வேல்முருகன் தி

மீனாட்டம்

தி. வேல்முருகன்

கார்த்தி கடலூர் செல்லும் பஸ்ஸில் இருந்து அகரம் கடைத்தெருவில் இறங்கும்போதே மழை பிடித்துக் கொண்டது.

ஒடிப்போய் நரசிம்ம பெருமாள் கோயில் மேடையில் ஏறி சுவரை ஒட்டி நின்று கொண்டான். கோயில் முகப்புச் சாரம் நாட்டு ஓடு வேய்ந்து இருந்தது.  சாரத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அவனைப் பார்த்து பத்துவிரலும் கோயிலுக்கு ஓடி வந்தார். அவர் பின்னாடியே ஒரு  ஆடும் அதன் குட்டியும் ஒடிவந்து கோயில் மோடையில் ஏறிக் கொண்டன.

பத்துவிரலு, “ந்தா… ந்தா…” என்றார், ஆட்டையும் குட்டியும் பார்த்து. அது இரண்டும் கார்த்தி பக்கம் ஓடி வந்து அண்டிக் கொண்டு நின்றன.

“மாப்பிள்ளை நீ எங்கடா போயிட்டு வந்த?”

“பள்ளிக்கூடம் மாமா “

“எத்தனையாவது படிக்கர?”

“பதினென்னாவது”

“வயசு பதினாறு இருக்குமா?”

“ஆமாம் மாமா இப்ப தான் நடக்குது”

“இரண்டு கெட்டான் வயசு. ம்ம்…? நல்லா சாப்புடுரா”

கார்த்தி ஆட்டையும் குட்டியையும் பார்த்தான். ஆடு உடம்பை உதறிக் கொண்டது. குட்டி பால் குடிக்க பின்புறமாக முட்டியது.

பத்துவிரலு சிவப்பு நூல் துண்டால் தலையிலிருந்த ஈரத்தைத் தொடைத்துவிட்டு மடியில் இருந்த சுருட்டு வத்திப்புட்டியெடுத்து சுருட்டைப் பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார்.

“கச்சாங்காத்துடா மாப்பிள்ளை, அதான் மழை இப்ப”

உட்டுடூம்!

மழை அடித்துப் பெய்தது, மழை நீர் ஓட்டின் வழியாக வந்து நீர்க்கோடாக விழுந்து ஓடியது.  கார்த்தி காலையில் பள்ளிக்குச் சென்றவன், பசி வேறு. மழை எப்போதும் விடும், நனைந்து கொண்டே ஓடலாமா, என பார்த்தான்.

மழை விட்டபாடில்லை. இரண்டொருவர் நனைந்து கொண்டே சென்றனர். வேகமாக இரண்டு சைக்கிள்கள் சென்றன. ஒரு டவுன் பஸ் நின்று சென்றது. மழை சிறிது குறைய ஆரம்பித்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் மழைத் தூறலை சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் சொல்லி வைத்தது போல் மழை நின்று சிறிது வெளிச்சம் கூட வந்தது.

“ஓடிப்போடா, நான் பரங்கிப்பேட்டைக்கு போயிட்டு வந்துடறேன்”

கார்த்தி கோயிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். வானம் வெளுத்து வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததும் கடைத் தெருவில் நின்றவர்கள், “கம்ணாட்டி பய மானம் புரட்டாசி பாஞ்சு தேதியாயிடுச்சு மழை இறங்காம தரைய நனைச்சிட்டு ஓடுதுய்யா. விதவுட்டு ஒரு மாசமாச்சு இந்த வருசமாவது சமயத்தில பேயும்னு பார்த்தா இப்படி காயுத,” என்றனர்.

கார்த்தி மோட்டுத் தெரு வழியாக வீட்டுக்கு போகலாமா, என யோசித்தான். வேண்டாம் மணியங்கால் ஓடையில் தண்ணி கிடக்கும் ரோட்டு வழியாக போவும், என்று நடந்தான்.

பாலம் வரவும் மானம் முழுமையாக வெளுத்து விட்டது. பாலத்தின் கைப்பிடி கட்டையை பிடித்துக் கொண்டு தண்ணியை எட்டிப் பார்த்தான்.

பாலத்தின் அடியிலிருந்து மோட்டுத் தெரு கலியமூர்த்தி கையில் தூண்டிலும் நாக்குப் பூச்சு வைத்திருந்த தகர டப்பியோடும் பாலத்தின் மேல் வருவதற்கு ரோட்டுச் சருவலில் ஏற ஆரம்பித்தார்.

தூண்டிலைப் பார்த்த கார்த்தி மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நின்று விட்டான்.

கலியமூர்த்தி ரோட்டில் மேல் வந்து கார்த்தியை தாண்டிச் சென்று டப்பியை கீழே வைத்துவிட்டு தூண்டில் நைலான் கயிற்றை காற்றில் உதறி தண்ணியில் இரண்டு முறை அடித்ததும் ஏதோ விழுந்தது போல் தண்ணீரில் அலை எழுந்து கரையை தொட்டது. தக்கையாக செருப்பை அறுத்துக் கட்டி இருந்தார்.  அது மஞ்சள் நிறத்தில் நீர் மேல் மிதந்தது.

மீன் ஏதாவது கொத்தும் என கார்த்தி பார்த்தான். ஒன்றும் கொத்தவில்லை. தக்கை காற்றிலடித்துக் கொண்டு அவன் பக்கம் வந்தது.  உலர்ந்து இருந்த வாயிலிருந்து எச்சிலைக் கூட்டித் துப்பினான். எதிர்பாராமல் சரியாக தக்கை மேலே சென்று சொத் என்று விழுந்து விட்டது.

கலியமூர்த்திக்கு கடும் கோவம் வந்து, “நீலாம் என்ன மயிருடா படிக்கற?

உன் பேனா மேல எச்சி துப்புனா எப்படிரா இருக்கும்? அடிவாங்காம ஒடி போயிடு,” என்று சத்தம் போட்டார்.

கார்த்தி ஓடவில்லை. வாட்டமான முகத்துடன் சற்று தள்ளிச் சென்று தண்ணியை எட்டிப் பார்த்தான். பாலத்தின் அடியில் தண்ணிரில் தலையின் நிழலுக்கு நேர் கீழே ஒரு இரண்டு விரல் மொத்த விரால் மீன் நின்றது. தலையசைவின் நிழலில் மீனும் அசைந்தது. அவன் தலையை சீராக முன்னோக்கி நீட்ட நீட்ட மீன் முன்னோக்கி நகர்ந்தது.

அப்படியே தலையை சீராக பின்னோக்கி இழுத்துக்கொண்டே பார்த்தான். மீனும் அதன் வாலைத் தள்ளிக் கொண்டு நிழலின் பின் வந்தது.

வாலில் இருந்த புள்ளியும் கோடும்கூட தெளிவாக தெரிந்து அவனுக்கு நாகத்தை ஞாபகப்படுத்தியதும் உடல் சிலிர்த்துக் கொண்டான். மீன் அப்படியே நிழலசைவுக்கு தகுந்தாற்போல் வாலை ஆட்டி முன்னும் பின்னும் நகர்ந்தது.

கார்த்திக்கு அந்த மீனாட்டம் பிடித்து இருந்தது.

கலியமூர்த்தி பார்த்து விட்டால் வம்பாகிவிடும், மீனைப் பிடித்து விடுவான் என்று அப்படியே கிளம்பி வந்து விட்டான்.

மறுநாள் பள்ளி விட்டு வரும்போது பாலம் வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பாலத்தின் அடியில் பார்த்தான். விரால் மீன் நின்றது. அதனுடன் நேற்று போலவே விளையாடினான். விரால் மீன் குஞ்சு ஏதோ சொல்ல வருவது போல் மேலே வந்து சிறிது வாயைக்கூட திறந்தது. அப்படியே இரண்டு காற்றுக் குமிழும் வந்ததும் தண்ணீரில் அலை வட்டம் உருவாகி கரையைத் தொட்டது.

மீன் தலை குப்புற கீழே வாலை ஆட்டிக் கொண்டு சென்று பிறகு மெல்ல மெல்ல நிழலை நோக்கி  தலையைக் கொண்டு வந்தது. ரொம்ப நேரம் ஆகி பசியெல்லாம் மறந்து, பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு மோட்டுத்தெரு கலியமூர்த்தி ஞாபகம் வந்து விட்டது. எங்கிருந்தாவது பார்த்து விட்டால் பிடித்து விடுவானே, என்று எழுந்தான்.

கலியமூர்த்தியை எந்த விளையாட்டிலும் ஜெயிக்க முடியாது. வச்சாவாகட்டும், பேந்தாவகட்டும், அடிஜானாகட்டும் எந்த கோலிக்குண்டுவாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் தனியாக கைவரும். நைலான் நூல் தூண்டி முள் தக்கையோடு உள்ளங்கையில் கரகர என்று வளையமாக சுத்தி வைத்து பாக்கெட்டில் மடித்து வைத்து இருப்பான். மீனைப் பார்த்து விட்டால் பிடிக்காமல் விடமாட்டான். விளையாட்டு என்றால் எல்லாரிடமும் கடைசி  வரை ஐெயித்துக் கொண்டே போவான். கபடி ஓடிப் பிடித்தல் எதிலும் ஜெயிக்க முடியாது கலியமூர்த்தியை.

“சைக்கிள்காரர. நில்லு நில்லு…  மீனு வேனுமா?” என்ற கலியமூர்த்தியின் குரலைக் கேட்டு விட்டு கார்த்தி பயந்து திரும்பி நின்று கொண்டான்.

ரோட்டின் தென்புறம் தண்ணீரில் தாழ்ந்து இருந்த கருவை மரத்தினடியிலிருந்து எழுந்து தூண்டிலை மண்ணில் சொருகி விட்டு கயிறில் வரிசையாக கோர்த்த சிலேபி மீன்களை கொண்டு வந்தான்.

“மீன்காரர? ஒரு கிலோ வரும்!  எவ்வளவு தருவ?”

“இரண்டு ரூபாய் தரம்ப்பா”

“யோவ் அஞ்சு ரூபாய்  இருந்தா பார, இல்லைன்னா போய்கிட்டே இரு”

“இல்லப்பா அவ்வளவு விக்காது ஒரு ரூபாய் சேர்த்து மூனா வாங்கிக்க”

“சரி, பீடி இருக்கா?”

“இந்தா? இரண்டு இருக்கு, நீ ஒன்னு எடுத்துக்க”

கலியமூர்த்தி மூணு ருபாயும் பீடியும் வாங்கிக் கொண்டு திரும்ப மீன் பிடிக்கச் சென்றதை பார்த்து கொண்டே வீட்டுக்கு நடந்தான்.

தொடர்ந்து அடுத்த அடுத்த தினங்களில் பள்ளி விட்டு வரும்போது கார்த்திக்கும் மீனுக்குமான விளையாட்டு தொடர்ந்தது. மீனுக்கு என்ன தின்ன கொடுக்கலாம் தீனி கொடுத்தால் சீக்கிரம் வளர்ந்து விடுமே? அப்புறம் யாராவது பிடித்து விடுவார்களே?

இப்படி நாள் முழுவதும் ஒவ்வோறு சமயம் மீனைப்பற்றிய கவலை வந்து அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் மீனைப் பார்த்தபிறகுதான் ஒரு ஆசுவாசம், ஒரு திருப்தி வரும் கார்த்திக்கு.

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தபோது மழைக்காலம் தொடங்கி விட்டது. பெருமழை பிடித்துக் கொண்டது. இரண்டு நாளில் புயலடிக்கும் என்று பேப்பரிலும் வானொலியிலும் டிவியிலும் சொல்கிறார்கள். மழை தொடங்கிய பிறகு தண்ணீர் பச்சை ஓணான் போல் நிறம் மாறி செங்காமுட்டி நிறமாக மாறிச் சென்றதும் கார்த்தியின் கண்ணுக்கு மீன் தட்டுப்படவில்லை.

குடையோடு கடைக்கு செல்லும்போது பாலத்தின் நின்று பார்த்தான். வெள்ள நீர் சுழித்துக் கொண்டு, அம்மா அரிசி களையும்போது வரும் நிறம் போல, சின்ன மதுவு வழியாக வெளியேறி நுரைத்துக் கொண்டு ஒடியது. கண்ணுக்கெட்டிய தூரம் மழை நீர் வெள்ளக்காடாக தெரிந்தது. வெள்ளாறு எகுத்து விட்டது, தண்ணீர் உள் வாங்கவில்லை.

இரவு எப்படியும் வெள்ளம் வரும் கூரை வீடுகள் அதோகதிதான்  என்று கடைத்தெருவில் பேசிக் கொண்டனர். சிலர் தண்ணீர் வடிவதைத் தடுக்கும் பழைய ரோட்டை வெட்டி விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும், இல்லை என்றால் கூரை வீட்டு மண் சுவர்கள் எல்லாம் இடிந்து கூரை சாய்ந்து விடும் என்று சொன்னார்கள்

ரோட்டை உடைத்தால் வம்பாகி விடும் என்றும் பயன்படுத்தாத ரோடை உடைக்க என்ன பயம் அட யாராவது உடைச்சு விடுங்க என்று பலவிதமாக பேசி கொண்டு இருந்தனர். சிலர் மண்வெட்டி பாரையோடு ரோட்டு பக்கம் வந்தனர்

சேராக்குத்தாரும், ஆண்டிக்குழியார் மகனும் முதலில் பழைய ரோட்டின் தாரை கொத்திப் பெயர்க்க ஆரம்பித்தார்கள். பழமையான ரோடு, மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அதற்குள் மேலு‌ம் சில இளைஞர்கள் சேர்ந்து வாய்க்காலாக தோண்ட ஆரம்பித்தனர். பச்சை கெட்ட வார்த்தையால் அழகர் மானத்தைத் திட்டினார்- ஒன்னு பேஞ்சு கெடுக்குது இல்லைன்னா காஞ்சு கெடுக்குது என்று

வாய்க்காலின் மையம் கார்த்தி  விரால் மீன்  பார்க்கும் இடத்துக்கு நேர் வந்து விட்டது. பாலத்தின் மையமும் அதுதான். தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்போது மீனை வெள்ளாத்துக்குக் கொண்டு செல்லும், பிறகு அப்படியே கடலுக்குப் போய்விடும். இனி அவ்வளவுதான், விரால் மீனைப் பார்க்க முடியாது.

இந்த சேராக்குத்தாருக்கு மட்டும் எது கேட்டாலும் செய்யக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

அன்று இரவு முழுவதும் கடும் மழை. மறுநாளும் மழை. சாயந்தரம் சீராக ஆரம்பித்த காற்று நேரம் செல்லச் செல்ல அதிகமாகி விட்டது. ஆடு மாடுகள் கத்தும் சத்தம் மனிதர்களின் சத்தம் அதனுடே காற்றின் உய்ய்ய்ய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய் சத்தம் வீட்டை ஒட்டி மரங்கள் முறிந்து விழும் சத்தம் என ஒரே பரிதவிப்பாக இருந்தது.

யாருக்கும் யாரும் உதவமுடியாத இருள். அப்போது இ டியும் மின்னலும் சேர்ந்து கொண்டதால் வெளியே பார்க்கக்கூட முடியவில்லை. கார்த்தியின் ஓட்டு வீட்டின் ஒடுகள் சில இடங்களில் பெயர்ந்தது காற்றில், மழை நீர் வீட்டினுள் விழ ஆரம்பித்ததும்  இடி படபட படீர் என்றும் தீடிர் தீடிர் என்று இடிச் சத்தம் கேட்கும்போது சுவர்கள் அதிர்ந்தன.

“கூரை வீடுகளின் கதி ஆடுமாடுகள் கதி என்னவாகும் கடவுளே, எப்போது காத்து விடும்? மழை பெய்தால் கூட பரவாயில்லையே, இந்த பேய்க்காத்து நின்று விட வேண்டும்,” என அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

ஊய் ஊய் என்ற அந்த பேய்காத்து விட்டு விட வேண்டும் பத்துவிரலு வீட்டு பனைமரத்தில் இருக்கும் காக்கா கூடு தப்பிக்க வேண்டும் என்று கார்த்தியும் வேண்டி கொண்டான்.

மறுநாள் பார்த் போது அவன் நினைத்ததைவிட புயல்காத்து மோசம் செய்து இருந்தது. தெருவிலிருந்த கூரை வீடுகள் எல்லாம் பாதிக்கு மேல் விழுந்து இருந்தன. வீட்டை ஒட்டி இருந்த முருங்கை மரங்கள், உறுதியான பூவரசு, வேப்ப மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. வீட்டின் மேல் கிடந்ததை எல்லாம் வெட்ட ஆரம்பித்து இருந்தனர்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த பத்துவிரலு வீட்டு பனைமரத்தின் காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து வழியை அடைத்து கொண்டு கிடந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் இருந்த குச்சிகள் சரிந்து தொங்கின.

பச்சைமுட்டையின் ஓடு பனையை ஒட்டி கிடந்தது. காகங்களை காணவில்லை. கார்த்தி சோர்ந்து  போய் திரும்பினான்.

மழை ஒரே சீராக பெய்து கொண்டு இருந்தது. கார்த்தி குடையோடு பாலத்திற்கு சென்று பார்த்தான். சேராகுத்தார் வெட்டிய வழி ஏற்படுத்திய பழைய தார் ரோடே இல்லை. எல்லாவற்றையும் மழை வெள்ளம் கொண்டு சென்று கொண்டு இருந்தது. சேராகுத்தார் வெட்டவில்லை என்றால் தண்ணீர் வீடுகளில் புகுந்து இருக்கும் என பேசிக்கொண்டனர்.

மழை வெள்ளம் பார்க்க கூட்டம் பாலத்தில் நின்று இருந்தது. எட்டிப் பார்க்கச் சென்றவனை, ரெண்டும் கெட்டான் பயல போடா எட்ட, என்று சத்தம் போட்டார்கள். ஆலப்பாக்கம், புதுச் சத்திரம் எல்லாம் தண்ணீரில் மிதப்பதாகவும் பெருமாள் ஏரி உடைந்து போக்குவரத்து நின்று விட்டதாகவும் அந்த தண்ணீரும் இந்த வழியாகதான் வடியும் என்று பேசிக்கொண்டனர். பாலத்தின் அடியில் குனிந்து பார்க்க வந்த கார்த்தி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரேஷன் கடையிலிருந்து அரிசி விநியோகம் வீட்டுக்கு இரண்டு கிலோ என்று இளைஞர்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். தலையாரி மணியாரோடு விழுந்த வீடுகளை பார்க்கனும் என்றும் பேசி கொண்டனர்.

அப்போது கச்சா வலையை எடுத்துக் கொண்டு பத்துவிரலு அங்காளம்மன் கோயில் பக்கம் சென்றார். கார்த்தி அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு சென்றான்.

இந்த மழை ஆரம்பித்ததிலிருந்து  கோயிலில்தான் அவனுக்கு பொழுது போய்க்கொண்டு இருந்தது. கொத்து வேலை,ஆசாரி வேலை, வயல் வேலைகளுக்குச் செல்ல முடியாத பெரியவர்கள் எல்லாம் கோயிலில் அமர்ந்து காசு வைத்து தாயம் விளையாடிக் கொண்டு இருப்பர்.

ஒரே சத்தமாக இருக்கும், சிறுவர்கள் எல்லாம் கோலி விளையாடுவார்கள். கார்த்தி நேரத்துக்கு தகுந்தவாறு இரண்டு விளையாட்டிலும் இருப்பான்.

பத்துவிரலு வாகாக கோயில் தரையில் உட்கார்ந்து வலையில் அதிகமாக கிழிந்து இருந்த துவாரங்களைத் தைக்கும் நோக்கோடு செப்பு ஊசியில் பருத்தி நூலை கோர்க்க ஆரம்பித்தார்.

“மாமா இந்த வலையால விராலு மீனு புடிக்கலாமா?”

“அட ஒங்க?  இ   ல்ல மாப்பிள்ள,இதுல புடிக்க முடியாதுடா, இது சும்மா வாய்க்கால் ஓரம் ஏந்துன்னா கெண்டகுஞ்சுவோ மாட்டும் மாப்பிள்ளை… கொழம்புக்கு ஆவும்ல”

“ம்ம்? மாமா அப்ப விராலு எப்படி புடிக்கறது?”

“அது சின்ன மீனு போட்டு பெரிய மீனு புடிக்கறதுடா மாப்பிள்ளை”

“சொல்லேன்?”

அது வந்து நல்லா வெய்யில் அடிக்கும்போது விராலு நிக்குதான்னு பார்க்கனும். தண்ணீர்ல விராலு இருந்தா அது தண்ணிய அடிக்கறது தெரியும் எங்க நிக்குதுன்னு பார்த்து தூண்டில சின்ன பொடி உயிர் மீன முள்ளுல மாட்டி தண்ணியில போட்டா விராலு மாட்டும். நீ ஏண்டா இதெல்லாம் கேக்கர?”

“சரி மாமா உனக்கு பத்து விரலுன்னு ஏன் பேர் வந்துச்சி? ”

“அட ஒக்காலவோழி,” திட்ட ஆரம்பித்தார்

“ஏய் மாப்பிள்ளை இங்கே வாடா நான் சொல்றேன்,” என்று பக்கிரி கூப்பிட்டார்.

பக்கிரி அவனிடம் தாயம் விளையாடச் சொல்லி எப்போதும் அவன் மேல் பந்தயம் வைப்பார்.

“யோவ் மாப்பிள்ளை ஐெயிக்கரான்யா… யாராவது பந்தயம் கட்டுரீங்களா? ஒரு ரூபாய், ஐம்பது காசு, ம்ம்…” என்பார்

“மாப்பிள்ளை போடரா தாயத்த என்பார்”

அவன் கையை குளுக்கி ஒரு இழுப்பு இழுத்து விடுவான். ஆறு தீத்திய புளியங்கொட்டையில் ஒன்று மட்டும் மல்லாந்து வெள்ளையாகவும் மற்ற ஐந்து புளியங்கொட்டகைகள் கவுந்து கருப்பாக கிடக்கும்.

“பார்த்தியா, மாப்பிள்ளை தாயத்த போட்டுட்டான் பார்”

காசு வைத்தவர்கள் அவனைத் திட்டுவார்கள்.

பக்கிரி சேதி தெரிந்த கார்த்தி நிக்காமல் ஓடினான். அவருக்கு பத்து விரலு என்று பெயர் எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியும்.

பத்துவிரலு பேரு கலியபெருமாள், மனைவி பேரு லட்சுமி. “இந்த உலகத்திலேயே அந்த நாராயணனுக்குப் பிறகு எனக்கு மட்டும் தான் பெயர் பொருத்தம் அமைஞ்ச மனைவி,” நிறைபோதையில், “லெட்சுமி, லெட்சுமி,” என்பார்.

“ஊத்திட்டி வந்துட்டியா, சும்மா கிட”, என்பார்கள் அவர் மனைவி. பிறகு சத்தம் ஒன்றும் வராது.

பத்துவிரலு சும்மா இருக்க மாட்டார். கூலி வேலைக்குதான் போவார். வந்தும் சும்மா இல்லாமல் விறகு வெட்டவோ, மீன் பிடிக்க வலையை தோளில் மாட்டிக்கொண்டோ, விறகு பொளக்கவோ யாராவது வேலை என்றால் முன்பே வந்து நிப்பார். அப்ப காரியமாக ஏதேனும் சொல்லிக் கொடுத்தும் விடுவார். அது பத்திக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு நிற்பதால் அவருக்கு பத்துவிரலும் வேலை செய்யும் பத்துவிரலு என்று அதுவே பரிகாச பெயராகி விட்டது.

வெளியில் வேலை இல்லாதபோது, அவர் மனைவியே, “தம்பி பத்துவிரல அந்தப் பக்கம் பாத்தியா?” என்றுதான் கேட்பார்கள். வரிசையாக ஞாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

இனி மழை விட்டு வெள்ளம் வடிந்துதான் விராலு மீன பார்க்க முடியும். அதுவும் வெள்ளத்தில் பெரிய பெரிய மரங்களே அடித்துச் செல்லும்போது விரால் மீன் மட்டும் எப்படி இருக்கும், அதுவும் போயிவிடும். சிரிப்பெல்லாம் கவலையாக இருந்தது அவனுக்கு

தொடர்ந்து வந்த நாட்களில் மழை விட்டு வெள்ள நீர் வடிய ஆரம்பித்து விட்டது. பாலத்தின் கட்டையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்றும் உண்டாகி இருந்தது.

கார்த்தி பள்ளி விட்டு வரும்போது மட்டும் அல்லாமல் பாலத்தின் மேல் செல்லும்போது எல்லாம் அவனுக்கு விரால் மீன் சிந்தனை வந்து எட்டிப் பார்க்காமல் செல்லவே மாட்டான்.

இப்படி நாட்கள் மாதங்களாக கடந்தபோது மணியங்கால் ஓடை தண்ணீர் வற்றி அங்கு அங்கே திட்டு திட்டாக குளமாக நிற்க ஆரம்பித்து விட்டது.

கலியமூர்த்திகூட காணவில்லை. வேலைக்கு வெளியூர் சென்று இருக்கவேண்டும். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது சிவன் படவர் தெரு பெரியவர் தன் விசிறு வலையை கையை ஒரு சுழற்று சுற்றி வீசினார். வலை வட்டமாக விழுந்து அலையெழுப்பியது. மீன்கள் வலையில் மாட்டி படபடவென தண்ணீரை அடித்தன.

அருகிலிருந்த நீர்த் திட்டையிலிருந்த இரண்டு கொக்குகளும் எம்பி பறந்து வட்டமிட்டு இறக்கையை அடிக்காமல் தண்ணீரில் இறங்கி நின்றன. பெரியவர் வலையை சுருக்கி இழுத்து கரைக்கு கொண்டு வந்து வலையை உதறி மீன்களை பொறுக்கினார். சின்னச் சின்ன கென்டை மீன்கள், சிலேபி மீன்கள் இருந்தது. அவர் பொறுக்காத பொடி மீன்களை  காக்காய்கள் சத்தமிட்டு கொத்திக் கொண்டு சென்றன.

மறுநாள் கார்த்தி பள்ளி விட்டு வரும்போது பாலத்தின் மேல் வந்து நின்று கீழே குனிந்து தண்ணிரை நோக்கிக் கொண்டு இருந்தான், நீர் சிறிது பாசி பிடித்து கலங்கலாக ஒரு பாசி நிறமாக தெரிந்தது. மீன் ஒன்றும் காணாமல் தலையை திருப்பும்போது ஒரு அசைவை கண்டான்.

திரும்பவும் நிதானமாக தண்ணீரைப் பார்த்தான். அப்போது பாலத்தின் அடிக்கட்டையில் இருந்த பத்திருப்பில் விரால் படுத்து இருந்தது தெரிந்தது.

கார்த்திக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சியாகவும் அந்த மீனாக இருக்குமா இல்லை இது வேறா ஏன் மீனாட்டத்திற்க்கு வரவில்லை என்று சந்தேகமாகவும்.

திரும்பத் திரும்ப பழைய மாதிரி தலையை நீட்டிப் பார்ப்பதும் உள்ளிழுப்பதுமாக செய்தான். நிழல்கூட முன்பு போல் விழுவது மாதிரி தான் தெரிந்தது அவனுக்கு. ஆனால் விரால் மீன் முன்பு போல் மேலே வரவில்லை. மீன்கூட சற்று பெரியதாக தெரிந்தது. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்கு பார்க்கலாம் என வந்து விட்டான்.

அப்போது ஆண்டுத் தேர்வு வேறு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தினமும் வரும்போது பார்க்கத் தவறவில்லை. மீன் சட்டென்று பார்த்தால் தெரியாது. உத்துப் பார்த்தால்தான் தெரியும். சிறிதாக எச்சி துப்புவது, சின்ன குப்பைகளை போடுவது என்று அவனது முயற்சி இருக்கும். மீனிடமிருந்து எந்த அசைவும் இருக்காது. ஏமாற்றமாக இருந்தாலும் தினமும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

அன்று கடைசி தேர்வு எழுதிவிட்டு வரும்போது முயற்சித்தான். மீன் ஒன்றும் சட்டை செய்யவில்லை.

அம்மா வேலை சொல்லும்போது வரும் எரிச்சல் அப்போது அவனுக்கு வந்து கல்லால் அடிக்கலாமா என சுற்றுமுற்றும் பார்த்தான். கல் ஒன்றும் இல்லை.

தூரத்தில் பெரியவர் வலையை வீசி சுருட்டி வாரிக்கொண்டு இருந்தார். சின்ன மதுவில் மோட்டு தெரு முருகன் மீன் பிடித்து கொண்டு இருந்தான். கார்த்தியை விட முருகன் நாலு வயது சின்னவன்.

சரசர என பாலத்தின் சரிவில் இறங்கினான். நரவலாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கி காலைப் பார்த்து வைத்துக் கொண்டு மீன் பிடிப்பதை பார்க்க கார்த்தி முருகனிடம் வந்தான். மீன் ஒன்றும் கொத்தவில்லை. கார்த்திக்கு அப்போது திடீரென அந்த யோசனை வந்தது.

“முருகா உனக்கு விரால் மீனு வேனுமா? “

“எங்கண்ண இருக்கு?”

“வா புடிக்கலாம். முருகா நீ போயி நாக்குபூச்சிய கொட்டிட்டு தா பாரு காலவாயிக்கு போற வழியில பெரியவர் வலையில விழற பொடி சிலேபி குஞ்ச தண்ணிபுடிச்சு டப்பால போட்டு எடுத்துட்டு ஓடியா சீக்கிரம்“

“தூண்டிலை நீ எடுத்துட்டு வர்ரியாண்ண?”

“இல்லடா முருகா, நீ எடுத்துட்டு வா. வீட்டுல யாராவது பார்த்துட்டா பிரச்சினையாயிடும்”

“சரிண்ண”

முருகன் தகர டப்பியில் இருந்த நாக்குப்பூச்சியை கொட்டிவிட்டு சிறிது தண்ணீரை மொண்டுக் கொண்டு பெரியவரிடம் சென்று அவர் வலையை கரைக்கு கொண்டு வரும்வரை காத்திருந்து மீனைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பாலத்தின் மேல் வந்தான்.

கார்த்தி குனிந்து விரால் மீன் படுத்திருப்பதைக் காட்டி தூண்டிலில் மீன் குஞ்சை மாட்டி கொடுக்கச் சொன்னான்.

முருகன் தூண்டில் முள்ளில் சின்ன சிலேபி குஞ்சை மாட்டி அதன் தலையில் எச்சிலைத் துப்பி, “போடுண,” என்றான்.

கார்த்தி தூண்டிலைத் தண்ணீரில் வீசியதும் மீன் குஞ்சு தூண்டிலில் தண்ணீர் மேலே நீந்தி கொண்டு விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு வராமல் இழுத்துக் கொண்டு சென்றது. தூண்டிலில் இருந்த தக்கை காற்று வாட்டத்திற்கு மீன் குஞ்சை இழுத்து சென்றது.

கார்த்தி மீன் குஞ்சை விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு நேர் சிரமப்பட்டு கொண்டு வரவும் படுத்து இருந்த விரால் மீன் மேலே வாலை ஆட்டி கொண்டு வரும்போதே கார்த்திக்கு புரிந்து விட்டது. அந்த மீன்தான் என்று!

விரால் மீன் குஞ்சை லபக்கென்று கவ்விக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது.

கார்த்தி என்ன செய்வது என திகைத்து நிற்க முருகன், “இங்கே குடுண்ண, உனக்கு புடிக்க தெரியல,” என்று தூண்டிலை வாங்கி விராலை ஒரே இழுப்பில் மேலே தூக்கி, “முள்ள முழுங்கிடுச்சு! வூட்டுல போயி கழட்டிக்கறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

விரால் மீன் தூண்டியின் முள்ளில் மாட்டி துடித்து கொண்டு இருந்தது.

மாண்புடையாள்

தி. வேல்முருகன்

தீபாவளிக்கு மறுநாள் மதியம் சாப்பிட்டு வீட்டிலேருந்து வேலைக்கு போயிட்டு இருக்கேன். பெரிய மதுவு திரும்பும்போது தம்பின்னு ஒரு குரலு கேட்குது.

தம்பின்னு திரும்பவும் குரலு உடைஞ்சு அதுல ஒரு பதட்டம். நான் வண்டிய திருப்பி அந்த பெரிய மதுவு பஸ் ஸ்டாண்ட்கிட்ட வந்து நிறுத்தினேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவிதான் கூப்புடுராங்க.

“என்னம்மா? “

“இங்க வாயேன் தம்பி”

அங்கதான் சைக்கிள் கடைக்காரர் ஒக்காந்து இருந்தாரு. அப்பாக்கு தெரிஞ்சவரு. உடம்பு கொஞ்சம் பலவீனமா நடுங்குது. கையெல்லாம் சருகு போல தோல் சுருக்கம் தெரியுது.

“என்னம்மா? என்னாச்சு? “

“பஸ்சே வரல தம்பி ஒரு மணி நேரமா! கொஞ்சம் கரிக்குப்பம் வரைக்கும் போகனும், தெரிஞ்சவங்க வீட்டுக்கு. நீ கொஞ்சம் இவங்கள கொண்டு உட்டுடேன். நான் பின்னாடியே வந்துடறேன்.”

“அதுக்கென்னமா… நீங்க மெல்ல வந்து உட்காருங்கப்பா!”

அவரால நடக்க முடியல. ஒரு தள்ளாட்டம் இருந்தது. வண்டியில ஏறும்போது.

“என்னம்மா தனியா அனுப்புறிங்களே, நீங்களும் வாங்களேன்?”

“ஏய், நீயும் ஏறிக்க. இடம் இருக்கு பாரு…”

சைக்கிள் கடைக்காரர்தான் சொன்னாரு. அந்த குரலு, அந்த சத்தம், கொஞ்சம் கூட பலவீனம் இல்லாம உறுதியா தெரிஞ்சுது.

பஜாஜ் 125 விண்ட் மாடல். நல்ல நீளமான சீட்டு உள்ளது. நல்லா உட்கார்ந்து வண்டிய பிடிச்சுக்க சொல்லிவிட்டு எடுத்தேன். முதல்ல அந்த அம்மா கொஞ்சம் கூச்சமும் சங்கடமும் பட்டாங்க. பிறகு ஏறிகிட்டாங்க. கையில இருந்த கட்டப்பைய வாங்கி முன்னாடி வச்சிக்கிட்டேன். வண்டி ஓட ஆரம்பித்தது.

இவர் பேரு ராயரு சைக்கிள் கடை தான் வச்சிருந்தாரு. என்னோட புது சைக்கிள அப்பா ஒவராயிலுங்காக இவர் கிட்ட விட்டு இருந்தாங்க. அப்ப இவரு கடையில நிறைய சைக்கிள் இருக்கும் சின்ன சைக்கிள்லாம் இருக்கும். எப்பவும் கூட்டமா இருக்கும். பரங்கிப்பேட்டை ரேவுதுரைக்கு மீனு வாங்கப் போற சைக்கிள் எல்லாம் கூடையோட நிக்கும். எப்பவும் ஆளும் பேச்சும் பஞ்சர் ஒட்ட காத்தடிக்கன்னு இருக்கும்.

நான் அன்னைக்கு சைக்கிள் வாங்கப்போனேன். அப்ப ரோட்டோரம் பெரிய வேப்பமரம். நிழல்ல பூவும் பழமுமா அது ஒரு தனி வாடை. நல்லா காத்தடிச்சுகிட்டு இருந்திச்சு. ஒரு ஆயா அந்த பழத்த பொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. நான் சைக்கிள் கொடுங்கன்னு கேட்டேன்.

“ஒக்கார்றா என் கூட்டாளி. மவனே, கொஞ்சம் நேரமாவும் நீ போயி விளையாடுடா,”ன்னாரு அப்ப இத எல்லாம் பார்த்தன்.

இப்ப தெரியற இந்த சைக்கிள் கடைக்காரர் வாட்டம் சாட்டமா நல்ல நிறம் கையில பச்சை நரம்பு தெரியும். பாவம் இப்ப இப்படி தளந்து நிக்கிறாரு.

வாய்க்கால் பிரிந்ததும் ஆனைக்குட்டி மதுவு வந்தது. இருபுறமும் மாந்தோப்பு. தாழங்காடு தாண்டியதும் குட்டியாண்டவர் கோயில் சாலையில் இருபுறமும் புளியமரமும் பனைமரமும் வரிசையாக நின்றது. தைக்கால் வந்ததும் தர்க்காவின் விளக்கு கம்பத்தை பார்த்துவிட்டு நான் சைக்கிள் கடைக்காரர் மனைவியைக் கேட்டேன்.

“அம்மா, அங்க யாரு வீட்டுக்கு போறிங்க?”

“அதுவா தம்பி அங்க சொந்தக்காரங்க இருக்காங்க அங்க போறோம்”

தோப்பிருப்ப வண்டி தாண்டுச்சு. நான் ஒன்னும் பேசல.

“அம்மா கரிக்குப்பம் வந்துட்டுது”

“இன்னும் கொஞ்சம் தூரம் தான் போயேன்”

சிறிது தூரம் போனபின் ரோடு இடப்புறம் பிரியும் இடத்தில், “இங்க தான் நெறுத்து நெறுத்து” என்றார்கள்.

நான் வண்டிய மெதுவா நிறுத்தினேன்.

“மெதுவா மெதுவா,”ன்னாரு சைக்கிள் கடைக்காரர்.

மனைவி இறங்கும்போது குரல் கணீர்ன்னு இருக்கு. இறங்கியதும் பைய வாங்கி கிட்டாங்க. சைக்கிள் கடைக்காரர் இறங்கி கால் தாங்கிகிட்டே போயி ரோட்டோரம் இருந்த எல்லக்கல் மேல கைய ஊணி உக்காந்ததுட்டாரு. நான் அவர் மனைவிய கேட்டேன்.

“ஏம்மா ரொம்ப முடியல போல இருக்கே, பையன் வீட்டுக்கு போகக்கூடாதா?”

அவ்வளவுதான் அந்த அம்மா கண்ணுலேருந்து தண்ணி கொட்டுது, உதடு பச்சைப்புள்ள மாதிரி துடிக்குது.

“அழுவாதம்மா, யாரையாவது கூப்புடனுமா? என்ன கஷ்டம் சொல்லும்மா?”

முந்தானையால முகத்த தோடைச்சிக்கிட்டு, “எல்லாம் தப்பாயிடுச்சுப்பா,”ன்னு சொல்றாங்க.

“என்னம்மா சொல்றிங்க?”

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடியிருக்கர வீட்ட உட்டுடக்கூடாதுப்பா. புள்ளைவோ இருக்கு பொண்ணு இருக்குவோ ஆனால் இருக்கதான் இடமில்லே”

“ஏம்மா?”

“பெரிய பொண்ணு கல்யாணத்துக்கு வீட சொச்ச பணத்துக்காக போக்கியம் போட்டோம். அவ்வளவுதான், அத மூக்க முடியல. இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு அதையே வித்து முடிச்சோம்..

“மளிகை கடை வச்சாரு. பொட்டிக் கடை கூட வச்சு பார்த்தாச்சு, கொடுத்தத வாங்கத் தெரியாது தம்பி, திரும்ப சைக்கிள் கடைக்கே வந்தாச்சு

“பசங்க அவன் அவன் சம்பாரிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானுங்க. இந்த சரியா படிக்காத புள்ளைவோ என்ன பண்ணும்? அங்க அங்க கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கஷ்டப்படுதுவோ, நாங்க எங்க போறது?

“முதல்லாம் எல்லாம் சைக்கிள் வேலைக்கு வரும், ஒன்னும் கஷ்டம் தெரியல. இப்பல்லாம் எங்க, அதுவும் கிடையாது, ஞாயிற்றுகிழமை ஒன்னு இரண்டு வரும். இவங்களுக்கு உடம்பு தெம்பு கொறைஞ்சதும் அதுவும் போச்சு“

சைக்கிள் கடைக்காரர் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு இருந்தாரு.

“காலையில கிளம்பினோம், யார் கண்ணிலும் படாம வந்துடனுமுன்னு.

“எல்லாம் விபரமா ஒரு நாளைக்கு சொல்றன். உன்னதான் தெரியும, நல்ல புள்ள இல்ல நீ வேலைக்கு போ. நேரம் ஆவுது பாரு. இங்க பக்கத்துல தான் நான் போவனும் நீ போ“

நான் வண்டி எடுத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்து கண்ணாடி வழியாக பார்த்தேன்

சைக்கிள் கடைக்காரரை கைத்தாங்கலா முதல்ல நிக்க வச்சாங்க. அவரு கையை உதறி முன்னாடி சாயப்பார்த்தாரு.

நான் வண்டியைக் கீழப்போட்டுட பார்த்தேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவி சிரமப்பட்டு நிமித்தி பிடிக்கிறாங்க, அவரு நெஞ்சு உயரம்தான் இருக்காங்க. எனக்கு புரியுது. இப்ப அழுவுறாங்க. அவுங்க உதடு துடிக்குது. செட்டியார் குனிஞ்சு அவங்கள பார்க்குறாரு. சைக்கிள் கடைக்காரரை ஆதரவா அவரு மனைவி புடிச்சு இருக்காங்க. நான் அப்படியே திரும்பி ரோட்ட பார்த்து  இருக்கேன். ஒரு ஐம்பதடி தூரத்தில ஒரு கட்டடம்
இருந்துச்சி. நான் அந்த கட்டத்த முன்பே பார்த்து இருக்கேன். ஆனால் அதுல இருந்த போர்ட அன்னைக்குதான் பார்த்தேன். அதுல அரசினர் ஆதரவற்றோர் முதியோர் இல்லமுன்னு இருந்துச்சு.

நான் வேலைக்குப் போயிட்டேன். மனசுல அவங்க ரெண்டு பேரோட நினைப்பு மட்டும் இருந்துச்சு. எப்படி இருந்தவங்க இப்படி ஒரு சூழ்நிலை வந்து போச்சே, என்னா ஆவாங்கன்னு தெரியலையே, அவங்கள பார்க்கனும்னு நினைச்ச நான் தொடர்ந்து வேலையால மறந்துட்டேன்.

ஒரு வாரம் போயிருக்கும். மாலை வேல முடிஞ்சு திரும்பும்போது 6:30 மணி இருக்கும் வெளிச்சம் இருந்தது. செட்டியாரம்மா கரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்குறாங்க வண்டிய நிறுத்தி, “வாங்கம்மா நான் கொண்டு விடறேன்“ன்னு சொன்னேன்.

“இல்லப்பா. பையன் பார்த்தா ஏசுவான், நீ போ. நான் பஸ்ல வந்துடறேன்“

“சரிம்மா?”

வண்டி எடுக்கப்போறேன். “தம்பி, தம்பி. இருப்பா… நேரம் வேற ஆவுது. பெரிய மதுவுல உட்டுடு”

“சரிம்மா ஏறிக்குங்க. கம்பி புடிச்சுக்குங்க”

வண்டி போயிகிட்டு இருக்கு. அவங்களாவே சொல்ராங்க,

“ஒன்னும் சரியில்ல தம்பி. நான் பொறந்த ஊரு குறிஞ்சிப்பாடி. என்ன இந்த குடும்பத்துல இவருக்கு கட்டி குடுத்தாங்க. நான் வந்தப்பிறகுதான் இவரு தம்பிவோளுக்கு கல்யாணம் ஆச்சு. அப்புறம் சொத்த பிரிச்சு கொடுத்தாங்க , பங்கா ஊடும் கொஞ்சம் நிலமும் வந்துச்சி. சரியா பார்க்க தெரியல. சாமர்த்தியம் இல்ல. ஒரு சூழ்நிலையில வீட்ட போக்கியம் போடப் போவ, அத மூக்கவே முடியல என்தம்பிவோ மளிகை கடை போட்டு கொடுத்தான். அதையும் கட்டுசிட்டா இல்லாமல் கடன கொடுத்துட்டு வாங்க தெரியல. கடன் வாங்கனவன் அடிக்க வரான்பா . நாங்க வாங்கன கடத்துக்கெல்லாம் போயிடுச்சு. மீளவே முடியல. எல்லாம் போச்சு.

“கடைசியாக அவ ராஜம் ஊட்டுலதான் ஒரு வருசமா இருந்தோம். அவ ரொம்ப நாளா காலி பண்ணுங்கன்னு சொன்னா. இந்த மாசம் இந்த மாசம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டு இருந்தோம். இந்த மாசம் வர்ற முதியோர் பணம் வரல. நானும் எங்கெங்கோ ஓடிப் பார்த்தேன். பெரட்ட முடியல. தீவாளிக்கு மொத நாளு பொட்டிய தூக்கி வெளில வச்சுட்டு கதவ சாத்திட்டா. மழை புடிச்சுக்கிச்சு.

“பொழுது போனப்பிறகு பையன் வூட்டுக்கு போனேன். தீபாவளி. மவன் வூட்டுல இருந்துட்டு இங்க வந்தாச்சு. அம்மா பையன் வீட்டுல இருக்க முடியாதா? என்னோட பெரிசா கஷ்டப்படறான்பா, கிடைக்கற வேலைய செய்யறான், நாங்க ஒன்னும் செய்யல அவனுக்கு. சுனாமி வீட்டுல வாடகைக்கு இருக்காம்பா. இவரு முடியாதவர இரண்டுநாளு வச்சிக்க முடியல. தண்ணி வசதி கிடையாது. மருமக ஏதாவது சொல்றதுக்கு முன்னே நம்மளே போயிடும்முன்னு வந்துட்டேன்.”

“எங்க வந்திங்கம்மா?”

“ஆமா இனி மறைச்சிதான் என்ன ஆவப் போவுது? அதாம்பா கரிக்குப்பத்துல அனாதை இல்லம் இருக்கு இல்ல, அங்கதான் கொணாந்து தங்க வச்சேன். முதல்ல சேர்த்துக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. அப்புறம்தான் நான் படற கஷ்டத்தை பார்த்துட்டுஒத்துகிட்டாங்க.

“மவன் வீட்டுல இரண்டு நாள் தங்கியிருந்து பார்த்தேன், மருமகள் அனுசரனை இல்லை, பிறகு அங்க இங்கன்னு விசாரிச்சப்ப இங்கே வயசான காலத்துல தங்கற இடம் இருக்குன்னு தெரிஞ்சு கொண்டு வந்து சேர்ந்தேன். அவருக்கு முடியாம போனப்பிறகு கூடயேதான் இருக்கேன். பகல்ல அப்படியே யாருக்கும் தெரியாம வந்து கூடயே பொழுதுக்கும் தேவையானத செஞ்சு கொடுப்பேன். அங்க இருக்குறவங்களுக்கும் வேத்தும்மையில்லாம செய்வேன். இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. ரா ஒரு பொழுது எல்லாரும் பார்த்துக்கிறாங்க. பகல்ல நான் வந்துடப் போறேன். என்னமோ போப்பா, நான் இருக்கறவரைக்கும் யாரும் ஒரு சொல்லோ கஷ்டப்படவோ அவர உடமாட்டேன். ஆனால் அவரு கஷ்டப்படாம நல்லவிதமா போயிட்டாபோதும் அல்லும் பகலும் அதே நினைப்பு ஓடிக்கிட்டு கிடக்கு. பகீர்ன்னு ஒரு பதட்டம் எந்த செய்திய கேட்டாலும் வந்து நெஞ்சடைக்குது. இன்னும் எவ்வளவு நாளைக்கோ?”

“சரிம்மா கவலைப்பட்டு நீங்களும் உடம்பு கெடுத்துக்காதிங்க? இப்ப எங்க போறிங்க?”

“மவன் வீட்டுக்குத்தான். மருமக முழுகாம நிற மாசமா இருக்கா. கைப்புள்ளய வச்சிக்கிட்டு கஷ்டப்படறா.அப்புறம் யார் பார்ப்பா? நான் தான் பார்க்கனும்”

பெரிய மதுவு வந்து விட்டது.

சூடிக் கொடுத்த பாவை- தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எம்பாவாய்…”

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

ஒருமித்த பலரின் குரல்கள் சேர்ந்து ஒலித்து நின்றது தொடர்ந்து தீபாராதனை மணிச்சத்தம். பிறகு சட்டென்று நிசப்தம். பெருமாள் கோயில் காலை மார்கழி பஐனை முடிந்து தீபாராதனையும் முடிந்து விட்டது மனதில் வெறுமை. பிள்ளைகள் பள்ளிக்குப் கிளம்பிச் சென்று விட்டார்கள்  காலை நாலரை மணிக்கு எழுந்து தெருக்கூட்டி கோலம் போட்டு காலைக்கு இட்டிலியும் சட்டினியும் மதியத்திற்கு சாப்பாடும் செய்து அனுப்பியாயிற்று ‘நல்ல சோத்துக்கு ஆளாய்ப் பறக்கும் இந்த மனுசன் வீட்டுக்கு வந்து போயி மூணு மாசமாவது. நம்ம நினைப்புதான் கிடந்து அல்லாடுது, எங்க சாப்டூதோ எங்க நிக்குதோ’ என்று தன் கணவன் நினைப்பு வந்து அவள் மனம் அல்லாடியது.

“எம்மா? எம்மோவ்…” என்று சத்தம் வந்த திசையை நோக்கி அடுக்களையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

இடுப்பில் ஒரு குழந்தையோடு தலையில் சிறு கூடை வைத்துக்கொண்டு அந்தக் கிழவி காலை இளம் வெயிலில் ஓவியம் போல் நிற்பதை திறந்திருந்த ஒற்றை நிலைக்கதவின் வழியாகப் பார்க்க முடிந்தது. அவள் இடுப்பில் இருந்த குழந்தை சிணுங்கி, “ஆயா… ஆயா…” என்றது.

“கூட, மொரம் இருந்தா குடும்மா. கட்டி மொழுவி தரேன்”

“இல்லைம்மா”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட, குடியான வூட்டுல கூடை மொரம் இல்லைன்னு!”

“இல்லம்மா இப்ப கூட, மொரம் எங்க வருது? அதுக்குதான் இப்ப வேலையும் இல்லையே”

கைக்குழந்தை மேலும் சிணுங்கி அழுது, “ஆயா… ஆயா…” என்று கிழக்கு நோக்கி கை காட்டியது.

“ஏம்மா அழுவூது?”

“இட்டிலி கேக்கறா. கடையில தீர்ந்துடுச்சு. ரெண்டு வயசாகப் போவுது பேச்சு வரல அதான் கையை ஆட்டிக்கிட்டு இருக்கா”

“இரு… நான் தரேன்”

இரண்டு இட்டிலியும் சட்டினியும் வைத்துத் தந்ததை குழந்தை ஆவலுடன் தின்றது.

“எந்த ஊரு?”

“தாழம்பேட்டைம்மா”

“அங்கே இருந்தா வர?”

“இல்லை தாயி, புதுப்பேட்டை தாண்டி பெரிய மதுவு இல்லை அங்கதான் பொண்ண கட்டிக் குடுத்துருக்கேன், பேரப் பிள்ளைய பாக்க வந்தேன், எல்லாம் வேலைக்கு போயிடுச்சுங்க நான் சரி பாக்கத் தெரிஞ்ச வேலையை பார்ப்போம்னு வந்தா காலையிலேருந்து பச்சத் தண்ணி பள்ளுல படாம சுத்துறேன் ஒரு மானுடம் கூப்டலம்மா”

மேலும் மூன்று இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து, “சாப்பிட்டுட்டு பேசு,” என்றதும் மவுனம்.

“சரி, நீ சாப்பிட்டுட்டு கூப்பிடு ஆயா, நான் கைவேலையை முடிச்சுட்டு வரேன்”

அவதி அவதி என்று அள்ளிப் போட்டு கொண்டபின் போய் பார்க்கும்போது சாப்பிட்ட இரண்டு தட்டும் கழுவி இருந்தது. கூடையில் இருந்த சின்ன கொட்டுக்கூடையை எடுத்து, “எம்மா இதை கொண்டு உள்ள வை,” என்று கொடுத்தாள்.

“இது ஏதாயா?”

“கத்தி புடிச்ச கை சும்மா இருக்குமாம்மா நான்தான் செஞ்சேன். இந்தக் கையால எவ்வளவு கூட மொரம் பின்னியிருப்பேன் தெரியுமா?”

“அப்பிடியா ஆயா?”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட?  இந்த ஊரு வியாழக்கிழமை சந்தைக்கு வருவேன், வெள்ளிக்கிழமை சேத்தியாதோப்பு சந்தைக்கு போயிட்டு சனிக்கிழமை வடலூர் சந்தை ஞாயிறு குள்ளஞ்சாவடி ரெண்டு நாள் வூட்டுள இருந்து கூட மொரம் பின்னி எடுத்துக்கிட்டு செவ்வாய்க்கிழமை குள்ளஞ்சாவடி புதன்கிழமை புதுச்சத்திரம் சந்தை அப்படியே ஓட்டமா ஒடுச்சு தாயி 30 வருசம் ஒரே வட்டமா குடிச்சு குடிச்சு குறவன் செத்துப் போனான், கூட மொரமும் செத்து போச்சு. நான் கிடந்து அல்லாடுடறன் இதை எடுத்து உள்ள வை, பிறகு வரும்போது கூட மொடஞ்சு கொண்டு வாரேன். பிளாஸ்டிக் வந்துதான் எங்க வாயில மண்ண போட்டுது. நான் வரேன் தாயீ, திரும்ப வந்தா நீ ஒரு வா சோறு போடு, என்ன?”

“ஆயா, இந்தா… இந்தா…”

“ஏம்மா, காசா? அட வாணாம்மா!”

“அட, வைச்சுக்க ஆயா…எதாவது செலவுக்கு ஆவும்”

30 வருட வாழ்க்கையை ஒரு சொல்லில் சொன்ன ஆயா தனக்குள் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். “இந்த புள்ள பொன்னாயா மாதிரி இருக்கே, கேட்டு இருக்கலாம் இந்தக் காலத்திலும் திருந்தாம கிடக்கிறேன் பாரு,” என்று அவளது எண்ணங்கள் திரண்டு வந்தன.

எப்பேர்ப்பட்ட குடும்பம். இந்தப் புள்ள இங்கேதான் கட்டிட்டுருக்கா நம்மள தெரியுமோ? தெரியல போலிருக்கு. பொன்னாயா பேத்தியா இருக்குமோ? அப்படிதான் இருக்கனும்.

கட்டிக்கிட்ட புதுசுல மப்பும் மந்தாரமா இருந்த ஒரு நாள் காலையில, ‘கலியா கலியா’ என்று பொன்னாயா  அப்பன் கூப்பிட்டாங்க ரோட்டுல வில்வண்டி நின்னுருந்துச்சு.

“கலியன் இல்லையா?”

“இல்லிங்க?”

“நீ யாரும்மா?”

“அவரு பொஞ்சாதிங்க”

அவரு அப்படியே போயிட்டாங்க. ஆளு தோரணைய பார்த்ததும் யாருன்னு கேட்க முடியல பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி மறைஞ்சு போச்சு. வூட்டூகாரர் வந்ததும் சொன்னாள். அப்ப போன மனுசன் மறுநாள்தான் வந்தாரு, தலையில கள நெல்லோடு. என்ன, என்று கேட்டாள்.

“முதலாளி வூட்டு கோழி பிராந்துட்ட குஞ்சைப் பறி கொடுத்துட்டு நாள் முச்சுடும் கோ கோன்னு கத்திருக்கு, அதான் கூண்டு செய்யச் சொன்னாங்க”

“அதுக்கு இம்மாம் நேரமா?”

ஏ”க்கழுதை நம்ம கல்யாணத்துக்கு காசு பணம் கொடுத்து உதவுனது அவுங்கதான். மூங்கி கழி வெட்டி போட்டு வந்துருக்கேன் வேலை கொடுத்து இருக்காங்க நாளைக்கு போவும்”னாங்க

போய்ப் பார்த்தால், இன்னைக்கெல்லாம் பார்க்கலாம் போலிருந்தது.. தலை வாசல! அரிக்கால! மாலை சூடிய பூர்ண கும்பத்தை ஆனைவோ இரண்டு பக்கமும் மாலையை உயர்த்தி போட அப்படியே நெருங்குது. அவள் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள். இம்மாம் பெரிய வாசலும் இரண்டு பக்கமும் தின்னைவோ முன்ன பின்ன பார்த்து இல்ல, அப்படியே கன்னத்துல கை வச்சிகிட்டு நிற்கிறாள்.

அவளைப் பார்த்து, “இங்க எங்கடி வந்த?” என்று ஒரு குரல் கேட்கிறது.

யாருன்னு பார்த்தா பொன்னாயா வெளியே வருது, “ஏ ஆண்டாளு நீ எங்க இங்க?” என்கிறது.

“இங்கேதான் தாழம்பேட்டைல இவரத்தான் கட்டிக்கிட்டேன் ஆயா!”

“ஏலேய் கலியா இவ அப்பன் வீரன் சின்னப்புள்ளைலேருந்து தெரியும் ஒழுங்கா பார்த்துக்கோ”

“சரிங்க”

“முதல்ல வயிறார சாப்பிடுங்க காதடைச்சு வந்திருப்பிங்க”

இரண்டு பித்தளைத் தூக்கு வாளிகளில் சோறும் பூவரசு இலையில் துவரரிசி துவையலும் இப்ப பார்த்த அந்தப் புள்ளதான் கொடுக்குது, அப்படியே பொன்னாயா சாடை. கட்டசம்பா அரிசி இன்னும் போட்டாலும் சாப்பிடுலாம் அம்மாம் ருசி!. அது எல்லாம் ஒரு காலம், என்று நினைத்துக் கொண்டே கிழவி மகள் வீடு வந்து விட்டது

வாசலில் நிற்க்கும் மகளிட,ம் “ஏய் இங்க எங்கடி ஈச்சம் மட்டை கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்ட உள்ளே போனாள்.

“ஏன் உனக்கு சும்மா இருக்க முடியாதா, உன் தொழிலத் தூக்கிட்டியா?

“ஆமான்டி அதான் உங்களுக்கு கஞ்சி ஊத்துச்சி. பிள்ளையக் குடுத்துட்டு பக்கத்துல போயி கேளு. எனக்கு தெரியும்டி யாரும் சொல்ல வாணாம், நான் பார்த்துக்கறன்,” என்றாள்.

எப்ப விடியும்னு பார்த்த கிழவி விடிந்ததும் முதல் வேலையாக மகளிடம், “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆரம்பித்தாள். “நீ என்னை எதிர்பார்க்காத, புள்ளைய பார்த்துக்க. நான் பொறைக்கு வந்துடறேன்”

கிழவி விறுவிறுவென்று, வெள்ளாத்து ஓரம் நடைய எட்டி போட்டால் கிரேடர் போயிடலாம், எப்படியும் ரயில் ரோட்டு ஓரம் கிடக்கும் தேறினதா முத்தலும் இல்லாமல் இளசும் இல்லாம ஒரு அம்பது ஈச்சம் மட்டை, கொஞ்சம் கட்டுக்கொடி பதமானதா வெட்டிக் கொண்டு போவணும், என்று நினைத்துக் கொண்டே நடந்தாள். செத்த வெயில்ல போட்டு எடுத்தா மனசுபோல வணங்கும். பேசிக்கிட்டே செய்ய ஆரம்பிச்சா ஒரு இரண்டு மணி நேரம் அதுக்கு மேல பார்ப்போம், என்று சொல்லிக்கொண்டே வந்தவள், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் போல, இது என்ன இப்படி காடா கிடக்கு, கடவுளே!, என்று திகைத்து நின்றாள்.

“யம்மா… யம்மோவ்!”

“யாரு?”

“நான்தாம்மா”

“ஆயாவா? வா ஆயா! உனக்கு ஏன் இந்த வேலை?”

“இரு, தாயி. குச்சிய வெய்யல்ல போட்டு வரேன்”

“நேத்திலிருந்து நினைப்பு கிடந்து அடிக்குது ஆயா உன்னை எங்கியோ பார்த்து இருக்கேன் எங்கேன்னுதான் தெரியல”

“நீ பொன்னாயா பேத்தியா?”

“ஆமாம் ஆயா”

“அப்படி சொல்லு ஏன் ராசாத்தி, நேத்தி உன் கையால சாப்பிட்டதுமே நாக்கு சொல்லிடுச்சு அதே பொன்னாயா கை பக்குவம் புத்திக்கு தான் உரைக்கல. தாவத்துக்கு எதாவது குடு பிறகு சொல்றேன்”

“இந்தா ஆயா, கூச்சப்படாம சாப்பிடு”

“ஏம்மா இவ்வளளோ குடுக்குற, வயிறு சுருங்கிப் போச்சு, ருசிதான் கேக்குது நாக்கு”

“சரி ஆயா, சாப்பிடு! நான் மதிய வேலைய நெருக்கிட்டு வரேன்”

“ஆகட்டும் தாயி!” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.

“அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணி குடு”

“தே வந்துட்டன் ஆயா, சாப்டியா”

“சாப்ட்டேன் ஆயி”

“பொன்னாயா கைப்பக்குவம் அப்படியே இருக்கு. என்னதான் மாயம் பண்ணுமோ தெரியாது, அம்மாம் ருசி”

“ஆயா பாடம்தான் எல்லாம்”

“சொல்லாயி குடும்பம் ஏன் அப்படி ஆச்சு?”

“தெரில ஆயா! அது பெரிய கதை”

“சொல்லாயி பெராக்க கேட்டுகிட்டே செய்யறேன்”

“ஒரு ராத்திரி தீடிர் தடார்ன்னு இடி மின்னலோட பெரிய மழை. ஒரு பக்க கூரை ஓட்டோடு உள்ள விழுந்துச்சு. அந்த பெரிய மழையில சுவரு விழுந்துடுச்சு. சுவருல பதிச்சிருந்த துயிலம் தூணும் அதோடு நாங்க ஆடும் ஊஞ்சல் அறுந்து பலகை  மேலே கிடந்தது ஆயா…

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு பொன்னாயா உடம்பு நடுங்குது எங்கள கைல அணைச்சுகிட்டு சுவத்துல சரிஞ்சு, கடவுளேன்னே உக்காந்தது. பிறகு எதுவும் கைகூடல பங்காளி பகைச்சல். போற எடம்ல்லாம் சன்டை சச்சரவுன்னு ஆயிப் போனதுல ஆயா ஊட்ட சரி பன்ன சொன்னத அப்பா கேட்கல

“ஒரு ராத்திரி வயித்துப் போக்குல ஆயா போயிடுச்சு பிறகு அப்பா, ஆயாவ நான்தான் கொன்னுட்டேன் பாவி பாவின்னு குடிக்க ஆரம்பிச்சு குடிப்பழக்கம் ஆகி குடியில் விழுந்துச்சு பிறகு வீடு எழுந்திருக்கவே இல்லை. மிச்சம் மீதி இருந்தத வச்சு என்னை கட்டிக்கொடுத்த கையோடு எனக்கு புள்ள பொறந்த மறுவருசம் அப்பாவும் போயி சேந்துச்சு”

உணர்ச்சி மேலிட்டால் அவள் அழுவதைப் பார்த்து, “அழுவாத ஆயி முப்பது வருசம் கெட்டவங்களும் இல்ல முப்பது வருசம் வாழ்ந்தவங்களும் இல்லை. உன் புள்ள தலை எடுத்து பேரப்பிள்ளைவோ காலத்தில நல்லா வந்துடும் ஆயி. அழுவாத, அழுவாத, சொன்னா கேளு,” என்று ஆறுதல் சொன்னாள் கிழவி.

“சரி ஆயா, உனக்கு பொன்னாயாவ எப்படி தெரியும்?’

“நல்லா கேட்ட போ. நான் பொறந்து வளர்ந்தது ஆயா பொறந்த ஊருதான். எம்மாம் பெரிய ஊடு அவுங்க ஊடு நாளுகை தாழ்வாரம் வச்ச இரண்டு கட்டு வீடு இரண்டு பக்கமும் முழுசும் நெல் மூட்டைவளும் அடுத்த பக்கம் வரிசையாக  மரப்பத்தாயமும் இருக்கும். ஊருக்கு வந்துச்சுனா சொல்லி அனுப்பும். அப்பா கூட நான் பார்க்கப் போனா சாப்பிடச் சொல்லி எதாவது கையில கொடுக்கும் முருக்கோ, அதிரசமோ, சோறோ எதா இருந்தாலும் அம்மாம் ருசி.

“என் அப்பன வீரா வீரான்னு சொந்த தம்பி மாதிரிதான் பேசும். எங்கள்ட்ட கூடை மோரம் வாங்குனா கூடதான் காசி கொடுக்கும் தாயில்லா பொன்னு நான்னு எம் மேல தனி பாசம்மா அதுக்கு”, என்று முடித்தாள்.

சரி ஆயா நீ என்ன எங்க பார்த்த?”

“உன் கையால சாப்ட்டே இருக்கேன் உனக்கு பத்து வயசு இருக்கும். உங்க அப்பா எங்க ஊட்டுக்காரரத் தேடி தாழம்பேட்டை வந்துட்டாங்க இரண்டு நாள் சென்னு  கோழிக்கூண்டு செய்ய வந்தோம்”

“ஆமாம் ஆயா. என் கண் எதிரே கோழி கூண்டு செஞ்சிங்க. மூங்கிப் பட்டை ஈச்சம் பட்டை, பூலாக்குச்சி கட்டுக்கொடிலாம் காய வச்சிங்க அதான் நியாபகம் இருக்கு”

“இரண்டு கூண்டு செஞ்சோம் ஆயி. நீயும் ஒந்தங்கச்சியும் அதுல பதுங்கி விளாண்டிங்க பொன்னாயாக்கூட ஏசுச்சு”

“எனக்கு நியாபகம் இல்ல ஆயா”

“அப்ப நீலாம் வெளாட்டு பிள்ளைவோ என்னமோ போ ஆயி… போன வாரம் நடந்தது எதும் ஞாபகம் இல்ல பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ளது எல்லாம் அப்படியே ஞாபகம் வருது சரியா போச்சு போ!. சரி ஆயா, கட்டிகிட்டது என்னா ஊரு? உம் வீட்டுகாரர் என்ன ஆனாரு?”

“கட்டிக்கிட்டது தாழம்பேட்டை பொறந்தது மூங்கிலடி. ஊட்டுக்காரர் கத வேண்டாம்மா, நான் டீ போட்டு எடுத்தாரன்”

ஆயா சரிந்து அமர்ந்தாள் கூடை பாதி வரை ஆகி இருந்தது.

“இந்தா ஆயா, டீ குடி. சீனி போட்டுப்பல்ல?”

“அதெல்லாம் குடிப்பம்மா”

“யான் ஆயா முகமெல்லாம் மாறிடுச்சு?”

ஹூம் என்று ஆயா அழ ஆரம்பித்தார். “நான் வேற உன்ன கேட்டிருக்கக்கூடாது”

“இங்க பாரு ஆயா அழுவாத உடம்பு ஏதாவது ஆயிட போவுது”

ஆயா, “ஏன் சாமி இருக்கும்போது அருமை தெரியல…” என்று தேம்பினாள்.

“சரி ஆயா அழுவாத டீயக் குடி ஆறிட போவுது. கொஞ்சம் தெம்பா இருக்கும்,” என்றாள்.

ஆனால, “ம்க்கும்” என்று கனைத்து கொண்டு, “என் கதைய சொல்றன், கேளும்மா,” என்று ஆரம்பித்தாள். “யார்ட்டையாவது சொன்னாதான் மனசு ஆறும் நான் வாழ்ந்துட்டன்மா எனக்கு போதும். வூட்டுக்காரர் பேரு கலியன். நான் அவங்கள இந்த ஊரு பரங்கிப்பேட்டை சந்தைல வச்சிதான் பார்த்தன். நான் பார்த்தப்போ ஒரு தோளில் துப்பாக்கி, பையி மறுதோள்ல காட்டுப்பூனை தொங்குது. ஆறு அடிக்கு மேல உயரம் கைல அதே உயரத்துக்கு மூங்கிக் கழி அப்படியே வீமன் மேறி நடந்து போறாரு, நான் திகைச்சு பார்க்கிறேன்”

“அப்பிடியே உழுந்துட்டன்னு சொல்லு”

“ம்க்கும் கிண்டல் பண்ணாதம்மா”

“இல்லை, இல்லை. சொல்லு ஆயா”

“சனம் கூட்டமா அப்படியே அவரு பின்னாடி போவுது. இவரு காட்டுப்பூனைய தொளில் இருந்து எடுத்து கருவைல மாட்ராரு. அப்படியே சட்டையும் கழட்டி வச்சிட்டு பைல இருந்து பேனாக்கத்தி எடுத்து வால்ல தொடங்கி பின் வரக்கும் ஒரு கோடு. அப்படியே கத்தியால நெம்பி ஒரு காலு அடுத்த காலு பின்னாடி வால்ல இருந்து தோல பனியன் கயிட்டர மாதிரி தலை வரைக்கும் கொண்டு வந்து கழுத்த அறத்து தலையும் தொலயும் பையில்ல வைக்கிறாங்க. அதுக்குள்ள ஆளாளுக்கு எட்டு கிலோ இருக்கும் இல்லை இல்லை ஆறு கிலோதான் இருக்கும். ‘ஏக்கொறவா, வில சொல்லப்பா’ன்னு சத்தம். இவங்க ஒன்னும் சொல்லல சுவத்துல இருந்து ஒரு பழைய போஸ்டர பிச்சி கீழே போட்டாங்க. பூனைவயித்துல கத்திய வச்சாங்க கூட்டத்துல இருந்த ஒரு ஆளு ‘ஏய் கொறவா, கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு இருக்க? உதை வேனும உனக்கு’ன்னு சத்தம் போடவும், ‘என்ன அடிக்கறவன் இந்த கழிய தொடுங்குடா முதல்ல’ன்னு ஒரு சலாம் வரிசை சுத்தி முங்கிய தரையில ஊனறாரு பாராயி ஒரு பய கிட்ட போவல.

“சந்தைல ஒரே பரபரப்பு மொத்த கறியும் அறிஞ்சு பத்து கூறு வச்சாறு நான் பார்க்கறத கவனிச்சு என்ன குறுகுறுன்னு பார்க்கறாரு “ஒரு கூறு இரண்டு ரூபாய் யாருக்கு வேனுமோ காச வச்சிட்டு எடுத்துக்கங்க”ன்னு பத்து நிமிஷத்தில் எல்லாம் வித்துப் போச்சு. அப்பன் என்னத் தேடி வந்துட்டுது ‘இங்கே என்ன பன்ற யாவரம் முடிச்சு போற எண்ணம் இல்லியா?’ன்னு கேக்குது. நான் திரும்பிப் பாக்கறேன். இவரு என்னைய பார்க்கறாரு. நான் என் அப்பன்கூட மொரம் விக்க வந்துட்டன்

“கொஞ்ச நேரத்தில் இவரு கைகால் எல்லாம் கழுவிட்டு துணிய போட்டுகிட்டு வந்துட்டாரு வந்து எதுத்தால சாடை மாடையா பார்த்துட்டு அப்பன் எட்டப் போனப்ப கிட்ட வந்து, “என்ன ஊரு புள்ள?”ன்னு கேட்டாரு. மூங்கிலடின்னு சொன்னேன்

“”அப்பன் பேரு?”

“”வீரன்ங்க”

“”ஊம் பேரு?”

“”ஆண்டாளு”

“அடுத்த கேள்வி கேட்டாரு பாரும்மா நேத்து கேட்ட மாதிரி இருக்கும்மா… இரு வாரேன் இன்னைக்கு கதையாதாம் போகும் போலருக்கு”

“ஆயா எங்க கிளம்பிட்ட, சொல்லு?”

“ஆயி வெத்தலை போட்டுட்டு சொல்றேன்”

“ஏன் வேலைல்லாம் கெட்டு போச்சு ஆயா இன்னைக்கு”

“கிடக்கு போ”

“சரி, சொல்லேன்”

“ம் நேரா மூஞ்சிய பார்த்து, ‘ஏ புள்ள ஆண்டாளு என்ன கட்டிக்கிரியா எனக்கு யாரும் இல்லை சொல்லு,’ ங்கிறாரு”

“நீதான் மொதல்லிய கழி சுத்துனப்பய உழுந்துட்டிய”

“இல்ல ஆயி, அவரு யாரும் இல்லன்னு சொன்னார் பாரு அப்பத்தான். எனக்கு ஆத்தா இல்லியா, நான் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டேன். அப்பன் வரத பார்த்துட்டு அப்படியே போயிட்டாரு. அப்புறம் நாங்க போற சந்தைக்கு எல்லாம் அவரும் சைக்கிள்ள வராரு. இரண்டே நாள்ல அப்பனுக்கு தெரிஞ்சு போச்சு என்ன மொத தடவையா அடிச்சுட்டாரு. நான் சொல்லிப்புட்டேன் உன் மகள நீ பாக்கனுமுன்னா நான் அவரதான் கட்டிப்பேன்னு சொன்னதும் பச்சைப்புள்ள மாதிரி தேம்பி அழுவுறாரு. அப்புறம், நின்னுட்ட இருந்தவர கைகாட்டி கூப்டாரு அப்பதாம்மா பார்த்தேன் இவரு பயந்தத!

“அம்மாம் பெரிய ஆளு இந்த ஊரு சந்தை சனம் பூரா வேடிக்கை பார்க்குது அப்படியே அப்பா கால்ல உழுந்துட்டாறு. அப்பனுக்கு ஒன்னும் புரியல. நான் ஓன்னு சத்தம் போட்டு அழுதத பார்த்ததும் அப்பன் வர முகூர்த்தத்திலே கல்யாணத்த வச்சிடுவம் பெரியவங்கள கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லிடுச்சு. வர போற சனம் எல்லாம், ‘எப்பா வீரா பொண்ணு கல்யாணத்துக்கு என்னியும் கூப்டு’ன்னாங்க அப்புறம் இவரு சார்பா உங்கப்பா தாழம்பேட்டை நாட்டாமைகிட்ட சொல்லி புதன்கிழமை புவனகிரி சந்தைல வச்சி பேசி முடிச்சாங்க. சேத்தியாதோப்பு தீ பாஞ்சாலி கோயில்ல தாலி கட்டிக்கிட்டோம்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு கேட்டேன் “ஏன்யா இவ்வளவு சனம் எதுத்தாப்பல சந்தைல போய் கால்ல உழுந்தியே, ஏன்யா?” அப்படின்னு. அதுக்கு அவரு சொல்றார், “இல்ல கழுதை ஒப்பன அடிச்சுப் போட்டுட்டு தூக்கிட்டு போவனும்னு நினைச்சு இருந்தேன் ஆனா உங்கப்பன் அழுதத பார்த்ததும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,’ அப்படின்னு. “சரியாதான்யா  செஞ்ச”ன்னு சொன்னேன். அப்புறம் இரண்டு மூணு மாசத்துக்கு பிறகு தான் ஒங்க வூட்டுக்கு வந்தது”

“ஞாபகம் வருது ஆயா நீ சாப்புடு, கூடதான் முடிஞ்சுடும் போல இருக்கு”

“ஆமாம் ஆயி கை செத்து போச்சுன்னு நினைச்சேன்  30 வருச பழக்கம் இல்ல எனக்கு அதான் பூக்கூடையா பிடி வச்சி செய்யறேன் அழவா பாந்தமா இருக்கு”

“ஆயா சாப்பிட்டு பேசு”

“மகராசி கொண்டா நான் இருந்து சாப்புட்டு பூரா கதையும் சொல்லிட்டு போறேன்”

“கத்திரிக்காய் போட்ட நெத்திலி கொழம்பு வச்சிருக்கேன், சாப்பிடு”

“கொண்டா ஆயி பொன்னாயா ருசிய பார்க்கனும் அதுக்கு தான் வந்ததே”

“நானும் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ஆயா”

“… ம் சொல்லு ஆயா”

“நீ பார்த்தன்னு சொன்னிய அப்பத்தான் பின்னாடி உங்க ஊட்டு குளத்தில இவரு விராலு மீனு ரெண்டு குத்துனாரு நான் தான் ஆஞ்சு கொடுத்தேன். பொன்னாயா வச்சிருந்தது பாரும்மா கொழம்பு அப்படி ஒரு ருசி அது உன்கிட்டேயும் இருக்கு ஆயி”

“அது வேற ஒன்னும் இல்ல ஆயா திட்டமா உப்பு உறப்பு போடரதுதான் சில பேர் திரும்ப திரும்ப பார்த்து போடுங்க அதான் வித்தியாசம். ஆயா நல்லா கூச்சப்படாம சாப்பிடு உன் ஊடு இது எப்ப வேணும்னாலும் வா போ.

“இந்தா இந்த புடவையை நீ கட்ட மாட்ட உன் மகளுக்கு கொடு”

“ஏன் ஆயி, புதுசாருக்கு…”

“‘ஆமாம் ஆயா உம் பொண்ணுக்கு எங்கூட்டு சீதனம்தான்”

“அப்படியே பொன்னாயா கொணம் ஆயி உனக்கு”

“சரி சொச்ச கதையும் சொல்லு”

“எந்த கதைய கேட்கற?”

“விராலு மீனு கொழம்பு சாப்ட்டிய..”.

“ஆமாம் தாயி ஒரு வாரம் தொடர்ந்து வந்து தங்கி வேலை செஞ்சோம். பொன்னாயா எங்கள கூலி நெல் அள்ள அளக்க என்று மூன்று மரக்கால் ஆறு மரக்கால் என்று  பல அளவுகளில் கூடைவ செய்ய சொல்லுச்சு. வாசல்ல மாமரம் இலுப்பை மரம் இருந்தது”

“ஆமாம் ஆயா திண்ணைல பொன்னாயா மடில படுத்துகிட்டு கதை கேப்போம். மரத்து மேல மினுக்கெட்டாம் பூச்சிவ மினுக்கி பறக்கும்”

“ஆயி அதுல பழந்தின்னி வவ்வால் வந்துச்சுவல்லா இவரு சும்மா இல்லாம அத சுட்டுப்பிட்டாரு. காலையிலே பொன்னாயா எங்கள கூப்ட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து போய் கூட மொரம் யாவாரம் பண்ணி ஒப்பனாட்டம் கெளரமா பொழைச்சுக்க சாப்ட்டு இரண்டு பேரும் கிளம்புங்க,” அப்படின்னு சொல்லுச்சு. அப்ப படி அரிசி 2 ரூபாய் வித்த காலம். இவரு பணத்தை அப்படியே சாமி படத்துக்கு பின்னாடி வை பிறகு பாப்பும்னு\ட்டாரு”

“சாப்பாட்டுக்கு என்ன செஞ்சிங்க ஆயா?”

“அட நீ வேற ஆயி இரண்டு வயிறு சோத்துக்கா பஞ்சம்? கொன்னா பாவம் தின்னா தீரும் கிளம்புடிம்பாரு. ராத்திரி ஆகாரத்த முடிச்சுட்டு துப்பாக்கி எடுத்து தோளில் மாட்டுவாரு நான் பைய மாட்டிப்பேன் வேட்டைக்கு”

“ம்ஹும் நீயுமா ஆயா?”

“ஆமாம் ஆயி. கைல ஆளுக்கொரு கழி. மறுநாள் எங்க சந்தைன்னு பார்ப்போம். சைக்கிள எடுத்து கிளம்புவோம். நான் பின்னாடி உக்காந்துடுவேன். புவனகிரி சந்தையா இருந்தால் சாத்தப்பாடி ஏரி பக்கம் போவோம். சேத்தியாதோப்பா இருந்தா வீராணம் ஏரி. பரங்கிப்பேட்டைய இருந்தா பிச்சாவரம் காடு பக்கம் விளைச்சல் நாள்ல வயகாட்டுல  காட்டுப்பூனை வேட்டைக்கு போவோம். ஏதாவது மாட்டும் சம்பு கோழி,உடும்பு, கௌதாரி காட்டு முசலு, நீர்க்கோழி, நாரை காட்டுப்பூனை வித்து காசாக்கி வீட்டுக்கு வருவோம். நான் சோறாக்குவேன். ஒரு கலயம் கள்ள வாங்கிட்டு வந்து வச்சிட்டு கறிய அவருதான் வைப்பாரு. ரெண்டு பேரும் குடிச்சு சாப்ட்டு படுத்தோம்னோ பொணம் மாதிரி கிடப்போம்”

“குடிக்க வேற செய்வியா நீ?’

“இல்ல ஆயி கள்ளு உடம்புக்கு நல்லதுல்ல, அத சின்னப் புள்ளயில குடிப்போம் அதான்”

“சரி சரி மேல சொல்லு”

“இப்படியே காட்ல மோட்லன்னு இரண்டு வருசம் போச்சு. ஒரு நாள் கன்னி வச்சு கௌதாரி புடிச்சுருந்தொம் 4 ஜோடிவோ காலக்கட்டி கூண்டுல போட்டு வயலூருக்கு நேர் வாய்க்கால் உள்ளேருந்து ரோடு ஏர்றோம், கூண்டு வண்டி வந்து நிக்கிது. ரெண்டு பேரும் கையும் களவுமா பொன்னாயா கிட்ட மாட்டிகிட்டோம்”

“நினைச்சன் ஆயாகிட்ட மாட்னிங்களா!”

“சொச்சத்தையும் கேளு ஆயி”

“ம்ம் சொல்லு, சொல்லு”

“பொன்னாயா ஏய் கலியான்னுச்சு. இந்த குருவி எவ்வள காசுடான்னாச்சு அவரு வாய தொரக்கல என்ன எவ்வளவு காசிடின்னிச்சு நானும் வாய தொரக்கல மஞ்சப் பையிலேருந்து 100 ரூபாய் எடுத்தது “முதல்ல அத பூரா அவுத்து வுடு”

“ஆளுக்கொன்னா அவத்து வுடறோம். சடசடன்னு பறந்தத வர சனம் எல்லாம் பார்க்குது.  “புள்ளைவோ இருக்கா?”

“இரண்டு பேரும் திருடி மாட்டின சின்னப்பிள்ளைவோ மாதிரி தல ஆட்ரோம், இல்லைன்னு.

“”எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தாயில்லா பிள்ளைங்க அதான் இப்படி பண்றீங்க. அதுவோ குஞ்சுவோ என்னாவும்? உங்களவிட தாண்டி கஷ்டப்படாது? இந்த காச எடுத்துட்டு போயி உங்களுக்கு தெரிஞ்ச கூடை மொரம் பின்னி பொழைங்க” ன்னுச்சு.

“”திரும்பச் சொல்றேன் கேளுங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான். ஓட்டுப்பா வண்டிய”ன்னு போயே சேர்ந்துடுச்சு. ஊரு சனமே தெவச்சு பார்க்குது”

“அப்புறம் ஆயா?”

“அப்புறம் என்ன, குறவன் சாவற வரைக்கும் வேட்டைக்கே போவல. கூட மொரம் பின்னி வித்துதான் சாப்பிட்டோம் அப்புறம் நாலு வருசம் சென்னுதான் இங்கே கட்டிக்கிட்ட பொட்டப்புள்ள பிறந்துச்சு”

“வேற புள்ள இல்லியா? வூட்டூகாரர் எப்படி செத்து போனாரு?”

“வேற புள்ளைவோ இல்லை. இரண்டு வருசமாவது அவரு செத்து. குள்ளஞ்சாவடி சந்தைக்கு யாவரத்துக்கு போயிட்டு திரும்புறோம். பெருமாத்துர் இறங்கி ஆத்த குறுக்கால தாண்டுனா ஒரு மைலு துலுக்கம்பாளையம் அடுத்தது தாழம்பேட்டை ஆத்தங்கரையில தான் ஊடு. “நீ முன்ன போயி உள்ள வையி புள்ள, நான் குவார்ட்டர் வாங்கிட்டு வரேன்”னாரு சூரியன் கரகரன்னு கீழே இறங்குது சரி நேரத்த போயி விளக்கு வைப்போம்,னு நடையை எட்டிப்போட்டு போயிட்டேன். விளக்கு வச்சிட்டு அடுப்புல உளைய வச்சிட்டு சுடுதண்ணி போடுமுன்னு ஈயப் பானைல பைப் தண்ணி அடிக்கிறன், “ஆண்டாளு ஆண்டாளு போனு வந்துருக்கு, ஓடியா ஒடியா”ங்கறாங்க.

“”என்னன்னு சொல்றது எல்லாம் விதி மனச தேத்திக்க”ங்கறாங்க. “சொல்லுங்க சொல்லுங்க,”ங்கறேன், “கலியன் ஏமாத்திட்டு போயிட்டான்”ங்கறாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்

“எப்படி ஆச்சுன்னு கேக்கறேன். போதைல தடுமாறி ஆத்துல முட்டி தண்ணியில்ல விழுந்ததுதான் தலை தூக்க முடியல அப்படியே கிடந்து அடங்கியிருக்கு. மையிருட்டு நேரம் யாரும் பார்க்கல. பிறகு வந்தவங்க பாத்துப்புட்டு வூட்டுக்கு போன் பண்ணிசொல்லிட்டு தூக்கி வந்தது.

“நீ யான் அழுவுற ஆயி, நானே அழுவுல பாரு… கிடக்கு வுடு தாயி, எல்லாம் பிளாஷ்டிக் கூட மொரத்தால வந்ததுதான். நாலு அஞ்சு வருஷமாவே நல்ல யாவாரம் இல்ல ஆயி. அதான் அதிகமா குடிச்சு போயி சேர்ந்துட்டாரு. சாவமோது 62 வயசு. என்ன விட பத்து வயசு மூத்தவரு. ஏன் கதைதான் என்னாவுமுன்னு தெரியல. மகளும் மருமகனும் மெட்ராஸ் போவுதுவோ. வேலைக்கு என்னையும் கூப்டுதுவோ. எனக்கு வேற போக்கிடம் இல்ல ஆயி…

“இந்தா ஆயி இந்தக் கூடையப் புடி உன் கையில புள்ள குட்டியோடு என் பொன்னாயா மாதிரி நீயும் உன் குலமும் வாழனும்”

ஆயா கூந்தலைக் கொண்டையாக முடிந்து காதோரம் விழுந்த முடிகளை அள்ளிக் கொண்டையில் மறைத்துச் சொருகி தெருவில் இறங்கி நடந்தாள்

இவள் திகைத்து கிழவியை பொன்னாயாவாகவே பார்த்தாள் ….

பத்திரம்பா

வேல்முருகன். தி

‘டூ நாட் என்டர்’ போட்ட போர்டு எங்களை வரவேற்றது நெருங்கி பார்த்த போது கன்னிவேடி மற்றும் எலும்பு கூடு படம் இரண்டிலும் மணல் படிந்து மங்கலாகத் தெரிந்தது.

சுற்றி கம்பி வேலி இட்டிருந்தது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைச் சொல்லாமல் சொல்லியது. டெசர்டில் வண்டி தடமே இல்லாத தனித்த பகுதியாக தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இருக்கும்.

பாலைவனத்தில் வளரும் ஒட்டகம் மட்டுமே திங்கக் கூடிய முட்செடி காய்ந்தும் இளம் பழுப்பாகவும் குத்து குத்தாகவும் பரவி கீழிருந்த மணலை மூடி இருந்தது.

இருவரும் கம்பி வேலியை ஒட்டி பாதி தூரம் நடந்து வந்திருந்தோம். சாம்பல் பூத்த வானம். ஒரே வெய்யில். அலைஅலையாக இறங்கியது காற்று. அதன் மேல் மணலை அள்ளி வீசியது. அக்காற்றே சுழன்று சுழன்று மேலேற தூசும் சில பாலித்தீன் பேப்பர்களும் வட்டமிட்டன. பருந்தைப் போல இருந்தது கருத்த
பாலித்தீன் பை ஒன்று.

அதற்குள் உதடுகள் உலர்ந்து நா வறண்டு தாகமெடுத்தது. இரண்டு இடங்களில் சிவப்புக் கொடி கம்பியில் கட்டியிருந்து. சமீபத்தில் கட்டியிருக்க வேண்டும் புதிதாக இருந்தது.

’சூப்’ என்றார், அபுஅலி என்ற பாகத் அல் மியாஸ். எனது மேலதிகாரி. குவைத்தின் பூர்வகுடி. நல்ல ஆறே கால் அடி உயரத்தில் முடி எல்லாம் சுருளாக பிரம்மராட்சசன் போல் இருப்பார். குரலும் அதற்கேற்ற மாதிரியே இருக்கும். முதல் தடவை கேட்டால் பயத்திலே எல்லாம் நடப்பதற்கான சாத்தியம் உண்டு.

பார்த்த போது அந்த சிகப்பு கொடிகளுக்கு அருகில் மணல் பாருகளில் தங்கும் நரிகளின் குகை முகப்பு போல கருப்பாக ஒத்த அளவுள்ள பொந்து போன்ற தூவாரம் தெரிந்தது. அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகளை மண்ணில் மிக நேர்த்தியாக புதைத்து வைத்து இருக்கின்றனர். இரண்டு டாங்கையும் இணைக்கும் பங்கர் உள்ளது என்றார் அபுஅலி.

பிறகு அரபி கெட்ட வார்த்தையில் சதாமை திட்டினார்.

நான் உணர்ச்சியை மறைக்க பல்லை கடித்து திரும்பினேன்.

சதாம் தற்போது மாட்டிக் கொண்டான். குவைத்தை ஆக்ரமித்த போது அவனால் ஆன இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மக்கள் எல்லாம் நடோடிகளாய் அலைய வைத்தான். 800 ஆயில் கிணறுகள், 4 GCகள் எரிக்கப்பட்டன பொருளாதாரம் அதள பாதளத்திற்குச் சென்று விட்டது. எல்லாம் சரியாக்க 5 பில்லியன் தினார் ஆனது.

தொலைபேசி ஒலிக்க தொடங்கியதும் எடுத்து பேசி விட்டு, ’இப்ப பாரு கடவுள் தண்டித்து விட்டார். அதா அல்லா கரீம்.’ என்றார்.

இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி நீ எனக்கு இந்த இடத்திற்கு வருவதற்கு பாலைவனத்தில் ரோடும், சுற்றிலும் அகழ்ந்து டாங்கிகளை வெளியில் எடுப்பதற்கும் உதவ வேண்டும் என்ற போது அதிர்ச்சியில் அதில் உள்ள ஆபத்தை எண்ணி மனம் உறைந்து எனக்கு பேச்சே வரவில்லை.

மொத்த இடமும் சர்வே செய்து எத்தனை நாள் ஆகும் என்று ரிப்போர்ட் நாளைக்கு வேண்டும் என்று சொல்லி அவர் வண்டியில் ஏறிச் சென்று விட்டார்.

எனது GMCல் ஏறி அமர்ந்து தண்ணீரை எடுத்தேன். வண்டி ஆடிக் கொண்டு இருந்தது. மனம் ஆடி பயப்படுகிறாயா என்று கேட்பது போல் அனிச்சையாய் இல்லை இல்லை என்று தண்ணீரை குடித்தேன்.

திரும்ப கீழே இறங்கி நின்று பார்த்த போது பைப் லைன் எல்லாம் எறிந்து முங்கில் போல் வளைந்து உருக்குலைந்து கிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயில் கிணறுகள் எரிந்து கிடந்தன. மண் எல்லாம் குருடாயில் படிந்து காய்ந்து ஒரே கறுப்பாக காய்ந்த சாக்கடை போல் தெரிந்தது.

தூரத்தில் தெரிந்த GC 14 முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. திரும்பிய எனக்கு டாங்கி இருந்த இடம் அமானுஷ்யமாக தெரிய அப்படியே இரண்டு
துவாரமும் நினைப்பு வந்து அச்சமூட்டயது. வந்து வண்டியை நகற்றினேன். இலக்கு இல்லாமல் வண்டி முன்னொக்கி ஒடியது.

ஆழ்மன சிந்தனை அந்த இடங்களில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று போய்க் கொண்டிருந்தது. கம்பேனிக்கு தெரியப்படுத்தனும் என்று யோசிக்க யோசிக்க சிந்தனையில் குமார் வந்தார்.

குமாரைப் பார்க்க மேனேஜர் மாத்யுடமிருந்து போன் வந்தது. அடான் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி சென்ற போது வாயிலில் வந்து நின்று அழைத்து சென்றார். நான் குமாரை பார்த்து பதறிய போது எல்லாம் முடிந்து இருந்தது. புதுத் துணி மாத்தியிருந்தனர் பார்த்தவுடன் ஐிப்பை இழுத்து மூடி உள்ளே கொண்டு சென்றனர்.

என் கையைப் பற்றி ’இனி கம்பெனி பார்த்துக் கொள்ளும் நீ சென்று கிளையன்டுக்கும் நம்ம ஆட்களுக்கு தெரியாமல் வேலையைப் பார்த்துக் கொள்’ என்றார். நான் திகைத்து ஒன்றும் புரியாமல் திரும்பினேன். கூடவே வந்து குமாரின் டைம்ஷிட்டை வாங்கி சென்றார்.

சிந்தனை முழுவது‌ம் குமாரைச் சுற்றியே வட்டமிட்டது. குமார் குவைத்தில் எங்க கம்பேனிக்கு வந்தது டிரைவராக. வந்த புதிதில் எங்களுக்கு வண்டி பழகவும் வேலை சம்பளம் இல்லாத அந்த மூன்று மாதமும் சமைப்பது நேரப்போக்குக்கு பழைய கதையை சொல்லுவது என்று இருப்பார்

அவர் இருக்கும் இடம் கலகலப்பா இருக்கும். வேலை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும், ஒரு நாள் காலை அவர் டைம் ஷிட்டை கேட்டுப் பெற்று பார்த்து அதில் கம்மியாக இருப்பதாக கை நோட்டை காட்டினார். டைரியில் அந்த குறிப்பிட்ட தேதியை காட்டி சரியாக பாருங்கள் என்றேன். நம்ம ஆட்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தான் செய்வார்கள் என்றார்.

எனக்கு திடீர் கோவம் தலைக்கேறி விட்டது. “உங்களுக்கு குறைத்து போட்டு விட்டாதாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். எல்லோரும் ஒன்று தான்” என்றேன் சிறிது கடுமையாக.

முகம் வாடிப் போனார். மனம் கேட்காமல் அன்று மாலையே ஒவர் டைம் இரவு 8 மணி வரை அளித்தேன். அன்று அதிகாலை 3 மணிக்கு எனது செல்பேசி நிற்க்காமல் ஒலித்தது. எடுத்தப்போது ’குமார் கட்டிலில் இருந்து விழுந்து விட்டார் பேச்சு மூச்சு வரவில்லை உடன் வர வேண்டும்’ என்றார் வார்டனும் சூப்பர்வைசர் ராஐூம்.

ஒடிப் போய் பார்த்த போது சுத்தமாக ஒன்றும்மில்லை. கையைத் தொட்டு பார்த்தேன். உடம்புச் சூடு இருந்தது. மூச்சு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வார்டன் ஏற்பாடு செய்து உடன் அனுப்பி விட்டார்.

லேபர் கேம்ப் முழுவதும் பரபரப்பாகி எல்லாம் கூடி விட்டனர், வார்டனும் நானும் ரூம் சென்று பார்த்த போது அவர் படுக்கை கலைந்து இருந்தது. விசாரித்த போது’ கடுமையாக தும்மிக்கொண்டு குப்புற விழுந்து விட்டார். நாங்கள் பார்த்த போது கால் மட்டும் அசைந்தது பிறகு அதுவும் இல்லை’ என்றனர்.

கம்பெனி பார்த்து கொள்ளும் என்று சொல்லி விட்டு இப்ப இன்சூரன்ஸ் கிடைக்க வில்லை முயற்சிக்கிறோம் என்கிறார்கள். வீட்டினர் தொடர்ந்து போன் செய்து விட்டு கடிதம் எழுதுகிறார்கள்.

யாருக்காவது பாதிப்பு என்றால் கம்பேனி செய்யுமா?

சிந்தனை மாறி சுதாரித்த போது வண்டி முற்றிலும் எரிந்த GC 14 முன் பக்கம் வந்திருந்தது. நிறுத்தி பார்த்தேன்.

சூளையில் அதிக சூட்டில் வெந்த பானைகள் போல் குருடாயில் டேங்க் எல்லாம் வளைந்து கிடந்தன. பிளாட்பாரம் எக்யுப்மென்ட்கள் எல்லாம் சூட்டில் வெடித்துக் கிடந்தன, தீப் பற்றிக் கருகிய உடல்கள் போல. பார்க்க முடியவில்லை. மனம் சிந்தனையில் ஆழ்ந்து குழம்பி, எரியும் போது ஆட்கள் இருந்து இருப்போர்களோ என்று நினைத்து வண்டியை திருப்பி விரட்டினேன்.

எதிரில் வண்டி லைட்டைப் போட்டு நிறுத்தும்படி சைகையை பார்த்து வேகத்தை குறைத்து ஒரம் கட்டி பார்த்த போது, உதுமான் அலி எங்க சேப்டி ஆபிசர், ஊர்க்காரர் அனுபவம் முழுவதும் நெற்றியில் கோடாய் மிக கோவத்துடன் வரவேற்றார்.

’வணக்கம் சார்’

’சலாம் இருக்கட்டும் என்ன நினைச்சுகிட்டு இருக்க’ என்று எகிறினார்

’இல்ல சார் அபுஅலி கருப்பன் புதிய தலைவலிய குடுத்துட்டான் நான் உங்கள பார்க்க தான் வந்துட்டு இருந்தேன்’

’இல்ல வாப்பா. இம்மாம் வேகம்லாம் வேண்டாம் குடும்பம் இருக்கு’

’சரி சார்’

’என்ன தலைவலி வாப்பா அது’ என்றார் மூக்கு கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே.

’சார் வண்டிய விட்டு பூட்டி வாங்க பத்து நிமிஷம் பார்த்துடலாம்’

’ஏன் வாப்பா எப்ப ஊருக்கு’

’அத ஏன் சார் கேட்கறீங்க, மாத்யு நான் ஊருக்கு போனா பார்க்க வேற ஆளு வேணும்ன்னு வெயிட் பண்ண சொல்றாரு’

’உங்களுக்கு தான் தெரியும ஈராக்க நேட்டோ அடிக்க ஆயத்தமான போது இரா பகல் பாராமல் பாக்காம எல்லா GC க்கும் பயர் இன்ஜினுக்கு சுற்றி வரவேண்டி ரோடும் ஆபரேஷன் டீமுக்கு வேண்டி பங்கர் ரெடி பண்ணி தந்தோம்’

’நீங்க ஊருக்கு போயிருந்திங்க’

’வாப்பா ஒரு எமர்ஜென்சி அதான்’

’நாங்க இங்க சண்டை நடக்கும் போதும் எமர்ஜென்சி பாஸ்ல வேலை பார்த்தோம்’

’தெரியும் வாப்பா எப்படியா சாமளிச்சிங்க’

’சண்டை தொடங்கிய முதல் நாள் இதே அபுஅலி கருப்பன் அவன் வண்டில என்ன ஏத்திகிட்டு எல்லாம் GCயும் ஈஸ்ட் குவைத் முழுவதும் பார்க்கனும்னு சுத்துறான். புர்கன் ஏரியா வந்ததும் வீட்டிலேருந்து போனு. மனைவி சிதம்பரம் போயி அங்கிருந்து பண்றாங்க. டிவில பார்த்தேன். எல்லாம் ஊருக்கு வராங்க நீங்களும் ஊருக்கு வாங்க-கிறாங்க நான் பயப்படாத பயப்படாத நல்லா இருக்கேன் என்று சொல்றேன். இங்கே ஒரே சைரன் சத்தம் போன் கட்டாயிடுச்சி’

அப்ப GC 18, BS 140க்கு நேரா வந்திருந்தோம் அது இரண்டுலேருந்து பயங்கர சத்தத்துடன் ஊம்னு ஆரம்பிச்சு சைரன் சத்தம் தொடர்ந்து கேட்குது. கருப்பன் வண்டிய திருப்பி டெசர்ட்ல இறக்கி ஒட்டறான் இரண்டு சைடும் கிளாஸை இறக்கி, எல்லா சூப் சூப்னு மானத்தை காட்டரான்.

அதிர்ச்சியில மேல பார்த்துகிட்டு வரேன். மனதில் பல சிந்தனை ஒடுகிறது ஒடுது பையனை பார்க்க முடியுமா வந்து ஒன்றறை வருடம் ஆச்சு. வண்டி குழியில விழுந்து ஒரு பக்கம் சாய்வாக சென்று நிமிர்கிறது.

சதாமை திட்டரான் கருப்பன். ரெண்டு மூணு நிமிஷத்துல அப்படியே சைரன் சத்தம் சுத்தமாக நின்னு போய் ஒரே நிசப்தம். அதிர்ச்சில ஒன்றும் புரியல. குனிஞ்சு ரேடியாவ எடுத்து ரிசிவர்ல ’பகாத் அல் மியாஸ் ஒவர்’ ’பாகத் அல் மியாஸ் ஒவர்’ என்றதும் எதிர் முனையில் இருந்து ’அபுஅலி மூமூஸ்கில் ஒவர் , மூமூஸ்கில் ஒவர்’

அபுஅலி இந்த கலாம் டெலிபோன் என்றனர் வல்லா அதா அல்லா கரீம்’

’என் செல்போன் திரும்ப அடிக்குது.மனைவி என்னங்க கட்டாயிடுச்சி பிரச்சினை
அதிகம்னு சொல்ராங்க வர பாருங்க’

’வச்சிடட்டுமா’

’பையன்ட்ட குடு’

’த பையன்ட்ட பேசுங்க,பேசு அப்பா அப்பா’ என்றாள்

ஒன்றரை வயதில் விட்டு வந்தது ’அப்பா பத்திரம்! பத்திரம்பா!’

கண்ணில் நீர் கசிகிறது எனக்கு

அதா பச்சா என்கிறார் அபுஅலி ஆமாம் என்று தலையாட்டி கொண்டு பயப்படாதே வந்துடறேன் என்று சொல்லி வைத்தேன்.

என்ன சொல்றான்னு கேட்கிறான் கருப்பன்.

நான் கண் நிறைந்து பத்திரம்பானு எல்லாருக்குமான வார்த்தைய சொல்ரான் என்று சொன்ன உடன் ‘வல்லா அதா அல்லா கரீம்’ என்றார் அபுஅலி.

மறுநாள் அபுஅலி, நேத்து நாம வந்தப்ப வந்த மிஷேல் தான் பேட்ரியாட் அடிச்சப்ப மீனா அப்துல்லாவுல்லா எரிந்து விழுந்துச்சுன்னு சொல்றான். அதிர்ச்சியில் எனக்கு ஒன்றும் சொல்ல முடியல.

’வப்பா முதல் நாள் மாத்திரம் இரண்டு விழுந்துச்சுனு சொன்னாங்களே’

’பர்ஸ்ட் வந்தது மீன அப்துல்லாவிலும் இரண்டாவது மிஷேல் ஐகராவில உழுந்துச்சு சார் பேட்ரியாட்டோட கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாயிருக்கு. பிறகு எல்லாத்தையும் கிளம்பும் போதே அடிச்சுட்டானுங்க. ’அதான் TV பார்த்து இருப்பிங்களே’

’ஒரே ரூமர் அதிகம்பா’

’ஆமாம் சார் நடந்த 25 நாளும் ஒரே கதை தான்’

’ரோடு வெறிச்சொடிக் கிடக்கு. குவைத் அரசு நாட்ட விட்டு யாரும் போக அவங்க மக்களுக்கு தடை போட்டுடூச்சு. முத வாரம் மட்டும் பயங்கரமா குவைத்தாலதான் சன்டையே அதனால குவைத்த சதாம் நாசம் பண்ணுவான்ங்கற பயம் எல்லார்டியும் இருந்தது. அப்புறம் BBC பார்த்து போர் நிலவரம் தெரிஞ்சது அதுக்கு பிறகு தான் ஐனநடமாட்டம் சகஐ நிலைமைக்கு திரும்புச்சு.

’வாப்பா ஈராக் ஆள் எடுத்தாங்களே அதுல போயிருக்குலாம்’

’வாய்ப்பு வந்துச்சி அங்கு ரோடும் பாலமும்கட்டி கொடுத்தா மொத்தத்தையும் அள்ளி
போவதற்க்கா எனக்கு விருப்பமில்லை சார்’

’நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் உலகிலேயே விவசாயம் தோன்றியது ஈராக் தான் அந்த மக்கள் ரோடில் கையேந்த வச்சிட்டானுவ’

’யூஃப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா சார்’

’மிக முக்கிய உணவுப் பயிர்களான கோதுமை, பார்லி, ரை, யூஃப்ரிட்டீஸ் – டைக்ரீஸ் நதிச்சமவெளிகளில் தோன்றியதாகச் சொல்லி உலக வரலாற்று ஆய்வாளர்கள்
நடக்கும் அநியாயத்தை பார்த்து எழுதுறாங்க. மேலும் இந்த குவைத் வழியாக தான் கொண்டு போறான். ஒரு டிராக் ரோடு முழுவதும் அவனுங்க வண்டி போக ஒதுக்கி விட்டாங்க, நடந்த அநியாயத்தை பேப்பர்ல புக்ல பார்த்துட்டு எப்படிச் செய்ய முடியும்’

’சதாம் என்னிடம் ஒன்றுமில்லை சொன்ன பிறகு அடிச்சு பிடுங்கிட்டானுவலே நியாமா சார்’

’பெரிய அநியாயம்பா எல்லாரையும் ரோட்டில் நின்று கையேந்த வச்சிட்டானுவ.
வுடு அத. மனசு கஷ்டமா இருக்கு’

’ஏன் வாப்பா, இன்னும் எவ்வளவு தூரம் போவனும்’

’வந்துட்டுது சார். இறங்கி நடந்துதான் பாக்கனும்’

’கேஸ் நாத்தம் அடிக்குது வாப்பா’

’ஆமாம் சார் சுற்றி இருக்குற எல்லா எண்ணெய் கிணறுகளையும் அழிச்சு இருக்கானுவ, அதில இருந்து வரும் சார்’

’வாப்பா, கேஸ் மானிட்டர் வண்டியில இருந்தது எடுத்து வந்து இருக்கலாம்.
பர்மிட் இல்லாம ஒரு வேலையும் செய்ய கூடாது புரியுதா’

’சார் நீங்க முதல்ல பாருங்க’

அச்சமயம் பார்க்காத மறுபுறத்திலிருந்து வந்தோம்.

’சார் ரெண்டு கொடி தெரியுதா அதுக்கு பக்கத்தில் பாருங்க தூவாரம் தெரியுதா’

’ஆமாம் வாப்பா அதுலேருந்து நாய் வருது பாரு’

’சார் நாய் இல்லை நரி. ஆமாம் சார். முன்னாடி பார்த்தப்ப மனசார நினைச்சன் நரி குகை மாதிரி இருக்குன்னு.

’இந்த மாதிரி குகை முன்னாலே பார்த்திருக்கியா’

’ஆமாம் சார். வெள்ளாத்து கரையோரம் கீரிப்பள்ளம் வயலுக்கு போவோம் அப்ப நரி நத்தை நண்டுவல மேயும் நம்மள பாத்துட்டுதுனா இந்த மாதிரி கரை பாருல டப்புன்னு ஒடி புகுந்துடும். நாம பார்க்காத போது அப்படியே நானல் வழியாக வெளியே வரும். ஏன் வாப்பா எனக்கு ஒன்னும் தெரியலையசார் அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகள், இரண்டையும் இணைத்து பங்கர் இருக்காம்.

’வாப்பா நரிவ வருது நிச்சயம் ஆளுவ செத்து இருப்பாங்க’

’என்ன செய்யனுமாம் கருப்பனுக்கு’

’மெயின் ரோடில் இருந்து ரோடு போட்டு வந்து இதுல கனைக்ட் பண்ணி டாங்கிகளை சுற்றி நோன்டி தர சொல்ரான் சார்’

’இது நம்ம வேலையே இல்ல வாப்பா நாம செய்ய வேண்டாம். நான் ஐார்ஐிகிட்ட பேசறேன். வேணுமுன்னா ஒனர் அல் மூசாரிய விட்டு பேச சொல்லும்’

எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது எப்படியாவது விட்டு போனா போதும் என்றது
மனம் உள்ளுக்குள்.

வெளியில் இருந்து பார்பவர்க்குத் தெரியாத வகையிலும் அங்கு இருந்த பார்த்த போது
சுற்றி இருந்த அனைத்து GC களும் 1,2,9,11,18 & 22 தெரியும் வண்ணம் இடம் தேர்வு செய்து அமைக்க பட்டிருந்தது.

’வாப்பா சதாம் குவைத்தை அவன் வச்சிக்கனுமுனுதான் மத்த GCக்கள விட்டு வச்சான்’

’ஆமாம் சார்’

’பின்ன இதெல்லாம் யார் அழிச்சது சார்’

’என்னப்பா தெரியாத மாதிரி கேட்கற எல்லாம் நேட்டோ தான்’

’வண்டிக்கு வந்ததும் நீ மேத்யுகிட்டச் சொல்லிடு. நான் போயி பேசி தகவல் சொல்றேன்’

’சரி சார்’

அப்போது மார்ச் மாதம். மாதத் தொடக்கத்தில் வரும் இளவெயிலும் குளிருமான காலை நேரத்தில் அபுஅலியுடன் சென்று கொண்டு இருந்தேன். புது மிட்சுபிஷி பஐிரோ வண்டி மெல்ல அகமதி மெயின் ஆபிசில் இருந்து வெளியேறி புர்கன் செல்லும் மெயின் ரோடில் வேகம் பிடித்தது.

வெளியில் பார்த்த போது வேலைக்கு செல்ல சாரியாக வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. மிக்காலும் வண்டியில் ஒருவரே வீற்றிருந்தனர். வண்டி செக்யூரிட்டி கேட் நெருங்கிய போது, அபுஅலியின் நண்பர் நின்று இருந்தார். புர்கன் ஏரியாவின் செக்யூரிட்டி கெட் அவர்.

நிறுத்தி சலாம் சொன்னோம். இருவரும் அவர்கள் பழக்கப்படி மூக்கை உரசிக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். பேச்சு வேலையைப் பற்றி திரும்பியது. ’வல்லா முஸ்க்கிலா’ என்று அடிக்கொருதரம் சொல்லி கவலை கொண்டு
சதாம் குவைத்தை ஆக்ரமித்த போது விட்டு சென்ற ராணுவ டாங்கிகளை எடுத்து அந்த இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க வேண்டும்
என்று ஆர்டர் வந்திருந்தை சொல்லி வருத்தப்பட்டு பேச்சு வளர்ந்து கொண்டு இருந்தது.

கேட்டில் வாகனங்கள் எல்லாம் நிறுத்தி தொழிலார்களை இறக்கி விட்டன. அவர்கள் வரிசையாக நடைபாதையில் வந்து செக்யூரிட்டி செக்கப் முடித்து அவரவர் பஸ்களில் ஏறுவதற்கு வந்து கொண்டு இருந்தனர்.

வெயிலில் சாயம் போன வெளுத்த கவரால்கள். அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர்.
தலையில் மங்கி குல்லாய் கவலையும் ஏக்கமும் தூக்க பித்தும் நிரந்தரமாக தங்கி விட்ட முகங்கள்.

சேப்டி ஷூ அணிந்து நடந்து நடந்து வேலை செய்து வலியாகவே ஆன கால்களை கொண்டு நடந்து வரும் கலவையான தொழிலார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டினர் அதிகம்.

எனது கம்பேனி பஸ் வந்து நின்றது. இன்று யார் யாருக்கு ஊரிலிருந்து போன் வரும் என்று தெரியவில்லை. சாப்பாட்டு டைமில் செல்லவில்லை என்றால் இந்த லேபர்கள் தவித்து போவார்களே என்று எண்ணிய போது, ’எல்லா எல்லா’ என்று சத்தம் கேட்டு திரும்பினேன்.அபுஅலி வண்டியில் இருந்து கூப்பிட்டார். ஏறியதும் வண்டி புர்கன் மெயின் ஆபிஸ் சாலையில் ஒடியது.

வழியில் எனது வண்டியிடம் விட்டு பின் தொடர சொல்லி சென்றார்.

அரபிகளுக்கு பொதுவாகவே தான் சொல்லுவதுதான் சரி என்ற அகங்காரம் உண்டு. பிழைக்க வந்தவர்களிடம் மிக்க் கேவலமாக நடந்து கொள்வர். முடியாதவனை மாறி மாறி அடித்து துவைப்பது போல. அபுஅலிக்கு கம்யூட்டர் என்றால் பெரும் பயம்.
என்னிடம் சிறிது நட்பு காட்டுவான். அதுவும் வேலை ஆகும் வரைதான். விருப்பத்தை கேட்டாலின்றி வாயை திறப்பதில்லை. நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காகாமல் இருந்தால் சரி.

ரோட்டின் இருபக்கத்திலும் வேலிக் கருவை மரங்களும், சில பெயர் தெரியா மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகப் பிரயத்தனப்பட்டே வளர்கின்றன.

வெளிநாடு வந்து எவ்வளவோ பிரயத்தனப்பட்டு பார்க்கிறோம். இந்த பெயர் தெரியா மரங்களைப் போலே. இந்த மரஞ் செடிகளுக்காகவது நிச்சயமாக தண்ணீர் டேங்கர் மூலாமாகவோ, பைப் மூலமாகவோ நீர் கொடுக்கின்றனர்.

ஆனால் நமது தேவை எப்போது நிறைவுறும்? எப்படியாவது இருக்கும் கடன்களில் இருந்து மீண்டாலே போதும் நமக்கு எப்போது இங்கிருந்து விடுதலை?

மனம் கனத்து சிந்தனையில் ஆழ்ந்து, குழந்தையும் மனைவியும் நிழலாடினர். பையனை பார்க்க மனம் ஏங்கி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய போது வண்டி புர்கன் ஆபிஸ் வந்து விட்டது.

அபுஅலி வண்டியில் இருக்க சொல்லி விட்டு டீம் லிடரை பார்க்கச் சென்றார்.

இவர்களுக்கு எப்போதும் வேலை இருக்கதான் செய்யும். அபுஅலி நல்ல மனநிலையில் இருக்கும் போது லீவு சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் காரியம் கெட்டு விடும். என்ன மாதிரி வேலை இருக்குமோ என்று கவலை வாட்டியது.

அவர்கள் எல்லாம் சென்று விட்டார்களாம். ஸ்பாட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அவர் வண்டியில் என்னை ஏறச் சொல்லி, எடுத்து விரட்ட ஆரம்பித்தார்.

ஃபுல் ஆட்டோமோட்டிவ் வண்டி 140கீமி வேகத்தை எட்டியது. கிறுக்கன்! முழுவதும் கொண்டு சேர்ப்பானா என்று நினைத்து டோர் கை பிடியைப் பிடித்ததும, ’பயந்து போய் விட்டாய்’ என்று சிரித்து கொண்டே மேலும் விரட்ட ஆரம்பித்து விட்டான்.

சோதனையாய் இருந்தது எனக்கு. இப்போது இவனிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்று மவுனமாகி விட்டேன்.

வண்டி சிறிது தூரம் சென்றதும் ரிக் ரோடில் இறங்கி ஒட ஆரம்பித்து விட்டது. முதலில் GC 14 வந்ததும்,

’சூப் ஆத சதாம் கவ்வாத்’

கொளுத்தி விட்டான் எவ்வளவு இழப்பு. அவன் கோபமாக இருப்பதை பார்த்து நான் ரோடை பார்க்க ஆரம்பித்தேன்.

வண்டி வளைவில் திரும்பி GC 10 செல்லும் ரிங் ரோடில் திரும்பி வேகம் பிடித்து லோகேஷன் வந்தது.

அங்கு Koc மேலதிகாரி அனைவரும் முகாமிட்டு இருந்தனர். எனது கம்பேனி ஐிஎம் ஐார்ஐ், மாத்யு, சேப்டி உதுமான் அலி மற்றும் ஒனர் அல் முசாரி வந்திருந்தனர்.

மீட்டிங் நடந்தது அந்த இடம்தான். குவைத்தில் மிக செறிவான எண்ணெய்ப் படலம் உள்ள பகுதி. எவ்வளவு விரைவில் அந்த இடங்களை கொடுக்க முடியும் என்று கேட்டவுடன், சேப்டி உதுமான்அலி, ’நாங்க ரோடு போட்டு மட்டும் தரோம் மற்ற வேலைகளை நீங்கள் ராணுவத்தினரை கொண்டு செய்து கொள்ளுங்கள்’ என்றதும், டீம் லீடர், ’எல்லா பரா’ என்று கோவப்பட்டு விட்டு, ஒனர், அல்முசாரியை அழைத்து மொத்த வேலையும் ஒரு மாசத்துக்குள் முடித்து தரணும் இல்லை என்றால் புதிய வேலை தர முடியாதுன்னு சொல்லி விட்டார்.

ஒரு மாதத்தில் முடித்து தருகிறோம் என்று மூவரும் ஒத்து கொண்டு என்னை அழைத்து தேவையானதை சொல் கம்பெனி செய்யும் என்றனர்.

நான் பரிதாபமாக உதுமானை பார்த்து கொண்டே வாயை திறக்காமல் தலையை
ஆட்டினேன். ஐார்ஐ் உதுமான் சாரிடம் ’இந்த வேலை முடியறவரை சேப்டியா செக் பண்ணி வேலை பார்க்கனும். கம்பேனி பிரஸ்டிஐ்யாயி போச்சு. வேற மீட்டிங்
இருக்கு நான் கிளம்பறேன். மாத்யு இவிட எல்லாம் அரேன்ஐ் செய்யனும் கேட்டோ?’ என்றார்.

ஒகே சார் என்று மாத்யு சொல்லி விட்டு என்னிடம், ’இரண்டு பைலை தந்து இந்த சர்விஸ் ஆர்டர் எல்லாம் முடிச்சுக் கொடு. வேலையைத் தொடங்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்னை தொடர்பு கொள்’ என்றார்.

நான் சர்விஸ் ஆர்டரைப் பிரித்தேன்.

உதுமான் சார் என்னை நோக்கி வந்தார்.

’என்ன வாப்பா எப்ப ஆரம்பிக்கப் போற’

’ஆரம்பிக்கலாம். இந்த அநியாயத்தை கொஞ்சம் பாருங்க’

’சர்விஸ் ஆர்டர்ல பாருங்க சார். ஓர்கிங் அவர்ஸ் 8, ஒவர் டைம் 4 அவர்ஸ், koc கொடுக்கிறது சார்.’

’எங்க டைம் ஷிட்டை பாருங்க ஒர்கிங் அவர்ஸ் 10 ஒவர் டைம் 2 அவர்ஸ் கேட்டால் எல்லாம் பத்து மணி நேர வேலைக்கு கையெழுத்து இட்டுள்ளிர்கள்’ என்கிறார்கள்.

Koc புராஐக்ட் வேலை இல்லாத மற்ற கம்பேனி நேரடி வேலைக்கு மாத்திரம் முறையே 8 அவர்ஸ் மற்றும் 4 அவர்ஸ் தருகிறார்கள்.

ஒரே கம்பேனியில ரெண்டு விதமாக சம்பளம் கொடுத்து மலையாளிங்க கொள்ளையிடுரானுங்க. பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்தா நிலமை எப்படி இருக்கு பாருங்க. அட்லீஸ்ட் இந்த லேபர்களுக்காகவது கொடுக்க சொல்லுங்க சார்.’

’வாப்பா நான் செய்ய முடியாது இது எல்லாம். கம்பேனி பாலிசி. நா வரேன். வேலை
ஆரம்பித்துவிட்டால் போன் செய்.’

நான் வெறுப்பில் பைலை தூக்கி சீட்டில் எறிந்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

நினைவில் வேலையின்றி நின்றது நிழலாடியது. ஒவ்வொரு முறையும் சென்னை சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்வதும் கிடைக்காமல் திரும்பியதும் கடைசியாக வேறு வழியில்லை என்ற நிலையில் இந்த வேலைக்கு ஒத்து கொண்டு வந்ததும் இங்கு வந்த பிறகு இவர்களது பித்தலாட்டம் தெரிந்த போது ஒன்றும் செய்ய இயலாத நிலை.

அதிகாரிகளை அனுப்பி விட்டு அபுஅலி என்னிடம் வந்தார்.

நான் முகம் வாடி இருந்ததை பார்த்து விட்டு, ‘என்ன?’ என்று விட்டு, ‘நாளை வேலை தொடங்கணும்’ என்றார்.

சரி என்று தலையாட்டினேன்.

தொடர்ந்து வந்த நாட்களில் உதுமான் சேப்டி மற்றும் அபுஅலி அவர்களது அதிகாரத்தில் வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை மேலிடத்தில் காட்ட பிரயத்தனப்பட்டனர்.

நான் தெளிவாக நமது உழைப்பு பார்க்கப்படாதுஎன்று அறிந்தே இருந்தேன். அதனால் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து விட்டு இருவரது நாடகத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். வேலை அதுவாகவே நடந்தது.

குறிப்பிட்ட படி செல்வதற்காக ரோடு போட்டாயிற்று. டாங்கிகளை சுற்றிலும் மண் அகற்ற எந்த லோடர் ஆப்ரெட்டரும் தயாராக இல்லை.

நான் மாத்யுவிடம் விஷயத்தை சொன்ன போது ’என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இது கம்பேனி வேலை நீதான் செய்து சமாளிக்கனும்’ என்றார்.

மேலதிகாரிகள் ஆளாளுக்கு கடுமையாக நடந்து கொண்டு வந்தனர். அன்று காலை அபுஅலி, ’எப்போது முடிப்பாய்’ என்றார்.

அப்போது எனது செல்பேசி ஓலித்தது.

மினு அது மாத்யு ‘ஸ்பீக் ஸ்பீக்’ என்றார்.

’சார்!’ என்றதற்கு ’சர்வீஸ் ஆர்டர் எல்லாம் கையெழுத்து ஆயிடுச்சா’

’இல்ல சார் இரண்டு நாளில் வாங்கி தருகிறேன்’ என்றதும் வைத்து விட்டார்.

அபுஅலி ’என்ன!’ என்றான். உனது கையோப்பம் வேண்டும் என்ற போது திரும்ப செல்பேசி ஒலித்தது ‘மினு மாத்யு’.

ஐிவ்

இந்த கவ்வாத், ஐ பக் யூ

’வீ ஆர் ன் மீட்டிங் டோன்ட் கால்’

மாத்யுவிடம் அவர் அது வரை கேட்காத கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு என்னிடம் ஒரு வாரத்தில் எனக்கு வேலை முடியணும். நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சர்விஸ் ஆர்டரை கீழே வீசி விட்டு சென் று விட்டான்.

நான் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தேன் முகத்தில் துப்பிய எச்சிலை துடைப்பது போல் அவமானமாக இருந்தது. அப்படியே போட்டு விட்டு வீடு சென்றால் எப்படி இருக்கும்?

அவமானம் நமக்கு புதிது அல்ல முதலில் பிறந்து வளர்ந்த வீடு வெளியில் தள்ளியது பிறகு விதி கையில் எடுத்து ஆடியது.

ஆடி மாதத்தில் யாரோ கொடுத்த அவரை, சுரை விதைகளை என்னை ஊன்ற சொல்லி பிள்ளையை வைத்து கொண்டு அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தவளை காய்த்ததையும் பறித்துக் கொண்டு வரும் போது வண்டியில ஏற்றிவந்தியா என்று நிந்தித்தையும் பொறுத்து சமாளித்தாளே, இங்கு வருவதற்கு முதல் நாளன்று கூரையின் பொத்தல் வழியாக நிலவு எங்கள் மேல் விழுகிறது அதில் சிறு துளி பையன் மேல் பொட்டு பொட்டாக விழுந்தது.

நான் இங்கே இருந்தால் வறுமை மேலும் நம்மை தின்று விடும் பையன் மேல் விழும் இந்த நிலவொலி நாளை மழை நீராக இருந்தால் நாம் தாங்க மாட்டோம்.

நீ பெரிய மனது பண்ணி நான் போக அனுமதிக்க வேண்டும். காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. முடிந்தால் இவ்விடத்தில் வீடு கட்டிடலாம் என்றதற்கு ஓ! என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு அமைதியாக சமாதானமாகி என்னை அனைத்து தேற்றி் சந்தோஷப்படுத்தி பிரிவை எண்ணிக் கலங்கி தூங்கிவிட்டாள். பாவமாக இருக்கிறது.

நான் தூங்க வில்லை. நாம் இருக்கும் போதே இவளை பேசி அவமான படுத்துகிறார்களே நாம் இல்லை என்றால் எவ்வளவு படுத்துவர். பையன் எப்படி ஏங்கி போவான் கண்ணீர் கொட்டி கொண்டு இருந்தது. இரண்டு சொட்டுசர்வீஸ் ஆர்டர் மேல் விழுந்துவிட்டது. துடைத்து மேலே வைத்தேன்.

அவள் அருகே இருந்தால் எப்படி இருக்கும்? பாலைவனம் எத்தனையோ அன்பு கொண்டவர்களின் கண்ணிரை குடித்து தான் தாகம் தீர்க்கிறது.

இந்த மாத்யு என்ன நினைப்பாரோ தெரியவில்லை. பழி நினைத்தால் ஊருக்கு போவது அவர் மனது வைத்தால்தான் நடக்கும்.

இன்று காலையிலே ஏன் இப்படி நடக்கிறது நல்லதுக்கா கெட்டதுக்கா கடவுளே!.

நான் நிலைகுலைந்து இருப்பதை பார்த்த லோடர் ஆப்ரேட்டர் நெருங்கி, ’கியாகோகையாஐி,அவன் பைத்தியக்காரன், காண்டு. நீ விடு என்ன செய்யனும் சொல்லு நான் செய்யறேன்’ என்றான்.

நான் அவனை உற்றுப் பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

’நான் செய்யறேன் சொல்லு’ என்றதும்

’ஒரு வாரம் லொடிங் பாயிண்ட் போய் டோசர் ஒட்ட முடியுமா. நான் தாய்லாண்டு கம்பேனி ஆள வச்சு இந்தவேலைய முடிக்கிறேன் என்றதும்அவன் மகிழ்ந்து ஒத்துக் கொண்டான்.;

தாய்லான்டு ஆபரேட்டரை கொண்டு வந்து பிரச்சினையைச் சொன்னேன். நீ செய்தால் உனக்கு 4 அவர்ஸ் ஒவர்டைம் கிடைக்கும். இந்தி ஆப்ரேட்டர் செய்தால் 2 அவர்ஸ் தான் கிடைக்கும் இதை செய்து கொடுத்தால் உனக்கு மேற்க்கொண்டு ஒவர்டைம் தருகின்றேன் என்றேன்.

தாய்லாண்டு சுற்றி பார்த்து கொண்டு இருந்தபோது அபுஅலி லோகேஷனுக்கு டீம் லீடருடன் பார்வையிட வந்தார்.

டீம் லீடர், இப்ராகிம் ’தாள்’ என்று என்னை அழைத்தார். ’

’சார் ஆனா இந்தி’என்று சிரித்தேன்.

ஒரு வாரத்தில் முடித்துக் கொடு என்றார். எனக்கு இதனால் மிக பிரசர் இருக்கிறது
அதனால் தான் சர்ப்ரைஸ் விசிட் வந்தேன். ’இல்லை முடிச்சுடறேன்’ என்றதும் மகிழ்ந்து சென்றார்.

கருப்பன் என்னிடம் ’சாரி சாரி பேப்பரை எடுத்து வா’ கையெழுத்து இடுகிறேன் என்று செய்து கொடுத்தான்.

’வேறு ஏதாவது வேண்டுமா?’

’ஆமாம் சார் இந்த வேலை முடிந்ததும் ஊருக்குச் செல்ல வேண்டும். தற்போது மேத்யு தருவார் என நம்பிக்கையில்லை நீ கொஞ்சம் பேச
முடியுமா?;

’ஓ எஸ்; போனை அடித்து ’மிஸ்டர் மேத்யு’

’ஐயம் சாரி’

’யூ நோ, வீ கேவ் பிரஷர். ’ஐ லாஸ்ட் மை கன்ரோல். சீ ஐ சைன் ஆல் யுவர் பேப்பர் யு கேன் கலேக்ட்’

’ஒகே சார் தாங்யூ’ என்று மேத்யு மகிழ்ந்த போது

’சீ மேத்யு ஹி வான்ட் கோ ஹோம். ஆப்டர் கம்பிளிட் யு சென்ட் ஹிம்’ என்று என்னை பார்த்து ஒரு கண்ணை மூடித் திறந்தான்.

’ஒகே ஒகே எஸ் சார்’ என்றார் மேத்யு.

மிகுந்த பிரயாசைப் பட்டு ஊர் வந்து இரண்டு நாளாகிறது. கூரையை செப்பனிட்டு வைக்கோல் இட்டு இருந்தார் மனைவி. வைக்கோலின் மணம் நான் கொண்டு சென்றிருந்த பெர்புயுமை எல்லாம் பொய்யாக்கியது.

யார் யாரோ வருகிறார்கள் விசாரிக்கிறார்கள். மனம் மட்டும் பிள்ளை நம்மிடம் வரவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறது.

தாய்லாண்டு மேற்க்கொண்டு செய்ய தயங்கியதும் அவனிடம் மேலே அரை மீட்டர் மட்டும் மண் எடு. உன் பக்கத்தில் வண்டியில் நான் இருக்கிறேன். நீ முழுவது‌ம் தோண்டி முடிக்கும் வரை எங்கும் செல்ல மாட்டேன். உறுதி கூறி அவன் முடிக்கும் வரை இருந்து ஒவர்டைம் அதிகம் கொடுத்து வேலையை முடித்து, மாத்யு கொடுத்த ஆபிஸ் வேலகளும் முடித்து விடைப்பெற்று வந்து சேர்ந்தேன்.

எந்தக் கெஞ்சலும் கொஞ்சலும் பையனிடம் செல்ல வில்லை இரண்டு நாளாய் அலைகழிக்கிறான்.

தூக்கச் சென்றால் ’அம்மா’ என்று கத்தி கொண்டு ஒடுகிறான். வீட்டில் இருந்தால் உள்ளேயே வருவதில்லை. போட்டாவில் இருப்பதை போல் இல்லையாம்.

மூன்றாவது நாள் காலை நான் அவனுக்கு பாகில் லூலூ சென்டரில் வாங்கிய துணி மணிகளும் மங்காப் சுல்தான் சென்டரில் வாங்கிய பொம்மை சாக்லேட் ஒன்றையுமே அவன் தொடவில்லை மனம் நடுங்கிக் கொண்டு இருந்தது.

’அப்பா எங்கம்மா’ என்று அவன் குரல் கேட்டது.

கண்ணில் தானாகவே நீர் நிறைந்து என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறு கேவல் எழுந்ததை கட்டுப்படுத்துகிறேன்.

’அப்பாவ இப்ப தான் தேடறியா? உள்ள போயி பார்’ என்றாள் மனைவி.

மெல்ல எட்டிப் பார்க்கிறான். நான் தலையை ஆட்டி சைகை செய்த போது
என் கண்ணில் நீர் நிறைந்து அவன் நிற்பது தெரியாமல் மறைத்து இருந்தது.

மெல்ல வந்து கட்டில் மேல் ஏறி என் இரண்டு கண்களையும் இரு கைகளாலும் துடைத்துகொண்டு, ’ப்பாஆ!’ என்று தேம்பி உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தான்.

நானும் தான்.

ஊழ்

 

தி வேல்முருகன்

 

oozh_poem

அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால் அவுட்-ஹவுஸ் என நவீன வில்லாவுக்கு உருவம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். முருகன் மேஸ்திரிதான் தினக்கூலிக்கு ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளி வருகிறது, பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும். குழந்தை பிறந்த அன்று வெறும் கையாய் நின்றது, இப்போது ஏதாவது செய்ய வேண்டும் காசுக்கு, என்று உருட்டிக் கொண்டு இருந்தது.. இந்த வேலையில் ஒன்றும் பைசா பெறாது. ஏற்கனவே கழுத்துவரை வாங்கியாகி விட்டது இப்போது வட்டிக்குச் செய்வது போலதான் அவன் அந்த வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

புரட்டாசி மாதம் ஆரம்பித்து கடைசி வாரமாகியும் மழை இல்லை. ஆனால் அன்று பார்த்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்து திடீர் என்று காற்று மாறி மழை வந்து வேலையைக் கெடுத்தது. எனவே, திரும்பி வரும்போது அதே தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற வாத்தியார் இவனைக் கூப்பிட்டார். வாத்தியார் மகன் அவனது நண்பன்.சிஆர்பிஎப்பில் நார்த்தில் பணிபுரிகிறான்.

“என்ன பாக்கறப்பா, வா, அம்மா கூப்டுது பாரு”

வாசலில் இருந்த வெள்ளை நாய் உறுமியது.

தயங்கி வெளியில் நின்றவனை, “வாப்பா உள்ளே”, என்று கூடத்துக்கு அழைத்தனர்.

“என்னம்மா?”

‘மேலே பாரு தம்பி”

மேலே பார்த்தபோது ரூப் சிலந்தி வலை போல் விரிசல் விட்டு அது வழியாக காலையில் பெய்த சிறு மழைக்கே தண்ணீர் கசிந்தும் சொட்டிக் கொண்டும் இருந்தது..

“சார் காலம் போட்டு கட்டிய வீடுதானே?” என்றான்.

“ஆமாம் தம்பி ஐய்யாரு மேஸ்திரிதான் கட்டினாரு செஞ்சாரு.மணி கொத்தனாருதான் கிட்ட இருந்து எல்லாம் வேலையும் செஞ்சாரு”.

“இங்கே மட்டும் தான் தண்ணீர் சொட்டுதா?”

‘இல்லப்பா ரூம்ல,கிச்சன்ல அப்படியே ஊத்துதுப்பா”

பார்த்தபோது எல்லா இடமும் சிலந்தி வலை போல் விரிசல் இருந்தது. கிச்சனில் மிக அதிகமாக விரிசல் விட்டு ரீபார்லாம் துருப்பிடித்து உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.

“ஏன் சார் தண்ணி கசியறத பாக்காம விட்டுடீங்களா?”

“நீ வேறப்பா போன வருசம்தான் மேல கொத்திட்டு புதுசா டைல்ஸ் எல்லாம் போட்டன், அதுக்குள்ள ஒழுகுது.”

“சார் வாங்க வீட்ட வெளிப்பக்கமும் மேல்தளத்தையும் பார்ப்போம்”.

அவன் பார்த்தபோது காலம் போட்டு இருந்த இடமெல்லாம் நேர்க்கோடாக விரிசல், பழைய வீட்டு அஸ்த்திவாரத்தின் மேலேயே சுவர் வைத்து எழுப்பிருக்கிறார்கள். கீழே பீம் கொண்டு இணைப்போ லிண்டல் பீமோ கொடுக்காமல் வெறும் சுவற்று மேலே ரூப் தளம் அமைத்ததால் கீழே அஸ்திவாரம் கனம் தாங்காமல் உட்கார்ந்து விரிசல் விடுகிறது. ‘மற்றபடி நகாசு வேலைகளால் தரையும், பூவூம், கைப்பிடியில் குழவும் கார்னரில் திரனையும் செய்து தங்களது அனுபவத்தால் மேஸ்திரி இழைத்து வைத்திருந்தார்.

“சார் வீட்டிற்கு மேல மேல செலவு செய்வது வேஸ்ட், கீழே அஸ்திவாரம் ஒக்காருது. இப்ப சரி செஞ்சாலும் திரும்ப பழையபடி ஒழுவும், இந்த வீடு தாங்காது அண்ணன்கிட்ட சொல்லுங்க லோன் போட்டு இடிச்சுட்டு புதுசா கட்டிடுவோம்,” என்றபோது கையில் காப்பி வைத்து கொண்டு எதிரில் நின்ற அம்மாவின் கண்ணில் நீர் பொலபொலவென வடிந்தது. காப்பியை மேஐையில் வைத்துவிட்டு ரூமுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து அழுவது தெரிந்தது. ஏன் சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.

அதைப்பற்றி கவலைப்படாமல் வாத்தியார் காப்பியை எடுத்து உறிஞ்சும் சத்தம் நிசப்தத்தை உடைத்து நாராசமாக்கியது. ”

”என்ன தம்பி காப்பி ஆறிடும், எடுத்துக் குடி”

இவனுக்கு காப்பியை கையில் எடுத்தும் குடிக்க முடியவில்லை நெருப்பை விழுங்குவது போல் இருந்தது இரண்டு நிமிடமும்.

வாத்தியார் ரூமைப் பார்த்து, “இப்ப என்ன செய்யறது>” என்று ஆரம்பித்ததும் ;இவன், “சார் நான் உள்ளதச் சொன்னேன். இப்ப பேருக்கு செஞ்சிட்டு திரும்ப கன்டிப்பாக ஒழுவும் அப்ப கேட்க மாட்டிங்களா?” என்றான்..

ரூமில் இருந்தே அம்மா, “வேற வழியில்லையா?” என்று கேட்டார்.

‘இருக்கும்மா. செலவு ஆகும் செஞ்சா இரண்டு மூன்று வருசமாவது தாங்கும்”

“அப்படியே செஞ்சுடுப்பா,” என்றார் அம்மா.

வாத்தியார், “என்ன மாதிரி செய்யனும்?” என்று விசாரித்தார்.

“சார் பழைய டைல்ஸ் எல்லாம் கொத்தி எடுத்துட்டு ரூப் விரிசல் எல்லாம் ரிப்பேர் பார்த்து வாட்டர் புருப்பிங் பண்ணிட்டு வாட்டம் காட்டி வேற டைல்ஸ் போட்டா தாங்கும்.”

“அதெல்லாம் ஒன்றும் வாணாம், இப்படி மேலேயே ஏதாவது செய்ய முடியுமா பாரு”

‘சரி சார் அளவு எடுத்து இரண்டு தார்ப்பாய் வாங்கி போடுவோம் ஒழுவாத மாதிரி ”

“என்னப்பா நீ போவாத ஊருக்கு வழி சொல்ற?”

“இல்லை சார் வேற எப்படி செய்யறதுனு தெரியல நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எனக்கு வேல இருக்கு” என்று அவன் கிளம்பினான்.

அம்மா வெளியே வந்து, “சாயந்திரம் வா தம்பி என்ன செய்யலாம்ன்னு நான் சொல்றேன்,” என்றார்.

வெளியே சிறு சாரல் மழை தூறி கொண்டு இருந்தது. நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் துணி மாற்றிவிட்டு “தீவாளிக்கு வழி பொறந்திருக்கு,” என்றான் மனைவியுடம் குழந்தையை வாங்கி கொண்டே. பையனிடம், “கடையில உள்ள விலக்கூடிய டிரஸ்தான் உனக்கு,” என்றான்,

குழந்தை கையை ஆட்டி வழக்கம் போல கே கே என்று புன்னகைத்தது.

“என்னது அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டிங்க, அப்படியே நாளு கிழமையில என் நகைக்கு ஒரு வழி பொறந்தா நல்லா இருக்கும் ”

“மேலும் மனைவியின் ஆவலைத் தூண்டாமல் நடந்ததைச் சொன்னதும், “வேல செஞ்ச மாதிரிதான் நீங்க வாங்குன மாதிரிதான், ஊருல அவன் அவன் எப்படி ஏய்ச்சு பொழைக்கறானுவ ” என்றாள் மனைவி. “நீங்க இப்படி ஊம கனா காண வேண்டியதுதான் ”

அவளைச் சொல்லி குற்றமில்லை, அவள் வந்ததிலிருந்தே இவனது உழைப்பும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை வெறுங்கையுடன் வருவதே வாடிக்கையாகி விட்டது !”செய்த வேலையெல்லாம் நஷ்டப்பட்டு நகையெல்லாம் அடகுக்கடையில் பத்திரமாக இருக்கிறது, திருப்பும் வழி எட்டிய தூரம்வரை தெரியவில்லை. மத்தளம் போல் இருந்தது அவன் நிலமை, ஏன்டா சொன்னோம் என்று ”

“மாலையானதும், “சரி அந்த வேலையை வாத்தியாருக்கு இல்லைன்னாலும் அந்த அம்மாவின் கண்ணீருக்காகவது செய்வோம்,” என்றான் மனைவியிடம்.

‘போய் பார்த்துட்டு வாங்க, என்ன செய்யறது அவங்களுக்கு என்ன கஷ்டமோ”

“அவன் சென்று பார்த்தபோது வாசல் கேட்டில் நாய் நின்று கொண்டு இருந்தது. ஒரே சீரான உறுமல். அடுத்த அடி வைத்தவுடன் வேகமாக குரைத்துக்கொண்டு மேலே பாய்ந்து விடும் போல் வந்தது.

“டைகர் ” என்று சத்தமிட்டு அம்மா வெளியே வந்தார்கள். “நாய் அவர் மீது உரசி செல்லம் கொஞ்சியது

“வாப்பா உள்ளே வா ”

“சொல்லுங்கம்மா”

“எனக்கு மருமகள நினைச்சுதானப்பா பயம், பையன் ஒத்துக்கிட்டான் செய்யச் சொல்லி நீ நாளைக்கே ஆளுகள ரெடி பண்ணி பெரிய மழைக்கு முன்ன முடிச்சு குடு”

“சார் இடையில வேற மாதிரி செய்யனும்னு சொன்னா…”

“சார் அப்படிதான் ஆனா இனி ஒன்னும் சொல்ல மாட்டார், பையன் சொல்லிட்டான்ல”

“சரிம்மா”

“நாளைக்கு இரண்டு ஐோடி ஆட்களை விட்டு உடைக்க விடுவோம். சார்ட்ட சொல்லிடுங்க. நான் போய் ஆட்கள் ஏற்பாடு பண்றம்மா,” என்றவன், “அம்மா இந்த நாய்…” என்று தயங்கினான்.

“டைகரா? நான் பின்னாடி கட்டிப் போடறன், பயப்படாதே ”

“அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி சொல்லி மறுநாள் காலையில் ஆட்களை ரெடி செய்து வேலையை ஆரம்பித்து விட்டான். செட்டியாரைப் பார்த்து “வாத்தியார் வீட்ல ஒழுகுது, ரிப்பேர் வேலை”, என்றதற்கு செட்டியார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்லுவார் என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்கு இருந்தது ‘

‘மேஸ்திரி தினக்கூலிக்கு ஆள் அனுப்புவதால், மாலையானதும் சம்பளம் கையில் வந்திடும், அவரது கமிஷன் எடுத்துக் கொண்டுதான் ஆட்களுக்கு தருவார். இவனுக்குதான் பயம் திட்டமிட்டபடி வேலை முடியல என்றால் கூடுதல் செலவு ஏற்படும் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். அதும் செட்டியாரை சமாளிப்பது பெரும் பாடு.

மேஸ்திரி கலியமூர்த்தியுடன் சேர்ந்து இரண்டு ஐோடி ஆட்களை அனுப்பியிருந்தார், கணவன் மனைவியாகதான் வருவார்கள் ஒட்டர் இன பழங்குடியினர் அவர்கள், வேலையை கான்ராக்ட்டாக பேசிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். அதிலும் மேஸ்திரி கமிஷன் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அடுத்த வேலை கிடைக்காது. இதெல்லாம் அவனுக்கும் தெரியும் ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

வாத்தியாரை வைத்துக் கொண்டு மேஸ்திரி கலியமூர்த்தியிடம் வேலையைச் சொன்னதும், “சார் இது எல்லாம் கடுக்காய் கருப்பட்டி போட்டு ஐல்லி போட்டு இருக்கு இது கான்ராக்ட்டாக செய்ய முடியாது, சம்பளம் கொடுத்து மதிய சாப்பாடு போட்டுடுங்க, ” என்றார் அவர்.

“வாத்தியார் “இங்கே சாப்பாடுலாம் செய்ய முடியாது,” என்றார்.

“மேல என்ன செய்யறது சொல்லு தம்பி”

“சார் சாப்பாடு கடையில வாங்கி கொடுத்துடலாம்,” என்று சொல்லிவிட்டு கலியமூர்த்தியிடம், “ஒரே நாளில் முடிச்சுடனும்,” என்றதும் “சார் நாளைக்கு முடிஞ்சாலே பெரிய விஷயம்” என்றார் அவர்.

இவன் வாத்தியாரை பார்த்ததும் அவர், “சரிப்பா சாப்பாடு வாங்கி கொடுத்துடறன். வேலையை ஆரம்பி ஆனா எனக்கு நாளைய பொழுதுக்குள் முடிச்சுடனும் ” என்று கறாராகச் சொன்னார்.

‘கலியமூர்த்தி ஆட்கள் வேலையைத் தொடங்கினர், முன்பே சொல்லியிருந்ததால் தயாராக சம்மட்டி, உளி பான்டுவுடன் வந்திருந்தனர் இயல்பாக வேலை நடந்தது, ஆனால், வாத்தியாரிடம் சொல்லிவிட்டு வீடு வரை சென்று வருவதற்குள் வாத்தியார் ஆட்களுடன் சன்டை போட்டு விட்டார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம், “என்னப்பா நீ இவன் இங்கே அடிக்கற அடி கீழே எல்லாம் கொட்டுதுப்பா. என் கெட்ட நேரம் இருக்கிறது பத்தாமல் மேலேயும் நீங்க ஒழுவ வப்பீங்க போலிருக்க” என்று கொபமாககக் கத்தினார்.

கலியமூர்த்தியும் அவனது ஆட்களும் வருத்தத்துடன் வேலை செய்வது தெரிந்தது, முகத்தில் ஈயாடவில்லை. நாளைக்கு வேலைக்கு வருவார்களா என்று இவனுக்கு கவலையாகி விட்டது.

“வாத்தியார் கீழே போய், “பாரு எப்படி கிடக்குன்னு என் பேச்ச எங்க கேட்கறா,ரிட்டையர்மென்டுக்கு பிறகு கிடந்து அல்லாடுடறன்,” என்றார்.,

இரண்டு மூன்று இடங்களில் மேலே ஐல்லியை உடைத்ததும் ஏற்கனவே இருந்த விரிசலில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்திருக்கிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் இவர்களுக்கு பயம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அம்மா, காப்பியோடு வந்து நிற்கிறார்கள் வாத்தியார் சண்டை போட்டு திட்டியதில் அழுதிருப்பார்கள் போல் இருந்தது.

அவன் அப்போதுதான் பழைய சாதம் தயிரோடு சேர்ந்து சாப்பிட்டிருந்தான் காப்பி வேண்டாம் என்றால் வருத்தப்படுவார் என்று வாங்கி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விட்டு வைத்தான்

“அம்மா கீழே விரிசல் எல்லாம் தட்டிவிட்டு புதிதாக கெமிக்கல் பூசி சரியாக்கனும் கொட்டினால் வேலைக்கு நல்லதுதான். நீங்க சாருகிட்ட கொஞ்சம் சொல்லுங்க, ஆட்களை சத்தம் போட்டா வேலைக்கு வரமாட்டாங்க., பிறகு வேலை முடிப்பதற்கு சிரமமாயிடும்!

“கேட்டுக் கொண்டு வந்த வாத்தியார், “நீ என்னப்பா, அவங்களுக்கு வக்காலத்து வாங்கற உனக்கு என் கஷ்டம் புரியாதப்பா,பையன் நாளைக்கு கேட்டால் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் எனக்கு. நீ கொஞ்சம் கிட்ட இருந்து இதை முடிச்சுக் கொடு, எனக்கு இந்த வேலை ஒன்றும் புரியல” என்றார்.

சரி சார் நான் பார்த்துக்கரன், ”

அப்படா என்று இருந்தது அவனுக்கு இனி கலியமூர்த்தியுடன் சமாளிச்சு வேலைய எப்படியாவது முடிக்கனும். கலியமூர்த்தி கள்ளமில்லாமல் வேலை செய்யற ஆள், வெடவெடவென்று நல்ல உயரம் கருப்பு. ஆனால் எங்கே போனாலும் கூலிக்காரன் என்று நினைத்துக் கொண்டு சற்று விரட்டினால் சன்டை போட்டு விடுவான். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பி, “கலியமூர்த்தி உடைச்ச ஐல்லியை எங்க போடறிங்க.” என்று கேட்டான்.

சார் அத ஏன் கேட்குற, வாத்தியார் மனுசன் மாதிரியா பேசராரு?.

‘ஏம்பா என்னாச்சு ”

சார் வேலை செய்யறவன் வெத்தலை பாக்கு போடமாட்டான்? பீடி குடிச்சு போடமாட்டான்? அதுக்கெல்லாம் பேசராரு, சீரா அடிக்க சொல்ராரு, கொஞ்சம் கூட பேற மாட்டேங்குது ஓங்கி அடிச்சா மட்டு மரியாதை இல்லாமல் பேசராரு. நீ யாராவது வச்சி பாரு சார், நம்ம கொண்டு ஆவாது”.

ஏம்பா உனக்கு நாலஞ்சு நாள் வேல இருக்கு அவசரப்படாத. ஐல்லியை உடைத்து அள்ளுன பிறகு சுத்தமாக்கி விட்டு தார் பெயின்ட் அடிக்கனும், உன்னைத்தான் நம்பி இருக்கன், செஞ்சு குடு” என்றான் “நாளைக்கு வாத்தியாரோடு நீ டவுனுக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வா, உனக்கு செலவுக்கு ஆகும்”

கலியமூர்த்தி மவுனமாகி வேலை செய்து கொண்டு இருந்தான், ஒன்றும் பதில் இல்லை.

கீழே வந்து அம்மாவிடம், “ஆட்களுக்கு டீ போட்டு கொடுங்கள்” என்று கூறி விட்டு வேலையைப் பார்த்தான் வாத்தியார் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார், ஆட்கள் சிறிது இயல்பாய் பேசி கொள்ள ஆரம்பித்ததும், “சார் நாளைக்கு பெயின்ட், தார் சீட் எல்லாம் வாங்கனும் மானம் மப்பு மந்தாரமா இருக்கு எதுக்கும் பக்கத்து சுருட்டு கம்பேனியில் தார்ப்பாய் கேளுங்க, சாயந்திரம் வேலை முடிந்து மூடி வச்சிடுவோம்” என்றான். வாத்தியார் வேகமாக பக்கத்தில் தார்ப்பாய் கேட்க சென்றார்.

“தெ உன் புத்திய காட்டாத வேலை செய்ய பாரு தீவாளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல புள்ளைவோ துணி கேட்டு அழுவுதுவோ என்ன நா சொல்றது கேட்குதா என்றார் கலியமூர்த்தி மனைவி புவனா.

கலியமூர்த்தி முறைத்து விட்டு சம்மட்டியால் வேகமாக அடிக்க ஆரம்பித்ததும் கீழே இருந்து வாத்தியார் தார்ப்பாய் எடுக்க கூப்பிட்டார்

“போயி எடுத்துட்டு வா” என்றான் இவன்.

கலியமூர்த்தி போனதும், “தினம் வேலை செய்யறத குடிச்சுட்டு புள்ளைவோளுக்கு ஒன்னும் செய்ய மாட்டார் சாரு நான் பொம்பளை சம்பாரிச்சு அதுவள பார்க்கறன் ரா சோறு ஆக்கறதுதான் மீச்சம் மீதிய காலைல போட்டுட்டு வேலைக்கு ஒடி வரேன்,” என்றார் புவனா.

” மதியத்திற்கு?”

”பால்வாடி சோறுதான்”

‘அவனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

வாத்தியார் கலியமூர்த்தியோடு மேலே தார்ப்பாய் கொண்டு வந்தார்.

“சார் மணி 12. ஆவுது சாப்பாடு வாங்கி வரனும்”

“இது நல்லாருக்குபா, வேளைக்கு சாப்பாடு, டீ நம்ம பாடு தான் சிரிப்பா சிரிக்குது யார் போய் வாங்கி வரது| கீழே வா காசு தரன்”

“‘கலியமூர்த்தி நீ போய் வாங்கி வாயேன் ”

‘சரி சாரு!

”ஏ பூனா 4, 4 பரோட்டா வாங்கியாரன்”

‘தெ காசு இருந்தா 4 வாங்கி புள்ளைவோளுக்கு குடுத்துட்டு வா”

கலியமூர்த்தி சென்றதும், “செட்டியார் வீட்டுல பூச்சு வேலை நடக்குது போயி பாத்துட்டு சாப்பிட்டுட்டு வந்துடறன் சார்” என்றான் இவன்.

” ம்ம்” என்றார் வாத்தியார், சுரத்தில்லாமல்.

‘பூச்சு வேலை சொல்லியிருந்தபடி சாரம் போட்டு ஆரம்பித்திருந்தனர், நேரம் ஓடியிருந்த அளவு வேலை நடந்திருக்கவில்லை.

“பழனி ஏன் வேலை ஆவல?”

‘வசந்து கையில சாரத்திலிருந்த தேள் போட்டுடூதுன கலவை குடுக்க ஆள் இல்லாமல் வேலை தேங்கி போச்சு”

”மேஸ்திரி வரலையா?”

” இல்லைண்ணா, காலையிலிருந்தே காணும்”

” எங்க வசந்து”

“செட்டியார் பையன் ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போயிருக்காரு, நான் அப்படியே மேஸ்திரியிடம் சொல்ல சொன்னேன்,” என்றான் கொத்தனார் பழனி.

“என்ன பழனி இவ்வளவு கலவையை போட்டு வச்சிருக்க, எப்ப முடிக்கறது?”

“சாப்பிடப் போவாம 4 மணி வேலை செய்யலாம்ன்னு பிளான் பண்ணுனோம், கடைசில இப்படி ஆயிப் போச்சு”

கொத்தனார் மணி எங்க?”

“வசந்துக்கு பதிலா யாராவது பசங்க கூப்ட்டு வரேன்னு சைக்கிள் எடுத்து போயிருக்கான்,இப்ப வந்துடுவாண்ண”

பேச்சுக்குரல் கேட்டு செட்டியார் வெளியில் வந்து விட்டார். ஐயோயோ என்றது அவன் மனம்

“என்னப்பா காலையிலிருந்து ஆள காணல?”|

“இல்லிங்க வாத்தியார் வீடு ஐல்லி உடைக்க ஆரம்பிச்ச உடனே கீழே பூச்சு எல்லாம் கொட்ட ஆரம்பிச்சதும் சார் வேலை செய்ய விடல, புரிய வைக்க போதும் போதுமுனு ஆயிடுச்சு அதான் நிக்க வேண்டியதா போயிடுச்சுங்க”

“இங்கே பாத்தியா இந்த வசந்து பயல தேளு கொட்டிடுச்சு, வேல எப்படி ஆவுமுனு தெரியல”

“அதெல்லாம் முடிச்சுடலாங்க, மணி ஆள் கூப்பிட்டு வந்துடுவாப்பல நான் போவாம இருந்து பாத்துக்கறன்”

செட்டியார் உள்ளே சென்று விட்டார்

“ஏய் பழனி ஒரு காரியம் செய்,கலவையை வாங்கி இளக்கி வாரி மேலே அடிச்சுடு , மணி வந்ததும் அப்படியே சுத்தம் பண்ணி கட்டைய புடிச்சு ஸ்பான்ச் போட்டு கீழே இறங்கலாம்”.

“சரிண்ண”

“அருளு நீ சாரத்தில் ஏறு. அமுதா கலவையை அள்ளிக் குடு, நான் ரோடு வரை போய் யாராவது கண்ணுல பட்டா கொண்டு வரேன்.”

அதற்குள் வண்டி சத்தம் கேட்டது, செட்டியார் பையன் சந்துரு வெறும் ஆளாய் வந்தான். சந்துரு அவன் பள்ளித் தோழன்

” மேஸ்திரி இல்லடா”

“ஏய் சந்துரு ஆளுவ சாப்பாடுக்கு கலையாமல் வேல செய்ய முடிவு பண்ணி இருக்கு, நீ காசு வச்சிருக்கியா டீ பிஸ்கட் ரெடி பண்ண போ… ”சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு பாரு”

டீ வருவதற்குள் மணி இரண்டு பசங்களுடன் வந்து விட்டான். டீயைக் குடித்து விட்டு பழனி வாரி அடித்து இருந்ததை சுத்தம் பண்ணி முடிக்க 4 மணி ஆகி விட்டது./ பாதி வேலை பாக்கி நிற்கிறது வெளிப்பூச்சு வேலை அது, சாரம் பிரித்து விட்டு மிச்சம் உள்ளதைப் பூச வேண்டும். பார்த்தபோது மலைப்பாக இருந்தது இன்று எப்படியாவது முழுவதும் குறையில்லாமல் முடித்து விட வேண்டும். சிறுநீர் கழிக்காதது வலி எடுத்து விட்டது சென்று திரும்பும்போது பழனியும், மணியும் சாரத்தை பிரிக்க ஆரம்பித்து இருந்தனர்,

‘4 மணிக்கு டீ பிஸ்கட் வந்தது குடித்து விட்டு ஆரம்பித்தது வேலை, இடையில் தண்ணீர் கேட்டு குடிப்பதை தவிர யாரிடமும் பேச்சே இல்லை. “ஒருவழியாய் வேலை நெருங்கி முடிக்கும் போது மணி 7 ஆகிவிட்டது. மேஸ்திரி தேடிக்கொண்டு வந்து விட்டார், அவனிடம் “கலியமூர்த்திக்கு சம்பளம் வாங்கி குடுத்துட்டு வரம்பா, வாத்தியார் பேச்சு குடுத்துட்டாரு” என்றார். ‘”முடிஞ்சுதுன்ன நீங்க பார்த்துங்க ”

இதையெலாம் “பார்த்து கொண்டு இருந்த செட்டியார், “மேஸ்திரி நீங்க வரலான்ன எப்படி நடக்கும் வேலை?” என்று கேட்டார்.

”இல்லீங்க பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, ஆஸ்பத்திரியில் லேட்டா போயிடுச்சு. அதலாம் நாளைக்கு கிட்ட இருந்து பார்த்துக்கரன் ”

‘ஆட்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பசியில் துவண்டு உள் வாங்கி இருந்த கண்களில். செட்டியார் அடுத்து என்ன சொல்லுவார் என்ற கவலை அவனால் பார்க்க முடிய வில்லை, செட்டியாரிடம் தலையாட்டி விட்டு கிளம்பினான். ஆனால், வீடு வந்தால்,’ “என்ன ஊர் வேலை முடிஞ்சாச்சா?” என்கிறாள் மனைவி! மதியம் சாப்பிட வராத எரிச்சலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை தாவிய பிள்ளையிடம், “இரு தங்கம் குளிச்சிட்டு வந்துடறன்” என்றான்.

”பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

மறுநாள் வேலை திட்டமிட்டபடி மேஸ்திரி வந்ததால் அதிக சிரமமில்லாமல் இரண்டு இடத்திலும் செய்ய முடிந்தது, வாத்தியார் மதியத்திற்கு பிறகு வராததை பற்றி அதிகம் கேட்கவில்லை, செட்டியார் வீட்டீல் நடந்ததை அறிந்த பிறகு நம் வேலை சீக்கிரம் முடிந்தால் சரி என்ற மன நிலையில் இருந்தார் மாலை, வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே தேவையானவற்றை வாங்க கலியமூர்த்தியை இட்டுக் கொண்டு சென்று வந்தார். இந்த கலியமூர்த்தியும் வாத்தியார் பின்னாலே நின்று கொண்டு இருக்கிறான், அவரும் அவனைத்தான் கூப்பிடுகிறார், குறையில்லாமல் வேலை நடந்தால் சரி என்றது அவன் மனம்.

அடுத்த நாள் செட்டியார் வீட்டு அவுட்டா் பூச்சு வேலை முடிந்தது. வாத்தியார் வீட்டில் கலியமூர்த்தி மற்றும் ஆட்களைக் கொண்டு சுத்தம் பண்ணி தார் பூசி மணி கொத்தனாரை கொண்டு பிட்டுமன் சீட்டை சூடுபடுத்தி ஒட்டி விட்டு அதன் மேல் மர உருளையை உருட்டி முடிக்க இரவாகிவிட்டது. வழக்கம் போல நேரமாகிவிட்டது, ஆட்களுக்குப் புரியாத வேலை என்பதால் சாப்பிடவும் போகவில்லை, இடிமுழக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அவன் ஆச்சரியமாக அவள் ஒன்றும் சொல்லவில்லை

“அப்பா வந்து உங்களுக்காக இத்தனை நேரம் இருந்து பார்த்து விட்டு போயிடுச்சு”

“சரி”

“இது என்ன சட்டை பேண்ட் எல்லாம் தாரு?”

அப்போதுதான் பார்க்கிறான், தார் பெயிண்ட் ஒட்டி இருக்கிறது

“போங்க கரித்துணிக்குக்கூட ஆவாது போலிருக்கு,” என்றாள்

“விடு, இப்ப என் நிலமையும் அப்படிதான் இருக்கு,” என்றான்

தீவாளி வரிசையைக் காட்டினாள் அதில் பையனுக்கும் அவளுக்கும் இரண்டு இரண்டாக துணி மணிகள் இருந்தன.

அன்று இரவு மழை பெய்தது, அது மிதமான மழைதான் அடுத்த நாள் காலை, எங்கு வாத்தியார் வீடு திரும்ப ஒழுவுதோ என்று பயத்தில் அவன் சென்று பார்த்தபோது இரண்டு இடங்களில் கசிவு இருந்தது

‘வாத்தியார், “என்னப்பா இது?” என்று சலித்துக் கொண்டார்.

“இல்ல சார் சரி பண்ணிடுவம், தண்ணி ஓடாமல் தேங்கி நிக்குது, அதான்”, என்றான் அவன். “கீழே சாரம் போட்டு விரிசல் எல்லாம் கெமிக்கல் பூசனும், மேல தளத்தில் ஐல்லி போட்டு வாட்டம் காட்டி டைல்ஸ் பதிக்கனும் சார் எல்லாம் செஞ்ச பிறகு பாருங்க ”

“என்னம்மோ செய்யுங்க” வாத்தியார்க்கு நம்பிக்கை இல்லை, அம்மா முகத்தில் கவலை தெரிந்தது

ஆட்களை எதிர்பார்த்து வெளியே வந்தான். மேஸ்திரி மொத்த ஆட்களோடு வந்து கொண்டு இருந்தார், இன்னும் இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது ”

“என்னப்பா செட்டியார் இப்படி பண்ணிட்டாரு>|

“ஏன்ணன் என்னாச்சு?”

“தீவாளி கழிச்சு செய்யலாம்னு சொல்ராரு. இந்த பயலுவல மண்ண ஏத்தி வைங்கடானு சொன்னன்,உட்டுட்டானுவ. அமுதா காலையிலே சலிக்கப் பார்த்து இருக்கு செட்டியார் பார்த்துட்டு வேலை ஆவாதுனு நெறித்துட்டாரு, என்ன செய்யறது?”

“மேலே வாங்க வாத்தியார்ட்ட பேசி பார்ப்போம்” என்றான் அவன்.

“சார் ஆளுவ நிறைய இருக்கு, நீங்கள் ஒத்துகிட்டா நாளைக்கே வேலையை முடித்துக் தரேன்,” என்று வாத்தியாரிடம் சொன்னார் மேஸ்திரி. வாத்தியார் அவனை பார்த்தார்.

|என்ன சொல்ரப்பா?”

அவன் சொல்வதற்க்குள் மேஸ்திரியே, “தீவாளி வருது சார், ஆளுவ இப்ப எங்க போவும்? நீங்க மூணு ஆள் சம்பளம் குறைச்சு கொடுங்க, நான் நிரவி கொடுத்து விடுறேன்.,” என்றார்.

வாத்தியார் ஒத்துக் கொண்டு உள்ளேயிருந்து கருப்பு கலர் பாலித்தீன் சீட் கொண்டு வந்து கொடுத்து அதை தளத்தில் விரித்து அதன் மேல் கான்கீரிட் இடவேண்டும் என்றார்

“அதுக்கு என்ன சார், ஐோரா செய்வோம்,” என்றார் மேஸ்திரி. அவன் மறுத்து, ஐல்லி கொட்டும்போதே பாலித்தீன் ஓட்டை விழுந்துடும் பிறகு இட்டு என்ன பிரயோசனம் என்றதற்கு வாத்தியார் ஒத்து கொள்ளவில்லை மேஸ்திரியும் வாத்தியாருடன் சேர்ந்து கொண்டார், அவன் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை தவிர? ஐல்லி மணல் ஏற்றும்வரை அதையேதான் செய்தான். வாட்டம் காட்ட புல்லோடு வைத்த பழனி இரண்டு நாளில் தங்கச்சிக்கு வரிசை கொண்டு போவனும் என்றும், மணி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போவனும் என்றும், கலவை கொண்டு வந்த அமுதா கூரை வீட்டை பெருமழைக்கு முன் பிரித்து கட்டனும் என்றும் கவலைப்பட்டனர். அதில் அவனது கவலை அடிபட்டுப் போனது

“ஆனாலும் செட்டியார் இப்படி செய்ய கூடாதுண்ண” என்றனர் அவனிடம்

“பொறுங்க, மேஸ்திரிட்ட சொல்லி செட்டியாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி தர சொல்றேன் கவலைப்படாம வேலை செய்ங்க,” என்றான் அவன்.

பழனியும் மணியும் சிறுவயது முதலே இவ்வேலைகள் செய்து வருவதால் தேர்ந்த குயவன் போல் கை வணங்கி வரும், அருமையாகச் செய்தனர்” நினைத்ததைவிடச் சிறப்பாக வேலை நடந்தது தினம் இரவு எட்டு மணி வரை வேலை செய்து முடிக்கும்போது வாத்தியாருக்கு முகமெல்லாம் பல்லாக தெரிந்தது. மேஸ்திரியிடம் சம்பளம் கணக்கு தீர்த்து அனுப்பிவிட்டு இவனிடம், “பையன் வந்துடட்டுமே”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்..

மனம் வெறுமையாக இருந்தது, விடிந்ததிலிருந்தே மழை சிறு தூறல் விட்டுவிட்டுப் பெய்தது. குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மழையைப் பார்த்து கொண்டு இருந்தான். மேஸ்திரி அவனைத் தேடி வந்தார், செட்டியார் நாளை வரச் சொல்லி இருப்பதாகவும் அவனையும் உடன் அழைத்து வரச் சொன்னதாகவும் காலையில் வருவதாகவும் சொல்லிச் சென்றார் பணம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று சிறிது நப்பாசை தோன்றியபோது வானம் கிடும்புடும் என்று கமறியது

“ஏங்க வெளியே போவாதிங்க. கீழ் மாரி கொள்ளுது சரி மழை பிடிக்கப் போவுது,” என்றாள் மனைவி

இடிச்சத்தம் வரும்போது குழந்தையோடு அவன் உடம்பும் ஆடியது மாலையில் கல்லூரியில் படிக்கும் தம்பி அவன் நினைத்த கத்தரிப்பூ கலரில் குழந்தைக்கு துணியும் சென்னையில் வேலை பார்த்த தம்பி அவனுக்கு துணிமணியும் எடுத்து வந்து பார்த்து சென்றனர் மனம் நெகிழ்ந்திருந்தது அவனுக்கு

இரவு முழுவதும் மழை விட்டுவிட்டுப் பெய்தது. காலையிலே மேஸ்திரி வந்து விட்டார். செட்டியாரை சென்று பார்த்தபோது, எவ்வளவு என்று கேட்டு அவன் முன்னிலையில் மேஸ்திரிக்குக் கொடுக்க வேண்டியதை எண்ணிக் கொடுத்து நோட்டில் எழுதி கொண்டார். இருவருமே பணம் வேண்டுமா என்று அவனைக் கேட்கவில்லை, அவனும் கேட்டு விடலாமா என தயங்கிக் கொண்டிருந்தபோது, “வா தம்பி, வழியில் டீ சாப்பிட்டு போவலாம் என்று பேச்சை முடித்துவிட்டார் மேஸ்திரி. சரி என்று அவனும் போக வேண்டியதாகிவிட்டது. டீ சாப்பிடும்போது, மேஸ்திரியிடம் காசு கேட்கலாமா, இதுவரை அப்படி கேட்டதில்லையே” என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனது வேண்டாம் என்றது மேஸ்திரியிடம், “எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வரும் வழியில் வாத்தியார் வீடு செல்லத் தோன்றியது, கேட்டில் நின்ற டைகர் இவனைக் கண்டதும் குரைக்காமல் ஊம்ம் என்று பிரியமாய் குரல் எழுப்பிய சத்தத்தில் அம்மா வெளியே வந்தார்கள்

“வா தம்பி உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தேன்”.

அவன் பயந்து மேலே பார்த்தான் அங்கெல்லாம் ஒழுவியிருக்கவில்லை

“தம்பி ராத்திரிதான் வந்துச்சி, உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சி இரு கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்றார்கள்

டேபிளில் புதுத்துணிகளோடு பைகள் சுவிட் எல்லாம் இருந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் தோன்றியபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“தம்பி அந்தப் புள்ள கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுச்சுப்பா,ஏதாவது செய்யணும்பா”

“என்னம்மா சொல்ற, அவன் என் பிரண்டும்மா கோவிச்சுபாம்மா,” என்று வெளியில் வந்தான் நண்பன்.

“நல்லா இருக்கியா?”

“இருக்கேன்ண”

“ஏய் உன் புண்ணியத்துல வீடு ஒழுவுல. அப்பா அம்மாவுக்கு தீவாளி பரிசு கொடுத்துருக்க” என்று சிரித்தான். “ஏதாவது வேணுமா, சாப்பிடுரியா?”

இல்ல சாப்பிட்டுட்டன், வரேங்க,” என்று கூறியபோது குரல் மேலன்னத்தில் ஒட்டி தாழ்ந்து ஒலித்தது அவனுக்கே கேட்டது. அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை, இறங்கி நடந்தான் மழை பெய்தது…….

(Art credit to http://www.surrealismnow.com/jeroenvanvalkenburg.html)