ஷேக்ஸ்பியர்

பேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு

ரா கிரிதரன்

கம்பராமாயணத்தைப் பற்றிய திறனாய்வு புத்தகங்கள் நிறைய இருந்தாலும், உலக இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வு நூலை முதலில் எழுதியவர் வ.வே.சு ஐயர். அவரது ‘Kambaramayanam – A Study’ எனும் நூல் கிரேக்க இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களை ராமாயணத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் ஆய்வாகும். காவிய அழகியலை மேலோட்டமாகத் தொட்டுப் பேசியிருந்தாலும் வ.வே.சு. ஐயரின் நூல் பாத்திரங்களின் உணர்வு நிலைகளை ஒப்பிட்டுப் பேசுவதை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் இந்த ஆய்வை அவரால் முடிக்க முடியவில்லை என்பதால் முழுமையாக அவர் எழுத நினைத்ததை நாம் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. வ.வே.சு. ஐயர் வாழ்ந்த காலத்திலேயே சென்னையில் இருந்த பேராசிரியர் சி.பி. வெட்கட்ராம ஐயர் 1913 ஆம் ஆண்டு ‘Kamban and His Art’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். காவிய ரசனை சார்ந்த அழகியல் நுணுக்கங்களில் அமைந்திருக்கும் இந்த பெருங்காப்பியத்தின் தொகுப்புப்போக்கை நயம்பட ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வரிசையில் சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் பேராசிரியர் கி. நடராசன் எழுதிய ‘கம்பரும் ஷேக்ஸ்பியரும்’ (பாவை வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை)

கன்னனொடு கொடை போயிற்று, உயர் கம்பநாடனோடு கவிதை போயிற்று என பாரதி சொன்னதுபோல அனைத்துவிதமான சந்தங்களிலும் அமையும் இந்த பெருங்காப்பியத்துக்கு இணையான காப்பியம் தமிழில் இதுவரை இல்லை. மொத்தம் 96 வகையான சந்தங்களில் விருத்தப்பாடல்களாக கம்பராமாயணம் அமைந்துள்ளது. கானகத்தில் கிடைத்த கனி என வால்மிகி ராமாயணம், அக்கனியை கீறி தேன் தடவி உண்ணுவது கம்பநாடகம் என்று நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். சோழ ராஜ்ஜியம் தமிழக வரலாற்றின் மகுடம் எனச் சொல்லும்போது கோவிற்கலை, ஓவியம் மற்றும் இசைக்கலை போன்றவற்றுடன் கம்பனின் தீந்தமிழ் காவியத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பநாடகம் பாடப்பெற்ற வரலாறு இன்று கம்பமண்டபமாக ஶ்ரீரங்கத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இத்தனை சிறப்புபெற்ற கம்பராமாயணம் நம் தமிழர் வாழ்வில் எந்தளவுக்குக் கலந்திருந்தது? சங்கப்பாடல்களில் வரும் சில ராமாயண நிகழ்வுகள் வால்மிகியில் கூட இல்லை எனும்போது தமிழர் வாழ்வில் ராமாயணத்தைப் பற்றிய ஈடுபாடு கம்பருக்கு பல காலம் முன்பிலிருந்து இருந்தது எனலாம்.

கம்பநாடகம் தென் தமிழ்நாட்டில் நாடகமாக இயற்றப்பட்ட வரலாறு அ.கா. பெருமாள், ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் போன்ற ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. தோல்பாவைக்கூத்து, ராக்கூத்து எனும் வடிவங்களில் கம்பனின் வரிகள் எட்டு நூற்றாண்டுகளாக நிகழ்காவியமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் திரளான மக்கள் கண்டு களித்தார்கள் எனச் சொல்வதற்கில்லை. ராவணவதம், கும்பகர்ணனின் கதை, சுந்தரகாண்டம் எனச் சில நிகழ்வுகள் கூத்துகளில் நிகழ்த்தப்பட்டன என்றாலும் தொல்பாவைக்கூத்து அளவு வேறெந்த நிகழ்வும் விரிவாக அமையவில்லை. இன்று வரை வட கேரளத்தில் மட்டுமே தொல்பாவைக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. இதைப்பற்றி ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் ‘Inside the Drama House’ எனும் சுட்டு நூலை எழுதியுள்ளார்.

கி. நடராஜனின் நூலில் ஒப்பிடப்படும் மற்றொரு மேதையான ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்கள் அவர் வாழ்ந்த காலம் தொடங்கி இன்றுவரை மக்கள் நாடகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எத்தனை நவீன, பின் நவீன நாடகங்கள் வந்தாலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதான வரவேற்பு குறைவதில்லை. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்தின் பல நாடக அரங்குகளிலும் அவருக்காகவே உருவாக்கப்பட்ட லண்டனின் குளோப் அரங்கிலும் (Globe Theatre) திரளான கூட்டத்துக்கு இடையே அவரது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக, குளோப் அரங்கின் மேடை நாடக அமைப்பைப் பற்றி தனி கட்டுரை தான் எழுதவேண்டி வரும். ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குளோப் அரங்கில் நடக்கும் நாடக நடிகர்கள் பார்வையாளர்களையும் கதைக்குள் ஒரு அங்கமாக்கிவிடுவார்கள். பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகத் தங்கள் கருத்துகளை தெரிவித்தபடி நாடகத்தில் பங்கு பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். முதல் பத்து நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் யார் பக்கம் எனத் தெரிந்துவிடும். அந்தளவுக்கு மக்கள் நாடகமாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அமைந்திருக்கின்றன.

இப்படி இருவேறு வகையான வரவேற்பைப் பெற்ற காவியங்களை எழுதிய ஆசிரியர்களை ஒப்பிடும்போது சிக்கல்கள் பலதும் ஏற்படும். நாடகாசிரியரும், காவிய கர்த்தாவும் ஒப்பிடக்கூடியவர்களா? வெவ்வேறு மொழியில் கவிதை எழுதியவர்களை எந்தத் தராசு கொண்டு அளவிடுவது? 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இருவரைப் பற்றியும் உரை நிகழ்த்தி வரும் பேராசியர் கி. நடராசன் மிகக்கவனமாக கதாபாத்திரங்களையும், அவர்களது பண்பாட்டின் குணாதிசயங்களையும் மட்டுமே கருத்தில் கொள்கிறார். கால வித்தியாசங்களைக் கருத்தில் கொள்ளாது பாத்திரங்களின் உணர்ச்சி நிலை, நெடும் பண்பாட்டு உரையாடலில் அவ்வுணர்ச்சிகளின் இடம், இயற்கை விவரணைகள், நாடகத்தின் உச்சகட்ட தருணங்கள் என காவிய அழகைக்கொடுக்கும் ரசனையை மட்டும் ஒப்பிடுகிறார். இதனால் கி. நடராசன் காட்டும் உண்மைகள் மானுடம் தழுவிய உண்மைகளாக அமைந்திருக்கின்றன. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து இரு மகா கலைஞர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுகோலாகவும் கச்சிதமாக அமைந்துவிடுகின்றது.

முதலில் நூல் தோற்றம் குறித்த ஒப்பீட்டில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தங்கள் மூதாதைகள் காட்டிய வழியைப் பிந்தொடர்வதில் ஒற்றுமை கிட்டுகிறது. வான்மீகியிலிருந்து ராம காதையையும், தமிழ் சங்க நூல்களிலிருந்து துறை ரசனையையும் எடுத்துக்கொண்ட கம்பர், சந்தங்களின் ரசனைக்குப் பல சைவ பாடல்களையும், வைணவ பாசுரங்களையும் நிழலெனத் தொடர்ந்திருக்கிறார். கிரேக்க மற்றும் ரோமானியக் காவியங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பழங்கதைகளிலிருந்து தனது நாடகங்களுக்கான பாத்திரங்களையும், கருக்களையும் தொடர்ந்த ஷேக்ஸ்பியர் கம்பனைப் போலப் பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமை, இனிமை, இயல்பான உரையாடல்கள், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நகைச்சுவை உணர்வோடு அலசி ஆராய்வதாக அமைந்திருக்கின்றன. இது மக்களிடம் நேரடியாக உரையாடியது. கலகத்தை உண்டு செய்தது. கோபத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது. மக்கள் தங்களில் ஒருவராக பாத்திரங்களோடு பயணம் செய்தனர். இதற்கு நேர்மாறாக, கம்பனின் காப்பியம் அதீதங்களின் ருசியை படிப்பவருக்கு அளிக்கவல்லது. அன்றாட வாழ்வின் ரசனைக்கு இடம் கொடுத்தாலும், உணர்ச்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளில் பிரம்மாண்டமும், உயர்வுநவிற்சி அணியும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படிப்பவரின் முயற்சி மூலம் காவியகர்த்தாவை எட்டிப்பிடித்து தொடரும் நிலையில் கம்பனின் காப்பியம் உள்ளது. ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள் போல இறங்கி மக்களுக்கு அருகே வருவதில்லை. நாடகம் என்பதால் அதன் உணர்ச்சிகள் அதீதமாக இருந்தாலும், மக்களிடம் கடத்தும் தன்மையில் அது சமநிலை மாறாமல் இருக்கிறது என கி. நடராசன் சொல்கிறார்.

Shall I compare thee to a summer’s day
..my mistress’s eyes are nothing like the sun

என மிகச் சாதாரணமாக அணிகளைப் பயன்படுத்துகிறார் ஷேக்ஸ்பியர்.

இதை சீதையை வர்ணிக்கும் இடத்தோடு ஒப்பிடும்போது:

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று இது குன்றும் கவரும் திண்
கல்லும் புல்லும் கண்டுருகப் பெண் கனி நின்றாள்

எனவும், பொய்யோ எனும் இடையாளோடும் எனும் உவமைகளைக் கொண்டு விவரிப்பது அதீத அணிகளைக் கொண்ட விவரிப்பு என்பதாகிறது.

இதைப் படிக்கும்போது நமக்கு ஒன்று தோன்றலாம். ஒரு காவியகர்த்தாவையும், நாடக ஆசிரியரையும் நாம் ஒப்பிட முடியுமா?அப்படியே ஒப்பிடுவது நாம் இருவருக்கும் செய்யும் நியாயமாக அமையுமா? இப்படிப்பட்ட கேள்விகளை ரெண்டு விதமாக நாம் அணுக முடியும். இரு மொழிகளின் உச்சகட்ட கவிகளை ஒப்பிடுவது இருவேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ரசனையை அணுகுவதற்குச் சிறந்த முறை. ரெண்டாவதாக, அழகியல் ரீதியில் காப்பியச் சுவையை செறிந்த நாடக கதாபாத்திரங்களின் அனுபவத்தோடு சேர்த்துக்கொடுத்ததில் கம்பருடன் ஒப்பிடக்கூடிய தகுதி ஷேக்ஸ்பியருக்கு உள்ளது என்கிறார் கி. நடராசன்.

கம்பராமாயணம் universal brotherhood எனும் தத்துவத்தை வலியுறுத்தும் காவியம். தன்னலங்கருதாத தியாகத் திருவுருவாக, நட்பின் அணிகலனாக, ஒரு தொண்டனாக என ஒவ்வொரு மனித குணநலனுக்கும் ஒரு பாத்திரம் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளது. ‘Merchant of Venice’, ‘Two Gentlemen of Verona’ என பல நாடகங்களிலும் ஷேக்ஸ்பியர் வலியுறுத்தும் நட்பும் உறவும் கம்பனின் தத்துவத்துக்கு அருகே வருகின்றன. கம்பன் இதையும் மீறி நிற்கும் இடங்கள் பல உண்டு. பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என ‘இன்று போய் நாளை வா’ எனும் சரண் என்றால் மன்னிக்கும் தத்துவம் கம்பனுக்கு மட்டுமே உரிய ஒன்று.

மாயங்கள் நிரம்பிய கருக்களை இரு காவிய ஆசிரியர்களும் படைத்துள்ளனர். மாயா சனகப்படலம், இந்திரஜித்தனின் மாயங்கள், மாயமான் என கம்பனின் காவியத்தில் பல இடங்கள் மாயங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக மாயத்தை ஒரு உத்தியாக மட்டும் பயன்படுத்தாது, பாத்திரங்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் நாடக தருணங்கள் பலவற்றை கம்பன் இயற்றியுள்ளார்.

மாயா சீதைப் படலத்தில், சனகன் இறந்தது போல ஒரு மாயை உருவாக்கி சீதையைக் கலங்கச் செய்யும் செய்யுளில்

எந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள்
வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவே மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே தவமே என்னும்
வெந்துயர் வீங்கு தீவிழ் விறகு என வெந்து வீழ்வாள்

சீதையின் வருத்தத்தைக் கண்டு ராவணனின் சித்தம் கலங்குகிறது. அவனது காம உணர்ச்சிகள் மதி மயக்கத்தை உண்டு செய்கிறது. சித்தம் கலங்கியவன் , ‘உனது தந்தையைக் கொல்ல மாட்டேன் அழாதே’ என உண்மையை உடைத்துவிடுகிறான். மனம் இறங்கி உண்மையை சொல்லிவிடுகிறான். அதன் மூலம் இது ஒரு மாயை என அவள் அறிகிறாள். இங்கு மாயை ஒரு வித்தைக்காக மட்டும் அல்லாமல், ராவணனின் உடையும் பனிக்கட்டி போன்ற பலகீனமான உணர்ச்சியை நமக்குக் காட்டவும் பயன்படுகிறது.

ஷேக்ஸ்பியரில் வரும் மாயங்கள் ஒரு கதையை விளக்கவோ, மாயத்தைக் காட்டி பிறரை மயக்கவோ மட்டுமே பயன்படுகிறது என்பதால் கம்பன் அளவுக்கு மாயக்காட்சிகள் கதையின் போக்கை செறிவுபடுத்தாமல் போய்விடுகிறது என்பது ஆசிரியரின் அபிப்ராயம்.

சில நேரங்களில் பாத்திரங்கள் பேசும் பாணியிலிருந்து அவர்களின் உணர்ச்சிகளை கம்பன் உணர்த்திவிடுகிறார். உதாரணமாக குகனுக்குத் தன் தாய் கைகேயியை அறிமுகப்படுத்த விரும்பாத பரதன் அவளது முறை வரும்போது தன் எல்லையற்ற வெறுப்பை வெளிப்படுத்தி அவளை அறிமுகப்படுத்துவதாக கம்பன் காட்சி அமைப்பான்.

இந்நின்றாள் என்னை ஈன்றாள்

என மூன்று வார்த்தைகளில் சொல்லிக் கடத்திவிடுகிறார்.

one may smile and smile and be a villain

எனச் சுருக்கமான வரிகளின் மூலம் படிப்பவரின் மனதில் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி வேகத்தையும் குறிப்பிடுவதில் இருவருக்கும் கடும்போட்டி உண்டு.

காவியத்தில் புலம்பல்கள் என்பது ரசனையைக் கூட்டிக்காட்டும் செயல். படிப்பவர்கள் மனதில் தனிப்புலம்பல்கள் மிகப்பெரிய நாடகக்காட்சியை உருவாக்கிக் காட்டிவிடும். தனிப்புலம்பல்கள் அமைப்பதில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. அதுவும் soliloquy எனும் வடிவத்தின் பிதாமகனாகவே ஷேக்ஸ்பியர் காணப்படுகிறார். அவருக்கு முன் கிரேக்க துன்பியல் நாடகங்களில் மட்டுமே இப்படிப்பட்ட நீண்ட தனிப்புலம்பல்கள் வந்துள்ளன.

மண்டோதரியின் புலம்பல் காவியத்தின் ஓலம். விந்தையான சொற்சித்திரத்தை கம்பர் நமக்குக் காட்டுகிறார்.

வெள் எடுக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும்
இடம் நாடி இழைத்தவாறே
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!

வாளி – அம்பு

சீதை மேலிருக்கும் காதலை உள் புகுந்து தேடியிருக்கிறது ராமனின் அம்பு எனப் புலம்புகிறாள் மண்டோதரி. ஆரம்பத்திலிருந்து ராவணன் மீது கோபத்தில் இருந்தவள் தன் கையறு நிலையை தனிப்புலம்பலாக்கியிருக்கிறாள். சீதை மீது கொண்ட காமம், தன்னைத்தாண்டிச் சென்ற காமம் எனும் tragic flaw தனது கணவனை வீழ்த்தியிருக்கிறது. இங்கு ராவணனின் காமத்தை பகிர்ந்திருந்த மண்டோதரிக்கு அவனை வீழ்த்தியிருந்த அம்பு காமத்தைத் தேடியிருப்பதாகப் பட்டிருக்கிறது.

அண்ணனின் உடலைக் கண்ட வீடணன்,

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு
சனகி என்னும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர் நீயும் களப்பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான்
எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணனே அண்ணாவோ அசுரர்கள் தம்
பிரளயமே அமரர் கூற்றே

சீதை எனும் பெரு நஞ்சு நீ பார்த்த நேரத்திலேயே உன்னில் கலந்து உயிரைக் குடித்துவிட்டது எனப் புலம்புகிறான் வீடணன். இங்கு நாம் காண்பது சீதை எனும் பூமாதேவி மீது இருக்கும் அளவில்லாத பக்தி.

கம்பனின் தசரதனையும், ஷேக்ஸ்பியரின் மகத்தான கதாபாத்திரமான லியர் மன்னனையும் ஆசிரியர் ஒப்பிடுகிறார்.

காதோரம் நரை தெரிந்த காலத்தில் தனக்குப் பின்னால் குழந்தைகள் இல்லை எனும் வேதனையோடு பிள்ளைப்பேறுக்காக வேண்டி நின்றவர் தசரதன். முதுவயதில் தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துவிட்டு தன் மகள்களுடன் வாழலாம் என முடிவெடுக்கிறார் முதியவர் லியர். உண்மையான பாசத்தை உடையவரை அடையாளம் காணத்தெரியாத குருடனாக லியரின் சரிவு நமக்கும் தசரதனின் வாழ்வைவிட திருதிராஷ்டிரனின் வீழ்ச்சியையே ஞாபகப்படுத்துகிறது.

பிறிதொரு குறையிலை யெற்பின் வையகம்
மறுகுறு மென்பதோர் மறுக்க முண்டரோ

ஆனால், லியரைக் காட்டிலும் தசரதன் தயாநிதியானவர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த பின்னரும் தனக்கென ஒரு படையும், தன் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் வேண்டுமென அதிகாரத்தை விட்டுக்கொடுக்க இயலாத கிழவர் லியர். மாறும் உலகத்தைக் கண்டும் காணாமலிருக்கும் குருட்டுத்தனமும், அதிகாரத்தை கைவிடமுடியாத அகங்காரமும் நிறைந்தவர்.

தசரதன் இரு முறை தன்முடி துறக்கத் தயாராக இருந்தவர். காடு சென்று தவமேற்கும் வாழ்வை மேற்கொள்வதற்காக ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எடுத்த முயற்சி ஒரு முறை. கைகேயி மனம் மாறியபின்னர், பெற்ற வரங்களைத் திரும்பப்பெற்று ராமன் காடேறுவதைத் தடுக்கும் பொருட்டு அதிகாரத்தை துறக்க நினைத்தது ரெண்டாம் முறை. இரு சமயங்களிலும் தான் பெற்ற பிள்ளைகளின் மீது அதீதப்பாசம் கொண்டவராகவே தசரதன் வருகிறார். நிலைமை கைமீறிப்போகும்போது கைகேயியை மனைவி இல்லை எனவும் பரதன் மகனல்ல எனவும் கோபத்தில் முடிவெடுப்பது தவிர ராமனின் தயாள குணம் மொத்தமும் தசரதனிடமும் குடி கொண்டிருக்கிறது.

Lear: better thou
Hads’t not been born the not to have
pleased me better

என்னைப் பாராட்டாத நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என மூன்றாவது மகளான கார்டெலியாவைப் பார்த்துக் கூறும் லியரளவு பரதனை பிள்ளையல்ல எனும் போது தசரதன் தாழ்கிறார். மற்றபடி லியரிடம் இருந்த அதிகார போதை துளியளவு கூட இல்லாதவர்.

சொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லன் துறந்தேன்
மன்னே யாவான் வருமப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக் கென்றான்

என கைகேயியையும், பரதனையும் துறந்துவிடுகிறார் தசரதன்..

முடிவில் மீட்சிப்படலத்தில், தசரதனிடம் மீண்டும் பரதனையும், கைகேயியையும் ஏற்றுக்கொள்ளும்படி ராமன் சொல்லும்போது ராம காவியம் லியரின் காவியத்தை எஞ்சிவிடுகிறது.

ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்றுரை என
தீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்.

கம்பராமாயணத்தில் வரும் சகோதர பாத்திரங்களைப் போல நல்லவை மட்டும் நிறைந்த சகோதர பாத்திரங்கள் ஒன்று கூட ஷேக்ஸ்பியரில் இல்லை. பரதனும் லஷ்மணனும் கோபம் நிறைந்தவர்கள் என்றாலும் நியாயம் இருக்கும் இடங்களில் கோபத்தைக் காண்பிப்பதில்லை.

தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கற் பாலதோ?

தாய் எனும் உறவில் இருப்பதால் உன்னைக்கொல்ல முடியாமலாகிறது என பரதன் கைகேயியிடம் கோபப்படுகிறான்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே இன்று வரை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றில் மாக்பெத் நாடகம் மிகுந்த சிறப்பைப் பெற்றது. பேராசை எப்படி ஒரு மனிதனை அடியோடு சாய்த்துவிடும் எனக் காட்டும் நாடகம். லேடி மாக்பெத் பெண்மையின் எந்த இலக்கணமுமின்றி மாக்பெத்தை தூண்டிவிட்டு கொடிய கொலைகளை செய்யவைக்கிறாள். அவளைப் போல நயவஞ்சகியாக கூனியும், கைகேயியும் இல்லாதது ஒருவகையில் ராமாயண காப்பியத்தை நடுநிலையோடு அணுக வைப்பதோடு, கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஆழத்தையும் அளிக்கிறது. கைகேயியை ‘தீயவையாவையினும் சிறந்த தீயாள்’ என விவரித்தாலும் அவளது தீயச்செயல் பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக அமைவதில்லை. சூழ்நிலையினால் மனம் தடுமாறிப் போனவள் – இராவணனின் காமமயக்கம் போலொரு திரிபு நிலை. அதாவது, கதாபாத்திரங்கள் அடிப்படை குணத்தில் வஞ்சகர்களாக அல்லாது, சூழ்நிலை அவர்களை அப்படி மாற்றும் விதமாக கதையைக் கையாள்வதில் ராமாயணத்துக்கு ஈடில்லை.

மாக்பெத் நாடகத்தில்,

I have given suck and know
How tender tis to love the babe that milks me
I would, while it was smiling in my face
Have plucked my nipple from his boneless gums
And dashed the brains out, had I so sworn as you
Have done to this

பிள்ளையைத் தரையில் அடித்து முக்குளத்தை சிதறவைக்க வேண்டுமென்றாலும் செய்துவிட்டு என் வேலையைத் தொடருவேன் என்கிறாள் லேடி மாக்பெத். லேடி மாக்பெத் பெண்ணே அல்ல அவள் ஒரு அரக்கி என விமர்சகர்கள் கருதுமாக இது போல பல நிகழ்வுகளும் மாக்பெத்தில் உண்டு.

ராமாயணத்தில் சூர்ப்பனகை கூட இப்படிப்பட்ட அரக்கக் குணத்தோடு வருவதில்லை. அவள் ராம லஷ்மணன் இருவர் மீது கொண்ட காமத்தைக் கணக்கில் கொண்டால் கூட அவள் சூழ்ச்சி செய்து இராவணனை ஏவி விட்டாளே தவிர கொடூர செயல்களில் இறங்கவில்லை.

Tragic Hero வரிசையில் இந்திரஜித்துக்கு நம் மரபில் பெரிய இடமுண்டு. சொல்லப்போனால் இராவண ராமரிடையே நடந்த போரை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாடல்கள் இந்திரஜித் லஷ்மணன் இருவருக்கும் இடையே நடந்த போரைப் பற்றி கம்பர் எழுதியுள்ளார். மாய வித்தைகளில் இராவணனை விட மிகவும் திறமை உள்ளவன் இந்திரஜித். மாயா ஜனகப் படலத்தில் ஜனகரைப் போல மாய உருவைப் படைத்து சீதையை மனங்கலங்கச் செய்தவன். அதே போல, சீதாதேவி இறந்தவிட்டதைப் போன்ற மாயத்தை ராமர், லஷ்மணர் முன்னே நிகழ்த்திக் காட்டியவன். ஒரே நேரத்தில் பல இடங்களில் உருவங்களை ஏற்படுத்துவதோடு, இயற்கை சீற்றங்களையும் அமைத்துக்காட்டுகிறான். கண் இமைக்காத தேவர்கள் கூட சிதறி ஓடும் விதமாக உலகம் தெறிக்கிறது.

அவனது ஆற்றலை லஷ்மணனே கண்டு வியந்து நிற்கும்போது இந்திரஜித்தனின் மாயப்போர் பற்றி வீடணன் உரைக்கிறான்

தேரினைக் கடாவி வானிற் செல்லினுஞ் செல்லுஞ் செய்யும்
போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய்க்
காரினைக் கடந்து வஞ்சங் கருதினுங் கருதும் காண்டி
வீரமெய் பகலினல்லால் விளிகிலனிருளின் வெய்யோன்

அரக்கருக்கு சக்தி இருளில் எனும்படியாக இந்திரஜித்தின் வீரம் பகலில் அல்லாது இருளின் சூரியன் போல இரவில் பலங்கொண்டு எழுவான் என்கிறான் வீடணன். இராவணனை எதிர்த்து இந்திரஜித் பெண் பாவத்தின் கெடுதல்களை சொல்ல முயன்றான். கும்பகர்ணன், மண்டோதரி, மகோதரன், இந்திரஜித் என இராவணனைச் சுற்றி இருந்த அனைவருமே அவனது தீய எண்ணத்தின் விளைவுகளைப் பற்றி அவனுடனேயே விவாதித்தவர்கள். யார் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லாதபடி காமம் அவனது கண்களை மறைந்திருந்தது. கடைசிவரை அது அவனுக்கு சரியான வழ புகட்டவில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் தீயவர்கள் நம்மைப் போன்ற சாதாரணமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சாமானியர்கள். புரூட்டஸ், லேடி மாக்பெத் போன்ற எதிர் நாயகர்கள் மனித உணர்ச்சிகளை ஒரு நிலையில் வைக்கத் தெரியாதவர்கள். ஆனால் வஞ்சினத்தில் இந்திரஜித்தின் மாயத்தைப் போன்றவர்கள். இவ்விதத்தில், மனித மனதின் ஆழமான இருட்டை காட்டியவர்களாகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் தோய்ந்து கிடக்கும்படியான நாடக தருணங்களும், ரசனையும் அமையும்படி படைப்புகள் கம்பன் ஷேக்ஸ்பியர் இருவரிலும் இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நடையில், உயிர்ப்பாக அமைந்திருக்கும். கம்பனின் காட்சிகளும், உணர்வுகளும் பிரம்மாண்டமான பின்புலத்தில் அமைந்திருக்கும். மேலோட்டமான பார்வையில் இருவேறு வகையினராகத் தெரிந்தாலும் கவித்திறனிலும் கற்பனைவளத்திலும் இருவரும் ஒப்புநோக்கத் தக்கவர்கள் என்பதை இந்த நூலில் பேராசியர் கி. நடராஜன் நிறுவியுள்ளார். கம்பன் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரசனையின் ஒரு துளியைப் பருக நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.