வேல்முருகன்

அப்பாவின் சட்டை – வேல்முருகன்

வேல்முருகன். தி

“ஏன்டா பந்த ஊட்டு மேல அடிக்கீறிங்க? எழவெடுத்தவனுவளா உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையா?”

நல்ல தூக்கத்தில் வந்த கனவில் அதிர்ந்து எழுந்தான், பகல் தூக்கம் பாதியில் கலைந்ததில் கண் எரிந்து அசதி தெரிந்தது.

ஓட்டு வீட்டு சிமெண்ட் தரை சித்திரை வெயிலுக்கு இதமாக இருந்தது. திரும்ப படுத்து ஐன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான் ஒரே நீலம் சிறிது கூட மாசி இல்லை. சீராக இளந்தென்றல் வீசிக் கொண்டிருந்தது. எதிர் வேலியில் இருந்த மரமுல்லை மரத்திலிருந்து பழுத்த மஞ்சள் இலைகள் காற்றில் சுழன்று இறங்கின. எங்கிருந்தோ பறந்து வந்த கருவாட்டு வால் குருவி கிளையில் அமர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு திரும்பி இலையில் ஒட்டியிருந்த பச்சைப் புழுவை கவ்வி வாலை ஆட்டிக் கொண்டு இறக்கை மூடி மூடித் திறந்து பறந்து சென்றது.

பச்சைக்கு சொனைப்பூச்சி வந்து விட்டது. அடிமரம் முழுவதும் படைபோல் இருக்கிறது. இரவானால் விளக்கு ஒளிக்கு வீட்டிற்குள் வந்து தோதாகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்திருந்து ஒத்தி வைத்து விடுகிறது வேலியை அகற்றி அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இதை வேறங்கோ பாத்திருக்கோமே  என்று நினைவு திசைமாறிவிட்டது.

சிறிது நேரத்தில் அது ஞாபகத்துக்கும் வந்து விட்டது ராம் மேஸ்திரி வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூவரசமரத்து அடியில் படைபடையாக பார்த்தது  கிரிக்கெட் விளையான்ட பந்து எடுக்க போய் கிழவரிடம் திட்டு வாங்கி வந்தோமே, ஆகா அந்த நினைப்புதான் கனவு போலிருக்கு, என்று நினைத்துக் கொண்டான்.

சொனைப்பூச்சியை அழிப்போமோ இல்லை கிரிக்கெட் விளையாட போவலாமா என்று யோசிக்க, ஆகா இன்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட போகலாம் நாளை வந்து சொனைப்பூச்சியை பார்ப்போம், என்று முடிவு செய்தான்.

எழுந்து முகம் கழுவி கொடியில் முன்னால் இருந்த புதுச்சட்டையைப் பார்த்துவிட்டு, விளையாட போவும்போது வேண்டாம், என எண்ணி, பிறகு அந்தச் சட்டையே போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் வெளிர் நிறத்தில் அரைக்கை சட்டை. அப்பாவின் நிறத்துக்கு கம்பீரமாக தெரியும் இவனது புது நிறத்துக்கு சற்று கம்மிதான். பரவாயில்லை. தலையை மடித்துச் சீவி கையால் பங்க்கை கோதி கொண்டான். லுங்கிலேயே போவும், வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடலாம், கிழவன் வாயில் மாட்டக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பசங்களுடன் அன்று விளையாண்டபோது அவனுக்கு வாகாக இடது புறம் வீசி விட்டார்கள் வச்சி இழுத்ததில் பூவரச மரத்துக்கு மேல் பறந்தது தெரிந்தது கிழவருக்கு பயந்து பந்தை எடுக்க யாரும் போகவில்லை அவனைக் கைகாட்டினார்கள். பந்து எடுக்கச் சென்றவனை நாய்தான் வரவேற்றது. சத்தம் கேட்ட கிழவர் வெளியே வந்து, “மூணு கழுதை வயசு இருக்கும் போல இருக்கு உனக்கு, ஏன் வேலைக்கு போனா என்ன, பசங்க கூட சேந்து பந்து விளையாடற?.யார் ஊடு நீ? எவனா இருந்தாலும் கிடையாது கூரை வீடு, பின்னாடி ஓட்டு வீடு, ஓடேல்லாம் உடைச்சு வச்சிட்டிங்க எவன் அவுக்கறது முதலு? நிக்காத, இங்க ஏன் வாயில் வன்டை வன்டையா வருது,” என்று சத்தம் போட்டார்.

திகைத்து திரும்ப வேலியைப் பார்த்து கொண்டு வந்த போதுதான் சொனைப்பூச்சியை பூவரசமரத்து அடியில் பார்த்தான் அந்த மரம் தனியாக நன்றாக தழைத்து அடி பெருத்திருந்தது, மரம் முழுவதும் மஞ்சள் பூவும் காயும் தெரிந்தது சிறு வயதில் பூவரசு இலையில் பீப்பீ ஊதியதும் அதன் காயில் தென்னை ஈர்க்கை நடுவில் செருகி பம்பரம் விட்டதும் நினைப்பு வந்து புன்னகைத்துக் கொண்டான் வேலி முழுவதும் ஆடாதொடையும் நொச்சியும் வைத்து நெருக்கி வேலி கருவையை இடையில் ஊன்றி மூங்கில் முள்ளால் கிட்டி பிடித்து இருந்தது அந்த பூவரசமரத்து ஓரமாக கொஞ்சம் சந்து தெரிந்தது ஆனால் நுழையக்கூடிய அளவில்லை அவன் அங்கு வரவும் கிழவரும் சரியாக அங்கு வந்து விட்டார்

“என்ன நோட்டம் உடற? இதான் உனக்கு மரியாதி. இனி இந்தப் பக்கம் பார்த்தேன், நடக்கறதே வேற,” என்று மறுபடியும் கத்த ஆரம்பித்தார்.

“பாத்தியாண்ண, கிழவன் அப்படிதான். அந்தப் பந்து போச்சு. கூரை ஊட்டுவுள்ள போயிடுச்சுண்ண, வெளியில உழுந்து இருந்தா வேயோட்டி, கிடக்கும்,” என்றான் ஒருவன். பசங்க கிழவரைத் திட்ட ஆரம்பித்ததும், “பந்து வேற வாங்கிக்குங்க”, என்று காசு கொடுத்து விட்டு வந்தான்.

வெயில் தாழ ஆரம்பித்திருந்தது அங்கு போவலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே சென்றான், பசங்க கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது “வாங்கண்ண,” என்று
அவனையும் சேர்த்துக் கொண்டனர்

“அண்ணனுக்கு லெக் சைடு போடாதிங்க பழசான பின்னாடி போடுவோம், காணாடிச்சுட்டு காசு தருவாரு, புதுசு வாங்கலாம்,” என்றான் ஒருவன்

ஆச்சு டீம் பிரித்தாயிற்று.

பந்து அடிப்பது பூவரசமரத்து வீட்டிற்கு செல்லாத வகையில் அவனை ஃபீல்டிங் நிறுத்தி விட்டனர். நாலு ஓவர் முடியும் வரை பந்து அவனை ஒட்டி வரவில்லை. ஐந்தாவது ஒவரின் முதல் பந்தை அவனை நோக்கி அடிக்க அவன் முயன்றும் பிடிக்க முடியவில்லை துரத்திக் கொண்டு ஒடினான் பூவரச மரத்தை நோக்கி ஒடியது பந்து குனிந்து எடுத்தபோது பூவரச மரத்து அடியில் இருந்து புகை தெரிந்தது அருகில் இருந்த வைக்கப்போர் தீ பிடிக்க ஆரம்பித்திருந்தது.

அவன் பதறி பசங்களை நோக்கி, “எல்லாம் ஒடியாங்க ஒடியாங்க, தீ புடிச்சிடுச்சு, தீ புடிச்சிடுச்சு,” என்று கத்திக் கொண்டே முன்னே ஓடினான். படல் கேட் பூட்டி இருந்தது பசங்க அவன் பின்னே தீ தீ என்று ஓடி வந்தனர். ஆளாளுக்கு கேட்டைப் பிடித்து ஆட்டியதில் சட்டம் உடைந்து விட்டது உள் நுழைந்து பார்த்ததில் வைக்கோல் அடிப் போர் தீ பிடித்து புகைந்து எரிய ஆரம்பித்திருந்தது.

தோட்டத்தில் இருந்த தண்ணீர்க் குடங்கள், குவளைப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் எல்லாம் ஊற்றிப் பார்த்து விட்டு அணைக்க முடியாமல் தோட்டத்து கிணற்றில் இறங்கி வளர்ந்த பையன்களை எல்லாம்  அவனுக்கு மேல் நிற்கச் சொன்னான்.

தீ மேலே பரவி புகை கிணற்றுக்குள் வர ஆரம்பித்து விட்டது குடமும் குவளையும் வாளியும் வருவது எல்லாவற்றிலும் நிமிராமல் தண்ணீரை நிறைத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தான்  ஒரே சத்தம். பக்கத்து தெருவில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள், எல்லாம் வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து வைக்கப்போரையே பிரித்து உதறு உதறு என்று ஒரே கூப்பாடு வேலியைப் பிரித்து வைக்கோலை வெளியே கொண்டு போகச் சொல்லுவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

கிணற்றில் இருந்த தண்ணீர் குறைந்து சேறும் தண்ணீருமாக வாரிக் கொடுத்து கொண்டு இருந்தான் மேலெல்லாம் சேறு, கல், மண் எல்லாம் விழுந்து எரிச்சல் ஆரம்பித்து விட்டது பயன்படுத்தாத கிணற்றில் இருந்து கிளம்பிய கும்பி வாடை நிற்க முடியவில்லை.

மேலிருந்து, “போதும் சாமிவலா மேல வாங்க”, என்ற கிழவரின் குரல் கேட்டது ஒவ்வொருவராக மேலேறிச் சென்றனர். இவன் கை நீரில் ஊறி வெளுத்திருந்தது பாசியில் கை வழுக்கி கீழே விழப்போனவன் சமாளித்துக் கொண்டு, கிணற்றுப்படியில் கால் ஊன்றி முதுகை உரசி நின்றான். மடித்துக் கட்டியிருந்த கைலி கிழிந்தது.

மேலேறிப் பார்த்தபோது சுமார் 50 பேராவது இருக்கும்- வேலியைபிரித்து வெளியே கொண்டு சென்று வைக்கலை உதறிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த கூரை வீட்டிலும் தண்ணீர் ஊற்றியிருந்தனர். வேலியெல்லாம் பிய்த்துக் எறிந்து பார்க்க போர்க்களம் போல் இருந்தது. புகை வாடை நாசியிலும் உடம்பு முழுவதும் தெரிந்தது ஒரே நேரத்தில் தலைவலி போலவும் தாகம் போலவும் இருந்தது அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது புதுக் காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தண்ணீர் குடித்தான்

கிழவர் மருமகளைத் திட்டி கொண்டு இருந்தார். “சொனைப்பூச்சிக்கு நெருப்பு வச்ச மாடு இருந்து அணைச்சிட்டுல்ல போயிருக்கனும் ஒரே நாளில் தெருவல நிக்க வுட்டுற, பார்த்தாலே எங்க அடுக்கும் தெய்வமே!” என்று திட்டிக்கொண்டே, “பிள்ளைவலோ, யாரு பெத்த புள்ளையோ, நல்லா இருப்பிங்க இருங்க வரேன்” என்று உள்ளே போய் ஒரு கொட்டுக் கூடை நிறைய பந்து கொடுத்தார். சிவப்பும், நிலமும், மஞ்சளுமாக பந்துகள். பசங்க வாங்கிக் கொள்ளத் தயங்கினர் அவன் சொன்னதும் ஆளுக்கொன்றாக எடுத்து கொண்டனர்

சூரியன் விழுந்து கொண்டிருந்தான், செவ்வானம் தெரிந்தது. மேலே ஒட்டியிருந்த சேறு காய்ந்து,  வரவர என்றிருந்தது முதுகு எரிந்தது அவனுக்கு. தன் சட்டையைக் கழற்றினான். தைக்க முடியாத மிகப் பெரிய கிழிசல் வரி வரியாக, கோடாக, பல வடிவங்களில். கிழிசலை வெறித்து பரிதாபமாகப் பார்த்தான் கிணறும் படியில் அமர்ந்திருந்த கிழவரின் மருமகள் அழுவதும் அப்பாவின் சட்டைக் கிழிசலில் ஒருசேரத் தெரிந்தது.