ஹெலன் சிம்ப்ஸன்

ஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

41xpkc6xpdl-_sx331_bo1204203200_

மௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்திலிருந்து எடுத்த பளீரில் காஃபி ஃபில்டர்கள். தியானிக்க உதவியாக ஜன்னல் திரைகளை மேலே தூக்கி விட்டதில் இன்னும் பசேலென்று உள்ள தோட்டம், புல்வெளி. பற்பசையின் தாக்கத்தால், நாக்கு துழாவினால் சிறிதும் கொழ கொழப்பு இல்லாத சுத்தத்தில் பற்கள், வாடை இல்லாத வாய், தூய காற்றுக்குத் தயாராக உள்ள மூக்கு என்று உடல் இன்னொரு நாளைக்குத் தயாராக இருக்கிற நிலை.

அடிக்கடி விழிப்பு தட்டியிருந்தாலும்கூட, உறக்கமும் இரவில் கண்ட கனவுகளின் தடயங்களும் புத்தியில் இன்னமும் இருக்கும் பொழுது. நேற்று இரவு படுக்குமுன் சமையலறை மேஜையில் அமர்ந்து படித்த ஹெலன் சிம்ப்ஸனின் மூன்று கதைகள் புத்தியில் புரளும் காலை இன்று. இந்திய பெண்ணியம் மேலை பெண்ணியம் என்று பிரித்து நோக்க முனைந்தால் வேறுபாடுகள் தெரியும் அளவு வேறான எழுத்து. விக்கட் ஹ்யூமர் என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அந்த வகை நகைச்சுவையைக் கையாள்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

இவருக்குக் கதை சரியாக அமையும் தருணங்களில், புள்ளி போன்ற காயத்தைக் கொடுத்து, ஆனால் உள் பாகங்கள் அனைத்தையும் துணித்து விட்டு வெளிவரும் மெலிய, உறுதியான கத்தி போன்ற நகைச்சுவையாக இருக்கிறது அது. அறுபடுவது ஆண் மையப் பார்வை மட்டுமா, அல்லது சமூக உறவுகளின் கேவலங்களா, அல்லது வாழ்வின் அவலங்கள் எல்லாமா என்று நாம் யோசிக்க வேண்டிய அளவு வீச்சு கொண்டது. அதே நேரம் மட்டுப்பட்ட களம், பாத்திரங்களின் விரிவட்டம், சொற்கூட்டம் என்று அடக்கி வாசித்து சஸ்திர சிகிச்சை செய்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

நேற்று வாசித்த மூன்றில் ஒன்று சாவையும் நோயையுமே மையமாகக் கொண்டு யோசித்து பயணப் பாதை பூராவும் வாசகரின் கண்ணில் நீர் வழியும் வரை சிரிக்க வைக்கும் கதை.  இரண்டாவது, முதியவர்களைப் பராமரிக்கும் நடுவயதுத் தலைமுறையினரின் அவசரங்களால் ஏற்படும் அவமானமும் அதிர்ச்சியும் பற்றிய கதை. மூன்றாவது, 30களில் நுழைந்திருக்கும் தம்பதியினரின் பிணக்கம் நிறைந்த உரையாடலை, சற்று மறைவில் இருக்கும் நான்கு பதின்ம வயதினர் கண்காணித்து, அந்த உரையாடலில் இருக்கும் சாதாரண நிலை ஒவ்வொன்றையும் ஒரு எஎறிகுண்டைப் போல உணர்வதைக் காட்டும் கதை. தம் எதிர்காலம் இப்படி எல்லாம் அமையக்கூடாது, அமைய விடமாட்டோம் என்று நினைக்கும் அந்த நால்வரும், அந்த ஆபத்தை உணரும் அதே நேரம் உள்ளில் எங்கோ இதிலிருந்து தாம் விடுபட வழியே இல்லை என்றும் உணர்வது போலச் சித்திரிக்கும் கதை. கதை முடிவில் ஒளிந்த நால்வர் ஓட வேண்டிய நேரம் வருகிறது. அவர்கள் ஓடுவதை ஒரு பத்தியில் வருணிப்பவர், என்னவொரு விடுதலை வேட்கை அந்த ஓட்டத்தில் என்பதைச் சுட்டி விடுகிறார்.

எல்லாம் உரையாடல்களும், இடைவெட்டும், அசரீரி யோசனையும் நடத்தும் கதைகள். உறவுகளே மையத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாம் நம்மை விலகி நின்று கறாராகப் பார்க்க வைக்கின்றன. முடியும்போதுதான் கதைமாந்தர் வேறு யாருமில்லை நாமேதான், நாம் கடந்து வந்த பாதைகள் பலவும் இங்கு உள்ளன என்பது புரியும். ஆனால் உங்கள் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதைகளில் நொடிக்காமல் ஓரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறதில் நீங்கள் ஆசுவாசம் பெற முடியலாம், அல்லது நொடித்துப் பாதியில் வீழ்ந்து போனதைப் புரிந்து கொண்டு கழிவிரக்கமோ, அல்லது சுயத்தைக் கனிவாகப் பார்ப்பதோ மேற்கொள்ளலாம். அல்லது இத்தனை இரக்கமின்றி அறுத்துச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளரிடம் சற்றாவது பொருமலாம்.

டொமஸ்டிசிடி என்பது இந்தக் கதைகளின் கரு. இன் த ட்ரைவர்ஸ் ஸீட் என்ற கதைத் தொகுப்பு. அட்டைப் படத்தை இன்று காலை பார்த்தபோது பொருத்தமின்மை பார்வையைத் தடுக்கியது. இத்தனை நுட்ப புத்தி கொண்ட எழுத்தாளர் இந்தக் கதைத் தொகுப்புக்கு இப்படி ஒரு அட்டைப் படத்தைப் போட ஏன் ஒத்துக் கொண்டார் என்று யோசிப்பதால், இதில் வேறென்ன இருக்கும் என்றும் யோசிக்க வைத்தது. வெறும் மர நாற்காலி, பின்னே சுவரில் ஒரு வட்டமான கடிகாரம். அதிலும் கடிகாரப் படங்களில் எங்கும் காணும் வழக்கமான பத்து மணி, பத்து நிமிடங்கள் என்று நேரம் காட்டும் கைகள். பின்புலம் முழுதும் வெண் சாம்பலில் மிக இலேசான நீலம் பாவித்த நிறத் திரை போன்ற தோற்றம். நாற்காலியின் கால்கள் வளைந்து தரையில் பொருந்துவது கொஞ்சம் கோமாளித்தனமாக இருக்கிறது.

நிறைய கதைகளில் கார்களில் செலுத்தப்படும் பயணங்கள் வருகின்றன. ஆனால் படத்திலோ இருப்பது சாப்பாட்டு மேஜை நாற்காலி. இருக்கையில் குஷன்கூட இல்லை. ஒரு கதையின் தலைப்பு இன் த ட்ரைவர்ஸ் ஸீட். அதுதான் புத்தகத்திலேயே சிறிய கதை. ஆறு பக்கங்கள்தான். புத்தகமும் சிறிய அளவு புத்தகம்- உயர, அகல, கன பரிமாணங்களில் சிறியது. ஆனால் விண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட கதை. கதை சொல்லும் பாத்திரம் இத்தனைக்கும் காரோட்டும் பாத்திரம் இல்லை. சரி, பொருத்தம்தான் என்று தோன்றியது.

இந்தப் படத்தால் நான் தண்டவாளத்தை விட்டு விலகி வந்திருக்கிறேன். மறுபடி பெட்டிகளைத் தடத்தில் ஏற்றினால், காஃபி போடும்போது, ஹெலன் சிம்ப்ஸனின் கதைகள் மனதில் இன்னும் உலா வந்து கொண்டிருந்தன. அவர் தன் பெண்ணியப் பார்வையில் இந்தச் சமூக அமைப்பு இப்படி பெண் எதிரியாக இருப்பதாகச் சித்திரிக்காமல், அதே நேரம் பெண் எதிர்ப்புத்தனம் அதில் ஊறி வருவதையும் மறுக்காமல் கதை சொல்கிறார். எப்படி பெண்கள் இந்த எதிரி நிலைக்குத் தாமும் துணை போகிறார்கள், அது எதனால் இருக்கும் என்பதையும் அவருடைய அறுக்கும் கத்தி பிளந்து பார்வைக்கு வைக்கிறது.

ஒளிப்பட உதவி- Amazon