– ஹரன் பிரசன்னா –
பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்