(தமிழாக்கம் – மைத்ரேயன்)
நான் ஹோமரைப்[1] பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய இரண்டு புத்தகங்களும் இரண்டு அடிப்படை அதிபுனைவுக் கருக்களைக் கொண்டவை என்று அப்போது தோன்றியது: போரும், நெடும்பயணமும்.
எனக்கு நிச்சயமாகத் தெரியும், இதே எண்ணம் பலருக்கும் தோன்றி இருக்கும். அதுதான் ஹோமர். ஜனங்கள் அவருடைய புத்தகங்களை நாடிப் போய், புதுப் புது விஷயங்களை அவற்றில் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அல்லது பழையவற்றை, அல்லது முதல் தடவையாக எதெதையோ, அல்லது ஏற்கனவே கண்டவற்றை மறுபடியும் ஒரு தடவையாகக் கண்டு பிடித்து அவற்றைப் பற்றிப் பேசுகின்றனர். இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எதுவுமே, இத்தனை காலமாக யாருக்காவது அர்த்தமுள்ளதாகத் தென்படுகிறது என்பதே ஒரு அதிசயம்தான்.
அது எப்படியானாலும், தி இலியட்[2] என்பது போர் (உண்மையில் அதன் ஒரு பகுதிதான் அப்படி, இறுதிப்பகுதிக்கு அருகில், ஆனால் இறுதிப் பகுதி அப்படி அல்ல). த ஆடிஸி[3] என்பதோ நெடும்பயணம் (அங்கே, பிறகு திரும்பி இங்கே- என்று பில்போ[4] சொல்கிற மாதிரி).
போரைப் பற்றி எழுதிய பல எழுத்தாளர்களை விட புத்திசாலித்தனமாக ஹோமர் நடந்து கொண்டிருக்கிறார், அவர் எந்த சாரியையும் சார்ந்திருக்கவில்லை.
ட்ரோஜன் போர் [5] நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போர் அல்ல, அதை அப்படி நாம் மாற்றி விடவும் முடியாது. அது ஒரு போர், அவ்வளவுதான். அழிவைக் கொணர்ந்த, பயனேதுமற்ற, தேவையற்ற, முட்டாள்தனமான, நீண்ட, கொடுமையான குழப்பம் அது. தனி நபர்களின் துணிகரமான செயல்களும், கோழைத்தனமும், மேன்மையுள்ள நடத்தையும், காட்டிக் கொடுக்கும் செயல்களும், கால்-கைகளை வெட்டி எறிவதும், குடலை உருவும் காட்சிகளும் நிரம்பிய போர்.
ஹோமர் கிரேக்க நாட்டவர்.[6] கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடும், ஆனால் அவரிடம் நீதி நாடும் அல்லது சமநிலை தேடும் புத்தி இருந்திருக்கிறது, அது கிரேக்கர்களுக்கே உரிய குணம் போலத் தெரிகிறது. ஒருக்கால் அவருடைய மக்கள் அவரிடம் இருந்து இந்தக் குணத்தின் பெரும் பங்கைப் படித்துக் கொண்டார்களா? அவருடைய சார்பின்மை உணர்ச்சிகளற்றதல்ல; அந்தக் கதை உணர்ச்சி பொங்கும் செயல்களும், தாராளமானதும், வெறுப்பூட்டுவதும், பிரமிக்கத் தக்கதும், பொருட்படுத்தத் தேவை இல்லாததும் பெருக்கெடுத்தோடும் வெள்ளம். ஆனால் அது சார்பற்றது. அது சாத்தான்- எதிர் -தேவதைகள் என்ற எதிரிடை இல்லாதது. புனிதப் போராளிகள்- எதிர்- நாத்திகர் என்பதாக இல்லாதது. அதில் ஹாப்பிட்கள்- எதிர்- ஆர்க்குகள் இல்லை. அதில் ஜனங்கள்- எதிர்- ஜனங்கள்தான் இருக்கிறது.
ஒருவர் ஒரு தரப்புக்குச் சார்புள்ளவராக இருக்கலாம், அனேகமாக எல்லாரும் அப்படிச் செய்கிறார்கள். அப்படிச் செய்யாமல் இருக்க நான் முயல்கிறேன், ஆனால் அது பயனற்ற முயற்சி. எனக்குக் கிரேக்கர்களை விட ட்ரோஜன்களைக் கூடுதலாகப் பிடிக்கிறது. ஆனால் ஹோமர் உண்மையிலேயே தரப்புச் சாய்வு கொள்ளவில்லை, அதனால் அவர் கதையை சோகக் கதையாக ஆக அனுமதிக்கிறார். சோகத்தால், ஆன்மாவும் மனமும் வருத்தப்படுகின்றன, பெரிதாகின்றன, உயர்த்தப்படுகின்றன.
அதனளவில் போர் என்பது ஒரு சோகக்கதையாக உயர முடியுமா, அது ஆன்மாவை விரிவடையச் செய்து உயர்த்துமா, இதையெல்லாம் போரில் என்னை விட உடனடியாகப் பங்கெடுத்திருப்பவர்களுக்குக் கேள்விகளாக விடுகிறேன். சிலர் அது அப்படிச் செய்யக் கூடியது என்று நம்புவதாக நான் கருதுகிறேன், அவர்கள் வீர சாகசங்களுக்கு அங்கு வாய்ப்பு கிட்டுவதாகவும், சோகங்கள் போருக்கான நியாயங்களைக் கொடுப்பதாகவும் சொல்லக் கூடும். எனக்கு அது தெரியவில்லை; எனக்குத் தெரிந்ததெல்லாம் போரைப் பற்றிய காவியம் என்ன செய்யக் கூடும் என்பதுதான். எப்படி இருந்தாலும், போர் என்பது மனிதர்கள் செய்வது, அவர்கள் அதை நிறுத்துவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, அதனால் அதைக் கண்டனம் செய்வதை விட, நியாயப்படுத்துவதை விட, அதைச் சோகமானதாகக் கருதுவது முக்கியமானது.
ஆனால் ஒரு முறை நாம் ஒரு தரப்பின் பால் சாய்ந்தால், அந்த விதமாக போரைக் கருதுவது நமக்கு இயலாமல் போகும்.
நல்ல மனிதருக்கும் தீய மனிதருக்கும் இடையில் போர் நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவதற்குக் காரணம் நம்முடைய பிரதான மதம்தானா?
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரில் தெய்வ அல்லது அமானுஷ்ய நீதி இருக்கலாம், ஆனால் மனித சோகம் இருக்காது. நியதிப்படியே அதுதான் வரையறை. நன் முடிவு: (டாண்டேயின் ‘த டிவைன் காமெடி’யை உதாரணமாகக் கொள்ளலாம்) நல்லவர்கள் வெல்ல வேண்டும். அதன் முடிவு மகிழ்ச்சியாக இருக்கும். தீயவர்கள் நல்லவர்களைத் தோற்கடித்தால் அது துன்பமான முடிவு, அது எதிரிடை, காசைச் சுண்டினால் மறுபுறம் விழுவது போல. படைப்பவர் இங்கு சார்பில்லாமல் இல்லை. சீர்கெட்ட உலகு என்பதே சோகக் கதையாகாது.
கிருஸ்தவரான மில்டன், ஒரு புறம் சார்பு கொள்ள வேண்டியிருந்தது, அதனால் அவரால் மகிழ்வான முடிவைத் தவிர்க்க முடியவில்லை. சோகக் கதையாக ஆக்க, அவர் தீமையுருவான லூஸிஃபரை, பேருருவாக, நாயகக் குணம் கொண்டவனாக, பரிவோடு கூட அணுகிச் சித்திரிக்க வேண்டி வந்தது- அதை அவர் பொய்யாகத்தான் செய்ய வேண்டி வந்தது. அவர் நன்றாகவே பொய்ப் பாவனை செய்திருந்தார்.
ஒருக்கால் இந்தச் சிந்தனைப் பழக்கம், எதிரிடை வழி நோக்குவது, கிருஸ்தவத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் இருக்கலாம், மாறாக நாம் எல்லாருமே வளரும்போது எதிர்கொண்ட துன்பங்கள், நீதி என்பது நன்மையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவோராக நம்மை ஆக்கி இருக்கின்றன போலும்.
எப்படி இருந்தாலும், “சிறந்தவர் வெல்லட்டும்” என்று சொல்வதற்குப் பொருள் நல்லவர் வெல்லட்டும் என்பதில்லை. அதற்குப் பொருள், “இது ஒரு நியாயமான போராட்டம், ஒரு முன் முடிவும் இல்லாதது, இடையீடு ஏதும் இல்லாதது- எனவே சிறந்த போராளி வெல்வார்,” என்பதுதான். சதி செய்யும் முரடன் நேர் வழியில் நல்லவனைத் தோற்கடித்தால், சதிகார முரடன் வென்றவனாக அறிவிக்கப்படுவான். அது நியாயம்தான். ஆனால் இந்த வகை நீதியைக் குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அதற்கெதிராக ஆத்திரப்படுவார்கள். இது நியாயமில்லை! (என்பார்கள்).
ஆனால், அதைச் சகித்துக் கொள்ளக் குழந்தைகள் பழகிக் கொள்ளவில்லை என்றால், வெற்றி அல்லது தோல்வி என்பன, போர்க்களத்திலும் சரி, அல்லது முழுதுமே ஒழுக்கத்தையே பற்றி இராத எந்தப் போட்டியிலும் (அது என்ன போட்டியானாலும்) சரி, ஒழுக்கத்தில் மேன்மை என்பதோடு சம்பந்தப்படாதவை என்பதைக் கற்க மாட்டார்கள்.
வலிமை என்பதே சரியானதாகி விடாது- அப்படித்தானே?
அதனால் சரி என்பதே வலிமையாகாது. இதுவும் சரியா?
ஆனால் நாம் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதாவது “என் இதயம் சுத்தமாக இருப்பதால், என் வலிமை என்பது பத்துப் பேரின் வலிமைக்கு ஈடானது,” என்பதை.
நிஜ உலகில் இறுதியாக வெற்றி பெறுபவர் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று நாம் வற்புறுத்தினால், நாம் நல்ல நடத்தையை வலிமைக்குப் பலியிட்டு விடுகிறோம். (போர்கள் முடிந்த பின் வரலாறு இதைத்தான் சாதிக்கிறது. வென்றவர்களை அவர்களின் மேலான நற்குணங்களுக்காகப் பாராட்டுவதையும், அவர்களின் மேம்பட்ட தாக்கும் சக்தியையும் பாராட்டும்போது வரலாறு செய்வது இதைத்தான்.) நல்ல மனிதர்கள் எப்போதும் யுத்தங்களில் தோற்கும்படியாகவும், இறுதிப் போரில் வெல்லும்படியாகவும் போட்டிகளை நாம் திரித்து அமைத்தால், நாம் நிஜ உலகை விட்டுப் போய், அதிபுனைவு உலகுக்குள் நுழைந்து விடுகிறோம்- நம் விருப்பத்துக்கு எல்லாவற்றையும் அமைக்கும் நாடாகி விடும் அது.
ஹோமர் அப்படி கற்பனைக்கு எதார்த்தத்தை வளைக்கும் செயலைச் செய்யவில்லை.
ஹோமரின் அக்கீலஸ் கட்டுப்பாடற்ற ஒரு அதிகாரி, முகம் கோணியவன், தன்னிரக்கத்தில் ஊறிய இளைஞன், மூக்குடைபட்டதால் தன் அணியின் சார்பில் போரில் கலந்து கொள்ள மறுப்பவன். அவனுடைய நண்பன் பாட்ரோக்ளொஸ் மீது அவன் கொண்ட அன்பு ஒன்றில் அவன் ஒரு நாள் வளர்ந்து மன முதிர்ச்சி பெற்றவனாக வாய்ப்பு இருக்கிறதாகச் சுட்டுகிறது. அப்படி வளர, அவனுக்குச் சற்று அவகாசம் தேவை. ஆனால் அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதற்குக் காரணத்தை நோக்கலாம்- அவனுக்கு வன் புணர்வு செய்து அடைவதற்கு ஒரு பெண் கொடுக்கப்பட்டிருக்கிறாள், அவளை அவன் தன் மேலதிகாரியிடம் திருப்பிக் கொடுக்கும்படி ஆகிறது என்பது அந்தக் காரணம். என்னைப் பொறுத்தவரை இது அவனுடைய காதல் கதையை (பாட்ரோக்ளொஸ் மீது கொண்ட அன்பை) ஒளியிழக்கச் செய்கிறது. என்னைப் பொறுத்தவரை அக்கீலஸ் நல்லவன் அல்ல. ஆனால் அவன் ஒரு நல்ல போர்வீரன், சிறப்பாக யுத்தம் செய்பவன் – ட்ரோஜன்களின் சிறந்த போர்வீரனான ஹெக்டரை விடவும் மேலான வீரன். ஹெக்டர் எப்படிப் பார்த்தாலும் ஒரு நல்லவன் – அன்பான கணவன், அன்புள்ள அப்பா, எல்லா விதங்களிலும் பொறுப்பானவன் – மேன்மை பொருந்திய கனவான். ஆனால் நல்ல குணம் என்பது வலிமையாகாது. அக்கீலஸ் அவனைக் கொல்கிறான்.
தி இலியட் காவியத்தில், புகழ் பெற்ற ஹெலனுக்கு உள்ள பங்கு மிகச் சிறியது. அவள் மொத்தப் போரிலிருந்தும் அவளுடைய நன்கு கழுவி, சீராக வாரப்பட்ட தங்க நிற முடிகூடக் கலையாமல் மீண்டு விடுவாள் என்பது எனக்குத் தெரியும், அதனால் அவளை ஒரு சந்தர்ப்பவாதி, ஒழுக்கமற்றவள் என்றும், சுடும் உலையிலிருந்து சேதமில்லாமல் மீளும் உலோகத் தகட்டிற்கு இருக்கிற அளவு உணர்ச்சிகள்தான் அவளது உணர்வுகளின் ஆழம் என்றும் நான் கருதுகிறேன். ஆனால் நல்லவர்கள்தான் வெல்வார்கள் என்று நான் கருதினால், பரிசு நல்லொழுக்கம் உள்ளவர்களுக்கே போய்ச் சேரும் என்று நான் கருதினால், அவளை பழியற்ற அழகி, அவளுக்கு விதியிழைத்த கொடுமையிலிருந்து கிரேக்கர்கள் அவளை மீட்டனர் என்று நான் கருத வேண்டி வரும்.
மக்களும் அவளை அப்படியே பார்க்கின்றனர். ஹோமர் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி ஒரு ஹெலனை உருவாக்கிக் கொள்ள இடம் கொடுக்கிறார்; அவள் அதனால் இறப்பற்ற நித்தியம் உள்ளவளாக ஆகி விடுகிறாள்.
இப்படிப்பட்ட மேன்மை எந்த நவீன கால அதிபுனைவு எழுத்தாளருக்காவது சாத்தியமா என்பது (வாயுக்களில் ’மேன்மை’ பொருந்திய வாயுக்கள் என்று ஏதும் உண்டென்றால் அந்த வகை மேன்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்) எனக்குத் தெரியவில்லை. நாம் வரலாற்றை புனைவிலிருந்து பிரித்து எடுக்க அத்தனை துன்பம் மேற்கொண்டிருப்பதால், நம் அதிபுனைவுகள் தீவிர எச்சரிக்கைகளாக, வெறும் இரவு வேளைக் கொடும் கனவுகளாக, அல்லது விருப்ப நிறைவேற்றல்களாக மட்டுமே ஆகி இருக்கின்றன.
வேறெந்தக் கதையாவது த இலியட்டோடு ஒப்பிடக் கூடிய போர்க்கதையாக இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. ஒருக்கால் அந்த பிரும்மாண்டமான இந்தியக் காவியம், மஹாபாரதம் வேண்டுமானால் ஒப்பிடக் கூடியதாக இருக்கலாம். அதன் ஐந்து சகோதர நாயகர்கள் நிச்சயமாக பெருநாயகர்கள் எனலாம். அது அவர்களின் கதைதான் – ஆனால் அது அவர்களுடைய எதிரிகளின் கதையும் கூட, எதிரிகளும் நாயகர்களாகவே இருக்கிறார்கள், அவர்களில் சிலர் பிரமாதமான மனிதர்களாகவும் இருக்கிறார்கள் – அதில் எல்லாமே பிரும்மாண்டமாக, கடும் சிக்கல்கள் கொண்டதாக, ஏகமாக நல்லதும், கெட்டதும் அவற்றின் விளைவுகளும், கிரேக்கக் கடவுள்களையும் விட நேரடியாகவே எல்லாவற்றிலும் தலையிடும் கடவுள்களும் உண்டு- ஆனால் அதன் இறுதி முடிவு சோகமானதா, இன்பமானதா? அதெல்லாவற்றையும் பார்த்தால் ஒரு பெரும் கொப்பரையில் அள்ள அள்ளக் குறையாத உணவு இருப்பது போலவும், நாம் நம் கரண்டியை அதில் போட்டு எடுத்து நமக்கு வேண்டும் உணவைக் கொண்டு நமக்குத் தேவையான சத்துணவைப் பெற முடியும் என்றும் தோன்றும். ஆனால் அடுத்த முறை அதுவே வேறு விதச் சுவையோடு இருக்கும்.
மொத்தமாகப் பார்த்தால் மஹாபாரதத்தின் சுவை தி இலியட்டிலிருந்து மிக மிக வேறுபட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், தி இலியட் (நியாயமற்ற தெய்வீக இடையீடுகளை விட்டு விட்டுப் பார்த்தாலும்) கடூரமான முறையில் எதார்த்தமாகவும், இரக்கமற்று ரத்த வெறியோடு போரில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதாகவும் இருக்கிறது. மஹாபாரதம் பிரமிக்க வைக்கும் வகையில் அதிபுனைவாக உள்ளது, சூபர்ட்யூபர் ஆயுதங்களின் அமானுஷ்ய சாதனைகள் பற்றியதாக உள்ளது. அவர்களுடைய ஆத்மத் துயர்களில்தான் இந்திய நாயகர்கள் திடுமென்று இதயத்தைப் பிளக்கும் விதமாக, மனதை மாற்றும் படியாக எதார்த்தமாக மாறுகிறார்கள்.
பயணம் பற்றி என்ன என்றால்:
தி ஆடிஸியின் நிஜமான பயணப் பகுதிகள், யாரோ ஒருவர் கடல் அல்லது நிலப் பகுதி வழியே பெரும்பயணங்கள் மேற்கொண்டு, அசாதாரணமான அதிசயங்களையோ, பயங்கரங்களையோ அல்லது ஆசை காட்டுதல்களையோ அல்லது சாகசங்களையோ எதிர்கொள்வதாகவும், அவ்விதத்தில் வளர்ந்ததாகவும், சில சமயங்களில் இறுதியாகச் சொந்த ஊருக்குத் திரும்புவதாகவும் அமையும் அதிபுனைவுகளை நாம் எல்லாரும் அறிந்திருப்போம், அவற்றை ஒத்தது.
ஜங்கியச் சிந்தனையைப் பின்பற்றுவோரில் ஒருவரான, ஜோசஃப் காம்ப்பெல், இந்த வகைப் பயணங்களை ஒரு சில ஆதி முன்மாதிரி சம்பவங்களாகவும், படிமங்களாகவும் பொதுமைப்படுத்தி இருக்கிறார். இந்த பொதுமைப்படுத்தல்கள் விமர்சனங்களுக்கு உதவலாம், ஆனால் அவை (சீர் தூக்கப்படும் விஷயத்தை) குறுக்குவதால், அழிக்கின்றன என்று நான் கருதுகிறேன், அதனால் அவற்றை நான் நம்புவதில்லை. “ஆ, இரவுப் பயணம்!” என்று நாம் கூவுகிறோம், முக்கியமான எதையோ நாம் புரிந்து கொண்டு விட்ட மாதிரி உணர்கிறோம் – ஆனால் நான் அதை அடையாளம் கண்டு கொள்வதை மட்டுமே செய்திருக்கிறோம். அந்தப் பயணத்தை நாமே மேற்கொள்ளாத வரை, நாம் எதையும் புரிந்து கொள்வதில்லை.
ஒடிஸீயஸின் பயணங்கள் அத்தனை பிரமாதமான சாகசங்களைக் கொண்டவை என்பதால், அந்தப் புத்தகத்தில் எவ்வளவு அவனுடைய மனைவியையும், மகனையும் பற்றியது – அவன் பயணத்தில் இருக்கும்போது அவனுடைய வீட்டில் என்ன நடக்கிறது, எப்படி அவனுடைய மகன் அவனைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறான் என்பதோடு, வீடு திரும்புவதில் ஒடிஸீயஸிற்கு என்னென்ன சிக்கல்கள் எழுகின்றன- போன்றவற்றை நான் மறக்கத் தலைப்படுகிறேன். டொல்கீனின் ’த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ புத்தகத்தில் எனக்குப் பிடித்த அம்சம், நாயகன் தன் ஆயிரம் முகங்களை உலகெங்கும் கொண்டு போகும்போது, நாயகன் பின்னே விட்டுச் சென்ற விவசாயப் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை டோல்கீன் அறிந்திருக்கிறார் என்பதுதான். ஆனால் ஃப்ரோடோவுடனும், மற்றவர்களுடனும் நீங்கள் திரும்பி அங்கே போகும் வரையில், டோல்கீன் ஒரு போதும் உங்களை வீட்டுக்கு அழைத்துப் போவதில்லை. ஹோமர் அழைத்துப் போகிறார். அந்தப் பத்து வருடப் பயணம் பூராவும், வாசகரே பெனலபியை எப்பாடு பட்டாவது சென்றடைய முயலும் ஒடிஸீயஸ், மற்றும் எல்லா இடர்களையும் தாண்டி ஒடீஸீயஸுக்காகக் காத்திருக்க முயலும் பெனலபி- பயணியும், இலக்கும் அவரே. இது காலத்தையும் இடத்தையும் ஊடுபாவாகப் பின்னும் பிரமாதமான கதைப் பரப்பு.
ஹோமர், டோல்கீன் ஆகிய இருவருமே தொலை தூரம் பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணிக்கு வீடு திரும்புவது என்பது எத்தனை துன்பகரமானது என்பதை எழுதுவதில் கவனிக்கத்தக்கபடி நேர்மையாக இருக்கிறார்கள். ஒடீஸியஸோ, ஃப்ரோடோவோ நீண்ட நாள் வீட்டில் தங்கி இருப்பதில்லை. அரசர் மெனலேயஸ் தன் மனைவி ஹெலனைத் திரும்பப் பெறுவதற்காக மற்ற கிரேக்கர்களுடன் சேர்ந்து கொண்டு, ட்ராய் நகரைச் சுற்றிப் பத்தாண்டுகள் போர் புரிந்திருக்கிறார். அவர் மனைவி ஹெலனோ பத்திரமாக ட்ராய் நகரின் கோட்டைச் சுவர்களுக்குப் பின்னே இருந்திருக்கிறாள், எல்லா அலங்காரங்களுடனும், சுந்தர புருடனான பாரிஸுடன் காலம் கழித்திருக்கிறாள் (அவன் கொல்லப்பட்டபின் அவள் அவனுடைய சகோதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள்). இந்த மெனெலேயஸ் தன் மனைவி ஹெலனுடனும், இதர கிரேக்கர்களுடனும் தன் வீட்டுக்குத் திரும்புவது அவருக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஹோமர் எழுதி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும்.
கொட்டும் மழையில் அந்தக் கடற்கரையில் நின்று காத்திருக்கும், தன் முதல் கணவர் மெனெலேயஸுக்கு, ஒரு மின்னஞ்சலோ, அல்லது ஒரு டெக்ஸ்ட் செய்தியோ அனுப்ப வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை போலிருக்கிறது. ஆனால் மெனெலேயஸின் குடும்பம், ஓரிரு தலைமுறைகளாகவே, கவனிக்கத் தக்க விதத்தில் நிரம்ப துரதிருஷ்டத்தில் சிக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அல்லது இன்று இதை நாம் சொல்கிறபடி வருணித்தால் அந்தக் குடும்பம் சீர் கெட்டக் குடும்பமாகவே இருந்திருக்கிறது.
ஹோமர் ஊற்றுக் கண்ணாக இருந்தது அதிபுனைவுக்கு மட்டுமல்ல என்று சொல்லலாமோ?
***
[1] ஹோமர்- உலகப் பிரசித்தி பெற்ற இரு கிரேக்கக் காவியங்களைப் படைத்தவர் என்று அறியப்படுபவர்
[2] தி இலியட் – ஹோமரின் இரண்டு காவியங்களில் ஒன்று.
[3] த ஆடிஸி- ஹோமரின் இரண்டாவது காவியம்.
[4] டோல்கீன் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரின் புகழ் பெற்ற நூல்- ‘த ஹாப்பிட்’ என்பதன் நாயகன். டோல்கீனின் மற்றொரு புகழ் பெற்ற நாவலான, ‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸி’லும் பில்போ முதல் பகுதியில் ஒரு உப பாத்திரமாக வருகிறார். ஆடிஸி என்கிற காவியத்தின் நாயகன் ஒடிஸேயஸைப் போல பில்போவும் நெடும் பயணங்கள், சாகசங்கள், சாவிற்கு அருகில் கொண்டு போன பேராபத்துகளில் எல்லாம் தப்பி மீண்டு வந்து நெடுநாள் வாழ்ந்து மறைகிற பாத்திரம்.
[5] இலியட், ஆடிஸி காப்பியங்களின் மையத்தில் உள்ள ட்ரோஜன் போர் என்பது கிரேக்கர்களால் ட்ராய் நகரின் மீது இடப்பட்ட முற்றுகை, மற்றும் போரைப் பற்றியது. சுமார் பத்தாண்டுகள் நீடித்த இந்த முற்றுகையில் ஏராளமான கிரேக்க நாயகர்களும், ட்ராய் நகரைச் சார்ந்த நாயகர்களும் இறக்கிறார்கள். ட்ராய் என்பது ஸ்பார்டன் என்ற சமூகக் குழுவினரின் நாட்டுத் தலை நகர்.
[6] கிரேக்கம் என்பது லத்தீன் சொல். கிரீஸ் என்று இன்று அறியப்பட்ட நாட்டின் சொல் அல்ல. கிரேக்கர் என்று நாம் அழைக்கும் மக்களின் பண்டைப் பெயர் ஹெலெனி என்றிருந்தது. எப்படி இந்தியாவில் மக்கள் பலவேறு மொழிக்குழுக்களின் உறுப்பினர்களாக முதல் படியிலும் பின்புதான் இந்தியராகவும் தம்மை அறிகிறார்களோ அதே போல கிரேக்கர்கள் தம்மை ஸ்பார்டர்கள், அதீனியர்கள் என்று தாம் மையமாக வசித்த நகர நாட்டின் பிரஜைகளாகவே தம்மை அறிந்திருந்தனர்.
From ‘Papa H’, No Time to Spare, Ursula Le Guin
(This is an unauthorised translation intended for educational, non-commercial display at this particular web page only).