடுக்கிறபோது, அதனுடைய பவர் தனியாத்தான் இருக்கு. அதை இசை இலக்கணம் தெரிஞ்சவனும் எஞ்சாய் பண்றான், தெரியாதவனும் எஞ்சாய் பண்றான்.’ இது ஒரு நீண்ட இன்டர்வ்யூ. நான் நேரடியாக் கேட்டேன்.

‘ஏம்மா, இந்த இலக்கணமெல்லாம்…?’

’அது எங்க கவலைங்க. நீங்க எதுக்கு அதைப்பத்திக் கவலைப் படறீங்க. கேட்க சுகமா இருக்கா, சௌக்கியமா இருக்கா, அது போதும் உங்களுக்கு. இலக்கணமெல்லாம் எங்களுடைய கவலை-இப்படித் தாளம் போடறது, அப்படித் தாளம் போடறது எல்லாம்.’

சமீபத்துல ம்யூசிக் அகாதெமில இன்னொருத்தரோட பெர்பார்மென்ஸ் பார்த்தேன். ரெண்டு கைலையும் வேற வேற தாளம் போடறாங்க. ஆமா, அதுக்கொரு இலக்கணம் இருக்குதாம். அந்தம்மா…பாடசாலை பொன்னம்மாவுடைய சிஷ்யை..பயிற்சிபெற்று வந்து பண்றாங்க. எனக்கு அது குழப்பமாத்தான் இருந்தது. விசாரிச்சதுல – எனக்கு வைத்தியநாதன்னு ஒரு நண்பர் இருக்காரு – அது உண்மைதான்னார்.

சுரேஷ்: இந்துஸ்தானி நீங்க பாம்பேல இருக்கிறப்போ அறிமுகமாச்சா?

நாஞ்சில் நாடன்: நான் ஏழு ரூபா சம்பளத்துக்கு வேலை பார்த்திட்டிருந்தபோது, எங்கூட ஏழு ருபா சம்பளத்துக்கு வேலை பார்த்தவன், பாலக்காட்டுல இருந்து ராமன்னு ஒரு பையன்…அவன் பார்ட்-டைம் வொர்க்கா சண்முகானந்தாவுல வாலண்டியர். கேட்ல டிக்கெட் கொடுக்கக்கூடிய வேலை. நல்ல கச்சேரி நடந்தா, ஆள் வராத சீட்ல என்னை உட்கார்த்தி வைச்சுருவான். சில சமயம், அவஞ்செலவுல டிபன் கூட வாங்கித்தருவான். அப்படித்தான் நான் இந்துஸ்தானி கேட்க ஆரம்பிச்சேன். எல்லாமே கேட்டேன். இந்துஸ்தானியும், ஆரம்பத்தில repulsiveஆத்தான் இருந்தது. அது உங்கள உள்ள இழுத்திருச்சுனா நதியோட கொண்டுபோயிடும். இந்துஸ்தானி கேட்டுட்டு நீங்க கர்னாடிக் கேட்கிற போது – இது வேற ரகமான இசை, அது வேற ரகமான இசை – எங்கிட்ட பாயின்டடா கேட்டீங்கன்னா, which one is most attractiveனு கேட்டீங்கன்னா, இந்துஸ்தானினுதான் சொல்லுவேன். ஏன்னா, ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பறதுக்கு ரெண்டரை மணிநேரம் எடுத்துக்கறான். அந்த ராகத்தினுடைய வடிவம் நம்ம காது உணரதுக்கு, அது அவம்பாடறது என்ன தோடியாவும் இருக்கட்டும், எழுப்பிக் கொண்டுவந்து நிறுத்தறான் பாருங்க…பயங்கரமான வேலைங்க. அதான் இசை. ஆனா அருணா சாய்ராம் சொல்றாங்க, பாதி Western Classicsலயே நம்முடைய கர்நாட்டிக் இசையினுடைய தன்மைகள் இருந்ததுன்றாங்க. இப்ப அவங்களும் fast beatக்கு போயிட்டாங்க.

கீர்த்தனை பாடுறபோது சுவாரசியமா இருந்தாக்கூட, பிஸ்மில்லா கான் என்ன கீர்த்தனை பாடறாரு? ஆனா அவருடைய பர்டிக்குலர் பாட்டு எப்பக் கேட்டாலும் எனக்குக் கண்ணு நிறையாம இருக்காது. அப்படி வாசிப்பாரு மனுஷன். அவருடையதே ஒரு ஏழெட்டு வைச்சிருக்கேன். ஷெனாய். முதல்முதல்ல அதுக்கு ஒரு சபை அந்தஸ்து கொடுத்தவன் பிஸ்மில்லா கான்.

சுரேஷ்: ஷெனாயை முதல்தரம் கேட்கும்போது, என்னடா நாதசுரத்துக்கு கீ போச்சான்னு தோனும் நமக்கு.

நாஞ்சில் நாடன்: போன மாசம், கி.ரா.வை பார்த்தபோது, ஒரு விஷயம் சொன்னார். ராஜரத்தினம் பிள்ளை பிஸ்மில்லாக் கானை பார்க்க போயிருக்கார். பேசிட்டிருந்த உடனே – அவரும் இவரைக் கேள்விப் பட்டிருக்காரு – ‘சரி, உம்ம ஆயுதத்தை எடும்’ அப்படிங்கிறாரு ராஜரத்தினம் பிள்ளை. அவர் ஷெனாய் எடுத்துக் கொடுத்திருகார். இவரு கொஞ்சம் முயற்சி பண்ணிட்டு லகுவா வாசிக்க ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம், உம்ம ஆயுதத்தை நீர் எடும்கிறாரு. ஊதறாரு ஊதறாரு காத்துதான் வருது வாசிக்க முடியலை. உண்மையோ பொய்யோ, கி.ரா. என்கிட்ட சொன்ன விஷயம் – பத்து நாளைக்கு முன்னாடி. அவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிஞ்சிருக்காங்க.

அப்புறம் அவன் என்ன சொல்றான்னா, சுருதி நிக்கலைனா மூணு வருஷம் ஆகும்றான். காந்தாரம் செட் ஆகலைனா மூணு வருஷம் அங்கயே கெடன்றான். நம்முடைய system, கொஞ்சம் affluence, ஆகவே இசை வகுப்பு, ஆகவே பதிமூணாம் வயசுல அரங்கேற்றம், ஆகவே பிரமுகர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றத்துல பாராட்டு விழா, அந்த சிஸ்டம் இல்ல அவனுக்கு. அவன் அதை ஒரு devotionalஆன விஷயமாப் பார்க்கிறான். அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனா இருக்கட்டும். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆளு அந்த பாகிஸ்தானி சிங்கர் – நஸ்ரத் ஃபதே அலி கான். உருது எனக்கு என்னத்தத் தெரியும். அந்த ராகம் எனக்கு என்ன தெரியும். அந்த பாவம் இருக்கில்ல. இசைல மிகமிக முக்கியமான விஷயம் பாவம். அந்த பாவம் எம்.எல்.வி.கிட்ட இருந்த பாவமோ, பட்டம்மாள்கிட்ட இருந்த பாவமோ, கே.பி.சுந்தராம்பாள்கிட்ட இருந்த பாவமோ, சோமு கிட்டியோ மணி ஐயர்ட்டியோ இருந்த பாவமோ, இப்ப இவங்ககிட்ட இல்லை. ‘பாவம்’தான் இருக்கு. சஞ்சய் சுப்பிரமணியம்,  I am very comfortable. கிருஷ்ணாவும் முயற்சி பண்றாரு. உன்னிக்கிரூஷ்ணன் எவ்வளவோ இம்ப்ரூவ் ஆகியிருக்கார்.

(ஸ்ரீதர் நாராயணன்): நீங்க நிறையப் பேரை அங்கீகாரம் கொடுத்து அறிமுகப்படுத்தி வைக்கறீங்க. நீங்க வரும்போது உங்களுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்தது? என்னமாதிரி எதிர்கொள்ளப்பட்டீர்கள்?

நாஞ்சில் நாடன்: எனக்கு முதல் சிறுகதை வெளியான உடனே வண்ணதாசன் ஒரு கடிதம் எழுதினார். நான் வேறயாரோனு நினைச்சுட்டு இருந்தேன். திருப்பதிசாரம் கோலப்பப் பிள்ளையா இருக்கும்னுட்டு.  புதிசா இருந்தது. அந்தக் கடிதம்கூட நான் வைச்சிருக்கேன். என்னுடைய நாவல் வந்தபோது என்னை appreciate பண்ணி எழுதனவங்க வெங்கட் சாமிநாதன். ஆனானப்பட்ட வெங்கட் சாமிநாதன். க,நா.சு. தி.க.சி. வல்லிக்கண்ணன். நெகடிவ்வா இருந்தாக்கூட சுந்தர ராமசாமி.

சுரேஷ்: க.நா.சு., வெங்கட் சாமிநாதன் எழுதினதெல்லாம் எங்கியாவது இருக்கா சார்?

நாஞ்சில் நாடன்: இல்லை நான் அதுக்கு வேறு ஒரு திட்டம் வைச்சிருக்கேன் – இந்த வருஷமோ அடுத்த வருஷமோ செய்யணும். வெங்கட் சாமிநாதன் எழுதின போது சில முரண்களையும் சுட்டிக்காட்டி அப்பளத்தில் கல் அப்படின்னு முடிச்சிருப்பார். அது கொஞ்சம் loudஆ இருந்திருக்கலாம். மொதல் நாவல் எழுதற போதெல்லாம், எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அதுல சொல்லிரணும்கிற வேகம் இருந்தது. பின்னாடிதான், அதை வேற ஒரு இடத்திலையுங்கூட சொல்லலாமே. எப்பவுமே ஒரு எழுத்தாளனுக்கு எல்லாமே சொல்லித் தீராது. இப்ப நான் பல விஷயங்கள் சொல்கிறபோது repetition வருவதை நானே ஃபீல் பண்றேன். சில அடிப்படை விஷயங்களை – ஊழல் கெட்ட விஷயங்கிறதை எத்தனை முறை சொன்னாலும் சொல்லித்தானே ஆகணும். எந்த வடிவத்துல ஆனாலும். அவங்கெல்லாம் என்னை முன்பின் அறிமுகமில்லாத போதே ஆதரிச்சிருக்காங்க. முதல் சிறுகதை. முதல் நாவல்.

சுரேஷ்: முதல் சிறுகதை விரதம் தான், இல்லையா.

நாஞ்சில் நாடன்: விரதம். தீபத்தில வந்தபோது, அந்த மாதத்தினுடைய சிறந்த சிறுகதையா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனா வருஷத்துல சிறந்த சிறுகதையா என்னுடைய சிறுகதை ஒன்றுகூட தேர்ந்தெடுக்க்படலை. அந்த முதல் மூணு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு அப்புறம், நான் எழுதின எந்த சிறுகதையுமே மாதத்தின் சிறந்த சிறுகதையா வரலை. என்னன்னே தெரியலை எனக்கு. ஒருவேளை அவங்க சீனியர் ரைட்டர், கன்சிடர் பண்ணவேணான்னுகூட விட்டுருக்கலாம். ஆனா இவங்க எதையும் எதிர்பார்த்து என்னை ஊக்குவிக்கலை. க.நா.சு.வோ, வெங்கட் சாமிநாதனோ, நகுலனோ, திகசி வல்லிக்கண்ணனோகூட. என்னுடைய சில பேராசிரியர்கள் எழுதியிருக்காங்க. நெகட்டிவ்வாவும் வந்திருக்கு. ரெண்டு மூணு நாள் அப்செட் ஆகியிருக்கும்..பிறகு சரியாயிடுவேன்.

சுரேஷ்: உங்களுடைய படைப்புகளை யாரிடமாவது காண்பிப்பீர்களா?

நாஞ்சில் நாடன்: என்னுடைய நாவலை, எழுதி முடிச்சபிறகு என்னுடைய நண்பர்கள் படிப்பாங்களேதவிர, நான் க்ரிட்டிக்கலா யார்கிட்டயும் கொடுத்து அபிப்ராயம் கேட்டதில்லை, எந்த நாவலுக்கும். மிதவைக்கு மாத்திரம் நான் நகுலன்ட்ட கொடுத்தேன். அவர் ஒரு எட்டு பக்கத்துக்கு முன்னாடி பென்சில்ல கோடு போட்டுட்டார்…நாவல் இங்க முடியுதுன்னு. அதுக்கான காரணங்களும் சொல்றாரு. இப்ப அந்த நாவல் இருக்கிற வடிவம் அவர் சொன்ன வடிவம்தான். நான் அந்த மிச்ச எட்டுப் பக்கத்தை என்ன பண்றதுன்னு கேட்டேன். என்னவேணாலும் பண்ணு, எடையில எங்கவேணாலும் சொருகிக்க…இந்த form of writingல எதை எங்க வேணாலும் வைக்கலாம். அப்படின்னார்.

மிதவைக்கு, ஆங்கிலத்தில ஒரு நல்ல ரெவ்யூ எழுதினார் நகுலன். Illustrated Weeklyல. ஒன்னு அவங்க பாராட்டினது. இரண்டாவது, என்னைப் பொருட்படுத்தி அவங்க பேசினது. சுந்தர ராமசாமி, க.நா.சு, வெங்கட் சாமிநாதன், நகுலன் – one to one என்னோட பேசினாங்க. என்னை ஒரு ஆளா நினைச்சு உட்கார்த்தி வைச்சி நான் கேட்கிற முட்டாள்த்தனமான கேள்வியா இருந்தாக்கூட அதுக்குப் பதில் சொல்லி, இலக்கியம் சார்ந்த தெளிவுகளை எனக்கு ஏற்படுத்தினாங்க. நான் சுந்தர ராமசாமிகட்டயே கேட்கிறேன் – என்ன சார், அகிலன பத்து லட்சம் பேர் படிக்கிறாங்க. உங்கள மூவாயிரம் பேர் படிக்கிறாங்க. பத்து லட்சம் பெரிசா, மூவாயிரம் பெரிசா. அவர் எனக்குப் பதில் சொன்னார். அந்தப் பதில்கள்ல இருந்து நான் எனக்கான தெளிவை அடைஞ்சேன், நம்ம இதை நோக்கிப் பயணம் பண்றோம். அப்பத்தான் எனக்குத் தெரியுது, பாட புத்தகங்கள் எட்டாம் வகுப்புக்கும் எழுதுவாங்க, ப்ளஸ் டூவுக்கும் எழுதுவாங்க, பிஏக்கும் எழுதுவாங்க, எம்.ஏக்கும் எழுதுவாங்க, பிஎச்டிக்கும் எழுதுவாங்க, இதுல ப்ளஸ் டூ பாடப்புத்தகம் கீழானதென்றோ, எம்.ஏ. பாடப்புத்தகம் மேலானதென்றோ கருதவேண்டிய அவசியமில்லை. எட்டு லட்சம் பேர் படிக்கிறான் இதை. ஆனா பிஏ இங்கிலிஷ் அல்லது தமிழ் இலக்கியம் படிக்கிறவன் ஒரு முப்பதினாயிரம் பேர்தான் படிப்பான். இப்ப நான் எதை நோக்கி நகர்வது..பிச்சமூர்த்தி நல்லா சொல்வார்…எல்லாம் ராஜபாட்டைல போவாங்க, நான் காட்டுக்குள்ள தடம்போட்டுகிட்டு இருக்கேம்பாரு. காட்டுக்குள்ள செடிய வெட்டி அதுல வழியை ஏற்படுத்திட்டு போறது இருக்கில்லையா, சீரியஸ் லிட்ரேச்சர்ங்கிறது அந்த மாதிரி தடமில்லாக் காட்டுக்குள்ள தடம்போட்டுகிட்டுப் போற முயற்சிதான். அப்படி எழுதினாத்தான் அந்த லிட்ரேச்சர் ஃப்ரெஷ்ஷா இருக்கும். நாம் விரும்பி, திட்டமிட்டு, agendaகுள்ள வைச்சு செய்கிற விஷயமா நான் கருதாட்டாலும் கூட, ஒரு மொழியை அடுத்த கட்டத்துக்கு, அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தறவன் க்ரியேட்டிவ் ரைட்டர்தான். அவன்தான் இந்த மொழியை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கும் இருபத்தியிரண்டுக்கும், பாரதி கடத்தினமாதிரி…காலங்காலமா…இளங்கோ அடிகள், மணிமேகலை ஆசிரியர்ல இருந்து, தொடர்ந்து கம்பன், ஆழ்வார், நாயன்மார், சேக்கிழார், பாரதி பாரதிதாசன் வரைக்கும் அப்படியே தொடர்ந்திட்டிருக்கும். இந்த மொழியை நகர்த்திகிட்டே, தேர் இழுக்கிற மாதிரி இழுத்துட்டுப் போறாங்க இல்லையா, இந்த க்ரியேட்டிவ் ரைட்டிங்கினுடைய effort குறைஞ்சுதுன்னா மொழி தேங்கிப் போகும். நல்ல வேளையா, நம்ம மொழில அது stagnate ஆகாம இருக்கக் காரணம்…in spite of all these negative processes…english medium, படிக்க ஆள் கிடையாது, இருநூத்தியைம்பது காப்பிதான் ப்ரின்ட் பண்றாங்க, எல்லாம் இருந்தாலும்கூட, I won’t say that the language has come to a standstill. மொழி நகர்ந்துகிட்டு இருக்கு. இது பத்து கோடி பேர் பேசுகிற ஒரு மொழியில்லையா? பத்துக்கோடி பேர் பேசுகிற மொழி உலகத்திலயே பத்து மொழிதான் இருக்கும். ஆனா அதற்குண்டான இடம் கிடைச்சுதா இல்லையாங்கறது, அரசியலின்பாற்பட்ட கேள்வி. இந்த மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதல்ல என்னுடைய நோக்கம். ஆனா என்னுடைய எழுத்தினுடைய பை-ப்ராடக்ட் அது. நல்லா எழுதுகிற போது எம் மொழி அடுத்த நூற்றாண்டுக்குப் போகும். நான் சமீபத்தில ஆய்வுக் கட்டுரைகள் எழுதின பேராசிரியர்களிடம் உரையாற்றின போது, ஒன்றரைப் பக்க ஆய்வுக்கட்டுரைகளைப் படிச்சுட்டு சொன்னேன், க்ரியேட்டிவிட்டியே இல்லையேமா உங்க மொழியில. நீங்க எழுதின மாதிரி உங்க கைட் எழுதினாரு, அவருக்கு கைட் எழுதினாரு. க்ரியேட்டிவ் லிட்டரேச்சர் படிச்சாலொழிய உங்களுக்கு மொழியின் மீது கட்டுப்பாடு வராது. சுட்டிச்செல்கிறார், சுட்டிச்செல்கிறார்னு ஒரு பாராவில அஞ்சு இடத்திலயா எழுதுவீங்க? வெட்கமா இல்லையான்னு கேட்டேன். பிஎச்டி ப்ரொபசருக்குக் கோவம் வந்துடுச்சு. வந்தா வரட்டும், அது வேற கதை.

சுரேஷ்: உங்களுடைய கதைகளப் பற்றி சில ஆய்வுகள் நடந்திருக்கில்லையா, அவங்க என்ன மாதிரி பண்ணியிருக்காங்க.

நாஞ்சில் நாடன்: ஆய்வுங்கிறது ரொம்ப unfortunateஆன விஷயம் சார். அவங்களுக்குத் தேவை பிஎச்டி பட்டம், அதுசார்ந்து ஒரு வேலை, ரெண்டுமூணு இன்க்ரிமென்ட்டு. இப்ப என்னை ஆய்வு செய்யணுமானா, என்னுடைய சமகாலத்து ரைட்டர் எல்லாரைப் பற்றியும் ஒரு அறிவிருக்கணும். அவன் பூமணியைப் படிச்சிருக்கணும், வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, ராஜேந்திர சோழன், அத்தனை பேரையும் படிச்சிருக்கணும். Straight away, guide சொன்னார்னு…அவர் நல்லா ஒத்துழைப்பார், எளிமையா இருக்கும், நாஞ்சில் நாடனின் பெண்ணியம்னு எடுத்துக்கோ, அப்படின்னு ஒரு தலைப்பப் போட்டு விட்ருவாங்க..அதைத் தாண்டிப் படிக்கமாட்டாங்க. புஸ்தகமே நம்மகிட்ட வந்து கேட்பாங்க..சார் உங்க புஸ்தகம் எங்க சார் கிடைக்கும்பாங்க…என் வேலையா அது? நீயில்ல தேடிக் கண்டுபிடிக்கணும்?

அன்பழகன்: சுஜாதாகூட உங்கள நிறைய கோட் பண்ணியிருக்கார்.

நாஞ்சில் நாடன்: அவங்களால பொருட்படுத்தப்பட்ட ஒரு ரைட்டரா நான் இருந்தேங்கிறது எனக்கு சந்தோஷந்தான். இந்த கல்லூரிப் பேராசிரியர்களுடைய மொழியை வைச்சுகிட்டு இந்த மொழி ஒரு இன்ச் கூட நகராது. வா.மு.கோமு, சாரு யார் எழுதினாலும் சர்தான்…he is contributing to the language.

சுரேஷ்: உங்க பார்வைல ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு தலைமுறை தாண்டி அடுத்த மேஜர் ரைட்டர்ஸ் வந்துட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?

நாஞ்சில் நாடன்: வந்திருவாங்க. கண்மணி வந்திடுவார். கண்மணியோட வந்தாரங்குடி மீது நிறைய விமர்சனம் இருந்தாலும்கூட, he is a good writer. ஜாகீர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. அழகிய பெரியவன் மீது நம்பிக்கை இருக்கு. சு.வேணுகோபால் எழுதறார். சின்ன பையங்க நிறையப்பேர் எழுதறாங்க. என்.ஸ்ரீராம்னு ஒரு பையன் கரூர்ல இருந்து எழுதறான்…அற்புதமான சிறுகதைகள் எழுதறான்.

அன்பழகன்: இணையத்துல தொடர்ந்து எழுதறதால சில எழுத்தாளர்கள் கவனிக்கப்படறாங்களா? எழுதாதவர்கள் கவனிக்கப்படுவதில்லையா?

நாஞ்சில் நாடன்: இவர்களெல்லாம் ஒரே ஆட்களாலதான் கவனிக்கப்படறாங்க. இணையத்துல இதைப் படிக்கிறவன் எத்தனைபேர் இருப்பான். பத்தாயிரம் பேர் இருப்பாங்களா? இந்த பத்தாயிரம் பேர் அல்ல வாசகர்கள். சந்திச்சே இராத ஆட்கள். இன்னிக்கு நான் பஸ்ஸை விட்டு இறங்கி, பசிக்குதுன்னு கம்பங்கூழ் குடிச்சிட்டு அடுத்த பஸ் ஏறலாம்னு போறேன்…ஒரு பொண்ணு பார்த்துட்டு இருந்தது…‘சார், நாஞ்சில் நாடன்தானே’. ஆமான்னேன். ‘நான் சென்னைல அட்வகேட்டா இருக்கேன். ஈரோடு சொந்த ஊரு.’ ‘ஈரோடு போறியா, சென்னை போறியா’ ‘ஈரோடு’. இவ்வளவுதான். பில்லைக்குடுத்துட்டு வெளில வர்றேன், ஒரு ஆள் ஓடிவந்து, சார் சார்ன்னதும் திரும்பிப் பார்த்தேன்…வெள்ளியங்கிரி மலைக்குப் போய்ட்டுத் திரும்பிகிட்டிருக்கான். கையில கம்பு இருக்கு…‘வெள்ளியங்கிரிக்குப் போயிட்டு வர்றீங்களா தம்பி?’, ‘ஆமாங்க’, ‘சாப்டீங்களா’, ‘சாப்பிட்டேன்’, ‘உங்களை சென்னை புக் ஃபேர்ல பார்த்திருக்கேன் சார்.’ இவனெல்லாம் நெட் மூலமா என்கிட்ட வரலை. அது வேற உலகம். அந்த உலகம் இல்லாட்டாக்கூட நான் ஒரு ரைட்டர் தான். நான் இதையெல்லாம் பொருட்படுத்திக்கிறதில்லை. கண்மணி குணசேகரன் பத்து நாளைக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு ப்ளாக் எழுதினான். ‘என்னடான்னு?’ கேட்டேன். ‘அண்ணா இந்த திசையே வேண்டாம்னா, விட்டு ஓடியே வந்துட்டேன்.’ ஜாகீர் ராஜா எழுதறாரான்னு தெரியல. அதுலயும் நல்ல எழுத்துகள் வருது. வாசிக்கறாங்க. நல்ல entertainment இருக்கு. அந்த ப்ளாக் மூலமா வாசிக்கிற வாசகர்கள் வேற சார். நம்ம புத்தகக் கண்காட்சில சந்திக்கிறவங்க, பொது இடங்கள்ல சந்திக்கிறவங்க – இவங்க வேற. நான் அதுக்கும் ஆசைப் படல. இதுக்கும் ஆசைப்படல. நான் எனக்குத் தெரிஞ்சதை என்னோட அளவுல எழுதறேன். அதுக்குக் கிடைக்கிற ஆராதனையோ போஷனையோ, இதைப் பத்தியெல்லாம் கவனிக்கிறதில்லை.

சுரேஷ்: உங்களுக்கான வாசகனை நீங்க அடைஞ்சுட்டேதான் இருக்கீங்க.

நாஞ்சில் நாடன்: புதுப்புது வாசகனை அடைஞ்சுகிட்டிருக்கேன். என் கடன் பணி செய்து கிடப்பதே. திருநாவுக்கரசரை கோட் பண்ணினேன். என் வேலை எழுதுவது. நிறைய யங்க் ரைட்டிர்ஸுக்கு நான் சொல்ற ஒரே அட்வைஸ், நீங்க எழுதுங்கப்பா. எழுதினா உன்னைத் திரும்பிப் பார்ப்பான். சும்மா ஃபேஸ்புக்ல போஸ்டிங் போட்டுட்டு, ஒரு கவிஞர்கிட்ட சொன்னேன்…கவிதாயினினு சொல்லணும்…ஏம்மா ஒரு கவிதைக்குப் பத்து போட்டோ போடறீங்க. குறைச்சுக்கங்கம்மா, வேறவிதமாப் பேசறாங்க வெளியுலகத்தில. ஒரு போட்டோகூட எதுக்குப் போடணும். என்னுடைய போட்டோக்கள் எல்லாமே நெட்ல இருந்து எடுத்துப் போடுகிறவைதான்.

சுரேஷ்: ஆரம்ப காலத்தில உங்களப் படிக்கிற போது, நாஞ்சில் நாடன் எப்படி இருப்பார்ங்கறதே தெரியாது.

நாஞ்சில் நாடன்: நான் உ.வே.சாமிநாதய்யருக்கு ஒரு புஸ்தகம் டெடிக்கேட் பண்றதாலே, எனக்கெதாவது லாபம் உண்டா. அவர் செத்துப்போய் எவ்வளவு வருஷம் ஆச்சு. இது என்னுடைய கடப்பாடுன்னு நான் செய்யறேன். அப்ப ஒரு சீரியஸ் ரைட்டர், இதைப் படிக்கிற ஒரு சீரியஸ் ரீடர்…மகாமகோபாத்யாய தாக்ஷனாய கலாநிதி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர்க்கு…சொல்கிறபோது கண்டிப்பா அந்தப் பக்கத்தைப் படிக்காமப் போகமாட்டான்ல? உ.வே.சா மேல சிலர் செய்கிற விமர்சனம் – பாரதியார் அவர்கிட்ட ஏதோ முன்னுரை கேட்டாராம். அவர் கொடுக்கலைனு சொல்லிட்டாராம். ‘சரி, கொடுக்கலைனு சொல்லிட்டார். இது ஒரு தகவல். அவ்வளவுதானே. I won’t infer anything out of this. பாரதியை அவர் மதிக்காம இருந்ததால கொடுக்கலையா, பிடிக்கலையா…இதுக்கெல்லாம் ஏன் நீ அர்த்தம் கண்டுபிடிச்சுக்கிற…?

சுரேஷ்: பாரதி சாமிநாதய்யரை வாழ்த்தி ஒரு பாட்டே பாடியிருக்கார்.

நாஞ்சில் நாடன்: ஆமா. அவர் ஆயிரத்தெட்டு preoccupationல இருந்திருப்பார். ஒரு செய்யுள் உடைஞ்சு கிடக்குது. பாதி சொற்களைக் காணோம். தேடிக் கண்டுபிடிக்கிறாரு. முன்னுரை எழுதறதுக்கு நேரமில்லாம இருந்திருக்கலாம். அல்லது, I am inferior to him to write a prefaceனு நினைச்சிருக்கலாம். நினைக்கக்கூடியவர் தானே அவரு? அதுக்குள்ள நீங்க பாலிடிக்ஸ் பண்ணப் பார்த்தீங்கன்னா. இப்ப நான் இத நினைச்சுட்டு இல்லை. எனக்கு ஆத்மார்த்தமா சாமிநாதனுக்கு சமர்ப்பணம் பண்ணனும்னு தோணுது. இது தோன்றுவதன் மூலம், என்னை பத்தாயிரம் பேர் படிச்சான்னா, பத்தாயிரம் பேருக்கு நான் சாமிநாதன ஞாபகப்படுத்தறேன். அவர் என் கண்டுபிடிப்பல்ல. நாஞ்சில நாடன் மதிக்கிற ஒரு ஆள் இருக்கானே…அப்படீன்னு இருக்கில்ல.  இணையத்துல நான் இல்லாததால நான் எதையும் இழந்ததாத் தெரியல. எனக்கு வந்துசேர வேண்டிய செய்திகள் வந்து சேருது. எல்லா ரைட்டரும் டைப் அடிச்சு அனுப்புங்கன்றான்.  குங்குமத்தில நான் கையால தான் எழுதி அனுப்புவேன்னு சொன்னேன். நீங்க எப்படி வேணா அனுப்புங்கன்றாங்க. எனக்கு இதுக்குமேல அதுக்குள்ள போயி, அதுக்கு நேரமில்லை.

அதவிட என்னோட சந்தோஷம் – ஈண்டுனு தமிழ்ல ஒரு சொல் இருக்கு. இங்கேனு பொருள். ஈண்டயான் அப்படினு ஒரு சொல் இருக்கு. இதுதான் நேத்து அறிந்துகொண்ட சொல். கண்டுபிடிச்ச சொல்னு சொல்ல முடியாது. ஈண்டயான்னா இங்கே இருப்பவன். நான் கண்டிப்பா, வாய்ப்பு கிடைக்கிற சமயத்தில ஈண்டயான்னு போட்ருவேன். தெரிஞ்சுட்டுப் போறான். பனுவல் போற்றுதும்னு சொல்வனத்துக்குத் தொடர் எழுதினேன். அந்தத் தலைப்பிலயே என்னுடைய புத்தகம் வருது. நிறையப் பேர் பனுவல்னா என்ன சார் அப்படிங்கிறாங்க. தமிழ் இலக்கியத்துக்குள்ள புத்தகங்கிற சொல் வந்திருக்கு, நூல்ங்கிற சொல் வந்திருக்கு, பனுவல்ங்கிற சொல் வந்திருக்கு, கித்தாப்ங்கிற சொல்லே பயன்படுத்தியிருக்காங்க, ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் அன்றே, அப்படினு பாட்டு இருக்கு. நான் பனுவல் போற்றுதும்னு துணிஞ்சு புஸ்தகத்துக்குத் தலைப்பு வைச்சாச்சு. சென்னைல ஒரு புஸ்தகக் கடைக்குப் பனுவல்னு பேர் வைச்சிருக்காங்க. அப்ப இந்த சொல்லை நான் நூறு வருஷத்துக்கு வாழ வைச்சிருக்கேன். இல்லைனா, எவ்வளவோ அழிஞ்சு போயிடுதில்லையா. நான் கல்லூரிகளுக்குப் போகிற போது, யானைங்கிற சொல் எல்லாருக்கும் பொருள் விளங்கும்பா. யானைனா elephantனு சொல்லிருவோம். ஆனா இருபத்திநாலு சொல் அகராதில கிடக்கு. கம்பனுக்குத் தேவையா இருக்கு…யானை – நேர்நேர். வாரணம் – நேர்நிரை. களிறு – நிரைநேர். வித்தியாசத்தைப் பாருங்க. கோதகம் – நேர்நிரை. போயட்ரிக்கு ஓசைக்காக இது தேவைப்படுது. ப்ரோசுக்கும் இப்படி வேணும். ப்ரோசுக்கும் போயட்ரிக்கும் சின்ன வேறுபாடுதான். ப்ரோசையும் இனிமையா muscialஆ, புணர்ச்சியினல வரக்கூடிய சுகத்தைக் காட்டணும்னா வேறவேற சொல் போட்டுத்தான் ஆகணும்.

செந்தில்: நீங்க ஏற்கனவே எழுதியிருக்கீங்க. தமிழ்ல சொற்களின் பயன்பாடு அறுகிட்டு வருதுன்னு.

சுரேஷ்: சோத்துக்கு செத்தாலும் சொல்லுக்குச் சாகாதேனு கவிதைகூட எழுதியிருக்கார்.

செந்தில்: ஆனா உலகம் முழுக்க அப்படித்தானே இருக்கு. ஆங்கிலத்திலயே, புதுப்புது சொற்கள் எல்லாமே மற்ற மொழிகள்ல இருந்து சேர்றதுதான். அங்கயும் core language 500-1000 சொற்கள்தான் இருக்கு.

நாஞ்சில் நாடன்: பத்தாம் நூற்றாண்டுல தமிழ்ல முதல் நிகண்டு தொகுக்கப்பட்டது. நிகண்டுனா அகராதி. பிங்கல நிகண்டு. அவர் பதினைந்தாயிரம் சொல்தான் தொகுக்கிறார். பின்னாடி அவருடைய பேரன் – அவரு முப்பதினாயிரம் சொல் தொகுக்கிறார். 1927ல சென்னைப் பல்கலைக்கழகம் பேரகராதி போடுது – அதுல ஒரு லட்சத்து இருப்பத்தி நான்காயிரம் சொற்கள் இருக்கு. இதுல ரெண்டு காரணம் புலப்படுது. முதல் நிகண்டு தொகுத்தவருக்கு இந்த சொற்கள் அறிமுகம் ஆகாம இருந்திருக்கலாம். அவருடைய பிரதேசத்துக்கும் விஸ்தீரனத்துக்கும் எல்லை. பின்னாடி வரவர அறிமுகமாகலாம். அல்லது மொழிக்குள்ள புது சொற்கள் வந்து சேர்ந்துகிட்டே இருக்கலாம். நீங்க சொன்ன அதே பாய்ன்ட் தான். ஆங்கில இலக்கியத்துல ஆதில இருந்த சொற்கள் எத்தனை, இன்னிக்கு அதுல இருக்க சொற்கள் எத்தனைனு பார்தோம்னா, உள்ளே வந்து சேர்ந்துகிட்டு இருக்கு. சேர்ந்துகிட்டு இருக்கிறபோதே அது புழங்கிகிட்டும் இருக்கு. இங்க புழக்கத்துக்கே வராம – இப்ப வீட்ல என்ன பண்ணுவாங்கன்னா அன்றாட வாழ்க்கைக்குப் பாத்திரங்க வைச்சிருப்பாங்க. பத்துப் பேருக்கு ஒரு விஷேசம் வருதுன்னா மேல இருந்து அந்த சட்டி இந்த சட்டினு இறக்குவாங்க. அப்ப விஷேச நாட்களிலாவது அதை புழக்கம் பண்ணனுமில்லையா…இல்லைனா அந்த பாத்திரத்தை வைச்சுட்டு என்ன பயன்? குண்டா அண்டானு எதுக்காக இடத்தை அடைச்சுட்டு துலக்கித்துலக்கி வைச்சுகிட்டு இருக்கணும்? சொல் வாழணுமானால், அது புழங்கணும். இந்தப் புழங்குதலை யார் செய்வாங்க? அன்றாட மனிதன் செய்யமாட்டான். அன்றாட மனிதனுடைய வாழ்க்கைக்கு- ஒரு விவசாயி இருக்கான்னா, அவனுக்கு மழை, களை, ஏர், கலப்பை, பருவம், விதை – இந்தமாதிரி சொற்கள் போதும். மொழிக்குள்ள செயல்படுகிறவன் – எழுத்தாளன், இவன் தொடர்ந்து சொற்களை வாழ்வைச்சுகிட்டே இருப்பான். அப்படி வாழவைச்சதுனாலேதான் கம்பன் என்னோட estimateல ஒரு லட்சம் சொற்களுக்கு மேல பயன்படுத்தியிருக்கான். திருவள்ளுவருக்கு அதற்கான தேவை வரலை…அளவில சின்ன வொர்க் தானே. சேக்ஸ்பியர் எவ்வளவு சொல் கையாண்டார் – 25000 இருக்கலாம். பின்னாடி வந்த மேஜர் ரைட்டர்ஸ் 35000 சொல் கையாண்டிருப்பாங்க. ஆனா ஆங்கில அகராதில அவ்வளவு தானா இருக்கு?எவ்வளவோ இருக்கில்லையா. ரைட்டருக்கு இதுக்கான தேவை எதனால வருதுன்னா – நானும் காமத்தைத்தான் பேசறேன், பசியைத்தான் பேசறேன், அநியாயத்தையும், அக்கறையையும், ஊழலையும் தான் பேசறேன். அடிப்படையான உணர்ச்சிகள் இவ்வளவுதான். இன்னொரு ரைட்டர்ல இருந்து நான் எப்படி வித்தியாசப் படறேன். ரெண்டு மூணு விஷயம் இருக்கு. என்னோட யுக்தியின் மூலம் நான் வேறுபடறேன். என்னுடைய தொணியின் மூலம் வேறுபடுகிறேன். என்னுடைய தாபத்தின் மூலம் வேறுபடுகிறேன். இதை எதன் மூலம் எய்துகிறேன்னா, சொற்கள் மூலம் எய்துகிறேன். இவ்வளவு பெரிய கல்லைத் தூக்கிட்டு மாங்காய் எறிய முடியாது. பாம்பு வருதுன்னா இந்தக் கல்லைப் போட்றலாம். ஏன்னா தூரம், குறி எல்லாம் முக்கியம். சொல்லுக்கும் அந்த பர்பஸ் முக்கியம். இது ஒலி மாத்திரம் இல்லை..பர்பஸ் முக்கியம். மந்திரங்கிறது என்னது – பவர்புல்லா ஓசையுடன் effectiveஆ சொல்லப் பயன்படுத்தறது. சொல்லுனாலே மந்திரம்தான். அதனாலதான் பாரதி மந்திரம் போல் வேண்டுமடா சொல்லாட்சிங்கிறான். ஊழச்சதை இருக்கக்கூடாதுங்கிறான். கட்டிடம் கட்டற மேஸ்திரி, ஒரு பாந்த அடைக்கறதுக்கு, ஒரு செங்கல எடுத்து ரெண்டு தட்டுதட்டறான், கரைஞ்சிருச்சி..கரெக்டா அது பொருந்துது. காக்கல்லு, அரைக்கல்லு, முக்காக்கல்லுங்கிறான் அவன். நான் வழக்கமாக் கல்லூரிகள்ல சொல்ற உவமானம், டென்னிஸ் ப்ளேயர் செரீனா வில்லயம்ஸ் எடுத்துக்கங்க – அந்தம்மா பேன்ட் பாக்கெட்டுல பின்னால மூணு பால் வைச்சிருப்பாங்க. எல்லா பாலும் ஒரே கலர்தான், ஒரே எடைதான், ஒரே அளவுதான், ஒரே காற்றழுத்தம்தான், but still she is having a choice. ஒன்னு எடுத்து தூரப்போட்டுட்டு, இன்னும் ரெண்டு வாங்கிக்கறா. அப்ப ஏதோ ஒரு force கொடுக்கப் போறா, ஏதோ ஒரு உயரத்துக்கு குதிக்கப்போறா, ஏதோ ஒரு பாய்ன்ட குறிவைக்கறா, கோணம் தேர்ந்தெடுக்கறா. ஒரு சொல் மீது ஒரு எழுத்தாளனுக்கு ஒரு feel வரணுமில்லையா. இந்த இடத்தில எனக்கு வாரணம் தான்யா, வடமொழியா தென்மொழியான்னு எனக்குக் கவலையில்ல. தொல்காப்பியன் இலக்கணம் சொல்றான் – திசைச்சொல், திரிசொல், வடசொல், இதுமாதிரி தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு நீங்க பயன்படுத்தலாம். முளரினு ஒரு சொல் இருக்கு. கம்பராமாயணத்துல. நான் ஏற்கனவே எழுதுனதுதான். முளரிங்கறது தாமரைக்கான சொல். சங்க இலக்கியம் முழுக்க முளரி பயன்படுத்தப்பட்டிருக்கு. ஆனா தாமரைங்கற பொருள்ல பயன்படுத்தப்படல. தாமரை பயன்படுத்தப்பட்டிருக்கு. இந்த இரண்டுதான் தமிழ் இலக்கண சுத்தப்படி பார்த்தீங்கன்னா தமிழ்ச்சொல். கம்பன் கஞ்சம்னு ஒரு சொல் பயன்படுத்தறான். கமலம், நளினம், பங்கஜம், பத்மம், அரவிந்தம், புண்டரிகம்னு பல சொற்கள் பயன்படுத்தறான். அவனுக்கென்ன தேவை. தாமரைங்கிறது எளிதுதானே. எல்லாருக்கும் விளங்குமே. அரவிந்த மலருள் நீங்கி, திரு இவள்னு சூர்ப்பநகை சீதையைப் பார்த்துச் சொல்றா.

(அரவிந்த மலருள் நீங்கி, அடி இணை படியில் தோய,

திரு இங்கு வருவாள் கொல்லோ? என்று அகம் திகைத்து நின்றாள்.)

அரவிந்த மலர்ல இருக்கக்கூடியவள் எப்படி அங்கிருந்து புறப்பட்டு இங்கவந்து சேர்ந்தா. அந்த இடத்தில அரவிந்தம் சொல்றான். பங்கஜாக்ஷன்ங்கிறதை தாமரைக்கண்ணன்னு மொழிபெயர்க்கிறான். இதுதான் சொற்காமுறுதல்னு சொல்றோம். எப்படி ஒரு மைசருக்கு பணம்மீது காமம் இருக்குமோ, அதுமாதிரி ஒரு எழுத்தாளனுக்குச் சொல்மீது காமம் இல்லைனா அவன் சரியான வகையில present பண்ணமுடியாது. I definitely want to differ from your writing or his writing. என்னை எப்படி நான் வேறுபடுத்திக்க முடியும். சொல் சேர்கிற விதம் இருக்கு. தமிழ்ல புணர்ச்சி விதிகள் தான் இலக்கணம்னு சொல்லி, அறுவது வருஷத்துக்கு முன்னால வந்த தமிழாசிரியர்கள் எல்லாம் சாகடிச்சுட்டான். அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விஷயமே அல்ல. மாத்திரைகள் இருக்கு. ‘அ’ அப்படின்னா ஒரு மாத்திரை. ‘ஆ’ன்னா இரண்டு மாத்திரை. ஃனா அரை மாத்திரை. கால் மாத்திரை இருக்கு. ஐகார குறுக்கம், மகர குறுக்கம் இருக்கு. மாத்திரைனா time. Timeனா என்ன – ஓசை. எதுக்காக அளபெடுக்கணும். ஓசைக்காக. எதுக்காக குறுகணும். முறுக்குனு நாம உச்சரிக்கிறதில்லை. முறுக்குன்னா ஒரு மாத்திரை. முறுக்குனா அரை மாத்திரை. ரெண்டுமே உகரம்தான். இது குற்றியலுகரம். இதுக்கு முழுக்க இலக்கணம் தெரியணும்னு அவசியமில்லை. இசை மாதிரிதான் இந்த சமாச்சாரம். நான் என் மனசுக்குள்ள போட்டு சொல்லிப் பார்க்கிறேன். உருட்டிப் பார்க்கிறேன். இப்படிச் சொன்னா நல்லாயிருக்குமா. இப்படிச் சொன்னா நல்லாயிருக்குமா. இது ஒவ்வொரு சொல்லுக்கும் நம்ம செய்யறதில்லை. நான் செய்யமாட்டேன். ஜெயமோகனும் செய்ய மாட்டார். இது இந்த writing processல automaticஆ வந்துரும்.

சுரேஷ்: கைப்பழக்கமா வந்துரும்.

நாஞ்சில் நாடன்: அப்படித்தான் வரும். பின்னாடி fine editing போகும்போது வேணா நாம சில சொற்களை நீக்குவமே தவிர, நாக்குல போட்டு உருட்டுகிற போது, அந்த perfectஆன tone கிடைக்கலேனே எழுத வராது. சில நொடிகள்ல நடந்து முடிஞ்சுரும். ஒரு நிமிஷத்துல நாற்பது வரிகளை எழுதி முடிச்சுருவேன். இது பயிற்சியின் மூலம், வாசிப்பின் மூலம், எனக்கு கிடைக்கிறது. ஏன் அவன் கறங்கு கால்புகா – கு ஒரு குறில், கா ஒரு நெடில் – கறங்கு நிரைநேர் –  ஒரு ஓசை வருதில்லையா – கறங்கு கால்புகா கதிரவன் ஒளிபுகா மறலி மரம்புகா – இதை நீங்க மொத்த சொல்லிட்டு வரும்போது ஒரு ஓசையின்பம் இருக்கில்லையா, இதுதான் மொழியினுடைய ஒரு உச்சம். இதை ஒரு ரைட்டர் ஃபீல் பண்ணனும். வாசிக்கிறவன் ஃபீல் பண்ணனும். என்ன சார் கல் கடலையா வறுக்கிறீங்கனு கேட்பாங்க. நான் எழுதினேன் – பேராசிரியர்கள் எல்லாம் கல்கடலையை வறுக்கிறார்கள். அப்புறம் திருத்தி எழுதினேன். பேராசிரியர்கள் எல்லாம் கல்கடலையை நெய்யூற்றி வறுக்கிறார்கள். ரெண்டுக்கும் வித்தாயசம் இருக்கு. இதுவே நக்கல்தான். நெய்யூற்றி வறுத்தல்னா கொஞ்சம் அதிகப்படியா போறது. இது திட்டமிட்டு வராது. creativityங்கிறது ஒரு சின்ன தீ. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. சின்ன குஞ்சு. இத்துணூண்டு தீ. creative powerங்கிறது ஒரு சின்ன தீதான்.

கண்ணன்: ஆனா, மகாபாரதம் மாதிரியான ஒரு படைப்புல, இந்த மொழியைப் பயன்படுத்தறது ஒன்னு. நீங்க, ஒரு சமகால யதார்த்தக் கதையை எழுதும் போது, ஈண்டு மாதிரியான யாருமே பயன்படுத்தாத சொல்லை எடுத்துப் போடறது, அதை எப்படி நீங்க செய்யமுடியுது?

நாஞ்சில் நாடன்: அதை முழுக்கப் பண்ணமாட்டேன். ஒரு கட்டுரைல ஒரு பத்து சொல் அப்படி முடியுமானாப் போட்டுறவேன். நம்ம சொல்லிட்டுப் போற விதத்தில அந்த சொல் டூயூன் ஆகி வந்திரும். என்ன தவம் செய்தனை. இது ஒரு கீர்த்தனையினுடைய ஒரு வரி. போற போக்குல என்ன தவம் செய்தனைனா அது வாசகனுக்குப் புரியாமப் போகாது. ஏன்னா அதுக்கு ஒரு extra power இருக்குது. அதைச்செய்யற போது, முதல்ல என்னுடைய pleasure எனக்கு முக்கியமில்ல? என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டறதுங்கறது ரெண்டாவது விஷயம். இனிமேல் போயெல்லாம் யாருக்கும் என்னை நிரூபிச்சுட்டு இருக்கவேண்டியதில்லை. என்னுடைய இயல்புன்னு ஒன்னு இருக்கில்லையா. ஈண்டுங்கிறத பல இடத்தில நான் பயன்படுத்தறேன். அப்படி ஓங்கிச் சொல்கிறபோது அதுக்கொரு ஓசை இன்பம் இருக்கு. கம்பீரம் இருக்கு.

சுரேஷ்: நீங்க சொல்லும்போது லா.ச.ரா.தான் ஞாபகம் வர்றாரு. நெருப்புன்னா வாய் வெந்துறணும்பாரே.

நாஞ்சில் நாடன்: அவர் சொல்றாரு, தண்ணி குடிச்சா தண்ணி இறங்குறது தெரியுமாம். இது லா.ச.ரா.  crystal மாதிரி transparentஆ இருக்குதாம் தொண்டை. தண்ணியே transparent.

சுரேஷ்: ஆனா உங்களுக்கு தமிழ் படைப்பாளிகள் மேல நம்பிக்கை இருக்கு. படைப்பாளிகள் வராங்கங்கிறதில உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நாஞ்சில் நாடன்: வராங்க. நாம கூடுமான வரைக்கும் ஆதரிக்கணும். சமீபத்தில அம்மாவின் தேன்குழல்னு ஒரு கதை – இன்னொரு இணைய இதழ். மாசம்  ஒரு கதை வெங்கட் சாமிநாதன் தேர்ந்தெடுத்து, பன்னிரண்டு கதை எனக்கு அனுப்பிச்சு, நல்ல வேளை என்ன உச்சநீதிமன்ற நீதிபதியாக்கிட்டாங்க. அதுல ஒன்னு தேர்ந்தெடுக்கச்சொன்னாங்க. அம்மாவின் தேன்குழல் எழுதினவர் இப்ப ஒரு தொகுப்பு போட்டிருக்கார். ஐரோப்பாவில் இருக்காரு. கொஞ்சம் நெட் ரைட்டிங் வாசனை இருக்கு. காப்பியை பித்தளை டம்ளர்ல குடிக்கிறதுக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர்ல குடிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு. இந்த வித்தியாசம் எங்கிருந்து சார் வருது. ஒரு கல்யாண வீட்ல பேப்பர் கப்ல காப்பி குடுத்தா …இது ப்ளாஸ்டிக்கினுடைய தன்மையா, மூச்சு உணர்றதா, பித்தளைக்கு வாசனை கிடையாது. செம்புக்கு வாசனை கிடையாது. இதுக்கு வாசனை இருக்கு. இதன் வாசனை ஏதோ ஒரு விதத்துல காப்பில கலங்குது. இந்த நெட் ரைட்டிங் க்ரியேட்டிவ் ரைட்டிங்க்கு உள்ள வரும்போது ப்ளாஸ்டிக் கப்பினுடைய வாசனை அதுல வந்துருது. இது குற்றச்சாட்டுனு சொல்லமுடியாது.

யங் ரைட்டஸ் பெரிய அளவில படிக்கணும்னு ஆசைப்படறேன். படிக்கணும்னா offensiveஆ எடுத்துக்கிறாங்க. ஒரு மொழியில ஏற்கனவே என்ன நடந்திருக்குங்கிறது எதுக்கு எனக்குத் தெரியணும்னு கேட்கிறாங்க. நான் அது உனக்குத் தெரியணும்னு சொல்றேன். மொழிக்குள்ள என்ன நடந்தது, ஏற்கனவே என்ன நடந்தது. புதுமைப்பித்தன் என்ன பண்ணியிருக்கான், கு.ப.ரா. என்ன பண்ணியிருக்கார், லா.ச.ரா. என்ன பண்ணியிருக்காரு, தெரிஞ்சிருக்கணும். இதுதானே ஆரம்பக் கல்வி. ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர் தமிழ் இலக்கணம் எதுக்காகக் கத்துக்கணும்?

சுரேஷ்: We need not reinvent the wheel.

நாஞ்சில் நாடன்: புணர்ச்சி விதிகள் எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர் கற்றுக்கொண்டு என்ன ஆகப்போகுது? அப்படிக் கேட்டீங்கன்னா எதுவும் ஆகப்போறதில்லை. ஆனா, ஒன்றை உருவாக்குவதில் இதற்கெல்லாம் பெரும் பங்குண்டு. இசைக்குப் பங்குண்டு. எதையுமே நெகட்டிவ்வாப் பார்க்காதீங்கன்னு சொல்றேன். அதனுடைய அளவில அதனைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. Pre-conceived notionsஓட இலக்கியத்தைப் பார்க்காதீங்க. எனக்குக் குமரகுருபரர் படிக்கிறபோதுதான் இந்தத் தெளிவு கிடைச்சுது. சைவ இலக்கியம், சைவ இலக்கியம்னு மூணு வருஷம் வரைக்கும் குமரகுருபரர்ல ஒரு பாட்டு நான் படிச்சவனில்லை. சிற்றிலக்கியங்களுக்காகப் படிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் அவன் எவ்வளவு பெரிய giantனு தெரிஞ்சது. அவன் சைவம் எழுதறான்னா எழுதிட்டுப் போறான். இஸ்லாம் எழுதறானா, கிருஸ்தவம் எழுதறானா எழுதிட்டுப் போறான். குமரகுரபரன் ஒரு மகாபெரும் கவிஞன். அற்புதங்களில் ஒன்னு. மேடைப் பேச்சாளர்கள், சுகிசிவம் எங்கியாவது குமரகுருபரர் பேசியிருக்காறா. பட்டிமன்றங்களில் கம்பன்தான் comfortable. மனப்பாடம் பன்றதுக்கு, சொல்றதுக்கு அதுதான் எளிமையாயிருக்கும். ஒரு இசைப் பாடகர் எதுக்காக வீணை கத்துக்கறான். You can excel only in one. எதுக்காக அவன்…ராஜரத்தினம் பிள்ளை அற்புதமாப் பாடுவாராம். சேஷகோபாலன் அற்புதமா வீணை வாசிக்கிறார். மதுரை சோமு தாளக்கட்டு சொல்றார். தனியாவர்த்தனத்துலே..அவர் சொல்றதக் கேட்டா அற்புதமா இருக்கு. மனுஷன் என்ன வித்தையெல்லாம் காட்டறான். எல்லாமே connected தானே சார். ஒரு painterக்கு ஓவியத்தின் கூறுகளைத் தெரிஞ்சுகிட்டாப் போறும். ஒரு ரைட்டருக்கு அப்படியில்ல. Geography, history, medicine, world politics,  கூடுமானா music, கூடுமானா சிற்பம், at least அதுனுடைய knowledge base ஆவது இருக்கணுமில்லையா? படத்தைப் பார்த்து அழகா சிரிக்குதான்னாவது கண்டுபிடிக்கத்தெரியணுமில்லையா? ஒரு பெரிய பொறுப்பு இவருக்கு இருக்கு. இவனுடைய சமூகப் பொறுப்பும் அதிகம். எழுதுவது என்பது ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சி அல்ல. இடத்தையோ விருதையோ பிடிப்பதற்கான முயற்சி இல்லை. முதல்ல எனக்கு அது சந்தோஷமா இருக்கணும். என்னை வாசிக்கிற பத்துபேருக்கு சந்தோஷமா இருக்கணும். பத்து பேருமே நல்லாயில்லைனு சொல்லிட்டா, எழுதப்பட்டு என்ன பிரயோஜனம்? வாசிக்கப்படாத ஒரு எழுத்துனாலே என்ன பிரயோஜனம்? பத்து வயசுல கல்யாணமாகி, பதினோறு வயசில புருஷன் செத்து, எம்பத்தியாறு வயசு வரைக்கு வைதவ்யம் காத்து இருந்தமாதிரி ஆயிடக்கூடாதில்லையா? எழுதுவது வாசிக்கப்படணும். வாசிக்கப்படுவதற்கு அடிப்படையான ஒரு விஷயம் வாசிப்புத்தன்மை. Readability. Young writers நிறையப்பேர் அதைப் புரிஞ்சிக்கணும். உணவுக்கு வாசனையால் விளையக்கூடிய நன்மை என்ன? வாசனை ஒரு appetizer. கலர். அதுக்கு மேல ஏன் முந்திரிப் பருப்பு, கொத்தமல்லிக்கீரை, it is an appetizer.

சுரேஷ்: பத்து பக்கம் திருப்பணுமில்லையா?

நாஞ்சில் நாடன்: பத்து பக்கத்துக்குள்ள வாசகன ஒரு புஸ்தகத்துக்குள்ள கொண்டுவர முடியலைனா, நீ நூறு பக்கத்திலையும் கொண்டுவர முடியாது. ஏன் 1200 பக்க நாவல்கள் வாசிக்கப்படாம கிடக்கு? என்ன பிரயோஜனம் அப்ப? பேர் சொல்ல விரும்பல. 85 பக்கம் 86 பக்கம் தாண்ட முடியலை. மாங்குமாங்குன்னு எழுதறாங்க. மூணு வருஷமா எழுதியிருக்கான். ஒரு பையன் எங்கிட்ட அடிக்கடி பேசுவான். என்ன சொல்றதுங்க, படிச்சே முடிக்க முடியலை, அப்புறம் என்ன காமெண்ட் சொல்றது? பாவமா இருக்கு. நிறைய எழுதி சாதிச்சு, நல்ல platformல நிற்கறவங்க இந்த மாதிரி முயற்சிகள் செய்யலாம். யங் ரைட்டர்ஸ் போயி, எடுத்த எடுப்பில, கண ராகத்தை எடுத்து மூணேமுக்கால் மணிநேரம் பாட ஆரம்பிச்சா, என்ன பண்றது? அதனுடைய எடையிலயே அவன் விழுந்திருவான். அதை இவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. குறிப்பா தமிழ்க் கவிதைங்கிறது கஷ்டமா இருக்கு. ஒரு prose writerக்கு இவ்வளவு கவலை இருக்கணும்னா, ஒரு கவிஞனுக்கு இதைவிடப் பத்துமடங்கு அக்கறை இருக்கணுமில்லையா? இலக்கியங்கிறதும், கவிதைங்கிறதும் என்னுடைய சொந்த score settle பண்ணுவதற்கான விஷயமில்லை. எனக்கு உங்க பேர்ல கோபங்கிறதுக்காக ஒரு கும்பமுனி கதை எழுதமாட்டேன். சமூகத்தின் மீது இருக்கிற கோவத்துக்காகத் தான் நான் எழுதறனே தவிர…

ரிச்சர்ட் பாக் இப்ப தமிழ்ல வந்திருக்கு. ஜொனாத்தன் லவிங்ஸ்டன் எனும் ஞானப் பறவை. அது ரிச்சர்ட் பாக்குக்கு சொல்லத் தெரியாதா? Red Tea எப்படி எரியும் பனிக்காடு ஆகும்? டேனியல் medically qualified, estate வாழ்க்கையை தெரிஞ்சுகிட்டவர். அதனுடைய பாலிடிக்ஸையும் ப்ளஸ் அண்ட மைனஸையும் தெரிஞ்சிட்டு Red Teaனு பேர் வைக்கறார். அதனுடைய அர்த்தம் தெரியாமலா அந்த பேர் வைப்பான். அவனொரு professional writer. அது எப்படி நீங்க மார்க்சிஸ்ட் பிலாசபியோ பிஜேபி பிலாசபியோ நம்பிட்டு உங்க தத்துவத்துக்குத் தகுந்த மாதிரி அந்தத் தலைப்பை மாத்த முடியும். சில தலைப்புகள் மாத்தாம முடியாது. தாய்ங்கிறது தாய் தான். எரியும் பனிக்காடுன்னா –  you are romanticizing that. You believe in a particular ideology. அதுக்குத்தகுந்த மாதிரி நீங்க டேனியலைப் பயன்படுத்திட்டீங்கன்னா?

செந்தில்: Jonathan Livingston Seagull  –  இங்கிலிஷ்ல ரொம்ப சுருக்கமா எழுப்பட்ட படைப்பு. ஒரு வார்த்த கூட அதிகமாப் பயன்படுத்தாம எழுதியிருப்பார். ஞானப்பறவைங்கிற போதே அது ஒரு திசையை நோக்கித் தள்ளுது.

நாஞ்சில் நாடன்: தர்பூசணில சிவப்பு இஞ்சக்சன் கொடுக்கிற மாதிரித்தான். ஞானப்பறவைனா. அது வாசகனுக்குத் தெரியாதா.

சுரேஷ்: ஆரம்பத்தில் இறைமறுப்பாளரா இருந்த நீங்க, இப்ப மாறிட்டீங்களோ?

நாஞ்சில் நாடன்: இப்பவும் நான் தீவிரமான பக்தனெல்லாம் இல்லை. ஆனா எல்லாத்தையும் அதனதனுடைய மரியாதையோட அணுகணும்.

சுரேஷ்: தீவர இறைமறுப்புங்கிறது தேவை இல்லையோ?

நாஞ்சில் நாடன்: திருநெல்வேலி ஒருமுறை போயிருந்தப்போ…எங்கயோ எழுதியிருக்கேன்…பேஸ்ட் தீர்ந்துபோச்சு. லாட்ஜ்க்கு வெளியிலே ஒரு சாயுபு கடை வைச்சிருக்காரு. ஒரு பேஸ்ட் குடுங்கன்னேன். குடுத்தாரு. நல்ல பெர்ஃப்யூம் இருக்கு பார்க்கிறீங்களான்னாரு. நான் வேண்டாங்கனுட்டு, அப்புறம் கேட்கிறேன். ஏன் இஸ்லாமியர்கள் பெர்ஃப்யூம் அதிகம் பயன்படுத்தறாங்க. வாசனை இறைவடிவம் இல்லையா? இசை இறைவடிவம்னா, வாசனை இறைவடிவம்தானே? சரியாத்தானே சொல்றாரு. அழகு இறைவடிவம் தானே? அழகுங்கிறது என்னங்கிறது நம்முடைய தீர்மானம்.

கண்ணன்: சிற்றிலக்கியங்கள் பற்றிய முயற்சியை இன்னும் தொடர்ந்துகிட்டிருக்கீங்களா?

நாஞ்சில் நாடன்: செய்யணும்னுதான் நினைக்கிறேன். புத்தகம் எழுதி முடிச்சதுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு முப்பது புத்தகங்கள் சேமிச்சிருக்கேன். அதுல இறங்கினேன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷம் வேணும். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை இன்னொரு 150 பக்கம் எழுதலாம். அம்பறாத் தூணி இன்னொரு 150 பக்கம் எழுதலாம். கம்பனின் உவமைகள்னு புதுசா ஒரு புத்தகம் எழுதலாம்னு இருக்கேன்.

சுரேஷ்: அப்புறம் உங்க நாவல் இருக்கு.

நாஞ்சில் நாடன்: எழுத எழுத எழுதுவோம்.

சுரேஷ்: வாசக இடைவெளிங்கிறது என்ன சார், உங்க பார்வையிலே?

நாஞ்சில் நாடன்: ஒரு ரைட்டருக்கும் வாசகனுக்குமான இடைவெளியா?

சுரேஷ்: ஒரு படைப்புல வாசகனுக்கான இடைவெளி.

நாஞ்சில் நாடன்: அத கேட்கறீங்களா. ஒரு எழுத்தாளனைவிட எந்த அளவுக்கும் தகுதிக் குறைவானவன் அல்ல ஒரு வாசகன். இவன் எழுதறான். அவன் எழுதலை. ஆகவே எங்களுக்கு ரெண்டு கொம்பு, அப்படியெல்லாம் கிடையாது. ஒரு நல்ல வொர்க் வாசகனுடைய further imaginationஐ தூண்டும். புரிதலை, அறிவைத் தூண்டிட்டே இருக்கும். நீங்க திருநாவுக்கரசர் பாட்டை எடுத்துகிட்டீங்கன்னா, ஆழ்வார்ல ஒரு பாடல் எடுத்திட்டீங்கன்னா, ஒரு நாலு வரிப் பாட்டை யோசனை பண்ணிட்டே போனீங்கன்னா, ஒரு நாற்பது பக்கத்துக்கு அதில மேட்டர் இருக்கும். சொல்லிகிட்டே இருக்கலாம். அதைத்தான் நான் வாசக இடைவெளினு நினைக்கிறேன். அவனுக்குண்டான ரூம். அதில்லைனா தட்டையா இருக்கும். அவன் cerebrally அதை வாசிச்சு, உணர்ந்து, enjoy பண்ணனும் இல்லையா. அந்த enjoyment இல்லைனா, அந்த படைப்புடனான உறவு துரித காலத்துல முடிஞ்சுரும்.

அன்பழகன்: வாசக இடைவெளினு சொல்லும் போது, உங்க பாலம் சிறுகதை..நிறைய இடைவெளி இருக்கு…ஈஸ்வரமூர்த்திப் பாட்டா அரைபோதைல நடந்துட்டே வருவாரு…அங்க பாலத்துக்கிட்ட ஒரு சண்டை நடக்க இருக்கு. ஒரு வரிதான் கேட்பாரு. அந்த சண்டையை தீர்த்து வைப்பாரு…அது எப்படிங்கிறத வாசகர் அனுமானத்துக்கே விட்ருவீங்க.

நாஞ்சில் நாடன்: பொருள் புரிஞ்சக்கிறதிலையே வாசகனுடைய capacity work ஆகுது. மாணிக்கவாசகருக்கு உரை எழுதறவங்க, உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும் – இந்த கற்பனவும் இனிஅமையும் – உற்றார் வேண்டாம், ஊர் வேண்டாம், புகழ் வேண்டாம், கற்றார் வேண்டாம், படிச்சதெல்லாம் போதும்…இதுதான் சம்பிரதாயமான உரை. தண்டபானி தேசிகர்ல இருந்து, கந்தசாமிப் பிள்ளை உரைல இருந்து எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க. நான் அவங்களைவிடப் பெரிய ஆள் இல்லை. அவங்களுடைய தமிழறிவுக்கு கால்தூசிக்குப் பெறமாட்டேன். நான் எப்படி அதை உணர்றேன்னா,  கற்பனவும் இனி அமையும் – இதுவரைக்கும் படிச்சதெல்லாம் வீண், இனிமேல்தான் கல்வி அமையப் போகுது. அது சிவனைப் பற்றிய கல்வியோ பக்தி பற்றிய கல்வியோ எதுவேணா இருக்கலாம். இது எனக்குக் கிடைக்கிற இடைவெளி. ஆனா சம்பிரதாயமான எந்த சைவ சித்தாந்த அறிஞர்கிட்ட நீங்க கேட்டாலும், கற்றதெல்லாம் போதும்னு சொல்றார் அப்படீம்பாங்க. நான் இப்படிப் பார்க்கிறேன். இது தப்பானு எங்கிட்ட கேட்டீங்கன்னா – இது சரியாத்தானே இருக்கு?

நம்மாழ்வார் எழுதிய ஒருபாடுழல்வேனை – பிரபந்தத்துக்கு உரை எழுதுகிற எல்லாரும், ஒரு பாடு உழல்வேனை – பாடுன்னா படுதல், துன்பம். நான் திருப்பித்திருப்பிப் படிக்கிறேன். உழல்தல்னாலே சொன்னாலே துன்பம்னுதான் பொருள், ஒரு பாடு உழல்வேனை – நிறைய துன்பம் உழல்வேனை – நம்மாழ்வாருடைய செறிவுக்கு – இன்னொரு திசைல என்னுடைய சிந்தனை எப்படிப் போகுதுன்னா – எங்க ஊர்ல ஒருவாடுன்னு ஒரு சொல் இருக்கு. அதாவது பக்கத்துவீட்ல தேங்காய் கொடுக்க வர்றாங்க. ‘எங்க வீட்லயே ஒருவாடு தேங்காய் கிடக்கு’.

கண்ணன்: இங்கேயும் சொல்றதுதாங்க. ஒருபாடு. அளவுக்கு அதிகமானங்கிற அர்த்தத்தில்.

நாஞ்சில் நாடன்: நான் யோசிக்கிறேன். ஒருபாடு உழல்வேனைங்கிறது, நிறைய உழன்றவனை – இப்படி ஏன் பொருள் கொள்ளக்கூடாது? இது என்னுடைய வாசக இடைவெளி. சம்பிரதாய உரையாசிரியர்கள் கிட்டப்போனீங்கன்னா, அடிச்சு மிதிச்சுருவாங்க. அதையெல்லாம் விட்டுட்டு நேரடியாப் பாடலுக்குள்ள போனீங்கன்னா பாடல் உங்களுக்கு வெளிச்சங்கள் தந்துகிட்டே இருக்கும். திறந்திடு சீசேம் மாதிரி, it goes on opening its doors.

கண்ணன்: நீங்க இன்னொன்னும் சொல்றீங்க – கம்ப ராமாயணம் நூறு பாடல்களுக்கு மேல யாரும் சொல்றதில்லைனு.

நாஞ்சில் நாடன்: பயன்படுத்துறதில்லை. தேவையில்லைனு நினைக்கறாங்க. கம்பன்ல அவங்க தொழிற்படறாங்க. அந்தத் தொழிலுக்கு அந்த நூறு பாட்டு போதும். அந்த நூறு பாட்டுதான் எல்லாரும் சொல்றான். அற்புதமான பாட்டுகள் இருக்கு. எந்தப் பாட்டையும் நீங்க சுண்டிப் பார்த்தீங்கன்னா கணீர் கணீர்ங்கும். விராதன் துதி பற்றி 15 பாட்டு எழுதறாரு. அந்தப் படலத்துக்கே அவசியம் கிடையாது. ஆனால், முழுக்கமுழுக்க பெருமாள் துதி.  எல்லாம் பக்திப் பாடல்கள். விராதன் மூலமா நம்மாழ்வார் ரேஞ்சுக்குப் போறார். அவருக்கு ஏதோவொரு காரணகாரியம் இருந்திருக்கு. எங்கேயாவது சொல்ல முடியலை. இங்க சொல்லுவோம். சொல்றதுக்கு உண்டான இடங்களும் அவன் தேர்ந்தெடுத்துக்கிறானில்ல. ஒரு very great creative mindகுள்ளதான் இது நடக்கும். சாதாரணமா ஒரு அஞ்சாந்தரக் கவிதை வாசிக்கிறதையே கவிதை நிகழ்வுங்கிறாங்க. கவிதை வாசிப்பு இல்லை, கவிதை நிகழ்வு. அப்ப கம்பனுக்குள்ள என்ன நிகழ்ந்திருக்கணும்.

கண்ணன்: உங்கள் இன்னொரு பரிமாணம் மேடை பேச்சு. அங்க இதெல்லாம் பேசறதுக்கான scope கிடைக்குதுங்களா?

நாஞ்சில் நாடன்: கிடைக்கிற வாய்ப்புகளை நான் பயன்படுத்திப்பேன். பெரும்பாலும் மாணவர்கள்கிட்டத்தான் பேசறேன். அங்க பேசினத இங்ககூடப் பேசிருவேன். புதுசா புதுசாவும் தோணிகிட்டிருக்கு. சமீபத்துல சித்தூர்ல சங்க இலக்கியத்தில் மலர்களின் பயன்பாடுனு மூன்று நாள் கருத்தரங்கு. அனிச்ச மலர்ங்கறது எந்த மலர்ங்கற கேள்விக்குப் போவேன். இது என்னுடைய வாசிப்புத்தான். திருவள்ளுவர் நாலு இடத்துல சொல்றாரு. சங்க இலக்கியங்கள்ல அனிச்சம் சொல்றது. இது என்ன மலர். யாராவது பார்த்திருக்கீங்களா? அந்த மலர் எங்க போச்சு? அதனுடைய அங்கலட்சணங்கள் என்ன? நிறமுடையதா, வெண்மையா? காட்டில் பூக்குமா, கோட்டுத் தாவரமா, கொடிப் பூவா? நான் creative writerஆ இருக்கனாலதான் இந்த மாதிரி கேள்விகளுக்குள்ள போக முடியும். இந்த வெளிச்சத்தை நம்ம அங்க அடிச்சிட்டு வந்துருவோம். ஆசிரியர்கள் இதைப் பத்தித் தீர்மானமா யோசிக்க மாட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து கோவைப்புதூர் வர மூணு பாதை இருக்கு. அதைப் பற்றிய அறிதல் இருக்கவனுக்குத் தான் எந்தப் பாதை எடுக்கறதுங்கறதப் பற்றி யோசிக்க முடியும். இது இலக்கிய வாசிப்புல ரொம்ப முக்கியம். புறநானூற்றுப் பாடலை ஒரு பேராசிரியர் சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. நான் பேச்சுத் தமிழ்ல கொண்டுவந்து வேறவிதமாப் பேசுவேன். அவங்ககிட்ட அறிவிருக்கும், emotions இருக்காது. நம்மகிட்ட அறிவில்லேன்னாக்கூட emotions இருக்கும். உணர்ச்சிகரமா அளிக்கிற போது, வேறு சான்றுகளும் தருகிற போது, அது அவங்களுக்கு வித்தியாசமாத் தெரியும். I enjoy doing it and it gives me some income.

அன்பழகன்: எழுத்தாளர்கள் ஏன் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை?

நாஞ்சில் நாடன்: ஒரு கருத்தைச் சொல்றபோது நாளைக்கு அவங்ககிட்டப் போய் நிற்கவேண்டியிருக்குமோ. அவனால ஏதோ நடக்கும். அதை எதுக்கு இப்பக் கெடுத்தக்கணும். இப்படி யோசிக்கறாங்க. ஏதாவது ஒரு சின்ன வேலைக்கும் அவங்ககிட்ட போகவேண்டியிருக்கும். அதை இப்படிப் பேசி எதுக்குக் கெடுத்துக்கணும். ஆகவே அதையும் சொல்லமாட்டாங்க, இதையும் சொல்லமாட்டாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், என்கிட்ட அப்படியொரு கோரிக்கை பாக்கெட்ல இல்லை. எனக்குத் தேவைகள் இருக்கு, நெருக்கடிகள் இருக்கு. நான் நினைச்சா மேயரைப் பார்க்க முடியும். கமிஷனரைப் பார்க்க முடியும். தண்ணி கனெக்சன் அப்ளை பண்ணி நாலு மாசம் ஆச்சு. இந்தத் தொடர்பு இருந்தும் கூட நான் அவங்ககிட்டப் போகலை. ஒரு மாசம் அதிகம் எடுக்கப்போகுது. எடுத்துட்டுப் போகட்டுமே. வாழ்வா சாவா போராட்டமில்ல. எதுக்கு இவங்ககிட்டப் போய் நிற்கணும்.

****

தனிவாழ்வில் தென்படும் நேர்மையும், நாங்கள் நேரடியாக உணர்ந்த பரிவும், சொற்களின் மீதும் மொழியின் மீதும் அவர் கொண்ட குன்றாக் காமமுமே அவரது எழுத்துகளில் தொடர்ந்து பரிமளித்து வருகின்றன என்பது இந்த நேர்காணலுக்குப் பின் உறுதிப்பட்டது. பேசித் தீராதவை ஏராளம் என்ற ஏக்கம் எஞ்சிய போதும், தொடர்ந்து உரையாட நாஞ்சில் நாடன் தயாராகவே இருந்தபோதும், மூன்று மணிநேரத்துக்கும் மேல் அவரை ஓய்வின்றிப் பேச வைப்பது முறையாகாது என்பதால், அவரது அரிய புத்தகங்களைப் பார்வையிட்டுவிட்டு, புகைப்படங்கள் எடுத்து, நன்றிகள் நவின்று விடைபெற்றோம்.

நேர்காணல் முடிந்துவிட்டாலும், அவருடன் பேசுவதற்கு முன்பும் பின்னரும், கற்பனவும் இனி அமையும் என்று அரும்பிய புதிய ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கும் அவரது படைப்புகளின் வழியே இன்னமும் புதிதாய் இயம்பிக் கொண்டுதானிருக்கிறார்.

அவர் எழுத எழுத எழுதட்டும். நாமும் படிக்கப் படிக்கப் படிப்போம்.