ஸ்டீபன் கிங்

ஸ்டீபன் கிங்கின் ‘ஜாய்லேண்ட்’

ஆர். அஜய்

joyland
1973ஆம் வருடம் ‘ஜாய்லேண்ட்’ நாவலின் கதைசொல்லி டெவினுடனான உறவை முறித்துக் கொள்கிறாள் அவர் காதலி. இருபத்தியோராவது வயதில் ஏற்பட்ட அந்த முதற்காதலின் முறிவின் காயம் வடுவாகி அவ்வப்போது அது தரும் வலியால், 2012 ஆண்டும் -அம்முதற் காதலுக்கு பின்னான பல உறவுகளுக்குப் பின் – தன்னுடைய அறுபத்தியோராம் வயதிலும் டெவின் துன்புறுகிறார். அவள் ஏன் தன்னைப் பிரிந்து சென்றாள் என்ற கேள்விக்கான விடையை இந்த வயதிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தழுவுதல், முத்தமிடுதல் இவற்றுக்கு அடுத்த கட்டமான ‘அதற்கு’ (‘It‘ என்று தான் டெவின் அதை குறிப்பிடுகிறார்) செல்ல காதலி வெண்டி வெட்கி தயங்க, கனவான்போல் தான் அவளை வற்புறுத்தாததுகூட காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்.

வாழ்வில் இன்பங்களை மட்டுமே அடைவது அனைவரின் ஆசையாக இருந்தாலும், துன்பங்களை அவரவர் அதிர்ஷ்டம் அல்லது ஆற்றல் சார்ந்து அடைவது தவிர்க்க இயலாததாக உள்ளது. கற்றுக்கொள்வதும், கல்லாமல் இருப்பதும் அவரவர் கைமணல் எனினும், காலப்போக்கில் அவற்றை அசை போடும் மனநிலைக்கு வந்து விடுகிறோம். அந்த அனுபவங்கள் மீதான நம்முடைய மீள் விசாரணை நம் வாழ்வை தொகுத்துக் கொள்ள உதவுகின்றன. டெவின் அப்படி அசை போடுபவர்களின் பிரதிநிதி என்றால், அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் வாழ்வு முடிந்து போகிறவர்களும் – இருபதுகளின் ஆரம்பித்தில் இருக்கும் நான்கைந்து பெண்கள் அனுபவங்களின் சேகரிப்பு நிகழ அவகாசம் இல்லாமல், நாவலின் எதிர்மறை பாத்திரத்தால் கொல்லப்படுகிறார்கள் – ‘ஜாய்லேண்ட்’ நாவலில் உண்டு.

டெவினையும் கொல்லப்பட்ட பெண்களையும் கொலையாளியையும் இணைக்கும் புள்ளி, அதனூடே இணைந்து வரும் அமானுஷ்யம் இந்நாவலை குற்றப்புனைவு/ வழக்கமான ஸ்டீபன் கிங்கின் திகில் புனைவு என்று வரையறை செய்ய உதவினாலும், வாழ்வின் மீது இன்னும் கால் பதிக்காத இளைஞனின் மனம் முதன் முதலாக தரை தட்டுவதைப் பற்றியும், அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பற்றியுமான நாவலாகவே உண்மையில் இதைப் பார்க்க முடிகிறது. அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்.

கோடை விடுமுறைக்கால பணியாக, ‘ஜாய்லேண்ட்’ எனும் கேளிக்கை வளாகத்தில் (theme park) வேலைக்கு சேர்வதில் இருந்து நாவலை ஆரம்பித்து அங்கு நடந்த ஒரு கொலை, கொல்லப்பட்டப் பெண் ஆவியாக அலைவதாகச் சொல்லப்படுவது போன்றவற்றை டெவின்/ கிங் தொட்டுச் சென்றாலும் அவற்றில் அதிக நேரம் செலவிடுவதில்லை. நாவலின் பெரும்பகுதி டெவினின் உணர்வுநிலை ஊசலாட்டங்களையும் அவன் அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் புதிய உறவுகளையும், அப்பாத்திரங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கிங் அதில் பெருமளவு வெற்றி பெறுகிறார்.

எழுத்தில் ஆர்வமுள்ள டெவின் சற்று மென்மையானவர், கனவுகள் நிறைந்தவர் என புரிந்து கொள்கிறோம். அதே நேரம் இளமை தரும் அதீத நம்பிக்கையில், தன் கண் முன்னே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களை கவனித்தும் அவ்வாறு நடக்காது என தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் சிறுவனாகவும் இருக்கிறார். காதலி வெண்டி சில காலமாக முன்பிருந்த அளவிற்கு நெருக்கமாக இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும் அந்த உண்மையை எதிர்கொள்ள மறுத்து, சிறிது சஞ்சலத்துடன்தான் வேலைக்குச் சேர்கிறார். தான் பக்கம் பக்கமாக எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு வெண்டி ஓரிரு வரிகளில் பதில் அளிப்பதும் அவரை நம்பிக்கை இழக்கச் செய்வதில்லை. டாம்(Tom) மற்றும் எரினுடன் (Erin) அவருக்கு நெருங்கிய நட்பேற்படுகிறது.

டெவினுக்கு அந்தக் கோடை ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், தங்கள் இணையை ஒருவரில் மற்றொருவர் கண்டு கொள்ளும் டாமுக்கும் எரினுக்கும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடமே. தன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து ஒரு கட்டத்தில் வெண்டி வெளிப்படையாக உறவை முறித்தவுடன் முற்றிலும் இருள் சூழ்ந்து விட, அதே நேரம் டாமும் எரினும் தங்கள் உறவில் ஒளியேற்றிக் கொள்வதைக் கண்டு ஒரு சிறு துளி பொறாமை கொண்டதையும் டெவின் நேர்மையாக பதிவு செய்கிறார். இவர்களுடனான நட்புடன், குழந்தைகளை மகிழ்விக்க ஜாய்லேண்ட்டின் அடையாளச் சின்னமான (mascot) நாய் வேடமணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் பணியிலும் இயல்பாக பொருத்திக் கொள்கிறார் டெவின்.

‘ஜாய்லேண்ட்’ திறந்திருக்கும் கோடை காலத்தில் மட்டும் ‘ஜிப்சியாக’ வேடமிட்டு, ஆருடம் சொல்லும் ஃபார்டுனா (Fortuna), டெவின் இருவரைச் சந்திக்கப்போவதாகவும் அதில் ஒருவர் அவன் வாழ்வில் முக்கியத்துவம் கொண்டவராக இருப்பார் என்று சொல்வதும், டாம் கொல்லப்பட்ட லிண்டாவை (Linda) பார்த்ததாக டாம் சொல்வதும் இது மர்ம/திகில் நாவல்தான் என்று அவ்வப்போது நினைவூட்டினாலும், டெவினின் உளக் காய்ச்சலைத்தான் சுற்றி வருகிறது. காதல் முறிவில் அவர் மருகுகிறார் என்று கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்து விடுகிறது, அவரிடம் அது குறித்து பரிவாகவே நடந்து கொள்கிறார்கள். அவரின் பணி நேர்த்தி (அதுமட்டுமல்ல குழந்தை ஒன்றை அவர் காப்பாற்றுகிறார்), மற்றும் இயல்பான இனிய சுபாவமும் காரணமாக இருக்கலாம்.

கோடை முடிந்தவுடன், கல்லூரிக்கு திரும்பும் முன் எரின் டெவினை முத்தமிட்டு ‘ஏன் டாம் இங்கு இருந்தான்’ என்று கேட்பதின் பொருள் தெரிந்தாலும், என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது குறித்த சாத்தியங்களை வாசகன் யோசிக்கலாம். டெவின் மட்டும் கல்லூரிக்குத் திரும்பாமல் தொடர்ந்து ஜாய்லேண்ட்டில் வேலை செய்ய முடிவு செய்வது, அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால் மட்டும்தானா அல்லது திரும்பிச் சென்று -மற்றொருவனுடன் உறவில் இருக்கும் – வெண்டியை எதிர்கொள்ள வேண்டியதை தவிர்க்க எண்ணியதாலா என்பது குறித்தும்யோசிக்க இடமிருக்கிறது.

உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மைக், அவன் தாய் ஆன்னியையும் சந்தித்து அவர்களுடனும் -சின்ன தடங்கல்களுக்குப் பின் – நட்பு ஏற்படுகிறது. ஆன்னியின்பால் ஈர்ப்பட்டு (அவரும் டெவினின்பால்), இருவரும் உடல் உறவும் கொள்கிறார்கள். புது உறவின் திளைப்பிலும் கூட டெவினுக்கு இதற்கும், வெண்டியுடனான உறவுக்குமுள்ள வித்தியாசமும் அதை எப்போதும் ஈடு செய்ய முடியாது என்று புரிந்து கொள்வதும் வாசகனுக்கு சிலவற்றை உணர்த்துகின்றன.

முதற் காதலின் தோல்வி, அதை கடந்து செல்லும் முயற்சிகள் என ஒற்றை விஷயத்தின் நினைவோடை குறிப்புக்கள் (nostalgia) மட்டுமே அல்ல இந்த நாவல். ஆம், இதில் கடந்த காலம் பற்றிய ஏக்கம் உண்டு, ஆனால் அது அக்காலத்தில் நாம் கண்ட -காதலும் அடங்கிய – கனவுகள் பற்றிய ஏக்கம். அந்தக் கோடையைப் பற்றி விவரிக்கும்போதே டெவின்/ கிங் அதற்குப் பின் என்ன நடந்தது என காலத்தில் முன் பின் சென்று சின்ன செய்திகளை சொல்லும் உத்தி இளமைக் கனவுகளின் இலட்சியங்களின் நிச்சயமற்ற தன்மையை உணர்த்துகின்றன.

டெவின் தான் எண்ணி இருந்தது போல பெரிய எழுத்தாளராகவில்லை, பத்திரிக்கைகளில் வேலை செய்கிறார். மணம் முடிக்கும் டாம்/எரினின் மண வாழ்கை இருபது வருடமே – டாம் மறையும் வரை – நீடிக்கிறது. இந்தச் செய்திகள் வாசகனுக்குத் தெரிவதால், 1973ல் கனவுகளை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்களை காணும்போது அவனுக்கு அவற்றின் வியர்த்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது, அத்துடன்தான் கண்டிருக்கக் கூடிய கனவுகள் என்னவாகின என்றும் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறது. லிண்டாவை காணும் டாம் அதை குறித்து பேச மறுக்கிறான், அதை தன் மனதிலிருந்தே அகற்ற எண்ணுகிறான். இன்று, இந்தக் கணத்தில், யதார்த்தத்தில் வாழும் விழைவும் வாழ்வின் மீது நேசமும் அதைப் பெரும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் இளைஞன் ஒருவன் தன்னுடைய நாற்பதுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

மர்மங்கள் அவிழ்க்கப்படும் நாவலின் இறுதிப் பகுதி அதன் பலவீனமான அம்சமாக உள்ளது. ஜாய்லேண்ட்டில் டெவின் தன்னை பொருத்திக் கொள்வது இயல்பாக இருந்தாலும், லிண்டாவின் ஆவியைப் பார்க்க அவன் கொள்ளும் மிதமிஞ்சிய (டாம் கண்ணிற்கு மட்டும் அவள் தென்படுவது அவனுக்கு கொஞ்சம் பொறாமையூட்டுகிறது) ஆவலுக்கான தர்க்கம் நாவலில் வெளிப்படையாக மட்டுமல்ல குறிப்பாகவும் எங்கும் சுட்டப்படவில்லை.டெவின் பரபரப்பை விரும்பும் ஆசாமியும் அல்ல எனும் பட்சத்தில் அவன் ஏன் லிண்டாவை பார்க்கக் விழைய வேண்டும், ஏன் அந்தக் கொலை பற்றி ஆராய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையை வாசகன் அவனுக்கேற்றார் போல் வலிந்து யூகிக்க வேண்டியுள்ளது. அதே போல் டெவினுக்கு உதவ எரின் பழைய செய்தித்தாள்களை சேகரிப்பதும், -நாவலின் ஆரம்பத்தில் டெவின் தங்கும் வீட்டின் உரிமையாளர் லிண்டாவைத் தவிர இன்னும் சில பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக யூகிக்கப்படுவதாக கூறுவதும், தன் ஆராய்ச்சிக்குப் பின் அதே முடிவுக்கு வரும் எரின் இதை காவல்துறை கண்டு கொள்ள தவற விட்டுவிட்டது என்று சொல்வதும் முரணாக உள்ளது -அவற்றிலிருந்து சட்டென குற்றவாளியை அவன் அடையாளம் கண்டு கொள்வதும் நாவல் முடிவிற்கு வந்துவிட அவசரப்படுவதை தான் காட்டுகிறது, பாத்திரங்களின் மனநிலை, கேளிக்கை விடுதியின் சூழல் இவற்றை விவரிப்பதில் உள்ள நேர்த்தியும், ஆழமும் இறுதிப் பகுதியில் காணப்படவில்லை. மைக்கிற்கு இருக்கும் அமானுஷ்ய ஆற்றல் இந்த ழனார் எழுத்துக்களின் அத்தியாவசிய ஒன்று என்ற அளவில் பொருத்தமான ஒன்றே, அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதும் அதற்கான நியாயமும் நாவலில் உள்ளது, இருப்பினும் குற்றவாளியுடனான இறுதிச் சந்திப்பு சடுதியில் ஆரம்பித்து முடிவதாக இருப்பதை தவிர்க்கவில்லை.

மர்ம /திகில் புனைவென்பதைவிட கனவுகள் கலைவதால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள் பற்றிய புனைவாக ஜாய்லேண்ட் வெற்றி பெறுகிறது. லிண்டாவின் ஆவி பழிவாங்கத் துடிக்கவோ அதற்காக யாரையும் துணைக்கு அழைக்கவோ இல்லை. தான் கொலை செய்யப்பட்டபின் – ஜாய்லேண்ட்டின் ஒரு முக்கிய கேளிக்கை அம்சமான – திகில் அறையில் (horror house) இருந்து எப்படி வெளியேறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. லிண்டாவின் ஆன்மா வழக்கான பழிவாங்கும் பாவையாக இல்லாமல், திக்குத் தெரியாமல் திணறுவதில் எல்லையற்று விரிந்திருப்பதாக கற்பனை செய்திருந்த வாழ்வு திடீரென்று முடிவு பெற்றதை எதிர்கொள்ள முடியாத அதிர்ச்சியும், அதில் இருந்து மீள முடியாத இயலாமையின் சோகமும் தான் உள்ளது.

ரிச்சர்ட் போர்டின் (Richard Ford) ‘பஸ்கம்ப் ட்ரிலஜி’ (Bascombe Trilogy) (நான்காவதாக சமீபத்தில் ஒரு நாவல் வெளிவந்த பின்னும்) என்றழைக்கப்படும் நாவல்களின் முக்கியப் பாத்திரமான பஸ்கம்பின் மகன், சிறுவனாக இருக்கும் போதே காலமாகிறான். அவன் குறித்த நினைவுகளில் மூழ்கும் பஸ்கம்ப் அவனுக்கு வயது ஏறப்போவதில்லை என்பதாக எண்ணிக்கொள்கிறார், அவர் மனதில் அவன் குழந்தைமையை இழக்காத பாலகனாகவே இருப்பான். பஸ்கம்பின் மனவோட்டத்தினூடாகவே பயணம் செய்யும் நாவல்களின், ஒருவர் ஆறவே ஆறப்போகாத இயலாத துயரை எப்படி எதிர்கொள்கிறார், அதில் எப்படி துளியேனும் ஆசுவாசத்தை கண்டடைய முயல்கிறார் என்பதை விவரிக்கும் நெகிழ்வான தருணம் இது. பஸ்கம்ப் தன் அமைதிக்காக உருவாக்கிக்கொள்ளும் கற்பிதத்தை (ஒரு விதத்தில் அது உண்மையும்கூட என்று வாதிடலாம்) இந்நாவலிற்கும் பொருத்திப் பார்க்கலாம். லிண்டாவும் இனி எப்போதும் இருபதுகளில் இருக்கும் யுவதிதான், மூப்பென்பதே அவளுக்கு இல்லை. அந்த விதத்தில் அவள் நித்தியத்துவம் பெற்றுவிட்டாள். ஆனால் இப்படிப்பட்ட நித்தியமான இளமையை யார் விரும்புவார்?

இறப்பிற்கு பின்னான விஷயங்களை அவரவர் நம்பிக்கைக்கேற்ப யூகிக்கத் தான் முடியும் என்றாலும், நாவலின் உலகினுள் ஆன்மா, அமானுஷ்யம் உணமையனவையாக உள்ளன என்பதால் லிண்டா செல்லுமிடத்தில் அவள் தன் வாழ்கையை திரும்பிப் பார்ப்பாளா, கடந்த கால (அங்கு காலமென்ற ஒன்று இருந்தால்) அனுபவங்களை அசை போடுவாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. இன்னொரு புறம் மூப்படையும் டெவின் போன்றவர்கள் பல கசப்புக்களையும், இனியவைகளையும் அனுபவித்திருந்தாலும், கடந்து வந்த பாதையில் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு நிறைய உள்ளது என்பது -இறப்பதைவிட – நேர்மறையான அம்சம் என்று கொள்ளலாம். ஆனால் அவர்களும் ஒரு விதத்தில் லிண்டாவைப் போல் வாழ்வெனும் கேளிக்கை விடுதியில் அவரவருக்கான பிரத்யேக திகில் அறையில் சிக்கிக் கொண்டு திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

oOo

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா