ஹரன் பிரசன்னா

பாதை

ஹரன் பிரசன்னா

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்

இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

image credit : space

அப்படியே ஆகுக

 
காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்
..

ஆதிகுரல்

ஹரன் பிரசன்னா –

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

ஒளிப்பட உதவி –  Omar Chacon, Untitled, 2005, artnet 

செக்மேட்

ஹரன் பிரசன்னா

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான்
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

ஹரன் பிரசன்னா –

 

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்லை
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.